இயேசு (Jesus, கி.மு. சுமார் 4 – கி.பி. சுமார் 30-33) என்பவர் கிறித்தவ சமயத்தின் மைய நபர் ஆவார். கிறித்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா (திருப்பொழிவு பெற்றவர், மீட்பர்) என்றும் நம்புகின்றனர்.[12]
இயேசு, கலிலேய நாட்டில் வாழ்ந்த ஒரு யூதர் ஆவார்.[13] இவர் திருமுழுக்கு யோவான் என்பவரிடம் திருமுழுக்கு பெற்றார். அதைத்தொடர்ந்து நற்செய்தி அறிவிக்கும் ஊழியத்தைத் தொடங்கினார். அவர் தன் செய்தியை வாய்வழியாக அறிவித்து வந்தார்.[14] ஆகவே அவர் பெரும்பாலும் ரபி (போதகர்) என்று அழைக்கப்பட்டார்.[15] கடவுளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று இயேசு தன் சக யூதர்களுடன் விவாதித்தார். மேலும் நோயாளிகளைக் குணப்படுத்தினார்; உவமைகள் மூலம் போதித்தார். இதனால் பல மக்கள் இயேசுவைப் பின்பற்றத் தொடங்கினர்.[16][17] பிறகு யூத அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட இயேசு,[18] உரோம அரசின் முன் நிறுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து உரோம ஆளுநர் பொந்தியு பிலாத்து என்பவரின் கட்டளைப்படி இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.[16] இயேசு இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக நம்பிய அவரது சீடர்கள் இணைந்து தோற்றுவித்த சமுதாயம் பிறகு தொடக்கக்கால கிறித்தவமாக வளர்ந்தது.[19]
இயேசுவின் பிறப்பு வருடந்தோறும் டிசம்பர் 25ம் நாளன்று கிறிஸ்துமஸ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அவர் சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக போற்றப்படுகிறது. மேலும் அவர் உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் உயிர்ப்புப் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இயேசு தூய ஆவியின் மூலம் கருத்தரித்தார், கன்னி மரியாளின் மூலம் பிறந்தார், அற்புதங்களை நிகழ்த்தினார், பாவங்களைப் போக்க சிலுவையில் தன்னை பலியாகக் கொடுத்தார், சாவினின்று உயிர்த்தெழுந்தார், விண்ணேற்றம் அடைந்தார் மற்றும் பூமிக்கு மீண்டும் வருவார் ஆகிய நம்பிக்கைகள் கிறிஸ்தவ கோட்பாட்டில் அடங்கும்.
கிறித்தவர் அல்லாதவர்களும் இயேசுவை உயர்ந்தவராக ஏற்றிப் போற்றுகின்றனர். இசுலாம் சமயத்தில் இயேசு முக்கியமான இறைத்தூதர்களில் ஒருவராகவும் மெசியாவாகவும் கருதப்படுகிறார். இசுலாமியமதத்தவர் இயேசுவைக் கடவுள் அனுப்பிய முக்கியமான இறைத்தூதர் என்றும் கன்னி மரியாளிடம் பிறந்தார் என்றும் ஏற்றுக்கொண்டாலும், அவரைக் "கடவுளின் மகன்" என்று ஏற்பதில்லை.[20] மெசியா குறித்த இறைவாக்குகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதால் இயேசு மெசியா இல்லை என்று யூத மதத்தினர் வாதிடுகின்றனர்.
இயேசு என்னும் சொல் Iesus என்று அமைந்த இலத்தீன் வடிவத்திலிருந்தும், அதற்கு மூலமான Ἰησοῦς (Iēsoûs) என்னும் கிரேக்க வடிவத்திலிருந்தும் பிறக்கிறது. இந்த வடிவங்களுக்கு அடிப்படையாக இருப்பது எபிரேயப் பெயர். அது எபிரேய மொழியில் יְהוֹשֻׁעַ (Yĕhōšuă‘, Joshua) எனவும், எபிரேய-அரமேய மொழியில் יֵשׁוּעַ (Yēšûă‘) எனவும் அமைந்ததாகும். கடவுள் (யாவே) விடுதலை (மீட்பு) அளிக்கிறார் என்பதே இயேசு என்னும் சொல்லின் பொருள்.
கிறிஸ்து என்னும் சொல் திருப்பொழிவு பெற்றவர் (அபிடேகம் செய்யப்பட்டவர்) என்னும் பொருளுடையது. அதன் மூலம் Χριστός (Christós) என்னும் கிரேக்கச் சொல். அது எபிரேய மொழியில் மெசியா מָשִׁיחַ (Messiah) என்று வழங்கப்படும் சொல்லின் மொழிபெயர்ப்பாகும்.
எபிரேய வழக்கப்படி, அரசர் மற்றும் இறைவாக்கினர் மக்களை வழிநடத்துகின்ற தலைமைப் பணியை ஏற்கும்போது அவர்கள் தலையில் எண்ணெய் வார்த்து, அவர்களிடம் அப்பணிப்பொறுப்பு ஒப்படைக்கப்படும். இயேசு கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப, கடவுளின் வல்லமையால் மனித குலத்தை மீட்டு அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பைப் பெற்றார் என்னும் அடிப்படையில் கிறிஸ்து (மெசியா, திருப்பொழிவு பெற்றவர்) என அழைக்கப்படுகிறார். அவரை மெசியா என ஏற்று வணங்குவோர் அவர் பெயரால் கிறிஸ்தவர் (கிறித்தவர்) என அறியப்பெறுகின்றனர் (திருத்தூதர் பணிகள் 11:26).
இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு நற்செய்தி நூல்கள் ஆகும். இவை கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன. அதன்படி இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனிதர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூத இனத்தில் பிறந்தார் என்றும், மக்களுக்குக் கடவுள் பெயரால் போதனை வழங்கினார் என்றும், சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார் என்றும், அவரது இறப்பிற்குப் பிறகு அவர் மீண்டும் உயிர்பெற்றெழுந்தார் என்னும் நம்பிக்கையில் அவர்தம் சீடர்கள் அவரைக் கடவுளாக ஏற்று பின்பற்றினார்கள் என்றும் அறிய முடிகிறது.
இயேசுவின் வரலாறு பற்றிய செய்திகள் விவிலியத்திற்கு வெளியேயும் உள்ளன. அங்கே நற்செய்தி நூல்களில் வருகின்ற இயேசு, திருமுழுக்கு யோவான், யாக்கோபு, உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்து, பெரிய குரு அன்னா போன்றோரின் பெயர்கள் காணப்படுகின்றன. இயேசுவின் வரலாற்றோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன.
தற்போது வழக்கிலுள்ள கிரகோரியன் ஆண்டுக்கணிப்பு கி.மு., கி.பி. என்று, அதாவது, கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின் என்றுள்ளது. ஆண்டவரின் ஆண்டுக்கணிப்பு (Anno Domini) என்னும் பெயரில் இக்கணிப்பு முறையை உருவாக்கியவர் சிரியாவில் 5-6ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த தியோனிசியசு அடியார் (Dionysius Exiguus) என்னும் துறவி ஆவார். இவர் கணக்கிட்ட முறையில் ஒரு தவறு நிகழ்ந்ததால் இயேசுவின் பிறப்பு ஆண்டை ஒரு சில ஆண்டுகள் முன்தள்ளிப் போட்டுவிட்டார்.
இன்றும்கூட, கிறிஸ்து பிறந்த ஆண்டும் நாளும் யாதெனத் துல்லியமாக அறிய இயலவில்லை. இயேசுவின் வாழ்க்கையையும் அவர் வழங்கிய போதனைகளையும் விரிவாகத் தருகின்ற புதிய ஏற்பாட்டு நூல்களிலிருந்தும் இத்தகவலைத் துல்லியமாகப் பெற முடியவில்லை. ஆனால் அந்நூல்கள் மட்டுமே இயேசுவின் பிறப்புப் பற்றி தகவல்களைத் தருகின்றன. இந்நால்வரில் மத்தேயுவும்லூக்காவும் இயேசுவின் பிறப்புப் பற்றிய விவரங்களை அளிக்கின்றனர்.
மத்தேயு நற்செய்திப்படி, "ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்" (மத்தேயு 2:1). வரலாற்று அடிப்படையில், பெரிய ஏரோது என்று அழைக்கப்படும் அரசன் கி.மு. 4ஆம் ஆண்டில் இறந்தான். இயேசு பிறந்த செய்தியைக் கேட்டதும் ஏரோது தன் ஆட்சியைக் கவிழ்க்க ஒருவர் பிறந்துவிட்டார் என்று கலக்கமுற்று, "பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்" என்று மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது (காண்க: மத்தேயு 2:16). எனவே, மத்தேயு தருகின்ற மேலிரு தகவல்களையும் கவனத்தில் கொண்டால், ஏரோது இறப்பதற்கு முன்னால் இயேசுவுக்கு சுமார் 2 வயது ஆகியிருக்கும் என கணிக்கலாம். ஆக, இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம்.
லூக்கா நற்செய்திப்படி, "சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள்தொகை கணக்கிடப்பட்ட" காலகட்டத்தில் இயேசு பிறந்தார் (காண்க: லூக்கா 2:1-7). குரேனியு மக்கள்தொகை கணக்கிட்டது கி.மு. 6ஆம் ஆண்டு என்று வரலாற்று ஏடுகளிலிருந்து தெரிகின்றது. எனவே லூக்கா கணிப்புப்படியும் இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம்.
மத்தேயுவும் லூக்காவும் இயேசு ஏரோது அரசன் காலத்தில் பிறந்தார் என்று கூறுவதால் ஏரோது இறந்த ஆண்டாகிய கி.மு. 4ஆம் ஆண்டில், அல்லது அதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு பிறந்தார் என்பது பொருந்தும் என்பது வரலாற்றாசிரியர் கருத்து.
நான்கு நற்செய்திகளின் படி இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம்:
இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது (மத்தேயு, மாற்கு)
மரியா என்னும் கன்னிப் பெண்ணிடமிருந்து இயேசு பிறந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார். இயேசு யூத குலத்தில் பிறந்தார். "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" என்னும் செய்தி இடையர்களுக்கு வழங்கப்பட்டது (லூக்கா 2:11).
சிறுவயதிலேயே இயேசு ஞானம் மிகுந்தவராகக் காணப்பட்டார். அவர் தம் பெற்றோருக்குப் பணிந்திருந்தார் (லூக்கா 2:39-40).
முப்பது வயதில் இயேசு யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெற்றார். பின் பாலைநிலம் சென்று 40 நாள் நோன்பிருந்தார். இதன் போது அலகை (சாத்தான்) அவரை சோதித்தது. இயேசு அலகையின் சோதனைகளை முறியடித்து வெற்றிகொண்டார்.
பின்னர் இயேசு மக்களுக்குப் போதிக்க தொடங்கினார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு போதித்தார் (மாற்கு 1:14-15). இயேசு உவமைகள் மூலம் பேசினார். பல புதுமைகளையும் அரும்செயல்களையும் செய்தார்.
ஓய்வுநாள், தூய்மைச் சடங்குகள் ஆகிய யூத சமயப் பழக்கங்களையும், யூதமதத் தலைவர்களையும் இயேசு கடுமையாக விமர்சித்தார். தாம் கடவுள் பெயரால் பேசுவதாகவும், கடவுளே தம் தந்தை என்றும், அவரிடமிருந்தே தாம் வந்ததாகவும் இயேசு கூறினார். இயேசுவின் போதனையை ஏற்க மறுத்த யூத சமயத் தலைவர்கள் அவரைக் கொலை செய்ய வகை தேடினர். பல சூழ்ச்சிகளைச் செய்து தோல்விகண்டனர். மக்கள் இயேசுவோடு இருந்தபடியால் அவரைக் கைது செய்யப் பயந்தனர்.
இயேசுவின் 12 திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) ஒருவரான யூதாசு இஸ்காரியோத்து யூத மதத் தலைவர்களின் சூழ்ச்சிப் பிடியில் சிக்கி இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்குக் காட்டிக் கொடுக்க முன்வருகின்றார்.
இயேசு கடைசி இரவு உணவைத் தம் திருத்தூதர்கள் பன்னிருவரோடு (யூதாசு உட்பட) உண்கிறார். தம் சீடரின் காலடிகளைக் கழுவுகின்றார். "ஆண்டவரும் போதருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்" என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் (யோவான் 13:14).
பின்னிரவில் ஒலிவ மலை என்று அழைக்கப்படும் கெத்சமனித் தோட்டத்தில் இறைவேண்டல் செய்து கொண்டிருக்கும் போது யூதாசு யூத மதத் தலைவர்களுடனும் கோவில் காவல் தலைவர்களுடனும் வந்து இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறார்.
யூதர் அப்போது உரோமைப் பேரரசின் பெயரால் ஆளுநராகவிருந்த பொந்தியு பிலாத்து முன்னால் இயேசுவைக் கொண்டு சென்றார்கள். பிலாத்து, இயேசு குற்றமற்றவர் எனக் கண்டு அவரை விடுவிக்க முயன்றாலும், யூதருக்கும் அரசுக்கும் பயந்து இயேசுவைச் சிலுவையில் அறையக் கட்டளையிடுகிறார்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டார். மூன்று மணி நேரம் சிலுவையில் தொங்கி வேதனைப்பட்ட இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" (யோவான் 19:30) என்று கூறித் தலைசாய்த்து உயிர்விட்டார்.
கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மூன்று நாள்கள் கழித்து சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார். சீடர்களுக்குப் பன்முறை தோன்றினார்.
இறுதியில், சீடர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்தேயு 28:18-20) என்று கூறி, விண்ணேறிச் சென்றார்.
இயேசுவின் வரலாற்றையும் போதனையையும் எடுத்துக் கூறுகின்ற நற்செய்தி நூல்கள் எதற்காக எழுதப்பட்டன என்பதை யோவான் நற்செய்தியாளர் தம் நூலின் இறுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன" (யோவான் 20:31).
போதனை வழங்கும் ஆண்டவராக இயேசுவைக் காட்டும் உருவப்படம். கலை: பதிப்புக்கல் பாணி. காலம்: 6ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ஏத்தென்சு.
இயேசுவின் தாயாரான மரியாவின் கணவர் யோசேப்பு என்பவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார் (காண்க: மத்தேயு 1:1-16; லூக்கா 3:23-38). மத்தேயுவும் லூக்காவும் தருகின்ற பட்டியல்படி, இயேசு ஆபிரகாம் மற்றும் தாவீது அரசன் வழி வருபராவார். இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு பற்றி இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கு பின்னர் குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. இயேசு பகிரங்க வாழ்க்கையை, அதாவது போதிக்கும் பணியை ஆரம்பிக்கும் முன்னரே யோசேப்பு இறந்திருக்க கூடும் என ஊகிக்கப்படுகிறது. இது இயேசு சிலுவையில் தொங்கும் போது தம் தாயைக் கவனித்துக்கொள்ளுமாறு அவர்தம் அன்புச்சீடருக்குப் பணித்ததிலிருந்து தெளிவாகிறது (யோவான் 19:25-27).
விவிலியத்தில், யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா என்பவர்கள் இயேசுவின் சகோதரர் என குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் (காண்க: மத்தேயு 13:55-56; மாற்கு 6:3), அவர்கள் யோசேப்புக்கும் மரியாவுக்கும் பிறந்தவர்களா அல்லது சகோதரர்கள் முறை கொண்டவர்களா என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும் முதலாம் நூற்றாண்டின் யூத வரலாற்று ஆசிரியரான யோசேஃபசு என்பவரும் யாக்கோபை இயேசுவின் சகோதரர் என குறிப்பிடுகிறார். அவருடைய கூற்று நற்செய்தி நூல்கள் தரும் செய்தியோடு ஒத்திருக்கின்றன.
புனித பவுலும் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் "ஆண்டவரின் சகோதரரான யாக்கோபு" (கலாத்தியர் 1:19)என குறிப்பிடுகிறார். மேற்கூறிய இடங்களில் எல்லாம் adelphos என்னும் கிரேக்க மூலச் சொல்லே சகோதரர்என்று பெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு தாய் வழிவராச் சகோதரரையும் குறிக்கலாம்; பெற்றோரின் சகோதரர்களுக்குப் பிறந்தோரையும் குறிக்கலாம். மேலும், அக்காலத்தில் ஒரே நம்பிக்கைக்குள் ஒன்றுபட்டு இருந்தவர்களையும் "சகோதரர்கள்" என்று அழைப்பது வழமையாயிருந்தது. இன்னொரு கருத்துப்படி, மரியாவின் கணவரான யோசேப்பு ஏற்கனவே மணமாகி, தம் மனைவி இறந்தபின்னர் மரியாவை மணந்துகொண்டார் எனவும், முந்திய மணத்திலிருந்து அவருக்குப் பிறந்த குழந்தைகளே இயேசுவின் சகோதரர் என்று குறிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
ஆகவே நற்செய்தி நூல்களில் இயேசுவின் சகோதரர் என்று குறிப்பிடப்படுவோர் மரியாவுக்கு பிறந்தவர்கள் இல்லை; மரியா கணவனின் துணையின்றி இயேசுவைக் கருத்தரித்தார் என்றும், எப்போதும் கன்னியாகவே வாழ்ந்தார் என்றும் கத்தோலிக்கர் உட்பட பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் ஏற்று நம்புகின்றன; இதுவே அச்சபைகளின் போதனையும் ஆகும்.
புதிய ஏற்பாட்டில் யோவானின் தாயாகிய எலிசபெத்து மரியாவின் உறவினர் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கிடையே நிலவிய உறவு முறை யாதென்று குறிப்பிடப்படவில்லை.
மத்தேயுலூக்கா நற்செய்திகளில் கூறியுள்ளபடி இயேசு யூதேயாவிலுள்ள பெத்லகேமில் கன்னிமரியாவிடமிருந்து கடவுளின் வல்லமையாகிய தூய ஆவியினால் பிறந்தார். லூக்கா நற்செய்தியின்படி கபிரியேல் வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" (லூக்கா 1:28) என்று வாழ்த்துக் கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அச்சமுற்றுக் கலங்கிய மரியாவைப் பார்த்து, கபிரியேல் வானதூதர், "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" லூக்கா 1:26-31) என்றுரைத்தார். இந்நிகழ்வு கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு அல்லது மங்கள வார்த்தையுரைப்பு (Annunciation) என நினைவு கூரப்பட்டு மார்ச்சு மாதம் 25ஆம் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் இயேசு மரியாவின் வயிற்றில் கருவானார் என்று கணக்கிட்டு ஒன்பது மாதங்கள் கழிந்து, டிசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கிறித்தவர் கொண்டாடுகின்றனர்.
இயேசு பிறந்த நிகழ்ச்சியை விவரிக்கும் நற்செய்தி நூல்கள் யோசேப்பும் மரியாவும் அப்போது யூதேயாவை ஆண்ட அகுஸ்து சீசர் என்னும் அரசன் இட்ட கட்டளைக்கு ஏற்ப, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தங்களைப் பதிவு செய்யச் சென்றார்கள் என்று கூறுகின்றன (காண்க: லூக்கா 2:1-5). யோசேப்பு தமக்கு மண ஒப்பந்தமான மரியாவைக் கூட்டிக்கொண்டு நாசரேத்திலிருந்து தம் சொந்த ஊரான பெத்லகேமுக்குப் பெயர் பதிவுசெய்யச் சென்றார். அப்போது மரியாவுக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவரும் தம் குழந்தையாகிய இயேசுவை ஒரு மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்து, குழந்தையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார் (காண்க: லூக்கா 2:1-7).
இயேசுவின் பிறப்பு முதலாவதாக இடையர்களுக்கு வானதூதரால் அறிவிக்கப்பட்டு அவர்கள் வந்து இயேசுவைப் பணிந்தார்கள். மேலும், மத்தேயு நற்செய்திப்படி, இயேசுவின் பிறப்பின் போது ஒரு அதிசய விண்மீன் தோன்றியது. இதனைப் பார்த்த ஞானிகள் யூதரின் அரசன் பிறந்துள்ளார் என்று அறிந்து பெத்லகேம் வந்து இயேசுவைக் கண்டு பணிந்தார்கள். பொன், தூபம், வெள்ளைப்போளம் ஆகிய பரிசுப் பொருள்களையும் அவர்கள் இயேசுவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தனர். மேலும் அப்போது யூதாவை ஆண்டுவந்த ஏரோது மன்னன் யூதரின் அரசன் பிறந்துள்ளார் என அறிந்து அப்பிரதேசத்திலிருந்த இரண்டுவயதுக்குக் குறைவான சகல ஆண்குழந்தைகளையும் கொலை செய்வித்தான். எனினும் முன்னரே தேவதூதரால் எச்சரிக்கப்பட்ட யோசேப்பு மரியாவையும் இயேசுவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பிச் சென்றார். ஏரோது இறந்த பின்னர் யோசேப்பு, மரியா, இயேசு ஆகியோரை உள்ளடக்கிய "திருக்குடும்பம்" யூதா நாட்டுக்குத் திரும்பி நாசரேத்து என்னும் ஊரில் குடியேறியது (காண்க: மத்தேயு 2:1-23).
இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கும் இளமைப் பருவத்துக்குமிடையே இயேசு 12 வயதில் எருசலேம் கோவிலுக்குச் சென்ற நிகழ்வுமட்டுமே விவிலியத்தில் (லூக்கா நற்செய்தியில்) குறிப்பிடப்பட்டுள்ளது (காண்க: லூக்கா 2:41-52). இடைப்பட்ட காலத்தில் இயேசு என்ன செய்தார் என்பது விவிலியத்தில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படாத சில நற்செய்திகளில் கற்பனைக் கதைபோல் மட்டுமே கூறப்பட்டுள்ளது (காண்க: இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு)
இயேசு அலகையால் சோதிக்கப்படுதல். ஓவியர்: ஏரி ஷெஃப்பர். ஆண்டு: 1854).
இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றார் என்னும் செய்தி மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களிலும் உள்ளது. யோவான் நற்செய்தி இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடவில்லை.
மாற்கு நற்செய்தியின்படி, இயேசு யோர்தான் ஆற்றருகே வந்து, அங்கே திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த யோவானிடம் தாமும் திருமுழுக்குப் பெற்றார். ஆற்றிலிருந்து இயேசு கரையேறியபோது தூய ஆவி அவர்மீது புறா வடிவில் வந்திறங்கினார். மேலும் "என் அன்பார்ந்த மகன் நீயே. உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (மாற்கு 1:10–11) என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
லூக்கா நற்செய்தியில் யோவான் போதிக்க தொடங்கியது திபேரியு (Tiberius) சீசரின் 15வது ஆண்டு என்னும் குறிப்பு உள்ளது (காண்க: லூக்கா 3:1). இது கி.பி. 28/29ஆம் ஆண்டு ஆகும். இயேசு பிறந்தது கி.மு. சுமார் 4ஆம் ஆண்டு என்று கொண்டால், அவர் திருமுழுக்குப் பெற்றபோது சுமார் 32 வயதினராக இருந்திருப்பார்.
இயேசு திருமுழுக்குப் பெற வந்ததைக் கண்ட யோவான் இயேசுவைத் தடுத்து, "நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?" என்று கூறியதாக மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது. ஆனால் இயேசு அவரைப் பார்த்து, "இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை" (மத்தேயு 3:13-15) என்று பதிலளித்தார்; பின்னர் யோவானின் கைகளால் திருமுழுக்குப் பெற்றார்.
திருமுழுக்குப் பெற்ற பின்னர் இயேசு பாலைநிலத்துக்குச் சென்று 40 நாள்கள் நோன்பிருந்தார். அப்போது அலகை அவரை மூன்று முறை சோதித்தது. மூன்று முறையும் இயேசு வென்றார். பின்னர் இயேசு பாலைநிலத்தை விட்டகன்று, மக்களுக்கு "இறையரசு" பற்றிய நற்செய்தியை அறிவிக்கலானார். தம்மோடு இருக்கவும் மக்களுக்கு இறையரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்கவும் இயேசு தமக்கென சீடர்களைத் தெரிந்துகொண்டார் (காண்க: மத்தேயு 4:12-22; மாற்கு 1:14-20; லூக்கா 4:14-5:11).
இயேசு புரிந்த பொதுப் பணி அவர் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து தொடங்கியது எனலாம். திருமுழுக்கின்போது இயேசு தாம் ஆற்ற வேண்டிய பணியொன்று உளது என உணர்ந்தார். அப்பணியைக் கடவுளே தம்மிடம் ஒப்படைத்ததையும் அறிந்தார். இயேசு உண்மையிலேயே கடவுளின் மகன் என்னும் உண்மையும் அவர் பெற்ற திருமுழுக்கின்போது வெளிப்படுத்தப்பட்டது.
ஆக, கடவுள் தம்மை ஒரு சிறப்புப் பணி ஆற்றிட அனுப்பியுள்ளார் என்பதை உளமார உணர்ந்த இயேசு "கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கின்றது" என்னும் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கினார். கடவுளின் ஆட்சியில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்றால் அவர்கள் தம் பழைய வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, புதியதொரு வாழ்க்கை முறையைத் தழுவ வேண்டும் என்று இயேசு போதிக்கலானார்.
இயேசு தம் பொதுப் பணியை நாசரேத்து தொழுகைக் கூடத்தில் தொடங்கினார் என்று லூக்கா நற்செய்தி கூறுகிறது (காண்க: லூக்கா 4:16-21). நாசரேத்து ஊரில் யூதர்களுக்கு ஒரு தொழுகைக் கூடம் இருந்தது. அங்கு இயேசு சென்று, பண்டைக்கால இறைவாக்கினருள் ஒருவராகிய எசாயா இறைவாக்கினரின் ஏட்டுச் சுருளிலிருந்து ஒரு பகுதியை மக்கள் முன்னிலையில் வாசித்து அறிக்கையிட்டார்.
எசாயா இறைவாக்கினரின் நூலிலிருந்து இயேசு வாசித்த பகுதி இதோ:
"ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை அறிவிக்கவும்...என்னை அனுப்பியுள்ளார்." (எசாயா 61:1-3)
எசாயா நூலில் வருகின்ற "ஒடுக்கப்பட்டோர்", "உள்ளம் உடைந்தோர்", "சிறைப்பட்டோர்", "கட்டுண்டோர்" ஆகிய அனைவருமே "ஏழைகள்." அவர்களுக்கும், எல்லாவித அடக்குமுறைகளால் துன்புறும் அனைவருக்கும் விடுதலையும் விடியலும் வழங்குபவர் இறைவன். அதுவே கடவுளடமிருந்து வருகின்ற "நற்செய்தி" (நல்ல + செய்தி). இப்பின்னணியில் இயேசுவின் போதனைப் பணி புரிந்துகொள்ளப்பட வேண்டும். மக்களுக்கு வி்டுதலை வழங்க இயேசு கையாண்ட ஒரு வழியே அவரது போதனைப் பணி.
"செய்தி" என்னும் சொல்லுக்கு "நடந்த நிகழ்ச்சி" என்பது பொதுவாகத் தரப்படும் பொருள். ஆகவே கடந்த காலம் பற்றிய குறிப்பு அதிலே உண்டு. அதே நேரத்தில், அண்மையில் நடந்த நிகழ்ச்சி, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சி "செய்தியாக" கொள்ளப்படுகிறது. இயேசு வழங்கிய போதனை நம்பிக்கை, உற்சாகம், ஊக்கம், எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொணர்ந்த செய்தியாக அமைந்ததால் அது உண்மையிலேயே "நற்செய்தி" ஆயிற்று.
நற்செய்தி நூல்கள்படி, இயேசு மக்களுக்கு அறிவித்த மையச் செய்தி இறையாட்சி அல்லது விண்ணரசு என்பதாகும். நற்செய்தி நூல்களில் எந்த ஓர் இடத்திலும் இயேசு இறையாட்சி என்றால் இதுதான் என்று வரையறுத்துக் கூறவில்லை. ஆனால், இறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது என்பதை அவர் பல சிறு கதைகள் அல்லது உவமைகள் வழியாக எடுத்துக் கூறினார். இறையாட்சியில் பங்கேற்க விரும்புவோர் எவ்வழியில் நடக்க வேண்டும் என்பதைக் கற்பித்தார். கண்பார்வை இழந்தோருக்குப் பார்வை அளித்தும், முடக்குவாதமுற்றவருக்கு நடக்கும் திறமளித்தும், தொழுநோயாளருக்கும் தீய ஆவியால் அவதியுற்றோருக்கும் நலமளித்தும் இயேசு பல புதுமைகள் மற்றும் அரும்செயல்களைப் புரிந்தார். இவ்வாறு மக்களுக்கு நலமளித்த இயேசு அவர்களின் பசியைப் போக்க அற்புதமான விதத்தில் உணவளித்தார் என்னும் செய்தி நான்கு நற்செய்தி நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது (காண்க: மத்தேயு 14:13-21; மாற்கு 6:30-44; லூக்கா 9:10-17; யோவான் 6:1-14).
இயேசு இறந்தோருக்கு மீண்டும் உயிரளித்த நிகழ்ச்சிகளும் நற்செய்தி நூல்களில் உள்ளன (காண்க: மத்தேயு 9:18-26; மாற்கு 5:21-43; லூக்கா 8:40-56; யோவான் 11:1-44). இயேசு தாமே ஒருநாள் சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுவார் என்பதற்கு இந்நிகழ்ச்சிகள் முன்னோடிபோல் அமைந்தன.
இறையாட்சி என்பது கடவுளின் ஆளுகை இவ்வுலகில் வருவதைக் குறிக்கும். பழைய ஏற்பாட்டில் இசுரயேல் மக்கள் நடுவே கடவுளை அரசராகக் காணும் வழக்கம் நிலவியது. தாவீது, சாலமோன் போன்ற அரசர்கள் இசுரயேல் மக்கள்மீது ஆட்சி செலுத்திய காலத்தில் கூட, அம்மக்கள் கடவுளைத் தங்கள் அரசராக ஏற்று வழிபட்டனர். இயேசு கடவுளின் ஆட்சி இவ்வுலக மக்கள் அனைவரும் கடவுளின் விருப்பத்துக்கு ஏற்ப நடப்பதில் அடங்கியிருக்கிறது என்று விளக்கம் தந்தார். கடவுள் எந்த மதிப்பீடுகளை உயர்ந்தனவாகக் கருதுகிறாரோ அம்மதிப்பீடுகளை மனிதர் தம் வாழ்வில் கடைப்பிடிக்கும்போது அங்கே கடவுளின் ஆட்சி நிலவுகிறது எனலாம். இந்த ஆட்சி இயேசுவின் வழியாக இவ்வுலகில் செயல்படலாயிற்று என்று நற்செய்தி நூல்கள் விளக்குகின்றன. இயேசு அறிவித்த இறையாட்சி என்னும் கருத்து வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அக்கருத்து கிறித்தவ சமய வரலாற்றிலும் பிற சமய மரபுகளிலும் அறிஞர் சிந்தனையிலும் வெவ்வேறு அழுத்தங்களை ஏற்றது.
இறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது, அதன் பண்புகள் என்ன என்பதையெல்லாம் இயேசு தம் போதனை வழியாகவும் செயல் வழியாகவும் காட்டினார். நல்ல சமாரியர் என்னும் கதை வழியாக உண்மையான அன்பு எதில் அடங்கியிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினார் (காண்க: லூக்கா 10:25-37). கள்வர் கையில் அகப்பட்டு, குற்றுயிராய்க் கிடந்த மனிதருக்கு இரக்கம் காட்டி, அவர் நலம் பெறுவதற்கு அனைத்தையும் செய்துகொடுத்தார் அந்த சமாரியர். யூதர் பார்வையில் சமாரியர் என்றால் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்; மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். ஆனால் அந்த தாழ்ந்த மனிதரே கடவுளின் பார்வையில் உயர்ந்தவரானார். அவர் உண்மையிலேயே இறையாட்சியின் மதிப்பீட்டைத் தம் வாழ்வில் செயல்படுத்திக் காட்டினார். அதற்கு நேர்மாறாக, யூத சமயத் தலைவர்கள் அன்பும் இரக்கமும் காட்ட முன்வரவில்லை; தங்கள் சமயச் சடங்குகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்தார்கள். இத்தகைய போக்கை இயேசு பல இடங்களில் கண்டித்துரைத்தார் (காண்க: மத்தேயு 23:1-36; மாற்கு 12:38-40; லூக் 11:37-52).
இயேசுவின் பொதுப்பணிக் காலத்தில் அவர் மூன்று முறை எருசலேம் நகருக்குச் சென்று பாஸ்கா விழாவில் பங்கேற்றதாக யோவான் நற்செய்தி குறிப்பிடுகிறது. இதிலிருந்து இயேசுவின் பணி வாழ்வு மூன்று ஆண்டுகள் நீடித்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகள் இயேசு தம் பணிக்காலத்தில் ஒருமுறை மட்டுமே எருசலேமுக்குச் சென்றதாகக் காட்டுகின்றன. இந்த முரண்பாடான செய்திகளை எவ்வாறு இணைப்பது என்று அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை.
இயேசு பொதுமக்களுக்கு போதித்தார் எனினும் தம்மோடு நெருங்கிய உறவுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் திருத்தூதர்களுக்கும் தம் போதனையின் உள்கிடக்கையை விளக்கிக் கூறினார் (காண்க: விதைப்பவர் உவமை - மத்தேயு 13:1-9; அந்த உவமைக்கு இயேசு விளக்கம் தருதல் - மத்தேயு 13:18-24) இயேசு கூடுதலாகப் போதனை செய்த இடங்கள் கலிலேயா (இன்றைய வட இசுரேல்) மற்றும் பெரேயா (இன்றைய மேற்கு யோர்தான்) என்பனவாகும்.
இயேசு வழங்கிய முக்கியமான போதனைகளில் ஒன்று மலைப்பொழிவு ஆகும். எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கிய போதனை மலைப்பொழிவில் உள்ளது. இயேசுவின் இப்போதனை தம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார்.[21]
இயேசு வழங்கிய மலைப்பொழிவு மத்தேயு நற்செய்தியில் உள்ளது (காண்க: மத்தேயு - அதிகாரங்கள் 5 முதல் 7 முடிய). இப்பொழிவைப் பெரிதும் ஒத்த இன்னொரு பொழிவு சமவெளிப் பொழிவு என்று அழைக்கப்படுகிறது. அது லூக்கா நற்செய்தியில் உள்ளது (காண்க: லூக்கா 6:20-49).
இயேசு வழங்கிய மலைப்பொழிவின் தொடக்கப்பகுதி கீழே தரப்படுகிறது:
மத்தேயு 5:1-12
"1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். 2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: 3 ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. 4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். 5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். 6 நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர். 7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். 8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். 9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். 10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. 11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! 12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்."
இயேசு பல உவமைகள் வழியாக இறையாட்சி பற்றிய உண்மைகளை மக்களுக்கு அறிவித்தார்; இறையாட்சியில் பங்குபெற மக்கள் முன்வருமாறு அழைப்பு விடுத்தார்; இறையாட்சியின் பண்புகளை விளக்கினார். குறிப்பாக, எல்லா மக்களும் கடவுள்மீது நம்பிக்கைகொண்டு, கடவுளையும் மனிதரையும் அன்புசெய்து வாழ்ந்திட வேண்டும் என்று இயேசு போதித்தார். பகைவரையும் மன்னிக்க வேண்டும் என்பது அவர் வழங்கிய முக்கிய போதனைகளில் ஒன்று. தம்மைத் துன்புறுத்தி, சிலுவையில் அறைந்த பகைவரை அவரே மனதார மன்னித்தார்.
"பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" (மத்தேயு 7:12).
"மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்" (மத்தேயு 12:33).
"உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" (மத்தேயு 22:39).
"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்கா 23:34).
இயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்கள் தங்கள் பாவ வழிகளிலிருந்து விலகி மன மாற்றமடைந்து இறையாட்சியை நம்பி ஏற்க வேண்டும் என்று விடுத்த அழைப்பைப் பொதுமக்கள் விருப்போடு ஏற்றனர். ஆனால் யூத சமயத் தலைவர்கள் பலர் இயேசு வழங்கிய செய்தியை ஏற்க முன்வரவில்லை. அச்சமயத் தலைவர்கள் பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர், தீவிரவாதிகள்என்னும் பல பிரிவுகளைச் சார்ந்தவர்கள்.
இயேசு பரிசேயரின் வெளிவேடத்தைக் கடிந்துகொண்டார். மறைநூல் அறிஞரையும் கண்டித்தார் (காண்க: லூக்கா 11:37-53). ஆயினும் எல்லாப் பரிசேயர்களோடும் மறைநூல் அறிஞர்களோடும் இயேசு மோதினார் என்பது சரியல்ல. இயேசு பல முறை பரிசேயரின் வீட்டில் விருந்து அருந்தச் சென்றார் (காண்க: லூக்கா 7:36; 11:37-38; 14:1). நிக்கதேம் என்னும் பரிசேயர் இயேசுவை அணுகிச் சென்று அவரது போதனையைக் கேட்டார் (காண்க: யோவான் 3:10-21); இயேசுவுக்கு ஆதரவாகப் பேசினார் (காண்க: யோவான் 7:45-51); இறந்த இயேசுவின் உடலை நல்லடக்கம் செய்ய முன்வந்தார் (காண்க: யோவான் 19:39-42).
இறந்தோர் மீண்டும் உயிர்பெற்றெழுவர் என்னும் கொள்கையைப் பரிசேயரும் ஏற்றனர். ஆனால் சதுசேயர் அக்கொள்கையை ஏற்கவில்லை (காண்க: மத்தேயு 22:23-32).
அக்கால யூத சமுதாயத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு நிலவியது. சமயச் சடங்குகளில் யார் பங்கேற்கலாம், யாரோடு உணவு அருந்தலாம், யாருடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து தீட்டு பற்றிய சட்டங்கள் பல இருந்தன. அச்சட்டங்களை இயேசு வேண்டுமென்றே மீறினார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் பல இடங்களில் வருகிறது. அவரைப் பொறுத்தமட்டில் மக்களிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு கிடையாது. எல்லா மனிதரும் ஒரே கடவுளின் பிள்ளைகளே. எனவேதான் அன்றைய சமுதாயம் பாவிகள் என்றும் ஒதுக்கப்பட்டவர் என்றும் தீட்டுப்பட்டவர் என்றும் கருதிய மக்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டார். அன்றைய தூய்மைச் சட்டங்களை மீறினார். இதைக் கண்ட இயேசுவின் எதிரிகள் அவர் "வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" (மத்தேயு 11:19) என்று இழித்துரைத்தார்கள்.
ஏழைகளோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் இயேசு நெருங்கிப் பழகியது அம்மக்களது வாழ்க்கையில் அதிசயமான மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. ஆனால் இயேசுவின் எதிரிகள் அவரிடம் குற்றம் கண்டனர். தாழ்ந்த தொழிலாகக் கருதப்பட்ட வரிதண்டும் தொழிலைச் செய்தவர் மத்தேயு. அவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்ட இயேசு அவரைப் பார்த்து, "என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு மத்தேயு வீட்டில் இயேசு விருந்து அருந்தினார். பரிசேயர்கள் இதைக் கண்டனர். உடனே அவர்கள் இயேசுவின் சீடரிடம், "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" (மத்தேயு 9:11) என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு இயேசு அளித்த பதில் அவர் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இயேசு கூறியது: "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார் (மத்தேயு 9:12-13).
நற்செய்தி நூல்கள்படி, இயேசு தம் பணிக்கால இறுதியில், எருசலேம் நகரைச் சென்றடைந்தார். வெற்றி ஆர்ப்பரிப்போடு மக்கள் அவரை வரவேற்க அவர் நகருக்குள் நுழைந்தார் (காண்க: மத்தேயு 21:1-11; யோவான் 12:12-19). அங்கு கோவில் வளாகத்தில் ஆடுமாடுகள், புறாக்கள் போன்ற பலிப்பொருள்களை விற்பதும் வாங்குவதுமாகச் சந்தடி நிலவியதைக் கண்டார். ஒருசிலர் நாணயம் மாற்றுவதில் மும்முரமாய் இருந்தார்கள். அவர்களைக் கண்டித்து இயேசு அனைவரையும் கோவிலிலிருந்து வெளியேற்றினார் (காண்க: மத்தேயு 21:12-17).
ஆனால், யூத சமயத் தலைவர்கள் இயேசுவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவுசெய்திருந்தனர். இதிலிருந்து இயேசுவின் பாடுகள் (துன்பங்கள்) தொடங்குகின்றன.
நற்செய்தி நூல்கள் நான்கும் இயேசுவின் துன்பங்கள் பற்றி விரிவாக விளக்குகின்றன (காண்க: மத்தேயு 26-27; மாற்கு 14-15; லூக்கா 22-23; யோவான் 12-13).
நான்கு நற்செய்தி நூல்களிலும் இயேசுவின் துன்பங்கள் பற்றிய வரலாறு மிகவும் ஒத்திருக்கின்றது. எனினும், சில வேறுபாடுகளும் உள்ளன. இயேசு துன்பம் அனுபவித்ததைக் கீழ்வரும் கட்டங்களாக விளக்கலாம்:
1) யூதர்களின் பாஸ்கா விழா வருவதற்கும் சில நாள்களுக்கு முன் ஒரு பெண் நறுமணத் தைலத்தால் இயேசுவின் தலையில் பூசுகிறார்.
2) எருசலேமில் இயேசு தம் சீடர்களோடு பந்தியமர்ந்து இறுதி இரா உணவை அருந்துகிறார். அப்போது தம் சீடர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்; தம்மைச் சீடர்களில் ஒருவர் காட்டிக்கொடுப்பார் என்று முன் கூறுகிறார்; தம் உடலையும் இரத்தத்தையும் உலக மக்களின் மீட்புக்காகக் கையளிப்பதாகக் கூறுகிறார். அப்பத்தையும் இரசத்தையும் எடுத்து, சீடர்களுக்குக் கொடுத்து அது தம் உடலும் இரத்தமும் ஆகும் எனவும் தாம் செய்ததைச் சீடரும் தம் நினைவாகச் செய்யவேண்டும் என்கிறார். சீடர்களின் காலடிகளைக் கழுவி, தம் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றி ஒருவர் மற்றவருக்குப் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
3) உணவு அருந்திய பின் கெத்சமனித் தோட்டத்திற்குச் செல்லும் வழியில், தம் சீடர்கள் தம்மைக் கைவிடுவார்கள் என இயேசு கூறுகிறார். பேதுரு, "எல்லாரும் உம்மை விட்டு ஓடிப்போய்விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன்" (மத்தேயு 26:33) என்று துணிச்சலோடு கூறுகிறார். மனித இதயங்களை அறிந்த இயேசு அதற்குப் பதில்மொழியாக, "இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" (மத்தேயு 26:34) என்றுரைக்கிறார்.
4)இரவு: கெத்சமனித் தோட்டத்தில் இயேசு "துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்" (மத்தேயு 26:37). தம் தந்தையாம் கடவுளை நோக்கி வேண்டல் செய்கிறார்: "என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்" (மத்தேயு 26:39). இதற்கிடையே, இயேசுவே தேர்ந்தெடுத்திருந்த பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராகிய யூதாசு இஸ்காரியோத்து வாளும் தடியும் தாங்கிய பெருங்கூட்டத்தோடு அங்கே வருகிறார்."ரபி வாழ்க" என்று கூறி இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்கிறார் (காண்க: மத்தேயு 26:49; லூக்கா 22:52; யோவான் 18:3). இயேசுவைக் கைது செய்கிறார்கள். சீடர்களோ தங்கள் உயிருக்கு அஞ்சி, தம் குருவைக் கைவிட்டுவிட்டு ஓடிப்போகிறார்கள்.
5) இரவு: இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்செல்கிறார்கள். அங்கே, யூத தலைமைச் சங்க உறுப்பினராகிய மறைநூல் அறிஞரும் மூப்பர்களும் கூடி வந்து இயேசுவுக்கு மரண தண்டனை விதிப்பதற்காக அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடுகின்றனர். மன்ற விசாரணை நடக்கும்போது காவலர் ஒருவர் இயேசுவைக் கன்னத்தில் அறைகிறார் (காண்க: யோவான் 18:22). இயேசுவுக்கு மரண தண்டனை விதித்து மன்றம் தீர்ப்பளிக்கிறது. மத்தேயு நற்செய்திப்படி, "பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, 'இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார் என்று சொல்' என்று கேட்டனர்" (மத்தேயு 26:67-68). பின்னர் "இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்"(மத்தேயு 27:2). இந்த பொந்தியு பிலாத்து (Pontius Pilate) யூதேயா நாட்டில் உரோமை ஆட்சியாளர்களின் பதிலாளாக இருந்து கொடிய விதத்தில் செயல்பட்டதாக வரலாறு.
6) அதே இரவு: தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து, இயேசுவுக்கு என்ன நேரிடும் என்பதை அறிய பேதுரு உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருக்கிறார். அப்போது காவலர்கள் பேதுருவை அடையாளம் கண்டுகொண்டு, "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே" என்று கேட்கின்றனர். அதற்கு பேதுரு, "இம்மனிதனை எனக்குத் தெரியாது" என்று மும்முறை அடித்துக் கூறி மறுதலித்துவிட்டார் (காண்க: மத்தேயு 26:69-75). உடனே சேவல் கூவிற்று. "அப்பொழுது, 'சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்' என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்" (மத்தேயு 26:75).
7) மறுநாள் காலை: உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்துவின் மாளிகை. பிலாத்து இயேசுவை விசாரித்துவிட்டு, "இவனிடத்தில் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" லூக்கா 23:4) என்று கூறுகிறான். ஆனால் யூத சமயத் தலைவர்களும் கும்பலும் சேர்ந்துகொண்டு "அவனைச் சிலுவையில் அறையும்" என்று உரக்கக் கத்துகிறார்கள் (காண்க: மாற்கு 15:14). கலகக்காரர்களோடு பிடிபட்ட குற்றவாளியாகிய பரபா என்பவனையோ இயேசுவையோ விடுதலை செய்ய பிலாத்து முன்வருகிறான். ஆனால் கும்பல் பரபாவை விடுவித்து இயேசுவைச் சிலுவையில் அறையும்படி கேட்கிறது. மத்தேயு நற்செய்திப்படி, இயேசுவுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் இருந்து இயேசுவைக் கட்டிக்கொடுக்க கூலியாகப் பெற்றிருந்த முப்பது வெள்ளிக்காசுகளையும் திருப்பிக்கொடுக்க முயல்கின்றான்; அவர்களோ அதை வாங்க மறுக்கிறார்கள். காசுகளைக் கோவிலில் எறிந்துவிட்டு "புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக்கொண்டான்"(மத்தேயு 27:3-8).
8) யோவான் நற்செய்திப்படி, பிலாத்து இயேசுவோடு உரையாடலில் ஈடுபட்டு, "நீ அரசனா?" என்று கேட்டான். "அதற்கு இயேசு, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்' என்றார். பிலாத்து அவரிடம், 'உண்மையா? அது என்ன?' என்று கேட்டான்"(யோவான் 18:37-38). பிலாத்தின் ஆணைப்படி இயேசு சாட்டையால் அடிக்கப்பட்டார். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி இயேசுவின் தலையில் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் தான் குற்றம் ஏதும் காணவில்லை என்று பிலாத்து கூறி, இயேசுவை அவர்களுக்குக் காட்டி, "இதோ! மனிதன்" (யோவான் 19:5) என்றான். மத்தேயு நற்செய்திப்படி, பிலாத்து, இயேசுவின் இரத்தப்பழியில் தனக்குப் பங்கில்லை என்று கூறி "தன் கைகளைக் கழுவினான்" (மத்தேயு 27:24).
9) யோவான் நற்செய்தியைத் தவிர மற்ற மூன்று நற்செய்திகளும் (ஒத்தமை நற்செய்திகள்), இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயிபாவிடம் விசாரணைக்குக் கொண்டுசென்றதாகக் கூறுகின்றன. யோவான் நற்செய்தியின்படி, இயேசுவைக் கயிபாவின் மாமனார் அன்னாவும் விசாரித்தார். "இந்தக் கயபாதான், 'மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது' என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்"(யோவான் 18:14).
10) சாவுக்குத் தீர்ப்பிடப்பட்ட இயேசுவின் தோள்மேல் சிலுவையைச் சுமத்தினர். மரண தண்டனை விதிக்கப்பட்ட பிற குற்றவாளிகளைப் போல "இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்" (யோவான் 19:17). இயேசு சிலுவையைச் சுமக்க சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் கட்டாயப்படுத்தப்பட்டார் (காண்க: லூக்கா 23:26). இயேசுவின் துன்பத்தைக் கண்டு பெண்கள் மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்தார்கள்; அவர் பின்னே சென்றார்கள்; அப்போது இயேசு அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார் (காண்க: லூக்கா 23:27-31).
இயேசுவைக் கசையால் அடிக்கிறார்கள்
சிலுவையில் இயேசு
11) அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்து பிலாத்துவின் கட்டளைப்படி "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பெயர்ப் பலகையை அவர் தலைக்கு மேல் தொங்கவிட்டனர் (காண்க: யோவான் 19:17-22). காலை ஒன்பது மணிக்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்கிறார் மாற்கு (காண்க: மாற்கு 15:25). அது காலை 9 தொடங்கி 3 மணி நேர இடைவெளியை (அதாவது நண்பகல்வரை) குறிக்கும். யோவான் கூற்றுப்படி, இயேசு சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டது பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள் "ஏறக்குறைய நண்பகல் வேளை" (யோவான் 19:14). அந்த நண்பகல் வேளையில்தான் யூத குருக்கள் பாஸ்கா ஆட்டுகுட்டியைக் கோவிலில் பலியிடத் தொடங்குவார்கள். ஆக, இயேசுவே பாஸ்கா ஆட்டிக்குட்டி போல பலியாக்கப்பட்டார் என்னும் கருத்து தொக்கிநிற்பதைக் காணலாம் (காண்க: யோவான் 1:29 – "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!").
12) இயேசுவோடு வேறு இரண்டு குற்றவாளிகளும் (கள்வர்களும்) சிலுவையில் அறையப்பட்டிருந்தனர். அவர்கள் இருவ்ரு இயேசுவை இகழ்ந்ததாக லூக்கா தவிர மற்ற மூன்று நற்செய்தியாளரும் கூறுகின்றனர். லூக்கா மட்டும் அந்த, இரு கள்வரில் ஒருவன் இயேசுவின்மீது பரிவு காட்டியதாகக் குறிப்பிடுகிறார் (காண்க: லூக்கா 23:39-43).
13) சிலுவையில் மூன்று மணி நேரம் தொங்கி இயேசு இறந்தார். அவர் சிலுவையில் தொங்கியபோது உரைத்த சொற்களை நற்செய்தியாளர்கள் வெவ்வேறு விதமாகப் பதிவு செய்துள்ளார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரிசைமுறை கீழ்வருமாறு:
"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"(லூக்கா 23:34).
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"(லூக்கா 23:43).
"அம்மா, இவரே உம் மகன்"(யோவான் 19:25-27).
"எலோயி, எலோயி, லெமா சபக்தானி?" ((அரமேயம்). ("என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?")
"தாகமாய் இருக்கிறது" (யோவான் 19:28).
"எல்லாம் நிறைவேறிற்று"(யோவான் 19:30).
"தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்"(லூக்கா 23:46).
இயேசு சிலுவையில் தொங்கியபோது கூறியதாக நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ள மேற்காட்டிய கூற்றுக்களை விரித்துரைத்து அவற்றின் ஆழ்பொருளை எடுத்து விளக்கும் செயல் கிறித்தவ வரலாற்றில் சிறப்பான ஒன்று.
14) இயேசு சிலுவையில் இறந்த சரியான நேரம் குறித்து வேறுபட்ட கருத்துகள் உள்ளன. பெரும்பான்மையோர் இயேசு பிற்பகல் 3 அளவில் இறந்தார் என்பர். யூதர்களின் நிசான் மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அதாவது யூதர் பாஸ்கா விழாக் கொண்டாடுவதற்கு முந்திய நாள் இயேசு இறந்தார் என்பது பொதுவான கருத்து. இது பற்றி மாற்றுக்கருத்தும் உள்ளது.
சிலுவையில் தொங்கிய இயேசு இறந்ததும், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் பிலாத்துவை அணுகி, இயேசுவின் உடலைக் கேட்டார் என்றும், சிலுவையினின்று இறக்கிய உடலை மெல்லிய துணியால் சுற்றிப் பொதிந்து, அதற்கு முன்பு யாரையும் அடக்கம் செய்திராத ஒரு புதிய கல்லறையில் அந்த உடலை வைத்தார்கள் என்றும் லூக்கா நற்செய்தி கூறுகிறது (காண்க: லூக்கா 23:50-53). அவ்வாறே மாற்குவும் கூறுகிறார் (காண்க: மாற்கு 15:42-46). அக்கல்லறையை அரிமத்தியா யோசேப்பு தமக்கென வைத்திருந்தார் என்று மத்தேயு நற்செய்தி கூறுகிறது (காண்க: மத்தேயு 27:60). இயேசுவை அடக்கம் செய்ததில் நிக்கதேம் என்பவரும் பங்கேற்றதை யோவான் குறிப்பிடுகிறார்: "முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார்"(யோவான் 19:39).
இயேசு இறந்த நாள் பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாக இருந்ததாலும் அக்கல்லறை அருகின் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள் (காண்க: யோவான் 19:42). கல்லறையின் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனதாக மத்தேயு கூடுதல் தகவல் தருகிறார் (காண்க: மத்தேயு 27:60). இயேசுவின் அடக்கம் ஆழ்ந்த இறையியல் பொருள் கொண்டதாக தூய பவுல் விளக்குவார்.
விவிலியத்தின் படி, இயேசு சிலுவையில் அறையுண்ட மூன்றாவது நாள் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார். இச்செய்தியை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளர்கள் தவிர, தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் மடலிலும், திருத்தூதர் பணிகள் நூலிலும் கூட காண்கின்றோம். இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய பகுதிகள் கீழ்வருவன:
மத்தேயு 28:5-10
மாற்கு 16:9
லூக்கா 24:2-16
யோவான் 20:10-17
திருத்தூதர் பணிகள் 2:24 (முதலியன)
1 கொரிந்தியர் 6:14, சிறப்பாக 15:1-3
இறந்து, கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு சாவை வென்று, உயிர்பெற்றெழுந்தார் என்னும் செய்தியை நான்கு நற்செய்திகளும் குறிப்பிட்டாலும், அவை தருகின்ற தகவல்களில் சிறிய வேறுபாடுகள் உள்ளன. ஒத்த கருத்தாக உள்ளவை இவை:
1) "வாரத்தின் முதல் நாள்" பெண்கள் கல்லறைக்குச் சென்று, அது வெறுமையாயிருக்கக் கண்டார்கள்.
2) உயிர்பெற்றெழுந்த இயேசு முதன்முதலில் பெண்களுக்கு (ஒரு பெண்ணுக்கு) காட்சியளித்து, அவர்கள் (அவர்) பேதுரு மற்றும் பிற சீடர்களைச் சந்தித்து, அந்த அதிசயச் செய்தியைப் பறைசாற்றும்படி கட்டளையிட்டார்.
3) இந்நிகழ்வில் மகதலா மரியா முதன்மையிடம் பெறுகிறார்.
4) இயேசுவின் கல்லறையை ஒரு கல் மூடியிருந்தது என்னும் செய்தி.
சரியாக எந்த நேரத்தில் பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள், எத்தனை பெண்கள் போனார்கள், யார்யார் அப்பெண்கள், எதற்காகப் போனார்கள், வெறுமையாகவிருந்த கல்லறை அருகே தோன்றியது "ஆண்டவரின் தூதரா" அல்லது "இளைஞரா", அவர்கள் பெண்களுக்குக் கூறிய செய்தி என்ன, பெண்கள் அதற்கு என்ன பதில் அளித்தார்கள் - என்பவை.
உயிர்பெற்றெழுந்த பின் சீடர்களுக்குத் தோன்றுதல்[தொகு]
இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறை வெறுமையாய் இருந்ததும், இயேசு உயிர்பெற்றெழுந்ததும் அவர் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்ச்சிகளோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். இயேசு தம் சீடருக்குப் பல முறை காட்சியளித்ததாக நற்செய்தி நூல்களும் திருத்தூதர் பணிகள் நூலும் தெரிவிக்கின்றன.
உயிர்பெற்றெழுந்த இயேசு மேல்மாடியில் கூடியிருந்த தம் சீடர்களுக்குத் தோன்றினார்; அப்போது சீடர் தோமா அங்கே இல்லை. உயிர்பெற்றெழுந்த இயேசுவைத் தம் கைகளால் தொட்டுப்பார்த்தாலொழிய நம்பப்போவதில்லை என்று கூறிவிட்டார். எட்டு நாள்களுக்குப் பின் இயேசு மீண்டும் தோன்றியபோது தோமாவும் கூட இருந்தார். இயேசு சீடர்களை நோக்கி வழக்கம்போல, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்திய பிறகு, தோமாவை நோக்கி, "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார். இயேசுவைத் தம் கையால் தொடுவதற்குத் தோமாவுக்குத் துணிவு வரவில்லை. மாறாக, தோமா இயேசுவைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்று கூறிப் பணிந்தார். இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார் (காண்க: யோவான் 20:24-29).
எம்மாவு என்னும் ஊருக்குச் சென்றுகொண்டிருந்த சீடர்களுக்கு இயேசு தோன்றிய செய்தியை லூக்கா குறித்துள்ளார் (காண்க: லூக்கா 24:13-32).
திபேரியக் கடல் (கலிலேயாக் கடல்/ஏரி) அருகே சீமோன் பேதுருவும் பிற சீடரும் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இயேசு அவர்களுக்குத் தோன்றி அவர்களை உறுதிப்படுத்தினார் (காண்க: யோவான் 21:1-23).
இயேசு இறுதி முறையாகத் தோன்றியது அவர் உயிர்பெற்றெழுந்த நாற்பதாம் நாள் எனவும் அப்போது அவர் விண்ணேகினார் எனவும் லூக்கா குறித்துள்ளார் (காண்க: லூக்கா 24:44-49).
கிறித்தவர்களைத் துன்புறுத்திய சவுல் என்பவருக்கு இயேசு தோன்றியதும், சவுல் மனமாற்றம் அடைந்து, பவுல் என்னும் புதிய பெயரோடு இயேசுவின் தீவிர சீடராக மாறியதும் திருத்தூதர் பணிகள் நூலிலும் பவுல் எழுதிய மடல்களிலும் குறிக்கப்பட்டுள்ளன.
இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியைக் கிறித்தவர்கள் தம் சமய நம்பிக்கையின் மையமாகக் கருதுகிறார்கள். கடவுள் பெயரால் இவ்வுலகிற்கு வந்து, மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவர்கள் விண்ணக வாழ்வில் பங்கேற்க எத்தகைய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இயேசு தம் சொல்லாலும் செயலாலும் காட்டினார். சாவின்மீது தாம் வெற்றிகொண்டதுபோலவே தம்மை நம்பி ஏற்போர் அனைவரும் அவ்வெற்றியில் பங்கேற்பர் என இயேசு அறிவுறுத்தினார். புத்துயிர் பெற்ற இயேசு மனித வரலாற்றில் கடவுளின் வல்லமையாக இருந்து அவ்வரலாற்றை வழிநடத்துகிறார் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். இயேசுவை மீட்பராக ஏற்போர் கடவுளின் அன்பிலும் அரவணைப்பிலும் எந்நாளும் வாழ்வர் என்பது கிறித்தவ நம்பிக்கை.
1) பிளாவியுசு யோசேஃபசு (Flavius Josephus): இவர் கி.பி. சுமார் 37ஆம் ஆண்டில் பிறந்தார்; கி.பி. சுமார் 101இல் இறந்தார். இவர் யூத சமயத்தைச் சார்ந்த ஒரு குரு; வரலாற்று ஆசிரியர். யூத மக்கள் தங்கள் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய உரோமைப் பேரரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த காலத்தில் (கி.பி. 66) இவர் வாழ்ந்தார். அக்கிளர்ச்சியின்போது உரோமையர் இவரைப் பிடித்துச் சிறையில் வைத்தனர். விடுதலை இவர் எழுதிய யூத மரபு வரலாறு (Jewish Antiquities) என்னும் நூல் சிறப்பு வாய்ந்தது. அதில் இயேசுவுக்குத் திருமுழுக்கு வழங்கிய யோவான்பற்றிய குறிப்பு உள்ளது. அந்நூலின் பகுதி 18, அதிகாரம் 5, பத்தி 2இல் யோசேஃபசு கீழ்வருமாறு குறித்துள்ளார்:
"திருமுழுக்கு அளிப்பவர் என்னும் பெயர்கொண்ட யோவான் ஒரு நல்ல மனிதர். அவர் யூத மக்களுக்குப் போதித்தார். தூய்மை பெற்ற உள்ளத்தினராக மக்கள் அவரை அணுகி வந்தால் அவர்களுக்கு அவர் தண்ணீரினால் குளிப்பாட்டு அளிக்க முன்வந்தார். இதனால் அவர்கள் பாவங்கள் மட்டும் கழுவப்படும் என்றில்லாமல் அவர்களது உடலும் தூய்மையடையும். மக்கள் நற்பண்புடையவராக, ஒருவர் மற்றவர் மட்டில் நேர்மையோடும், கடவுளுக்கு அஞ்சியும் வாழ்ந்திட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இத்தகைய ஒரு நல்ல மனிதரை ஏரோது மன்னன் கொன்றுபோட்டதால் கடவுள் எரோதின் படை அழிந்துபோகச் செய்து, அவனைத் தண்டித்தார்; அது நியாயமானதே".
2) பிளாவியுசு யோசேஃபசு இயேசு பற்றிய தகவலும் தருகின்றார். ஆதாரம்: யூத மரபு வரலாறு (Jewish Antiquities), பகுதி 18, அதிகாரம் 3, பத்தி 3. இப்பகுதியில் யூதராகிய யோசேஃபசு இயேசுவை பெரிய அளவு புகழ்ந்து எழுதியிருப்பாரா என்றும், ஒருவேளை சில வரிகள் கிறித்தவரின் இடைச்செருகலாக இருக்கலாமோ என்றும் இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் ஐயம் எழுப்புகின்றனர். ஐயத்திற்கு உரிய பகுதிகள் கீழ்வரும் மேற்கோளில் சதுர அடைப்புக்குறிகளுக்குள் இடப்படுகின்றன. யோசேஃபசு கூறுகின்றார்:
"ஏறக்குறைய அச்சமயத்தில் "இயேசு" என்னும் பெயர்கொண்ட ஞானியாகிய ஒரு மனிதர் இருந்தார் [அவரை மனிதர் என்று அழைக்க எனக்குத் தயக்கமாகவே உள்ளது]. அவர் அதிசய செயல்களை நிகழ்த்தினார்; உண்மையை உள மகிழ்வோடு தேடிய மக்களுக்கு அவர் ஆசிரியராக இருந்தார். யூதர், கிரேக்கர் உட்பட பலரும் அவரைப் பின்பற்றினார்கள். [அவரே திருப்பொழிவுபெற்ற மெசியாவாக இருந்தார்]. நம் நடுவே மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் அவர்மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, பிலாத்து அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுமாறு தண்டனை விதித்தான். அப்படியிருந்தும் தொடக்கத்திலேயே அவர்மீது மதிப்புக் கொண்டிருந்தவர்கள் அவர்மீது தொடர்ந்து அன்பும் பாசமும் காட்டுவதை விட்டுவிடவில்லை. [மூன்றாம் நாளில் உயிர்பெற்றெழுந்து அவர் அவர்களுக்குக் காட்சியளித்தார். இது நிகழுமென்றும் இதுபோன்று அவர் குறித்த வேறு எண்ணிறந்த அதிசயங்கள் நிகழுமென்றும் இறைவாக்கினர் ஏற்கனவே முன்னுரைத்திருந்தனர்.] அவருடைய பெயரைக் கொண்டு கிறித்தவர் என்று அழைக்கப்படுகின்ற குழுவினர் இன்றுவரை நீடித்து வாழ்ந்துவருகின்றனர்".[22]
3)பிளாவியுசு யோசேஃபசு நூலின் அரபி மொழிபெயர்ப்பு: யோசேஃபசு எழுதிய யூத மரபு வரலாறு நூலின் அரபி மொழிபெயர்ப்பு ஒன்றுளது. அது கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அந்த மொழிபெயர்ப்பில் மேலே காட்டிய பகுதி கீழ்வருமாறு உள்ளது: "அச்சமயம் இயேசு என்னும் பெயருடைய ஞானி ஒருவர் இருந்தார். அவர் நன்னடத்தையும் நற்பண்பும் கொண்ட மனிதர். யூதர்களும் பிற நாடுகளைச் சார்ந்தவர்களுமான பல மக்கள் அவருடைய சீடர்களாக மாறினர். சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படும்படி பிலாத்து அவருக்குத் தீர்ப்பு வழங்கினான். அவருடைய சீடர்களாக மாறியிருந்தவர்கள் அவரைப் பின்பற்றுவதைக் கைவிட்டுவிடவில்லை. சிலுவையில் அறையுண்டு இறந்தபின் அவர் மீண்டும் உயிர்பெற்றவராக அவர்களுக்குக் காட்சியளித்ததாக அவர்கள் கூறினார்கள். எனவே, அவரே ஒருவேளை இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட அதிசயம் வாய்ந்த மெசியாவாக இருக்கலாம்."
குறிப்பு
மேலே தரப்பட்ட பகுதியிலும் அதன் அரபி மொழிபெயர்ப்பிலும் ஒரு சில கிறித்தவ இடைச்செருகல்கள் இருக்கலாம் என்றே வைத்துக்கொண்டாலும் இயேசு என்னும் பெயருடைய ஒருவர் வரலாற்றில் வாழ்ந்தார் என்றும், அவர் மக்களுக்குப் போதனை வழங்கி அதிசய செயல்கள் புரிந்தார் என்றும், அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்றும், நூல் எழுந்த முதல் நூற்றாண்டில் இயேசுவைப் பின்பற்றிய மக்கள் குழுக்கள் இருந்தன என்றும் யாதொரு ஐயத்திற்கு இடமின்றி வரலாற்று உண்மையாக நாம் ஏற்றுக்கொள்ளலாம். இது விவிலியத்திற்கு வெளியே இருந்து வருகின்ற உறுதிப்பாடு என்பது கருதத்தக்கது.
4)பிளாவியுசு யோசேஃபசு இயேசுவின் சகோதரரான யாக்கோபு (James) பற்றிய தகவலும் தருகிறார். ஆதாரம்: யூத மரபு வரலாறு (Jewish Antiquities), பகுதி 20, அதிகாரம் 9. இப்பகுதியை எழுதியவர் யோசேஃபசு தான் என்பது வரலாற்று ஆசிரியர்களின் ஒருமித்த கருத்து.[23]
மேற்கோள்: "பெசுதுசு (Festus) இறந்துவிட்டார் என்று கேட்டதும் சீசர் அல்பீனுசு (Albinus) என்பவரை யூதேயாவுக்கு ஆளுநராக அனுப்பினார்....ஃபெசுதுசு இறந்தாயிற்று, அல்பீனிசு பயணமாகப் போகிறார் என்ற நிலையில், அவர் [அனானுசு Ananus] நீதித்தலைவர்கள் அடங்கிய மூப்பர் சங்கத்தை (Sanhedrin) கூட்டினார். அவர்கள் முன்னிலையில் யாக்கோபையும் அவர்தம் கூட்டாளிகளையும் கொண்டுவந்தார். கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட இயேசுவின் சகோதரர்தான் யாக்கோபு. அவர்கள் சட்டத்தை மீறினார்கள் என்னும் குற்றச்சாட்டு அவர்கள்மீது சுமத்தப்பட்டது; அவர்கள் கல்லால் எறியப்படவேண்டும் என்று தீர்ப்பிடப்பட்டது. சட்டத்தை மீறியது தவறுதான் என்றாலும் அதற்கென்று அளிக்கப்பட்ட தண்டனை நீதியாக இருக்கவில்லை என்று நீதிநேர்மை கொண்ட குடிமக்கள் நினைத்ததுபோலத்தான் தெரிகிறது."
5) தாசித்துசு (Tacitus) (கி.பி. 56-117) வழங்கும் சான்று: தாசித்துசு தலைசிறந்த உரோமை வரலாற்றாசிரியர். மிகவும் நம்பத்தக்கவராகக் கருதப்படுபவர். கி.பி. 116ஆம் ஆண்டளவில் அவர் எழுதிய வரலாற்றுக் குறிப்புகள் (Annals) என்னும் நூல் இவருடைய தலைசிறந்த படைப்பு ஆகும். நீரோ மன்னன் கி.பி. 64ஆம் ஆண்டு உரோமை நகருக்குத் தீ வைத்தார் என்னும் தகவலையும், அத்தீ ஆறு நாள்கள் எரிந்து ஓய்ந்தது என்னும் தகவலையும், தீ வைத்தவர்கள் கிறித்தவர்களே என்று குற்றம் சாட்டி அவர்களை நீரோ கொன்ற தகவலையும் தாசித்துசு தருகிறார். தாசித்துசு தாம் எழுதிய வரலாற்றுக் குறிப்புகள் (Annals) என்னும் நூலில் 15ஆம் பிரிவின் 44ஆம் பகுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்:
"தானே உரோமைக்குத் தீ வைத்ததாக உலவிய செய்தியை மறைப்பதற்காக நீரோ இழிந்தவர்களாக மக்களால் கருதப்பட்ட ஒரு குழுவினர்மீது பழியைப் போட்டார். அவர்களை மிகக் கொடுமையான வதைகளுக்கு ஆளாக்கினார். அவர்கள்தாம் கிறெஸ்தவர்கள் (Chrestians = கிறிஸ்தவர்கள் என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டவர்கள். கிறிஸ்து என்பவரின் பெயரிலிருந்து அவர்களுக்கு இப்பெயர் வந்தது. அந்தக் கிறிஸ்து திபேரியு (Tiberius) ஆட்சிக்காலத்தில் நம் ஆளுநர்களில் ஒருவராகிய பொந்தியு பிலாத்து என்பவரின் ஆளுகையின் கீழ் மிகக் கொடிய விதத்தில் தண்டிக்கப்பட்டார். அப்போது எழுந்த கேடுநிறைந்த மூடநம்பிக்கை [= கிறித்தவ சமயம்] சிறிது காலம் அடக்கிவைக்கப்பட்டது; ஆனால் மீண்டும் யூதேயாவில் பரவ ஆரம்பித்தது. அத்தீங்குக்குத் தோற்றிடமான அங்கிருந்து உரோமையிலும் பரவியது. உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் பிறக்கின்ற வெறுக்கத்தக்க, வெட்கக்கேடான எல்லாமே உரோமையில் குடிகொண்டு பரவுவது வழக்கம்தானே".[24]
குறிப்பு
மேலே காட்டிய பகுதியில் தாசித்துசு Chrestianos என்று இலத்தீனில் குறிப்பிட்டது கருதத்தக்கது. வழக்கமாக, கிறிஸ்தவர்கள் என்பது இலத்தீனில் Christiani, Christianos என்றுதான் வரும்.
பெரும்பான்மையான அறிஞர்கள் மேற்காட்டிய பகுதி தாசித்திசு என்னும் பண்டைக்கால உரோமை வரலாற்றாசிரியரால் எழுதப்பட்டதே என ஏற்கின்றனர். ஒருசிலர் ஐயப்படுகின்றனர். ஆனால், கிறித்தவ சமயத்தை கேடுநிறைந்த மூடநம்பிக்கை என்றும், தீங்கு, வெறுக்கத்தக்கது, வெட்கக்கேடானது என்றெல்லாம் இழிவாக இப்பகுதி காட்டுவதால் இது கிறித்தவர்களால் புகுத்தப்பட்ட இடைச்செருகல் அல்ல என்று மிகப்பெரும்பான்மை அறிஞர் உறுதியாகக் கூறுகின்றனர் [25]
6) மேலே காட்டியவை தவிர, இளைய பிளினி (Pliny the Younger) என்னும் உரோமை அறிஞர் இயேசு கிறிஸ்து மற்றும் தொடக்ககாலக் கிறித்தவர் பற்றித் தருகின்ற குறிப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவர் வாழ்ந்த காலம் கி.பி. 61-112. இவர் உரோமைப் பேரரசில் கிறித்தவர்கள் எத்தகைய வழிபாட்டில் ஈடுபட்டார்கள் என்பதைக் குறித்து உரோமைப் பேரரசனான திரேயன் (Trajan) என்பவருக்கு எழுதிய கடிதமும் அதற்கு அரசன் கொடுத்த பதிலும் குறிப்பிடத்தக்கவை[26]
7) லூசியன் (Lucian) என்னும் பண்டைய அசீரிய எழுத்தாளர் (கி.பி. சுமார் 125 - கி.பி. சுமார் 180) இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்றும், அவருடைய சீடர்கள் அவரைக் கடவுள் என்று வழிபடுகிறார்கள் என்றும், இயேசு எல்லா மனிதரும் சகோதரர்களே என்று போதித்தார் என்றும், கிறித்தவர்கள் பொதுவுடைமை முறையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்றும் தகவல் தருகிறார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலக வரலாற்றில் பெரும் தாக்கம் கொணர்ந்தவர் இயேசு. எனவே, அவருடைய வாழ்க்கை, போதனை, சாவு, உயிர்த்தெழுதல் பற்றி, நற்செய்தி நூல்கள் தருகின்ற செய்திகளைத் தவிர வேறு தகவல்கள் உளவா என்ற கேள்விக்குப் பதில் தரும் விதத்தில் பல நூல்கள் தோன்றியதில் வியப்பில்லை. குறிப்பாக, இயேசு தம் 12 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தார் என்ற மர்மத்தை விளக்கும் வகையிலும், அவர் உண்மையிலேயே சிலுவையில் இறந்தாரா என்பதைத் தெரிந்துகொள்ளவும் நடந்த முயற்சிகள் விவிலிய அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மேலும், இயேசு வரலாற்று மனிதரா என்னும் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையிலும் இயேசுவின் போதனை எத்தகையது என்பதை விளக்கும் வகையிலும் சில சிந்தனையாளர்கள் விமர்சித்துள்ளார்கள். இயேசு வாழ்ந்த காலத்தில் யூத சமயப் பிரிவினரான பரிசேயர், சதுசேயர் போன்றவர்கள் இயேசுவின் போதனையில் குறைகண்டார்கள். அதன் பிறகு, கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த செல்சுஸ் (Celsus), 3ஆம் நூற்றாண்டவரான போர்ஃபிரி (Porphyry) போன்றோர் இயேசு பற்றி விமர்சித்தார்கள். பகுத்தறிவுவாதக் கொள்கை அடிப்படையில் பிரீட்ரிக் நீட்சே, பெர்ட்ரண்டு ரசல் முதலியோர் இயேசுவையும் அவருடைய போதனைகளையும் விமர்சித்துள்ளனர். "இயேசு பற்றிய விமர்சனம்" ஒருபக்கம் தொடரவே, அதற்குப் பதில் வழங்கும் முயற்சியும் நடந்துவருகிறது. இம்முயற்சி கிறித்தவ தன்விளக்கம் என்று அழைக்கப்படுகிறது.
தன்னைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சீடர்கள் தவிர்த்து, பொதுவாக அக்கால யூதர்களால் இயேசு மீட்பர் (மெசியா) அல்ல என நிராகரிக்கப்பட்டார். அதுவே இன்றும் பெரும் அளவிலான யூதர்களால் பின்பற்றப்படுகிறது. கிறித்தவ இறையியலாளர்கள், கிறிஸ்தவப் பொதுச்சங்கங்கள், சீர்திருத்தவாதிகள் மற்றும் பிறரால் பல நூற்றாண்டுகளாக இயேசுவைப்பற்றி பரவலாய் எழுதப்பட்டுள்ளது. கிறித்தவப் பிரிவுகளும் உட்பிரிவுகளும் இயேசு பற்றிய தங்களின் விபரங்களை வரையறுத்துள்ளனர். இவ்வாறு இருக்கையில், மனாக்கியர், ஞானக் கொள்கையினர், இசுலாமியர், பகாய் மற்றும் ஏனையோர் தங்கள் சமயத்தில் இயேசுவுக்கு முக்கிய இடத்தினை வழங்கியுள்ளனர்.[27][28][29]
யூதம் இயேசு கடவுளாக இருப்பதை, கடவுளிடம் மத்தியஸ்தம் செய்பவர் அல்லது திருத்துவத்தின் பகுதி என்பதை மறுக்கிறது.[30] இது இயேசு மெசியா அல்ல என்னும் கருத்தைக் கொண்டு, அவர் மீட்பரின் இறைவாக்குகளை நிறைவேற்றவோ அல்லது மீட்பருக்குரிய ஆளுமை தகமைகளைக் கொண்டிருக்கவோ இல்லை என வாதிடுகிறது.[31] யூத பாரம்பரியத்தின்படி, மலாக்கியாவிற்குப் பின் எந்த இறைவாக்கினரும் இல்லை.[32] மலாக்கியா கி.மு. 5ம் நூற்றாண்டில் இறைவாக்குரைத்தார்.[33]மெசியா நம்பிக்கை யூதம் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் இயேசுவை மெசியாவாகக் கருதினாலும், இப்பிரிவு யூதப் பிரிவின் அங்கம் என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.[34]
இசுலாமில், இஞ்சில் வேதத்தின்படி இசுரேலிய மக்களை வழிநடத்த அனுப்பப்பட்ட கடவுளின் தூதராக, மீட்பராக ஈசா (இயேசு) கருதப்படுகிறார்.[35] முசுலிம்கள் புதிய ஏற்பாடு உண்மையல்ல எனவும், இயேசுவின் உண்மையான செய்தி தொலைந்துவிட்டது அல்லது மாற்றப்பட்டுவிட்டது எனவும் அதனை முகம்மது பின்னர் மீள்வித்தார் எனவும் நம்புகின்றனர்.[36] இயேசுவில் நம்பிக்கை வைப்பது (மற்றும் கடவுள் அனுப்பிய ஏனைய இறைதூதர்களிடமும் நம்பிக்கை வைப்பது) ஒரு முசுலிமாக இருக்கத் தேவையானது.[37] குரான் முகம்மதுவைவிட அதிகமாக இயேசுவை 25 தடவைகள் குறிப்பிடுகிறது.[38][39] மேலும் இயேசு ஏனைய இறை தூதர்களைப் போல மனிதன் எனவும், கடவுளின் செய்தியை பரப்ப தெரிவு செய்யப்பட்டார் எனவும் வலியுறுத்துகிறது. இசுலாம் இயேசு கடவுளின் அவதாரமோ, கடவுளின் மகனோ இல்லை எனக் கருதுகிறது. இசுலாமிய நூல்கள் ஒரே கடவுட் கொள்கையை வலியுறுத்தி, கடவுளுக்கு இணையாக இருப்பதையும் உருவ வழிபாடாகக் கருதுகின்றது.[40] குரான் இயேசு தன்னை திரித்துவத்தின் ஒருவராக அறிவிக்கவில்லை[41] எனவும் இறுதி தீர்வின்போது இயேசு அவ்வாறான ஒன்றை மறுதலிப்பார் எனவும் எதிர்வு கூறுகின்றது (குரான் 5:116).[42] ஏனைய இறை தூதர்கள் போல் இயேசுவும் ஓர் முசுலிமாக கருதப்படுகிறார்.[43]
↑Meier writes that Jesus' birth year is c. 7 or 6 BC.[1]Rahner states that the consensus among historians is c. 4 BC.[2]Sanders also favors c. 4 BC and refers to the general consensus.[3]Finegan uses the study of early Christian traditions to support c. 3 or 2 BC.[4]
↑Most scholars estimate 30 or 33 AD as the year of Jesus' crucifixion.[6]
↑James Dunn writes that the baptism and crucifixion of Jesus "command almost universal assent" and "rank so high on the "almost impossible to doubt or deny" scale of historical facts" that they are often the starting points for the study of the historical Jesus.[7]Bart Ehrman states that the crucifixion of Jesus on the orders of Pontius Pilate is the most certain element about him.[8]John Dominic Crossan and Richard G. Watts state that the crucifixion of Jesus is as certain as any historical fact can be.[9] Paul R. Eddy and Gregory A. Boyd say that non-Christian confirmation of the crucifixion of Jesus is now "firmly established".[10]
↑Traditionally, Christians believe that Mary conceived her son miraculously by the agency of the Holy Spirit. Muslims believe that she conceived her son miraculously by the command of God. Joseph was from these perspectives the acting father in the physical world.
↑Brown, Raymond E. (1977). The birth of the Messiah: a commentary on the infancy narratives in Matthew and Luke. Doubleday. பக். 513. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-385-05907-7.