28. இந்திர விழா பழந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் பொருள் அதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை என்ற பிரிவுகள் உள்ளன. அவற்றில் அகத்திணையில், தொடக்கத்தில், தமிழ் நிலப்பகுதிகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்கு பிரிவாகப் பிரித்து, அவற்றின் தெய்வங்கள் யாவை, வாழும் மனிதர்கள், அவர்களின் தொழில், உணவு, அங்குள்ள விலங்குகள், மரங்கள், நீர்நிலைகள், பறை, கொட்டு என்று பழக்கங்கள் குறிக்கப் படுகின்றன.
அவற்றில் மருதம் என்ற நிலப்பகுதி வயலும், வயல் சார்ந்த பகுதியும், நெல் நிறைந்த ஊர் என்று அறிகிறோம். இப்பகுதியின் தெய்வம் இந்திரன் என்பர். அதனால் உழவர் தெய்வம் இந்திரன் என்பது பழந்தமிழர் கோட்பாடு. உழவர் வாழ் பகுதிகளில் ஆண்டு தோறும் சித்தரை மாதம் சித்தரை நட்சத்திரத்தன்று விழா எடுத்து மகிழ்வது மரபு.
அவ்விழாவில் அரசன் சிறந்து விளங்கவேண்டும் என்று வேண்டிக் கொள்வர். இதை காவேரிப்பூம்பட்டினத்தில் ஆண்ட கரிகால் பெருவளந்தன் சீரும் சிறப்புடன் வாழ அப்பட்டினம் வாழ் அனைவரும் கூடி இந்திரனுக்கு விழா எடுத்தனர். இந்திரனுடைய படையாகிய வஜ்ராயுதத்துக்கும் அவனது வாகனமான ஐராவதம் என்னும் வெள்ளை யானைக்கும் சிறப்பு செய்து காவேரி நீரை பொற்குடத்தில் ஏந்தி நீராட்டி வணங்கினர். அதேசமயம் அப்பட்டினத்திலிருந்த பிற கோயில்களான சிவாலயம், ஆறுமுகக்கடவுளாகிய முருகக் கடவுளுக்கும், பலராமனுக்கும், கண்ணனுக்கும், கோயில்களிலே வழிபாடும் விழாவும் எடுத்தனர். தெய்வ பக்தி உரிய நிறைந்த மக்களாக அப்பட்டினத்தை சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் சித்தரிக்கிறார். கடற்கரை ஓரம் பட்டினம் ஆதலால் மீனவர்கள் சுறா மீனின் கொம்பை நட்டு, வருணனுக்கும் விழா எடுக்கும் மரபு அங்கு இருந்தது. இவற்றை எல்லாம் விளக்குவதற்காகவே இளங்கோ அடிகள் “இந்திர விழா ஊர் எடுத்த காதை” என ஓர் அத்தியாயத்தில் குறித்துள்ளார்.
உழுகுடி மக்களின் சிறப்பை விவரிக்கும் கவிதை நயம் மிக விளங்கும் மற்றொரு காப்பியம் சேக்கிழார் எழுதிய “திருத்தொண்டர் புராணம்” என்னும் பெரியபுராணமாகும். பெரியபுராணத்தில் “திருநாட்டுச் சிறப்பு” என்னும் அத்தியாயம் தமிழ் நாட்டு உழுகுடிகளின் வாழ்வைச் சித்தரிக்கிறது. சேக்கிழார் வேளாண் குடியைச் சார்ந்தவர். அவருக்கு “கங்கா குலதிலகர்” என ஒரு பட்டப்பெயர் இருந்தது என பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாபதிதேவர், தாம் எழுதிய சேக்கிழார் புராணத்தில் குறிக்கிறார். அவர் இக்குடிக்கு நாற்பதெண்ணாயிரவர் குடி என்றும் பெயர் உண்டு. அவர்கள் கங்கை கரையில் இருந்து தொண்டை நாட்டில் குடியேறியவர் என்றும் அறிய முடிகிறது என்கிறார்.
சேக்கிழாரது குடியை விளக்கிய உமாபதிதேவர், “செழுந் தமிழர் சொல் தெய்வத்தன்மை வாய்ந்தது. தேவுடனே கூடிய செழுந்தமிழ்ச் சொல். அதுவே விழுப்பொருள்” என்றும் கூறுகிறார். பாலாற்றால் நீர் வளமும், நில வளமும், சிறந்த தொண்டை நாட்டில், குன்றை வள நாட்டில் குன்றத்தூரில் சேக்கிழார் குடி சிறந்து விளங்கியது. சோழ மன்னன் அந்நாடெங்கும், நாற்பத்தெண்ணாயிரம் என்னும் உழுகுடிகளைத் தேர்ந்தெடுத்து குடி ஏற்றினான். அவர்களில் கூடல் கிழான், புரிசைக்கிழான், குரப்பாக்கிழான், வரிசை குளத்துழான் முதலிய குடிகளில் சேக்கிழார் குடி குன்றத்தூரில் வாழ்ந்தது. திருக்கச்சியின் உமை அன்னை, விதை நெல்லை இவர்களுக்கு அதை வித்தி கொடுக்க நெல் விளைத்து இப்பகுதியை வளம் செய்தவர்கள் இக்குடிப்பெருமக்கள். தெய்வத்தின் அருளால் இப்பகுதி வளம் சிறந்தது. தேவர்முதல் சிறு எறும்புவரை உள்ள அத்தனை உயிர்களும் வாழ இக்குடி மக்கள் உழுது வளம் சிறக்க செய்ததே ஆகும். சேக்கிழாரின் இயற் பெயர் அருண்மொழி என்பதாம். தஞ்சை பெருங்கோயிலை கட்டிய முதலாம் இராஜ ராஜனின் இயற்பெயர் அருண்மொழிவர்மன்.
சேக்கிழாரின் ஆற்றலையும் அவர் குடியின் வேளாண் திறனையும் அறிந்து அநபாயசோழன், அவரை சோழ நாட்டில் குடியேறச்செய்து அவரை அமைச்சராக்கி கும்பகோணம் அருகில் நாகேச்சுவரத்தில் இருந்து நாடாளச் செய்தான். அவர் சோழ நாட்டில் வேளாண்மை சிறக்கச் செய்தார். சிறந்த அமைச்சராகத் திகழ்ந்த காரணத்தால் அரசன் அவருக்கு “உத்தம சோழ பல்லவரையன்” என்ற பட்டம் அளித்து சிறப்பித்தான்.
ஆனால் சேக்கிழாரின் மனம் தெய்வத்தமிழ்மீது சென்றது. அவர் எழுதியதே பெரியபுராணம். தாமே வேளாண் குடியினராதலாலும், ஆட்சி பொறுப்பை அறிந்தவர் ஆதலாலும் அவர் வேளாளர்களின் முக்கியத்துவத்தை மனதிற்கொண்டு, தமது பெரிய புராணத்தில் தொடக்கத்தில் நாட்டு சிறப்பில் தமிழ் வேளாளர்களின் வாழ்க்கையை சிறப்பித்துள்ளார். கங்கை நதிக்கரை தொடர்புடையவராதலின் கங்கை நதியையும், காவேரியாற்றையும் கன்னியாகுமரிவரை இணைத்துப் பாடுகிறார். தெய்வ பக்தியைப் பாட வந்தவர், அதனால் சிவபெருமானின் அன்பர்களையும் இத்துடன் இணைத்து இமய மலை உச்சியில் இருந்து, திங்கள் சூடிய முடிச் சிகரத்து உச்சியில் பொங்கு வண்டலை நுரையில் பொருது போதலால் எங்கள் நாயகன் முடிமிசை நின்றே இழி கங்கையாம் பொன்னியாம் கன்னி நித்திலமே என்கிறார். பொன்னியே கங்கை என்றும் அது கன்னியாகுமரிவரை பரவி இருந்தது என்றும், பொன்னி கங்கை போல் தூயது என்னும் பொருள் பட பாடுகிறார்.
இந்த அத்தியாயம் முழுவதும் வேளாளர்களின் திறனையும், தெய்வ பக்தியையும், இணைத்தே பாடியுள்ளது, படித்து இன்புறத்தக்கது. அதனால் பொன்னி நாட்டில் எண்ணில்லா சிவாலயங்கள் இருக்கின்றன என்றும் அங்கு எம்பிரானை இறைஞ்சலின் பொன்னி இறை அடியார்களைப் போன்றது எனவும் கூறுகிறார். பொன்னி நாட்டின் வயல் வளத்தினையும் உழவர் உழத்தியர் பண்பையும் உழுகுடி பெண்களின் மொழியெல்லாம் அமுதமென திகழ்கிறாதாம் என வாழ்த்துகிறார். பெரும் பல்லாயிரம் கடைசியர்கள் வயல் எல்லாம் பணி புரியும் நாடு சோழ நாடு என்பார். அமுத அல்ல மொழி எல்லாம் வரும் பல்லாயிரங்க கடைசி மடந்தையர்கள் இவ்வுழு குடி மக்களின் திறனால், உழைப்பால், வளம் பெற்றது தமிழ் நாடு என்பதை மறந்துவிட முடியாது.
சோழநாட்டில் நெல்லெல்லாம் திரண்டு உயர்ந்து வளர்ந்துள்ளது கரும்புகள்போல் காட்சி அளித்ததாம். உயர்ந்த கமுகெல்லாம் கரும்புகள்போல் காட்சியளித்தனவாம். அக்காலத்தின் மள்ளர்களாகிய உழவர்கள் வேளாண் தொழிலில் சிறந்திருந்தனர் என்பதை “கைவினை மள்ளர்” என்பதால் காட்டுகிறார். அக்காலத்தில் அவர்கள் எல்லாம் மாடம் நிறைந்த வீடுகளில் வசித்தனர் என்றும் கூறுகிறார். கரும்பு சிறந்து விளைவதால் வெல்லம் காய்ச்சும் ஆலைகளிலிருந்து புகை, வெல்ல வாசனையுடன் மேலே கிளம்புகிறதாம். பெண்கள் தாங்கள் தங்கள் கேசங்களை அதன் புகைகளால் புலர்த்திக் கொண்டனர் என்றும் எங்கும் வேத வேள்வியைக் குறிக்கும் யூப ஸ்தம்பங்களை உடைய சாலைகளிலிருந்தும் புகை கிளம்புமாம். இப்புகைகள் எல்லாம் சூழ்ந்து, வானின்று வரும் மேகங்களுடனே அவர்கள் வாழும் மாடங்களைச் சுற்றி எழும் என்று கூறுகிறார். இவர்கள் வாழும் வீதிகள் தோறும் விழாக்கள் மலிந்திருக்குமாம். விருந்தினர்கள் வந்து செல்லும் ஓசையும் நிறைந்திருக்கும் என்கிறார் சேக்கிழார். அதனால் உழுகுடி மக்கள் அக்காலத்தே செல்வம் மிகுந்தோர்களாக விளங்கினர்.
மலை போல் குவித்த நெற்குன்றுகளில் ஆறில் ஒரு பங்கை அரசுக்கு இறையாக அவர்கள் கொடுப்பர். மிகுந்ததைக் கொண்டு அறங்கள் செய்வர். தெய்வங்களை பரவி வணங்குவர். பெரியோர்களையும் விருந்தினர்களையும் தங்களுடைய சுற்றத்தையும் பேணுவர். அவற்றால் சிறந்த தாங்கள் மிகவும் வளத்தோடு சிறந்து உயர்ந்த மாடங்கள் வசிப்பர் என உழுகுடி மக்களின் சிறந்த வாழ்வை சித்தரிக்கிறார் சேக்கிழார். இவர்கள் நாற்று நட்டு விளைத்த மலை என நேர்குவைகளை, சேக்கிழார் சிறப்பாகப் புகழ்கிறார். அதன் பாங்கை இரு பாடல்களில் குறிக்கிறார்.
மாதர் நகரை பறிப்பவர் மாட்சியும், சீதநீர் முடி சேர்ப்பவர் செய்கையும் ஒதையர் செய் உழுநர் ஒழுக்கமும் காதல் செய்வதோர் காட்சி மலிந்ததே உழுத சால் மிக வூரித் தெளிந்த சேர் இழுது செய்யினுள் இந்திரத் தொய்வதம் தொழுது நாறு நடுவர் தொகுதியே பழுதில் காவேரி நாட்டின் பரப்பெல்லாம் என்கிறார். உழுத வயலை குழம்பென ஆக்கி அதனில் நாற்று நட்டதை தொடங்கும்போது, தம் தெய்வமான இந்திரனைத் தொழுது நாற்று நட்டனர் என்று கூறுகிறார். நாற்று நடும்போது இந்திரனைத் தொழுது தொடங்கினார் என்னும் சேக்கிழார் வாக்குப்படி எந்த அளவு தெய்வப்பற்றுடையோர்கள் மிகுந்திருந்தனர் என்பது தெளிவு. இந்த உழவர்களை இரு இடங்களில் “மள்ளர்” என்று (செய்யுள் 60,75) அழைக்கிறார். “மள்ளர்” எனும் சொல்தான் இக்காலத்தே “பள்ளர்” என்று மருவி உள்ளது என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. தமிழகம் நெல் விளைவால் வளம் பெற்றது என்பது திண்ணம். பள்ளர் என்பவர் இன்றும் தங்களை “தேவேந்திர குல் வேளாளர்” என்று கூறிக்கொள்வது நாம் அறிந்ததே. அதனால் அவர்களின் குல தெய்வம் இந்திரன். இந்திரா விழா இந்நாட்டில் சிறந்தமைக்குக் காரணம் அவர்களே. இன்றும் “பள்ளர்” தெய்வ பக்தி நிறைந்தவர்களாகத் திகழ்வதற்கு காரணம் இதுவே என்பதில் ஐயம் இல்லை.