Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 86 இகல்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
86 இகல்
Permalink  
 


 86 இகல்

அதிகார விளக்க உரை

மணக்குடவர் - அதிகார உரை

இகலாவது பிறரோடு மாறுகொண்டால் வரும் குற்றம் கூறுதல். இஃது அறியாதார்க்கு உளதாமாதலின், அதன்பின் கூறப்பட்டது.

பரிமேலழகர் - அதிகார உரை[இனி , அவற்றாள் வரும் வெகுளி காமங்களுள் அரசர்க்கு வெகுளி பெரும்பான்மைத்தாகலின் , அதனான் வருவன கூறுவான் தொடங்கி , முதற்கண் இகல் கூறுகின்றார் .அஃதாவது , இருவர் தம்முள் பொருது வலிதொலைதற்கு ஏதுவாய மாறுபாடு.]



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்

(அதிகாரம்:இகல் குறள் எண்:851)

பொழிப்பு (மு வரதராசன்): எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீய பண்பை வளர்க்கும் நோய் இகல் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.

மணக்குடவர் உரை: எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை, இகலென்று சொல்லுவார் அறிவோர்.
இஃது இகலாவது இதுவென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய் - எல்லா உயிர்கட்கும் பிறஉயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப - இகல் என்று சொல்லுவர் நூலோர்.
(மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லாஉயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்றுவிளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும்கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீக்குணமாயிற்று.இதனான் இகலது குற்றம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: மாறுபாடு என்னும் குணம் உயிர்களுக்குள் பகையுணர்ச்சியைப் பரப்பும் நோயாகும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
எல்லா உயிர்க்கும் பகல்என்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் இகல்என்ப.

பதவுரை: இகல்-மாறுபாடு; என்ப-என்று சொல்லுவர்; எல்லா உயிர்க்கும்--அனைத்து உயிருக்கும், உயிரினங்களுக்கும்; பகல்-பகுதல், பகுதிக்குணம் அதாவது (பிற உயிர்களோடு) கூடாமை; என்னும்-என்கின்ற; பண்பின்மை-குணமில்லாமை; பாரிக்கும்-பரப்பும், வளர்க்கும்; நோய்-துன்பம், குற்றம்.


இகல் என்ப:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இகலென்று சொல்லுவார் அறிவோர்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இகலாவது இதுவென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: இகலென்று சொல்லுவார் அறிவோர்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இகலாவது இதுவென்று கூறிற்று.
பரிதி: மாறுபாடு என்பது;
காலிங்கர்: தாம் பிறரோடு மாறுபட்டு ஒழுகும் மாறுபாடு என்று சொல்லுப சான்றோர்;
பரிமேலழகர்: இகல் என்று சொல்லுவர் நூலோர்.

இகலென்று சொல்லுவார் அறிவோர்/சான்றோர் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இகல் (மாறுபாடு) என்று அறநூலோர் கூறுவர்', 'மனத்தாபம் என்பதுதான்', 'இகல் என்று நூலோர் சொல்லுவர்', 'இகல் என்று கூறுவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இகல் என்று சொல்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

எல்லா உயிர்க்கும் பகல்என்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை. [வேறுபடுதல்-கருத்து வேறுபடுதல்]
பரிப்பெருமாள்: எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை.
பரிதி: எல்லா உயிர்க்கும் எக்காலமும் பிரகாசமில்லாத பண்பின்மை தரும் நோய் என்றவாறு. [பிரகாசமில்லாத- ஒளியில்லாத]
காலிங்கர்: எவ்வுயிர்க்கும் இனிது மேவி ஒழுகாது வேறுபடுதல் என்னும் இப்பண்பின்மையைப் பரப்பும் நோயை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: பகல் என்பது பகுதல் என்றது பாரித்தல் என்பது பரப்புதல்.
பரிமேலழகர்: எல்லா உயிர்கட்கும் பிறஉயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்.
பரிமேலழகர் குறிப்புரை: மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லாஉயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்றுவிளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும்கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீக்குணமாயிற்று. இதனான் இகலது குற்றம் கூறப்பட்டது.

'எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எல்லா உயிர்களுக்கும் பிற உயிர்களோடு மாறுபடுதல் என்னும் தீய பண்பை வளர்க்கும் குற்றம்', 'எல்லா மனிதர்களுக்கும் 'விரோதம்' என்ற அன்பின்மையை உண்டாக்கிப் பெருகச் செய்கிற ஒரு வியாதி', 'எல்லா மக்கட்கும், ஒருவரோடு ஒருவர் கூடாமையாகிய தீக்குணத்தை வளர்க்கும் நோய்', 'எல்லா உயிர்கட்கும் பிற உயிர்களோடு கூடாமை என்னும் கொடிய குணத்தை வளர்க்கும் நோயாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உயிர்களுக்குள் பிரிவினை என்னும் தீய பண்பைப் பரப்பும் நோய் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உயிர்களுக்குள் பிரிவினை என்னும் தீய பண்பைப் பரப்பும் நோயை இகல் என்று சொல்வர் என்பது பாடலின் பொருள்.
'பாரிக்கும்' என்பதன் பொருள் என்ன?

உயிர்களிடை வன்மம் பாராட்டுவது பண்பில்லாத செயலாம்.

உயிர்களைக் கூடாது பிரிந்து நிற்கும் தீய குணத்தினை வளர்க்கும் நோயினை இகல் என்பர்.
நாம் நாளும் பலருடன் தொடர்பு கொள்கிறோம். அவ்விதம் தொடர்பு கொள்ளும்போது உராய்வுகள் உண்டாக நேரிடும். அதை உரிய வகையில் நேர்செய்யாவிடில் மாறுபாடுகள் தோன்றும். எண்ணத்தளவில் நிற்கும் மாறுபாட்டிற்குக் காரணமான வெறுப்பு அல்லது மனக்குறை இகல் என்று அறியப்படுகிறது. காரணத்தோடும் அல்லது காரணம் எதுவுமின்றியும் விளந்த மாறுபாடுகள் பகையுணர்வைப் பெருக்கும்.
பகையுணர்வுடன் ஒழுகினால் கலந்து வாழ்தல் இயலாது. பழகுபவர் அனைவரிடமும் வெறுப்புத்தான் மிகும். சினம் போன்று மாந்தரை நிலைகுலையச் செய்து மன அமைதியை இழக்க வைப்பது பகை உணர்வு. இதுவே பகல் என்னும் தீக்குணம் அதாவது பிரிந்து நிற்கும் பகுதிக்குணம்- பிறவுயிர்களோடு கூடாமையாம். கூடாமல் வேறுபட்டு ஒழுகுவது பண்பற்ற குணமாம். இது உயிர்களுக்கிடையான உறவுகள் கெட்டுவிட ஏதுவாகும். இகலைத் துன்பம் தரும் ஓர் நோய் எனச் சொல்கிறார் வள்ளுவர்.

இகல் என்பது எல்லா உயிர்களிடத்தும் பிரிவை வளர்க்கும் நோய் என்கிறது பாடல். 'ஏனைய உயிரினங்களில்

பகைமை இயல்பான பிறவிக்குணம்; அது வேறுபாட்டால் விளைவதன்று; எனவே எல்லாவுயிர்க்கும் என்றது எல்லா மனிதர்க்கும் என்ற பொருளையே குறிக்கும்' எனச் சிலர் கருத்துரைத்தனர். அஃறிணையுயிர்கட்கும் இகல் விளைதலின் எல்லாவுயிர்க்கும் என்பது மனித உயிர் அல்லாதவற்றையும் குறிப்பதாகக் கொள்வது சிறந்தது.

'பாரிக்கும்' என்பதன் பொருள் என்ன?

'பாரிக்கும்' என்ற சொல்லுக்குப் பரப்பும், தரும், வளர்க்கும், பெருகச் செய்யும், விளைக்கும், பெருக்கும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இவ்வதிகரத்தில் பின்வரும் குறள் ஒன்றில் இகலை எவ்வநோய் என வள்ளுவர் குறிப்பார். எவ்வ நோய் என்பதற்குப் பெருந்துன்பந்தரும் தொழுநோய் என்றும் பொருள் கூறுவர். இது ஒரு தொற்றுநோய். மற்றவர்களுக்கும் பரவக் கூடியது. இகல் என்னும் எல்லா உயிர்களிடத்தும் பிரிவினை எனப்படும் பண்பற்ற தன்மையைப் பரப்பும் நோய் என்ற பொருளில் கூறியதால் பாரிக்கும் என்பதற்குப் பரப்பும் என்பது பொருத்தமான பொருள்.

'பாரிக்கும்' என்றது பரப்பும் என்ற பொருள் தரும்.

உயிர்களுக்குள் பிரிவினை என்னும் தீய பண்பைப் பரப்பும் நோயை இகல் என்று சொல்வர் என்பது இக்குறட்கருத்து.

 

 ஒட்டாத பகையுணர்வு இகல் எனப்படும்.

 

பொழிப்பு  உயிர்களுக்குள் பகையுணர்ச்சியைப் பரப்பும் நோயை இகல் என்று கூறுவர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

இன்னாசெய் யாமை தலை                     (அதிகாரம்:இகல் குறள் எண்:852)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும், தான் இகல் கொண்டு அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் சிறந்தது.

மணக்குடவர் உரை: தம்மோடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி இன்னாதவற்றைச் செய்தாராயினும் அவரோடு மாறுபடுதலைக் கருதித் தாமும் அவர்க்கு அவற்றைச் செய்யாமை நன்று.

இது மேற்கூறிய குற்றமும் குணமும் பயக்குமாதலின் மாறுபடுதற்குக் காரணமுள வழியும் அதனைத் தவிர்தல் வேண்டும் என்றது.

பரிமேலழகர் உரை: பகல் கருதிப் பற்றா செயினும் - தம்மொடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்னாசெய்யாமை தலை - அவனொடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது.

(செய்யின் பகைமை வளரத் தாம் தாழ்ந்து வரலானும், ஒழியின் அப்பற்றாதன தாமே ஓய்ந்து போகத் தாம் ஓங்கி வரலானும், 'செய்யாமை தலை' என்றார். 'பற்றாத' என்பது விகாரமாயிற்று.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: பிரிவுண்டாகக் கருதி வெறுப்பனவற்றை ஒருவன் செய்தான் ஆயினும், மாறுபாடு விளையாமைப் பொருட்டு, அவனுக்குத் துன்பந் தருவனவற்றைச் செய்யாமல் இருப்பதே சிறந்த முறையாகும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை.

பதவுரை: பகல்-கூடாமை, வேறுபட்டிருத்தல், ஒன்று கூடாதிருத்தல்; கருதி-எண்ணி; பற்றா-வெறுப்பன; செயினும்-செய்தானாயினும் இகல்-மாறுபாடு; கருதி-குறித்து; இன்னா-தீங்குகள், துன்பம் தருவன; செய்யாமை-செய்யாதிருத்தல்; தலை-சிறப்பு, உயர்ந்தது.

பகல்கருதிப் பற்றா செயினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:

மணக்குடவர்: தம்மோடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி இன்னாதவற்றைச் செய்தாராயினும்;

பரிப்பெருமாள்: தம்மோடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி தீயவற்றைச் செய்தாராயினும்;

பரிதி: இன்னானை வென்றோம் என்ற கீர்த்தியை எய்த வேண்டி மாற்றார் தம்முடனே மாறுகொண்டாலும்;

காலிங்கர்: தம்மொடு சிறிதும் பற்று இல்லாதார் வந்து கருதிக்கொண்டு மாறுபடுதலைச் செய்யினும்;

பரிமேலழகர்: தம்மொடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்;

பரிமேலழகர் குறிப்புரை: 'பற்றாத' என்பது விகாரமாயிற்று.

'தம்மொடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி இன்னாதவற்றைச் செய்தாராயினும் /கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைமை கருதித் தகாதன செய்தாலும்', 'தன்னோடு வேறுபடுதல் கருதி ஒருவன் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தாலும்', 'பகைவனைத் தண்டிக்க வேண்டி அவனுக்குத் தீங்கு செய்துவிட்டாலும்', 'தம்மோடு பொருந்தாமையைக் கருதி வெறுப்பன செய்தான் ஆயினும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

 

தம்மோடு வேறுபடும் நோக்கத்தில் ஒருவன் வெறுப்பன செய்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

இகல்கருதி இன்னாசெய் யாமை தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:

மணக்குடவர்: அவரோடு மாறுபடுதலைக் கருதித் தாமும் அவர்க்கு அவற்றைச் செய்யாமை நன்று.

மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறிய குற்றமும் குணமும் பயக்குமாதலின் மாறுபடுதற்குக் காரணமுள வழியும் அதனைத் தவிர்தல் வேண்டும் என்றது.

பரிப்பெருமாள்: அவரோடு மாறுபடுதலைக் கருதித் தாமும் அவர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை நன்று.

பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறிய குற்றமும் குணமும் பயக்குமாதலின் மாறுபடுதற்குக் காரணமுள் வழியும் தவிர்தல் வேண்டும் என்றது.

பரிதி: மாறுபாடெண்ணியவனுக்குப் பொல்லாங்கு செய்யாமை நன்று என்றவாறு.

காலிங்கர்: தாம் அவரோடும் இகல் கருதிக்கொண்டு மற்று அவர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமையே தமக்குத் தலைமைப்பாடாவது என்றவாறு.

பரிமேலழகர்: அவனொடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது.

பரிமேலழகர் குறிப்புரை: செய்யின் பகைமை வளரத் தாம் தாழ்ந்து வரலானும், ஒழியின் அப்பற்றாதன தாமே ஓய்ந்து போகத் தாம் ஓங்கி வரலானும், 'செய்யாமை தலை' என்றார். [ஒழியின் - துன்பந் தருவனவற்றைச் செய்யாவிட்டால்]

'அவனொடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாறுபாடு கருதிக் கொடுமை செய்யற்க', 'தான் இகல் கொண்டு அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் மேலானது', 'மனத்தாபத்துக்காக ஒருவனுக்குத் துன்பம் செய்யாதிருக்கும் குணம் மிகவும் உயர்ந்தது', 'மாறுபடுதலைக் குறித்துத் துன்பம் தருவன செய்யாமல் இருத்தல் உயர்ந்ததாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மாறுபாடு விளையாமை கருதி அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் உயர்ந்தது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:தன்னோடு வேறுபடும் நோக்கத்தில் ஒருவன் வெறுப்பன செய்தாலும் மாறுபாடு விளையாமை கருதி அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் உயர்ந்தது என்பது பாடலின் பொருள்.

'பற்றா செயினும்' என்பதன் பொருள் என்ன?

அவன் என்ன செய்தாலும் செய்யட்டும், நாம் இகல் கருத வேண்டாம்.

ஒருவன் நம்மோடு கூடாமையைக் கருதி வெறுக்கக் கூடியன செய்வானாயினும் நாம் அவனோடு மாறுபடுதல் உண்டாகாமை குறித்து அவனுக்குத் துன்பம் செய்யாது இருத்தலே உயர்ந்ததாகும்.

பிரிவை விரும்பிப் பிறர் விரும்பத்தகாதவற்றை நமக்குச் செய்தால் நாம் அதற்கு என்ன எதிர்ச்செயல் ஆற்ற வேண்டும் என்பது இங்கு சொல்லப்படுகிறது. நம்மிடம் பொருந்தக்கூடாது என்று விடாப்பிடியாக, பிரிந்து வேறுபட்டு நிற்கும் நோக்கத்துடன், ஒருவன் நட்பல்லாதவற்றைச் செய்கிறான். அவன் வெறுப்பனவே செய்தாலும் பதிலுக்கு அவனோடு மாறுபட்டு அவனுக்குத் தீயன செய்யாது, அவனைவிடவும் உயர்ந்து நில். அதுவே தலைசிறந்த பண்பாடாம் என்கிறார் வள்ளுவர்.

ஒருவர் நமக்குத் தீயன செய்தால் உடன் அதற்குப் பழிவாங்கும் நோக்கில் ஏதாவது துன்பம் செய்யவேண்டும் என்று எண்ணுவது இயல்பு. அவ்விதம் நாம் தீயன செய்தால் மாறுபாடு இரண்டு பக்கமும் வளர்ந்து முற்றிப் பகை உண்டாகி பெருந்தீமைகள் விளையும். ஒருவர் அல்லது ஒரு சாரார் கூடாமையை விரும்பும் மற்றவர் செயல்களைக் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால் காலப்போக்கில் மாறுபாடுகள் மறைந்து நட்பு வளரும். எனவே நாமும் அவர்போல் பகைமைகொண்டு துன்பம் செய்யாமையே மேலானது எனச் சொல்லப்பட்டது.

'பற்றா செயினும்' என்பதன் பொருள் என்ன?

'பற்றா செயினும்' என்றதற்குப் பற்றில்லாதார் (இன்னாதவற்றைச்) செய்தாராயினும், பற்றில்லாதார் (தீயவற்றைச்) செய்தாராயினும், பற்று இல்லாதார் (மாறுபடுதலைச்) செய்யினும், வெறுப்பன செய்தானாயினும், பொல்லாங்கு செய்தாலும், அன்பில்லாதவற்றைச் செய்தாலும், பொருந்தாத தீயவற்றைச் செய்தானாயினும், வெறுப்பனவே செய்தான் எனினும், தகாதன செய்தாலும், வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தாலும், பற்றற்ற (தீங்கான) காரியங்களைச் செய்தாலும், விரும்பாத செயலைச் செய்தாலும், வெறுப்பனவற்றை செய்தான் ஆயினும், தன்னை வந்து சார முடியாத செயலைச் செய்தாலும், பொருந்தாததைச் செய்தாலும், வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பற்றாதன என்னும் சொல்லே பற்றா என நின்றது. இது வெறுக்கத்தக்கன எனப் பொருள்படும்.

மணக்குடவரும் காளிங்கரும் 'பற்றார் செயினும்' எனப் பாடங்கொண்டனராதலால் அவர்கள் உரை பற்றில்லாதார் (இன்னாதவற்றைச்) செய்தாராயினும், பற்று இல்லாதார் (மாறுபடுதலைச்) செய்யினும் என முறையே அமைந்தன. பற்றா செயினும் என்றதற்குத் தன்னைவந்து பற்ற முடியாத செயலை-சார முடியாத செயலைச் செய்தாலும், எனவும் பொருள் கூறினர்.

'பற்றா செயினும்' என்ற தொடர் வெறுப்பன செய்தாலும் என்ற பொருள் தரும்.

தன்னோடு வேறுபடும் நோக்கத்தில் ஒருவன் வெறுப்பன செய்தாலும் மாறுபாடு விளையாமை கருதி அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் உயர்ந்தது என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு:  வெறுப்புக்கு வெறுப்பு என்னும் இகல் வேண்டாம்.

 

பொழிப்பு: தன்னோடு வேறுபடுதல் கருதி ஒருவன் மாறுபடுதலைச் செய்தாலும், தான் மாறுபாடு கருதி அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் உயர்ந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத்
தாவில் விளக்கம் தரும்                     
(அதிகாரம்:இகல் குறள் எண்:853)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கிவிட்டால். அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: மாறுபடுதலாகிய இன்னாத நோயை நீக்குவானாயின், அந்நீக்குதல் கேடில்லாத குற்றமற்ற ஒளியினைத் தரும்.
இது தோற்றமுண்டா மென்றது.

பரிமேலழகர் உரை: இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் - அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும்.
(தவல் இல்லாமை, அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாஇல் விளக்கம் - வெளிப்படை. யாவரும் நண்பராவர், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களால் புகழ் பெறும் என்பதாம்.)

தமிழண்ணல் உரை: மனத்தை முறித்துக் கொள்கின்றதாகிய 'இகல்' எனப்படும் கடுந்துன்பத்தைச் செய்யும் நோயை, ஒருவன் தன மனத்தினின்றும் நீக்குவானாயின், அப்பண்புடைமை கெடுதலில்லாத குற்றமற்ற புகழாகிய ஒளியினை அவனது வாழ்நாளில் தரும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத் தாவில் விளக்கம் தரும்.

பதவுரை: இகல்-மாறுபாடு; என்னும்-என்கின்ற; எவ்வ-துன்பத்தைச் செய்யும்; நோய்-பிணி; நீக்கின்-விலக்கினால்; தவல்-தவறு, அழிதல்; இல்லா-இல்லாத; தா- கேடு; இல்-இல்லாத; விளக்கம்-புகழ், ஒளி; தரும்-கொடுக்கும்.


இகல்என்னும் எவ்வநோய் நீக்கின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாறுபடுதலாகிய இன்னாத நோயை நீக்குவானாயின்;
பரிப்பெருமாள்: மாறுபடுதலாகிய இன்னாத நோயை நீக்குவானாயின்;
பரிதி: மாறுபாடு என்கிற பொல்லா நோயை விடுவானாகில்;
காலிங்கர்: இகல் என்று சொல்லப்படும் துயர் விளைக்கும் நோயை ஒழிப்பின்;
காலிங்கர் குறிப்புரை: எவ்வம் என்பது துக்கம்.
பரிமேலழகர்: மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்;

'மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாறுபாடு என்னும் தொழுநோய் நீங்கினால்', 'மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் உள்ளத்தினின்றும் அகற்றினால்', 'தீராத வியாதியைப் போல, நீக்குவது கடினமான மனத்தாபத்தை நீக்கிவிட்டால்', 'மாறுபாடு என்னுந் துன்பத்தைக் கொடுக்கும் நோயை மனத்தைவிட்டு ஒருவன் நீக்குவானாயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற கொடிய துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் மனத்தினின்றும் நீக்கிவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

தவல்இல்லாத் தாவில் விளக்கம் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அந்நீக்குதல் கேடில்லாத குற்றமற்ற ஒளியினைத் தரும். [குற்றமற்ற ஒளி - பழிபாவங்கள் சிறிதும் இல்லாத புகழ்]
மணக்குடவர் குறிப்புரை: இது தோற்றமுண்டா மென்றது.
பரிப்பெருமாள்: அந்நீக்குதல் கேடில்லாத குறையற்ற ஒளியினைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தோற்றமுண்டாக்கும் என்றது.
பரிதி: ஒரு காலத்தும் கேடில்லாத புகழ் உண்டாம் என்றவாறு.
காலிங்கர்: பின் கெடுதலும் இன்றி மற்றும் தமக்கு ஓர் (வருத்தமும் இன்றி உலகத்துத் தம் பேர் விளங்குவதோர்) விளக்கத்தையும் தரும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தா என்பது வருத்தம்.
பரிமேலழகர்: அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: தவல் இல்லாமை, அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாஇல் விளக்கம் - வெளிப்படை. யாவரும் நண்பராவர், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களால் புகழ் பெறும் என்பதாம். [தாவில் விளக்கம் - கெடுதல் இல்லாத புகழ்; வெளிப்படை - இயல்பாகவே பொருள் விளங்கும் சொல்

'அந்நீக்குதல் கேடில்லாத குற்றமற்ற ஒளியினைத் தரும்/ கேடில்லாத புகழ் உண்டாம்/ தம் பேர் விளங்குவதோர் விளக்கத்தையும் தரும்/எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அழிவில்லாத அறிவுவிளக்கம் உண்டாகும்', 'அது கேடில்லாத குற்றமற்ற புகழைக் கொடுக்கும்', 'அது நிச்சயமாகக் குற்றமற்ற புகழுடைய நல்வாழ்வைக் உண்டாக்கும்', 'அது தப்பாமல் அவனுக்குப் புகழைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அது தவறாமல் அவனுக்கு அழிவற்ற உள்ளொளி உண்டாக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற எவ்வநோயை ஒருவன் மனத்தினின்றும் நீக்கிவிட்டால் அது தவறாமல் அவனுக்கு அழிவற்ற உள்ளொளி உண்டாக்கும் என்பது பாடலின் பொருள்.
'எவ்வநோய்' என்பது என்ன?

மாறுபாட்டை நீக்கிவிட்டால் அகம் தூய்மை பெறும்.

மாறுபாடு என்னும் துன்பம் செய்யும் நோயை மனத்தில் இருந்து நீக்கி விட்டால், ஒருவனுக்கு அது தப்பாமல் உள்ளத்தில் கேடற்ற ஒளியை ஏற்றும்.
மனமாறுபாடு என்று சொல்லப்படுவது ஒரு கொடிய நோய். அது மனத்தினின்று நீங்குமாயின், தவறாமல் அழியாத உள்ளொளியை அவனுக்காக்கும். பகைமை என்னும் அந்த நோய் இல்லாதவன் கெடுதல் ஏதுமின்றி தெளிவுடன் விளங்குவான்.
தவல் இல்லா என்ற தொடர் தவறாத என்ற பொருள் தரும். தாவில் விளக்கம் என்றதற்கு எஞ்ஞான்றும் குன்றாததும் அழிவற்றதுமான புகழ் எனப் பொருள் கூறுவர். அழியாத ஒளி எனவும் பொருள் கொள்வர்.

'எவ்வநோய்' என்பது என்ன?

'எவ்வநோய்' என்ற சொல்லுக்கு இன்னாத நோய், பொல்லா நோய், துயர் விளைக்கும் நோய், துன்பத்தைச் செய்யும் நோய், துக்கத்தை செய்கிற வியாதி, துன்ப நோய், கடுந்துன்பத்தைச் செய்யும் நோய், தொழுநோய், தீராத வியாதி, துன்பத்தைக் கொடுக்கும் நோய் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

முன்னர் 851ம் குறளில் 'இகல் நோய்' எனச் சொல்லப்பட்டது. இங்கு 'இகலென்னும் எவ்வநோய்' எனக் கூறப்படுகிறது. இது தொழுநோய் போன்ற கொடிய தன்மை உடைய ஒரு மனநோய் என்ற பொருளில் ஆளப்பட்டது. பின்னும் எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து (1241) என்று காமத்துப்பாலில் நெஞ்சோடுகிளத்தல் என்ற அதிகாரத்திலும் எவ்வநோய் குறிப்பிடப்பெறுகிறது.

'எவ்வநோய்' என்றது பெருந்துன்பம் தரும் நோய் எனப் பொருள்படும்.

மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற கொடிய துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் மனத்தினின்றும் நீக்கிவிட்டால் அது தவறாமல் அவனுக்கு அழிவற்ற உள்ளொளி உண்டாக்கும் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு : இகல் நீக்கப்பட்டால் உள்ளொளி உண்டாகும்.

 

பொழிப்பு :மாறுபாடு என்னும் கொடிய துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் உள்ளத்தினின்றும் அகற்றினால் அது தவறாமல் அழிவில்லாத மனஒளியைத் தரும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்

(அதிகாரம்:இகல் குறள் எண்:854)

பொழிப்பு (மு வரதராசன்): இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது ஒருவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்: மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின்.
எல்லா இன்பத்தின்மிக்க வீடுபேற்றின்பம் எய்தும் என்றவாறு.

பரிமேலழகர் உரை: இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும் - அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.
(துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைதலான் யாவர்க்கும் எளியனாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின். 'இகல் என்னும்' என்றார். இன்பத்துள்இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: துன்பங்களுள் எல்லாவற்றிலும் மிகத் துன்பமாய மாறுபாடே ஒழிந்து போமாயின், அஃது இன்பங்களெவற்றினும் மிக்க இன்பத்தைக் கொடுக்கும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
இகல்என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் இன்பத்துள் இன்பம் பயக்கும்.

பதவுரை: இன்பத்துள்-மகிழ்ச்சியுள்; இன்பம்-மகிழ்ச்சி; பயக்கும்-உண்டாக்கும், பயன்தரும்; இகல்-மாறுபாடு; என்னும்-என்கின்ற; துன்பத்துள்-துயரத்துள்; துன்பம்-துயரம்; கெடின்-இல்லையாயின்.


இன்பத்துள் இன்பம் பயக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்:
பரிப்பெருமாள்: இன்பத்தின் மிக்க இன்பத்தை எய்தும்:
பரிதி: இன்பம் வந்தகாலம் இன்பம் வந்தது என்று மகிழாதவன்;
காலிங்கர்: இன்பத்துள் மிக்க இன்பத்தைத் தரும்;
பரிமேலழகர்: அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: இன்பத்துள்இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.

'இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதியின் உரை 629ஆம் குறளுக்கானது.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறந்த இன்பம் விழையும்', 'அந்த இல்லாமை அவனுக்கு இன்பங்கள் அனைத்திலும் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்', 'இன்பங்களிலெல்லாம் சிறந்த இன்பம் உண்டாக்கும்', 'இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பம் உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

இகல்என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின்.
மணக்குடவர் குறிப்புரை: எல்லா இன்பத்தின்மிக்க வீடுபேற்றின்பம் எய்தும் என்றவாறு.
பரிப்பெருமாள்: மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் போமாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: எல்லா இன்பத்தினும்மிக்க வீடுபேற்றின்பமும் எய்தும் என்றது.
பரிதி: துன்பம் வந்தகாலத்தும் துன்பப்படான் என்றவாறு.
காலிங்கர்: இகல் என்னும் துன்பத்துள் மிக்க துன்பம் கெடின் என்றவாறு.
பரிமேலழகர்: மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைதலான் யாவர்க்கும் எளியனாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின். 'இகல் என்னும்' என்றார்.

'மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியின் உரை 629ஆம் குறளுக்கானது.

இன்றைய ஆசிரியர்கள் 'மாறுபாடு என்னும் பெருந்துன்பம் ஒழிந்தால்', 'மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் அனைத்திலும் சிறந்த துன்பம் ஒருவர்க்கு இல்லையாயின்', 'துன்பங்களிலெல்லாம் கொடிய துன்பமாகிய மனத்தாபம் என்னும் துன்பம் இல்லையானால்', 'மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பம் கெட்டால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பமாகிய மாறுபாடு என்று சொல்லப்படுவது கெட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பமாகிய மாறுபாடு என்று சொல்லப்படுவது கெட்டால் அது இன்பத்துள் இன்பத்தைத் தரும் என்பது பாடலின் பொருள்.
'இன்பத்துள் இன்பம்' குறிப்பது என்ன?

மாறுபாடு நீங்கப்பெற்றால் அளவிறந்த இன்பம் பெறலாம்.

துன்பங்களுள் பெரிதான துன்பமான இகல் இல்லையானால் அதுவே ஒருவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் மிகுந்த இன்பத்தினைத் தரும்.
மாறுபாடு என்பது துன்பங்கள் தருவனவற்றுள் எல்லாம் பெரிதானது. இவருடன் உறவு வேண்டாம் அவருடன் கூடவேண்டாம் என்றவாறு பிரிந்து நிற்பது மன உளைச்சல்களையே தரும். அது எந்தவித நன்மையையும் தராது. இகலென்னும் கொடிய நோய் பற்றிக்கொண்டால் அமைதி இழந்து வாழ்வே பாழாகிவிடும். ஒருவர் இன்னொருவர்க்குத் தீங்கு செய்ய பதிலுக்கு அவர் இன்னும் பெரிய தீமை செய்ய இப்படியாக இகல் விரிவடைந்து இருவருமே நன்மையடையமுடியாமல் காலம் கடந்துவிடும். இகல் உள்ளத்தையும் உடம்பையும் உலுக்கி ஒருவனைத் துன்பநிலையிலேயே வைத்திருக்கும். மாறுபாடே பகை உண்டாக வழிவகுப்பது. பகையுணர்வால் பலருடன் சண்டையிட்டு வலிமை குன்றி எளியனாய்த் தோன்றுவான். அதன் தொடர்ச்சியாய் உரிய நேரத்தில் தனக்குத் துணையாக காக்க யாருமின்றி துன்பத்தின்மேல் துன்பம் உண்டாகும். மேலும் மாறுபாட்டினால் உண்டாகும் துன்பம் மனதில் எப்பொழுதும் உறைந்திருந்து கொண்டு வருத்திக் கொண்டேயிருக்கும். இதனால் துன்பத்துள் துன்பம் எனச் சொல்லப்பட்டது.
இகலென்னும் இத்துன்பத்துள் துன்பத்தை ஒழித்துவிட்டால் எல்லாப் பயனும் கிடைத்து அது இன்பத்துள் இன்பம் பயக்கும்.

'இன்பத்துள் இன்பம்' குறிப்பது என்ன?

பகைமை என்கிற துன்பத்துள் துன்பம் இல்லையானால் அது ஒருவனுக்கு மிக்க இன்பங்கொடுக்கும். பகையே இல்லையென்றால் தன் உடலுக்கும் உள்ளத்திற்கும் எவரும் ஊறு விளைப்பர் என்பது பற்றி பயப்படாமல் இருப்பதால் அமைதியான வாழ்வு கிட்டும். அவனுக்குத் தேவையான துணையும் வலிமையும் தானாக வந்து சேரும். துன்பம் தரும் இகலிலிருந்து விடுதலை காண்பவன் குடும்பம், சமூகம், அரசு அனைத்து அமைப்புகளிலும் நட்பு பெருகுவதை உணர்வான். அதனால் நீடித்த, நிலையான மகிழ்ச்சி ஏற்படும். அதுவே இன்பத்துள் இன்பம்.

சிலர் இன்பத்துள் இன்பம் என்பதற்கு 'எல்லா இன்பத்தின்மிக்க வீடுபேற்றின்பம்' எனப் பொருள் உரைத்தனர். அது இங்கு பொருந்தாது.

துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பமாகிய மாறுபாடு என்று சொல்லப்படுவது கெட்டால் அது இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தைத் தரும் என்பது இக்குறட்கருத்து.

 

 

அதிகார இயைபு   இகல் நீங்கிய வாழ்வு பேரின்பம் பயக்கும்.

 

பொழிப்பு   மாறுபாடு என்னும் துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பம் ஒழிந்தால் அது இன்பங்கள் அனைத்திலும் மிக்க இன்பத்தைக் கொடுக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்

(அதிகாரம்:இகல் குறள் எண்:854)

பொழிப்பு (மு வரதராசன்): இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது ஒருவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்: மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின்.
எல்லா இன்பத்தின்மிக்க வீடுபேற்றின்பம் எய்தும் என்றவாறு.

பரிமேலழகர் உரை: இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும் - அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.
(துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைதலான் யாவர்க்கும் எளியனாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின். 'இகல் என்னும்' என்றார். இன்பத்துள்இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: துன்பங்களுள் எல்லாவற்றிலும் மிகத் துன்பமாய மாறுபாடே ஒழிந்து போமாயின், அஃது இன்பங்களெவற்றினும் மிக்க இன்பத்தைக் கொடுக்கும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
இகல்என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் இன்பத்துள் இன்பம் பயக்கும்.

பதவுரை: இன்பத்துள்-மகிழ்ச்சியுள்; இன்பம்-மகிழ்ச்சி; பயக்கும்-உண்டாக்கும், பயன்தரும்; இகல்-மாறுபாடு; என்னும்-என்கின்ற; துன்பத்துள்-துயரத்துள்; துன்பம்-துயரம்; கெடின்-இல்லையாயின்.


இன்பத்துள் இன்பம் பயக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்:
பரிப்பெருமாள்: இன்பத்தின் மிக்க இன்பத்தை எய்தும்:
பரிதி: இன்பம் வந்தகாலம் இன்பம் வந்தது என்று மகிழாதவன்;
காலிங்கர்: இன்பத்துள் மிக்க இன்பத்தைத் தரும்;
பரிமேலழகர்: அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: இன்பத்துள்இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.

'இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதியின் உரை 629ஆம் குறளுக்கானது.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறந்த இன்பம் விழையும்', 'அந்த இல்லாமை அவனுக்கு இன்பங்கள் அனைத்திலும் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்', 'இன்பங்களிலெல்லாம் சிறந்த இன்பம் உண்டாக்கும்', 'இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பம் உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

இகல்என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின்.
மணக்குடவர் குறிப்புரை: எல்லா இன்பத்தின்மிக்க வீடுபேற்றின்பம் எய்தும் என்றவாறு.
பரிப்பெருமாள்: மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் போமாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: எல்லா இன்பத்தினும்மிக்க வீடுபேற்றின்பமும் எய்தும் என்றது.
பரிதி: துன்பம் வந்தகாலத்தும் துன்பப்படான் என்றவாறு.
காலிங்கர்: இகல் என்னும் துன்பத்துள் மிக்க துன்பம் கெடின் என்றவாறு.
பரிமேலழகர்: மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைதலான் யாவர்க்கும் எளியனாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின். 'இகல் என்னும்' என்றார்.

'மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியின் உரை 629ஆம் குறளுக்கானது.

இன்றைய ஆசிரியர்கள் 'மாறுபாடு என்னும் பெருந்துன்பம் ஒழிந்தால்', 'மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் அனைத்திலும் சிறந்த துன்பம் ஒருவர்க்கு இல்லையாயின்', 'துன்பங்களிலெல்லாம் கொடிய துன்பமாகிய மனத்தாபம் என்னும் துன்பம் இல்லையானால்', 'மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பம் கெட்டால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பமாகிய மாறுபாடு என்று சொல்லப்படுவது கெட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பமாகிய மாறுபாடு என்று சொல்லப்படுவது கெட்டால் அது இன்பத்துள் இன்பத்தைத் தரும் என்பது பாடலின் பொருள்.
'இன்பத்துள் இன்பம்' குறிப்பது என்ன?

மாறுபாடு நீங்கப்பெற்றால் அளவிறந்த இன்பம் பெறலாம்.

துன்பங்களுள் பெரிதான துன்பமான இகல் இல்லையானால் அதுவே ஒருவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் மிகுந்த இன்பத்தினைத் தரும்.
மாறுபாடு என்பது துன்பங்கள் தருவனவற்றுள் எல்லாம் பெரிதானது. இவருடன் உறவு வேண்டாம் அவருடன் கூடவேண்டாம் என்றவாறு பிரிந்து நிற்பது மன உளைச்சல்களையே தரும். அது எந்தவித நன்மையையும் தராது. இகலென்னும் கொடிய நோய் பற்றிக்கொண்டால் அமைதி இழந்து வாழ்வே பாழாகிவிடும். ஒருவர் இன்னொருவர்க்குத் தீங்கு செய்ய பதிலுக்கு அவர் இன்னும் பெரிய தீமை செய்ய இப்படியாக இகல் விரிவடைந்து இருவருமே நன்மையடையமுடியாமல் காலம் கடந்துவிடும். இகல் உள்ளத்தையும் உடம்பையும் உலுக்கி ஒருவனைத் துன்பநிலையிலேயே வைத்திருக்கும். மாறுபாடே பகை உண்டாக வழிவகுப்பது. பகையுணர்வால் பலருடன் சண்டையிட்டு வலிமை குன்றி எளியனாய்த் தோன்றுவான். அதன் தொடர்ச்சியாய் உரிய நேரத்தில் தனக்குத் துணையாக காக்க யாருமின்றி துன்பத்தின்மேல் துன்பம் உண்டாகும். மேலும் மாறுபாட்டினால் உண்டாகும் துன்பம் மனதில் எப்பொழுதும் உறைந்திருந்து கொண்டு வருத்திக் கொண்டேயிருக்கும். இதனால் துன்பத்துள் துன்பம் எனச் சொல்லப்பட்டது.
இகலென்னும் இத்துன்பத்துள் துன்பத்தை ஒழித்துவிட்டால் எல்லாப் பயனும் கிடைத்து அது இன்பத்துள் இன்பம் பயக்கும்.

'இன்பத்துள் இன்பம்' குறிப்பது என்ன?

பகைமை என்கிற துன்பத்துள் துன்பம் இல்லையானால் அது ஒருவனுக்கு மிக்க இன்பங்கொடுக்கும். பகையே இல்லையென்றால் தன் உடலுக்கும் உள்ளத்திற்கும் எவரும் ஊறு விளைப்பர் என்பது பற்றி பயப்படாமல் இருப்பதால் அமைதியான வாழ்வு கிட்டும். அவனுக்குத் தேவையான துணையும் வலிமையும் தானாக வந்து சேரும். துன்பம் தரும் இகலிலிருந்து விடுதலை காண்பவன் குடும்பம், சமூகம், அரசு அனைத்து அமைப்புகளிலும் நட்பு பெருகுவதை உணர்வான். அதனால் நீடித்த, நிலையான மகிழ்ச்சி ஏற்படும். அதுவே இன்பத்துள் இன்பம்.

சிலர் இன்பத்துள் இன்பம் என்பதற்கு 'எல்லா இன்பத்தின்மிக்க வீடுபேற்றின்பம்' எனப் பொருள் உரைத்தனர். அது இங்கு பொருந்தாது.

துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பமாகிய மாறுபாடு என்று சொல்லப்படுவது கெட்டால் அது இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தைத் தரும் என்பது இக்குறட்கருத்து.

 

 அதிகார இயைபு   இகல் நீங்கிய வாழ்வு பேரின்பம் பயக்கும்.

 

பொழிப்பு   மாறுபாடு என்னும் துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பம் ஒழிந்தால் அது இன்பங்கள் அனைத்திலும் மிக்க இன்பத்தைக் கொடுக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்

(அதிகாரம்:இகல் குறள் எண்:855)

பொழிப்பு (மு வரதராசன்): இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.

மணக்குடவர் உரை: இகலின் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை வெல்ல நினைக்கும் தன்மையவர் யார்தான்.
சாய்ந்தொழுக வேண்டுமென்றார் அது தோல்வி யாகாதோ என்றார்க்கு அவரை வெல்வாரில்லை யென்றார்.

பரிமேலழகர் உரை: இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை - தம் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக்கொள்ளாது சாய்ந்தொழுக வல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர் யார் - வெல்லக்கருதும் தன்மையுடையார் யாவர்?
(இகலை ஒழிந்தொழுகல் வேந்தர்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், 'வல்லாரை' என்றும், யாவர்க்கும் நண்பாகலின் அவரை வெல்லக் கருதுவார் யாவரும் இல்லை என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: மனமாறுபாடு தோன்றியவழி அதற்கு எதிரே விட்டுக்கொடுத்து உடன்பட்டு வாழக் கூடியவரை, அதற்குத் தாமும் இசையாது அவ்விகலையே மிகப்பெரிதுபடுத்தும் தன்மையுடையார் யார்? ஒருவர் இணங்கி வரும்பொழுது, மற்றவர் எளிதில் இசைந்து வாழ்வர்.
தாம் வலிமையுடைய உயர்நிலையிலிருந்தாலும் வளைந்துகொடுத்து, ஒத்துப்போகக்கூடிய மனஉரம் உடையவர் என்பதற்கே 'சாய்ந்து ஒழுக வல்லார்' என்றார்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை மிகலூக்கும் தன்மையவர் யாரே?

பதவுரை: இகல்-மாறுபாடு; எதிர்-எதிர் (மலையாது), ஏற்றுக்கொள்ளாது; சாய்ந்து-ஒதுங்கி; ஒழுக-நடந்து கொள்ள; வல்லாரை-திறமையுடையவரை; யாரே-எவரே; மிகல்-வெல்ல, (இகலின்) மிகுமாறு; ஊக்கும்-கருதும்; தன்மையவர்-இயல்பினை யுடையவர்.


இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இகலின் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை; [சாய்ந்து- எதிர்த்து நிற்காமல் ஒதுங்கி]
பரிப்பெருமாள்: இகலின் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை;
பரிதி: மாறுபாடெதிர்த்தால் பொறுமையினாலே வெற்றி கொள்ளுபவனை;
காலிங்கர்: தம்மொடு பிறர் வந்து இகலின் அவ்விகல் எதிர்மலையாது தலைசாய்ந்து ஒழுக வல்லாரை;
மிகல் என்பது மேம்பாடு; ஊக்குதல் என்பது தள்ளுதல்.
பரிமேலழகர்: தம் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக்கொள்ளாது சாய்ந்தொழுக வல்லாரை;

'மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக்கொள்ளாது சாய்ந்தொழுக வல்லாரை/பொறுமையினாலே வெற்றி கொள்ளுபவனை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாறுபாட்டுக்கு ஒதுங்கிப் போய்விடுவாரை', 'இகலை எதிர்த்து நிற்காமல் சாய்ந்து கொடுக்கும் ஆற்றல் படைத்தவரை', 'மனத்தாபத்துக்கு மனதில் இடங் கொடுக்காமல் அதற்கு எதிராக ஒதுங்கி நடக்கத் திறமையுள்ளவர்களுக்கு', 'மாறுபாட்டிற்கு எதிர்க்காது விலகி நடக்க வல்லவரை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மாறுபாட்டுக்கு எதிர்த்து நிற்காமல் வளைந்துகொடுக்கும் ஆற்றல் படைத்தவரை என்பது இப்பகுதியின் பொருள்.

யாரே மிகலூக்கும் தன்மை யவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெல்ல நினைக்கும் தன்மையவர் யார்தான்.
மணக்குடவர் குறிப்புரை: சாய்ந்தொழுக வேண்டுமென்றார் அது தோல்வி யாகாதோ என்றார்க்கு அவரை வெல்வாரில்லை யென்றார்.
பரிப்பெருமாள்: வெல்ல நினைக்கும் தன்மையவர் யாவர்தான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: சாய்ந்தொழுக வேண்டுமென்றார் அது தோல்வி யாகாதோ என்றார்க்கு அவரை வெல்வாரில்லை என்றது.
பரிதி: யார் தானும் வெல்வரோ என்றவாறு.
காலிங்கர்: மற்று யாரேதான் அவர் மேம்பாட்டைத் தள்ளும் தன்மையவர் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: மிகல் என்பது மேம்பாடு; ஊக்குதல் என்பது தள்ளுதல்.
பரிமேலழகர்: வெல்லக்கருதும் தன்மையுடையார் யாவர்?
பரிமேலழகர்: இகலை ஒழிந்தொழுகல் வேந்தர்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், 'வல்லாரை' என்றும், யாவர்க்கும் நண்பாகலின் அவரை வெல்லக் கருதுவார் யாவரும் இல்லை என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது. [இகலாதார்க்கு-மாறுபடாதவர்க்கு]

வெல்ல நினைக்கும் தன்மையவர்/ மேம்பாட்டைத் தள்ளும் தன்மையவர் யார்தான் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வம்புக்குத் தூண்ட யாரால் இயலும்?', 'இகலுணர்ச்சியில் மேம்பட்டிருக்குமாறு தூண்டிவிடும் இயல்பினர் யாவர்? (ஒருவருமிலர்)', 'கோபமூட்டக் கூடியவர்கள் யாருமில்லை', 'வெல்ல நினைக்குந் தன்மையுடையவர் யாவர்?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இகலுணர்வில் மிகுமாறு தூண்ட யாரால் இயலும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மாறுபாட்டுக்கு எதிர்த்து நிற்காமல் சாய்ந்தொழுக வல்லாரை இகலுணர்வில் மிகுமாறு தூண்ட யாரால் இயலும் என்பது பாடலின் பொருள்.
'சாய்ந்தொழுக வல்லார்' யார்?

வளைந்து கொடுத்து இகலைத் தவிர்த்துக் கொள்க.

மாறுபாட்டை எதிர்கொள்ளும்போது அதை இணக்கமான முறையில் சரிப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் படைத்தவரை வெல்லக் கருதும் தன்மையுடையவர் எவரும் இலர்.
ஒருவருக்கு இகல் தோன்றும் நிலைமை உண்டாகிறது. அவர் அதை எதிர்த்து நின்று வெல்ல நினைக்கலாம், அல்லது இகலுக்கான காரணங்களை ஆராய்ந்து பகையைப் பேணிப் பெருக்காமல் தலைசாய்ந்து இகலுக்குத் தீர்வு கண்டு பகையுணர்வை நீக்கிக்கொள்ளலாம். இரண்டாவது சொல்லப்பட்டதை ஆங்கிலத்தில் உள்ள Stoop to conquer என்ற வழக்கிற்கு இணையானதாக எண்ணலாம். நாணல்போல் வளைந்து வெற்றிகொள்வது என்பது பொருள். வள்ளுவர் இதைத்தான் இப்பாடலில் பரிந்துரைக்கிறார்.
இகலுக்குத் தீர்வாக மலைதல் அதாவது மோதுதல் போக்கை மேற்கொள்ளச் சிலர் வழிகாட்டுவர். அதாவது இகலின் மிகல் காட்டச் சொல்வர். ஆனால் சாய்ந்தொழுகும் இயல்புடையவரை பகைமேல் மிகுவிக்கச் செய்ய யாராலும் முடியாது எனவும் வள்ளுவர் கூறுகிறார். இகலுக்கு எதிர் இகல் என்பதை வள்ளுவர் ஒப்பமாட்டார். சாய்ந்தொழுகுவதே எல்லாச் சூழ்நிலைகளிலும் வெல்லச் செய்யும் என்கிறார் அவர். அப்படி சாய்ந்தொழுகுவாரோடு உடன்பாட்டிற்கு இசையாது அவ்விகலையே பெரிதுபடுத்தி முனைந்து நிற்கும் தன்மையுடையார் யாவரும் இருக்கமாட்டார். அதனால்தான் இகலின் மிகுமாறு யார் ஊக்க இயலும்? எனக் கேட்கிறார் வள்ளுவர்.

'சாய்ந்தொழுக வல்லார்' யார்?

'சாய்ந்தொழுக வல்லார்' என்றதற்குப் பொறுமையினாலே வெற்றி கொள்ளுபவன், எதிர்மலையாது தலைசாய்ந்து ஒழுக வல்லார், பகையைப் பேணி அதிகமாக்காமல் தள்ளிப் போடுகிறவர், சாய்த்துக் கொண்டு போக வல்லார், எதிர்த்து நிற்காமல் சாய்ந்து நடக்க வல்லவர், விட்டுக்கொடுத்து உடன்பட்டு வாழக் கூடியவர், மூர்க்கத்தனமான பிடிவாதம் செய்யாமல் ஒருவழியாக ஒதுங்கி ஒழுகவல்லார், ஒதுங்கிப் போய்விடுவார், சாய்ந்து கொடுக்கும் ஆற்றல் படைத்தவர், ஒதுங்கி நடக்கத் திறமையுள்ளவர், தாமே விலக்கி நடக்க வல்லவர், விலகி நடக்க வல்லவர், வளைந்து கொடுத்து (நாணல் போல்) வாழ வல்லவர், வெள்ளத்து நாணல்போற் சாய்ந்தொழுக வல்லார், வளைந்து கொடுத்து வெற்றிகாணும் தன்மையுடையார் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பரிதி பொறுமையினாலே வெற்றி கொள்ளுபவன் என்கிறார். சாய்ந்தொழுகல் என்பது எவ்வாறேனும் அமைதி பெறுவதல்ல. அது தோல்வியையும் கோழைத்தனத்தையும் குறிக்கும். சாய்ந்தொழுகல் என்பதற்குப் 'பகைவர் எதிர்த்தால் எதிர்த்து நில்லாமற் சாய்ந்து போதல்' எனவும் 'தம்மனத்துப் பகைமை தோன்றினால் சாய்ந்துபோதல்' எனவும் இரு திறமாக உரை காண்பர். ஒன்று பகைவரை எதிர்த்தும் மற்றொன்று பகைவரை எதிர்க்காமலும் விலகிப் போவதைக் கூறுகின்றன. இவற்றுள் பகைவரை எதிர்க்காமல் இகல் எழுந்த மனத்துள்ளேயே சாய்ந்தொழுகுவாரை வெல்வார் இலர் என்பது சிறந்தது என்பார் தண்டபாணி தேசிகர், ஏனெனில் மற்றவர்கள் சாய்ந்தொழுகுதல் பெருமையுடைத்து என்ற உண்மையறிய மாட்டாமையான் அவமதிக்கவும் செய்வர் என்பதால்.

மனதில் மாறுபாடு உருவானாலும், உள்ளிருந்து தூண்டும் பகை உணர்வைக் கட்டுப்படுத்தி அடக்குபவரே சாய்ந்தொழுகுபவர். இகலெதிர் சாய்ந்தொழுகல் அரிதான செயலாம்; அது எல்லார்க்கும் இயலாது. அதற்குத் தனித் திறமை வேண்டும். சாய்ந்தொழுகல் என்பது பகைவர்க்கு சிலவற்றை விட்டுக் கொடுத்து சிலவற்றில் ஒத்துப்போய் இரண்டு பக்கமும் இணங்கி தீர்வு காண்பதைச் சொல்வது. ஒருவர் தான் எந்நிலையிலிருந்தாலும் வளைந்துகொடுத்து, பகைவரால் ஏற்படும் இகலை வெல்வாரானால் அவர் சிறப்பான ஆற்றல் பெற்றவராயிருப்பர்; பெருங்காற்றுக்கும் பெருவெள்ளத்திற்கும் எதிர்சாய்ந்து கொடுக்கும் நாணலைப்போல, அவர் பகைமைக்குச்சாய்ந்து போதலின் அருமைதோன்ற 'ஒழுகவல்லார்' எனச் சொல்லப்பட்டார்.
மனத்திற் பகை தோன்றினாலும் அதை உடனே மறுத்து மாறின்றி நடக்க வல்லவரிடம்கு நட்பு பாராட்டவே அனைவரும் விரும்புவர். அவ்விதம் பகை தணிந்து, இருவருமே வெற்றி கொண்ட எண்ணத்துடன், அமைதிகாக்கப் பிரிந்து செல்வர். இதை இன்றைய மேலாண்மையாளர்கள் win-win situation என அழைப்பர். இந்த நிலையை எய்தச் செய்வார் சாய்ந்தொழுக வல்லார்.

'சாய்ந்தொழுக வல்லார்' என்றதற்குத் தம்மனத்தில் இகல் தோன்றின் அதற்குச் சாய்ந்து நடக்க வல்லவர் என்பது பொருள்.

மாறுபாட்டுக்கு எதிர்த்து நிற்காமல் வளைந்துகொடுக்கும் ஆற்றல் படைத்தவரை இகலுணர்வில் மிகுமாறு தூண்ட யாரால் இயலும் என்பது இக்குறட்கருத்து.

 

அதிகார இயைபு

விட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மையுள்ளவரது இகல் உணர்வைக் கிண்டிக்கிளற முடியாது.

 

பொழிப்பு

மாறுபாட்டுக்கு எதிர்த்து நிற்காமல் சாய்ந்து கொடுக்கும் ஆற்றல் படைத்தவரை வெல்லும் இயல்பினர் யாரும் இலர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து

(அதிகாரம்:இகல் குறள் எண்:856)

பொழிப்பு (மு வரதராசன்): இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிப்போதலும் அழிதலும் விரைவில் உள்ளனவாம்.



மணக்குடவர் உரை: பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் வாழ்க்கையும் சாதலும் கெடுதலும் நணித்து.
நிரனிறை. இது சாயானாயின் உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை - பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து - பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம்.
(மிகுதல் - மேன்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து' என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: எதிர்த்து மாறுபடுவதில் மேன்மேற் செல்லுதல் நல்லதென்று கருதுவானது வாழ்க்கையானது விரைவில் பிழைபடுதலும் முழுதுங் கெட்டுப்போதலுங் கூடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து.

பதவுரை: இகலின்-மாறுபடுதற்கண்; மிகல்-மேன்மேலூக்குதல், மிகுதியாக (மாறுபடுதல்), வெல்லுதல்; இனிது-நன்றானது; என்பவன்-என்று கருதுபவன், என்று செய்பவன்; வாழ்க்கை-வாழ்வு; தவலும்-தவறுவதும்; கெடலும்-முற்றக்கெடுதலும்; நணித்து-கிட்டத்தில், விரைவில், சிறு பொழுதுள்.


இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் வாழ்க்கையும்;
பரிப்பெருமாள்: பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் மனை வாழ்க்கையும்;
பரிதி: மாறுபாட்டிலே மிகுந்த குணமுடையார்க்கு;
காலிங்கர்: இது தமக்குத் தகாது என்று மீட்சி இன்றிப் பிறரோடு இகலின்கண்ணே மிகுதலையும் இனிதென்று கொள்பவரது வாழ்க்கை; [மீட்சி -திரும்புதல்]
பரிமேலழகர்: பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை;
பரிமேலழகர் குறிப்புரை: மிகுதல் - மேன்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். [வேறல் - வெல்+தல்;வெல்லுதல்]

'பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது என்று அதனைச் செய்வானது வாழ்க்கை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வீம்பு மிகுதியை விரும்புபவன் வாழ்வு', 'பிறரொடு மாறுபடுதலில் மேலும் முனைந்து நிற்றல் எனக்கு இன்பம் தரும் என்று கூறுபவன் வாழ்க்கை', 'மனத்தாபத்தை (அடக்காமல்) அதை மிகச் செய்து கோபங் கொள்ளுவதை நல்லதென்று கொண்டு விடுகிறவனுடைய நல்வாழ்க்கை', 'பிறரோடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிமையைத் தரும் என்று அதனைச் செய்வானது வாழ்க்கை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மாறுபாட்டின்கண் முனைந்து நிற்றல் இனிதென்று கூறுபவனது வாழ்க்கை என்பது இப்பகுதியின் பொருள்.

தவலும் கெடலும் நணித்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சாதலும் கெடுதலும் நணித்து. [நணித்து - அண்மையிலுள்ளது]
மணக்குடவர் குறிப்புரை: நிரனிறை. இது சாயானாயின் உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது. [சாயானாயின் - எதிர்த்து நிற்பானாயின்]
பரிப்பெருமாள்: சாதலும் கெடுதலும் அணித்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: நிரனிறை. இது சாயானாயின் உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது.
பரிதி: வாழ்வும் சிறுகுதலும் பிராணன் கெடுதலும் சடுதியிலே உண்டாம் என்றவாறு. [சடுதியிலே -விரைவிலே]
காலிங்கர்: குறைபடுதலும் கெட்டுவிடுதலும் நணித்து என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தவல் என்பது குறைதல்.
பரிமேலழகர்: பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம். [சிறிதுபொழுதுள் - விரைவில்]
பரிமேலழகர் குறிப்புரை: பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து' என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.

'சாதலும் கெடுதலும்/சிறுகுதலும் பிராணன் கெடுதலும்/குறைபடுதலும் கெட்டுவிடுதலும்/ பிழைத்தலும் முற்றக் கெடுதலும் நணித்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிதைதலும் அழிவதும் நாளாகாது', 'சிதறுதலும் முற்றும் கெடுதலும் விரைவில் ஏற்படும்', 'விரைவில் துன்பமும் நாசமும் அடைந்துவிடும்', 'தவறுதலும் அழிதலும் விரைவில் உண்டாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சிதைதலும் முற்றிலும் அழிந்து போய்விடுதலும் விரைவில் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
மாறுபாட்டின்கண் முனைந்து நிற்றல் இனிதென்று கூறுபவனது வாழ்க்கை சிதைதலும் முற்றிலும் அழிந்து போய்விடுதலும் விரைவில் உண்டாகும் என்பது பாடலின் பொருள்.
'மிகல்இனிது' என்ற தொடரின் பொருள் என்ன?

பகைமைக்கு மேல்பகைமை என நடப்பவனது வாழ்க்கை விரைவில் முடிவை எய்தும்.

தன்னோடு மாறுபடுபவனை எதிர்த்து அவனினும் மிகுதியாக நிற்றலே இனியது என்று கருதுபவனது வாழ்க்கையானது விரைவில் சிதைந்து அழிந்துபோகும்.
இகல் என்பது மற்றவர் மீது எண்ணத்தளவில் நிற்கும் வெறுப்பு உணர்வு ஆகும். அது செயலளவில் மிகும்போது பகையாகிறது. ஒருவன் இன்னொருவனிடம் ஏதோ ஒரு காரணத்திற்காக வன்மம் பாராட்டுகிறான். இகலுக்கான காரணத்தை ஆராய்ந்து அதைக் களைய முயற்சிக்காமல் பகையை வளர்ப்பதில் மேலும் முனைந்து நிற்றல் தனக்கு இன்பம் தரும் அதாவது அதில் வெற்றி பெற்றுவிடுவேன் என்று கூறுகிறான் இவன். இவ்விதம் வேற்றுமையால் வரும் பகையுணர்வை மிகுவிப்பதால் மாறுபாடும் அழிவு வேலையும் பெருகி அவனது வாழ்க்கை விரைவில் தவறி நிலைகுலைந்து முற்றும் அழிந்து போய்விடும் என்கிறார் வள்ளுவர்.

சிலருக்கு மற்றவர்களுடன் பகையுறவிலேயே எப்பொழுதும் இருப்பது இனிக்கிறது. அதனால் இகலை மேலும் வளர்ப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். அதுவே வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழி என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அவ்விதம் நினைப்போரது வாழ்வு நிலை தாழ்தலும் உயிரழிவும் மிக அண்மையிலேயே உள்ளன என்பதை அவர்கள் அறியவேண்டும்.
இகல் அளவிலே பகைமையை வளரவிடாமல் ஒழித்துவிடவேண்டும் என்கிறது பாடல்.

'மிகல்இனிது' என்ற தொடரின் பொருள் என்ன?

'மிகல்இனிது' என்றதற்கு மிகுதல் இனிது, மிகுந்த குணமுடைமை, மிகுதல் எனக்கு இனிது, தனக்கு நல்லது, எனக்கு இனிது, வெல்லுதல் இனியது, மேன்மேலும் மிகுதிப்படுத்தி வளர்த்தலை இனிது, இன்பம், மிகுதியை விரும்புபவன், நல்லது, மேன்மேற் செல்லுதல் நல்லது, மிகுதல் எனக்கு இனிமையைத் தரும், ஊட்டி வளர்ப்பது, மிகுதல் தனக்கு நல்லது, மேம்பாடாகிய இன்பம் பெறுகின்றோம், வெல்லலாம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மிகல் என்பதற்கு மிகுதல் அதாவது பகையை ஊட்டி வளர்த்தல் என்று பலரும் வெல்லுதல் என்று மற்றவர்களும் பொருள் கூறினர். இவற்றுள் மிகுதல் என்ற பொருள் பொருத்தம். ஒருவன் இகல் மேற்கொண்டால் அதைத் தணிக்க முயற்சி செய்யாமல் மிகுவிப்பதற்கானவற்றையே செய்து அவற்றை அவர்களது 'வீரச்செயல்கள்' போல் எண்ணிக் களிப்படைவார்கள். அது மேன்மேலும் பகையை வளர்த்து அழிவைத்தான் விளைக்கும் என்கிறது பாடல்.

'மிகல்இனிது' என்ற தொடர் மேன்மேலும் மிகுதிப்படுத்தி வளர்த்தல் இனிது என்ற பொருள் தரும்.

மாறுபாட்டின்கண் முனைந்து நிற்றல் இனிதென்று கூறுபவனது வாழ்க்கை சிதைதலும் முற்றிலும் அழிந்து போய்விடுதலும் விரைவில் உண்டாகும் என்பது இக்குறட்கருத்து.

 

அதிகார இயைபு

வீம்புக்காக இகல் விரும்புவனைப் பழித்துரைக்கும் பா.

 

பொழிப்பு

மாறுபாட்டை மேன்மேலும் விரும்பி அது இனிது என்று கூறுபவன் வாழ்வு சிதறி விரைவில் அழியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்

(அதிகாரம்:இகல் குறள் எண்:857)

பொழிப்பு (மு வரதராசன்): இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.

மணக்குடவர் உரை: மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார், மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார்.
இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது.

பரிமேலழகர் உரை: இகல் மேவல் இன்னா அறிவினவர் - இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினையுடையார்; மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் - வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார்.
(இன்னா அறிவு -தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. வெற்றி - வழிநின்றார்க்கு உளதாவது. காணப்படும் பயத்ததாகலின், 'மெய்ந்நூல்' எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார். இவை இரண்டு பாட்டானும்இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: மாறுபடுதலை விரும்பும் கொடிய அறிவினர் மேன்மை தரும் உண்மைப் பொருளை அறியார்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
இகல்மேவல் இன்னா அறிவினவர் மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்.

பதவுரை: மிகல்-மிகுதல், வெற்றி; மேவல்-பொருந்துதல், அடைதல்; மெய்ப்பொருள்-உண்மைப்பொருள்; காணார்-அறியமாட்டார்; இகல்-மாறுபாடு; மேவல்-விரும்புதல்; இன்னா-தீயவை; அறிவினவர்-அறிவுடையவர்கள்.


மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('மிகன்மேவு' பாடம்): மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார்;
பரிப்பெருமாள்: மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார்;
பரிதி: மிகவும் பெருமையுள்ளவன் என்கிற குணம் காணார்;
காலிங்கர் ('மிகன்மேவு' பாடம்): தன்னின் பெரியது பிறிது இன்றித் தானே பெருமை மேவுதல் பண்பிற்றாய் என்றும் யாது ஒருபடிப்பட நிற்பதாய இம்மெய்ப்பொருளைக் காணமாட்டார்;
காலிங்கர் குறிப்புரை: மிகன் மேவு என்பது பெருமை.
பரிமேலழகர்: வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார்.
பரிமேலழகர் குறிப்புரை: வெற்றி - வழிநின்றார்க்கு உளதாவது. காணப்படும் பயத்ததாகலின், 'மெய்ந்நூல்' எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார். [வழி நின்றார் -நீதி நூல் கூறிய வழியில் ஒழுகுவார்]

'மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார்/மிகவும் பெருமையுள்ளவன் என்கிற குணம் காணார்/என்றும் யாது ஒருபடிப்பட நிற்பதாய இம்மெய்ப்பொருளைக் காணமாட்டார்/வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நூல்கள் கூறும் வெற்றிக்குக் காரணமான மெய்ப்பொருள்களை அறிய மாட்டார்கள்', 'அந்த மனத்தாபம் மிஞ்சும்போது கோபம் வந்துவிடுவதனால் எந்த விஷயத்திலும் உண்மைகளை அறிய முடியாதவர்களாகி விடுகிறார்கள்', 'மேன்மையான நீதிநூற் பொருளை அறியமாட்டார்கள்', 'வெற்றி பொருந்துதலை உடைய நீதி நூற் பொருள்களை அறியமாட்டார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மிகுதலைப் பொருந்துவதால் உண்மைப் பொருளைக் காணமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

இகல்மேவல் இன்னா அறிவி னவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('இகன்மேவும்' பாடம்): மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார்.
மணக்குடவர் குறிப்புரை: இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது.
பரிப்பெருமாள்: மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது. மெய்ப்பொருள் காணார் என்றமையால் கல்வியின்கண் தருக்கத்தினால் மாறுபடுவாரை நோக்கிற்று. [தருக்கத்தினால்- வாதத்தினால்]
பரிதி: மாறுபாடு மேற்கொண்ட புல்லறிவாளர் என்றவாறு.
காலிங்கர் ('இகன்மேவும்' பாடம்): யாரோ எனின் சில சமயவேற்றுமை பற்றிநின்று அதன்கண் மேவுதல் பண்பிற்றாகிய இப்பெரியதோர் இன்னாத அறிவினர் என்றவாறு. [இன்னாத - துன்பந்தரும்]
பரிமேலழகர்: இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினையுடையார்; [இன்னாத - தீமையைத் தருகின்ற]
பரிமேலழகர் குறிப்புரை: இன்னா அறிவு -தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. இவை இரண்டு பாட்டானும்இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.

'மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாறுபாட்டை விரும்பும் தீய அறிவுடையவர்கள்', 'மனத்தாபம் அடைந்துவிட்டதனால் அறிவு கெட்டுப் போனவர்கள்', 'மாறுபாட்டினை விரும்பும் தீய அறிவுடையவர்கள்', 'மாறுபாட்டைப் பொருந்துதல் உடைய துன்பம் தரும் அறிவினை உடையார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மாறுபாட்டை விரும்பும் கொடிய அறிவினர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மாறுபாட்டை விரும்பும் கொடிய அறிவினர் மிகுதலைப் பொருந்துவதால் உண்மைப் பொருளைக் காணமாட்டார் என்பது பாடலின் பொருள்.
'மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்' குறிப்பது என்ன?

பகையை வளர்க்கவே விரும்புகிறவர்களுக்கு உண்மை நிலைமை தெரிவதில்லை.

மாறுபாட்டினை விரும்பும் தீய அறிவினை உடையவர்கள் உண்மை எதுவும் காணமாட்டாதவர்களாயிருப்பர்.
இகல் மேவல் என்பது மாறுபாட்டை விரும்புதல் எனப்பொருள்படும். இன்னா அறிவு என்பது தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவாம். இகலை விரும்புகிறவர்கள் தீய அறிவினராவர் என்கிறார் வள்ளுவர். அவர்கள் செருக்குற்று மாறுபட்டவர்க்குத் தீமை செய்வதையே எண்ணுவார்கள். எப்பொழுதுமே உண்மையை அறிய மாட்டார்கள் எனவும் கூறுகிறார்,

'மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்' குறிப்பது என்ன?

மிகல் என்ற சொல்லுக்கு வெற்றி என்றும் மிகுதல் என்றும் இருதிறமாகப் பொருள் கொள்வர். இங்கு மிகுதல் என்ற பொருள் பொருத்தமாகப்படுகிறது. மிகல் மேவல் என்றது மாறுபடுபவனை எதிர்த்து அவனினும் மிகுதியாக நிற்றலைக் குறிக்கும். மெய்ப்பொருள் என்பதற்குப் பல உரையாசிரியர்கள் நீதிநூற்பொருள் எனப் பொருள் கூறினர். மணக்குடவர் உண்மைப் பொருள் என்றார். இது சிறப்பாக உள்ளது. எனவே 'மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்' என்றது மிகுதலைப் பொருந்துவதால் உண்மைப் பொருளைக் காணமாட்டார் என்ற பொருள் கிடைக்கிறது.
மாறுபாடு ஏற்படுவது பலவகை. சிறிய பெரிய காரணங்களுக்காக இகல் தோன்றும்; ஏதுக்கள் இன்றியும் பகைமை உண்டாகும். மாறுபாடு எளிதாக நீக்கத்தக்கதாக இருந்தாலும் சிலர் வீம்புக்காக பகைமையை மிகுவிக்கவே விரும்புவர். அவர்கள் ஏன் இகல் தோன்றியது என்பதையே அறியார்கள். பகையை விரும்பி வளர்த்துக்கொள்ளவே நினைப்பர். மற்றவர்க்குத் துன்பம் தருவதிலேயே முனைப்புக் காட்டுவர். இதனால்தான் அவர்களை இன்னா அறிவினர் என்கிறார் வள்ளுவர். அவர்கள் உண்மையை நோக்க மறுப்பதால் மெய்ப்பொருள் காணார் எனச்சொல்லப்பட்டது. மிகுதலையே பொருந்துவதால் இகல் ஏன் உண்டானது என்பதையே அறியமாட்டாதவர்களாயிருப்பர். அதைப் போக்குதற்கும் இணங்கமாட்டார். எனவே அவர்கள் 'மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்'.
இத்தொடரைப் பரிப்பெருமாள் 'கல்வியின்கண் தருக்கத்தினால் மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாது' என விளக்குவார். காலிங்கர் இதற்குத் 'தனது சமய உயர்வு கருதி இகல் காண்பார் யாது ஒருபடிப்பட நிற்பதாய இம்மெய்ப்பொருளைக் காணார்' என உரை செய்கிறார். தன்னிகரில்லாத மெய்ப்பொருள் எனக் கடவுள் மேல் வைத்து இவர் பொருள் கூறினார். சமயமோ அல்லது இறைப்பொருளோ இங்கு-பொருட்பாலில்- பொருந்தாது.

மாறுபாட்டை விரும்பும் கொடிய அறிவினர் மிகுதலைப் பொருந்துவதால் உண்மைப் பொருளைக் காணமாட்டார் என்பது இக்குறட்கருத்து.

 

அதிகார இயைபு

இகல் மேவுவார் அறிவு மங்கியவராயிருப்பர்.

 

பொழிப்பு

மாறுபாட்டை விரும்பும் கொடிய அறிவினர் மேன்மை தரும் உண்மைப் பொருளை அறிய மாட்டார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு

(அதிகாரம்:இகல் குறள் எண்:858)

பொழிப்பு (மு வரதராசன்): இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும்; அதனை எதிர்த்து வெல்லக் கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.

மணக்குடவர் உரை: மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகுதல் ஆக்கமாம்: அதனை மிகுதலை நினைக்கின் கேடு மிகும்.
இது மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் - தன் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை எதிர்தலையொழிதல் ஒருவனுக்கு ஆக்கம் ஆம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம் - அது செய்யாது அதன்கண் மிகுதலை மேற்கொள்வானாயின் கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும்.
(எதிர்தல் - ஏற்றுக்கோடல், சாய்ந்த பொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.)

இரா சாரங்கபாணி உரை: மாறுபாட்டினை எதிர்த்து நில்லாது சாய்ந்தொழுகல் ஒருவனுக்கு வளர்ச்சியாம். மாறுபாட்டுணர்ச்சியில் முனைவதில் ஒருவன் ஊக்கம் கொள்வானாயின் அவனை நோக்கிக் கேடு விரைந்து வரும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகலூக்கின் கேடு ஊக்குமாம்.

பதவுரை: இகலிற்கு-மனவேறுபாட்டினை; எதிர்-ஏற்றுக்கொள்ளுதல்; சாய்தல்-ஒழிதல்; ஆக்கம்-மேன்மேல் உயர்தல்; அதனை-அதன்கண்; மிகல்-மேன்மேலுக்குதல்; ஊக்கின்-மேற்கொள்ளின்; ஊக்குமாம்-மேற்கொள்ளுமாம்; கேடு-அழிவு.


இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகுதல் ஆக்கமாம்:
பரிப்பெருமாள்: மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகுதல் ஆக்கமாம்:
பரிதி: மாறுபாட்டுக்குப் பொறுத்தல் ஆக்கம்;
காலிங்கர்: தம்முடன் பிறர் இகலும் இகலில் தான் எதிர்தலை சாய்ந்து ஒழுகுவது யாது, அது தமது ஆக்கத்தைக் கொணர்ந்து ஊக்கும்;
பரிமேலழகர்: தன் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை எதிர்தலையொழிதல் ஒருவனுக்கு ஆக்கம் ஆம்;
பரிமேலழகர் குறிப்புரை: எதிர்தல் - ஏற்றுக்கோடல், சாய்ந்த பொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார்.

'மாறுபாட்டிற்குச் சாய்தொழுகுதல் ஆக்கமாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாறுபாட்டுக்கு ஒதுங்குதல் முன்னேற்றமாம்', 'குரோதத்திற்கு மனதில் இடங் கொடுத்து விடாமலிருப்பது சேமம்', 'மாறுபாட்டிற்கு எதிராது விலகிப்போதல் செல்வ வளர்ச்சிக்கு ஏதுவாம்', 'மாறுபாட்டினை ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல் ஆக்கம் தரும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மாறுபாட்டுக்கு எதிராது விலகிப்போதல் உயர்வுதரும் என்பது இப்பகுதியின் பொருள்.

அதனை மிகலூக்கின் ஊக்குமாம் கேடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை மிகுதலை நினைக்கின் கேடு மிகும்.
மணக்குடவர் குறிப்புரை: இது மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகல் வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அதனை மிகுதலை நினைக்கின் கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மாறுபாட்டிற்குச் சாய்க்க வேண்டுமென்றது.
பரிதி: மாறுபாட்டை மேற்கொள்ளுதல் கேடு என்றவாறு.
காலிங்கர்: இனி அங்ஙனம் தலை சாய்ந்து ஒழுகக் கருதாது மற்று அதனை இகலின் கண்ணே நெஞ்சு ஊக்கின், ஆங்கு அது கொணர்ந்து ஊக்குமாம் கேடு என்பதனை என்றவாறு.
பரிமேலழகர்: அது செய்யாது அதன்கண் மிகுதலை மேற்கொள்வானாயின் கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.

'அதனை மிகுதலை நினைக்கின் கேடு மிகும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒதுங்காது நிமிர்ந்தால் கேடு வளரும்', 'அதற்கு (இடங் கொடுப்பதுடன்) அதனை மிஞ்ச விட்டுக் கோபங் கொண்டால் கேடுண்டாகும் என்பது நிச்சயம்', 'அதனை மிகுதியாக மேற்கொண்டாற் செல்வக்கேட்டினை அஃது உளதாக்கும்', 'அதனை ஏற்றுக்கொண்டால் கேடும் அவனிடத்து வருவதில் முனையும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இகலை மிகுதியாக மேற்கொண்டால் கேடும் அவனிடத்து வருவதில் முனையும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மாறுபாட்டுக்கு எதிராது விலகிப்போதல் உயர்வுதரும்; இகலை மிகலூக்கின் கேடும் அவனிடத்து வருவதில் முனையும் என்பது பாடலின் பொருள்.
'மிகலூக்கின்' என்பதன் பொருள் என்ன?

இகலுக்கு ஒதுங்கி நின்று மேற்செல்தல் முன்னேற்றமாம்.

பகையுணர்விற்கு எதிர்நில்லாது, ஒதுங்கிச் செல்லுதல் ஒருவனுக்கு ஆக்கம் தரும்; அவ்விதம் விலகிச் செல்லாமல் அதனை மிகுத்துக் கொண்டால் அது அவனுக்குக் கேடுகளை ஊக்கப்படுத்தும்.
தன்னிடம் மாறுபாடு கொள்கின்றவனுக்கு எதிராக தாமும் வன்மம் பாரட்டவே எல்லோருக்கும் தோன்றும். அவ்விதம் தன் உள்ளத்திலும் மாறுபாடு தோன்றியபோது, அதை வளர்க்காமல் சாய்ந்து போதலே ஆக்கம் தரும் என்கிறார் வள்ளுவர். அப்படிச் செய்யாமல், அதனை மிகுத்துக் கொண்டால் அவனுக்குக் கேடும் மிகுத்து வரும் எனவும் கூறுகிறார்.
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர் (855) என இவ்வாதிகாரத்து முந்தைய குறள் ஒன்றில் இகலெதிரே சாய்ந்தொழுக வல்லாரை யாரும் வெல்ல முடியாது என சொல்லப்பட்டது. இங்கு சாய்ந்தொழுகுவதால் ஆக்கம் வரும் என்றும் மாறுபாட்டால் கேடுண்டு என்று சாய்தலின் நன்மையும் மிகலின் தீமையும் ஒருங்கு உணர்த்தப்படுகிறது. இகல் தணிக்கப்பட வேண்டும் என்பதும் தனக்குள் தோன்றும் மனவேறுபாட்டை வளரவிடாமல் மாறுபாட்டுக்கு எதிரே மாறுபாடே காட்டி நிற்காமல் இயைந்து நடக்க முயல வேண்டும் என்பதும் வள்ளுவரது அறிவுரை.
மனவேற்றுமை இருவரிடத்தில் தோன்றும்போது இகல் உண்டாகிறது. எனவே இருவருமே சாய்ந்தொழுகுதல் நல்லது என்றாலும் இகல் பெரிதாவதற்குக் காரணம் இருவரில் ஒருவர் முனைப்புடன் மற்றவரை எதிர்த்து நிற்கத் தூண்டுவதே. அதனால் மற்றவர் சிறிது விட்டுக்கொடுத்துப் போவது நல்லது என்பது நடைமுறை இயன்மை.
'மாறுபாட்டினை எதிர்த்துச் செல்லாது விலகிப் போதல் ஒருவனுக்கு ஆக்கம் தருவதாகும்; அவ்விதம் விலகிப் போதலிலும் ஓர் அளவு வேண்டும். விலகிப் போகும் செயலை ஒருவன் மேலும் அதிகமாகச் செய்வானானால் அது அவனுக்குக் கேட்டினையும் ஊக்குவிக்கும்' என்றும் இப்பாடலுக்கு உரைப் பொருள் கூறினர். இது வள்ளுவர் கருத்தாக இருக்க முடியாது.

'மிகலூக்கின்' என்பதன் பொருள் என்ன?

'மிகலூக்கின்' என்றதற்கு மிகுதலை நினைக்கின், மேற்கொள்ளுதல், நெஞ்சு ஊக்கின், மிகுதலை மேற்கொள்வானாயின், அதிகம் பண்ணுகிறவனுக்கு, மிகுத்து நிற்பானாகில், வெல்லக் கருதினால், மேன்மேல் வளர்த்துக் கொண்டு போனால், எதிர்த்து நிற்பாராயின், ஒதுங்காது நிமிர்ந்தால், ஊக்கம் கொள்வானாயின், மிஞ்ச விட்டுக் கோபங் கொண்டால், மிகுமாறு ஊக்கப்படுத்தினால், மிகுதியாக மேற்கொண்டால், ஏற்றுக்கொண்டால், ஊக்கம் கொள்வானாயின், மேற்படுவதில் முனையின், மேலும் மேலும் வளர்த்துக்கொள்வானானால் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இத்தொடர்க்கு மாறுபாட்டை மிகுவிக்கக்கருதின் அல்லது வெல்லக் கருதின் என்றபடி பொருள் கூறப்பட்டது. சாய்ந்தொழுகினால் அது ஆக்கத்தைக் கொணர்ந்து ஊக்கும்; இகலின் கண்ணே மனது ஊக்கின், அது ஊக்குமாம் கேடு என்பது குறட்கருத்து. சிறிது விட்டுக் கொடுத்து இணங்கிப் போகாமல் அதாவது வேற்றுமையைப் பெரிதுபடுத்தாது, தான் முன்னதாக விட்டுக் கொடுப்பது சாய்ந்தொழுகலாம். அது ஆக்கம் தரும். அல்லாமல், 'இகலை'ப் பெரிதுபடுத்தினால், கேடும் பெரிதாக விளையும் என்பது செய்தி.

'மிகலூக்கின்' என்ற தொடர் மிகுதியாக மேற்கொண்டால் என்ற பொருள் தரும்.

மாறுபாட்டுக்கு எதிராது விலகிப்போதல் உயர்வுதரும்; இகலை மிகுதியாக மேற்கொண்டால் கேடும் அவனிடத்து வருவதில் முனையும் என்பது இக்குறட்கருத்து.

 

அதிகார இயைபு

இகல் மேன்மேல் வளர்க்கப்பட்டால் அது கேட்டைத்தான் ஊக்கும்.

 

பொழிப்பு

மாறுபாட்டினை எதிர்த்து நில்லாது சாய்ந்தொழுகல் உயர்வு உண்டாக்கும்; மாறுபாட்டை மிகுதியாக மேற்கொண்டால் கேடு வளரும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு

(அதிகாரம்:இகல் குறள் எண்:859)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான்; தனக்குக் கேடு தருவித்துக் கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.

மணக்குடவர் உரை: மாறுபடுதற்குக் காரண முண்டாயினும் ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு காணான்: கேடு வருங்காலத்து அதனை மிகுதலைக் காணும்.
இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோன்றாதென்றவாறு.

பரிமேலழகர் உரை: ஆக்கம் வருங்கால் இகல் காணான் - ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணம் உண்டாயினும் இகலை நினையான்; கேடுதரற்கு அதனை மிகல் காணும் - தனக்குக் கேடு செய்து கோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும்.
(இகலான் வருங்கேடு பிறரான் அன்றென்பது தோன்ற, 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை உண்மைகள் என்பதாம்.)

தமிழண்ணல் உரை: மனமுறிவுபடுவதற்குக் காரணம் இருந்தாலும் ஒருவனுக்கு ஆக்கத்தைத் தரும் நல்ல சூழல் வரும்பொழுது அவன் அவ் இகலை நினைக்கமாட்டான்; தனக்குக் கேடு தேடிக்கொள்ளும் சூழல் வரும்பொழுது, காரணமின்றியும் அவ்விகலை மிகுதிப்படுத்தவே தோன்றும். மனத்திலேற்படும் இகல் உணர்வு, கேட்டை முன்னுணர்த்தும் அறிகுறியாகும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆக்கம் வருங்கால் இகல்காணான் கேடு தரற்கு அதனை மிகல்காணும்.

பதவுரை: இகல்-மாறுபாடு; காணான்-நினையான், கருதான்; ஆக்கம்-மேன்மேல் உயர்தல்; வருங்கால்-வரும்போது; அதனை-அதன்கண்; மிகல்-மேன்மேலூக்குதல்; காணும்-பார்க்கும், நினைக்கும்; கேடு-அழிவு; தரற்கு-தருவதற்கு.


இகல்காணான் ஆக்கம் வருங்கால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாறுபடுதற்குக் காரண முண்டாயினும் ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு காணான்:
பரிப்பெருமாள்: மாறுபடுதற்குக் காரண முண்டாயினும் ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு காணான்:
பரிதி: தனக்கு ஆக்கம் வருங்காலம் மாறுபாட்டை மேலாக்கான், [மேலாக்கான் - மேலும் மேலும் வளர்க்க மாட்டான்]
காலிங்கர்: தான் பிறரோடு இகலுதலைக் காணான், தனக்கு ஓர் ஆக்கம் வரக்கடவதான காலத்து;
பரிமேலழகர்: ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணம் உண்டாயினும் இகலை நினையான்;

'தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணம் உண்டாயினும் இகலை நினையான்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தனக்கு நலம்வரும்போது வேற்றுமை பாரான்', 'தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை ஒரு பொருளாக மதிக்க மாட்டான்', 'ஒருவனுக்கு நல்வாழ்வு வருவது அவனிடத்தில் குரோத புத்தி இல்லாத காலத்தில்தான்', 'ஆக்கம் வரும்போது மாறுபாட்டை அறியான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தனக்கு உயர்வுண்டாகும்போது மாறுபாட்டைப் பாராட்டமாட்டான் என்பது இப்பகுதியின் பொருள்.

அதனை மிகல்காணும் கேடு தரற்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கேடு வருங்காலத்து அதனை மிகுதலைக் காணும்.
மணக்குடவர் குறிப்புரை: இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோன்றாதென்றவாறு.
பரிப்பெருமாள்: கேடு வருங்காலத்து அதனை மிகுதலைக் காணும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோற்றாது என்றவாறு.
பரிதி: தான் கெடுகிற காலம் மாறுபாட்டை மேலாகக் கொள்வான் என்றவாறு.
காலிங்கர்: இனி மற்று அதனை மேன்மேலும் மிகுதலைக் காணும், தனக்குக் கேடு வருவதற்குரிய காலத்து என்றவாறு.
பரிமேலழகர்: தனக்குக் கேடு செய்து கோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: இகலான் வருங்கேடு பிறரான் அன்றென்பது தோன்ற, 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை உண்மைகள் என்பதாம்.

'கேடு வருங்காலத்து அதனை மிகுதலைக் காணும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறனைக்கெடுக்க வேறுபாட்டைப் பெருக்குவான்', 'தனக்குக் கேடு செய்து கொள்ளும்போது மாறுபாட்டுணர்வில் முனைந்து நிற்பான்', 'கேடு வரும்போது அது மிகுந்திருக்கும்', 'கேடு செய்து கொள்ளுங்கால் அதனை மிகுதியாக்கிக் கொள்வான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தனக்குக் கேடு செய்து கொள்ளுமாறிருந்தால் மாறுபாட்டுணர்வில் முனைந்து நிற்பான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தனக்கு உயர்வுண்டாகும்போது மாறுபாட்டைப் பாராட்டமாட்டான்; தனக்குக் கேடு செய்து கொள்ளுமாறிருந்தால் மாறுபாட்டுணர்வில் முனைந்து நிற்பான் என்பது பாடலின் பொருள்.
'கேடு தரற்கு' என்ற தொடர் குறிப்பதென்ன?

ஆக்கமும் கேடும் இகல் கருதுதல் பொறுத்தமையும்.

தனக்கு முன்னேற்றம் வரும்போது எதிர்கொள்ளும் மாறுபாட்டை ஒரு பொருளாக மதிக்க மாட்டான்; கேடுறுமாறிந்தால் மாறுபாட்டில் மிகுதியாக நிற்றலைக் கருதுவான்.
ஆக்கம் வரும் வேளையில் இகலை எதிர்கொண்டாலும் அதைப் பொருட்படுத்தமாட்டான். மாறுபாடு உண்டாகும்போது அதன்கண் மிகுதியாக நிற்றலைக் கருதுதல் கேட்டை வரவழைத்துக் கொள்வதற்கான அறிகுறியாகும். ஒருவன் தனக்கு நன்மையும், செல்வமும் கிடைக்கும்போது எந்தவிதமான மாறுபாட்டையும் கருதாது ஒழுகுவான்; கெடுதலை வரவழைத்துக் கொள்வதாக இருந்தால் பகையில் முனைப்புக் காட்டுவான். முன்னேற்றம் அடைய வேண்டுமானால் பகையுணர்வைத் தவிர்க்க வேண்டும். அன்றி, மாறுபாட்டை மிகவும் வளர்த்துக் கொண்டால், தனக்குத்தானே அழிவைத் தந்துகொள்வதாகிவிடும்.

இக்குறளுக்கு இகல் இருப்பினும் காணாமைக்கும் அது மிகுதற்கும் ஊழே காரணம் என்ற அமைவிலும் உரை கூறினர். ஊழைக் காரணம் காட்டுபவர்கள் 'ஒருவனுக்குக் கூடிவருங்காலமிருந்தால் பகையும் குரோதமும் தோன்றா; அவன் எல்லாரிடமும் அன்போடிருப்பான்; கெட்டழியும் காலம் வந்தால் எல்லாருடனும் பகையைப்பெருக்கி விரோதத்தைச் சம்பாதிப்பான்' என்றும் 'தனக்கு நல்ல காலம் வரும் போது, காரணமிருந்தாலும் ஒருவன் இகலைப் பற்றி நினைக்க மாட்டான்; தனக்குக் கேடு காலம் வரும் போது பெரிதாக மாறுபடுதலை நினைப்பான்' என்றும் உரை பகன்றனர். குறளில் 'ஊழ்' தவிர்த்த பிற அதிகாரங்களில் ஊழின் ஆட்சிபற்றிய குறிப்பில்லை.

'கேடு தரற்கு' என்ற தொடர் குறிப்பதென்ன?

'கேடு தரற்கு' என்றதற்குக் கேடு வருங்காலத்து, தான் கெடுகிற காலம், தனக்குக் கேடு வருவதற்குரிய காலத்து, தனக்குக் கேடு செய்து கோடற்கண், தனக்குக் கேடு தருவித்துக் கொள்ளும் போது, கேடு வருகிற காலத்து, கேடு வருங்காலத்தில், தனக்குக் கேடு தேடிக்கொள்ளும் சூழல் வரும்பொழுது, பிறனைக்கெடுக்க, தனக்குக் கேடு செய்து கொள்ளும்போது, கேடு வரும்போது, தனக்குத்தானே கேடு தருவதற்கு, கேடு செய்து கொள்ளுங்கால், தனக்குக் கேடு வருவதற்குக் காரணம் நேரும்போது, பிறரைக் கெடுக்க எண்ணும்போது, தனக்குக் கேட்டை வருவித்தற்கு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'கேடுதரற்கு' என்றதற்குத் தனக்குக் கேடு செய்து கொள்தற்கண் எனப் பொருள் கூறி இகலான் வருங்கேடு பிறரான் அன்றென்பது தோன்ற, 'தரற்கு' எனச் சொல்லப்பட்டது என உரைத்தார் பரிமேலழகர். தேவநேயப்பாவாணர் 'ஆக்கமும் கேடும் வருவது ஊழான் ஆதலின் 'வருங்கால்' என்றும் 'தரற்கு' எனவும் கூறினார்' என விளக்கினார். மற்றவர்கள் தரல் என்ற சொல்லைத் தன்மையிடத்திற்கு உரியதாகக் கொள்ள வ சுப மாணிக்கம் 'தனக்கு நலம்வரும்போது வேற்றுமை பாரான்; பிறனைக்கெடுக்க வேறுபாட்டைப் பெருக்குவான்' என ஆக்கம் வருதலைத் தன்மேலும் கேடு தருதலைப் பிறர் மேலும் வைத்து வேறுபட்ட உரை தருகிறார். 'அங்ஙனம் இருவர் மேலவாகக் கொள்ளாமல், ஆக்கம், கேடு இரண்டனையும் ஒருவர் மேலவாகக் கொண்டெழுதிய பரிமேலழகர் உரை குறள் நடைக்கு இயைந்ததாகும்' என்பார் இரா சாரங்கபாணி.

'கேடு தரற்கு' என்பது தனக்குத்தானே கேடு தருவதற்கு என்னும் பொருளில் வந்தது.

தனக்கு உயர்வுண்டாகும்போது மாறுபாட்டைப் பாராட்டமாட்டான்; தனக்குக் கேடு செய்து கொள்ளுமாறிருந்தால் மாறுபாட்டுணர்வில் முனைந்து நிற்பான் என்பது இக்குறட்கருத்து.

 

அதிகார இயைபு

இகல்பாராட்டுவான் கேட்டை வரவழைத்துக்கொள்வான்.

 

பொழிப்பு

தனக்கு உயர்வு உண்டானால் மாறுபாட்டைப் பாராட்ட மாட்டான்; தனக்குக் கேடு செய்து கொள்ளுமாறிருந்தால் மாறுபாட்டுணர்வில் பகைமையை மிகுதியாக எண்ணுவான்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு

(அதிகாரம்:இகல் குறள் எண்:860)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்; அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.

மணக்குடவர் உரை: மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்: உடன்பட்டு நகுதலாலே நல்ல நயமாகிய உள்ளக்களிப்பு உண்டாம்.

பரிமேலழகர் உரை: இகலான் இன்னாத எல்லாம் ஆம் - ஒருவனுக்கு மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம் - நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம்.
(இன்னாதன - வறுமை,பழி,பாவம் முதலாயின. நகல் - மகிழ்தல். 'நகல்' என்பதூஉம் 'செருக்கு' என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்கு' எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.)

தமிழண்ணல் உரை: ஒருவனுக்கு இவ்விகலாலே துன்பங்கள் எல்லாம் உண்டாகும். மகிழ்வுடன் சிரித்துப் பழகுவதால், நல்லியல்புடைமை என்னும் பெருமித நிலை ஏற்படும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
இகலான் இன்னாத எல்லாம் ஆம் நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம்.

பதவுரை: இகலா(ல்)ன்-மாறுபாட்டினால்; ஆம்-ஆகும்; இன்னாத-தீயவை; எல்லாம்-அனைத்தும்; நகலா(ல்)ன்-நட்பால்; ஆம்-ஆகும்; நன்நயம்-நல்ல நன்மை; என்னும்-என்கின்ற; செருக்கு-தருக்கு, பெருமிதம், உள்ளக் களிப்பு.


இகலானாம் இன்னாத எல்லாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்:
பரிப்பெருமாள்: மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்:
பரிதி: மாறுபாடு கொண்டால் பொல்லாதவையெல்லாம் வரும்;
காலிங்கர்: யாவரோடாயினும் தான்கொள்ளும் மாறுபாட்டானே உளவாம்; யாவை என்னின் பெரிதும் இன்னாதன அனைத்தும்;
பரிமேலழகர்: ஒருவனுக்கு மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்;
பரிமேலழகர் குறிப்புரை: இன்னாதன - வறுமை,பழி,பாவம் முதலாயின.

'மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எல்லாத் துன்பமும் வேற்றுமையால் வரும்', 'மாறுபாடு என்னும் ஒன்றினாலே தீமை பயப்பன எல்லாம் உண்டாகும்', 'எல்லாத் துன்பங்களும் உண்டாவது குரோதத்தால்', 'மாறுபாட்டினாலே தீயன எல்லாம் உண்டாம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மாறுபாட்டினாலே எல்லாத் துன்பமும் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடன்பட்டு நகுதலாலே நல்ல நயமாகிய உள்ளக்களிப்பு உண்டாம்.
பரிப்பெருமாள்: உடன்பட்டு நகுதலாலே நன்னயமாகிய உள்ளக்களிப்பு உண்டாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் கூறிய குற்றம் எல்லாம் பயத்தலின், அதனைத் தவிரத் தனக்கும் பிறர்க்கும் மகிழ்ச்சி உண்டாம் என்றது.
பரிதி: மாறுபாடு கண்டு சிரித்துப் பொறுப்பானாகில் ஆக்கமும் கெடாது வெற்றியும் உண்டாம் என்றவாறு.
காலிங்கர்: மற்றும் இனி யாவரோடாயினும் முகமலர்ந்து இனிது ஒழுகுவரேல் அதனாலாம், நல்ல ஆசாரம் என்று சொல்லப்படுகின்ற யாவரும் மகிழ்ச்சி மகிழ்ச்சி என்றவாறு.
பரிமேலழகர்: நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம்.
பரிமேலழகர் குறிப்புரை: நகல் - மகிழ்தல். 'நகல்' என்பதூஉம் 'செருக்கு' என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்கு' எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.

'நகுதலாலே நல்ல நயமாகிய உள்ளக்களிப்பு உண்டாம்/ நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நலமான உணர்ச்சி நல்லுறவால் உண்டாம்', 'நட்பினால் மிகுந்த நன்மை என்னும் பெருமிதம் உண்டாகும்', 'எல்லா நல்ல பலன்களின் பெருமை வருவது, மகிழ்ச்சியுண்டாக்கும் அன்பு குணத்தால்தான்', 'நட்புக் கொள்ளுதலினாலே நல்லமுறை என்னும் பெருஞ்செல்வம் உண்டாகும். (அல்லது நல்ல முறை உடையார் என்னும் மதிப்பு ஏற்படும்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

முகமலர்ந்து நட்புடன் ஒழுகினால் மிகுந்த நன்மை என்னும் பெருமிதம் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மாறுபாட்டினாலே எல்லாத் துன்பமும் உண்டாகும்; முகமலர்ந்து நட்புடன் ஒழுகினால் மிகுந்த நன்மை என்னும் செருக்கு உண்டாகும் என்பது பாடலின் பொருள்.
'செருக்கு' என்பதன் பொருள் என்ன?

சிரித்து உறவாடி துன்பம் நீக்குக.

மாறுபாட்டினாலே ஒருவனுக்கு துன்பமான எல்லாம் உண்டாகும்; மாறுபடாது நட்புக் கொள்வதாலே பெருமித நிலை ஏற்படும்.
இகலானாம் என்றது இகலால்+ஆம் என விரியும். வெறுப்புடன் எவருடனும் பகைத்துக் கொள்ளுவதால் எல்லாத் துன்பமும் ஏற்படும். எல்லாத் துன்பம் என்பது வறுமை, இழிவு, நட்பும் உறவுமற்றுத் தனித்து விடப்படும் நிலை, சட்டத் தண்டனை போன்றவற்றைக் குறிக்கும்.
‘நயம்’ என்ற சொல்லுக்கு நீதி, ஒழுகலாறு, நன்மை என்று பொருள் கண்டுள்ளனர். 'நீதி' என்பது இராச நீதியைக் குறிப்பதாக உரைகாரர்கள் கூறுவர். 'நயம்' என்பதற்கு நன்மை என்ற பொருள் இங்கு சிறக்கும். நன்னயம் என்பது பெருநன்மையைக் குறிப்பது.
இகலுக்கு மாறாக முகமலர்ந்து, நல்லெண்ணங்கொண்டு நட்போடு பழகின் வாழ்விற்கு நன்மையான அமைதி, மகிழ்ச்சி, இணக்கமான உறவுகள் என்னும் பெருமையான நிலை உண்டாகும். செல்வமும் உண்டாகும். நகலானாம் என்றது நகலால்+ ஆம் என விரியும். நகுதலால் அதாவது மகிழ்வைக்காட்டி உறவு பாராட்டுவது நன்மை தரும்.

'செருக்கு' என்பதன் பொருள் என்ன?

'செருக்கு' என்ற சொல்லுக்கு உள்ளக்களிப்பு. ஆக்கமும் வெற்றியும், மகிழ்ச்சி, பெருஞ்செல்வம், பெருமித நிலை, பெருமை, மதிப்பு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

குறளில் ‘செருக்கு’ என்பது சிறப்பு, தருக்கு (இழிவு) என்னும் இரு பொருளிலும் ஆட்சிபெறுகிறது. இக்குறளில் அது பெருமிதம் என்னும் சிறப்புப் பொருளில் ஆளப்பட்டது. நன்னயம் என்னும் செருக்கு என்பதன்கண் செருக்கு என்பது கொள்ளத் தகுவதாகிய செருக்கினை. அது செருக்கு விளைதற்குக் காரணமாகிய செல்வத்தை உணர்த்திற்று என்பர்.

மாறுபாட்டினாலே எல்லாத் துன்பமும் உண்டாகும்; முகமலர்ந்து நட்புடன் ஒழுகினால் மிகுந்த நன்மை என்னும் பெருமிதம் உண்டாகும் என்பது இக்குறட்கருத்து.

 

அதிகார இயைபு

எல்லாரோடும் இகல் நீக்கிக் களிப்பதால் செல்வம் பெருகும்.

 

பொழிப்பு

மாறுபாட்டினாலே எல்லாத் துன்பமும் வரும். நட்புடன் ஒழுகினால் மிகுந்த நன்மை என்னும் பெருமிதம் கிடைக்கும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard