Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கங்கைகொண்டசோழபுரச் சலுப்பையும் சாளுக்கியரும் முன்னுரை தஞ்சாவூரில் இயங்கிவரும் தொல்லியல் க


Guru

Status: Offline
Posts: 7602
Date:
கங்கைகொண்டசோழபுரச் சலுப்பையும் சாளுக்கியரும் முன்னுரை தஞ்சாவூரில் இயங்கிவரும் தொல்லியல் க
Permalink  
 


கங்கைகொண்டசோழபுரச் சலுப்பையும் சாளுக்கியரும்
 
முன்னுரை
தஞ்சாவூரில் இயங்கிவரும் தொல்லியல் கழகம், ஒவ்வொரு ஆண்டும் தொல்லியல் கருத்தரங்கம் ஒன்றைத் தமிழகத்தின் முதன்மையான பல்வேறு ஊர்களில் நடத்திவருகின்றது. தமிழகம் முழுதுமுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ளோர், தம் ஊர்ப்பகுதியின் வரலாற்றிடங்கள் அன்றிப் பிற ஊர்ப்பகுதிகளின் வரலாறு பற்றியும் ஓரளவு தெரிந்துகொள்ள இக்கருத்தரங்கங்கள் துணை செய்கின்றன. பெரும்பாலும், வரலாற்று ஆர்வலர்கள் முதன்மை ஊர்களைப் பற்றி வரலாற்றடிப்படையில் செய்திகளைத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், முதன்மை ஊர்களை ஒட்டியுள்ள பகுதிகளின் உள்ளூர் வரலாற்றுச் செய்திகளையும் நாட்டார் வரலாற்றுச் செய்திகளையும் தெரிந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பில்லை. அவ்வாறான வாய்ப்பினை மேற்சொன்ன கருத்தரங்கங்கள் தருகின்றன. அண்மையில் ஜூலை மாதம் கங்கைகொண்டசோழபுரத்தில்  நடைபெற்ற தொல்லியல் கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, கருத்தரங்க விழாக்குழுவினர் கங்கைகொண்டசோழபுரத்தின் புறவூர்ப் பகுதியொன்றுக்கு அழைத்துச் சென்று காட்டினார்கள். முதலாம் இராசேந்திரன் எடுப்பித்த கங்கைகொண்டசோழ ஈசுவரம் என்னும் பெரிய கோயிலைப் பற்றிச் சற்று அறிந்திருக்கும் நமக்கு, இராசேந்திரசோழன் போரில் வென்ற சாளுக்கியரோடு தொடர்புள்ள ஒரு சில செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் இப்பயணத்தால் கிட்டியது. அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே.
 
சலுப்பை-அழகர்கோயில்
கருத்தரங்கப் பார்வையாளர்கள், கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து இரு பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டோம். பயணத்தில், முன்னுரையில் கூறியவாறு கங்கைகொண்டசோழபுரத்தைச் சுற்றிலுமுள்ள புறவூர்கள வந்தன. கருவாலப்பர்கோயில், சத்திரம், குண்டவெளி, கொல்லாபுரம், இளையபெருமாள் நல்லூர், மீன் சுருட்டி ஆகிய ஊர்கள். சிறிய கிராமத்துச் சாலைகள். இருபுறமும் பசுமையான வயல்வெளிகளை எதிர்பார்த்தால் ஏமாற்றமே. நீரில்லை; அதனால் வயல்களும் இல்லை. “யூகலிப்டஸ்”  என்னும் தைல மரங்களும், சவுக்கு மரங்களும் , முந்திரி மரங்களும் சாலையின் இருமருங்கிலும் ஆங்காங்கே காணப்பட்டன. எளிமையான கிராமங்கள். ஆள் நடமாட்டமின்றி, அரவமின்றிக் காணப்பட்டன. நீர்நிலைகளான குளங்களை வறண்ட குழிகளாய்க் கண்டபோது, கல்வெட்டுகளில், ஆயிரம் ஆயிரம் கலங்களாய் நெல் குவித்த இடைக்காலச் சோழரின் ஊர்களைபற்றிப் படித்த செய்திகள் நினைவுக்கு வந்து நெஞ்சை வருத்தின. இளையபெருமாள் நல்லூரை அடுத்து அழகர்கோயில் என்னும் இடத்தை அணுகினோம். மதுரையில் ஓர் அழகர்கோயில் போல இங்கும் ஓர் அழகர்கோயிலா என்னும் வியப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த அழகர்கோயில், வைணவக்கோயில் அல்ல என்றதும் வியப்பு கூடுதலானது.  இது ஒரு சித்தர் சமாதியுற்ற இடம். தோரணவாயிலாகக் கட்டியிருக்கும் நுழைவாயில்.அருள்மிகு ஸ்ரீ துறவுமேல் அழகர் திருக்கோயில்-சலுப்பை”  என்னும் தலைப்பெழுத்து. கருத்தரங்கின் உள்ளூர்ச் செயலராய் இயங்கிய திரு.கோமகன் என்பார், இக்கோயிலைப் பற்றிய சில செய்திகளைக் கூறினார்.
 
             சலுப்பை -  துரவுமேல் அழகர் கோயில் - முகப்பு
Copy%2Bof%2BIMG_20170723_075123.jpg
 
 
சலுப்பை-பெயர்க்காரணம்
கோயில் அமைந்திருக்கும் இடம் சலுப்பை என்னும் பெயரில் அமைந்த கிராமம். இராசேந்திரசோழன் சாளுக்கியரை வெற்றிகொண்டதால் இப்பகுதி, சோழநாட்டின் சளுக்கியகுலநாசனி மண்டலம் என்னும் பெயர் பெற்றது. இப்பெயரின் முதற்பகுதியே சுருக்கப்பெயராய் அமைந்து சளுக்கி என்று வழங்கிற்று. நாளடைவில், சளுக்கி, சலுப்பி என்றாகிப் பின்னர் சலுப்பை எனத் திரிந்து நிலைத்துப்போனது.
 
துறவுமேல்
துறவுமேல் என்பதற்கான விளக்கம் புதுமையானது. துறவி ஒருவர் இறந்து சமாதியானதால் “துறவு”  என்னும் சொல்லொட்டு வந்தது என நினைத்தோம். அது பிழையானது. “துரவு  என்பதே சரியான சொல்; துரவு என்பது கிணற்றைக் குறிக்கும் சொல். துரவு என்பது மக்கள் வழக்கில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் சொல்லே. தோப்பும் துரவும்”  என்னும் தொடர் நாம் அறிந்த ஒன்று. கல்வெட்டுகளிலும் துரவு என்னும் சொல் காணப்படுகிறது. செவி வழிச் செய்தியின்படி, இப்பகுதி காடாக இருந்தபோது துறவி ஒருவர் இங்கு தவத்தில் இருந்தார். இந்த இடத்துக்கு அண்மையில் ஒரு வைணவக்கோயிலும், ஒரு பார்ப்பனச்சேரியும் அமைந்திருந்தன. ஒரு  நாள், பார்ப்ப்னச் சேரியிலிருந்து இரு பார்ப்பனப் பெண்கள் கிணற்றில் நீரெடுக்க வந்திருந்தபோது, துறவிக்கருகில் காணப்பட்ட ஒரு குடம், இவர்கள் பார்வையில் பொன்னிறமாகத் தோற்றம் தரவே, அப்பெண்கள் அதை எடுக்க முயன்றனர். தவ நிலையில் இருப்பினும், துறவி இந்நிகழ்ச்சியை உள்ளறிவால் உணர்ந்ததும் தவம் கலைந்துபோனது. துறவியின் சினம் அறமாய் எழுந்து அப்பெண்களை அழித்தது. இறந்த பெண்களிருவரும் கிணற்றில் இரண்டு தாமரை மலர்களாய் மாறினர். தவத்தினால் இறை நிலை எய்த இயலாது தவம் கலைந்துபோனதால் துறவி வெறுப்புற்றுக் கிணற்றுள் ஒன்றிப்போகிறார். கால்நடை மேய்ப்பர்களின் கனவில் தோன்றித் தாம் மறைந்த கிணற்றை மூடி வழிபடவேண்டுமென்று கூறுகிறார். அவ்வாறே, கிணறு மூடப்பட்டுப் பீடம் அமைக்கப்பட்டு வழிபடுதல் நடைபெறுகிறது. எனவே, கோயில் கருவறையில் உருவ வழிபாடு இல்லை. பீடம் மட்டுமே உண்டு. துறவி, துரவுமேல் அழகராக வணங்கப்படுகிறார். இவரது வழிபாட்டுச் சடங்குகளில் உயிர்ப்பலி இல்லை. ஆனால், இவரது காவல் தெய்வங்களான வீரபத்திரசாமி, கருப்புசாமி ஆகியோருக்கு உயிர்ப்பலி நடைபெறுகிறது.
 
                     கோயிலின் நுழைவுப்பகுதி 
Copy%2Bof%2BIMG_20170723_074918.jpg
 
 
                      குதிரைச் சிற்பங்கள்
Copy%2Bof%2BIMG_20170723_073707.jpg

 

Copy%2Bof%2BIMG_20170723_073712.jpg
                                                      
 
                               
 
யானைச் சிற்பம்
துரவுமேல் அழகராகிய சித்தருக்குப் பாதுகாப்பாக விளங்கும் யானையின்  சிற்பம் ஒன்று கோயிலின் எதிர்ப்புற வளாகத்தில், ஏறத்தாழ எழுபது அடி உயரத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. சுடுமண்/சுதைச் சிற்பமாகலாம். பழமையான சிற்பம்தான். காலக்கணிப்புக்குச் சான்றில்லை. இந்த யானையும், கோவில் வளாகத்தினுள் உள்ள குதிரையும் இரவில் வேட்டைக்குப் போய்த்திரும்புவதாக நம்பிக்கை. யானைக்கு உதவியாக ஒரு நாயும் உண்டு. ஒருமுறை, பலாக்காயைத் திருடவந்த கள்வனை நாய் குரைத்து இருப்பைக் காட்ட, யானை தன் துதிக்கைகொண்டு கள்வனை வளைத்துப்பிடிக்கிறது. இந்நிகழ்ச்சியை அழகுறக்காட்டும் சிற்பத்தொகுதி நாட்டார் கலை வண்ணத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. யானையின் கழுத்தைச் சங்கிலியும், சிறு சலங்கை மணி கோத்த கயிறும், சற்றுப் பெரிய மணிகள் கோத்த கயிறும் அணி செய்கின்றன. யானையின் முதுகில் (பட்டுத்?) துணி போர்த்தப்பெற்று, உடலின் இருமருங்கிலும் பெரிய மணிகள் (சங்கிலியால் இணைத்தவை) தொங்குகின்றன. மணிகளின் கீழ் இசைக்கருவிகளை இசைத்த நிலையில் பக்கத்துக்கு மூன்றாக ஆறு பூதகணங்கள் அல்லது மனித உருவங்கள் காணப்படுகின்றன. யானையின் இடது கால் கள்வனின் காலை மிதித்துப் பிடித்துத் துதிக்கையால் வளைத்து நெருக்குகிறது. கள்வனின் காலருகில் நாயும் பலாக்காயும் காணப்படுகின்றன.  
 
                       யானைச் சிற்பம்
Copy%2Bof%2BIMG_20170723_072643.jpg
 
                       இசைக் கலைஞர்கள்
Copy%2Bof%2BIMG_20170723_073427.jpg
 
                         கள்வன் - யானையின் பிடியில்
Copy%2Bof%2BIMG_20170723_073531.jpg
 
                                                                             காவல் நாய்
Copy%2Bof%2BIMG_20170723_073500.jpg

 

 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
RE: கங்கைகொண்டசோழபுரச் சலுப்பையும் சாளுக்கியரும் முன்னுரை தஞ்சாவூரில் இயங்கிவரும் தொல்லியல்
Permalink  
 


சளுக்கியக் காளி
இக்கோயிலின் சிறப்பு ஒன்றுண்டு. சாளுக்கியரை வெற்றிகொண்ட இராசேந்திர சோழன் சாளுக்கியரிடமிருந்து கொண்டுவந்த காளிச் சிற்பம் இக்கோயிலில் உள்ளது. கோயிலின் நுழைவுப்பகுதியிலேயே தனிக் கருவறையில் இச்சிற்பம் உள்ளது. எட்டுக்கைகளுடன், எருமை அரக்கனைக் கொல்லும் “மகிஷாசுர மர்த்தனி” யாக இக்காளி காட்சி தருகிறாள். வழக்கத்தில் எல்லாக் காளிச் சிற்பங்களிலும் காலடியில் எருமைத்தலை இருப்பதாகக் காட்டப்படும். ஆனால், இந்தச் சிற்பத்தில் எருமைத் தலையும் மனித உடலுமாக அரக்கன் காட்டப்படுகிறான். மனித உடலும், எருமைத் தலையும் இணைந்த சிற்ப அமைப்பு சாளுக்கியச் சிற்பக்கலை மரபிலே காணப்படும் என்று திரு. கோமகன் சுட்டிக்காட்டினார். கங்கைகொண்ட சோழபுரத்தின் வடவெல்லைக் காளியாக இச்சிற்பம் வணங்கப்படுகிறது. டாக்டர் மா.இராசமாணிக்கனார், “சோழர் வரலாறு” என்னும் தம் நூலில், இராசேந்திரசோழன் தன் தலைநகரின் நான்கு புறங்களிலும் நான்கு காளிகளை நிறுத்தினான் என்றும், வடவெல்லைக் காளி சலுப்பையிலும், தெற்கெல்லைக் காளி வீராரெட்டி என்னும் கிராமத்திலும் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். கிழக்கெல்லைக் காளி செங்கல்மேடு என்னும் ஊரிலும், மேற்கெல்லைக் காளி இடைக்கட்டு என்னும் ஊரிலும் உள்ளதாக “நம்ம கங்கைகொண்டசோழபுரம் சோழநாடு”  என்னும் முக நூல் குறிப்பு சுட்டுகிறது.
 
                   சளுக்கியக் காளியும் எருமை அரக்கனும்
Copy%2Bof%2BIMG_20170723_075015.jpg
 
 
அகோரவீரபத்திரர்-கருப்பராயர்
அடுத்துள்ள தனிக்கருவறையில் பெரிய உருவத்துடன் அகோரவீரபத்திரரின் சிற்பம். பூசையாளர் கூறியதுபோல், இருளில் வீரபத்திரரின் கண்கள் மின்னிக்கொண்டிருந்தன. வீரபத்திரர் கருவறைக்கு முன்பாகவே, கருப்பராயர் சிற்பம் உள்ளது. வளாகத்தில் சுடுமண் சிற்பங்களாகக் குதிரைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
 
                                                                                     வீரபத்திரர்
Copy%2Bof%2BIMG_20170723_074226.jpg
 
 
துரவு மேல் அழகர்-பீட வடிவில்
கோயிலின் முதன்மைத் தெய்வமாக வழிபடப்படும் துரவு மேல அழகரின் அடையாளமாக வெள்ளித் தகடு போர்த்திய ஒரு பீடம் உள்ளது.
 
                                                                       சித்தரின் துரவுப் பீடம்
Copy%2Bof%2BIMG_20170723_074649.jpg
 
 
 
கலிங்கச் சிற்பங்கள்
அடுத்து நாங்கள் சென்ற இடம் செங்கமேடு என்னும் ஊர்ப்பகுதி. இங்கே, இராசேந்திரசோழனின் வெற்றியின் அடையாளமாகக் கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. செந்நிற மணற்கற்களால் ஆன இச்சிற்பங்கள் கலிங்க நாட்டுக் கலைப்பாணிக்குச் சிறந்த எடுத்துகாட்டாய் விளங்குவன என்று தொல்லியல் துறை அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது. இன்றைய ஒரிசா மாநிலத்தின் வடபகுதியே அன்றைய கலிங்கநாடு.
 
                      கலிங்கச் சிற்பங்கள்
Copy%2Bof%2BIMG_20170723_083035.jpg

 

Copy%2Bof%2BIMG_20170723_083049.jpg
 
Copy%2Bof%2BIMG_20170723_083159.jpg
 
 
சோழர் காளி
இங்கே, கலிங்கச் சிற்பங்கள் தவிர, தனிச் சிறு கோயிலில் வணங்கப்படும் சோழர் கலைப்பாணிக் காளியின் சிற்பத்தைக் காணும் வாய்ப்புப் பெற்றோம். ஓர் ஆள் உயரத்துக்கும் மேலாக ஓங்கி உயர்ந்து காணப்பட்ட காளிச் சிற்பம் அருமையானதொன்று. தீக்கதிர் முடியும் (ஜ்வாலா கேசம்), எட்டுக்கைகளும் கொண்டவளாக ஆற்றல் வாய்ந்த தோற்றம். வலது காலைக் குத்திட்டு மடித்த நிலையிலும் இடது காலை அரக்கனின் உடல்மீது மிதித்த நிலையிலும் கொற்றவை காணப்படுகிறாள். வலது செவியில் “பிரேதகுண்டலம்”  என்று குறிப்பிடப்பெறுகிற, பிணத்தையே காதணியாகக் கொண்ட அரிய தோற்றத்துடன் கொற்றவை காட்சி தருகிறாள்.
 
                       சோழர் காலக் கொற்றவை
Copy%2Bof%2BIMG_20170723_083300.jpg
 
                                        கொற்றவையின் செவியில்  ”பிரேத குண்டலம்”
Copy%2Bof%2BIMG_20170723_082730.jpg
 
 
கங்கைகொண்ட சோழபுரத்தைச் சுற்றிலும் வரலாற்றுச் சுவடுகள்
வரலாற்றுச் சுவடுகளைத் தம்மகத்தே கொண்ட பல ஊர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தின் புறவூர்கள்ளாக இன்றும் எஞ்சியுள்ளன. கடாரம்கொண்டான், வீரசோழபுரம், வானவன் நல்லூர், சோழன்மாதேவி, விக்கிரமங்கலம் (விக்கிரமசோழமங்கலம்), ஆயுதக்களம், சுண்ணாம்புக்குழி, உள்கோட்டை, யுத்தப்பள்ளம் ஆகியவை அத்தகைய ஊர்கள். பல ஊர்கள், அரசர், அரசியர் பெயரைத்தாங்கியுள்ளன. படைகளுக்கு வேண்டிய ஆயுதங்கள் உருவான ஊர் ஆயுதக்களம்; கட்டடங்கள் கட்ட சுண்ணாம்பைத் தந்தது சுண்ணாம்புக்குழி என்னும் ஊர்; கோட்டை இருந்த இடம் உள்கோட்டை; போர் நிகழ்ந்த இடத்தை நினைவூட்டுகின்ற யுத்தப்பள்ளம். வடநாடு நோக்கிச் சென்ற பெருவழியில் அமைந்த சத்திரம் என்னும் ஊர் தங்குமிடமாகச் சத்திரங்களைக் கொண்டிருந்தது போலும். கங்கைகொண்ட சோழபுரத்தின் மதிற்சுவர்களின் இடிபாடுக்ளிலிருந்து எடுத்த கற்களே தற்போதுள்ள அணைக்கரையில் அணைகட்டப் பயன்பட்டன என்று கருதப்படுகிறது. கங்கைகொண்டசோழபுரத்தில் இருக்கும் மாளிகைமேடு என்னும் பகுதியில் அகழாய்வு நடத்தப்பெற்று, இராசேந்திரனின் மாளிகை(அரண்மனை) கண்டறியப்பட்டுள்ளது. மேஏர்சொன்ன புறவூர்களுள் தகுதிபெற்ற ஊர்களில் அகழாய்வு நடைபெற்றால் மேலும் பல வரலாற்றுச் செய்திகள் வெளிப்படும் என்னும் சிந்தனையோடு கங்கைகொண்டசோழபுரத்தின் புறவூர்களைப் பார்க்கச் சென்ற எங்கள் பயணத்தைக் கொற்றவை முடித்துவைத்தாள்.
 
கட்டுரை ஆக்கத்துக்குத் துணை நின்றவர்க்கு நன்றி.
 
  1. திரு, கோமகன், பொறிஞர், கங்கைகொண்டசோழபுரம்.
2  நம்ம கங்கைகொண்டசோழபுரம் சோழநாடு-முகநூல்
3    தேவர்களம்- வலைப்பூ
 
 
 
 
 
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

 

அலைபேசி : 9444939156.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard