27. கொடி கட்டிப் பறந்த குடியாட்சியும், இறக்குமதி செய்யப்பட்ட கட்சி ஆட்சியும் நம் நாட்டின் ஆட்சியை “கட்சி ஆட்சி” என்று கூற வேண்டும். இது வெள்ளைக்காரன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முறையாகும். இது 200 ஆண்டுகளுக்கும் முன்னர் வெள்ளைக்காரன் நாட்டில் வழக்கத்தில் இல்லாத ஒரு தேர்தல் முறையாகும். ஆனால் நம் பாரத தேசத்தில் 4000 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கில் இருந்த உண்மையான “குடிஆட்சி”யை உதறி விட்டு இறக்குமதி செய்த ஆட்சி முறையாகும்.
200 ஆண்டுகளுக்கு முன் இருந்து இங்கிலாந்தில் வந்த சர். வில்லியம்ஸ் ஜோன்ஸ், பிஷப் கால்டுவெல், மாக்ஸ்முல்லர், சர். ஹென்றி மெயின், மோனியர் வில்லியம்ஸ் மற்றும் சமஸ்கிருத ஆங்கில அகராதி, ரோமானியா நாட்டின் ஏற்றமும் வீழ்ச்சியும் என்ற பெரும் வரலாற்றை எழுதிய கிப்பன்ஸ் போன்றவர்கள் எல்லாம், இந்திய நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் திகழ்ந்த கிராமப்புற சுயாட்சிக்கு ஈடு இணையற்ற மரபு உலக வரலாற்றில் எங்கும் இல்லை என்று எழுதியிருக்கிறார்கள்.
சர்.வில்லியம்ஸ் ஜோன்ஸ் என்பவர், எகிப்து, கிரேக்க, ரோமானியா நாடுகளின் சட்ட திட்ட வரம்புகள் எல்லாம், மனுவின் தர்ம சாத்திரத்தைப் பின்பற்றியுள்ளன என்று எழுதியுள்ளார். கால்டுவெல், “இந்திய கிராம சுயாட்சியைப் போன்றது நமது இங்கிலாந்து நாட்டுக் கிராமப்புறங்களிலோ, நகரங்களிலோ, இப்பொழுதுகூட கிடையாது” என்று எழுதியுள்ளார்.
நம் நாடு என்பது கிராமங்கள் நிறைந்த நாடாகும். அதனால் கிராம சுய ஆட்சியில் இருந்து, ஆள்பவர்வரை, அனைவரும் பங்கு பெற்று ஆள்வதே அரசு என்று நமது நூல்களும் மேலை நாட்டார் குறிப்புகளும் காட்டுகின்றன. இதை திருவள்ளுவப்பேராசான் தமது திருக்குறளின் பொருள் அதிகாரத்தில், முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளார் படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு என்பது குறள். அரசு என்பதற்கு நாட்டைக் காக்கக்கூடிய படை வீரர்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. குடி என்பது பயிர் நிலங்கள் உள்ள கிராமங்களையும் குடி மக்களையும் குறிக்கும். கூழ் என்பது பொருளாதாரத்தையும் உணவையும் குறிக்கும். படை வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும்பற்றிக் கூறிய நாட்டில், படை வீரர்களின் தியாகத்தைப் பேசவே கூடாது என்றால் பின் நாழிக்கு ஒரு பொய் பேசும் அரசியல்வாதிகளின் ஆற்றலையா பேசுவது? நூற்றுக்கணக்கான சங்கத் தமிழ் பாக்களில் நம் படையின் வீரத்தையன்றோ பாடியிருக்கிறார்கள்.
அடுத்து வள்ளுவர் கூறுவது “குடி” என்பது நமது கிராமப்புற மக்களின் மேன்மையைக் குறித்து செயல்படுவதாகும். மூன்றாவது “கூழ்”. அது பொருளாதாரத்தையும் உணவையும் பற்றியதாகும். அதற்கடுத்து இவற்றை எல்லாம் அறிந்து திறமையுடன் செயல் படுத்தும் அமைச்சர் பெரு மக்களை குறிக்கும். இவற்றை முன் நிறுத்தி தேர்தல் களத்திலே இறங்குதல் தமிழ் பண்பன்றோ. நட்பு என்பது நல்லோடு இணைந்திருத்தல். அரண் என்பது பாதுகாப்பு. இந்த ஆறும் இருந்தால்தான் அதை அரசு என்று கூற முடியும். அதனால் இவற்றில் ஒன்று இல்லை என்றாலும், அது அரசு ஆகாது. எனவே கிராமப்புற மக்களின் பிரதிநிதிகள், அரசவையில் இடம் பெறுவதை “குடி” என்றும் அரசின் அங்கம் என்றும் கூறினர். அதனால் வள்ளுவர் “குடி” என்று கூறியது வேளாண் குடி மக்களைச் சாரும். தமிழகத்தில், தொன்று தொட்டே வேளாண் குடி சிறந்திருந்தது. அத்துடன் சோழர் காலத் தொடக்கத்தில் கங்கையாற்றுக்கரையில் இருந்து நாற்பத்தெண்ணாயிரவர் குடியைச் சேர்ந்த பலர் தமிழகம் வந்துள்ளனர். அக்குடியைச் சார்ந்தவர்தான் “குன்றத்தூர் சேக்கிழார்”. அவருக்கு “கங்கை குல திலகர்” என்றும் “பாகிரதி குல திலகர்” என்றும் பட்டப் பெயர்கள் இருந்தன. அவரது திறனைத் தேர்ந்தெடுத்து சோழன், அவரைத் தன் நாட்டிற்கு அழைத்து வேளாண்மையை காவேரிக்கரையில் சிறக்கச் செய்தான். அவர்களில் சிலரை பாண்டியன் தன்னாடு அழைத்துச் சிறப்பித்தான். சேக்கிழார் குடியை இலங்கை யாழ்ப்பாணத்துக்கு அழைத்தனர். யாழ்ப்பாணத்தில் சேக்கிழார் குடி சிறந்ததை கல்வெட்டுகள் கூறுகின்றன. சேக்கிழார் குடியை தமிழகம் முழுவதும் வரவேற்றுள்ளது.
இங்கு மற்றொன்றையும் நினைவு கூறவேண்டும். தஞ்சைப் பெருங்கோயிலைக் கட்டி உலகப் புகழை தமிழகத்துக்குத் தந்த பெரு மன்னன் இராஜராஜன். அவனுக்கு அக்கோயிலை கட்ட திட்டம் தீட்டி, அறிவுரை நல்கிய பேராசான் “ஈசான சிவன்” என்ற சிவாசாரியார் ஆவார். அவர் இலாட தேசத்தைச் சார்ந்தவர். அதாவது பீகார் மாநிலத்தில் கங்கையின் வட பகுதி. அவர் இராஜேந்திர சோழனின் 10ஆம் ஆண்டுவரை தஞ்சைக் கோயிலில் ஆசானாக இருந்தார். அவருக்குப்பிறகு “சர்வ சிவன்” என்பவர், ஆசானாக இராஜ குருவானார். அவரும் இலாட தேசத்தைச் சேர்ந்தவர். அவர்தான் இராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழீச்சரத்தை கட்டும் அறிவுரை வழங்கியவர். இதை ஏசாலம் செப்பேடுகள் கூறுகின்றன.
ஏறக்குறைய இதே காலக் கட்டத்தில் சோழ நாட்டில் இருந்து சில சைவ ஆச்சார்யர்கள் காசிக்குச் சென்று இருக்கிறார்கள். அவர்கள் அங்கு காசி மன்னனுக்கு ராஜ குருவாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறகு ஸ்ரீகண்டசிவர் என்பவர் கௌட தேசத்தில் இருந்து சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வந்தார். அவரை விக்கிரம சோழன் தனது இராஜ குருவாக அமர்த்திக்கொண்டான். அவனுக்குப் பின் வந்த இரண்டாம் இராஜராஜ சோழன் தாராசுரம் கோயிலை கட்டினான். அங்கு அங்கு கௌட தேசத்தைச் சார்ந்த பட்டாசாரியன் என்ற குரு தலைவராக இருந்தார்.
இறுதியாக திருவிடை மருதூர் அருகிலுள்ள திருபுவனம் கோயிலை மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டினான். அப்போது அவனுக்கு குருவாக விளங்கியவர் சீகண்ட சிவனின் மைந்தன் “ஈஸ்வர சிவன்” என்பவன். அவன் திரிபுவனம் கோயிலை கட்ட அறிவுரை வழங்கியதோடு அங்கு சிவபெருமானை பிரதிஷ்டையும் செய்வித்தான். அவனும் கௌட தேசத்தைச் சேர்ந்தவன். கௌட தேசம் என்பது தற்காலத்தில் வங்காள தேசம் என்னும் பகுதியாகும். இதிலிருந்து சோழர்களால் கட்டப்பட்ட நான்கு மாபெரும் கோயில்களும் வட தேசத்திலிருந்து தமிழகம் வந்து தங்கியவர்களின் அறிவுரையின் அடிப்படையில் எடுக்கப்பட்டவையாகும். இவர்களுக்கு எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கேதாரத்தில் இருந்து தமிழகம் வந்தவரான திருமூலர் தமிழில் அழியாப்புகழ் வாய்ந்த திருமந்திரம் தந்தருளியவர் ஆவர்.
இவற்றில் இருந்து வட திசையிலிருந்து தென் தமிழகம் வந்தவர்களை தமிழகம் திருப்பி ஓட்டவில்லை வரவேற்று இருக்கிறார்கள். இதற்கும் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் அகத்தியர், நாற்பத்து ஒன்பது சிற்றரசர்களையும் 49 வேளிர்களையும் தமிழகத்திற்குக் கொண்டுவந்தார் என்றும் அவர்களில் சிலர் கடை ஏழு வள்ளல்கள் என்று தமிழகத்தில் போற்றப்பட்டனர் என்றும் அவர்கள் தமிழகத்தில் ஆங்காங்கே தங்கி சிற்றரசர்களாக ஆண்டிருக்கிறார்கள் என்றும் சங்க நூல் மூலம் அறிகிறோம்.
தொன்று தொட்டே பாரதம் முழுவதும் ஒரே நாடு என்ற எண்ணம் கொண்டதினால் தெற்கில் இருந்து வட தேசத்திற்கும், வட தேசத்திலிருந்து தென் பாலும் வந்தவர்கள் போக்குவரத்து சர்வ சாதாரணமாக நடை பெற்று வந்திருக்கிறது. அரசர்கள், அறிஞர்கள், குடியானவர்கள், கர்மக்காரர்கள் எனப் பல வகைப்பட்ட மக்களும் வந்துள்ளனர். இத்தகை வரலாறும் இருக்க இந்த “தேர்தல் வியாதியில்” பிடிபட்ட ஒருவர் இங்குள்ளவர்களை மட்டும்தான் முதல்வராக்குவேன். வடநாட்டிலிருந்து வந்தவர்களையோ, மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்தவர்களையோ முதல்வராக்க விடமாட்டேன் என்று கூறினால் அது சட்டத்துக்கு விரோதமானது ஆகும். அத்துடன் தமிழ் மக்களின் பண்புக்கு விரோதமானதும்கூட. சிறுபிள்ளைத்தனமானது என்பதோடு சொல்பவனும் வெளி நாட்டிலிருந்து வந்தவனாயின் சிறிதினும் சிறிதே சிரிப்புத்தான் வருகுதையே!!
தமிழ் மக்கள் சிறந்த பண்பு மிக்கோர் ஆவார். அவர்களது கருத்துக்கள் எல்லாம் உலகளாவியதாகவே இருக்கும். அதனால்தான் அவர்கள் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்றனர். அதனால்தான் தமிழ் மக்கள் உலகின் பல நாடுகளிலும் குடியேறி அந்நாடுகளோடு ஒன்றி வாழ்கின்றனர். “ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி. ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோர், என்றும் சகோதரர் அன்றோ” என்று பாரதத்தைப் பாடினார் பாரதி. இதை மனதில் கொண்டுதான் ஓர் அரசியல் கட்சி “சகோதரத்துவம்” எங்கள் கொள்கை என்பதை தெளிவாக விளம்பரப்படுத்தியுள்ளது போலும்.