Written by S NAGARAJAN Date: 22 November 2016 Time uploaded in London: 5-55 AM Post No.3377
சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 11-இந்தக் கட்டூரையில் எட்டுத்தொகையில் உள்ள குறுந்தொகை, கலித்தொகை ஆகிய நூல்களில் வேதம், அந்தணர் பற்றி வரும் சிறப்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன
குறுந்தொகை, கலித்தொகையில் அந்தணரும் வேதமும் ! ச.நாகராஜன்
குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களில் இரண்டாவது நூலாக அமைவது குறுந்தொகை. இதில் 401 பாடல்கள் உள்ளன. 206 புல்வர்கள் இப்பாடல்களைப் பாடியுள்ளனர். நான்கு முதல் எட்டு அடிகள் வரை கொண்டுள்ள இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் பல்வேறு உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இதில் 156ஆம் பாடலைப் பாடியுள்ளவர் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார். ஒரு தலைவன் ஒரு அந்தணனிடம் சொல்வது போல அமைந்துள்ளது இந்தப் பாடல்.
பார்ப்பன மகனே பார்பன மகனே
செம்பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின் சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ இதுவே
ஏழே அடிகள் உள்ள இந்தப் பாடல் தலைவன் தன் நண்பன் கேட்கும் படியாக அமைக்கப்பட்டுள்ள ஒரு பாடல்.
ஒரு அந்தணன்!
அவன் வேதம் விதித்த முறைப்படி தனது அன்றாட ‘நித்ய கர்மங்களை’ நன்கு செய்பவன்.
எழுதாக் கிளவி என்பது வேதம். அதை யாரும் எழுதவில்லை. ஆகவே இந்தச் சிறப்புப் பெயர் எழுதாக் கற்பு எனப்படும் அந்த அரிய நூல் பிரிந்தவர் சேரும் ம்ருந்து எதையாவது சொல்கிறதா என்பதே தலைவனின் கேள்வி.
ஓ! அந்தணனே! ஓ அந்தணனே (பார்ப்பன மகனே பார்ப்பன மகனே)
முருக்கம் மரத்தின் நார் களைந்து சிவப்பான பூக்களுடன் இருக்க, அதில் தொங்குகின்ற கமண்டலத்துடன் (செம்பூ முருக்கின் நல் நார் களைந்த தண்டொடு பிடித்த பிடித்த தாழ் கமண்டலத்து)
படிவ உண்டி, பார்ப்பன மகனே (முறைப்படியான உணவை உண்டிருக்கும் பார்ப்பன மகனே)
(உன்னிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்)
நீ படித்து ஓதும் எழுதாக் கற்பு என்னும் வேதத்திலோ அல்லது உனது சொற்களிலோ (எழுதாக் கற்பின் நின் சொல் உள்ளும்)
பிரிந்தவர்கள் ஒன்று சேர ஏதேனும் மருந்து உண்டோ?
அல்லது இது ஒரு மயக்கம் தானா -சிறிய குழப்பம் தானோ!! (மயலோ இதுவே?)
எத்துணை அழகிய பாடல்! அனைத்தும் இருக்கும் வேதத்தில் தலைவனும் தலைவியும் பிரிந்திருக்கும் பிரிவு நோய் போக ஏதேனும் ஒரு மருந்து இருக்கிறதா, பார்ப்பன மகனே! நீயோ வேதத்தில் கரை கண்டவன். ஒரு வழியைச் சொல்லு!
புல்வர் வாயிலாக அந்தணனின் சிறப்பையும் எழுதாக் கற்பின் சிறப்பையும் காணும் போதே பிரிவின் வேதனையையும் உணர்கிறோம்.
கலித்தொகை
அடுத்து எட்டுத் தொகை நூல்களில் ஆறாவதாக அமைவது. கலித்தொகை.
கலித்தொகையில் மொத்தம் 150 பாடல்கள் உள்ளன.
இதில் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பார்ப்போம். இதை இயற்றியவ்ர் ந்ல்லந்துவனார். இதில் சிவபிரான் தனது ஜடாமுடியில் கங்கையைத் தரித்ததும் திரிபுரம் எரித்ததும் ஆகிய அரும் செயல்கள் உரைக்கப்படுகின்றன.
ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து தேறு நீர் சடைக் கரந்து திரிபுரம் தீ மடுத்து (முதல் இரு வரிகள்)
ஆறு அங்கங்களை அறிந்துள்ள அந்தணர்க்கு (ஆறு அறி அந்தணர்க்கு)
நான்கு வேதங்களையும் பகர்ந்து (அருமறை பல பகர்ந்து)
கங்கையைத் தலையில் ஒளித்து (தேறு நீர் சடைக் கரந்து)
திரிபுரங்களை எரித்து (திரிபுரம் தீ மடுத்து)
ஆனந்த நடனம் ஆடுபவர் சிவ பிரான்
பாடலை முழுதுமாகப் படிக்கும் போது சிவபிரான், உமையம்மை பற்றி உளமுருகப் பாடும் புலவ்ரின் பக்தியும் தமிழின் அழகிய சொற்சேர்க்கை அதற்கு உதவுவதும் தெரியும்.
அந்தணர், அரு மறை பற்றியும் அதைக் கேட்டு மகிழும் சிவபிரானைப் போற்றியும் இந்தக் கடவுள் வாழ்த்து அமைகிறது; கலித்தொகைக்குக் கட்டியம் கூறுகிறது!
சங்க கால சிவ பக்தியும் நமக்குப் புரிகிறது.