317 அடிகள் கொண்ட திருமுருகாற்றுப்படை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய அற்புத நூலாகும்.பாட்டுடைத் தெயவம் குமரவேள். பத்துப் பாட்டில் இடம் பெறுகிறது இது.சங்க இலக்கியம் தோன்றிய காலத்தில் பிற்பகுதியில் இயற்றப்பட்ட நூல் இது என்பர் சிலர்.
12 திருமுறைகளில் 11ஆம் திருமுறையில் இது இடம் பெறுகிறது.
முருக பக்த்ரகளுக்கு (விவாதம் தாண்டிய) பக்தி உணர்ச்சியைத் தரும் பக்தி நூல் இது. இலக்கிய அன்பர்களுக்கோ சிலிர்க்க வைக்கும் தமிழ் இன்பத்தை ஊட்டும் நூல். ஆய்வாளர்களுக்கோ பல்வேறு துறைகளில் ஆய்வை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பை நல்கும் சிந்தனைக் களஞ்சியமான நூல்.
குமரவேளின் அருமைக்காக ஒரு முறையும், தமிழ்ச் சொற்களின் அழகிய இயல்புக்காக ஒரு முறையும், படிக்கும் போது மீதூறி வரும் பக்திக்காக ஒரு முறையும், தமிழர் தம் பண்பாட்டை தெள்ளிதின் தெரிந்து கொள்வதற்காக ஒரு முறையும், அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்ற பிரப்ஞ்ச நியதியைத் தெரிந்து கொள்வதற்காக ஒரு முறையும், மேலாம் முக்தி நிலையை அடைய வழிகாட்டி அழைத்துச் செல்லும் நூல் என்பதால் ஒருமுறையும் ஆக ஆறுமுகத்தைப் போற்றும் இந்த நூலை ஆறுமுறை அவ்வப்பொழுது படிக்கலாம்.
ஒருமையுடன் மனதைச் செலுத்திப் படிப்போர் இன்பம் அடைவது உறுதி. இந்தக் கட்டுரைக்கான வடிவமைப்பில் நாம் பார்க்க வேண்டிய அந்தணர், வேதம் ஆகியவை வரும் பகுதிகளை (மட்டும்) இனிப் பார்ப்போம். முதலில் 177 முதல் 183 முடிய உள்ள வரிகளைப் பார்ப்போம்:
“இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்” அந்தணர் பற்றிய விரிவான விளக்கத்தை இப்பகுதி தருகிறது.
இதில் குறிப்பிடப்பெறும் இரு மூன்று எய்திய இயல்பு ஓதல் என்பது ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்,ஈதல், ஏற்றல் என்னும் ஆறாகிய நன்மையைக் குறிக்கிறது. அந்தணர் குல மரபின் படி இந்த ஆறு தொழில்களையும் வழுவாது பரம்பரை பரம்பரையாகக் காத்து வருபவர்கள் அந்தணர் எனப்து இதனால் பெறப்படுகிறது.
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி என்பதால் தாய் வழியிலும் தந்தை வழியிலும் தூய்மையான குடியினைச் சேர்ந்தவர்கள் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது.
குடி என்பது கோத்திரத்தைக் குறிக்கிறது. கௌசிகம், வாதூலம், கச்யபம் போன்ற கோத்திரங்கள் இந்த வார்த்தையால் குறிக்கப்படுகிறது.
அறுநான்கு என்றால் இருபத்திநான்கு அதை இரட்டித்தால் வருவது 48. ஆக 48 ஆண்டுக் காலம் பிரமசரியத்தைக் காத்தலை இந்த வரி காட்டுகிறது.
48 ஆண்டுகள் பிரமசரியம் காக்கும் பழக்கத்தை இறையனார் அகப்பொருளுரையில் “நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியம் காத்தான்” என்ற வரியாலும் தொல்காப்பிய களவியல் உரையிலும் கூடக் காணலாம்.
அறன் நவில் கொள்கை என்பதால் அந்த அந்தணர்கள் அறத்தைத் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டும் பண்பைக் கொண்டவர்கள் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது. அற வாழ்க்கையே அவர்களது message!
மூன்று வகை குறித்த மூத்தீச் செல்வம் என்பது காருகபத்தியம்,ஆகவனீயம்,தட்சிணாக்கினி ஆகிய மூன்று வகை அக்கினியைக் குறிக்கும். மூன்று வகை அக்கினிக்கும் வெவ்வேறு வடிவங்கள் உண்டு. சிறப்புகள் உண்டு. இது பற்றிய விளக்கத்தைக் கல்ப சாஸ்திரத்தில் விரிவாகக் காணலாம்.
இருபிறப்பாளர் என்பது அந்தணர் தாய் வயிற்றில் அடையும் ஒரு பிறப்பையும் பின்னர் உபநயனத்தின் போது காயத்ரி மந்திரத்தை உபதேசமாகப் பெறும் போது அடையும் ஞானப் பிறப்பாம் இரண்டாம் பிறப்பையும் கொள்வதைக் குறிப்பிடுகிறது. அந்தணருக்கான இன்னொரு பெயரே இருபிறப்பாளர்.
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் என்பதால் ஒன்பது இழைகளைக் கொண்ட பூணூலை அணிந்த அந்தணர்கள் என்பது காட்டப்படுகிறது. மூன்று மூன்று இழைகளாக மூன்று பூணூலை அதாவ்து மொத்தம் ஒன்பது இழைகளைக் கொண்ட பூணூலை அணிந்தவர்கள் என்பது திருத்தமாக விளக்கப்படுகிறது.
அடுத்து 185,186,187 அடிகளைக் காண்போம்;
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி
நாவில் மருங்கின் நவிலப் பாடி என்பதால் தலைக்கு மேலே குவித்து வைத்த கைகளுடன் முருகனைத் துதித்து ஆறு எழுத்து அடங்கிய இரகசியமான மந்திரத்தை (நம; குமாராய) நாக்கு அசையும் அளவில் பயிலும் படி உச்சரிக்கும் அந்தணர் என்பது பெறப்படுகிறது.
ஆறுமுகத்தின் செயல்களை விளக்க வரும் நக்கீரர்,
ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி யோர்க்கும்மே (வரிகள் 94,95,96)என்று கூறுகிறார்.
அதாவது முருகனின் ஒரு முகம் மந்திரத்தை உடைய வேதத்திலே விதித்தலை உடைய ம்ரபு வழி வந்த பிராமணர்களின் யாகங்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் நிலையாக் நிற்கும் படி காக்கின்ற தொழிலை மேற்கொள்கிறதாம்!.
அந்தணரைக் காப்பதும் அவரது வேள்வி நன்கு நடக்கும் படி அருளுவதும் வெற்றிவேலனின் திருவருட்செய்கையாக இயல்பாகவே இருக்கிறது.
இனி 155,156ஆம் அடிகளில் இந்திரனைக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.
“நூற்றுப்பத்தடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து”
இந்திர பதவியை அடைவது என்பது எளிதல்ல. நூறு அஸ்வமேத யாகம் செய்த ஒருவ்ரே இந்திர பதவி பெறும் தகுதி உடையவராவார். நூறு பல்வேள்வி முற்றிய இந்திரன் நூற்றுப்பத்தடுக்கிய கண்களை உடையவன். அதாவது ஆயிரம் கண்களை உடையவன்.
அவன் இந்த வேள்வி பலத்தினால் பகைவரை வெற்றி கொள்பவன் (வெனறடு கொற்றம்)!!
இங்கு யாகத்தின் சிறப்பு கூறப்படுகிறது.
ஆக அந்தணர் பெருமை, அவர்களைக் காக்கும் முருகனின் அருள் திறம், வேள்வி பல் செய்ததால் இந்திர பதவி அடைதல் உள்ளிட்ட நுட்பமான கருத்துக்களைத் திருமுருகாற்றுப்படை தெளிவாக விளக்குகிறது.
பண்டைய தமிழ்ச் சமுதாயத்தில் அந்தணர் பெற்றிருந்த இடத்தையும், அவர்கள் இயல்பையும், வேள்வியின் மஹிமையையும் திருமுருகாற்றுப்படையின் இப்பகுதிகள் விளக்குகின்றன.