Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருநந்திக்கரைக் குடைவரை-வட்டெழுத்துக் கல்வெட்டு


Guru

Status: Offline
Posts: 7602
Date:
திருநந்திக்கரைக் குடைவரை-வட்டெழுத்துக் கல்வெட்டு
Permalink  
 


திருநந்திக்கரைக் குடைவரை-வட்டெழுத்துக் கல்வெட்டு 
(THIRUNANTHIKKARAI  ROCK-CUT CAVE  VATTEZHUTHTHU INSCRIPTION)
 
திருவாங்கூர் தொல்லியல்துறை
     திருவாங்கூர் தொல்லியல் துறையினர்திருவாங்கூர் தொல்லியல் வரிசை என்னும் கல்வெட்டுத் தொகுப்பினை வெளியிட்டுள்ளனர். திருவாங்கூர் மாகாணத்துத் தொல்லியல் துறைத் தலைவராயிருந்த கே.விசுப்பிரமணிய ஐயர் பதிப்பித்த தொகுதி மூன்றில் வெளியாகியுள்ள திருநந்திக்கரைக் குடைவரைக் கல்வெட்டு,வட்டெழுத்துக் கல்வெட்டு என்னும் முறையில் ஈர்த்ததுஅது பற்றிய ஒரு பகிர்வு இங்கே.  
 
திருநந்திக்கரைக் குடைவரை
 
Thirunanthikarai_RockCut_Temple1.jpg

 

Thirunanthikkarai-Kudaivarai-1.jpg

 

Thirunanthikkarai-Kudaivarai-2.jpg
 
         தற்போது இதன் அமைவிடம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகில். ஆனால், மேற்படி பதிப்பு நூலில், திருநந்திக்கரை, பத்மநாபபுரம் கோட்டம் கல்க்குளம் வட்டத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குடைவரையின் நுழைவு வாயிலில் வலப்புறத்தில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டு வட்டெழுத்தில் தமிழ் மொழியில் அமைந்துள்ளது.இக்குடைவரைக்கோயிலின் பெயர் திருநந்திக்கரை பட்டாரர் கோயில் என்பதாகும். கோயிலில் ஒரு நந்தாவிளக்கு எரிப்பதற்காக ஒன்பது எருமைகள் கொடையளிக்கப்பட்டுளதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. கொடையாளி, சித்தகுட்டி அம்பி ஆகிய ஐந்நூற்றுவ முத்தரையன். என்னும் ஒரு தலைவன். இவன் நாஞ்சிநாட்டு வேய்கோட்டுமலையைச் சேர்ந்தவன். கல்வெட்டில் உள்ள காலக்குறிப்பு, கறைக்கண்டீசுவரத்துக் கலங்கள் அழிக்கப்பட்ட ஆண்டு எனக் கூறுகிறது. ஆனால், இந்த நிகழ்வு எப்போது நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. கறைக்கண்டீசுவரம் என்பது இரணியல் வட்டத்தில் கடிகைப்பட்டினம் என்னும்  ஊரின் அருகில் அமைந்த ஒரு சிற்றூர். எழுத்தமைதியைக் கொண்டு, கல்வெட்டின் காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதல்ல என வரையறுத்திருக்கிறார்கள்.
 
                   கல்வெட்டு - தொல்லியல் நூலில் உள்ளவாறு
%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE
 
கல்வெட்டின் பாடம்
 
 ஸ்வஸ்திஸ்ரீ கறைக்கண்
2  ட ஈச்வரத்துக் கலம
3  ற்ற யாண்டு திருநந்தி
4  க்கரை ட்டாரகர்க்கு
5  நாஞ்சிநாட்டு வெய்கோ
6  ட்டு மலையுடைய
7  சித்தகுட்டி அ
8  ம்பியாயின அஞ்ஞூ
9  ற்றுவ முத்தரையன்
10 நிசதம் உரிய் நெய்
11 எரிவதாக வைச்ச திரு
12 நந்தாவிளக்கு ஒன்று
13 க்கு வைச்ச சாவா மூவா எ
14 ருமை ஒன்பது இவை பெ
15 ருமக்களுக்குச் சமைஞ்(ச)
16 இடையன் ....... மங்கல
17  வன் வய்த்(தா)ன்
 

குறிப்பு :  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.

                                              கல்வெட்டு -  பார்வைப்படி
%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE
 
 
குறிப்புகள்
 
1 பட்டாரகர்
     பட்டாரகர் -  இது ஒரு சமற்கிருதச் சொல். “ப4ட1”   (Bhata),  “ப4ட்1ட1 (Bhatta)  ஆகிய இரு சொற்களைச் சமற்கிருத அகரமுதலி குறிக்கிறது. முதலாம் பட”  ஒரு போர்வீரனைக் குறிக்கும்; இரண்டாம் “பட்ட”  என்பது ஒரு எஜமானன், சிரந்த அந்தணன் ஆகிய இரு பொருள் தரும். இதேபோல், பட்டாரக(ர்) (“Bhattaraka”)   என்னும் சொல் மதிப்புக்குரியவர், தேவர்களின் தேவர் என இரு பொருளைக் குறிப்பதாக அகரமுதலி சுட்டுகிறது. கல்வேட்டுகளில், இச்சொல் கடவுளைக் குறிக்கவும்  சமண அறிஞர்களைக் குறிக்கவும் பயன்படுகிறது. (கொங்கு நாட்டு உடுமலை அருகேயுள்ள ஐவர்மலைக் கல்வெட்டில் “குணவீரக்குரவடிகள் மாணாக்கர் சாந்திவீரக் குரவர் திருவயிரை பாரிச்வ படாரரையும் இயக்கி அவ்வைகளையும் புதுக்கி” என்று குறிக்கப்பெறுவதைக் காண்க.) பெரும்பாலும் “பட்டார(ர்)”  என்பதாகவே  “க” எழுத்து நீங்கிய நிலையில் - கல்வெட்டுகளில் பயில்கிறது. “பட்டாரிக  “Bhattarika” என்பது பட்டாரக”  என்பதன் பெண்பாற்பெயர். எனவே, பெண் தெய்வத்தையும், பெண் அறிஞரையும் (பெண் துறவி?) குறிக்கும். பெண்தெய்வத்தைக் குறிக்கும் இப்பெயர்,படாரி, பிடாரி எனத் திரிந்து ஒலிக்கும். சோழர் காலக் கல்வெட்டுகளில் கொற்றவை அல்லது அம்மன் கோயில்களில் உள்ள பெண் தெய்வம் பிடாரி என்றே வழங்கப்பட்டது. நிலக்கொடை தொடர்பான சோழர் கல்வெட்டுகளில், நிலத்தின் எல்லைகளைக் குறிப்பிடும்போது பல இடங்களில் “பிடாரி கோயில்  என்னும் தொடரைக் காணலாம். கொற்றவை என்பவள் கடுஞ்சினத்தையும் வீரத்தையும் கொண்ட பெண்தெய்வம் என்பதால், நம் வீடுகளில் பெண் குழந்தைகள் வன்மையான ஓர் இயல்பை, போக்கை வெளிப்படுத்தும்போது, அவர்களைப் பிடாரி” எனத்திட்டுவதைக் காண்கிறோம். இங்கே, நமது கல்வெட்டில் இறைவனின் பெயர் திருநந்திக்கரை பட்டாரகர் என்றே குறிப்பிடப்பெறுகிறது.
 
2. நாஞ்சிநாடு
          நாஞ்சில் நாடு என்பது இக்கல்வெட்டில் நாஞ்சிநாடு என்று குறிப்பிடப்படுகிறது. கி.பி.800 முதல் கி.பி. 1300 வரையிலான காலகட்டத்தில், கல்வெட்டுகளில் நாஞ்சில் நாடு பற்றிய குறிப்புகள் உள. இன்றும் நாஞ்சில் நாடு என்னும் வழக்கு உள்ளது. நாகர்கோயில் பகுதியே நாஞ்சில் நாடு. திருவாங்கூர் அரசின் கீழ் இருந்த நாடு.
 
3 வெய்கோட்டுமலை/வேய்கோட்டுமலை
   ல்வெட்டில் குறிப்பிடப்பெறும் வேய்கோட்டுமலை தற்போது எந்த மலையைக்குறிக்கும் எனத்தெரியவில்லை
 
4 அஞ்ஞூற்றுவ முத்தரையன்
      பண்டு இருந்த வணிகக் குழுக்களில் ஐந்நூற்றுவர் என்பவரும் ஒரு பிரிவினர். கொடையாளியின் இயற்பெயர் சித்தகுட்டி அம்பி என்பதாகும். இவன் ஐந்நூற்றுவர் வணிகப் பிரிவைச் சேர்ந்தவன். முத்தரையன் என்னும் சிறப்புப் பெயருடைய ஒரு தலைவன் எனத்தெரிகிறது. ஐந்நூற்றுவர் என்பது கல்வெட்டுகளில் சற்றே திரிந்து அஞ்ஞூற்றுவர் எனப் பயின்று வருவதைக் காண்கிறோம்.
 
5 சாவா மூவா எருமை
     கோயிலில் நந்தாவிளக்கு எரிக்கக் கொடையாகத் தொண்ணூறு ஆடுகளைக் கொடுப்பது பெரும்பாலும் கல்வெட்டுகளில் காண்கின்ற ஒன்று. ஒரு சில கல்வெட்டுகளில், பசுக்கள் கொடையும் காணப்படுகிறது. எருமை கொடையாக அளிக்கப்படுவது குறைவு. இக்கல்வெட்டில், ஒன்பது எருமை கொடையளிக்கப்படுகிறது. ஒருவேளை, நாஞ்சில் நாட்டுப்பகுதியில் எருமைகள் நிறைய இருந்திருக்கலாம். சாவா மூவா என்பது கொடையளிக்கப்பட்ட எருமைகளின் எண்ணிக்கையான ஒன்பது, தொடர்ந்து மாற்றமின்றி இருக்கும் என்பதன் குறிப்பாகும். தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட எண்ணிக்கை, சாவினால் குறையும். தொடக்கத்தில் உள்ள கன்றுகள் மூப்படையும். ஆனாலும், காலப்போக்கில், புதிதாகப் பிறக்கும் கன்றுகளின் எண்ணிக்கையால் சாவும் மூப்பும் ஈடு செய்யப்பெற்று தொடக்க எண்ணிக்கை குறையாமல் இருப்பதை ”சாவா மூவா” என்பது சுட்டும்.
 
6 இடையன் மங்கலவன்
      கோயிலில் விளக்கெரிக்கக் கொடுக்கப்படும் ஆடுகள், எருமைகள் ஆகியவை, கோயில் சார்பாக, ஊர்ச்சபையினர் நியமித்த இடையர்களுக்கு வழங்கப்படும். இடையர்கள், இவற்றைத் தம் வாழ்வாதாரமாகக் கொண்டு, கோயிலுக்கு நிசதம் (நாள்தோறும்) உரி நெய் அளிக்கும் பொறுப்பை ஏற்கிறார்கள். உரி என்பது முகத்தலளவைக் குறியீடு. சென்ற நூற்றாண்டு வரை சொல் வழக்கிலிருந்த படி என்னும் அளவில் அரைப்பங்கு உரியாகும். ஆழாக்கு என்பது ஒரு சிறிய அளவு.
 
இரண்டு ஆழாக்கு = ஓர் உழக்கு                    
இரண்டு உழக்கு = ஓர் உரி
இரண்டு உரி = ஒரு நாழி (படி)
 
கல்வெட்டில், இடையனின் பெயராக மங்கலவன் பவித்திரன் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதில், பவித்திரன் என்ற பாடம் உறுதியில்லை எனக் கருதுகிறேன். காரணம் இறுதி வரியின் மூன்றாம் நான்காம் ஐந்தாம் எழுத்துகள் “வ”, “ய்”, “த்”  என உள்ளன. இறுதி எழுத்து “ன்”.  எனவே, ”வய்த்(தா)ன்”  என்ற பாடம் சரியாகத் தோன்றுகிறது.. கல்வெட்டின் பதினாறாம் வரியில், இடையன் என்னும் சொல்லுக்கும், மங்கல என்னும் சொல்லுக்கும் இடையில் “வெ” , “ன்”  என்னும் எழுத்துகள் காணப்படுகின்றன. அவை இடையனின் இயற்பெயரைக் குறிக்கும் எழுத்துகள் ஆகலாம். 
பாட பேதம் கீழ்வருமாறு :
 
16 இடையன் வெ - - ன் மங்கல
17. வன் வய்த்(தா)ன்
 
 
7 கிரந்த எழுத்துகள்
      கல்வெட்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் கிரந்த எழுத்துகள் உள்ளன. முதல் வரியில் முதற்சொல் “ஸ்வஸ்திஸ்ரீ”  முழுதும் கிரந்த எழுத்துகளே. நான்காம் வரியில், பட்டாரகர் என்னும் சொல்லின் முதல் எழுத்து கிரந்தம்.
 
8 எழுத்துகளின் அமைதி/வடிவம்
       வளர்ச்சியுற்று நிலைபெற்ற வட்டெழுத்துகளின் பொது வடிவம், சில எழுத்துகளில் இக்கல்வெட்டில் மாற்றம் பெற்றுள்ளது. அவை ,”,  “ன ஆகிய மூன்று எழுத்துகள். மூன்றிலுமே, எழுத்துகளின் கோடுகள் இடைவெளியின்றி மூடப்பட்டுள்ளன. கீழே தந்துள்ள படத்தின் உதவிகொண்டு இது விளக்கம்  பெறும். லை” என்னும் எழுத்து, இன்றுள்ள வடிவத்திலிருந்து முற்றும் மாறுபட்டுக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் வரியில் “ண” எழுத்தும் வடிவத்தில் சற்றே மாற்றம் கொண்டுள்ளது. “ஞ”, “ஞூ” எழுத்துகளும் மாற்றம் கொண்டுள்ளன. 
 
 
 
  
P1140634.JPG

 

 
 
குறிப்பு:  குடைவரையின் ஒளிப்படங்கள் இணையத்திலிருந்து எடுத்தவை.
 ------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard