Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும்
Permalink  
 


 
 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்
(அதிகாரம்:செங்கோன்மை குறள் எண்:543)

பொழிப்பு: அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

மணக்குடவர் உரை: அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

பரிமேலழகர் உரை: அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது, மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல்.
(அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி அந்தணர் நூல் என்றார். 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்' (மணி. 22 208 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப் பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: அருளாளர்தம் நூலுக்கும் அறத்துக்கும் அடிப்படை அரசனது ஆட்சியே.

பொருள்கோள் வரிஅமைப்பு:
அந்தணர் நூற்கும், அறத்திற்கும், ஆதியாய் நின்றது மன்னவன் கோல்.


அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது:
பதவுரை: அந்தணர்-அறவோர்; நூற்கும்-நூலுக்கும்; அறத்திற்கும்-அறச்செயல்களுக்கும்; ஆதியாய்-முதலாய்; நின்றது-நிலை பெற்றது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது;
பரிப்பெருமாள்: அந்தணரதாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாய நின்றது;
பரிதி: வேத நெறிக்கும் தன்ம நெறிக்கும் முதலானது;
காலிங்கர்: உலகத்து அனைத்து நீதியையும் வழுவற உணர்த்துவது மறைநூல் அன்றே; அதனால் அவவருமறையாகிய நூலிற்கும் மற்று அதன்வழி நடைபெற்று வருகின்ற அறமனைத்திற்கும் இவ்வுலகத்து ஆதியாக நிலைபெற்றது யாதோ எனின்;
பரிமேலழகர்: அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது;
பரிமேலழகர் குறிப்புரை: அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி அந்தணர் நூல் என்றார்.

'அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிமேலழகர் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'வேதநெறிக்கும் தன்மநெறிக்கும் முதலானது' என்றார். காலிங்கர் 'மறையாகிய நூலிற்கும் மற்று அதன்வழி நடைபெற்று வருகின்ற அறமனைத்திற்கும் இவ்வுலகத்து ஆதியாக நிலைபெற்றது' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அந்தணர்க்குரிய மறை நூலுக்கும், அந்நூல் கூறும் அறத்திற்கும் அடிப்படையாய் நிலைபெற்றது', 'அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞானநூல்களின் அறிவு மக்களிடையே பரவுதற்கும் அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது', 'அந்தணர் என்னும் நீத்தாரது உண்மை நூலுக்கும், அதனுட் கூறப்படும் அறத்திற்கும் அடிப்படையான துணையாய் நிற்பது', 'அழகிய செந்தண்மையுடைய பெரியோர்கள் நூலுக்கும் அறத்திற்கும் காரணமாய் உள்ளது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அருளாளர் நூலுக்கும் அறத்துக்கும் காரணமாய் நிற்பது என்பது இப்பகுதியின் பொருள்.

மன்னவன் கோல்:
பதவுரை: மன்னவன்-வேந்தன்; கோல்-முறை செய்யுங் கோல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன் செய்யும் முறைமை.
பரிப்பெருமாள்: அரசன் செய்யும் முறைமை.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஓதுவாரும் அறம் செய்வாரும் முறை செய்யும் அரசன் நாட்டகத்து உளராவர்; ஆதலான் முதல் ஆயிற்று. இது கல்வியும் அறமும் வளரும் என்றது.
பரிதி: அரசன் செங்கோல் என்றவாறு.
காலிங்கர்: வேந்தனானவன் மற்று அவ்வறநெறி கோடாமல் பாதுகாக்கின்ற செங்கோலாகிய நீதி என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: மற்றும் அறநூல் என்றும் நூல் என்றும் இங்ஙனம் ஒன்று சொல்லாது அந்தணர்நூல் என்றது, அரசர் நெறியாகிய செங்கோலும் நால் வருணத்தார் நடையுள் ஒரு நடை ஆகலானும், அவை யாவையும் பிறவும் துறவுமாகிய அனைத்தினையும் பழுது அற உரைப்பது பார்ப்பார் ஓதியும் ஓதுவித்தும் இங்ஙனம் விளங்க நடைபெற்று வருகின்ற வேதம் ஆகலான் என்றவாறு.
பரிமேலழகர்: அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல்.
பரிமேலழகர் குறிப்புரை: 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்' (மணி. 22 208 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப் பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.

'அரசன் செங்கோல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசரது செங்கோல் ஆட்சியாம்', 'அரசாட்சியின் செங்கோன்மை', 'அரசனது செங்கோல் ஆகும்', 'அரசன் செங்கோல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செங்கோல் ஆட்சியாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறவோர் இயற்றிய நூல்களுக்கும் அறநெறிச் செயற்பாடுகளுக்கும் காரணமாய் நிற்பது ஆட்சியாளரின் செங்கோல் சிறப்பேயாகும்.

அந்தணர் நூற்கும் அறத்துக்கும் காரணமாய் நிற்பது செங்கோல் ஆட்சியாம் என்பது பாடலின் பொருள்.
அந்தணர் நூல் குறிப்பது என்ன?

அறத்திற்கும் என்ற சொல்லுக்கு அறச்செயல்களுக்கும் என்பது பொருள்.
ஆதியாய் என்ற சொல் மூலமாய், முதலாய், காரணமாய் என்ற பொருள் தரும். இங்கு காரணமாய் என்பது பொருத்தம்.
நின்றது என்ற சொல்லுக்கு நிலைபெற்றது என்று பொருள்.
மன்னவன் என்ற சொல் ஆட்சியாளர் குறித்தது.
கோல் என்ற சொல் செங்கோல்ஆட்சி அதாவது நல்லாட்சி எனப்பொருள்படும்.

அறவோர் நூற்களை இயற்றுதலுக்கும் காப்பதற்கும், அறங்கள் செவ்வனே நடப்பதற்கும், நல்லாட்சியே துணை நின்றது.

அந்தணர் என்போர் அறவோர்... (குறள் 30) என்று வள்ளுவரே கூறியுள்ளதால் அந்தணர் என்று சொல்லப்பட்டது எல்லா உயிர்களிடத்தும் செந்தண்மை கொண்டொழுகும் அருளாளரைக் குறிக்கும். இங்கு அறவோர் நூலும் அறச்செயல்களும் பேசப்படுகின்றன. நாட்டில் நல்லாட்சி நடைபெறாவிட்டால் அறவோர் நூல்களுக்குத் தடையுண்டாகும்; அறச்செயல்களுக்கு இடையூறு நேரும் என்ற கருத்தில் அவைகளுக்கு அடிப்படை அரசின் செம்மையான ஆட்சி எனச் சொல்லப்பட்டது. தம் கொள்கைகளுக்கு ஒவ்வாத கருத்துக் களைக் கொண்ட நூல்கள் தம் ஆட்சிக்கு மாறாய் இருத்தல் கண்டு, நூல்களைத் தடை செய்ததும், எழுதியவரைக் கொடுமைக்கு ஆளாக்கியதும் இன்றும் நாம் கண்கூடாகக் காண்பதுதான். அறநூல் அழியாமல் பாதுகாப்படுவதும் அறம் சமுதாயத்தில் இயங்குகின்றனவா என்பதைக் கண்காணிக்கப்படுவதும் செங்கோலாட்சியிலேயே நிகழக்கூடும்.
இக்குறட்பாவில் வரும் ஆதி என்ற சொல்லுக்கு முதல், மூலம், காரணம் என்ற பொருள் கொண்டு உரை செய்தனர். காரணம் என்ற பொருள் பொருத்தமாகத் தோன்றுகிறது. ‘ஆதியாய் நின்றது’ என்ற சொற்றொடர் காரணமாக நின்றது அல்லது அமைந்தது என்று பொருள் தரும். அதனால் அரசே அந்தணர்நூற்கும், அறச்செயல்களுக்கும் காரணமாக அமையும் என்று இந்த குறளுக்குப் பொருள் கொள்ள வேண்டும்.
'நாட்டில் செங்கோன்மை நிலவுவதால் ஓதுவாரும் அறஞ்செய்வாரும் உளர்' என்று பரிப்பெருமாள் உரை சொல்கிறது. அவரது சிறப்பு உரை செங்கோலாட்சியில் கல்வியும் அறமும் வளரும் எனவும் சொல்கிறது.
'நூல் செய்தலும், அறம் பயிலுதலும் நல்லாட்சியில் மட்டுமே நிகழ இயலும்' என்கிறது மற்றோர் உரை. 'அரசு முறை செய்யாவிட்டால் அறவோரின் நூல்களைப் போற்றுவாரும் அறத்தைக் கடைப்பிடித்து நடப்பாரும் நாட்டில் குறைவாராதலால் அவ்விரண்டிற்கும் அடிப்படையாய் நிற்பது மன்னன் கோல் என்றார்' என்கிறது இன்னொரு உரை.
தண்டபாணி தேசிகர் 'தன்னலப் பற்றும் இனப்பற்றும் சமயக் காழ்ப்பும் கடல் கோளும் இயற்கைப் பூசலும் விளைந்த காலத்தில் நூல்களும் அழிக்கப்படும்; மாற்றப்படும். இடைச் செருகல் நிகழ்த்தப் பெறும். அவை நிகழாமல் பாதுகாப்பதும் அரசன் கடமையாகிறது; செங்கோலாகிறது என்ற கருத்தை 'நூலிற்கும் ஆதியாய்' என்பதற்குக் காலிங்கர் தரும் சொற்பொருட் குறிப்பு விளக்குகிறது' என்று இக்குறளுக்கு கருத்துரை வழங்கினார்.

இக்குறள் செங்கோன்மையின் சிறப்பைக் கூறுவது. கோணாத கோல் கொண்டு ஆட்சிசெய்வோர் இல்லாது போனால், அற நூல்களுக்கும் அறச் செயல்களுக்கும் யாதொரு பயனுமில்லையாதலின் அவற்றுக்கும் அடிப்படை நல்ல ஆட்சியாளரின் செங்கோன்மை என்கிறார் வள்ளுவர்.

அந்தணர் நூல் குறிப்பது என்ன?

'அந்தணர் நூல்' என்பதற்கு அந்தணர்க்கு உரித்தாகிய வேதம், அந்தணரதாகிய வேதம், வேத நெறி, அந்தணர்களது வேதம், அந்தணர்கள் செய்யும் அறநூல், அருளாளர்தம் நூல், அந்தணர்க்குரிய மறை நூல், அந்தணர்கள் (ஓதும் வேதம் முதலிய ஞான) நூல், அனைத்து நீதியையும் வழுவற உணர்த்தும் மறைநூல், அறவோர் இயற்றிய நூல், அந்தணர் என்னும் நீத்தாரது உண்மை நூல், அழகிய செந்தண்மையுடைய பெரியோர்கள் நூல், அருள்நெறியாளர் சிந்தனைகளை நூலால் வடிப்பது, அறவோர் செய்த நூல், ஒழுக்கமுடைய நல்லோர் கூறும் அறவழி நூல், ஐயரும் பார்ப்பாருமான இருவகைத் தமிழ் அந்தணரும் இயற்றிய பல்துறை நூல் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அந்தணர் நூல் என்பதற்குப் பலர் அந்தணர்க்கு உரித்தாகிய நூல் என்று சொல்லி பிராமணர்கள் ஓதியும் ஓதுவித்தும் நடைபெற்று வருகின்ற வடவர் வேதத்தையே அது குறிக்கும் என்றனர்.
இக்கருத்தை ஆய்வாளர்கள் ஒப்புவதில்லை. அவர்கள் 'வேதம் மனிதனால் உண்டாக்கப்பட்டதல்ல என்ற பொருளில் வடமொழியில் அது 'அபௌர்ஷேயம்' எனப்பட்டது. 'பரம்பொருளுடன் வேதம் இருந்தது. பரம்பொருள் பிரம்மாவை படைத்து, அவருக்கு வேதத்தைக் கற்பித்தார். பிரம்மா உலகைப் படைத்து, பிராமணார்களுக்கு வேதத்தை வெளிப்படுத்தினார்' என்று வைதீகம் போதிக்கிறது. இந்த அடிப்படையில் இக் குறளுக்கான விளக்கத்தில் பரிமேலழகர் 'வேதமும், அறனும் அநாதி' (என்றுமுள்ளவை) என்று கூறிவிட்டு 'ஆயினும் செங்கோல் இல்வழி (இல்லாது போனால் அவை) நடவா(து)' என்றும் கூறுகிறார். பரம்பொருளுடன் கலந்ததாய்-அழிவில்லாத நிரந்தரமாய், அநாதியாய் இருக்கவல்ல வேதத்திற்கு, சிலகாலம் அரசாளும் மன்னவன் எப்படி ஆதியாய்-அடிப்படையாய் அல்லது மூலமாய் இருக்க முடியும்?' என வினவுவர்.
புலவர் குழந்தை 'வேதமும் அதனாற் கூறப்படும் அறமும் தமிழர்க்கேலாமையின் இவ்வுரை பொருந்தாது. வேதங்கள் கூறும் அறங்கள் என்ன? வேள்விகள் செய்யும் முறையும் பகைவரைக் கொல்ல வேண்டும் என்னும் வேண்டுகோளுந்தானே? இவற்றைத் தமிழரசர் எதற்காகக் காக்க வேண்டும்? வேதமும் அறமும் அநாதி என்பதும் பொருந்தாக் கூற்றே' என்பார்.

வேத நெறியை உள்ளிடக் கருதியோர் அந்தணர் நூலுக்கு வைதீக வேதம் எனப் பொருள் தந்தனர். நீத்தாராகி அருள் நெஞ்சம் கொண்டோரை மட்டும் அந்தணர் என்று சொல்பவர் வள்ளுவர். அந்தணர் என்பவர் தொண்டுள்ளம் கொண்டு பணி செய்வர்; அறப்பண்புடையராய் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவர். அவர் இயல்பு அருளுடைமை. எங்கெங்கு துன்பம் கண்டாலும் அங்கெல்லாம் சென்று அவர்கள் துன்பம் துடைக்கப் பாடுபடுவர். மனமாசுகளை அறுத்த இப்படிப்பட்ட நீத்தாரது நூலையே வள்ளுவர் இப்பாடலில் சொல்கிறார். அந்தணர் நூல் என்பதற்குப் பார்ப்பனர்க்கேயுரித்தெனச் சொல்லப்படும் வேதம் என்ற பொருளைக் கொள்ளாது அறவோர் செய்யும் நூல் அல்லது அறவோரின் கொள்கை என்று பொருள் கொள்வதே பொருந்தும்.

அந்தணர் நூல் என்பது அருளாளர்தம் நூலைக் குறிக்கும்.

அருளாளர் நூலுக்கும் அறத்துக்கும் காரணமாய் நிற்பது செங்கோல் ஆட்சியாம் என்பது இக்குறட்கருத்து.

 

செங்கோன்மையே அறநூல்களையும் அறங்களையும் காப்பது.

 

பொழிப்பு

அறவோர் நூல்களும் அறச்செயல்களும் நல்லாட்சியிலேயே நிலைபெற்று நிற்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல் .

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - ஐயரும் பார்ப்பாருமான இருவகைத் தமிழ் அந்தணரும் இயற்றிய பல்துறை நூல்கட்கும் மக்களின் அறவொழுக்கத்திற்கும் அடிமணையாயிருப்பது ; மன்னவன் கோல் - அரசனின் செங்கோலே.

பரிசாலும் முற்றூட்டாலும் நூலாசிரியரைப் போற்றுவதும் அவர்நூல் வழங்குமாறு அரங்கேற்றுவிப்பதும் அரசன் தொழிலாதலின் 'ஆதி' என்றார் . "அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வு யிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகலான்" , என்று பிராமணரை விலக்கியதால் , இங்கு அந்தண ரென்றது தமிழ் அறிஞரையே . அந்தணர் என்பது சிறப்பாகத் துறவியரையே குறிக்குமேனும் , சிறு பான்மை இல்லறத்தாரையும் தழுவும்.

"வினையி னீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்".(தொல். 1564)

என்றதனால் , முதற்காலத்து முதனூல்களெல்லாம் முனிவராலேயே இயற்றப்பட்டதாகத் தெரிகின்றது . அதன் பின்பே இல்லறத்தாரான பார்ப்பாரும் நூலியற்றினர் . நூல்களைப் பார்ப்பவர் பார்ப்பார் . முனிவர் ஐயர் எனவும் படுவர் . கடைக்கழகக் காலத்திலும் இளங்கோவடிகள் என்னும் தமிழ் அந்தணர் , இயைபுவனப் பியற்றியமை காண்க. அந்தணர் நூற்கு அரசியல் அடிப்படையாயிருந்தமைக்கு முக்கழக நடவடிக்கைகளே போதிய சான்றாம் . ஒழுக்கத்திற்கு அது தூண்டு கோலாயிருந்தது. "அச்சமே கீழ்கள தாசாரம்" ( குறள் . 1075) என்பதனாலும் , நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே ( புறம் . 312) என்பதனாலும் , அறியப்படும் . நூற்கும் அறத்திற்கும் முந்தியே யிருந்ததனாலும் நிலைபெற்றதனாலும் 'நின்றது' என்றார்.

"அந்தணர்க் குரித்தாய வேதத்திற்கும் அதனாற் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது ................ செங்கோல்" "அரசர் வணிக ரென்னு மேனையோர்க்கு முரித்தாயினும் , தலைமை பற்றி அந்தணர் நூலென்றார்" என்பன பரிமேலழகரின் ஆரியப்பிதற்றல்கள் . நூலென்றது மறைநூலை மட்டுமன்று . அங்ஙனங் கொள்ளினும் அது கடவுள் வழிபாட்டை அறவே அறியாத ஆரிய வேதத்தையன்று ; தமிழ் மறையையே குறிக்கும்.

"மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்"
என்று மாணிக்க வாசகர் பாடியிருத்தல் காண்க.

இன்னும் தமிழிலுள்ள பண்டை மறை (மந்திர ) நூல்களும் மருத்துவ நூல்களும் சித்தர் என்னும் முனிவர் இயற்றியவையே.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.   550 

 

வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல் - அரசன் கொடியவரைக் கொலையால் தண்டித்து நல்லோரைக் காத்தல் ; பைங்கூழ் களை கட்டதனொடுநேர் - உழவன் களைகளைக் களைந்து பசும்பயிர்களைக் காத்தலோ டொக்கும்.

கொடியராவார் உணராது கொலை செய்வார் , ஊரில் தீவைப்பார் , குடிநீர்நிலையில் நஞ்சிடுவார் , வழிப்பறிப்பார் , கொள்ளையிடுவார் , கோயிற் சொத்தைக் களவு செய்வார் , வெளிப்படையாகப் பிறனில் விழைவார் , அரசனுக்கும் அஞ்சாதார் , முதலியோர் . இத்தகைய பொல்லாரை அரசன் கொல்லாவிடின் நல்லோர் வாழ முடியாதாதலின் , அவரைக் கொல்வது 'பைங்கூழ் களைகட்டத்னோடு நேர்' என்றார் . வேந்தன் என்பது வேந்து எனக் குறைந்து நின்றது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard