Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழும் சமஸ்கிருதமும்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
தமிழும் சமஸ்கிருதமும்
Permalink  
 


Raja

**தமிழும் சமஸ்கிருதமும்**

"ஆடியல் அழல்குட்டத்து" எனத் தொடங்
கும் புறநானூற்றுப் பாடலில் (229) கூட
லூர் கிழார், யானைக்கட்சேய் மாந்தரஞ்
சேரல் இரும்பொறையின் இறக்கும் நாள்
நெருங்கிவிட்டதை பங்குனி மாதத்தின்
தலைநாளில் எரிநட்சத்திரம் விழுவதைப்
பார்த்து கணித்து விடுகிறார்.

"உத்திர நட்சத்திரம் உச்சியிலிருந்து சாய
மூல நட்சத்திரம் எழ, மிருகசீரிடம் மறைய
ஒரு மீன் வடக்கும் (பாசி), கிழக்கும் (ஊசி)
போகாமல் இடையில் தீயாக விழுந்தது"
என்று பாடுகிறார்.

'வடக்கு' எனப் பொருள்படும் 'பிராசி' என்ற பிராகிருதச் சொல், தமிழில் 'பாசி'
என்றானது. அதேபோல் 'கிழக்கு' எனப்
பொருள்படும் 'உதீசி', 'ஊசி' என்றானது!

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்
திய முதல் முயற்சி இது. சமஸ்கிருதத்தை
விடப் பழமையான கங்கைச் சமவெளி மக்கள் பேசிவந்த பல பிராகிருதச் சொற்
கள் பின்னல் 'செய்யப்பட்ட' மொழியாகிய
சமஸ்கிருதத்தில் காணப்படுகிறன.

எனவே ஏற்கனவே வழக்கில் இருந்த
சிந்து சமவெளியின் மூலத் திராவிடச்
சொற்களையும், கங்கைச் சமவெளியில்
பேசப்பட்டு வந்த பிராகிருதச் சொற்களை
யும், புதிதாகச் செய்யப்பட்ட சமஸ்கிருதம்
தன்னுடைய மூல- இந்தோ- ஐரோப்பிய-
ஈரானிய மொழியில் ஏற்றுக் கொண்டது
என்பதே முதலில் நிகழ்ந்தது!

சில பிராகிருதச் சொற்களோடு, சமஸ்கி
ருதத்தின் சில சொற்களையும் சங்க இலக்கியம் ஏற்றுக்கொண்டது என்பது
தொடர் நிகழ்வு!

இந்தப் பரிமாற்றம் ஒருவழிப்பாதையாக
இல்லை; இரண்டு பக்கமும் 'கொள்வதும்,
கொடுப்பதும்' நிகழ்ந்தது!
(தொடர்ந்து சிந்திப்போம்)



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

229. மறந்தனன் கொல்லோ?

 
பாடியவர்: கூடலூர் கிழார் (229). சங்க காலத்தில் கூடலூர் என்ற ஒரு ஊர், இன்று கேரள மாநிலத்தில் உள்ள பாலைக்காட்டு வட்டத்தில் (Palghat Taluk) இருந்தது. இப்புலவர் அந்த ஊரைச் சார்ந்தவராக இருந்திருக்கலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இப்புலவர் புறநானூற்றில் இயற்றிய இப்பாடல் மட்டுமின்றி, குறுந்தொகையில் மூன்று பாடல்களையும் (166,167, 214) இயற்றியுள்ளார். சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் வேண்டுகோளுக்கு இணங்கி, எட்டுத்தொகையில் உள்ள ஐங்குறுநூறு என்னும் நூலை இவர் தொகுத்ததாகக் கூறப்படுகிறது.

இவர் வானவியலில் மிகவும் சிறந்த அறிஞர் என்பது அவர் இயற்றிய இப்பாடலிலிருந்து நன்கு தெரியவருகிறது.
பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (17, 20, 22, 53, 229). பதிற்றுப்பத்து என்னும் எட்டுத்தொகை நூலில் பல சேர மன்னர்களின் வரலாறு காணப்படுகிறது. அந்நூலில் கூறப்படாத இரும்பொறை மரபைச் சார்ந்த மன்னர்களுள் இவன் ஒருவன். மற்றொருவன் கணைக்கால் இரும்பொறை என்பவன்.

இவன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றும், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றும் அழைக்கப்பட்டான். இவனது இயற்பெயர் சேய். யானையினது நோக்குப் போலும் நோக்கினையுடையவன் என்பது குறித்து இவன் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்று அழைக்கப்பட்டான். “யானைக்கண்” என்பதற்கு மற்றொரு விளக்கமும் கூறப்படுகிறது. முருகப்பெருமான் சூரனை வெல்லப் பிணிமுகம் என்னும் யானைமீது அமர்ந்து சென்றது போல் இவன் யானைமீது ஏறிச் சென்றதை ஒப்பிட்டு “யானைக்கட் சேய்“ என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது ஒருசாரார் கருத்து.

ஒருசமயம், இவன் இராசசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளியுடன் போரிட்டு அப்போரில் தோல்வியுற்றான். பின்னர், இச்சேரமன்னனுக்கும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் இடையே போர் மூண்டது. அப்போரில், இவன் பாண்டியனிடம் தோல்வியுற்று சிறையில் அடைக்கப்பட்டான். பிறகு, தன் வலிமையால் சிறைக் காவலரை வென்று தப்பிச் சென்று தன் நாட்டை மீண்டும் ஆட்சி செய்தான் (புறநானூறு -17).

இச்சேரமான் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூறு என்னும் நூலைத் தொக்குப்பித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு பாடப்பட்ட சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தொண்டி என்னும் ஊரைத் தலநகராகக்கொண்டு கி. பி. 200 - 225 காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது (சுப்பிரமனியன், பக்கம் 45).
பாடலின் பின்னணி: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் இறுதி நாட்களில், பங்குனி மாதத்தில் வானிலிருந்து ஒரு விண்மீன் (நட்சத்திரம்) தீப்பிழம்புபோல் ஒளியுடன் எரிந்து விழுந்தது. பங்குனி மாதத்தில் விண்மீன் எரிந்து விழுந்தால் அரசனுக்கு கேடுவரும் என்பதை கூடலூர் கிழார் நன்கு அறிந்திருந்தார். அந்த விண்மீன் எரிந்து விழுந்ததையும், மற்றும் சில விண்மீன்களின் நிலையினையும் ஆராய்ந்த கூடலூர் கிழார், சேரன் இன்னும் ஏழு நாட்களில் இறப்பான் என்பதை உணர்ந்தார். அவர் எண்ணியதுபோல் ஏழாம் நாளில், சேரன் இறந்தான். அன்று, வேறு சில தீய நிமித்தங்களும் நிகழ்ந்தன. விண்மீன் எரிந்து விழுந்ததையும், மற்றும் அப்பொழுது நிகழ்ந்த தீய நிமித்தங்களையும், சேரன் இறந்ததையும் இப்பாடலில் கூடலூர் கிழார் வருத்தத்துடன் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

ஆடுஇயல் அழல்குட்டத்து
ஆர்இருள் அரைஇரவில்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயம்காயப்,
5 பங்குனிஉயர் அழுவத்துத்
தலைநாள்மீன் நிலைதிரிய,
நிலைநாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,
தொல்நாள்மீன் துறைபடியப்,
பாசிச் செல்லாது ஊசி முன்னாது
10 அளக்கர்த்திணை விளக்காகக்
கனைஎரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே
அதுகண்டு, யாமும்,பிறரும் பல்வேறு இரவலர்
பறைஇசை அருவி நன்னாட்டுப் பொருநன்
15 நோயிலன் ஆயின் நன்றுமற்று இல்லென
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப
அஞ்சினம் எழுநாள் வந்தன்று இன்றே;
மைந்துடை யானை கைவைத் துஉறங்கவும்
திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்
20 காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்
கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
ஒண்தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகித்
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ
25 பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு
அளந்துகொடை அறியா ஈகை
மணிவரை அன்ன மாஅ யோனே?

அருஞ்சொற்பொருள்:
1. ஆடு இயல் = ஆடு போன்ற உருவமுடைய மேட இராசி; அழல் = நெருப்பு, தீ; குட்டம் = கூட்டம்; அழல் குட்டம் = நெருப்புப் போன்ற நிறமுடைய ஆறு நட்சத்திரங்களின் கூட்டமாகிய கார்த்திகை என்னும் நட்சத்திரம். 3. ஆர் = நிறைந்த; அரை = பாதி; அரையிரவு = நடு இரவு. 3. முடம் = நொண்டி; முடப்பனை = வளைந்த பனைமரம் போன்ற தோற்றமுடைய அனுடம் என்னும் நட்சத்திரம் (அனுடம் என்னும் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டம்; ஒரு தனி நட்சத்திரம் அல்ல.); முடப்பனையத்து வேர்முதல் = வளைந்த பனைமரம்போல் தோற்றமளிக்கும் அனுட ம் என்னும் நட்சத்திரக் கூட்டத்தின் அடிப்பகுதிக்கு முந்திய நட்சத்திரம் (கேட்டை). 4. கடைக்குளத்துக் கயம் காய = கயம் குளத்து கடை காய = கயமாகிய குளத்தைப்போல் தோற்றமளிக்கும் புனர்பூச நட்சத்திரத்தின் முடிவிலே உள்ள நட்சத்திரமாகிய திருவாதிரை (புனர்பூசம் என்பது ஒரு சில நட்சத்திரங்களின் கூட்டம்) எல்லையாக உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் (திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுடம், கேட்டை) விளங்கிக் காய. 5. உயர் அழுவம் = முதல் பதினைந்து நாட்கள். 6. தலைநாள் மீன் = உத்தரம் என்னும் நட்சத்திரம். 7. நிலைநாள் மீன் = எட்டாம் மீன் (உத்தரம் என்னும் நட்சத்திரத்திலிருந்து நட்சத்திர வரிசையில் உள்ள எட்டாம் நட்சத்திரமாகிய மூலம்) ; ஏர்தல் = எழுதல். 8. தொல்நாள் = உத்தரத்திற்கு முன்னதாக நட்சத்திர வரிசையில் உள்ள எட்டாம் நட்சத்திரமாகிய மிருகசீரிடம். 9. பாசி = கிழக்கு; தூசி = வடக்கு; முன்னுதல் = படர்ந்து செல்லுதல். 10. அளக்கர் = கடல்; திணை = பூமி. 11. கனை = ஒலி; கால் = காற்று; எதிர்பு பொங்கி = கிளர்ந்து எழுந்து. 16. மடிதல் = வாடுதல்; பரத்தல் = அலமருதல் (கலங்குதல்). 20 பரிதல் = ஒடிதல்; உலறுதல் = சிதைதல் (முறிதல்). 21. கதி = குதிரை நடை; வைகல் = தங்கல். 24. ஆயம் = கூட்டம். 25. பிணிதல் = சாதல். 27. மணி = நீலமணி; மாயோன் = திருமால்.

உரை: ஒரு பங்குனி மாதத்து முதற் பதினைந்து நாட்களுள், மேட இராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்தில், இருள் நிறைந்த நடு இரவில், வளைந்த பனைமரம்போல் தோற்றமளிக்கும் அனுட ம் என்னும் நட்சத்திரக் கூட்டத்தின் அடிப்பகுதிக்கு முந்திய நட்சத்திரமாகிய கேட்டை முதலாக, கயமாகிய குளத்தைப்போல் தோற்றமளிக்கும் புனர்பூச நட்சத்திரத்தின் முடிவிலே உள்ள நட்சத்திரமாகிய திருவாதிரை நட்சத்திரம் எல்லையாக உள்ள நட்சத்திரங்கள் பதின்மூன்றும் (கேட்டை, அனுடம், விசாகம், சுவாதி, சித்திரை, அத்தம், உத்தரம், பூரம், மகம், ஆயில்யம், பூசம், புனர்பூசம் திருவாதிரை) விளங்கிக் காய்ந்தன. அப்பொழுது உத்தரம் என்னும் நட்சத்திரம் உச்சத்தில் (வானின் நடுவில்) இருந்தது. அந்த உத்தர நட்சத்திரம் அவ்வுச்சியிலிருந்து சாய்ந்தது. அந்த உத்தர நட்சத்திரத்திற்கு எட்டம் நட்சத்திரமாகிய மூலம் அதற்கு எதிராக எழுந்தது. அந்த உத்தரத்திற்கு எட்டாம் நட்சத்திரமாகிய மிருகசீரிடம் மேற்கே சாய்ந்து மறையும் நேரத்தில், கடல் சூழந்த உலகுக்கு விளக்குப்போல் வானில் ஒரு நட்சத்திரம் கிழக்கும் போகாமல், வடக்கும் போகாமல், வடகிழக்காக, பெருமுழக்கத்தோடு காற்றில் கிளர்ந்து எழுந்து தீப்பரந்து சிதறி வீழ்ந்தது. அதைக் கண்டு, நாம் பலரும் பல்வேறு இரவலரும், “பறை ஓசைபோல் ஒலிக்கும்அருவிகள் நிறைந்த நல்ல மலைநாட்டின் தலைவனாகிய சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை நோயின்றி இருப்பது நல்லது” என்று வருந்திய நெஞ்சத்துடன் வாடிக் கலங்கி அஞ்சினோம். அந்த நட்சத்திரம் விழுந்து இன்று ஏழாம் நாள். இன்று, வலிய யானை தன் தும்பிக்கையை நிலத்தில் வைத்து உறங்கியது. வாரால் பிணிக்கப்பட்ட முரசு கிழிந்து உருண்டது. காவலுக்கு அடையாளமாக இருக்கும் கொற்றக்குடையின் காம்பு ஒடிந்து சிதைந்தது. காற்றைப்போல் விரைந்து செல்லும் குதிரைகள் நிலைகலங்கி நின்றன. இந்நிலையில், பகைவரைக் கொல்லும் வலிமையும், தன்னை நாடி வந்தவர்களுக்கு அளவற்ற பொருட்களை அளித்த கொடைவள்ளலும், நீலநிறமுடைய திருமால் போன்றவனுமாகிய சேரன் விண்ணுலகம் அடைந்தான். தன் மனைவியர்க்கு உறுதுணையாக இருந்தவன் அவர்களை மறந்தனனோ?

சிறப்புக் குறிப்பு:
நட்சத்திரங்கள்: 1. அசுவினி, 2. பரணி, 3. கார்த்திகை, 4. ரோகிணி, 5. மிருகசீரிடம், 6. திருவாதிரை, 7. புனர்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம், 10. மகம், 11. பூரம், 12. உத்தரம், 13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. சுவாதி, 16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை, 19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம், 22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம், 25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி.

இராசிகள்: 1. மேடம், 2. ரிஷபம், 3. மிதுனம், கடகம், 5, சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுர், 10. மகரம், 11. கும்பம், 12. மீனம்.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

166. யாமும் செல்வோம்!

 
பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்(38, 40, 166, 177, 178, 261, 301). இவர் ஆவூர் மூலம் என்னும் ஊரைச் சார்ந்தவர். இவர் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனையும், மல்லி கிழான் காரியாதியையும், பாண்டியன் கீரஞ்சாத்தனையும், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் பாடியவர்.
பாடப்பட்டோன்: சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன். இவன் சோழநாட்டில் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள பூஞ்சாற்றுர் என்ற ஊரில் வசித்தவன். இவன் கௌண்டின்னிய கோத்திரத்தைச் சார்ந்தவனாதலால் கௌணியன் என்று அழைக்கப் பட்டான். விண்ணன் என்பது இவன் தந்தையின் பெயர். இவன் இயற் பெயர் தாயன்.
பாடலின் பின்னணி: ஒரு சமயம், சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் ஒரு வேள்வி நடத்தினான். அவ்வேள்விக்கு ஆவூர் மூலங் கிழார் சென்றிருந்தார். அவ்வேள்வியின் சிறப்பையும் விண்ணந்தாயனின் வள்ளல் தன்மையையும் இப்பாடலில் ஆவூர் மூலங் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: பார்ப்பன வாகை. கல்வி கேள்விகளால் சிறந்த பார்ப்பானின் வேள்விச் சிறப்பையும் வெற்றியையும் புகழ்ந்து பாடுவது.

நன்றாய்ந்த நீள்நிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒருமுதுநூல்
5 இகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்அன்ன பொய்உணர்ந்து
பொய்ஓராது மெய்கொளீஇ
மூவேழ் துறையும் முட்டின்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!
10 வினைக்குவேண்டி நீபூண்ட
புலப்புல்வாய்க் கலைப்பச்சை
சுவல்பூண்ஞாண் மிசைப்பொலிய;
மறம்கடிந்த அருங்கற்பின்
அறம்புகழ்ந்த வலைசூடிச்
15 சிறுநுதல்பேர் அகல்அல்குல்
சில சொல்லின் பலகூந்தல் நின்
நிலைக்குஒத்தநின் துணைத்துணைவியர்
தமக்குஅமைந்த தொழில்கேட்பக்;
காடுஎன்றா நாடுஎன்றுஆங்கு
20 ஈரேழின் இடம்முட்டாது
நீர்நாண நெய்வழங்கியும்
எண்நாணப் பலவேட்டும்
மண்நாணப் புகழ்பரப்பியும்
அருங்கடிப் பெருங்காலை
25 விருந்துற்றநின் திருந்துஏந்துநிலை
என்றும் காண்கதில் அம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்
30 உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்
செல்வல் அத்தை யானே; செல்லாது
மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவளர் இமயம் போல
நிலீஇயர் அத்தைநீ நிலமிசை யானே.

அருஞ்சொற்பொருள்:
1.ஆய்தல் = நுணுகி அறிதல். 2.முது முதல்வன் = இறைவன் (சிவன்); நிமிர் = மேன்மை. 3. புரிதல் = செய்தல். 5. இகல் = மாறுபாடு; மிகல் = வெற்றி, செருக்கு; சாய்தல் = அழிதல்; ஆர்வு = விருப்பம். 7. ஓராது = ஆராயாது; கொளீஇ = கொண்டு. 8. துறை = காரியம் ( வேள்வி); முட்டு = குறைவு. 9. உரவோர் = அறிஞர், முனிவர்; மருகன் = வழித்தோன்றல். 11. புலம் = வயல், இடம்; புல்வாய் = கலைமான். 12. சுவல் = தோள்மேல்; ஞாண் = கயிறு; மிசை = மேல். 13. மறம் = மிகுதி; கடிந்த = நீக்கிய. 14. வலை = ஒரு வகை ஆடை. 20. முட்டாது = குறையாது. 24. கடி = வேள்வி; பெருகுதல் = நிறைதல். 26. தில், அம்ம - அசைச் சொல். 27. வரை = மலை; சிலைத்தல் = முழங்குதல்; புயல் = மேகம்; ஏறு = இடி. 28. புரக்கும் = க்காக்கும். 29. படப்பை = தோட்டம், புழைக்கடை. 31. அத்தை - அசைச் சொல். 32. அண்ணாத்தல் = தலை நிமிர்தல், தலையெடுத்தல். 33. கழை = மூங்கில்.

கொண்டு கூட்டு: உரவோர் மருக, உன் ஏந்து நிலை என்றும் காண்போமாக; யாமும் பரிசில் கொண்டு கொண்டாடுவோமாகச் செல்வேன்; நீ இமயம் போல நிலைபெறுக.

உரை: மேன்மை பொருந்திய நீண்ட சடையை உடைய, எல்லாவற்றையும் நன்கு நுணுகி அறிந்த, முழுமுதற் கடவுளாகிய சிவனின் வாக்கிலிருந்து நீங்காது அறம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட, நான்கு பிரிவுகளும் ஆறு உறுப்புகளும் உடைய பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபாடுகளைக் கண்டோரின் செருக்கை அழிக்க விரும்பி, அவரது மெய் போன்ற பொய்யை உணர்ந்து, அப்பொய்யை மெய்யென்று கருதாமல், மெய்யைக் கொண்டு இருபத்தொரு வேள்வித் துறைகளையும் குறையின்றிச் செய்து முடித்த, சொல்லுதற்கரிய சிறப்புடைய முனிவர்களின் (அறிஞர்களின்) வழித்தோன்றலே!

வேள்விக்காக, நீ காட்டு மானின் தோலை உன் பூணுலுக்கு மேல் அணிந்திருக்கிறாய். குற்றமற்ற, அரிய கற்பும், அற நூல்களில் புகழப்பட்ட வலை என்னும் ஆடையையும், சிறிய நெற்றியையும், அகன்ற இடையையும், அதிகமாகப் பேசாத இயல்பையும், மிகுதியான கூந்தலையும் உடைய, உன் தகுதிக்கேற்ற துணைவியராகிய உன் மனைவியர் அவர்களுக்கு இடப்பட்ட பணிகளைச் செய்கின்றனர். காட்டிலும் நாட்டிலும் வாழ்ந்த பதினான்கு பசுக்களின் நெய்யை, நீரைவிட அதிகமாக வழங்கி, எண்ணற்ற பல வேள்விகளைச் செய்து உலகெங்கும் புகழ் பரப்பிய, அரிய வேள்வி நிறைவு பெறும் வேளையில் விருந்தினரோடு கூடியிருக்கும் உன் மேன்மையான நிலையை இன்றுபோல் நாங்கள் என்றும் காண்போமாக; மேற்கில், பொன் மிகுதியாக உள்ள உயர்ந்த மலையில் மேகம் இடியோடு முழங்கியதால் மலர்ந்த பூக்களைச் சுமந்து வரும் காவிரியில் புது வெள்ளம் பெருகி வருவதால் குளிர்ந்த நீருடைய தோட்டங்களுடைய எங்கள் ஊரில், நாங்கள் உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடியும் மகிழ்வோம்; யான் செல்கிறேன். மேகங்கள் அகலாது மழை பொழியும் உயர்ந்த மலைகளையுடைய, மூங்கில் வளரும் இமயம் போல் நீ இவ்வுலகில் வாழ்வாயாக.

சிறப்புக் குறிப்பு: இரிக்கு, யஜுர், சாம, அதர்வணம் என்பவை வேதத்தின் நான்கு பிரிவுகளாகும். சிட்சை, நிருத்தம், சந்தசு, சோதிடம், கற்பம், வியாகர்ணம் என்ற ஆறு நூல்களும் வேதத்தின் ஆறு அங்கங்களாகும்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard