தொல்காப்பியர் காலத்தில் - நாம் தமிழர் “வட வெங்கடந் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுல கத்து வழக்குஞ் செய்யுளம் ஆயிரு முதலி னெழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தோடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந் தொகுத் தோனே.”
“நிலந்திரு திருவிற் பாண்டியன் அவையற்று அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற்(கு) அரில் தபத் தெரிந்து மயங்கா மரபின், எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் றிறுத்த படிமை யோனே.”
இவை தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தின் பகுதிகளாகும். தொல்காப்பியருடன் படித்தவரான பனம்பாரனார் இப்பாயிரம் எழுதினார் என்பது மரபுக் கதையாகும்.
தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களும் இருபத்தேழு இயல்களும் உடையது. நூற்பாக்களின் எண்ணிக்கை 1610 ஆகும்.
தொல்காப்பியம் ஓரிலக்கண நூலாயினும், பொருளதிகாரத்திலிருந்தும் ஏனைய நூற்பாக்களிலுள்ள சில குறிப்புகளிலிருந்தும் இற்றைக்கு ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தமிழரின் அகவாழ்க்கையையும் புறவாழ்க்கையையும் அறியலாம். ஏனைய மக்கள் எழுத்துக்குஞ் சொல்லுக்குஞ் செய்யுளுக்கும் வசனத்துக்கும் இலக்கணம் வகுத்தனர். வாழ்க்கை நெறிக்கு இலக்கணம் வகுத்தவர் தமிழரைத் தவிர வேறெவராவதுண்டா? பண்டைத் தமிழரின் சீரிய பண்பாட்டிற்கும் உயர்ந்த நாகரிகத்துக்கும் தொல்காப்பியம் ஒன்றே போதிய சான்றாகும்.
வாழ்க்கைப் பொருள்கள் அறம், பொருள், இன்பம் எனும் மூன்றாகும். பிற்காலத்தவர் வீட்டையுஞ் சேர்த்தனர். அறமில்லா வாழ்க்கை ஆறறிவுடைய மனித வாழ்க்கையாகாது.
அகமும் புறமும் வாழ்க்கையின் இரு கூறுகளாகும். இரு துறைகளிலும் ஒத்த வளர்ச்சியில்லாது வாழ்க்கை முன்னேறாது. இக்காலத்திலும் பலருணரா இச் சீரிய உண்மையைத் தொல்காப்பியர் காலத் தமிழர் உணர்ந்திருந்தனர். இருதுறை வாழ்க்கையையும் தொல்காப்பியர் விளக்குகிறார். ஒத்த அன்புகுடைய ஒருவனும் ஒருத்தியும் தாமே எதிர்ப்பட்டுக் காதலுற்றுக் காதல் முதிர்ந்து பெற்றோர் அறிய மணஞ்செய்து வாழும் வாழ்க்கையினை அகப்பொருள் கூறுகிறது. இவ்வாழ்க்கையின் பல்வேறு நிகழ்ச்சிகளையும் அவற்றினால் உண்டாகும் இன்ப துன்பங்களையும் - மலிவு, புலவி, ஊடல், துணி, பிரிதல், கூடல் முதலியனவற்றை – தொல்காப்பியர் காட்டுகிறார். இவ் வாழ்க்கைக்குத் துணையாய செல்வம், கல்வி அரசு பற்றிப் புறப்பொருள் கூறுகிறது.
பண்டைத் தமிழ் நூல்கள் கூறும் வாழ்க்கை நெறிகள் புலவரின் கற்பனை இலட்சியங்களா? இவற்றுக்கும் மக்களின் உண்மையான வாழ்க்கைக்கும் எவ்வளவு தொடர்புண்டு? உண்மையான வாழ்க்கையின் அடிப்படையில் மட்டுமே உன்னத இலட்சியங்கள் தோன்றலாம். எனவே, இவை பெருமளவுக்கு மக்களின் உண்மையான வாழ்க்கை நெறிகளை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஓரளவு இலட்சியமுங் கலந்திருக்கலாம். தொல்காப்பியர் ‘வழக்குஞ் செய்யுளும் நாடி’ இலக்கணம் வகுத்தனர்.
தொல்காப்பியர் காட்டும் அக வாழ்க்கையை முதலிற் சுருக்கமாகப் பார்ப்போம். அக வாழ்க்கைக்குக் காமம் அல்லது காதல் அடிப்படையாகும். “தூய அன்பு” என்ற கருத்திற் காமம் என்ற சொல் அக்காலத்தில் வழங்கப்பட்டது. அதேபோல இன்பம் என்ற சொல்லும் சிறந்த கருத்தில் வழங்கிற்று. பேரின்பம் சிற்றின்பம் என்பவை பிற்காலக் கருத்துக்களாகும். எல்லா உயிர்களுக்கும் இன்பம் இயல்பானது.
“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்.”
அறந்து வழி நின்று செல்வத்தைத் தனது முயற்சியினால் ஈட்டித் தூய அக வாழ்க்கையில் இன்பத்தை அனுபவிப்பது வாழ்க்கையின் நோக்கமாகும்.
தொல்காப்பியர் காலத்தில் ஆண்களும் பெண்களும் தமக்கேற்ற வாழ்க்கைத் துணைவரைத் தாமே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இக்காலத்திற் போலத் தரகருஞ் சீதனமும் டோனேசனும் மணச்சடங்குகளும் அக்காலத்தில் இருக்கவில்லை. மணம் வரையும் இருவருக்குமுள்ள தொடர்புகள் களவியலிலும் மணத்துக்குப் பிற்பட்ட தொடர்புகள் கற்பியலிலும் விளக்கப்படுகின்றன. ஒரு சமுதாயத்தின் உயர்ந்த நாகரிகத்தையும் பண்பாட்டையும் அச்சமுதாயத்திற் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் அளிக்கப்படும் இடத்திலிருந்தும் மதிப்பிலிருந்தும் அறியலாம்.
“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின” எனவும்
“மங்கல மென்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு” எனவும் பிற்காலத்தில், வள்ளுவர் இவ்வுண்மையை விளக்கினார்.
தமிழ் மக்களின் இல்லற வாழ்க்கையின் சிறப்பை வள்ளுவர் இரு நூறு குறள்களில் விளக்குகிறார். இல்லறமெ நல்லறம் என்பர். இல்லறம் நடத்திய பின் யாக்கை நிலையாமையை உணர்ந்து வீட்டு நெறி நிற்கும் தமிழர் வழக்கத்தையும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இது பிற்காலத்தில் எழுந்த உலகை விட்டோடும் சந்நியாசமன்று.
பழைய கற்காலந் தொட்டுத் தமிழ் மக்களிடையிற் சமயவுணர்ச்சி பரவியிருந்தது. குணங்குறிகளும், ஆதியுமந்தமும் இல்லாத எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல அன்பே உருவமான பரம்பொருள் ஒன்று உண்டு எனப் பண்டைத் தமிழ் மக்கள் நம்பினர். இறை வேறு, உயிர் வேறு, உடம்பு வேறு எகும் முப்பொருள் உண்மையை அறிந்திருந்தனர். சொல்லிலுஞ் செயலிலுஞ் சிந்தனையிலும் அறத்தை வற்புறுத்தினர்.
“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்”
“மெய்யோ டியையினும் உயிரியல் திரியா”
தொல்காப்பியர் காலத் தமிழர் கடவைள உருவமாகவும், அருவமாகவும், அருருவமாகவும் வழிபட்டனர். முழு முதலாகிய இறைவனைச் சிவன், மாயோன், சேயோன், கதிரவன் எனும் நாமங்களினால் வழிபட்டனர். சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, இலிங்க வழிபாடு, ஞாயிறு வழிபாடு, திங்கள் வழிபாடு முதலியன பெரு வழக்காக இருந்தன.
ஒவ்வொரு நிலத்திற்கும் சிறப்பாக ஒரு தெய்வத்தைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
மறு பிறப்புண்டு. பிறவிகள் பல உள. இரு வினைகளுக்கேற்ப உயிர்கள் பிறவிகளில் மாறி மாறிச் செல்லும். இச்சித்தாந்தங்களைத் தொல்காப்பியத்திற் காணலாம். இறந்த வீரருக்குக் கல்நட்டு வணங்குதல் தொல்காப்பியர் காலத்திற் பெருவழக்காக இருந்தது.
“காட்சி கால்கோள், நீர்ப்படை நடுதல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்து வென் றிரு மூன்று வகையிற் கல்லொடு புணரச் சொல்லப் பட்ட வெழு மூன்று துறைந்தே.”
தொல்காப்பியர் காலப் புற வாழ்க்கையை இப்போது சுருக்கமாகப் பார்ப்போம். அரசு, போர்வகைகள், வாழ்க்கை முறைகள், கோட்டைகள், கோட்டை மதில்கள், போர்க் கருவிகள், பொறிகள், நிரைகோடல், நிரைமீட்டல், அறங்கூறவையங்கள், துறவு, புலவர் பாடல்கள், பரிசில்கள், கூத்து, விளையாட்டு முதலியனவற்றைப் பற்றித் தொல்காப்பியத்திலுள்ள புறத்திணையியல் கூறுகிறது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை எனும் எண்வகை ஒழுக்கங்களும் புறப்பொருளிற் கூறப்படுகின்றன. சிந்துவெளியிலும் கடைச்சங்க காலத்திலும் போலத் தொல்காப்பியர் காலத்திலே பெரிய நகர வாழ்க்கை இருந்ததற்குச் சான்றுகளில்லை. தொல்காப்பியர் காலத்திலும் தமிழ்நாட்டை மூவேந்தரே ஆண்டனர். ஆனாற் பெரும்பாலும் ஆட்சி சிற்றரசர் கையிலிருந்தது. இச் சிற்றரசுகளிடையில் இடையறாப் போராட்டம் நடந்தது. சிற்றூர்கள் தொடர்பற்றவையாக இருந்தன. எமது இலக்கியங்களிற் குறிப்பிடப்படும் தனிப்பட்ட நானில வாழ்க்கை, தொல்காப்பியர் கால வாழ்க்கை முறையாகும்.
தொல்காப்பியர் காலத் தமிழர் கல்வியிலுங் கலைகளிலுஞ் சிறந்து விளங்கினர். வான நூல், நில நூல், பயிர் நூல், உயிர் நூல், உடல் நூல், உள நூல், இயக்க நூல், கணக்கியல், சிற்பம், ஓவியம் முதலிய துறைகளில் அறிவு வளர்ச்சியடைந்து இருந்தது. இத்துறைகளிற் பல நூல்களும் இருந்திருக்கலாம். அக்கால எண்ண வளவைகளாவன:- தாமரை, குவளை, சங்கம், வெள்ளம், ஆம்பல், நிறுத்தலளவைகளாவன:- கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அற்றை, உம்பி, கா. முகத்தலவைகளாவன:- கலம், சாடி, தூதை, பானை, தாழி, மண்டை, வட்டில், அகல், உழக்கு, தூணி, பதக்கு, உரி.
நல் வாழ்வுக்கு வேண்டிய செல்வம், தொழில் வளர்ச்சி, வாணிபம் முதலியவை யாவும் தொல்காப்பியர் காலத் தமிழகத்தில் இருந்தன. தொழிற்றிறனுக்கே தொல்காப்பியர் இலக்கணம் வகுத்தனர்.
“வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே ஞாலம் கருவி யென்றா”
உழவு, கைத்தொழில், வாணிபம் எனத் தொழில்கள் மூவகைப்படும். கற்காலந் தொட்டு இந்தியாவில் நெல் பயிர் செய்யப்பட்டு வருகிறது. உழவுத் தொழிலைப் பற்றிப் பல குறிப்புக்களைத் தொல்காப்பியத்திற் காணலாம்.
நெல், கம்பு, சோளம், வரகு, சாமை, உழுந்து, கடலை, அவரை, துவரை, தட்டை, பச்சை, கொள்ளு, எள்ளு முதலியன பயிர் செய்யப்பட்டன. நெய்தல் பண்டைத் தமிழ் மக்களின் முக்கிய தொழிலாகும். தொல்காப்பியத்திற் குறிப்பிடப்படும் ஏனைய தொழில்களாவன:- தையல், தச்சு, கொற்றொழில், செம்பு பித்தளை வெண்கலப் பாத்திரங்கள் செய்தல், பலவகைப்பட்ட மட்கலன்கள் செய்தல், ஆபரணங்கள் செய்தல், கண்ணாடித் தொழில், கட்டடப் பொருட்கள் செய்தல், கப்பல் கட்டும், ஒட்டுந் தொழில்கள் முதலியனவையாகும்.
பண்டுதொட்டுத் திராவிட மக்கள் வாணிபத்திற் சிறந்து விளங்கினர். இவர்களே முதன் முதலிற் பிறநாட்டு வாணிபராகவும் கடலோடிகளாகவும் இருந்தனர். உள்நாட்டு வெளிநாட்டு வியாபாரங்கள் தொல்காப்பியத்திற் குறிப்பிடப்படுகின்றன.
“வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை”
“முந்நீர் வழக்கம் மகடூ உவோ டில்லை.”
அக்காலத்திலேயே இந்தியாவிற்கும் எகிப்து மேற்காசிய நாடுகள் முதலியனவற்றிற்கும் இடையில் வியாபாரம் நடந்தது. தென்னிந்தியப் பொருட்களான தேக்கு, மல்மல் ஆடை, மண வகைகள் எகிப்திய கூரங் கோபுரங்களிற் கண்;டெடுக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு நாட்டின் செல்வத்தை அந்நாட்டுப் பெண்மணிகளின் அணிகலன்களிலிருந்து அறியலாம். தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்ப் பெண்கள் பொன்னாலும் மணிகளினாலும், முத்துக்களினாலும் செய்யப்பட்ட பலவகை ஆபரணங்கள் அணிந்தனர். ஆண்களும் பெண்களும் மலர்மாலை சூடினர். குங்குமச் சந்தனக் குழம்பால் மேனியில் எழுதினர். தொய்யில் எழுதல், கண்ணுக்கு மை போடல், இதழுக்கும் நகங்களுக்கும் செம்பஞ்சுக் குழும்பு பூசல், அக்கால வழக்கங்களாகும். மக்கள் பலவகைப்பட்ட மண் வகைகளை உபயோகித்தனர். முகத்துக்குப் பொற்கண்ணம், குங்குமச் சந்தனக் கலவை@ உடலுக்குத் தேய்த்துக் குளிக்கும் நறும்பொடி@ குழலுக்குத் தடவும் நறுநெய்@ கூந்தலுக்கு ஊட்டும் அகிற்புகைசூ ஆடைக்குப்போடும் மட்டுப்பால்.
தொல்காப்பியர் காலத்திலே நான்கு நாகரிகங்களை மட்டுமே குறிப்பிடலாம். எகிப்திய நாகரிகம், சுமேரிய நாகரிகம், திராவிட நாகரிகம், சீனர் நாகரிகம் இவை நெருங்கிய தொடர்புடையவையாகும். அக்காலத்தில் ஏனைய மக்ள் மிருகங்களோடு மிருகங்களாய்க் காடுகளிலும் மலைகளிலும் மரங்களிலும் குகைகளிலும் வசித்தனர். அக்காலத்திலே தமிழ் தவிர்ந்த எம்மொழியாவது செம்மொழியாக இருக்கவில்லை. தொல்காப்பியர் காலத்திலேயே முத்தமிழும் செம்மை நிலையடைந்துவிட்டன. தொல்காப்பியம் முத்தமிழ் இலக்கணமாகும். பலவகைப்பட்ட இசை நுணுக்கங்களுங் கருவிகளும் கூத்துக்களும் தொல்காப்பியத்திற் குறிப்பிடப்படுகின்றன.
தொல்காப்பியம் பழந்தமிழ் மக்களின் வரலாற்றுக் கண்ணாடி, ஒப்புயர்வில்லா ஒழுக்கக் களஞ்சியம், இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் தமிழர் இறையுணர்ச்சியும், அன்பும், அறனும், பண்பும், பயனும், காதலும், வீரமும் செறிந்த வாழ்க்கை நடத்தினோம். தமிழ் தன்னிகரில்லாத் தனிமொழி, உலக முதல்மொழி. உயர் தனிச் செம்மொழி. கி.மு. 14000இற் முன்னரே பெருவள நாட்டிற்றோன்றி அக்காலத்திலேயே இலக்கிய இலக்கண வளம் பெற்றுவிட்டது. தொல்காப்பியர் காலத்திலேயே - இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே - இயல், இசை நாடகம் எனும் முத்தமிழும் வளர்ச்சியடைந்து விட்டனவென்றால், தமிழ் மொழியின் பழமைக்கும் பெருமைக்கும் வேறு சான்று வேண்டுமா? நாம் தமிழர், எமது மொழி தமிழ். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னே நாம் தமிழர் இவ்வுன்னத நாகரிகத்துடனும் செல்வத்துடனும் வாழ்ந்தோமென்றால், மற்றவர்கள் அதை நம்ப முடியாதிருப்பது இயல்பாகும். இதைத் தற்புகழ் என நினைக்கலாம். ஆனால், இஃது உண்மை. மற்றவர்கள் நம்பாமைக்குக் காரணம் எமது தற்கால நிலைமையாகும்.