Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 133. ஒழுக்கம் உடைமை குடிமை


Guru

Status: Offline
Posts: 7474
Date:
133. ஒழுக்கம் உடைமை குடிமை
Permalink  
 


 இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:133)

பொழிப்பு: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.

மணக்குடவர் உரை: ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும்.
இது குலங்கெடுமென்றது.

பரிமேலழகர் உரை: ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம் , இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.
(பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.)

வ சுப மாணிக்கம் உரை: விடா ஒழுக்கமே உயர்ந்த குடிப்பிறப்பு; ஒழுக்கத்தை விடுவது விலங்குப் பிறப்பு.

பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.


ஒழுக்கம் உடைமை குடிமை:
பதவுரை: ஒழுக்கம்-நடத்தை; உடைமை-உடையனாந் தன்மை; குடிமை-உயர்குடிப் பிறப்புத் தன்மை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்;
பரிதி: ஒழுக்கமுடைமையைப் பேணி வைக்கிறாப்போலே ஒழுக்கத்தையும் அப்படிப் பேணிக் கொண்டு வரவும்;
காலிங்கர்: ஒருவர்க்கு ஒழுக்கமுடைமையாகிய செல்வமே குலப் பண்பாவது;
பரிமேலழகர்: எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம்;

மணக்குடவர் 'இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாயின் உயர் குலத்தானாவான்' என்றும் பரிதி 'ஒழுக்கமுடைமையைப் பேணி வைக்கிறாப்போலே ஒழுக்கத்தையும் பேணிக் கொள்ள வேண்டும்' என்றும் காலிங்கர் 'ஒழுக்கச்செல்வமுடைமையே குலப் பண்பு' என்றும் பரிமேலழகர் 'வருணாசிரமங்களுக்கு ஏற்ற ஒழுக்கம் உடைமையே குலனுடைமை' என்றும் உரை செய்தனர். வள்ளுவம் கூறும் அறத்துக்கும் வருணாச்சிரம தர்மத்துக்கும் தொடர்பே இல்லை எனவே பரிமேலழகர் உரை பொருத்தமில்லை.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒழுக்கம் உடைமையே நற்குடிப் பிறப்பாகும்', 'உயர்ந்த குலம் என்பதே உயர்ந்த ஒழுக்கத்தினால்தான்', 'ஒழுக்கமுடைமை குடிச்சிறப்பாகும்', 'நல்ஒழுக்கம் உடைமையே நற்குடிப் பிறப்பாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒழுக்கமுடையவனாக உள்ளவர் உயர்குடியைச் சேர்ந்தவனாகக் கருதப்படுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்:
பதவுரை: இழுக்கம்-பிழை; இழிந்த-தாழ்ந்த; பிறப்பாய்-பிறப்பாக; விடும்-விடும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது குலங்கெடுமென்றது.
பரிதி: இழுக்கம் பலருக்கும் இகழப்பட்டபடியினாலே அவன் கடையான பிறப்பு என்றவாறு.
காலிங்கர்: மற்று அவர் தமது ஆசாரத்தின்கண் இழுக்கமானது எது? அதுவே இழிந்த பிறப்பாய் விடும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அல்லதூஉம் செல்வமும் பிறர்க்கு ஒன்றினை ஈதலும் அற்றாராயினும் அவரைக் குடிப்பிறப்பின்கண் கூட்டிக்கொளல் ஆகும்; குடிப்பிறந்தார் தமது ஆசாரத்தின்கண் வழுவின் தன்குடியில் கூட்டிக்கொளல் அரிது.
பரிமேலழகர்: அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.
பரிமேலழகர் குறிப்புரை: பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.

'ஒழுக்கம் தப்பியவன் உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானே' என்று மணக்குடவரும் 'ஒழுக்கம் குறைந்தவன் கடையான பிறப்பு' என்று பரிதியும் 'ஒழுக்கம் குன்றினால் குடிப்பிறப்பாளனாகக் கூறவும் முடியாது' என்று காலிங்கரும் 'ஒழுக்கத்தில் தவறியவன் தாழ்ந்த வருணத்தராவர்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒழுக்கத்தின் வழுவுதல் இழிபிறப்பாய் (அஃறிணையாய்) விடும்', 'ஒழுக்கத்தில் தாழ்ந்தால் குலத்திலும் தாழ்ந்தவனாகி விடுகிறான்', 'ஒழுக்கத்தில் தவறுதல், ஒருவனைத் தாழ்ந்த குலத்தினன் ஆக்கிவிடும்', 'அவ்வொழுக்கத்தில் தவறுதல் தாழ்ந்த குடியாகும் (நல்ல ஒழுக்கமுடையவர் உயர்ந்த சாதியென்றும் தீய ஒழுக்கமுடையவர் தாழ்ந்த சாதியென்றும் கூறப்படுகின்றது)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஒழுக்கத்தில் தவறுதல் தாழ்ந்த பிறப்பாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒழுக்கமுடைமை-ஒழுக்கமின்மை என்பதுதான் உயர்குடிச்சிறப்பு, இழிபிறப்பு என்று வேறுபடுத்துவதற்கு உரைகல்.

ஒழுக்கமுடையவனாக உள்ளவர் உயர்குடியைச் சேர்ந்தவனாகக் கருதப்படுவர்; ஒழுக்கத்தில் தவறுதல் இழிந்த பிறப்பாய் ஆகிவிடும் என்பது பாடலின் பொருள்.
இழிந்தபிறப்பு என்றால் என்ன?

ஒழுக்கமுடைமை என்ற சொல்லுக்கு நல்லொழுக்கம் உடைமை என்பது பொருள்.
குடிமை என்ற சொல் உயர்குடித்தன்மை என்ற பொருள் தரும்.
இழுக்கம் என்ற சொல்லுக்கு தவறுதல் என்று பொருள்.

நல்ல ஒழுக்கம் மிகுந்தவராய் ஒருவர் வாழ்வது நல்ல சிறப்பான குடும்பத் தன்மையை உணர்த்துகிறது. ஒழுக்கத்தில் தவறுதல் விலங்குப் பிறப்பாக எண்ணப்பட்டுத் தாழ்ந்த குடித் தன்மையை உணர்த்துவதாகும்.

'குடி என்னும் சொல் தலைக்கட்டு, குடும்பம், சரவடி (கோத்திரம், குலம், குடிகள் ( நாட்டினம் ) என்னும் ஐவகை மக்கட் கூட்டத்தையுங்குறிக்கும்' என்று இக்குறளுக்கான விளக்கவுரையில் தேவநேயப்பாவாணர் கூறியுள்ளார். பழம் ஆசிரியர்களும் பின்வந்தவர்களில் பெரும்பான்மையோரும் குடி என்பதற்குக் குலம் என்று பொருள் கொண்டனர். ஆனால் இக்குறளிலுள்ள குடி என்பதற்கு குடும்பம் என்னும் பொருளே பொருத்தமாகிறது.
குடிமை என்றால் என்ன? வ சுப மாணிக்கம் 'மக்கட்பிறப்பிற் கேற்ற ஒழுக்கமுடைமை குடிமையாம்' என்று குறளின் முதற்பகுதிக்கு சிறந்த பொருள் கூறினார். குன்றக்குடி அடிகளார் 'குடிமை-citizenship. குடிமைக்குரிய நல்லொழுக்கம் பரந்த நாட்டுச் சமுதாயத்துடன் இணக்கமாக வாழ்தல்; நல்லொழுக்கமுடைமையே நாட்டின் உறுப்பாகிய குடிமகனுக்குரிய இலக்கணம்; உரிமை' என உரைப்பார். 'விலங்கிலிருந்து மனிதர்களைப் பிரித்து உயர்த்திக் காட்டுவது ஒழுக்கச் சார்பேயாகும்' எனவும் விளக்கம் தருவார். 'எவனொருவன் நற்குடிப் பிறப்புடையவனோ அவன் தன் குடிக்குத் தீங்கும் பழியும் உண்டாகாமல் தடுப்பதற்காகவாவது நல்லொழுக்கமுடையனாய் வாழவேண்டும் என்றார்' என்பது ஜி வரதராஜன் விளக்கம்.
இழுக்கம் என்ற சொல் பிழை, வழுவுதல், தவறுதல், குற்றம் என்ற பொருள்களில்தான் திருக்குறளில் பயன்பட்டு வந்திருக்கிறது. இங்கு தவறுதல் அல்லது வழுவுதல் என்பது பொருத்தம்.

