Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


Guru

Status: Offline
Posts: 7474
Date:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
Permalink  
 


 

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை                                          (அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43) 

 http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0043.aspx

பொழிப்பு: தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும். 

 

மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. 

தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.

 

பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். 

(பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.)

 

இரா சாரங்கபாணி உரை: இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம்.

 

பொருள்கோள் வரிஅமைப்பு:

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

 

 

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு:

பதவுரை: தென்-தென்திசை; புலத்தார்-இடத்திலுள்ளவர்; தெய்வம்-தேவர்; விருந்து-விருந்தினர்; ஒக்கல்-சுற்றத்தார்; தான் -தான்; என்று-என; ஆங்கு-(அசைநிலை).

 

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:

மணக்குடவர்: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னும்; 

பரிதி: பிதிர்லோகத்தார்க்கும், வழிபடு தெய்வத்துக்கும் உறவின் முறையார்க்கும் தந்து தன்மரபையும்; 

காலிங்கர்: தன்குடியில் இறக்கப்பட்ட பிதிர்களுக்கும் கடவுளர்க்கும் விருந்தினர்க்கும் சுற்றத்தார்க்கும் தனக்கும் என்று சொல்லப்பட்ட; 

பரிமேலழகர்: பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; 

பரிமேலழகர் விரிவுரை: பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை.

 

'பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட' என்று பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

 

இன்றைய ஆசிரியர்கள் 'தென்புலத்தார் நிலத்தெய்வம் விருந்து சுற்றம் தன்குடும்பம் என்ற', 'இறந்த உயிர்க்குத் துணைநிற்கும் பிதிரர்கள், கடவுள், புதியராய் உதவிநாடி வந்தோர் (அகதிகள்) சுற்றத்தார், தான் என்னும்', 'தென்நாட்டவர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட', 'தன்குல முன்னோர், வழிபடுதெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற' என்றபடி உரை தந்தனர்.

 

தன் குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட என்பது இத்தொடரின் பொருள்.

 

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை: 

பதவுரை: ஐம்-ஐந்து; புலத்து-இடத்தின் கண்; ஆறு-நெறி; ஓம்பல்-வழுவாமற் செய்தல்; தலை-சிறப்பு.

 

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:

மணக்குடவர்: ஐந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. 

மணக்குடவர் கருத்துரை: தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.

பரிதி: கிருகஸ்தன் ரட்சிப்பது தன்மம் என்றவாறு.

காலிங்கர்: ஐந்து கூற்று நெறியையும் வழுவாமல் பாதுகாத்தலே இல்வாழ்க்கைக்குத் தலைமை என்றவாறு.

பரிமேலழகர்: ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.

பரிமேலழகர் கருத்துரை: ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.

 

'ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

 

இன்றைய ஆசிரியர்கள் 'ஐவகையையும் காக்க', 'ஐந்து வகையாரிடத்துஞ் செய்யப்படும் நெறிச் செயல்களை வழுவாது செய்தல் முதன்மையான அறமாகும்', 'ஐந்து இடத்தும் செய்யும் அறநெறித் தொண்டினைத் தவறாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம்', 'ஐந்திடத்துச் செய்யும் அறத்தையும் பேணுதல் இல்லறத்தானுக்குத் தலையாய கடமையாம்' என்றபடி பொருள் உரைத்தனர்.

 

ஐந்து இடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களைப் போற்றுதல் தலையாய கடமையாம் என்பது இத்தொடரின் பொருள்.

 

நிறையுரை: 

குடும்பத்தை மேம்படச் செய்யும் ஐந்து கடமை நெறிகள் பற்றிக் கூறும் பாடல்.

 

தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐம்புலத்து ஆறு போற்றிக் காத்தல் தலையாய கடமையாம் என்பது பாடலின் பொருள்.

ஐம்புலத்து ஆறு என்றால் என்ன?

 

ஓம்பல் அல்லது ஓம்புதல் என்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல்லாகும். இச்சொல் பேணுதல், போற்றுதல், காப்பாற்றுதல், பாதுகாத்தல், வளர்த்தல், தீங்கு வாராமற் காத்தல்; உபசரித்தல், சீர்தூக்குதல் என்ற பொருள்களைத் தரும். இங்கு போற்றுதல், காத்தல், பேணுதல் என்ற பொருள்களில் ஆளப்பட்டுள்ளது.

தலை என்பதற்கு முதன்மையான அல்லது சிறந்த என்பது பொருள்.

 

தென்புலத்தார்

தென்புலத்தாரை ஓம்புதல் எப்படி?

நம்மிடையே வாழ்ந்து மறைந்தோரை குறிப்பாக நமக்கு மிகவும் நெருங்கியவர்களும் அன்பிற்குரியவர்களும் இறந்த நாளில் அவர்களை நினைந்து வழிபடுதல் தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினையாகும். அவரை நினைத்து அடையாள முறையிற் சில உண்டிகளை, அவர் பெயரால், இரப்போர்க்கு சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல் ஆகும். இது இன்றும் நம் இல்லங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள்தாம். தென்புலத்தார் என்போர் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் அருள்பார்வை நம்மை வாழவைக்கும் என்பதும் நம்பிக்கை. நம்முடைய வாழ்க்கை முறையில் நம்முடைய முன்னோர்களை என்றும் மறப்பதில்லை. தெய்வம் கூட இரண்டாம் இடத்தில்தான். எனவேதான் வள்ளுவரும் தென்புலத்தாரை முதலில் வைத்துப் பாடினார்.

தென்புலத்தார் என்ற சொல்லுக்கு நேர் பொருள் தெற்குத் திசையிலுள்ள இடத்தில் இருப்பவர் என்பது.

தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்(புறநானூறு 9)

(பொருள்: தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய இறுதிச் சடங்குகளைப் பண்ணும்) என்ற சங்கச் செய்யுள் அடி ஒன்றில் தென்புலவாழ்நர் என்ற தொடர் இறந்தார் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. இறந்த வீரனுக்காக நடப்பட்ட கல்லுக்கு இறந்த நாளில், பூச்சூட்டிப் புகை காட்டிப் பொங்கலிட்டு எல்லாருடனும் இருந்து உண்டதாக (நடுகல் வணக்கம்) வரலாற்றுச் செய்தி உண்டு..

இறந்துபோன மூதாதையர் தென்திசையில் உறைவதாகத் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையுண்டு. அதனால் காலமாகிவிட்ட முன்னோர்களைத் தென்திசையிலுள்ளவர் எனக் கூறுவது ஒரு மரபு. பொதுவாக சுடுகாடு/இடுகாடு ஒரு ஊரின் தெற்குத் திசையில் அமையும். இதுவும் தென்புலம் என்ற வழக்குக்குக் காரணமாகலாம். காலிங்கர் தென்புலத்தார் என்பதற்கு தன்குடியில் இறக்கப்பட்ட பிதிரர் என்று பொருள் கூறியுள்ளார். 

தம் குடும்பத்தில் தோன்றி மறைந்தவர் நினைவுகளைப் பாதுகாப்பது தென்புலத்தார் ஓம்பல் ஆகும்.

 

தெய்வம்

தெய்வம் என்ற சொல் பல்வேறு நிலையில் ஐயப்பாட்டிற்கு இடமாகிறது என்பார் தண்டபாணி தேசிகர். தொல்காப்பியம் மற்றும் சங்க கால இலக்கியங்களில் பயின்று வரும் 'தெய்வம்' என்ற சொல், இனக்குழுக்களின் சிறு தெய்வங்களையே குறிக்கிறது என்பர். எல்லாம் கடந்த முழுமுதற் பொருளுக்குக் கடவுள் என்பது பெயர். மற்றக் கடவுளரை தெய்வம், சிறு தெய்வம் அல்லது தேவர் என்று அழைப்பர். பரிதி இக்குறளுக்கான தனது உரையில் தெய்வம் என்ற சொற்கு 'வழிபடு தெய்வம்' எனப் பொருள் கண்டிருக்கிறார். இங்கு சொல்லப்பட்ட தெய்வம் குலதெய்வத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இல்வாழ்வான் தெய்வத்தை ஓம்புதல் என்பது எவ்வாறு? இது தெய்வத்தைப் போற்றுவதைக் குறிக்கும். தெய்வத்தை நினைத்து வணங்குதலே தீமை செய்யாமைக்கும், உண்மை வழி நிற்பதற்கும் துணை செய்யும். கோயில்களில் செய்யப்படும் உணவுக் கொடையும் தெய்வ வழிபாட்டின் பாற்படும். குலதெய்வ வழிபாடு தெய்வத்திற்குச் செய்யும் கடன் ஆகும்.

 

விருந்து

விருந்து என்பது இங்கு விருந்தினரைக் குறிக்கும். முன்வந்து போனவரும் முன்னே அறியப்படாத அயலார் விருந்தினராவர். நாட்டால், மொழியால், சமயத்தால் அயல் வழியினர்; அறிமுகம் இல்லாதவர் விருந்தினராவர். விருந்தினர் எனப்படுபவர் நாடி வந்துள்ள அன்பர்கள்; அவர்களை மனம் நோகாதவாறு ஓம்புதல் பண்பாகும். இவர்களை வரவேற்று ஊண் உடை முதலியன வழங்கிப் பேணவேண்டும். இதனால் அயல்வழி உறவுகள் வளரும். குமுகாயம் விரிவடையும். புதிதாகத் தம் வீட்டை நாடி வரும் அயலார் யாவரே யாயினும் அவரை உவந்து வரவேற்று ஓம்புதல் அக்காலத்தில் மிகவும் வேண்டப்பட்டதாக இருந்தது. இது இல்லறத்தான் கடமையாயாகவும் இருந்தது எனத் தெரிகிறது. இன்றும் புதியவர்களுக்கு இயலும் வரை உதவவது அறச்செயல்தான்.

 

ஒக்கல்

ஒக்கல் என்பது சுற்றத்தைக் குறிப்பது. சுற்றம் என்பது இல்வாழ்வானது உடன் சுற்றமாகும். பிறப்பு மற்றும் திருமணத்தினால் உண்டான இயற்கையான உறவுகள், தொடர்புகள் இவற்றைக் குறிக்கும். சுற்றத்தார்களே உண்மையில் ஒருவரின் உடனடிச் சமூகம். இல்வாழ்வானது உடன்பிறந்தார் முதற்சுற்றம். அடுத்துத் தந்தை, தாய்வழி, உடன் பிறப்புச் சுற்றம், தம் வாழ்க்கைத் துணைவழி உடன்பிறப்புச் சுற்றம் என்றவாறு விரியும். 

சுற்றத்தினரைப் பேணுதல் என்பது அவர்தம் வாழ்க்கைத் தேவைகளைப் பெறுதற்குரிய வாயில்களை அமைத்துத் தருதல் என்பது. சுற்றம் பழகும் பழக்கங்களால் அகவுணர்வுகள் செழுமையாக வளர்ந்து பயன்தரும். அதனால் அடிக்கடி கண்டும் கலந்தும் மகிழ்ந்து உரையாடியும் கலந்து உண்டும், உதவிகள் செய்தும், உறவு நிலைகளைப் பேணுதல் இன்றியமையாதது. சுற்றத்தினரை ஓம்பல் குடும்பம் வளமையாக அமையத் தூணை செய்யும். உறவுகள் செழிப்பாக அமையாத சுற்றம் சுமையாகிவிடும் என்பர்.

செல்வ நிலையிலிருப்போர் தம் சுற்றத்தாரை ஓம்புதல் வேண்டற்பாலது என்ப்தனைச் 'சுற்றம் தழாஅல்' எனும் அதிகாரத்திலும் வள்ளுவர் வலியுறுத்துகின்றார்:

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் 

பெற்றத்தால் பெற்ற பயன்(குறள் 524) (பொருள்: சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.)

 

தான்

தன்னைப் போற்றிக் காத்தலும் இன்றியமையாதது என்றது தான் இன்றி பிறர்க்குச் செய்யவேண்டிய அறங்களைச் செய்தல் இயலாது என்பதனால். சுவரின்றிச் சித்திரம் வரையமுடியாது. ஆதலால், பிறருக்குத் தொண்டு செய்பவன் தன்னையும் பேணிக் கொள்ளல் வேண்டும். தன்னைப் போற்றுதலைக் குற்றம் என்போரும் உளர். ஆனால், வள்ளுவர் வெளிப்படையாகவே உன்னையும் போற்றிக் காத்துக் கொள் என உலகறிய உரைக்கின்றார். 

குடும்பத்தலைவன் இல்வாழ்க்கையின் ஆக்க நிலையில் அமைந்த உறுப்பு. ஆதலால் அவனும் காலத்தில் உணவு அளவாக உண்ணுதல், உடல்நலத்திற்குரிய பயிற்சிகளை மேற்கொள்ளல், நல்ல நூல்களைக் கற்றல், அன்பு நலத்தை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவை வழி தன்னைப் பேணிக்கொள்ளுதல் வேண்டும்.

'எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று' என்று பரிமேலழகர் தன்னை ஓம்புதலும் அறச்செயலே என்பதற்கு விளக்கம் தந்தார்.

 

ஐம்புலத்து ஆறு என்றால் என்ன?

 

ஐம்புலத்து ஆறு என்ற தொடர்க்கு 'ஐந்திடமாகிய நெறி' என மணக்குடவரும் 'ஐந்து கூற்று நெறி' எனக் காலிங்கரும் 'ஐந்திடத்தும் செய்யும் நெறி' எனப் பரிமேலழகரும் உரை கூறுவர். 'ஐந்து வகையாரிடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களை' என்றனர் கா சுப்பிரமணியபிள்ளையும்., சொ தண்டபாணியும்.. ஐந்திடத்திலும் அறநெறியை என்பது திரு வி க., குழந்தை ஆகியோர் உரை. 'ஐந்திடத்தும் செய்யப்படும் அறநெறி' என்பது பொருத்தமாகும்.

 

தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐந்து இடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களைப் போற்றுதல் தலையாய கடமையாம் என்பது இக்குறட்கருத்து.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
Permalink  
 


தென்புலத்தார்‬ :

இறந்து போன முன்னோரைப் "பிதிரர்"என்பர்.இவர்கள் வாழுமிடம் பிதிர்லோகன் எனப்படும்.இதனை வள்ளுவர் 

"தென்புலம்"என்பார்.தென் புலத்தில் வாழும் முன்னோர்களுக்கு வழிப்பாடு செய்வதற்கு முதன்மை தருகிறார் வள்ளுவர்.
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.
என்பது குறள்.
நீத்தருக்கு நீர்க் கடன் தருதல்,தமிழர்களிடம் வழக்கத்தில் இருந்து மிகவும் பழமையான வழியே ஆகும்.
இடைச் சங்க காலத்தில் இருந்த பாண்டிய மன்னரால் ஒருவன் ,பளுஆக சாலை முது குடுமிப்பெருவழுதி என்பவன்.இவன் காலத்தில் இருந்த புலவருள் ஒருவர் நெட்டிமையார் என்ற புலவர்.
இவர் 'புதல்வர்கள் பொன் போன்றவர்கள் தம்முன்னோருக்கு நீர்க்கடன் தருவதால் இப்பெருமைக்கு இவர்கள் உரியவர்கள் ஆகிறார்கள்' என்கிறார்.
தென்புல வாழ்நாக்கு அருங்கடன் இகுக்கும் 
பொன்போல் புதல்வர்' என்கிறார் அவர் .
முறைப்படி செய்யும் நீத்தார் கடன்கள் முன்னோரை மகிழ்விக்கும்.பிதுர் ஆசி இருப்பின் எல்லா நலன்களும் விளையும்.

‪தர்ப்பண‬ நாட்கள் :-

எள்ளும்,நீரும் முன்னோருக்கு அளித்தால் நீர்க்கடன் தருதல் எனப்படும்.இதனைத் தர்ப்பணம் தருதல் என்பர்.முன்னோருக்குரிய இறந்தநாளில் திவசம் தருதல் வேண்டும்.படையால் இடுவது உண்மையான தமிழர் வழிபாடாகும்.இறந்தநாள் மட்டுமில்லாமல்,இன்னும் பலநாட்களும் முன்னோர் வழிபாட்டுக்குரிய நாட்களாக தர்ம சாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன.
அமாவசை நாட்கள்,மாதப்பிறப்பு நாட்கள் ,மாஹாளய பட்ச நாட்கள் என்பன முன்னோரை வழிபடுவதற்குரிய நாட்களாகும்.இந்த எல்லா நாட்களிலும் நீர்க்கடன் தராவிட்டாலும் ஆடி,தை மற்றும் மாஹாளய பட்ச அம்மாவாசை நாட்களிலாவது நீர்க் கடன் தருதல் வேண்டும்.

‪மாஹாளய‬ பட்சம் :-

மண்ணுலகின் தென்திசையில் வாழும் முன்னோர்கள்,தாம் வாழ்ந்த பகுதிக்கு வருகை தரும் நாட்கள் மாளய பட்ச நாட்களாகும்.புரட்டாசி மாத அமாவாசை மாளய அமாவாசை ஆகும்.அதற்கு முன் உள்ள நாட்கள் மாஹாளய பட்சம் எனப்படும்.இந்த நாட்களில் நீர்க்கடன் தருவது நல்லது.தமது முன்னோருக்குரிய திதி நாளில் திவசம் தரலாம்.குடும்ப வழக்கப்படி படையலும் இடலாம்.

‪நீர்க்கடன்‬ முக்கியம் :-

மாளய பட்ச நாட்களில் தகுந்தவர் துணையுடன் நீர்க்கடன் தருவது மிகவும் முக்கியமானதாகும்.

இந்த நாட்களில் ஆறு அல்லது குளங்களில் ,ஈர உடையுடன் நீரினை இரண்டு கைகளாலும் எடுத்து,தெற்குப் பார்த்து முன்னோரை நினைத்து நீரினை நீர்நிலையில் சேர்க்கலாம்.
ஆறு குளத்தில் குளிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் ,முன்னோரி நினைத்துக் கொண்டு ஒரு பெரிய பாத்திரத்தில் இருந்து இரண்டு கைகளாலும் நீரினை எடுத்து தெற்குப் பார்த்து வணங்கி இன்னொரு பாத்திரத்தில் சேர்க்கலாம்.

வசதி வாய்ப்புள்ளவர்கள் ராமேஸ்வரம் ,பூம்புகார் போன்ற கடல் துறைகளுக்கு சென்று திதி தர்ப்பணம் தருவது பல பல புண்ணியப் பலனைக் கொடுக்கக் கூடியதாகும் .



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 ஒரு மனிதனுக்கு உள்ள ஐந்து வகையான கடன்கள் அல்லது யக்ஞங்கள்....!

ஒரு அறிய தவத்திற்குப்பின் கிடைப்பதுதான் இந்த மனிதப் பிறவி. ஆயினும், இந்த மனிதன் பூமிக்கு வரும்போதே கடன் பட்டுத்தான் வருகிறான். ஐந்து வகையான கடன்கள் அவன் மேல் உள்ளது. ஐந்து யக்ஞங்கள் செய்து இவ்வைந்து கடன்களையும் கழிக்கவேண்டும். அந்தக் கடன்கள் :

1) பித்ரு கடன் அல்லது பித்ருயக்ஞம்,
2) பூத கடன் அல்லது பூதயக்ஞம், 
3) நரக் கடன் அல்லது நரயக்ஞம்,
4) ரிஷிக் கடன் அல்லது ரிஷியக்ஞம்,
5) தெய்வத் கடன் அல்லது தெய்வயக்ஞம்.

முதலில் பித்ரு கடன் :

இம்மானிட உடல் நம் பித்ருக்கள் மூலமாகவே கிடைக்கிறது. மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களும் தம் சந்ததியைப் பிறக்க வைக்கின்றன. ஆனாலும் அந்த சந்ததியின் வளர்ச்சியில் பெற்றவர்களின் பங்கு அதிகமில்லை.

மனிதக் குழந்தை பிறக்கும்போது எதுவும் அறியாத ஒரு மண் பிண்டமாகவே இருக்கிறது. எதைத் தின்ன வேண்டும், எதைத் தின்னக் கூடாது, செய்யத் தகுந்தது எது, செய்யத் தகாதது எது, எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படிப் பேச வேண்டும் இத்தகைய எந்த அறிவுமே இல்லாமலே பிறக்கிறான்.

இதையே கம்ப்யூட்டர் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், இறைவன் மற்ற உயிரினங்களை அவைகளது Hardware இல் அவற்றுக்குத் தேவைப்படும் Software அனைத்தையும் லோட் செய்தே அனுப்புகிறான். இதில், இந்த உயிரினங்கள் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் மேலும் தங்கள் Software ஐ புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு கிடையாது.

ஆனால், கடவுள் மனிதக் குழந்தைக்கு வெறும் Hardware மட்டுமே கொடுத்து அனுப்புகிறான். தன்னுடைய முன் ஜென்மங்களில் அவன் சேகரித்த Software களையும், இந்த ஜென்மத்தின் அனுபவங்களின் ஆதாரத்தில் மேலும் பல Software களையும் லோட் செய்து கொள்ளும் ஸ்வதந்திரத்தையும் அவனுக்கு அளித்திருக்கிறான். அதனால், மனிதனின் குழந்தைப் பருவம் ஒன்றும் அறியாய் பருவமாக (Software இல்லாத வெறும் Hardware ஆக) அமைந்துள்ளது. அப்பருவத்தில் அவன் பெற்றோர் மூலம் பலவற்றை அறிந்து கொள்கிறான். ஆசிரியரை அடைந்து உலக ஞானம் பெறுவதற்கான பருவம் வரும்வரை பெற்றோரே ஆசானாக இருந்து இந்த உலகத்தை அவனுக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். இவர்கள் செய்யும் இந்த மகத்தான உதவிக்கு பிரதி உபகாரமாக அவர்களது இறுதி மூச்சு உள்ளவரைப் போற்றுவதும், இறந்தபின் ஸ்ராத்தம் முதலியன செய்வதுமே பித்ருயக்ஞம்.

நாம் குழந்தைப் பருவத்தில் நம் சுய காரியங்களை சுயமாகச் செய்ய முடியாதிருந்த போது பெற்றவர்கள் நம்மைப் போற்றி வளர்த்தார்கள் இல்லையா, நமக்காகவே வாழ்ந்தார்கள் இல்லையா, அதேபோல அவர்களுடைய வயோதிகத்தில் தம் சுயகாரியத்தைச் செய்ய முடியாத நிலையில் அவர்கள் இருக்கும் வரை அவர்களை போற்றி பாதுகாப்பது நம் கடமை. இறந்த பின் பித்ருக்களுக்கு சிரத்தையுடன் அளிக்கப்படும் நீரும் பிண்டமும் அவர்கள் எந்த உருவத்தில் எங்கு இருந்தாலும் அவர்களை சென்று அடையும். அவர்களுடைய துயரம் தீர்த்திடும். இதுவும் சந்ததிகளின் கடமை. சந்ததிகள் தங்களது இந்தக் கடமைகளைப் பற்றின்று செய்வதே "பித்ரு யக்ஞம்" ....!

#பகவத்கீதை

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 

தமிழில் யமன்!!

??????????????????????????

எழுதியவர் சந்தானம்/லண்டன் சுவாமிநாதன்

English version of this article is posted already.

இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள், தினமும் யமனை வழிபடுகின்றனர். மரண தேவனை பயமில்லாமல் கும்பிடும் ஒரே இனம் இந்துக்களாகத் தான் இருப்பார்கள். பிராமணர்கள் தினமும் காலை, மதியம், மாலையில் சூரியனை நோக்கி சந்தியாவந்தனம் செய்வர். இதில் தெற்கு திசையை நோக்கி யமனைப் பார்த்து சொல்லும் மந்திரமும் வருகிறது. இதில் யமனைக் கருப்பன் என்று கூறுகிறது. காளி, கலி, சனிக் கிரஹம், கிருஷ்ணன், விஷ்ணு, ராமன் போல யமனும் ஒரு கருப்பன். வெள்ளைத் தோல் தெய்வங்கள் ஆரிய தெய்வங்கள் என்றும் கருப்புத்தோல் தெய்வங்கள் திராவிட தெய்வங்கள் என்றும் எழுதி இந்துக்களை பிளவுபடுத்தி இந்தியாவை சீர்குலைக்க எழுதிய வெள்ளைத்தோல் அறிஞர்களுக்கு யமன் சரியான அடி கொடுக்கிறான்.

யமனைப் பற்றி சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் பல குறிப்புகள் வருகின்றன. ஏற்கனவே இந்திரனையும் வருணனையும் தமிழர் தெய்வங்கள் என்று தொல்காப்பியம் கூறியதைக் கொடுத்தேன். இப்போது சங்கத் தமிழ் இலக்கியம் யமதர்மன் பற்றிக் கூறுவதையும் காண்போம். அதில் ஞமன் என்றும் கூறுவர்.

சங்கத் தமிழில் புறநானூறு மிகவும் பழமையான பகுதி. அதில் பாடல் 4,13,19,22,56,195, 226,294 ஆகியவற்றிலும் பதிற்றுப்பத்தில் பாடல் 13, 14 கலித்தொகையில் பாடல் 105, 120 ஆகியவற்றிலும் காலன் என்ற பெயரில் புறநானூறு பாடல் 23, 41, 240, பதிற்றுப்பத்தில் பாடல் 39 ,கலித்தொகையில் பாடல் 105, 143 ஆகியவற்றிலும் யமதர்மராஜா பவனி வருகிறார்.

ஞமன் என்ற பெயரும் எருமை வாஹனமும் பரிபாடலில் வருகிறது (3, 5, 8 ஆம் பாடல்கள்) மீளி, மறலி, கணிச்சிப்படையோன், மடங்கல், கூற்றம் என்ற பெயரிலும் யமன் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன.

ஆரிய திராவிட வாதத்தை நகைப்புள்ளாக்கும் யமனைப் பற்றிய குறிப்புகளை மட்டும் பார்ப்போம்:

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்கும் காலை, இரங்குவீர் மாதோ (புறம் 195)

பொருள்: கடுந்திறலோடு மழுப்படையுடன் கூற்றுவன் பாசத்தால் கட்டி இழுத்துச் செல்லும்போது வருத்தப்படுவீர்கள்.

இந்துமதத்தில் இன்றுள்ள நம்பிக்கையை 2000 ஆண்டுகளுக்கு முன் நரிவெரூவுத்தலையாரும் பாடிவிட்டார். எருமை வாஹனம் உடையவன் என்பதும் புராணக் கருத்தாகும்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை இடைக்காடனார் பாடிய பாடலிலும் (புறம் 42) ‘’கணிச்சி என்னும் படைக் கலத்தை உயிரை வருந்தச் சுழற்றி வரும் கூற்றம்’’ என்று யமன் வருணிக்கப்படுகிறான்.

TIBET15_Yama, 16c

ஒரு மன்னரின் சீற்றத்தை விவரிக்கும் போது, தமிழ், வடமொழி இலக்கியங்கள் மன்னனை யமனுக்கு ஒப்பிடுவது வழக்கம்.

திருக்குறளில் கூற்று/யமன் என்ற சொல் 326, 765, 1050, 1083ல் வரும். கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டும் யமன் பற்றி மட்டுமின்றி ஏராளமான புராணக் கதைகளையும் உவமைகளையும் கையாளுகின்றன.

பிராமணர்கள் தினமும் மும்முறை சொல்லும் யம வந்தனத்தில் யமன் பற்றி 13 பெயர்கள் வரும். இதை தெற்கு திசை நோக்கி நின்றுகொண்டு சொல்லுவர். இறந்த மனிதர்கள் தென் திசைக்குச் செல்லுவர் என்னும் இந்து மதக் கருத்தை ஆணித் தரமாக, அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, ஆரிய திராவிட வாதத்துக்கு ஆப்பு வைக்கிறான் வள்ளுவன்:

‘’தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’’ ( குறள் 43)

இந்துக்கள் தினமும் பஞ்ச யக்ஞம் செய்யவேண்டும் என்பதை வள்ளுவன் இரண்டே வரிகளில் சொல்லும் குறள் இது. ஆறாவது பகுதி தானியத்தை மன்னனுக்கு வரியாகச் செலுத்தவேண்டும்.

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போல் புதல்வர் பெறா அதீரும் (புறம்-9)

என்று சொல்லி நெட்டிமையார் என்னும் புலவரும் ஆரிய திராவிட வாதத்துக்கு செமை அடி கொடுப்பார். இறந்தோருக்கு திதி, தர்ப்பணம் செய்வதை அழகாக எடுத்துரைக்கிறார் புறநானூற்றுப் புலவர்.

சித்திரகுப்தன் யார்: யமனுடைய காரியதரிசி ஒரு தனி ஆள் அல்ல. சித்திரகுப்தன் என்றால் ‘’ரகசிய வரைபடம்’’ என்று தமிழில் பொருள். நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் செயல் வடிவம் பெரும் முன் சித்திரமாகப் படியும். அப்பொழுதே யமன் நமக்கு மதிப்பெண் போட்டு விடுகிறான். அதன் படியே, புண்ணிய பாபங்கள் ஏற்படும். அதன் அடிப்படையில் நாம் நரகத்துக்கோ, சுவர்க்கத்துக்கோ செல்கிறோம். இதையே சித்திர குப்தன் (ரகசிய=குப்த, வரைபடம்=சித்திர) என்போம். ஒரு கம்ப்யூட்டரும் மூளையும் கோடிக் கோடி கணக்குகளைப் போடும். சித்திரகுப்தன் கணக்கு சூப்பர், சூப்பர் கம்ப்யூட்டருக்கும் மேல்!

yama

இந்துக்கள் ஏன் மரணதேவதையை வழிபடுகிறார்கள்?

மஹாபாரதத்தில் மிகவும் சுவையான கதை ‘’ஒரு பேயின் கேள்விகள்’’ ( யக்ஷப் ப்ரஸ்னம்) என்ற பகுதியாகும். இதில், ‘’உலகிலேயே அதிசயமான விஷயம் என்ன?’’ என்ற கடைசி கேள்விக்குப் பதில் கொடுத்த தருமன் ‘’ உலகில் தினமும் எவ்வளவோ பேர் இறந்து போகிறார்கள். அதைப் பார்த்த பின்னரும் எல்லோரும் தினமும் வாழப் போகிறோம் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார்களே’’ என்பதாகும். ஆக நாம் எல்லோரும் எந்தக் கணத்திலும் இறக்கலாம் என்பதை நினைவு படுத்தவே இப்படி தினசரி ய்ம தர்மன் வழிபாடு போலும்.

திருவள்ளுவரும் மஹாபாரத ஸ்லோகத்தை ‘’நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு’’ (குறள் 336) என்ற குறளில் தந்துள்ளார்.

மற்றொரு காரணமும் உண்டு. இது கார்களில், வண்டிகளில் உள்ள ‘’ஷாக் அப்சார்பர்’’ போன்றது. குழந்தைகள் பிறக்கும் போது மகிழும் மனிதன், ஒரு உறவினர் இறக்கும்போது,உலகமே பறிபோய்விட்டது போல மயங்கி பறிதவிக்கிறான். இறப்பும் ஒரு இயற்கை நிகழ்வே என்பதை மறந்து விடுகிறான்.  தினமும் மரண தேவனை நினைத்து வழிபட்டால் அதுவே  ‘’குஷன் மெத்தை’’ போல செயல்படும். மரண பயம் நீங்கும். நமது ஆயுளும் நூறு ஆண்டு நீடிக்கும். ஏனெனில் பிராமணர்களின் மதிய வேளை சந்தியாவந்தனத்தில் ‘’நூறாண்டுக்காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க’’ (பஸ்யேமஸ் சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம்  என்ற மந்திரமும் வருகிறது. இதையே கண்ணதாசன் திரைப்படத்தில் பாடி இருக்கிறார்.

 

யமனைப் பற்றிய சில சுவையான குறிப்புகளையும் காண்போம்:

1.யமன் தென் திசைக்கு அதிபன். யமன் பற்றி உலகிலேயே பழமையான மத நூலான ரிக் வேதத்திலும் வருகிறது. யம என்ற வார்த்தைக்கு இரட்டையர் என்ற பொருளும் உண்டு. அவனுடன் பிறந்தவள் யமி.

2.யமன் தான் உலகில் இறந்த முதல் மனிதன் என இந்துமத நூல்கள் பேசும். யமனுக்கு உதவி செய்ய ஒரு கணக்குப் பிள்ளை உண்டு. அவன் பெயர் சித்திர குப்தன்.

3.யமனிடம் இரண்டு நாய்கள் உண்டு அதன் பெயர் சரமா. அதற்கு ஒவ்வொன்றுக்கும் நான்கு கண்கள்.

4.யமனுடைய மனைவியர்  பெயர்கள் ஹேமமாலா, சுசீலா, விஜயா.

5. யமனுக்குப் பல கோவில்களும் தனி சந்நிதிகளும் இருக்கின்றன.

6.யமன் மிகவும் நியாயமானவன். அவரவர் புண்ணிய பாபத்தால் கிடைப்பதைப் பாரபட்சமின்றி கொடுப்பதால் அவனுக்கு தர்மராஜன் என்று பெயர்.

7.யமனுடைய அப்பா பெயர் விஸ்வவத். இதனால் யமனை வைவஸ்வதன் என்றும் அழைப்பர். அம்மா பெயர் சரண்யு.

8. இவன் கருப்பன் என்பதால் ‘’நீலாய’’ என்றும் அழைப்பர்.

யமனுடைய வாஹனமும் கருப்பு— எருமை!

9.யமன் கையில் உள்ள ஆயுதத்தை கணிச்சி என்று சங்கத் தமிழ் இலக்கியங்கள் பகரும். அவனுடைய கையில் பாசக் கயிறும் இருக்கும்.

10. யமனுடைய ‘பெர்சொனல் அஸ்ஸிஸ்டன்ட்’ சித்திர குப்தனின் கையில் இருக்கும் ரெஜிஸ்டருக்குப் பெயர் ‘’அக்ர சந்தனி’’.

ஆக, ஆரிய யமனும் இல்லை, திராவிட யமனும் இல்லை; ஒரே ஒரு யமன் தான்! அவன் இந்தியாவையும் இந்துமதத்தையும் சீர்குலைக்க எண்ணுவோரின் உயிர்குடிக்கும் இந்திய யமன்!!

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

Pictures are taken from various websites;thanks. contact swami_48@yahoo.com

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard