தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி நூல்களில், பன்னிரண்டாம் தொகுதியில் பல்லவர் கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலும் சோழர் கல்வெட்டுகள் தொடர்பான நூல்களும் குறிப்புகளுமே மிகுதியும் பார்வைக்குக் கிடைக்கும் சூழ்நிலையில், பல்லவர் கல்வெட்டுகளை மட்டும் தொகுத்த மேற்படி பன்னிரண்டாம் தொகுதி நூல் கிடைக்கப்பெற்றதும், பல்லவர் கல்வெட்டுகளைப் படிப்பதன் மூலம் பல்லவர் வரலாற்றையும் சற்றே பரந்த அளவில் தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது. மேற்படி நூலின் வழியாகவும், பல்லவர் பற்றிய வேறு நூல்களின் வழியாகவும் தெரியவரும் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் முயற்சியில் இக்கட்டுரை அமையும். இந்நூல், இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முதற்பிரிவில், கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரையிலான பல்லவ ஆட்சியாளர்களின் கல்வெட்டுகள் காட்டப்பெறுகின்றன. இரண்டாம் பிரிவில், 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த – தம்மைப் பல்லவ மரபினர் என்று கூறும் – கோப்பெருஞ்சிங்கன் பெயருள்ள இரு தலைவர்களின் கல்வெட்டுகள் தொகுக்கப்பட்டுள்ளன. முதற்பிரிவில் சுட்டப்பெறும் முற்காலப் பல்லவர் பற்றிய செய்திகளே இக்கட்டுரைக்கான பார்வைக் கருதுபொருள்.
பல்லவர் யார்?
பல்லவர் என்போர் யார், வரலாற்றில் அவர்களது தோற்றப் பின்னணி அல்லது மூலம் யாது என்னும் ஆய்வை வரலாற்று ஆய்வாளர்கள் நெடுங்காலமாக மேற்கொண்ட பின்னரும் முடிவு எட்டப்படவில்லை என்றே கூறவேண்டும். வரலாற்று ஆசிரியர் கே.கே. பிள்ளை அவர்களின் கூற்றுப்படி, ”பல்லவர்கள் ஆதியில் வாழ்ந்த இடம் இன்னதென்பதும், தமிழகத்துக்கு எப்படி வந்தனர் என்பதும் இன்னும் மறைபொருளாகவே இருந்துவருகின்றன. சங்க இலக்கியத்தில் பல்லவரைப் பற்றிய குறிப்பு ஒன்றும் காணப்படவில்லை. ஆனால், பல்லவர்கள் எழுதிவைத்துச் சென்ற கல்வெட்டுகள், எழுதிக்கொடுத்துள்ள செப்பேடுகள் ஆகியவற்றைக்கொண்டு அவர்களைப்பற்றிய வரலாற்றை ஒருவாறு கோவை செய்துகொள்ளலாம்”.
செப்பேடுகளின் காலம்
பல்லவர்களின் காலம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரையிலானது எனக் கொள்ளப்படுகிறது. பல்லவரின் தோற்றம் தொடர்பான செய்திகள் உறுதிப்படுத்த இயலாதுள்ளன. பல்லவ அரசர்களின் கால வரிசை பற்றியும் இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளது. பல்லவர் தோற்றம் ஆய்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்லவர் தோற்றம் பற்றிய புதிருக்குப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. பல்லவர்களின் முதற்கட்ட வரலாறு அவர்கள் வெளியிட்ட செப்பேடுகளின் மூலம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும், தீர்க்கப்படாத ஐயங்கள் பல உள்ளன. இச்செப்பேடுகள் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவை. குறைந்த தரவுகளைக்கொண்ட இச்சேப்பேடுகளில் பல்லவ அரசர்களின் பெயர்களைத் தவிர்த்து, அரசர்களின் கொடிவழி வரிசை பற்றியோ அரசியல் நிலைமை பற்றியோ விளக்கம் தருகின்ற செய்திகள் கிடைக்கவில்லை. அரசவரிசையும், அவர்களின் ஆட்சிக்காலமும் தீர்மானிக்கப்படாத நிலையே உள்ளது. செப்பேடுகளில் சுட்டப்படும் அனைத்து அரசர்களும் ஆட்சி செய்துள்ளனரா என்பதும் ஐயத்துக்குரியதாகவே உள்ளது. ஆனால், கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆவணங்கள் பல்லவ மரபு (Dynasty) பற்றிய தெளிவான செய்திகளைக் கொண்டுள்ளன.
பல்லவர் தோற்றம் – பல கருத்துகள்
(அ) பார்த்தியர் (PARTHIAN) அல்லது பஹ்லவர் தோற்றம் (PAHLAVA ORIGIN)
PERSIA என்னும் பாரசீகத்தைச் (தற்போதைய ஈரான் நாடு) சேர்ந்த பார்த்தியர் (PARTHIAN) என்னும் அயல்நாட்டு மரபினர் பல்லவர் என்பது ஒரு கருதுகோள். எல். ரைஸ் (L.RICE) என்னும் அறிஞர் இக்கருத்தை முன்வைத்தார். பலரும் இக்கருத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். பஹ்லவி என்பது ஈரானிய மொழிகளுள் ஒன்று. ”அராமிக்” (ARAMAIC) மொழியினத்தைச் சேர்ந்தது. பஹ்லவி மொழி பேசியோர் பஹ்லவர்; பஹ்லவர் என்பது பல்லவர் ஆயிற்று என்பர். இந்தப் பார்த்தியர் ஈரானிலிருந்து வந்து இந்தியாவின் வடமேற்குப்பகுதியில் வாழ்ந்தவர். கிழக்குக் கடற்கரை நோக்கி இடம் பெயர்ந்தனர். அவர்கள் இடம் பெயர்ந்து தென்னகத்தின் பல்லவர் ஆனார்கள் என்று கருதப்படுகிறது. பஹ்லவர்-பல்லவர் சொல் ஒற்றுமை தவிர இக்கருத்துக்குச் சான்றுகள் இல்லை. பல்லவர் செப்பேடுகளிலும் இதற்கான சான்றுக்குறிப்புகள் இல்லை. மேலைச் சத்ரப அரசன் ருத்திரதாமன், ஆந்திர அரசன் கௌதமி புத்ர சாதகர்ணி மீது தொடுத்த போர் காரணமாகப் பஹ்லவர் கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்திருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர் வெங்கய்யா கருதுகிறார். ஜுனாக3த்4 கல்வெட்டு, ருத்திரதாமனின் அமைச்சராக இருந்த சுவிசாகர் என்பவர் ஒரு பஹ்லவர் என்று குறிப்பிடுகிறது. ஆனால், அவர் பல்லவ மன்னர்களோடு தொடர்புடையவர் என்பதற்கு அடிப்படை ஏதுமில்லை. பல்லவ அரசர் வரிசைப்பட்டியலில் (GENEALOGICAL LIST) அவர் பெயர் இல்லை. பஹ்லவர் பல்லவர் அல்லர் என்பதற்குச் சான்றாக புவனகோசம் என்னும் நூலைக் குறிப்பிடலாம். கூர்ஜர அரசர்களான மஹேந்திரபாலன், மஹிபாலன் ஆகியோரின் அரசவைப் புலவராக விளங்கிய இராஜசேகரன் என்பவர் எழுதிய நிலவியல் நூலே புவனகோசம். அதில், பஹ்லவர், சிந்து நதிக்கப்பால் உத்தரபதம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், பல்லவர் தட்சிணபதம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார். எனவே, பஹ்லவர், பல்லவர் அல்லர் என்பது தெளிவு. பல்லவர் பார்த்தியர் அல்லர் என்பதாக கே.கே. பிள்ளையின் குறிப்பு பின்வருமாறு : ”காஞ்சியின் வைகுந்தப்பெருமாள் கோயிலில், யானையின் மத்தகத்தைப்போன்று வடிவமைக்கப்பட்ட உருவம் ஒன்று மணிமுடி சூடிய கோலத்தில் தீட்டப்பட்டுள்ளது. இதைக்கொண்டு பல்லவர்கள் பார்த்தியர் எனவும் கூறுவர். ஏனெனில், இந்தோ-பாக்ட்ரிய (INDO-BACTRIA) மன்னனான டெமிட்ரியஸ் (DEMETRIUS) என்பான் ஒருவனுடைய உருவம், அவனுடைய நாணயம் ஒன்றின்மேல் இத்தகைய முடியுடன் காட்சியளிக்கிறது. இச்சான்று ஒன்றை மட்டும் கொண்டு பல்லவர் பார்த்தியரைச் சேர்ந்தவர் என்று கொள்வது பொருந்தாது.”
(ஆ) பல்லவர் தமிழ் நிலத்தவர்
தமிழகத்தின் மணிபல்லவத்தீவுதான் பல்லவரின் மூலம் என்னும் கருத்தும் உள்ளது. இக்கருத்துப்படி, நாகர் குலத்தவனும் மணிபல்லவத்துத் தலைவனும் ஆன வளைவாணன் என்பவனின் மகள் பீலிவளையை மணந்த கிள்ளியின் மகன் இளந்திரையன்தான் முதல் பல்லவ அரசன். இக்குறிப்பு மணிமேகலையில் உள்ளது. இந்த இளந்திரையன், கடலில் கப்பல் கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கிய போது காலில் தொண்டைக்கொடியின் தண்டு சுற்றி இருந்தமையால் தொண்டைமான் எனப் பெயர் பெறுகிறான். தாயின் இடமான மணிபல்லவத்தின் பெயரால் பல்லவப் பரம்பரையைத் தோற்றுவிக்கிறான். இக்கருத்துக்கு உடன்பாடாகப் போதிய சான்றில்லை. பல்லவர் செப்பேடுகளில் இளந்திரையன் பற்றிய குறிப்போ, சோழர்-நாகர் இணைந்தமைக்கான வேறு குறிப்போ இல்லை. இச்செப்பேடுகள், பல்லவர், பாரத்துவாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்றும், அசுவமேதம், வாஜபேயம் போன்ற யாகங்களைச் செய்தவர் என்றும் கூறுகிறதே ஒழிய, சோழர்-நாகர் பற்றி இல்லை. செப்பேடுகளின் மொழியும் தமிழ் இல்லை. ஆனால், பின்னர் வந்த மகேந்திரவர்மனின் விருதுப்பெயரான “லளிதாங்குர” என்னும் பெயர் திருச்சி மலைக்கோட்டைக் குடைவரைக் கல்வெட்டில் காணப்படுகிறது. ”அங்குர” என்னும் சமற்கிருதச் சொல் முளைவிட்டு வருகின்ற - தளிர்த்து வருகின்ற - ஒரு தண்டுப்பகுதியைக் (SPROUT,SHOOT,STEM) குறிக்கும். ”லளித” என்னும் சமற்கிருதச் சொல்லுக்கு ”இளம்” (SOFT, GENTLE) என்னும் பொருள் அமைவதால், “லளிதாங்க்குர” என்னும் சொல் “இளந்தண்டு” என்று பொருள் தரும். இது ”தொண்டைக்கொடி”, ”இளந்திரையன்”, “தொண்டையர்” ஆகிய சொற்களோடு பொருந்துவது குறிப்பிடத்தக்கது. சென்னைப் பல்கலை 1928-ஆம் ஆண்டு வெளியிட்ட “HISTORY OF THE PALLAVAS OF KANCHI” என்னும் நூல், ‘பல்லவரின் விருதுப்பெயர்களான அங்குரன், போத்தரையன் என்பவை ‘பல்லவ’ என்பதற்கு ஒப்பான சொற்கள்’ எனக்குறிப்பிடுகிறது.
(இ) பல்லவர் வட இந்தியாவைச் சேர்ந்தவர்
பல்லவர் தென்னிந்தியாவுக்கு அயலவரே. எனவே, காஞ்சிக்கும் அயலவரே. பல்லவர் ஆளுகைக்கு முன்பிருந்தே காஞ்சியும் தொண்டை மண்டலமும் தத்தம் பெயர்களோடு விளங்கியவை. இலக்கியங்களில் இடம் பெற்றவை. காஞ்சி பண்டு தொட்டுத் தொண்டைமான்களின் ஆட்சியில் இருந்துள்ளது. தொண்டையர் ஆண்டதால், இப்பகுதி தொண்டை மண்டலம் என்று வழங்கியது. பல்லவர் செப்பேடுகளில் “பல்லவர்” என்னும் பெயரே உள்ளது. “தொண்டையர்”, “திரையர்” ஆகிய பெயர்கள் காணப்படுவதில்லை. எனவே, “திரையர்” என்னும் பெயர் பல்லவரைக் குறிக்காது எனலாம். அகநானூற்றில் வரும் “திரையர்” என்னும் ஒற்றைச் சொல் – வேறு அடை மொழியும் இல்லை - பல்லவரைக் குறிக்காது. பெரும்பாணாற்றுப்படை, சோழன் வழி வந்த தொண்டைமான் இளந்திரையனைக் காஞ்சியை ஆட்சி செய்தவன் என்று குறிக்கிறது. வேங்கடம் (திருப்பதி) வரையிலும் தொண்டை மண்டலப் பரப்பு இருந்தது. வேங்கடத்தை ஆட்சி செய்தவன் ஒரு திரையன். அவனது தலைநகர் பவத்திரி. இது இன்றைய ரெட்டிபாளெம் (REDDIPALEM). நெல்லூர் மாவட்டம் கூடூர் (GUDUR) வட்டத்தில் உள்ளது. முற்காலத்தில் இப்பகுதி காகந்தி நாடு (KAKANDI) என்று வழங்கியது. பின்னர் கடலில் மூழ்கியது. வேங்கடத்தின் இன்னொரு தலைவனாகப் புள்ளி என்பவன் இலக்கியத்தில் குறிக்கப்படுகிறான். இவன் களவர் என்னும் பழங்குடித் தலைவனாகவும், வேங்கடத்தை ஆட்சி செய்தவனாகவும் குறிக்கப்பெறுகிறான்.
(இ-1) சாதவாகனரின் கீழ் பல்லவர்
ஆதோனி என்னும் பகுதி, பழங்கல்வெட்டுகளில் ”சாதாஹனி ஆஹாரா” (SATAHANI AHARA) என்றும், “சாதவாஹனி ராஷ்ட்ரா” (SATAVAHANI RASHTRA) என்றும் குறிப்பிடப்படுகிறது. சாதவாகனரின் குடியேற்றப் பகுதியான இது, தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியாகக் கூறப்படுகிறது. இங்கு கிடைக்கப்பெற்ற நாணயங்களில், படகு உருவம் பொறித்த நாணயம் ஒன்று பல்லவருடையது என்னும் கருத்து நிலவினாலும், இது சாதவாகனருடையது என்பது பெரும்பான்மையான கருத்து. இந்நாணயங்கள், வட பெண்ணைக்கும் தென் பெண்ணைக்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைப்பதன் பின்னணியை, இப்பகுதியைச் சாதவாகனர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சியாகக் கொள்ளலாம். திருக்கோவிலூர் மலையமான்களும், சோழரும் ஆரியரை எதிர்த்து நின்றார்கள் என்னும் வரலாற்று நிகழ்வு, மேற்படி சாதவாகனரின் முயற்சிக்கு எதிர்வினையாகும் எனக் கருதலாம். இப்பகுதியிலிருந்துதான் பல்லவர் எழுச்சி நடைபெற்றது எனலாம். இப்பகுதியின் பல்லவர் தலைவன் பப்பதேவன் (BAPPA DEVA) என்பவன், நூறாயிரம் ஏர்-எருது நன்கொடை அளித்துள்ளான் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு. (காடழித்து, வேளாண்மைக்கேற்ற நாடாக்கும் முயற்சியாக இதைக் கொள்ளலாம்; இவ்வாறு நிலப்பகுதியை விரிவாக்கிய காரணத்தாலேயே பல்லவர்களுக்குக் காடுவெட்டி என்னும் ஒரு சிறப்புப் பெயர் அமைந்திருக்கக்கூடும்). பல்லவர்கள் சாதவாகனரின் ஆட்சியின்கீழ் அவர்களது தென்கிழக்கு எல்லையின் மண்டலத் தலைவர்களாகவோ (GOVERNORS), அல்லது அவர்களின் அதிகாரிகளாகவோ இருந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. “பல்லவர்கள் சாதவாகனரின் கீழ் குறுநில மன்னராகவும், ஆட்சி அலுவலராகவும் செயற்பட்டு வந்தனர் என்றும், சாதவாகனப் பேரரசு வீழ்ச்சியுற்ற பிறகு (கி.பி. 225) காஞ்சிபுரத்தில் தம் பெயரில் ஆட்சிப் பரம்பரையொன்றைத் தொடங்கினர் என்றும் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் கருதுவார்” (கே.கே.பிள்ளையவர்களின் நூல் குறிப்பு). பல்லவர்கள் சாதவாகனருக்குத் திறை செலுத்திவந்தனர். சாதவாகனர் படிப்படியாகத் தமிழ்ப்பகுதியை நோக்கித் தம் ஆட்சிப்பரப்பை விரிவாக்கம் செய்ததோடு வேளாண்மையைப் புகுத்திப் பண்படுத்தினர். இறுதியில், தமிழ் மன்னர்களின் வலிமை குன்றியபோது காஞ்சியையும் தொண்டைமண்டலத்தையும் கைக்கொண்டனர். சாதவாகனருடனான பல்லவரின் தொடர்பு, பல்லவரைக் காஞ்சியுடன் இணைத்தது எனலாம். பல்லவர்களின் பிராகிருதச் செப்பேடுகள், பல்லவரைக் குறிப்பாகக் காஞ்சியின் தலைவர்களாகவே காட்டுவது இதன் காரணமாகத்தான். இதேபோல் சமற்கிருதச் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன. கி.பி. 3-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், எல்லை மண்டலத்தலைவர்கள் தனி ஆட்சிக் கொள்கையில் இறங்கியதால்தான் சாதவாகனரின் வீழ்ச்சி நிகழ்ந்தது எனலாம். இவ்வாறுதான் க்ஷத்ரபரும், வாகாடகரும் எழுச்சியுற்றனர். இதே முறையில் பின்னர் கிருஷ்ணா நதிக்கரையில் சாலங்காயனரும், விஷ்ணுகுண்டினரும் வளர்ச்சியுற்றனர். சாதவாகனரின் வீழ்ச்சிக்கு நூறு ஆண்டுகள் பின்னர், சமுத்திர குப்தனின் தென்னகப் படைத்தாக்குதல் நிகழ்ந்தது. பலர் அடிபணிந்தனர்; அவர்களில் காஞ்சியை ஆண்ட விஷ்ணுகோபனும் ஒருவன்; இதை சமுத்திரகுப்தனின் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பல்லவன் என்னும் சொல் கல்வெட்டில் இல்லையெனினும், காஞ்சியை ஆண்ட என்னும் குறிப்பின் காரணமாகவும், பல்லவ அரசர் வரிசையில் விஷ்ணுகோபன் என்னும் பெயர் இடம் பெறுவதன் காரணமாகவும் சமுத்திரகுப்தனின் கல்வெட்டு பல்லவன் விஷ்ணுகோபனையே குறிப்பதில் ஐயமில்லை.
சாதவாகனரின் ஆட்சியில், தென்மேற்குப்பகுதியில் பழங்குடித் தலைவர்களாக விளங்கி ஆட்சி செய்தவர்கள் சூட்டு நாகர்கள் (CHUTU NAGAS). சூட்டு நாகர்கள் பனவாசி ஆட்சியாளர்களின் (கதம்பர்) கீழ் இருந்தவர்கள். இந்த நாகர்களின் பெண் ஒருத்தியை – அரசுரிமை பெற்றவள் – காஞ்சிப்பல்லவன் மணந்த காரணத்தால் பல்லவரது ஆட்சிப்பரப்பு விரிவடைந்தது. வேலூர்ப்பாளையம் செப்பேடு, வீரகூர்ச்சன் என்பவன் (பல்லவன்) சூட்டு நாகர் வழி மண உறவு கொண்டு ஆட்சி நிலம் ஒன்றைப் பெற்றதாகக் குறிப்பிடுகிறது. கங்கரும் கதம்பரும் பல்லவரின் மேலாண்மையை ஏற்றார்கள். பின்னாளில், முற்காலச் சாளுக்கியர் பனவாசியைக் கைப்பற்றியதாலேயே பல்லவர்க்கும் சாளுக்கியர்க்கும் தீராப்பகை ஏற்பட்டது. எனவே, பல்லவர், சாதவாகனரின் அதிகாரிகளாக இருந்து பின்னர் ஆட்சியாளர்களாக எழுச்சி பெற்றனர் என்பது தெளிவாகிறது. பல்லவர் முதலில், சாதவாகனரின் தென்கிழக்கு எல்லைப்பகுதியில் தனி ஆட்சியமைத்துப் பின்னர் படிப்படியாகக் கர்நூல், நெல்லூர், கடப்பா மாவட்டத்தின் ஒரு பகுதி என எல்லைகளை விரித்து இறுதியில் காஞ்சியைக் கைப்பற்றியதால் தொண்டை மண்டலம் முழுதும் பல்லவர் ஆட்சியின் கீழ் வந்தது.
(இ-2) பல்லவரின் பிராகிருத, சமற்கிருதச் செப்பேடுகளின் காலம்
பல்லவர், சாதவாகனரின் கீழ் இருந்தபோதே – சாதவாகனரின் இறுதிக்காலத்தில் – காஞ்சியைக் கைக்கொண்டிருக்கவேண்டும். ஏனெனில், பல்லவர் தாம் வழங்கிய பிராகிருத, சமற்கிருதச் செப்பேடுகளில் தங்களைக் காஞ்சி அரசர்கள் என அழைத்துக்கொண்டாலும் இச்செப்பேடுகள் காஞ்சியிலிருந்து வெளியாகவில்லை. புறத்தே நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களிலிருந்து வெளியிடப்பெற்றன. நெல்லூர் மாவட்டப்பகுதி, தொண்டை மண்டலத்தை அடுத்துள்ள வடக்குப்பகுதியில் அமைகிறது. அடுத்து, சமற்கிருதச் செப்பேடுகள் வெளியான காலகட்டம் சற்றுக் குழப்பம் தருகின்ற ஒன்று. ஆட்சியில் இருக்கும் பல்லவ அரசர்களின் வரிசைப்பகுப்பு முறையாகவும் தெளிந்த முடிவாகவும் காணப்படுவதில்லை. பல்லவப் பகுதியைச் சுற்றிலும் போர்கள், பல்லவர்க்குள்ளேயே குழப்பங்கள் என்பதான சூழ்நிலை. ஒருபுறம் கங்கரும், கதம்பரும் தனி ஆட்சியதிகாரம் பெற்று எழுச்சி. சோழர்கள் காணாமலே போய்விட்ட நிலை. இருண்ட காலம் என்று கருதப்படும் களப்பிரர் கலகத்தோடு இச்சூழ்நிலையை இணைத்துப்பார்க்கவேண்டும். களப்பிரர் காலத்தில் இழந்துவிட்ட ஒரு பிரமதேயக் கொடையை மீட்டுத் தருமாறு பிராமணன் ஒருவன் வேண்டிக்கொண்டதையும், பாண்டியன் தேர்மாறன் இராஜசிம்மன் பிரமதேயக் கொடையைப் புதுப்பித்து வேள்விக்குடிச் செப்பேட்டை அளித்ததையும் இச்சூழ்நிலைக்குச் சான்றாகக் கொள்ளலாம். பாண்டியன் கடுங்கோனும் பல்லவ முதல் பேரரசன் சிம்மவிஷ்ணுவும் சமகாலத்தவர் என்பதையும் இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். எனவே, களப்பிரர் காலம், பல்லவரின் சமற்கிருதச் செப்பேட்டுக் காலம் என்பது தெளிவாகிறது.
-- Edited by admin on Saturday 29th of June 2019 03:32:53 PM
”பல்லவரின் அரசியல் முறைகள் தொடக்கத்தில் சாதவாகனரின் அரசியல் முறைகளுடனும், கௌடில்யரின் அர்த்த சாத்திரக் கோட்பாடுகளுடனும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தன; பல்லவரின் பண்பாடுகள் பலவும் தமிழ் மன்னருடைய பண்பாடுகளுக்கு முற்றிலும் முரண்பாடாகக் காணப்பட்டன. அவர்கள் வடமொழியையே போற்றி வளர்த்தனர். சாதவாகனருடன் தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் பல்லவர்கள் பிராகிருத மொழியிலும், சமற்கிருத மொழியிலும் பயிற்சி மிக்கவர்களாக இருந்தனர். அம்மொழிகளிலேயே சாசனங்களையும் பொறித்து வைத்தனர்.” என்று கே.கே. பிள்ளையவர்கள் கூறுகிறார்.
பல்லவர் காலத்து எழுத்து வழக்கு
சிந்து சமவெளிக் குறியீடுகள், எழுத்துகள்தாம் என்று நிறுவப்படும் வரையில், இந்தியப்பகுதி முழுவதிலும் கிடைக்கப்பெற்ற, காலத்தால் முற்பட்ட எழுத்து என்று பிராமி எழுத்தை மட்டுமே குறிப்பிட இயலும். பிராமி எழுத்து வட இந்தியாவின் மொழிச் சூழலுக்கேற்ப சில கூடுதல் எழுத்துகளைக் கொண்டிருக்கும். இவை வர்க்க எழுத்துகள் எனப்பெறும். தென்னகத்தில் தமிழி என்று குறிப்பிடப்பெறும் பிராமி எழுத்தில் வடமொழிச் சொற்களை ஒலிப்பதற்கான தனி எழுத்துகள் (வர்க்க எழுத்துகள்) இல்லை. ஆனால் வட இந்தியப்பகுதிகளில் வழங்கிய பிராமியில் இவை உண்டு. தமிழி என்பதைத் தொன்மைத் தமிழ் எழுத்து என்பார் நடன. காசிநாதன் அவர்கள். கி.மு. 5-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வரை, ஏறத்தாழ எழுநூறு ஆண்டுக்காலம் இத் தொன்மைத் தமிழெழுத்து, வடிவில் மாறுதல் இன்றி வழக்கில் இருந்துள்ளது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு அளவில் தொன்மைத் தமிழெழுத்து மாற்றம் பெறத்தொடங்கி வட்டெழுத்து உருப்பெற்றது. இக் கருத்துக்கு முதன்மைச் சான்றாகப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டைக் குறிப்பிடுவர்.
தொன்மைத் தமிழ் எழுத்தான தமிழியிலிருந்து இரு கூறாக வட்டெழுத்தும், தமிழ் எழுத்தும் பிரிந்து வளர்ச்சியுற்றன என்னும் கருத்துப்படி வட்டெழுத்தின் உருத் தோற்றத்துக்குப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு சான்றாக நிற்பதுபோல் தமிழ் எழுத்துக்கு மிகப் பழமையான சான்று எதுவுமில்லை. பல்லவ மன்னன் சிம்மவர்மனின் காலத்தில் வெளியிடப்பெற்ற பள்ளன் கோயில் செப்பேடுதான் தமிழ் எழுத்தின் பழமைக்கு முதற்சான்று. ”தமிழ் எழுத்தின் வடிவத்தைத் தெளிவாக முதன்முதலில் பல்லவ மன்னன் சிம்மவர்மனுடைய பள்ளன்கோயில் செப்பேட்டில்தான் காணமுடிகிறது” என்கிறார் நடன.காசிநாதன். சிம்மவர்மனின் 6-ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பெற்ற பள்ளன்கோயில் செப்பேட்டின் காலம் கி.பி. 550 என வரையறை செய்துள்ளனர். செப்பேடு சிம்மவர்மனுடையதெனினும், எழுதப்பட்ட காலம் கி.பி.750. (எழுத்தமைதி கி.பி. 750). மகேந்திரவர்மனின் (கி.பி. 590-630) காலத்துத் தமிழ்க்கல்வெட்டு வல்லம் கல்வெட்டாகும்.. வட தமிழகத்தில் (தொண்டை மண்டலத்தில்) கிடைத்த நடுகற் கல்வெட்டுகள் பெரும்பாலும் வடெழுத்துகளால் பொறிக்கப்பட்டவை; முற்காலப் பல்லவர் காலத்தவை. காலம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு. பூலாங்குறிச்சிக் கல்வெட்டின் காலம் கி.பி. 500 எனக் கருதப்படுகிறது. வட்டெழுத்துக்கு ஆவணச் சான்று கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்பதும், தமிழ் எழுத்துக்கு ஆவணச் சான்று கி.பி. 6-ஆம் நூற்றாண்டு என்பதும் பெறப்படுகிறது. எனவே, தமிழ் எழுத்துக்கு முன்பே, வட்டெழுத்துப் பயன்பாடு மிக்கிருந்தது எனலாம். தமிழ் எழுத்துகளை உருவாக்கியவர் பல்லவர் என்னும் கருதுகோளுக்கு இது துணை நிற்கும் எனலாம்.
(அ) பல்லவ கிரந்தம்
எனில், இடைப்பட்ட ஒரு நூற்றாண்டுக்காலம் தமிழ் எழுத்துகளுக்குக் கல்வெட்டுச் சான்றுகளோ, செப்பேட்டுச் சன்றுகளோ கிட்டவில்லை எனலாம். இந்தக் காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதிலும் வட்டெழுத்தின் பயன்பாடே இருந்துள்ளதால் இந்நிலை எனலாம். எனவே, முற்காலக் காஞ்சிப் பல்லவர் ஆட்சியில் தொடங்கிப் பள்ளன் கோயில் செப்பேட்டுக் காலம் வரை வட்டெழுத்தின் பயன்பாடே இருந்துள்ளது. பள்ளன் கோயில் செப்பேட்டில் தமிழ் எழுத்தைப் பயன்படுத்தியதால், பல்லவர் காலத்தில் தமிழ் எழுத்தை வடிவமைத்திருக்கிறார்கள் எனலாம். இக்கருத்தை ஆய்வாளர் மைக்கேல் லாக்வுட் (MICHAELLOCKWOOD) என்பவர் முன்வைக்கும்போது, கல்வெட்டுச் சான்றுகளின்படி, பல்லவர், தமிழ் எழுத்துக்குப் புது வடிவத்தை உருவாக்கினர் என்றும், அடுத்து ஆட்சிக்கு வந்த சோழர்களும் இவ்வடிவத்தைப் பின்பற்றினர் என்றும், இவ்வடிவமே தற்போதுள்ள தமிழ் வடிவத்துக்கு அடிப்படை என்றும் குறிப்பிடுகிறார். அவர், இவ்வடிவத்தைப் “பல்லவ கிரந்தத் தமிழ் எழுத்து” (Pallava Grantha Tamil Script) என்று பெயரிட்டுள்ளார். கிரந்தம் என்பது எழுதுவதையும் அதன் அடிப்படையில் எழுத்தையும் குறிப்பதாகக் கொண்டால் (எழுத்துக்கு லிபி என்று தனியே சொல்லிருப்பினும்), பல்லவர் தமிழுக்காக உருவாக்கிய எழுத்து என்னும் பொருளில் “பல்லவ கிரந்தத் தமிழ் எழுத்து” என்று பெயரிட்டது பொருந்தும். இதே அடிப்படையில், வடமொழிச் சொற்களை ஒலிப்பதற்காகப் “பல்லவ கிரந்தச் சமற்கிருத எழுத்து” (Pallava Grantha Sanskrit Script) வடிவத்தையும் பல்லவர் உருவாக்கினர்.
(ஆ) பல்லவ கிரந்த உருவாக்கம்
பல்லவர் ஆந்திரப்பகுதியின் ஆட்சியாளர்களான சாதவாகனருடன் வட இந்தியச் சூழலில் இருந்த காரணத்தால், பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளோடு மட்டுமே தொடர்பு கொண்டவராயிருந்துள்ளனர். தமிழ் நிலத்தில் ஆட்சி கிடைத்துத் தமிழ் மொழிக்கான தமிழ் எழுத்துக்குப் புது வடிவம் கொடுக்க முனைந்தபோது, தமக்கு நன்கு பழக்கமான வடவெழுத்துகளின் துணை கொண்டே அதைச் செயல்படுத்தினர் எனலாம். கி.மு. 3-ஆம் நூற்றாண்டு அசோகர் காலத்துப் பிராமி எழுத்து, கி.பி. 4-ஆம் நூற்றாண்டு அளவில் பல மாறுதல்களுக்கு உட்பட்டு, வட இந்தியப் புலத்தில் புதிய வடிவில் வழங்கியது. இந்த வடிவத்தைக் குப்தர்களும், கதம்பர்களும், சாலங்காயனரும் தம் ஆவணங்களில் பயன்படுத்தியது போலவே பல்லவரும் பயன்படுத்தினர். இந்த வடிவம் முற்காலப் பல்லவரின் பிராகிருத, சமற்கிருதச் செப்பேடுகளில் காணப்படுகிறது. இந்த வடிவத்தை அடிப்படையாக வைத்துப் பல்லவ கிரந்தத் தமிழ் எழுத்துகளும், பல்லவ கிரந்தச் சமற்கிருத எழுத்துகளும் உருவாகின. இருப்பினும் பொது வாழ்வில் மக்களிடையே வட்டெழுத்துப் பயன்பாடே இருந்துள்ளது. மகேந்திரவர்மன் காலத்தில் ஆகோள் பூசலுக்காக நிறுவப்பட்ட நடுகற்களின் கல்வெட்டு எழுத்து வட்டெழுத்தாகவே இருந்தமை இதற்குச் சான்று. (எடுத்துக் காட்டு : செங்கம் நடுகற்கள்). வட்டெழுத்து வளர்ந்த அளவு தமிழெழுத்து வளரவில்லை எனலாம். எனவே, பல்லவர் தமிழுக்கான எழுத்தை வடிவமைத்தனர் என்னும் கருத்து ஏற்புடையதாகவே தோன்றுகிறது. கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் வழங்கிய பிராமி எழுத்தின் மூல வடிவம், கி.பி. 4-ஆம் நூற்றாண்டு அளவில் மாற்றம் பெற்ற வடிவம், பல்லவ கிரந்தச் சமற்கிருத வடிவம், பல்லவ கிரந்தத் தமிழ் வடிவம் ஆகிய எழுத்து வடிவங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. அதில், பிராமி மூல எழுத்தை விடுத்து மற்ற எழுத்துகளின் இடையே உள்ள ஒற்றுமையைக் காணலாம். பல்லவ கிரந்தத்தில் பிராகிருத மொழியில் வெளியான செப்பேடுகளில் தமிழ் எழுத்துகளான “ழ”, “ற”, “ள” ஆகியவற்றுக்குத் தனியே எழுத்துகள் பயன்பாட்டில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்க சிறப்பாகும்..
செப்பேட்டின் சில வரிகள் : 1 தி3ட2(ம்) 2 காஞ்சீபுராத்தோ யுவமஹாராஜோ 3 பா4ரதா3ய ஸகோ3த்தோ பலவாநம் 4 சிவக2ந்த3 வம்மோ தா4ம்ஞகடே3 5 வாபடம் ஆனபயதி 9 . . . . . ஆந்தா3பதீ2ய கா3மோ 10 விரிபரஸ சவ-ப3ம்ஹதே3ய விளக்கம் : வரி 1 தி3ட2(ம்)
தி3ட2ம்
தி3ட2((ம்)என்னும் பிராகிருதச் சொல் வடிவம், “த்3ருஷ்டம்” என்னும் சமற்கிருதச் சொல்லுக்கீடானது. இச்சொல்லோடு “ இத3ம் சா0ஸநம்” என்னும் ஒரு தொடரைச் சேர்த்துப் பொருள்கொள்ளவேண்டும். “த்3ருஷ்டம் இத3ம் சா0ஸநம்” என்னும் முழுத்தொடரும், இந்த சாசனம் (அரச ஆணை) பார்வையிடப்பட்டது என்னும் பொருளைத்தரும். (திருஷ்டி என்பதைப் பார்வை என்னும் பொருளில் இன்றளவில் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.) சாசனம் ஆய்வு செய்யப்பட்டது (Examined) என்பதைக் குறிக்கவும் , உண்மையான ஒரு படி (True Copy) என்பதைக்குறிக்கவும் ஆன ஓர் ஒற்றைச் சொல்லாக “த்3ருஷ்டம்” என்னும் சொல் விளங்குகிறது என ஹுல்ட்ஸ் குறிப்பிடுகிறார். சில செப்பேடுகளில் “துல்யம்” என்னும் சொல் இப்பொருளில் வழங்குவதைக் காணலாம். வரி 2 காஞ்சீபுராத்தோ யுவமஹாராஜோ காஞ்சிபுரத்து இளவரசன் ஆகிய என்பதை இத்தொடர் குறிக்கிறது.
வரி 3 பா4ரதா3ய ஸகோ3த்தோ பலவாநம் மேற்படி காஞ்சிபுரத்து இளவரசன் ”பா4ரத்3வாஜ” கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்பதையும், “பல்லவ” மரபினன் என்பதையும் இத்தொடர் குறிக்கிறது. ”பா4ரத்3வாஜ” என்னும் சமற்கிருதச் சொல் ”பா4ரதா3ய” எனப் பிராகிருதத்தில் வழங்குவது கருதற்பாலது. ஜ->ய மருவுதலைப் பரவலாகக் காண்கிறோம். “கோத்த” என்பது பிராகிருத மூலம்; “கோத்ர” என்பது சமற்கிருத மாற்றம். வரி 4 சிவக2ந்த3 வம்மோ
சிவக2ந்த3 வம்மோ
மேற்படி காஞ்சிபுரத்து இளவரசனின் பெயர், ”சிவ கந்த வம்ம(ன்)” என்பதை இத்தொடர் குறிக்கிறது. சமற்கிருதத்தில், இப்பெயர் “சிவஸ்கந்தவர்ம(ன்)” என அமைகிறது. அரசர்கள் தம்மை அழைத்துக் கொள்ளும் “வர்ம” என்னும் சொல் இங்கு “வம்ம” எனப் பிராகிருதத்தில் மூல வடிவத்தில் உள்ளது. வரி 7 ப3ம்ஹணானம் . . . . . . . கொடை பெற்றவர் பிராமணர் என்பதை இத்தொடர் குறிக்கிறது. வரி 9 ஆந்தா3பதீ2ய கா3மோ
ஆந்தா3பதீ2ய கா3மோ
கொடையாக அளிக்கப்பட்ட ஊர் (கிராமம்) ஆந்திர நிலப்பகுதியில் அமைந்திருந்தது என்பதை இத்தொடர் குறிக்கிறது. “ஆந்தாபத”, ”காம” ஆகியன முறையே சமற்கிருதத்தில், ”ஆந்த்ரபத”, ”க்ராம” என அமைகின்றன. வரி 10 ப3ம்ஹதே3ய கொடைக் கிராமம் பிரமதேயமாகக் கொடுக்கப்பட்டது என்பதை இத்தொடர் குறிக்கிறது. இங்கும் ப3ம்ஹதே3ய - > ப்ர3ஹ்மதே3ய என்னும் மாற்றத்தைக் காணலாம். மேலே கண்ட சொற்களை ஆயும்போது, பிராகிருதத்துக்கும் சமற்கிருதத்துக்கும் உள்ள வேறுபாட்டினை அறிய முடிகின்றது. பிராகிருதச் சொல் சமற்கிருதச் சொல் பாரதாய பாரத்வாஜ கோத்த கோத்ர கந்த ஸ்கந்த பம்ஹண ப்ராஹ்மண வம்ம வர்ம ஆந்தா ஆந்த்ரா காம க்ராம பம்ஹதேய ப்ரஹ்மதேய சமற்கிருத மொழிக்கு முன்னரே எளிமையாக மக்கள் வழக்கில் இருந்த பிராகிருத மொழியை, மேம்படுத்துதல் என்னும் பெயரால் கற்றறிந்தவர் சமற்கிருதமாகக் கடுமையாக்கியுள்ளமை நன்கு தெளிவாகிறது. “ஸ்”, “ர” போன்ற எழுத்துகளைக் கூடுதலாக இணைத்துச் சமற்கிருத ஒலியாக்கியுள்ளனர். மேற்படிப் பட்டியலில் மேலும் பல சொற்களை இணைத்துப் பார்க்கலாம். பிராகிருதச் சொல் சமற்கிருதச் சொல் தம்ம(ம்) தர்ம(ம்) புத புத்ர சுத்த சூத்ர வதமாந வர்த்தமாந சமண ச்ரமண (கட்டுரை ஆசிரியர் கருத்து : பிராகிருதம், சமற்கிருதம் ஆகியவற்றுக்கிடையே உள்ள மேற்படித் தொடர்பினை நோக்கும்போது, தமிழ் மக்களால் தமிழ் மொழியில் “தமிழ்” என்று வழங்கிய சொல், பிராகிருதத்தில் “தமிழி” என்றோ, அல்லது “தாமிழி” என்றோ வழக்கில் இருந்திருக்கலாம் என்னும் கருத்து தோன்றுகிறது; பிராகிருதத்தின் எழுத்து வடிவத்தில் சிறப்பு “ழ” கரத்துக்கு இடமிருந்தது. எனவே, “தமிழி” என்பது பிராகிருதச் சொல்லாக வழங்கியிருத்தல் தெளிவு. இச்சொல், சமற்கிருதமாக்கலில் “த்ரமிளி” எனவும் “த்ராமிளி” எனவும் திரிபு பெற்றிருக்கலாம். சமற்கிருதமாக்கலில் ”ழி” எழுத்தைப் பயன்படுத்தாமல் “ளி” எழுத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். பிராகிருதச் செப்பேட்டில் ’ழ”கரம் எழுதப்பட்டதைப் பின்னர் வரும் கட்டுரைப் பகுதியில் பார்க்க. கி.மு. 300-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஜைன நூலான ”சமவாயங்க சுத்த” என்னும் நூலில் சுட்டப்பெறுகின்ற பதினெட்டு எழுத்து வகைகளில் பதினேழாவதாகத் “தாமிலி” - DAAMILI என்னும் எழுத்து வகையும் குறிக்கப்பட்டுள்ளது. இது “தாமிழி” என்னும் பிராகிருதச் சொல் என்பதில் ஐயமில்லை. )
இச்செப்பேடு ஸ்கந்தவர்மன் என்னும் பல்லவ அரசனால் வழங்கப்பட்டது. செப்பேட்டில் இவன் பெயர் ”மஹாராஜ-விஜய” என்னும் அடைமொழியுடன் குறிப்பிடப்பெறுகிறது. தொல்லியல் துறையினரின் எபிகிராபியா இண்டிகா (Epigraphia Indica) என்னும் நூலின் பதினைந்தாம் தொகுதியில் வெளியிடப்பெற்ற செய்திக்குறிப்பில் இந்த ஸ்கந்த வர்மன், வீரவர்மன் என்னும் பல்லவனின் மகனாகச் சுட்டப்பெறுகிறான். இவனை இரண்டாம் ஸ்கந்தவர்மன் என்றும், இவனது ஆட்சிக்காலம் கி.பி. 400-436 என்றும் வரையறை செய்துள்ளனர். கி.பி. 350 முதல் கி.பி. 375 வரையிலான காலத்தில் ஏற்கெனவே ஒரு ஸ்கந்தவர்மன் ஆட்சியில் இருந்துள்ளமையால், சுட்டப்பெறுகின்ற ஸ்கந்தவர்மன் இரண்டாம் ஸ்கந்தவர்மன் ஆகின்றான். மேற்குறித்த செப்பேடு இவனது முப்பத்து மூன்றாம் ஆட்சியாண்டில் வெளியானமையால், செப்பேட்டின் காலம் கி.பி. 433 என அமைகிறது. ஓங்கோடு என்னும் கிராமம் ஒரு பிரமதேயமாக மாற்றப்பட்டு, கோ3லசர்மன் என்னும் பிராமணனுக்குக் கொடையாக வழங்கப்படுகிறது. கோ3லசர்மன், இரண்டு வேதங்களைக் கற்று ஆறு அங்கங்களில் வல்ல பிராமணனாகக் குறிக்கப்பெறுகிறான். இவன், காச்0யப கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்று செப்பேடு கூறுகிறது. கொடைக் கிராமமான ஓங்கோடு, ஆந்திரத்தின் ”கர்ம்ம ராஷ்டிரம்” என்ற நாட்டுப்பிரிவில் இருந்துள்ளதாகச் செப்பேடு கூறுகிறது. இந்த நாட்டுப்பிரிவு, பிற்காலத் தெலுங்குக் கல்வெட்டுகளில் கம்ம நாடு என்றழைக்கப்பட்டது. தற்போதைய நெல்லூர் மாவட்டத்தின் வடபகுதியையும், குண்டூரின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது. மேற்படிக் கொடை, “சாத்விக”க் கொடை வகையைச் சேர்ந்தது என்று செப்பேடு குறிக்கின்றது. இவ்வகையில் கொடுக்கப்பட்ட கொடைக் கிராமம், இறையிலி நிலங்கள் நீங்கலாகவுள்ள ஊர்ப்பகுதியைக் கொண்டது. ஓங்கோடு என்னும் ஊர் இன்றைய ஓங்கோல் ஆகலாம் என்று கருதப்படுகிறது. இச்செப்பேடு, நான்கு ஏடுகளைக் கொண்டது. இவற்றை ஒரு வளையம் இணைக்கின்றது. வளையத்தில் இருக்கும் முத்திரையில் தேய்மானம் காரணமாகப் பல்லவச் சின்னமான நந்தி உருவப் பொறிப்பு காணப்படவில்லை. முதல் மற்றும் நான்காம் ஏடுகளின் உள் பக்கங்களில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. வெளிப்பக்கங்களில் எழுத்துப்பொறிப்பு இல்லை. இரண்டாம் ஏட்டிலும் மூன்றாம் ஏட்டிலும் இரு பக்கங்களிலும் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் மும்மூன்று வரிகள் உள்ளன. மொத்தம் பதினெட்டு வரிகள். எழுத்து வடிவம், சிம்மவர்மனின் உருவுபள்ளி, மாங்க(ளூ)டூர், பீகிரா செப்பேடுகளை ஒத்துள்ளன. செப்பேட்டின் மொழி சமற்கிருதம். அரசன் அமர்ந்து செப்பேடு வழங்கிய இடம் அல்லது நகர் “தாம்ப்3ராப ஸ்தாந” என்று குறிக்கப்படுகிறது. இது நெல்லூர்ப் பகுதியைச் சேர்ந்த ஓர் இடம் ஆகலாம் எனக் கருதப்படுகிறது. இச்செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ள அரசர்களின் நிரல் கீழ்வருமாறு:
1 குமார விஷ்ணு
இவன் மகன்
2 முதலாம் ஸ்கந்த வர்மன்
இவன் மகன்
3 வீர வர்மன்
இவன் மகன்
4 விஜய ஸ்கந்த வர்மன் (இரண்டாம் ஸ்கந்த வர்மன் - செப்பேட்டின் அரசன்)
முதல் மூன்று அரசர்களின் காலம் முறையே, கி.பி. 341-350, 350-375, 375-400 என வரலாற்று ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு : பிரமதேயக் கொடை என்னும் பெயரில், அரசன், ஓர் ஊரின் நிலங்கள் அனைத்தையும் – வரி விலக்குப் பெற்ற நிலங்கள் நீங்கலாக - ஒரே ஒரு பிராமணனுக்குக் கொடுப்பதில் உள்ள பின்னணியும் தேவையும் என்ன என்னும் ஐயம் எழுகிறது. வரலாற்றாளர்களின் கருத்தை அறியவேண்டியுள்ளது.)
குமார விஷ்ணுவின் செந்தலூர்(சேந்தலூர்) செப்பேடு
ஓங்கோல் ஊரிலிருக்கும் உழவர் ஒருவரின் நிலத்தில், வீடு கட்டுவதற்காக அடித்தளம் எடுக்கும் பணியின் போது நெல் உமி நிரப்பப்பட்ட ஒரு பானையில் இந்தச் செப்பேடு கிடைத்துள்ளது. உழவரிடமிருந்து, ஊர்க் கணக்கரிடம் (கர்ணம்) சென்ற செப்பேடு பின்னர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞரான சூரிய நாராயணராவ் என்பவர் கைக்குக் கிட்டியது. அவர், அதை அந்த மாவட்ட ஆட்சியரான பட்டர்வர்த் (BUTTERWORTH I.C.S.) வழியாக வெங்கய்யா அவர்களுக்கு அனுப்பியுள்ளார். வெங்கய்யா அவர்கள், செப்பேட்டைப் பற்றிய தம் குறிப்புகளோடு செப்பேட்டின் மைப்படியை ஹுல்ட்ஸ் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார். மூலச் செப்பேடு மீண்டும் சூரிய நாராயணராவ் அவர்களிடமே தங்கியது. செப்பேடு ஐந்து ஏடுகளைக் கொண்டது. முதல் பக்கத்திலும், இறுதிப் பக்கத்திலும் எழுத்துப் பொறிப்பு இல்லை. மீதமுள்ள எட்டுப் பக்கங்களில் , பக்கத்துக்கு நான்கு வரிகளாக முப்பத்திரண்டு வரிகள் எழுதப்ப்ட்டுள்ளன. செப்பேட்டின் மொழி சமற்கிருதம். உரை நடையோடு, நான்கு செய்யுள்களையும் கொண்டுள்ளது. செப்பேட்டுப் பாடம் (வாசகம்) உருவுபள்ளி, பிகிரி, மாங்க(ளூ)டூர் செப்பேடுகளை ஒத்துள்ளது. எழுத்தமைதி, கூரம், காசாக்குடி செப்பேடுகளைவிடப் பழமையானது. இந்தச் செப்பேட்டைத் தொல்லியல் அறிஞர்கள் ஹுல்ட்ஸ் (HULTZSCH) அவர்களும் வெங்கையா அவர்களும் ஆய்வு செய்துள்ளனர். செந்தலூர் செப்பேட்டை வெளியிட்டவன் இரண்டாம் குமார விஷ்ணு ஆவான். செப்பேடு, காஞ்சியிலிருந்து வெளியிடப்பட்டது. ப4வஸ்கந்தத்ராத(ன்) என்னும் பிராமணனுக்குச் செந்தலூர் கிராமத்தின் ஒரு நிலப்பகுதி கொடையாக அளிக்கப்பட்டது. இவன், கௌண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவன். செந்தலூர் கிராமம் ”கம்மாங்க்க ராஷ்டிரம்” என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது. இந்தக் ”கம்மாங்க்க ராஷ்டிரம்” , மேலே ஓங்கோடு செப்பேட்டில் குறிக்கப்பெற்ற ”கர்ம்ம ராஷ்டிரம்” என்னும் பகுதியே. கர்மாங்க்க ராஷ்டிரம் என்றும் வழங்கப்பட்டது. கர்ம்ம ராஷ்டிரம் நாட்டுப்பிரிவு கீழைச் சாளுக்கியரின் செப்பேடுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். அரசனின் பெயர், இச்செப்பேட்டில் “பல்லவ த4ர்ம்ம மஹாராஜா ஸ்ரீகுமார விஷ்ணு” என்று குறிக்கப்பட்டுள்ளது. எபிகிராபியா இண்டிகா (Epigraphia Indica) என்னும் நூலின் எட்டாம் தொகுதியில் இவ்வரசன் இரண்டாம் குமார விஷ்ணு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தென்னிந்தியக் கல்வெட்டுகள் (South Indian Inscriptions) நூலின் பன்னிரண்டாம் தொகுதியில் மூன்றாம் குமார விஷ்ணு என்று குறித்திருக்கிறார்கள். செப்பேட்டுப் பாடத்தின்படி, அரசன் பெயர் குமார விஷ்ணு; புத்த வர்மனின் மகன்; குமார விஷ்ணுவின் பேரன்; ஸ்கந்தவர்மனின் பேரனின் மகன்.
1 ஸ்கந்த வர்மன்
இவன் மகன்
2 குமார விஷ்ணு
இவன் மகன்
3 புத்த வர்மன்
இவன் மகன்
4 குமார விஷ்ணு (செப்பேட்டின் அரசன்)
மேற்குறித்த நான்கு அரசர்களும், சிம்மவர்மனுக்கும் (கி.பி. 436-450) சிம்ம விஷ்ணுவுக்கும் (கி.பி. 575-615) இடையில் ஆட்சி செய்தவர்கள் என்னும் முடிவினை ஆய்வாளர்கள் எட்டியுள்ளனர். செப்பேட்டின் சில வரிகள்/ சில தொடர்கள் வரி - 1 ஜிதம் ப4க3வதா ஸ்வஸ்தி விஜய-காஞ்சீபுராத3ப்4யுச்சித ச0க்தி
ஜிதம் ப4க3வதா ஸ்வஸ்தி
விஜய-காஞ்சீபுரா
செப்பேட்டின் தொடக்க மங்கலச் சொல்லாக “ஜிதம் ப4க3வதா ஸ்வஸ்தி” என்னும் தொடர் விளங்குகிறது. அடுத்து, அரசன் காஞ்சிபுரத்தை ஆள்கின்றதைக் குறிக்கும் வகையில் ”காஞ்சீபுராத3ப்4யுச்சித” என்னும் தொடர் அமைகிறது. வரிகள் 3, 6, 8 ஆகியற்றில் செப்பேடு வழங்கிய அரசரின் தந்தை, பாட்டன், பாட்டனின் தந்தை ஆகிய மூன்று மூத்த தலைமுறையினரின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. வரி 14-இல், செப்பேடு வழங்கிய அரசனாகிய சிம்மவிஷ்ணு குறிக்கப்பெறுகிறான். வரி - 3 மஹாராஜ ஸ்ரீ ஸ்கந்தவர்மண : ப்ரபௌத்ரோ
மஹாராஜ ஸ்ரீ ஸ்கந்தவர்மண
”ப்ரபௌத்ரோ” என்னும் சொல், ஸ்கந்தவர்மனின் பேரனுக்கு மகன் என்னும் பொருளுடையது. வரி - 6 மஹாராஜ ஸ்ரீ குமாரவிஷ்ணோ பௌத்ரோ
மஹாராஜ ஸ்ரீ குமாரவிஷ்ணோ
”பௌத்ரோ” என்னும் சொல் குமாரவிஷ்ணுவின் பேரன் என்னும் பொருளைக்குறிக்கும். வரி -8 மஹாராஜ ஸ்ரீ பு4த்3த3வர்மண : புத்ர
மஹாராஜ ஸ்ரீ பு4த்3த3வர்மண
‘புத்ர” = மகன் வரி - 14 பல்லவாநாம் த4ர்ம மஹாராஜ ஸ்ரீ குமாரவிஷ்ணு
பல்லவா
த4ர்ம மஹாராஜ
ஸ்ரீ குமாரவிஷ்ணு
இத் தொடரில், செப்பேடு வழங்கிய அரசன், பல்லவ மரபைச் சேர்ந்தவன் என்பது குறிக்கப்படுகிறது. மூத்த அரசர்களின் பெயருடன் ”மஹாராஜ ஸ்ரீ” என்னும் முன்னொட்டுச் சொல் காணப்படுகையில், செப்பேடு வழங்கிய அரசன் குமாரவிஷ்ணுவின் பெயரில் முன்னொட்டுச் சொல் “த4ர்ம மஹாராஜ ஸ்ரீ” என்பதாகக் காணப்படுகிறது.
ஐந்து ஏடுகளைக்கொண்ட இந்தச் செப்பேட்டில் மொத்தம் முப்பத்திரண்டு வரிகள். ஏடுகளை இணைக்கும் வளையத்தில் முத்திரை ஏதுமில்லை. இந்தச் செப்பேட்டை வெளியிட்டவன் இரண்டாம் சிம்மவர்மன் ஆவான். இச்செப்பேட்டை விரிவாக ஆயும் எபிகிராபியா இண்டிகா (Epigraphia Indica) என்னும் நூலின் பதினைந்தாம் தொகுதி, செப்பேடு இரண்டாம் சிம்மவர்மனின் நான்காம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது எனக் கூறுகிறது. இவ்வரசன் ”பாரத்துவாஜ” கோத்திரத்தைச் சேர்ந்தவன்; செப்பேட்டுப் பாடம் (வாசகம்) இவனை தர்ம மஹாராஜா சிம்மவர்மன் என்றும், யுவ மஹாராஜா விஷ்ணுகோபனின் மகன் என்றும், மஹாராஜா ஸ்கந்தவரமனின் பேரன் என்றும், வீரவர்மனின் பேரன் மகன் என்றும் கூறுகிறது. அதாவது,
1 வீரவர்மன்
இவன் மகன்
2 (மஹாராஜா) ஸ்கந்த வர்மன்
இவன் மகன்
3 (யுவ மஹாராஜா) விஷ்ணுகோபன்
இவன் மகன்
4 சிம்மவர்மன் (செப்பேட்டின் அரசன்)
மேற்குறித்த அரசர் பெயர் வரிசை, உருவுபள்ளி, பிகிரா ஆகிய செப்பேடுகளில் உள்ளவாறே உள்ளது. எனவே, சிம்மவர்மனின் செப்பேடுகளைக் கீழ்வருமாறு வரிசைப்படுத்தலாம்:
முதல் செப்பேடு – ஓங்கோடு செப்பேடு; சிம்மவர்மனின் 4-ஆம் ஆட்சியாண்டு.
இரண்டாம் செப்பேடு – பிகிரா செப்பேடு; சிம்மவர்மனின் 5-ஆம் ஆட்சியாண்டு.
மூன்றாம் செப்பேடு – உருவுபள்ளி செப்பேடு; சிம்மவர்மனின் 8-ஆம் ஆட்சியாண்டு.
இவனுடைய (சிம்மவர்மனுடைய) 11-ஆம் ஆட்சியாண்டுக் காலத்திலேயே, இவனது தந்தையான யுவ மஹாராஜா விஷ்ணுகோபனின் மாங்க(ளூ)டூர் செப்பேடும் வெளியிடப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. (அவ்வாறெனில், தந்தையும் மகனும் ஒரே காலத்தில் ஆட்சி செய்தனரா? பேராசிரியர் இராசமாணிக்கனார் தம் “பல்லவர் வரலாறு” நூலில் தந்துள்ள அரசர் வரிசையைப் பார்த்தால், யுவ மஹாராஜா விஷ்ணுகோபன், அவனுடைய தமையன் முதலாம் சிம்ம வர்மன், இரண்டாம் சிம்மவர்மன், முதலாம் சிம்ம வர்மனின் மகன் மூன்றாம் கந்த வர்மன் ஆகியோர் அனைவருமே ஒன்றாக ஆட்சி செய்தனரா? என்னும் கேள்வி எழுகிறது. தென்னிந்தியக் கல்வெட்டுகள் (South Indian Inscriptions) நூலின் பன்னிரண்டாம் தொகுதியில் அதன் பதிப்பாசிரியரின் கூற்று கருதற்பாலது. அவர் கூறுகிறார் : ஒரே ஒரு சிம்மவர்மனே இருந்துள்ளான் எனக் கருதுகிறேன். (“ I think there was only one Simhavarman “ ).
இராசமாணிக்கனார் சுட்டும் முதலாம் சிம்மவர்மனின் ஆட்சிக்காலம் கி.பி. 436-450 மேலைக் கங்கர்களின் பெணுகொண்டா செப்பேடு கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது வரலாற்று அறிஞர்களின் முடிபு. இச்செப்பேடு பல்லவ அரசர்களின் காலத்தைக் கணிப்பதில் துணை நிற்கின்றது. இச்செப்பேட்டை ஆய்வு செய்த டாக்டர் ஃப்ளீட் (Dr. FLEET) அவர்கள், திகம்பர ஜைனர் ஒருவரின் “லோகவிபாக(ம்)” – “LOKAVIBHAAGA” – என்னும் நூலில் உள்ள ஒரு குறிப்பையும் துணை கொண்டு சிம்மவர்மனின் ஆட்சித்தொடக்கம் கி.பி.436 என்பதாகக் கொள்கிறார். “லோகவிபாக(ம்)” நூலில், சிம்மவர்மன், காஞ்சியின் அரசன் என்னும் குறிப்பும், அவனுடைய 22-ஆம் ஆட்சியாண்டு பற்றிய குறிப்பும் உள்ளன. இந்த 22-ஆம் ஆட்சியாண்டு சகம்380-ஐக் குறிப்பதால், சிம்மவர்மனின் 22-ஆம் ஆட்சியாண்டு கி.பி. 458 என்றாகிறது. எனவே, சிம்மவர்மனின் ஆட்சித்தொடக்கம் கி.பி.436 என்றாகிறது. மேலே இராசமாணிக்கனாரின் அரச வரிசையிலும் முதலாம் சிம்மவர்மனின் ஆட்சித்தொடக்கம் கி.பி. 436 என்றிருப்பதாலும், தென்னிந்தியக் கல்வெட்டுகள் (South Indian Inscriptions) நூலின் பன்னிரண்டாம் தொகுதியின் பதிப்பாசிரியரின் கூற்றான”ஒரே ஒரு சிம்மவர்மனே இருந்துள்ளான்” என்னும் கருத்து வலுப்பெறுகிறது.
சிம்மவர்மனின் ஓங்கோடு செப்பேடு, ஓங்கோடு கிராமம், அனைத்துச் சாத்திரங்களிலும் வல்ல தேவசர்மனுக்குக் கொடையாக அளிக்கப்பட்டதைக் குறிக்கிறது. இவன் குண்டூரைச் (KUNDUR) சேர்ந்தவன். காச்0யப கோத்திரம். ஓங்கோடு ஊரின் எல்லைகளாகவுள்ள நான்கு ஊர்கள் குறிக்கப்படுகின்றன.
கிழக்கு - கொடிக்கிம்
மேற்கு - கடாக்குதுரு
வடக்கு - பெணுக பற்று
தெற்கு - நறாச்சடு
செப்பேட்டு எழுத்துகள், வட இந்தியாவில் வழக்கில் இருந்த பழமையான எழுத்து வடிவத்தால் எழுதப்பட்டிருப்பினும் தமிழில் இருக்கும் வல்லின றகர எழுத்தும் காட்டப்பட்டுள்ளது. வடபுலத்திலும் வல்லின றகரத்துக்குத் தனியே எழுத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதே சிறப்பானது.
வரி 17 - ச0தக்ரது....................... வரி 17 தொடர்ச்சி
ப ல்ல வா நாம் த4ர்ம்ம மஹா ரா ஜ ஸ்ரீ ஸிம்
பல்லவாநாம் தர்ம்ம மஹாராஜாஸ்ரீஸிம்ஹவர்ம்ம
ஹ வ ர்ம்ம வரி 17 தொடர்ச்சி (வல்லின “ற” கரம் காண்க)
........................................... ந றா ச1 டு1 வல்லின “ற”கரம் - கி.பி. 5-ஆம் நூற்றாண்டில்
ந றா ச1 டு1
எல்லையாக உள்ள கொடிக்கிம் என்னும் ஊர், தற்போது ஓங்கோலுக்கருகிலுள்ள கொணிகி ஆகும் எனக் கருதப்படுகிறது. கொடைக்கிராமம் ஓங்கோடு, தற்போதுள்ள ஓங்கோல் ஆகலாம் என்று கருதப்படுகிறது. எல்லையாக அமைந்த இன்னொரு ஊரின் பெயர் பெணுகபற்று. இப்பெயர், பிணுக்கிப்பறு என்னும் பிராமணக் குடும்பப்பெயருடன் தொடர்கொண்டது எனக் கருதப்படுகிறது. குடந்தைக்கருகில் உள்ள தண்டன் தோட்டம் என்னும் ஊர் இப்பிராமணக் குடும்பத்துக்குக் கொடையாக அளிக்கப்பட்டதை வேறொரு செப்பேடு குறிப்பிடுகிறது. ஓங்கோடு செப்பேடு “ஜிதம் ப4கவதா” என்னும் மங்கலத் தொடருடன் தொடங்குகிறது (பகவதா-விஷ்ணு). செப்பேடு அரசனைப் “ப4ட்டாரக” என்று குறிப்பிடுகிறது. “ப4ட்டாரக” என்னும் சொல் ”படார” (BHATAARA) என்னும் பிராகிருத அல்லது சமற்கிருதச் சொல்லாக இருக்கலாம். அரசனையும், இறைவனையும், பெருந்துறவிகளையும் குறிக்கும் ஒரு சொல்லாகக் கல்வெட்டுகளில் பயில்கிறது.
பழாரர் – படாரர் என்பதன் திரிபு. திருவாங்கூர் அரசின் நாட்டுப்பகுதிகளிலும் கல்வெட்டுகளில் படாரர் என்னும் சொல் கடவுள்-துறவி பொருளில் பயில்கிறது. ஒரு சில கல்வெட்டுகளில் ”படாரர்” என்னும் சொல் “பழாரர்” என்று திரிந்து வழங்குகிறது. எடுத்துக்காட்டு :
”ஸ்வஸ்திஸ்ரீ நிரஞ்ஞாபாத பழாரர் திருவடி ……..” (TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES Vol-III – Part.I p 32)
இச்செப்பேட்டைப் பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரையை அறிஞர் கிருஷ்ணமாச்சார்லு அவர்கள், 1937-38 ஆண்டின் எபிகிராபியா இண்டிகா (Epigraphia Indica) என்னும் நூலின் 24-ஆம் தொகுதியில் எழுதியுள்ளார். இச்செப்பேடு கிடைத்த இடம் நெல்லூர் மாவட்டம், கோவூர் வட்டம் புச்சிரெட்டிபாளம் என்னும் ஊரின் அருகில் உள்ள வவ்வேரு கிராமம். 1933-ஆம் ஆண்டில் இது ஆய்வுக்குட்படுத்தப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட பின்னர், சென்னை அருங்காட்சியகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்செப்பேடு பல சிறப்புகளைக்கொண்டுள்ளது. இதன் முத்திரையில் நந்தி உருவமும் அதன் மேற்புறத்தில் நங்கூரம் ஒன்றின் உருவமும் உள்ளன. அழகான எழுத்துப் பொறிப்புகளைக்கொண்டது. பல்லவர் நாணயம் ஒன்றில் நந்தி உருவத்துடன் இரு பாய்மரங்களுடன் கூடிய படகு உருவம் இருப்பது கருதுதலுக்குரியது. பல்லவர்கள் கடல் பயணம் மேற்கொண்டவர் என்பதற்கான குறியீடாக இந்த நங்கூர உருவமும் படகு உருவமும் அமைந்திருக்கலாம். விழவட்டி செப்பேட்டில் தமிழ் வடிவத்திலேயே “ழ”கர எழுத்து
”ழ”கர எழுத்து அப்படியே
இதன் எழுத்தமைதி உருவுபள்ளி செப்பேட்டை ஒத்துள்ளது. எழுத்துகளின் தலைப்பகுதியில் சிறு சிறு பெட்டிகள் போல அமைந்திருக்கும். இதனைத் தொல்லியல் குறிப்புகளில் BOX-HEADED LETTERS எனக்குறிப்பர். தென்னிந்தியச் செப்பேடுகளில் இவ்வகை எழுத்துகளைக் காணல் அரிது. கொடை ஊரின் பெயர் விழவட்டி. தெலுங்கு நாட்டுப்பகுதியில் சிறப்பு ழகர எழுத்தோடு ஓர் ஊரின் பெயர் அமைந்திருப்பதே இங்கு சிறப்புக்குரியது. கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் வழங்கிய அசோகனின் பிராமி எழுத்துகள் வட இந்தியப் பகுதிகளில் கி.பி. 3/4-ஆம் நூற்றாண்டிலிருந்து வடிவ மாற்றம் பெற்ற நிலையில், தமிழில் வழங்கும் வல்லின றகரத்துக்கும், சிறப்பு ழகரத்துக்கும் தனி எழுத்துகள் இருந்துள்ளன எனக் காண்கிறோம். ஆனால், விழவட்டி செப்பேடு வேறு முறையில் சிறப்புடையது. காரணம், விழவட்டி செப்பேட்டில் சிறப்பு ழகரத்தின் தனி எழுத்தைக் கையாளாமல், தமிழ் வடிவத்திலேயே “ழ”கரம் பயன்படுத்தப்பட்டுள்ளது (வரி-13). செப்பேட்டின் உரை வடிவத்தை (வாசகம்) இயற்றியவர் மீதும், எழுத்தைப் பொறித்த கல்தச்சர் மீதும் ஏற்பட்ட தமிழின் தாக்கம் குறித்து வியந்து கூறுகிறார் பதிப்பாசிரியர். அதே போல, செப்பேட்டின் 21-ஆம் வரியில் ஊர்களின் குழு என்பதைக்குறிக்கும் சொல்லாகத் தமிழ் மொழியின் “வட்டம்” என்னும் சொல், ”வட்ட கிராமேயகா” (vatta-grAmEyaKHA) என்னும் தொடரில் பயின்று வந்துள்ளதைக் காண்கிறோம். மகாராட்டிரப்பகுதியிலும் ஐதராபாத் பகுதியிலும் ”வட்டம் ஜாகிர்தார்” (vattam-jAghirdAr) என்னும் வழக்கு இருப்பதைப் பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார்.
கொடைக்கிராமம் விழவட்டி
கொடைக்கிராமம் விழவட்டி முண்டா ராஷ்டிரப்பகுதியில் அமைந்திருந்தது. இக்கிராமம் விஷ்ணு சர்மன் என்னும் பிராமணனுக்குப் பிரமதேயமாக அளிக்கப்பட்டது. அரசன் சிம்மவர்மனின் வாய்மொழி ஆணை அவனது தனிச் செயலர் பதவியில் (ரஹஸ்யாதிகிருத- RahasYAdhikrita) இருந்த அச்சுதன் என்பவனால் நிறைவேற்றப்பட்டது. முண்டா ராஷ்டிரம் பின்னாளில் முண்டா நாடு என்று வழங்கப்பட்டதை நெல்லூர்க் கல்வெட்டுகள் குறிக்கும். கொடைக்கிராமமான விழவட்டி, செப்பேடு கிடைக்கப்பெற்ற வவ்வேரு என்னும் ஊர் ஆகலாம். அல்லது, வவ்வேரு ஊரின் அருகில் உள்ள விடவலூரு ஆகலாம். இவ்விரு ஊர்களுமே கோவூர் வட்டத்தில் இருக்கின்றன. செப்பேடு வெளியிடப்பெற்ற இடமான பத்துக்கர (PADDUKKARA) இதே கோவூர் வட்டத்தில் இருக்கும் படுகுபாடு (PADUGUPADU) ஆகலாம். இவ்வூர் கோவூருக்கு ஒரு மைல் தொலைவில் பெண்ணையாற்றங்கரையின் வடக்கே இருக்கும் ஒரு இரயில் நிலையம். சென்னை-கல்கத்தா தடத்தில் உள்ளது.
செப்பேட்டின் இன்னொரு சிறப்புக்கூறு என்னவெனில் அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகள் பற்றிய விரிவான செய்தி. கீழ்வரும் பட்டியலில் உள்ளவர்கள் வரி செலுத்தவேண்டியவராய் இருந்துள்ளனர்:
லோஹகார - உலோக வேலை செய்வோர்
சர்மகார - தோலைப் பயன்படுத்தி வேலை செய்வோர்;
(சர்ம என்னும் வடசொல் மிகப்பரவலாகத் தற்போது “சருமம்” என்று
வழங்குவதைக் காண்க.)
ஆபண பட்டகார (ApaNa pattakAra) - துணி அங்காடி வைத்திருப்போர்.
(ஆபண=அங்காடி; பட்ட=துணி)
ரஜ்ஜு பிரதிகார - கழைக்கூத்தாடிகள்
பிற அங்காடி வைத்திருப்போர்
ஆஜீவகத் துறவிகள் - (வரி செலுத்தவேண்டியவர் பட்டியலில்
ஆஜிவகத் துறவிகளும் சேர்க்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது)
நாஹலா - Barbarians and Outcastes எனப் பதிப்பாசிரியர் குறித்துள்ளார்.
முக2த3ரகா – Mask Actors எனப் பதிப்பாசிரியர் குறித்துள்ளார்.
கூப த3ர்ச0க - நிலத்தில் நீரோட்டத்தைக் கண்டுசொல்பவர்.
(கூப என்பது நீரைக் குறிக்கும் சமற்கிருதச் சொல் எனில், தமிழில்
வழங்கும் கூவம்/கூவல்=கிணறு என்னும் சொல்லுடன்
தொடர்புடையதாக இருக்கலாம் என்னும் ஐயம் எழுகிறது)
தந்த்ரவாய - நெசவுத் தொழில் செய்வோர்
த்3யூத (dyUta) - சூதாட்டத்தின் மீதான வரி
விவாஹ - திருமணத்துக்கான வரி
நாபித - நாவிதர். (நாபித என்னும் சொல்லே “நாவித” எனத் தமிழில்
இச்செப்பேட்டைப் பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரையை அறிஞர் கிருஷ்ணமாச்சார்லு அவர்கள், 1937-38 ஆண்டின் எபிகிராபியா இண்டிகா (Epigraphia Indica) என்னும் நூலின் 24-ஆம் தொகுதியில் எழுதியுள்ளார். செப்பேடு, நரசராவ்பேட்டையைச் சேர்ந்த முல்லா ஷேக் மிரம் (MULLA SHEIK MIREM) என்பவரது வீட்டில் இருந்துள்ளது. அவருடைய முன்னோருக்கு த3க்3கு3பாடு (DAGGUPADU) என்னும் ஊரில் நிலம் வழங்கப்பட்ட உரிமைப் பட்டையத்துக்கான செப்பேடு. இது குண்டூர் ஆட்சியாளரான ஜே.என். ராய் (J.N. ROY, ICS) அவர்களின் கைக்கு வந்து, பின்னர் ஹுல்ட்ஸ் (HULTZSCH) அவர்களிடம் வந்துள்ளது. செப்பேடு, மூன்று ஏடுகளைக்கொண்டது. ஏடுகளை இணைக்கும் வளையத்தில் உள்ள முத்திரை நீள் வட்ட (OVAL) வடிவமானது. முத்திரையில் நந்தி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. முதல் ஏட்டில் முதல் பக்கத்தில் எழுத்துப் பொறிப்பு இல்லை. மற்றவை அனைத்திலும் பக்கத்துக்கு ஏழு வரியாக மொத்தம் முப்பத்தைந்து வரிகள் உள்ளன. செப்பேட்டின் மொழி சமற்கிருதம். கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் குறிப்பிட்டது போல் செப்பேட்டில் எழுத்துப்பிழைகள் இருப்பினும் காஞ்சிப்பல்லவ மரபுக்குப் பல்லவ அரச வரிசையைத் தெரிந்துகொள்ள இச்செப்பேடு பயன்படும் வகையில் உள்ளது.
சுரா செப்பேடு
செப்பேட்டில் குறிப்பிடப்பெறும் அரசன், பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த பல்லவன் தர்ம்ம மஹாராஜா விஜய விஷ்ணுகோபவர்மன் ஆவான். சுரா என்னும் கிராமத்தில் வீட்டுமனைக்கான நிலமும், அதைச் சேர்ந்த தோட்டமும் கு1ண்டூ3ரைச் சேர்ந்த நான்கு வேதங்களில் வல்ல சேசமி சர்மன் என்னும் பிராமணனுக்கு இறையிலியாக .அளிக்கப்பட்ட பிரமதேயக்கொடை. அரசனின் ஆயுள், வலிமை, வெற்றி ஆகியவற்றை முன்னிட்டு வழங்கப்பட்டது. நிலக்கொடை தரப்பட்ட ஊரின் எல்லைகளாகச் செப்பேட்டில் குறிப்பிடப்பெறும் ஊர்களான ழகு3ப3ன்று (LAGUBAMRU), பாகுஹூரு (PAAGUHURU), நாகலாமி (NAGOLAMI) ஆகியன முறையே இன்றைய த3க்3கு3பாடு (DAGGUPADU), பாவுலூரு (PAVULURU), நாகல்லா (NAGALLA) ஆகலாம். இவை யாவும் குண்டூர் மாவட்டம் பாபட்லா வட்டத்தில் அமைந்துள்ளன. சுரா செப்பேட்டில் தமிழின் சிறப்பு “ழ”கர எழுத்தும், “று” கர எழுத்தும்
ழகு3 ப3 (ம்) று சுரா செப்பேட்டில் ழகு3ப3ன்று (LAGUBAMRU) ஊர்ப்பெயர் தமிழின் சிறப்பு ழகரத்தில் தொடங்குவதும், வல்லின றகரம் ஆளப்பட்டுள்ளதும் கருத்தில் கொள்ளுதற்குரியது. செப்பேட்டில் இவ்விரு எழுத்துகளுக்கும் தனி வடிவங்கள் இருப்பதும் சிறப்பானது. இப்பகுதியில் (நெல்லூர்) இருந்த தமிழின் தாக்கம், தமிழின் ழகரம் மற்றும் றகரத்துக்குத் தனி எழுத்துகளை உருவாக்கும் அளவு செல்வாக்குப் பெற்றதாக இருந்தமை சிறப்புக்கூறு. செப்பேட்டரசன் சிம்மவர்மனின் மகன் விஜய விஷ்ணுகோப வர்மன். இவனது செப்பேடு வேறு எவையுமில்லை. இவன் மூன்றாம் விஷ்ணுகோபன் ஆகலாம். செப்பேட்டில், அரச வரிசையாக முறையே (ஸ்)கந்தவர்மன், விஷ்ணுகோபவர்மன், சிங்கவர்மன், விஜய விஷ்ணுகோபவர்மன் என்று காணப்படுகிறது. செப்பேட்டின் எழுத்தமைதி, கீழைச் சாளுக்கிய இந்திரவர்மன் மற்றும் மூன்றாம் விஷ்ணுவர்த்தன் ஆகியோரின் செப்பேட்டு எழுத்துகளோடு ஒப்பீட்டு ஆய்வு செய்யப்பட்டு, கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பெற்றது எனக்கருதப்படுகிறது. எனவே, இச்செப்பேடு மூலச் செப்பேடல்லவென்றும், கீழைச் சாளுக்கிய அரசன் குப்ஜ விஷ்ணுவர்த்தனனின் போர்த்தலையீட்டின் காரணமாக மறைந்துபோயிருந்த மூலச் செப்பேட்டுக்குத் தலைமாறாக (பதிலாக) கி.பி. 7—ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பெற்றதாகலாம் என்றும் கருதப்படுகிறது. செப்பேடு வெளியிடப்பட்ட இடம் பலக்கட என்னும் ஊர். இது, நெல்லூர் மாவட்டம், கந்துகூர் வட்டத்தில் உள்ள பலுகூரு ஆகலாம். கந்துகூர் நகரத்தின் சுற்று வட்டத்திலுள்ள பல்லவா, பல்லவ பாலகோபாலபுரம், பல்லவ புவனகிரிவாரி, கண்ட்ரிகா ஆகிய ஊர்கள், இப்பகுதி பல்லவர் தொடர்புடையது என்பதைக் காட்டுகின்றன. சிம்மவிஷ்ணு சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணுவின் காலம் கி.பி. 550-590 எனக் கருதப்படுகிறது. அவனி சிம்மன் என்னும் பெயரும் இவனுக்குண்டு. சிம்மவிஷ்ணு விட்டுச் சென்றதாகச் செப்பேடுகளோ கல்வெட்டுகளோ இல்லை. அவனைப்பற்றிய செய்திகள் யாவும் அவனது வழித்தோன்றல்களின் ஆவணங்கள் மூலமாகவே அறிகிறோம். மகேந்திரவர்மனின் திருச்சி மலைக்கோட்டைத் தூண் கல்வெட்டொன்றில் “பல்லவன் விரும்பும் காவிரி” என்னும் பொருளில் சமற்கிருதச் செய்யுள் வடிவில் எழுதப்பட்டுள்ளமை, சிம்மவிஷ்ணு, தன் மகனுக்குக் காவிரி வரையிலான நிலப்பரப்பை விட்டுச் சென்றான் என்னும் குறிப்பை உணர்த்துகிறது- (SII Vol-I p.29). இரண்டாம் நந்திவர்மனின் உதயேந்திரம் செப்பேட்டில் சிம்ம விஷ்ணு, விண்ணப்பெருமாளின் (விஷ்ணு) அடியான் என்னும் குறிப்புள்ளது. இவனது மகன் மகேந்திரன் முதலில் சமணனாக இருந்ததும், அப்பரடிகளால் சைவனானதும் கருதத்தக்கது. முடிவுரை சிம்மவிஷ்ணுவோடு முற்காலப் பல்லவர் வரலாறு முற்றுப்பெறுகிறது. மகேந்திர வர்மனின் காலத்திலிருந்து கல்வெட்டுச் சான்றுகள் உள்ளதால், மகேந்திரவர்மன் முதலாகத் தொடரும் பல்லவ மன்னர்களின் வரலாறு தெளிவாகக் கிடைக்கிறது. மகேந்திர பல்லவன் முதலாகத் தொடரும் பல்லவ அரசர் பற்றி அடுத்து ஒரு கட்டுரையில் பதிவைத் தொடர்வோம். முற்காலப் பல்லவர் பற்றி இதுவரை பார்த்ததில், அவர்கள் வடபுலப் பின்னணி கொண்டவர் என்பது உறுதியாகிறது. தொடக்கத்தில் அவர்க்குத் தமிழோடு தொடர்பு இருந்திருக்கவில்லை; எனவே, அவர்கள் தமிழ் அறிந்திருக்கவில்லை எனலாம். ஆனால், காஞ்சியைக் கைப்பற்றி ஆளத்தொடங்கிய பின்னர் - சோழமண்டலத்தையும் சேர்த்துத் தமிழகத்தின் வட பகுதியை ஆள்கையில் - அரசின் ஆட்சி நிருவாகத்துக்குச் சமற்கிருதத்தைப் பயன்படுத்தினாலும், ஆளும் மக்களிடை தம் ஆதிக்கத்தைச் செலுத்தவும், ஆளப்படுகின்ற மக்களின் ஏற்பு நோக்கியும் தமிழை அணைத்துக்கொண்டதோடு ”பல்லவத் தமிழ் கிரந்தம்” என்னும் தமிழ் எழுத்து வடிவத்தை உருவாக்கித் தந்தனர் என்றால் மிகையாகாது. இந்த எழுத்துகளின் அடிப்படையிலேயே, சோழர் தமிழ் எழுத்தைச் செம்மைப் படுத்தினர் எனலாம். அதுவரையிலும் தமிழ் மொழிக்கு வட்டெழுத்து வடிவமே செல்வாக்குப் பெற்ற நிலையில் இருந்துள்ளது எனவும் கருதலாம். விழவட்டி செப்பேட்டில் காணப்படும் சிறப்பு “ழ”கர எழுத்து இந்த வட்டெழுத்தே எனவும் கருதலாம். முற்காலப் பல்லவர் காலத்தில் - அதாவது கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே தமிழின் தாக்கம் தமிழகத்துக்கு வடபால் அமைந்த ஆந்திர நிலத்தில் நிலைபெற்றது எனவும் கருதுதற்கு இடமுண்டு. தமிழரின் வணிகச் செயல்பாடும் இந்த மொழித்தாக்கத்துக்குக் காரணமாய் இருந்திருக்கக் கூடும்.
துணை நின்ற நூல்கள் : 1 HISTORY OF THE PALLAVAS OF KANCHI - R. GOPALAN, M.A. (THE MADRAS UNIVERSITY HISTORICAL SERIES III-1928) 2. பல்லவர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார். 3 எபிகிராஃபியா இண்டிகா (EPIGRAPHIA INDICA) தொகுதி-6 4 எபிகிராஃபியா இண்டிகா (EPIGRAPHIA INDICA) தொகுதி-8 5 எபிகிராஃபியா இண்டிகா (EPIGRAPHIA INDICA) தொகுதி-15 6 எபிகிராஃபியா இண்டிகா (EPIGRAPHIA INDICA) தொகுதி-24 7 தென்னிந்தியக் கல்வெட்டுகள் - தொகுதி-12 (SOUTH INDIAN INSCRIPTIONS Vol-XII )
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை. அலைபேசி : 9444939156.