ஒழுக்கமுடைமையே உயர்குடியாகும் தன்மையைத் தரும்; ஒழுக்கத்தில் தவறுதல் இழிந்த பிறப்பாகக் கருதப்படும் என்பது இக்குறள் கூறவரும் செய்தி. அதாவது நல்ல நடத்தையே ஒருவரது குடியின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அளவுகோலாகும் என்பது கருத்து.
ஒழுக்கமாய் இருக்கும்வரை ஒருவருக்கு 'நல்ல குடும்பத்தில் உள்ளவன்' என்ற புகழ் கிடைக்கும். ஒழுக்கம் கெட்டால் பிறப்பே ஐயத்துக்குள்ளாகிறது. அந்த அவப்பெயர் குடும்பத்தைச் சார்கிறது. தன் குடும்பப் பெருமையை இழக்க யாரும் விரும்பமாட்டார்கள். தன் குடிச்சிறப்பு காக்கப்படவேண்டுமானால் ஒருவன் ஒழுக்கமாக நடக்க வேண்டும்.
ஒழுக்கத்தினால்தான் உயர்ந்த குடி, தாழ்ந்த குடி என்ற பெருமை சிறுமைகள் ஏற்படுகின்றன. ஒழுக்கம் உடைமையே சிறந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கமற்ற செயல் இழிந்தகுடிப்பிறப்பின் தன்மையாகிவிடும். ஒழுக்கம் தவறி நடப்பவன் தம் மானிடப் பிறப்பையே இழிவு படுத்துகிறவன் என்றும் அது அவனை இழிந்த பிறப்பாகக் கருத வைத்துவிடும் என்றும் இக்குறள் சொல்கிறது.

 

இழிந்தபிறப்பு என்றால் என்ன?

இழிந்த என்ற சொல்லுக்கு இழிவான என்பது பொருள். பிறப்பு என்ற சொல் பிறத்தல் என்ற பொருள் தருவது. தீயொழுக்கம் கொண்டால், அது ஒருவனது பிறப்பையே தாழ்மைப்படுத்தி இழிந்த பிறப்பாய் ஆக்கி விடும் என்பது இழிந்த பிறப்பாய்விடும் என்ற தொடரை விளக்குவர்.
பிறப்பு ஒக்கும் என்று சொன்ன வள்ளுவர் பிறப்பிலேயே இழிந்த பிறப்பு என்று இங்கு சொல்கிறாரே? அப்படியென்றால் பிறப்பிலே இழிவு/உயர்வு உண்டுதானே? என்று சிலர் ஐயவினா எழுப்புகின்றனர்.
மேலே சொன்னபடி இக்குறள் குடும்பத்தை/குடியைப் பற்றியதுதான் அதாவது. ஒருவரது ஒழுக்கவாழ்வுதான் அவர் வாழுங்காலத்திலும் வருங்காலத்துக்கும் விட்டுச் செல்லும் குடிப்பெருமை/சிறுமை ஆகும் என்பதைச் சொல்வது. குடும்பப் பெருமை பிறப்பினால் வருவதைவிட, ஒருவருடைய நற்பண்புகளாலும், நன்னடத்தைகளாலும் அறியப்படுவது. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்நாளில் அப்பிறப்பின் பெருமையை காப்பாற்றி, தம்முடைய வழித்தோன்றல்களுக்கு விட்டுச் செல்லும் பொறுப்பில் இருக்கிறார்கள். நற்குடிப்பிறந்தார் என்றறியப்பட நன்னடத்தையராக இருத்தல் வேண்டும். அது தவறும்போது, தானும் கீழ்க்குடிக்குத் தன்னைத் தள்ளிக்கொள்ளும் இழுக்கினை பெற்று, தன் பரம்பரைக்கும் அவ்விழுக்கினையே விட்டு செல்ல நேரிடும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு பண்பு இருக்கும். அப்பண்பிலிருந்து அக்குடும்பத்துக்கான ஒழுக்கம் உருவாகும். ஓழுக்கம் உடைமையே நல்ல குடிப்பிறப்பின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்துள்ளது. ஒழுக்க இழுக்கம் அதாவது தீயொழுக்கம் கொண்டிருத்தல், அவனது பிறப்பையே கீழாக்கி இழிந்த பிறப்பாய் ஆக்கி விடும். ஒழுக்கக் கேட்டால் அவனது குலத்தையே, பெற்றோரையே, குடும்பத்தையே இழிவு செய்து தாழ்த்தி விடும். இழிந்தபிறவி என்பது ஒருவனது தனிப்பட்ட ஒழுக்கத்தின்பால் ஏற்படும் களங்கம் அவன் பிறவியைச் சந்தேகிக்கவும், பிறவிக்கு இழுக்கையும் ஏற்படுத்தும் என்பதே வள்ளுவர் காட்டும் குறிப்பு. எனவே பிறவியால் உயர்வு அல்லது, தாழ்வு என்பதும் அவரவர் ஒழுகும் ஒழுக்கத்தின் வேறுபாட்டையே குறிக்கும். ஒருவன் ஒழுங்கீனமாக நடந்தால் அவனை 'என்ன பிறப்போ! இப்படி இருக்கிறானே!' என்று திட்டுவதை இன்றும் கேட்கிறோம். அதுபோன்றதுதான் இழிபிறப்பாய்விடும் என்ற இக்குறட்சொற்களும். அது இனம் சார்ந்த பிறப்பு பற்றியது அல்ல.
வ சுப மாணிக்கம் 'ஒழுக்கத்தை விடுவது விலங்குப் பிறப்பு அதாவது ஒழுக்கத்தினின்றும் வழுவுதல் மக்கட்பிறப்பில்லாத விலங்கு முதலிய இழிந்த பிறப்பாய்க் கருதி இகழப்படும். மண்ணோடியைந்த மாந்தரனையர் (குறள் 570), விலங்கொடு மக்களனையர் (குறள் 410) என்ற குறள்களான் இழிந்த பிறப்புச் சுட்டப்படுதல் காண்க; ஒழுக்கம் இல்லாதாரை அஃறிணைப்படுத்திக் கூறப்பட்டது' என உரைத்தார். ஒழுக்கத்தின் வழுவுதல் இழிபிறப்பாய் அதாவது அஃறிணையாய் விடும் எனப் பாடல் அமைந்தது. பிறப்பு என்றது அஃறிணைப் பொருளில் குறிக்கப்பெற்றதேயன்றி, இழிகுடிப்பிறந்தார் என்று கூறப்படவில்லை. ஒருவனது விலங்குத்தன்மையைச் சொல்லவே 'பிறப்பு' பயன்பட்டது. பிறவிக்குணத்தைச் சுட்ட அல்ல.

 

ஒழுக்கமுடையவனாக உள்ளவர் உயர்குடியைச் சேர்ந்தவனாகக் கருதப்படுவர்; ஒழுக்கத்தில் தவறுதல் தாழ்ந்த பிறப்பாகும் என்பது இக்குறட்கருத்து.

 

ஒழுக்கமுடைமை உயர்குடிச் சிறப்பைத் தரும்.

 

பொழிப்பு

ஒழுக்கம் உடைமையே நற்குடித் தன்மையாகும்; ஒழுக்கத்தின் தவறுதல் விலங்குப் பிறப்பு.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க
மிழிந்த பிறப்பாய் விடும் .

 

ஒழுக்கமுடைமை குடிமை - நல்லொழுக்க முடைமையே உயர்குலத் தன்மையாம் ; இழுக்கம் இழிந்த பிறப்பு ஆய்விடும் - தீயொழுக்கம் தாழ்ந்த குலமாகிவிடும் .

குடி என்னும் சொல் தலைக்கட்டு , குடும்பம் , சரவடி (கோத்திரம் ) , குலம் , குடிகள் ( நாட்டினம் ) என்னும் ஐவகை மக்கட் கூட்டத்தையுங்குறிக்கும் . இங்குக் குடியென்றது நிலத்தை . குலமாவது ஒரே தொழில் செய்யும் மக்கள் வகுப்பு . வரணம் என்பது ஆரியர் வந்தபின் நிறம்பற்றியும் பிறப்புப்பற்றியும் ஏற்படுத்தப்பட்ட ஆரிய வகுப்புப் பிரிவினையாதலால் , அது " யாதும் ஊரே யாவருங் கேளிர் " , " குலமும் ஒன்றே குடியும் ஒன்றே " , "பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் " என்னும் தமிழ்க் கொள்கைக்கும் , அதைத் தழுவிய வள்ளுவர் கருத்திற்கும் ஏற்காது . ஆகவே , தமிழ வொழுக்கங்கெடின் பிராமணனுந் தாழ்ந்தவனாவான் என்பதே வள்ளுவர் கருத்தாம் .



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard