முதன்முதலாக உலக மாந்தர்க்கு – மாந்தத் தொகுதிகட்கு – அறிவியல், மெய்யியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களைத் தகுந்த தருக்க நெறிகளோடு படைத்து வழங்கிய முதல் மாந்தன் குமரிக் கண்டத்துத் தமிழனே என்பதற்குப் பலவகைச் சான்றுகளும் மேற்கோள்களும் இருப்பினும் அவற்றைச் சரியான முன்வைப்பு முறையில் தெளிவு படுத்த வேண்டியது நமது கடனேயாம். எனவே, ஆதித் தமிழரின் மெய்யியல் கோட்பாடுகளையும், அவை வழங்கி வந்த பல்வேறு நிலத்திணையிலிருந்து இன்று அடைந்துள்ள திரிவாக்க வளர்ச்சி பற்றியும், குமுகத்தில் இன்று அக் கோட்பாட்டிற்கு உள்ள இயங்கியல் நிலை குறித்தும் குமுகத்தின் பார்வையில் இப்பழம் பெரும் மெய்யியல் அறிவு இன்றைக்கு எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பது பற்றியும், இன்றைய நிலையில் அக்கோட்பாடு பெற்றுள்ள வரைவு மற்றும் சமயப் போர்வைகள் குறித்தும் பண்டைய செய்திகளைத் தற்போதைய நடைமுறையுடன் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பும் நமதேயாம். பழந்தமிழர் தம் வாழ்க்கையிலிருந்து மெய்யியல் கோட்பாடுகளை நாம் பின்வரும் பகுப்புக்களில் எடுத்துரைக்கலாம். 1. இடத்திணையின் அடிப்படையில் முன்வைத்தல். 2. மெய்யியல் படிநிலைகளின் அடிப்படையில் முன்வைத்தல். 3. மருவிய வழக்கு முறையில் அயன்மைத் தோற்றம் பெற்றவை. என்ற மூவகை முன்வைப்பில் காண்போம்.
முதலாவதாக, இடத்திணையின் அடிப்படையில் பார்க்கின்ற போது தமிழர் தாம் வாழ்ந்த நிலத்தினைக் குறிஞ்சி முதல் பாலையீறாக ஐவகையாகப் பகுத்தனர். குறிஞ்சியில் முருகன் தெய்வமாகவும், முல்லையில் திருமால் தெய்வமாகவும் மருதத்தில் இந்திரன் தெய்வமாகவும் நெய்தலில் வருணன் தெய்வமாகவும் பாலையில் கொற்றவை தேய்வமாகவும் கருப்பொருள் இலக்கணம் கண்டனர். இன்றைக்குச் செம்மையாகப் பரவியிருக்கும் சிவனியமும், இந்து என்ற சமயமும் பண்டைத் தமிழ் இலக்கியங்களுள் யாண்டும் காணப் பெறாத ஒன்று. குறிஞ்சி நிலத் தெய்வமாகக் கருதப்பட்ட முருகனுக்கு, இரண்டு மனைவியரும், வினாயகர் போன்ற உடன் பிறந்தோரும் இருந்ததாக சங்க இலக்கியச் சான்றுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கௌமார சமயம் எனும் நிலைக்கு முருக வழிபாடு வந்த பின் பிற்கால நாடக ஆசிரியர்களின் புலமையாலும், திரைத்துறையின் பக்தித் திரைப்படங்களாலும் குறிஞ்சி நில முருகனின் பொதுவான வடிவம் காண்போர் மயங்கும் வண்ணம் இவ்வாறு திரிக்கப் பட்டுள்ளது. முல்லை நிலத்தின் திருமாலும் இரண்டு மனைவியர்களுடன்தான் பிற்காலத்தில் மாற்றம் செய்யப் பட்டார். ஆழ்வார்களும், சமயாசிரியர்களும் (திருமாலை உயர்த்திப் பேசுவதாக நினைத்து) அவர் செய்த்தாகப் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுக்களை அவர் மீது சுமத்தியதில் சங்க இலக்கியங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதனை இதன் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறோம். அடுத்ததாக, மருத நிலத்தின் இந்திரன் ஆசீவகச் சமயத்தின் ஒருபடிநிலைத் தெய்வம் (அதனைப் பின்னர்க் காண்போம்.) ஆனால் அந்த இலக்கியச் சான்று கொண்ட மருத நிலத் தெய்வத்தைக் கூடப் பின்னர் வந்த வந்தேறிக் கட்டுக் கதைகள் இழிவு செய்தன. அவரது உடல் முழுக்கவும் பாலுறுப்பு முளைத்ததாகக் கூறி நமது தமிழ்த் தெய்வத்தினை வஞ்சித்து ஏசியது, ஒரு காலத்தின் கொடுமை. நெய்தல் நிலத்து வருணனோ ஒரு துணைத் தெய்வமாகப் படியிறக்கம் செய்யப்பட்டு திசைமக்கள் எண்மரில் ஒருவனாக முதன்மை யிழந்து போகச் செய்தனர். பாலை நிலத்துக் கொற்றவை நமது முன்னோர்களின் தாய்த் தெய்வ வழிபாட்டிற்கு மூல வடிவமானவள். ஆனால் அவளை அடங்காப் பிடாரி என்றும், தீமையே செய்யும் இரக்கமற்றவள் என்றும் வைதீக வந்தேறிக் கதைகள் உருவகப் படுத்தின. இவ்வாறாக இடத்திணையின் பிரிவாக நாம் காணும் ஐவகை நிலத்தின் தெய்வங்களையும் வைதீக வல்லடியாளர்கள் சிறுமைப் படுத்தி இழித்துக் காட்டியுள்ளனர். இவற்றை அப்படியே நாம் நம்பி ஏற்றுக் கொள்ளும் இழிநிலைக்கு நம்மையும் கொண்டு வந்து, அவ்வாறு அறிவிலியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு ‘இந்துக்கள்’ என்றொரு புதுச்சொல் ஒன்றை நம் தலைமீது சுமத்தினர். ஒரு சமயம் என்று சொன்னால் அது தோன்றிய இடம், பல்வேறு மாற்றங்களுடன் அது வளர்ந்த நிலை, அதன் பதிவுகள், சமூக அடையாளங்கள் இன்னோரன்ன பிறவும் தான் அது ஒரு சமயம் என்பதனை வரையறுக்கும். ஆனால் இந்த இந்து என்கிற சமயத்துக்கு ஏதேனும் தோற்ற இடமும், காலமும் உண்டா? இதனைப் பின்பற்றிய மாந்தத் தொகுதியினர் யார் என்ற விவரமும் உண்டா? கூற முடியாது. இவ்வாறு தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்ட தெய்வங்களைப் பாலியல் குற்றவாளிகளாக உருவகப் படுத்தும் வல்லடிச் சமயமே இந்து என்ற சமயம். இதன் மூலம் தமிழனின் தொன்மங்களைக் கொச்சைப் படுத்தினர். நமது விழுமியங்களைத் தின்றே வைதீகம் வளர்ந்தது. (அது மட்டுமின்றிச் சமய மறுப்பாளர்கள் கூடத் தாங்கள் விரும்பா விட்டாலும் ஏதோ ஒரு சமயப் பகுப்புக்குட் படுத்தப் படுகின்றனர். தான் தனக்கு விரும்பிய கருத்துக்கொப்பத் தனது சமயத்தினைத் தேர்ந்தெடுக்கும் அறிவு உரிமையும் சமய விடுதலையும் நமக்கு இன்றளவில் வழங்கப் படாமையையே அது காட்டுகிறது.) நாம் ஒரு பெரிய அறிவியல் மரபில் வந்த பண்பாளர்கள். எனவே, வைதீக வந்தேறிகளின் பொய்க்கதைகளை நமது தருக்க அறிவு ஏற்றுக் கொள்வதில்லை. இந்த இக்கட்டான சூழலில் நமது தொன்மையான மெய்யியல் கூறுகளை வந்தேறிச் சமயங்கள் விழுங்கி விட்டன அல்லது இருட்டடிப்புச் செய்தன. இத்தகு கையறு நிலையில் மெய்யியல் தருக்க முறைகளும் மறைந்தன. இத்தகையதோர் அறிவு மயக்க நிலையில் வைதீகத்தோடு தங்களைச் சமாதானப் படுத்திக் கொண்டு போக முடியாத பகுத்தறிவாளர்கள் மெய்யியலையே புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். இப்படி இறைமறுப்பாளர்களானவர்கள் கூடப் பழைய பண்பாட்டுக் கூறுகளுக்குப் புறம்பாக ஒருபோதும் நடப்பதில்லை, ஒழுக்கக் கேடுகளை ஆதரிப்பதில்லை என்பதிலிருந்தே நமது பண்பு நேர்மையினை வைதீகர்கள் ஒத்துக் கொண்டேயாக வேண்டும். மெய்யியலை ஆதரிப்போர் இறைவன் பெயரால் நல்லன செய்க என்பதும், நமது இறை மறுப்பாளர்கள் கடவுள் பெயரால் அல்லன செய்யற்க என்பதும் ஒரே கருத்தின் மறுதலை வடிவமே. இதிலிருந்தே நாம் மெய்யியலில் எந்த நிலையினை ஏற்றுக் கொண்டாலும் ஒரே சால்பினராக இருக்கிறோம் என்பது தெளிவாக விளங்கும். இவ்வாறு பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே. இரண்டாவதாகப் படிநிலை வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்கின்ற போது, 1. அறிவு வளர்ச்சியில் படிநிலைப் படியும், 2. மெய்யியல் வளர்ச்சியில் படிநிலையிலும் இருவகைப் பகுப்புகளில் ஆதித் தமிழரின் மெய்யியலை ஆய்வோம். முதலாவதாக அறிவு வளர்ச்சிப் படிநிலையில் துவக்கக் காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடும் குறிப்பிடத் தக்கது. தாயாரம்மாள் என்று பெயர் வைக்கும் முறையும் அண்மைக் காலம் வரையில் தொடர்ந்தது. “சப்த மாதாக்கள்” என்று கன்னியர் எழுவரின் வழிபாட்டு வழக்கம் இன்னமும் சில குடிகளிடையே உண்டு. ஏழு கன்னியரில் ஒருவரான அம்பிகா எனும் அம்பிகையே சமணத்தின் இயக்கியருள் ஒருவர். அம்பிகா எனும் அம்பிகையே பின்னாளில் சிவனியக் கலப்பில் சக்தி வழிபாட்டில் தனிப் பெரும் தெய்வமாக சிவனின் மனைவியாக மாற்றம் பெற்றாள். பழங்குடிகளுள் ஒரு பிரிவினரான இருளர் இன மக்கள் இன்னமும் கன்னியர் வழிபாடு செய்து வருகின்றனர். அவர்களிடையே ‘யட்சினி’ எனும் பெண் தெய்வம் குறிசொல்லும் வழிபாடும் உண்டு. இந்த யட்சினி எனும் தெய்வத்தின் பெயரால் இன்றும் பலர் குறி சொல்கின்றனர். இந்த யட்சினி யார் என்று பார்ப்போம். கணி நந்தாசிரியனுக்கு இயக்கன் என்றொரு பெயரும் உண்டு. மொழி முதல் வாரா எழுத்துக்களின் முன் எழுதப்படும் ‘இ’கரம் ஒலி பெறாது. எனவே இராமன் என எழுதி ராமன் என ஒலிப்பது போல் அவ்வழக்கிலேயே இயக்கன் ‘யக்கன்’ என ஒலிக்கப்படும் வழக்காயிற்று. ‘தக்கன்’ எனும் பெயர் ‘தட்சன்’ என மருவியது போல் யக்கன் எனும் பெயர் ‘யட்சன்’ என மருவியது. இந்த யட்சன், பிரம்மயட்சன் எனும் பெயர்கள் சமணத்தை விழுங்கிய சைனத்தில் இன்றும் உண்டு. யட்சன் என்பதற்கு இணையான பெண்பால் பெயர் ‘யட்சினி’யாகத் தருவிக்கப் பட்டது. இதல்லாமலும் சிற்சில விடங்களில் தாய்த் தெய்வ வழிபாடு மூதாள் வழிபாடு என்ற பெயரில் இன்று வரை தொடர்வதைப் பல ஊர்களில் நேரில் கண்டு வருகிறோம். மூதாள் என்ற சொல் தாய்த் தெய்வத்தின் அன்பினையும், முதன்மையினையும் பகரும் சொல்லாகும். இருளாயி, கருப்பாயி போன்ற தாய்த் தெய்வ வழிபாடும் எண்ணத் தக்கது. சாக்தம் என்ற சக்தி வழிபாடு செல்வாக்குப் பெற்றபின் பழைய தாய்த் தெய்வ வழிபாடு தனது முதன்மையினை யிழந்தது. இன்றும் கூடப் பல ஊர்களில் அம்மன் திருவிழாக்கள் முடிந்த மறுநாளில் ஒரு களிமண்ணாலானதோர் பெண் உருவச் சிலையினை வைத்துப் பலவாறாக ஏசியும் திட்டியும் கொண்டுபோய் நீரில் கரைத்தழிப்பர். இதனை ‘மாதங்கி ஏசுதல்’ என்றும் அந்தச் சிலைக்கு மாதங்கி என்றும் பெயர் சொல்கின்றனர். இந்த மாதங்கி என்ற சொல் ஆசீவக மெய்யியலில் சிறப்பு பெற்ற பெண் தெய்வத்தின் பெயராகும். திருநிலைகளிலும் கால்காசுகளிலும் இருக்கும் பெண் உருவமே இந்த மாதங்கியாகும். பழைய ஆசீவக வழிபாட்டு மரபு செல்வாக்கிழந்து சக்தி வழிபாடு செல்வாக்குப் பெற்றதனையே இந்நிகழ்வு காட்டுகிறது. இத்தகு வழிபாடுகள் பெரும்பாலும் இலக்கியங்களில் பதிக்கப் பெறாதவை. அடுத்ததாக மெய்யியலின் வளர்ச்சிப் படிநிலையில் காணும் போது பழந்தமிழரின் மெய்யியலில் ஆசீவக மரபே பெரிதும் முதன்மை பெறுகிறது. எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும். பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர் வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு பெறுவது? அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. (உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.) இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. கைம்மாறு கருதாத செம்மையான கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல், இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர். ஆசு+ஈவு+அகம் ஆசு – பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென, ஈவு – தீர்வு அகம் – தருமிடம் என்பதே ஆசீவகமாகும். ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். ஆசீவகத் துறவிகளின் வாழிடங்கள் பெரும்பாலும் கற்குகைகளே. இந்தத் துறவிகளின் துறவு வாழ்க்கையில் அறுவகையான நிறக் கோட்பாடு பின்பற்றப் பட்டது. துவக்க நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வண்ணச் சீருடையும் படிப்படியாக மெய்யியலில் முன்னேறும் போதெல்லாம் வேறு வேறு வண்ணச் சீருடைகளும் அணிவர். ஒரு ஆசீவக அறிவர் பள்ளி பல நிலையிலுள்ள துறவு மாணவர்களை அவர்தம் சீருடையின் வண்ணத்தைக் கொண்டே அவரது மெய்யியல் படிநிலையினை அறிந்து கொள்ளலாம். இதில் முதலாவதாக வரையறுக்கப்படும் வண்ணம் கருப்பு வண்ணமாகும். இந்தக் கருப்பு வண்ண உடையணிந்தவர்கள் கரும் பிறப்பு நிலையில் உள்ளவராகக் கூறப் படுவர். இந்த நிலை மெய்யியலின் துவக்க நிலையாகும். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு உணவுப் பழக்கங்களிலும், துறவறப் பயிற்சிகளிலும் பெரிய பட்டறிதல் இல்லை. ஏனெனில் இதுதான் துவக்க நிலை. கரும் பிறப்பு நிலையைக் கடந்த பின் அதாவது அடிப்படை ஒழுக்கங்களையும் துவக்க நிலைப் பயிற்சிகளையும் செம்மையாகக் கற்றபின் கருநீல வண்ண உடையால் அடையாளப் படுத்தப் படுவர். அதன் பின்னர் அடுத்த படிநிலைக்கு உயர்த்தப்பட்டு அதற்கேற்ற வண்ண உடையால் அவர் அடையாளப் படுத்தப் படுவார். இவ்வாறு ஆறு படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே இறுதி நிலையான நல்வெள்ளை நிலைக்கு அவர் சென்று வீடுபேறடைவார். இவ்வாறு அறுவகை நிலையிலும், ஒவ்வொரு வண்ணத்திலும் மூவகைப்பட்ட படிநிலைகள் அதாவது 6 x 3 மொத்தம் 18 படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே அவர் வீடடைய முடியும் என்பது வரைவு. ஆசீவக மெய்யியலை அறிய முற்படு முன் ஒருசில: 1. ஏற்கெனவே ஆசீவகம் பற்றி ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் யாவும் ஆசீவக எதிர்ப்பணியினராலும் பின்னர் வந்த வைதீக நஞ்சினாலும் இழித்துக் கூறப்பட்டு அவரவர் நூல்களில் பதிவு செய்யப்பட்ட மாற்றார் கூற்றுக்களே என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 2. ஆசீவகத்தின் தோற்றம், காலம் போன்றவற்றில் மயக்கம் ஏற்படக் காரணம் வார்த்தைப் புரட்டும், வரலாற்றுப் புரட்டுமே.
வார்த்தைப் புரட்டு ஆசீவகத்தை அறிவு வழியிலும், அறிவியல் வழியிலும் நேர் கொள்ள இயலாத வைதீகச் சார்பு மற்றும் ஆசீவக எதிரணியினரால் ஆசீவக அடிப்படைக் கூறுகள் குறித்துத் தவறான பொருள் தரும்படிச் சொற்கள் திரிவாக்கம் செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக ஊழ் என்பதற்கு ஆசீவகம் கூறும் பொருள் ‘இயற்கை நிகழ்வு’ என்பதே. அணுக்களின் புணர்வினாலும், பிரிவினாலும் (காலம், கருவி போன்றவற்றின் துணையினால்) ஏற்படும் இயற்கை மாற்றத்தையே இந்த ஊழ் எனும் சொல் குறிக்கும். (இவ்வூழ் பற்றிப் பின்னர்க் காணலாம்.) ஆனால் எதிரணியினரோ ஆசீவகம் கூறும் ‘ஊழ்’ என்ற சொல்லுக்குப் பல பிறவிகளாகத் தொடர்ந்து வரும் பாவம், புண்ணியம் ஆகியவற்றின் தொகுப்பு எனத் திரித்துப் பொருள் கூறினர். இந்தப் பொருள் முரண்பாட்டால் ஆசீவகத்தின் ஊழ்க் கோட்பாட்டின் அடிப்படையே தகர்ந்து போகிறது. அமணர் என்பது ஆசீவக மெய்யியலின் அடிப்படையில் அமைந்த தமிழ்ச் சொல். அமணர் = அம் + அணம் + அர் அம் – ஊழ்கப் பயிற்சியில் உயிர்வளி மேலேறும் போது மேல்நோக்கி மேலண்ணத்தைக் கடக்கும் போது அம்மெனும் ஒலியை எழுப்பும் என்பது ஊழ்கக் கருத்து. அணம் – ஊழ்கியின் மேலண்ணம் (அண்ணம் – அணம் என நின்றது.) அர் – பலர்பால் சிறப்பு விகுதி அம்மெனும் ஒலியைக் கொண்ட ஊழ்கம் பயிலும் மேலண்ணத்தினை உடையவர் எனும் பொருள் கொண்ட இச்சொல், அம்மணம் எனும் ஆடையின்மைக் குறிக்கும் சொல்லின் திரிவாக அம்மணர் எனச் சுட்டப் பட்டதும் வழுவே. (அழகிய சிறந்த அண்ணத்தில் ஊழ்கப் பயிற்சி உடையவர் எனும் பொருள்படும் அண்ணர் எனும் சொல்லும் இதன் அடிப்படையில் எழுந்ததே. ஈற்றுப் போலியாக அண்ணல் எனவும் மருவி இத்தகு அறிவர் வாழ்ந்த இடங்கள் திரு அண்ணர் மலை, அண்ணல் மங்கலம் எனும் பெயர்களுடன் வழங்கப் பட்டு இன்று திருவண்ணாமலை, அண்ணமங்கலம் எனும் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விடங்களில் இன்றும் ஆசீவகப் பள்ளிகளின் எச்சங்கள் காணக் கிடக்கின்றன.) அது போன்றே சூத்திரர் என்ற சொல்லும் தவறாகவே பொருள் சுட்டப் பட்டது. யாதெனில் எல்லாத் துறைகளிலும் எவ்வகைச் சிக்கல்களுக்கும் விடை காணும் நுட்பமான வழிமுறைகள் சூத்திரம் என வழங்கப்படும். இதன் அடிப்படையிலேயே இலக்கண நூற்பாக்களும் கணக்கியல் வழிமுறைகளும் சூத்திரம் என்ற சொல்லால் வழங்கப்படுவது நடைமுறையில் உள்ள ஒன்று. இந்த சூத்திர முறைகளை அறிந்தவர் எனும் பொருள் படும் சூத்திரர் என்ற சொல்லுக்கு இழிவானவர் என்ற பொருள் கற்பிக்கப் பட்டு தாழ்த்தப்பட்டனர். இந்த சூத்திரம் என்ற சொல் சூழ்ச்சி எனும் சொல்லின் வேரிலிருந்து சூழ் + திறம் > சூழ் + திரம் > சூழ்த்திரம் > சூத்திரம் என வருவிக்கப்பட்ட சொல்லாகும். சூழ் > விடையைச் சூழ்தல். பல்லாற்றானும் பட்டறிவாலும் தருக்க அறிவினாலும் விடையைச் சூழ்தல். திரம் > அவ்வாறு விடைகாணும் ஆற்றல். திறம் > திரம். மயங்கொலிப் பிழையால் வந்த மயக்கு வழூஉ. அது போலவே, சமணம் வேறு; சைனம் வேறு. சமணம் ஆசீவக மரபில் கிளைத்தது. மூன்று நல்வெள்ளை நிலையினரால் நெறியாளப்பட்டது. அவர்களில் மூன்றாமவரான மற்கலியும், மகாவீரருமே ஒன்றாயிருந்தனர். அந்த நேரத்தில் மகாவீரருக்கும் மற்கலிக்குமிடையே ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் இருவரும் பிரிய நேர்ந்தது. தாய் மரபான ஆசீவகத்தில் உலகாய்தம், பொருளியல், மாந்த வாழ்வியல் போன்றவற்றிற்கான கருத்துகளுக்கு இடம் உண்டு. அதாவது குமுகத்தைப் புறக்கணித்துத் துறவி கூட வாழ இயலாது என்ற கருத்து ஆசீவகத்தினுடையது. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கும் நிலை எனும் திருக்குறளும் இங்கு எண்ணத் தகும். மாறாக மகாவீரரோ துறவிக்கு உலகியல் பற்றிய சிந்தனை இருந்தால் துறவும் கை கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். துறவிகள் இல்லறத்தாருக்கு வழிகாட்டும் பொறுப்பாளர்களாக இருப்பதனை அவர் விரும்பவில்லை. துறவற ஒழுக்கக் கூறுகள் மட்டுமே தமக்குப் போதும் என்பது அவர் கருத்து. இக் கருத்து வேறுபாட்டால் ஆசீவக சமணத்தை விட்டு சைன சமயத்தை உருவாக்கினார். மூன்று ஐயனார்களைத் தவிர நல்வெள்ளை நிலையை அடைந்ததாக தமிழ் அறிவர்களால் யாரும் சுட்டப்படவில்லை. பின்னர் 23 திருத்தங்கரர் வரிசை கற்பிக்கப் பட்டதில் இன்றளவும் நமக்கு உடன்பாடில்லை. அது குறித்த ஆய்வுகள் தொடர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். சைனம் தனது மரபுக்கு வலிமை சேர்க்க ஆசீவக ஐயனார்களைச் சேர்த்துக் கொண்டதா என்பதே நம் ஐயம். ஒரு வேளை திருத்தங்கரர் மரபினை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், மகாவீரர் தனக்கெனத் தனிச் சமயத்தை உருவாக்கிய பின், அவருக்கு முன்பிருந்த திருத்தங்கரர்கள் 23 பேரும் சைனர்கள் என்று எப்படிக் கூற முடியும்? எள்ளுப் பேரனுக்குப் பிறந்த கொள்ளுப் பாட்டன் என்பது போலிருக்கிறதல்லவா இந்த வாதம்? சைனம் சமணத்திலிருந்து 23 திருதங்கரத் தலைமுறைகள் பிற்பட்டுத் தோன்றியது. எனவே இந்த 23 திருத்தங்கரர்களுக்கும் முரண்பட்ட சமயமே சைனம் என்பது தெளிவு. இந்த சைனம் பழைய கள்ளைத் திருடிப் புதிய மொந்தையில் வைத்த கதையாக சமணம் – சைனம் எனும் இரு சமயமும் ஒன்று என்பதான ஒரு மாயையை ஏற்படுத்தி, இன்று அந்தச் சமயத்தைப் பின்பற்றுவோர் கூடத் தாங்கள் சமணரா அன்றிச் சைனரா என்று கேட்டால் விழி பிதுங்கும் நிலையில் உள்ளனர். இந்த வார்த்தைப் புரட்டுகளுக்கும் மேலானதோர் வரலாற்றுப் புரட்டும் உண்டு. அதுதான் ஆசீவகத்தின் தோற்றக்காலம் பற்றிய கருத்து. 23 திருத்தங்கரர்களுக்கு அடுத்து வந்த மற்கலி மகாவீரரின் பிரிவுக்குப் பின் சமணத்தை ஆசீவகக் கருத்துகளின்று பிறழாமல் ஒரு சமய வரைவிற்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருக்கு முன்பே 23 திருத்தங்கரத் தலைமுற்களும், அதற்கும் முன்பே குமுக மரபு கொண்டதுமான ஆசீவகத்தை மற்கலிதான் உருவாக்கினார் என்பது தவறு என்று, சிந்தித்துப் பார்த்தால் விளங்கும். ஆசீவகத்தின் தோற்ற வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளி, அந்தப் பழைய வரலாற்றை மகாவீரரின் சைனத்திற்கு சேர்த்து விடும் வரலாற்றுப் பிழையே இது என்பது தெளிவு. 3. வைதீகம் வினைக்கோட்பாட்டையும், ஆசீவகம் வினைமறுப்புக் கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கருத்தில் இன்றளவும் ஆசீவகம் நீர்த்துப் போகவில்லை. ஆனால் ஆசீவகர்கள் வினைக் கோட்பாட்டின் உடன்பாட்டாளர்கள் என்பதான வீண் புரளியும் உண்டு. ஆசீவகத்தின் நிறக்கோட்பாட்டை மக்கள் தவறுதலாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வைதீகம் வருணக் கோட்பாட்டைக் கொண்டு வந்தது. நிறம் என்பது வர்ணம் (வண்ணம்). எனவே வர்ணக் கோட்பாடு ஆசீவகத்தில் உண்டு என்று பேசியது. உண்மையில் ஆசீவகத்தில் பள்ளியில் சேர்க்கப்பட்ட பயிற்சியாளர் மேல்நிலை யடையும் வரை அறுவகை நிறத்தால் குறிக்கப்பட்டனர். அது அவர்களின் படிநிலை வளர்ச்சியைக் குறிப்பதே ஒழிய வேறில்லை. இன்றைய பள்ளிக் கூடங்களில் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்க்கு ஒரு வண்ண உடையும் பதினோராம் வகுப்பு மாணவர்க்கு ஒரு வண்ண உடையும் விதிக்கப் படுவது போல ஒரு ஆசீவகப் பள்ளியில் உறையும் புதியவர், இயல் மாந்தர் போன்றோர் அங்குள்ளோரை வகைப் படுத்தி அடையாளங் காணவே இந்த நிறக் கோட்பாடு. மேலும் அவரவர் தகுதி நிலையினை அறியவும் இந்த நிறக் கோட்பாடு பயன்பட்டது. (இந்த அறிவர் மரபினால் உலகுக்கு அளிக்கப்பட்ட தற்காப்புக் கலையான கராத்தே பயிற்சியில் கச்சை அளிப்பதில் இன்னமும் இந்த நிறக் கோட்பாடு பின்பற்றப் படுவது கண்கூடு. ஆனால் நிறங்கள் மட்டும் திரிவாக்கம் பெற்றுள்ளன.) ஆனால் வைதீகமோ ஆடையின் சிறப்பு தெரியாதவர்களால் உருவாக்கப் பட்டதாகையால் மக்களின் தோலின் நிறத்தையே வகைப்படுத்திப் பிறக்கும் போதே பாகுபாடு செய்தனர். மேற்கூறிய குழப்பங்களைத் தள்ளி வைத்து விட்டு ஆசீவகத்தைப் பார்த்தால் மட்டுமே அது யானையாகத் தெரியும். இன்றேல் அது வெறுங் கல்லாகவே தெரியும்.
ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. துறவி கூட உழைத்தே உண்ண வேண்டும் என்பது ஆசீவகப் பொருளியல். வைதீகமோ பக்தன் ஆழ்வார், ஆச்சாரியர்களுக்குப் பணிவிடை செய்து படையலும் போட்டுக் கைகட்டி நிற்க வேண்டும் என்கிறது. நெய்யும், பருப்புமாகச் சாப்பிட்டு விட்டு உழைக்காமல் உட்கார்ந்திருந்தால் அவனது சிந்தனை மெய்யியலை நோக்கியா போகும்? மெய்யுடல் சார்ந்தல்லவா போகும். ஆசீவகத்தினர் அறுவகை நிறங்களால் வகைப்படுத்தப் பட்டனர். இந்த வகைப்பாடு அவரவர்தம் சிந்தனை, செயல், தகுதி, அறிவுநிலை, ஊழ்கப் பயிற்சி, மெய்யியல் அறிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆறு நிறங்களாவன: 1. கருமை & சாம்பல் – துவக்க நிலை 2. நீலம் – இரண்டாம் நிலை 3. பசுமை – மூன்றாம் நிலை 4. செம்மை – நான்காம் நிலை 5. மஞ்சள் – ஐந்தாம் நிலை 6. வெள்ளை – இறுதி நிலை
இந்த அறுவகை வண்ணத்திலும் மும்மூன்று படிநிலைகள் உண்டு. அவை: 1. துவக்க நிலை – இது வண்ண ஒழுக்கத்தின் துவக்க நிலை. இந்த வண்ணத்திற்குரிய ஒழுக்கங்களையும் கடமைகளையும் அறியத் துவங்கும் புகுநிலை மாணாக்கர் முதல் படிநிலையிலிருப்பவர். 2. இடைநிலை – இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செயல்படுத்தி முறைப்படுத்தி ஒழுகினாலும் ஐயந்தெளியா நிலையில் உள்ள மாணவர்கள். 3. கடைநிலை – இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செவ்வனே தேர்ந்து அடுத்த நிறத்திற்கு உயர்வு பெறத் தகுதியுடைய நிலை. ஐயந்திரிபற உணர்ந்தவர். ஒரே நிறத்தில் இந்த மூன்று படிநிலைகளையும் உணர்த்த படிநிலை உயர உயர நிறத்தின் அழுத்தம் குறைக்கப்படும். 1. கரும்பிறப்பில் 1. கருமை முதல் படி 2. கருமை இரண்டாம் படி 3. சாம்பல் மூன்றாம் படி 2. நீலப் பிறப்பில் 1. கருநீலம் முதல் படி 2. நீலம் இரண்டாம் படி 3. வான்நிறம் மூன்றாம் படி 3. பசும் பிறப்பில் 1. அடர்பச்சை முதல் படி 2. பச்சை இரண்டாம் படி 3. வெளிர்பச்சை மூன்றாம் படி 4. செம்பிறப்பில் 1. செம்மை முதல் படி 2. இளம்சிவப்பு இரண்டாம் படி 3. காவி மூன்றாம் படி 5. மஞ்சள் பிறப்பில் 1. அடர் மஞ்சள் முதல் படி 2. இளமஞ்சள் இரண்டாம் படி 3. பொன்மை மூன்றாம் படி 6. வெண்பிறப்பில் வெண்மை மூன்று படிகளிலும். இவற்றைக் கடந்த பிறகே (மேலே கூறப்பட்ட 18 படிகளையும்) நல்வெள்ளை எனும் நிறமிலி நிலையினை அடைவர் என்பதே நிறக்கோட்பாடு. அதாவது கருமையிலிருந்து நல்வெள்ளை நிலை வரையிலும் தகுதி உயர உயர நிறத்தின் அடர்வு குறைவதனைக் காணலாம். அதாவது பயிற்சியாளரின் குறைகளும் குறையும். அவரது அறிவைச் சூழ்ந்துள்ள மாசு குறைவதனையே (அறியாமை இருள் நீங்குவதனை) இந்த நிற வேறுபாடு குறிக்கும். படிநிலை உயர உயர நிறம் குறையும். இதுவே ஊழ்கப் பயிற்சியிலும் 18 படிநிலைகளைக் கடந்த ஐயனாரை அடைவது எனும் கோட்பாடு. சேர நாட்டு ஐயனாரே தற்போது ஐயப்ப வழிபாட்டால் தொழப்படுகிறார். ஐயப்பன் பெயரால் செய்யும் ஐயனார் வழிபாட்டில் தற்போது சரியான குருமார்களின் வழிகாட்டல் இன்மையால், பிறழ நடத்தும் குளறுபடிகள் ஏராளம். இந்த வழிபாடு செய்ய மாலை அணிவோர் தொடர்ந்து 18 ஆண்டுகள் செல்வர். இதில் முதல் மூன்றாண்டுகளும் கருப்பு உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் நீல உடையினையும், அடுத்த மூன்றாண்டில் பச்சை உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் சிவப்பு உடையினையும் அதற்கடுத்த மூன்றாண்டுகளில் மஞ்சள் உடையினையும் இறுதி மூன்றாண்டில் ஒளிர் வெண்மை உடையினையும் அணிந்து நோன்பிருப்பர். 18ஆம் ஆண்டிறுதியில் தென்னை வைத்து நோன்பு முடிப்பர். இது ஆசீவக மரபின் ஐயனார் ஊழ்கத்தைத் தழுவிய ஒரு வழிபாடேயாகும். இதில் இறுதியில் கூறப்படும் தென்னை வைத்தல் எனும் நிகழ்வு தேங்காயின் உட்பருப்பு நல்வெள்ளை எனும் கருத்துப் படவே கையாளப் படுகிறது. நல்வெள்ளை எனும் இறுதி நிலை நிறமிலி எனும் நிலையினைக் குறிக்கும். கருமையில் பிறவி துவங்கி அறியாமை இருளுடன் வாழ்வைத் துவங்கும் ஆசீவக மாணவன் தனது பயிற்சியினாலும் ஒழுக்கத்தினாலும் அறுநிறப் பதினெண் படி கடந்து நிறமிலி நிலையினை அடைவதே ‘வீடடைதல்’ எனப்படும். அப்படி ஒளியடைதலே ஆசீவக மெய்யியலின் நோக்கம். இந்த அறிவு மரபில் வந்த அறிவர்களுள் ஒருவரான வள்ளல் பெருமான் கூட ‘ஒளிதேகம்’ என்று குறிப்பிடுவதும் இந்த நல்வெண்மை நிலையையே. இந்த நிலையினை வீடடைதல் என்று சொன்னால், வைதீகம் கூறும் சொர்க்கம், நரகம் போன்றே ஆசீவகமும் கூறுகிறதோ எனும் ஐயம் எழக்கூடும். இந்த வீடடைதல் என்பது வைதீகர்களின் சொர்க்கப் புரட்டிலிருந்து எவ்வாறு வேறுபட்டு உயர்ந்து நிற்கிறது என்பதனை விளக்க ஊழ்கத்தை விளக்குவோம். ஊழ்கம் (யோகம்) எனும் சொல் ‘ஊழ்’ எனும் சொல்லினைக் கொண்டு கிளர்த்தலால் ஆசீவகம் கூறும் ஊழினை முதற்கண் விளக்குவாம். உழு எனும் சொல்லினடியாக ஊழ் எனும் சொல் கிளைத்தது. ‘விழு’ என்பது ‘வீழ்’ என வந்தது காண்க. ‘உழு’ என்ற சொல் உழுதல் (நிலத்தை) எனும் செயலைக் குறிக்கும். நிலத்தை உழுகின்ற போது ‘மண்’ எனும் பூதம் ‘நீர்’ எனும் பூதத்துடன் சேர்க்கப்பட்டு கதிரவன் ஒளிவெப்பம் எனும் ‘தீ’ பூதத்தின் முன்னிலையில் ‘வளி’ எனும் பூதம் மண்ணின் கண்ணறைகளில் சேமிக்கப்படுவதைக் குறிக்கும். இவ்வாறு உயிர்வளி சேமிக்கப்பட்டே பயிர்களுக்கு அளிக்கப்படுகிறது. உயிர்வளி சேமிக்கப்படும் போது மண் கண்ணறைகளில் உள்ள நீர் எனும் பூதம் தீ எனும் (கதிரவன் ஒளி) பூதத்தால் ஆவியாக்கப்பட்டு, அந்த வெற்றிடத்தில் வளி சேமிக்கப்படுகிறது. இவ்வாறு உயிர்வளி சேமிக்கப்படுதல் உழு எனும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இந்த உழு, ஊழ் எனும் சொல்லின் அடிப்படையில் அமைந்த ஊழ்கம் எனும் பயிற்சி மாந்த உடலின் (நுண்ணிய) கண்ணறைகள் தோறும் உயிர்வளி சேமிக்கப் பயன்படுகிறது. இந்த உயிர்வளியினை அதிகம் பெறும் இயற்கைச் சூழல் அமைந்த சோலைகளிலும், மலைக் குகைகளிலுமே பெரும்பாலும் ஆசீவகப் பள்ளிகள் அமைந்திருந்தன. இந்த ‘ஊழ்’ எனும் சொல்லிற்கு இயற்கையில் நிகழும் அணுவியல் மாற்றத் தொடர் நிகழ்வு என்பதே ஆசீவக விளக்கமாகும். இயற்கை நிகழ்வுகளின் ஒழுங்கமைவு என்பது விதிப்படியே நிகழும் ஆதலால் அணுவியம் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். பூதங்களில் ‘வெளி’ என்பது இடத்திணையாதலால் இது ஆசீவகக் கோட்பாடுகளில் தெரிநிலை பூதமாகக் கருதப் படவில்லை. (நிலம், நீர் வளி ஆகியவற்றுக்கு காட்சி அளவையும் நிறை அளவையும் உண்டு. தீக்கு காட்சி அளவை மட்டும் உண்டு. வெளிக்கு காட்சி அளவையும் நிறை அளவையும் இல்லை. எனவே இது தெரிநிலை பூதமாகக் கருதப்படவில்லை. ஆனால் மண், நீர், தீ, வளி ஆகியவை தெரிநிலை பூதமாகக் கருதப்படுகின்றன. இவற்றை ஆசீவகம் பின்வருமாறு வரிசைப் படுத்துகிறது. 1. மூலஅணு 2. விளைவணு மூல அணு என்பது வளியணுவாம். இவ்வளியணுக்கள் வெவ்வேறு விழுக்காடுகளில் தமக்குள் புணர்ந்து நிலவணுவையும் நீரணுவையும் விளைவிக்க வல்லன. எனவே வளியணு மூலவணுவாகக் கருதப் படுகிறது. நீரணுக்களையும், நிலவணுக்களையும் வளியணுக்களாலப் பகுக்க இயலும். ஆனால் வளியணுக்களைப் பகுக்க இயலாது. இவ்வளியணுவே ஏனைய பூதங்களுக்கு அடிப்படை அலகாய் அமைதலின் இது ‘இயக்கணு’ எனவும் வழங்கப்படும். ஆசீவக அணுவியம் மூலவணுவை அழிக்க முடியாது என்கிறது.
விளைவணு நீரணுவும், நிலவணுவும் வளியணுக்களின் வெவ்வேறு விழுக்காட்டுச் சேர்க்கையினால் விளைவன. எனவே இவை ‘இயங்கணு’ எனவும் மூல அணுவால் விளைவிக்கப் படுதலின் ‘விளைவணு’ எனவும் வழங்கப்படும். நீரணு, நிலவணு, வளியணு ஆகியவை அவ்வப் பூதங்களுக்கு அடிப்படை அலகாம். ஆனால் ‘தீ’ என்கின்ற பூதமோ அணுவிலாப் பூதம் என்று வழங்கப்படும். ‘தீ’ என்பது மூல அணுக்களிலிருந்து விளைவணுவை உருவாக்கவும், மீண்டும் விளைவணுவிலிருந்து மூல அணுவைப் பகுக்கவும் பயன்படும் ஆற்றலேயன்றி அதற்கு அடிப்படை அணுக்கள் கிடையாது. ஆனால் ஏனைய மூன்று பூதங்களிலும் உள்ளுறைந்து நிற்றலால் ‘தீ’ உள்ளுறைப் பூதம் என வழங்கப் பெறும். அணுவிய நிகழ்வுகள் (புணர்தலும் பிரிதலும்) வெப்பத்தின் முன்னலையில் மட்டுமே நிகழும். வெப்பமின்றி அணுவிய நிகழ்வுகள் நடப்பதில்லை. இரு அணுக்கள் புணர்தல் நிகழும் போதுள்ள வெப்ப ஈர்ப்பு அந்த அணுக்கள் பகுக்கப் படும் போது வெளிப்படும். அவ்வாறே இரு அணுக்கள் புணரும் போது வெப்பம் வெளிப்பட்டால் அவை பகுபடும் போது அதே அளவு வெப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். வெப்பம் ஏற்றுக் கொள்ளுதலும், உமிழப்படுவதுமாகிய வெப்ப விளைவு, நிகழ்வுகளின் நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கும். பிற நேரங்களில் வெப்பம் இயல் நிலை அளவிலேயே இருக்கும். ஏனைய மூன்றணுக்களுக்கும் (நில, நீர், வளி) பரும அளவு உண்டு. தீ எனும் பூதம் இம்மூன்றிலும் உள்ளுறைவதால் தனி அணுவோ பரும அளவோ கிடையாது. இது ஒரு ஆற்றல் வெளிப்பாடே. ஆனால் பூதங்களில் இத்தீயாற்றலும் ஒன்றாகவே கொள்ளப்படும். மூல அணுவான வளியணுவுடன் ‘தீ’ சேர்ந்தே ஏனைய அணுக்களை விளைவிக்கும். ‘தீ’ பூதம் ‘அணுவிலி பூதம்’ எனவும் வழங்கப்படும்.
நிலவணு படுசீரும் (அ) வீழ்சீரும் நீரணு பாய்சீரும் வளியணு கிடைச்சீரும் தீயாற்றல் மேற்சீரும் கொண்டவை. சீர்களின் தன்மைக்கேற்ப இயக்கம் நிகழும். ஒரு பொருளில் எந்தப் பூதத்தின் கூறு அதிகமாக உள்ளதோ அந்த பூதத்தின் சீரிலேயே இயக்கம் நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட பூதியம் குறிப்பிடத் தக்க அளவில் இருப்பின் அவற்றின் தொகுபயனுக்கேற்ப சீர் விளைவும் இயக்கமுமிருக்கும். பால் தன்மைக்கேற்பப் பொருட்களின் வடிவமையும். களிமண், சேறு, பானை, ஓடு போன்றவை ஒரே பொருளின் பல்வேறு பால் தன்மையால் வந்த புற வேற்றுமை வடிவங்களே. பொருட்களின் அணுவியல் செயல்பாடுகள் ஊழ் எனவும், இது நிகழத் தற்செயல் கூறுபாடுகள் முதன்மைக் காரணிகள் எனவும், இந்நிகழ்வு இவ்வாறுதான் நிகழ முடியும் என்பதே நியதி என்றும், இதில் பாவம், புண்ணியம் மற்றும் இவற்றுக்குக் காரணம் என்று எதனையும் கற்பித்து மயங்காதிருத்தலே வினைமறுப்பு எனவும், மாற்றம் என்பது ஒன்றே மாறாதது எனவும், பொருளியல் சார்ந்த உழைப்பில் யாருக்கும் தனிப்பட்ட விலக்குமில்லை எனவும் ஆசீவகம் வலியுறுத்தும். இத்தகு ஆசீவகம் ஏன் வீடுபேற்றை வலியுறுத்தியது? அப்படியானால் வீடடையாதவர்களின் நிலை பற்றி ஆசீவகம் என்ன நிலைப்பாடு கொள்கிறது? வீடு பேறடையாதவர்கள் மறு பிறவிக்குள்ளாவார்கள் என்று ஆசீவகம் நம்புகிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாவது யாதெனில் மாந்த உடலின் பிணி, மூப்பு, சாக்காடு எனும் இழவூழ்களை வெல்லவும் உடலின் பயனாய ஊழ்கத்தின் உயர் நிலையினை அடையவுமே அவ்வாறு நல்வெள்ளை நிலையினை அடைவது சிறப்பு. அடையாவிடினும் அந்நிலை அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறப்போமென்றோ அதனால் பெருங்கேடு விளையுமென்றோ ஆசீவகம் கூறவில்லை.
ஊழ்கமும் மெய்யியலும்
ஊழ்கம் செய்வதற்கு ஆசீவகத் துறவிகள் தனிப்பள்ளிகள், நிலாப்பாறை, வானியல் ஆய்வுப் பாறைகள் எனப் பல்வேறிடங்களைத் தம் பள்ளி வளாகங்களில் கொண்டிருந்தனர். இவை யாவும் உயிர்வளி மிக்க செறிவுடன் விளங்கும் இடங்களே. ஊழ்கத்தின் மூலம் உயிர்வளியினைத் தங்கள் உடலிற்றேக்கி வைத்து தனது உடலணுக்களைச் செம்மைப் படுத்தி விழுமிய ஆற்றல் நிலைகளை ஏற்படுத்தினர். இதன் மூலம் உடலணுக்களில் வளிநிலை மூல அணுக்களின் தேக்கத்தினைக் கூட்டிப் பிறவணுக்களின் இயக்கங்களையும் நிகழ்வுகளையும் சுருக்கி இறுதியில் ஒளியுடல் பெறுவதே (நல்வெள்ளை) ஊழ்கத்தின் நோக்கமாகும். இவ்வாறு ஒளியடைந்தவர்களுக்கு உலகியலில் ஏற்படும் புறத் தொல்லைகள் இருக்காது. மேலும் வாழ்வியல் மெய்ப்பாட்டின் இறுதி நிலையாகவும் இருக்கும். ஆசீவகம் கோரும் நிலைப்பாடும் அதுவே யாகும். மறுபிறவியை ஆசீவகம் பேசவில்லை. ஊழ்கமும் உடலும் உடலின் அணுக்களிடையே உயிர்வளியினைத் தேக்கி வைத்து ஒளியுடல் பெறும் நுட்பத்தினைப் பின்வருமாறு அறிவர்கள் பயிற்சியின் வாயிலாகப் பெறுவர். வளியோட்டத்தினை உடலுக்குட் செலுத்த இரண்டு நாசிப் புழைகளுள்ளன. இவற்றின் வழியாகக் காற்றினை நாம் உள்வாங்கி வெளியிடுகிறோம் என்பது யாவருமறிந்ததே. ஆனால் உட்செல்லும் காற்றும், வெளியேறும் காற்றும் எந்தப் புழை வழியாகச் சென்று எந்தப் புழை வழியாக வெளியேறுகிறது என்பதனை உற்று நோக்க வேண்டும். வலப்புழையில் காற்று கூடுதலாகவும், இடப்புழையில் குறைவாகவும் இயக்கம் நிகழுமாயின் இது வலநாடியாகப் பிங்கலை நாடி என்றும், ஆண்நாடி என்றும், சூரிய கலை என்றும் சொல்லப்படும். இடப்புழையில் இயக்கம் அதிகமிருப்பின் இடகலை என்றும், பெண்நாடி என்றும், சந்திர கலை என்றும் வழங்கப்படும். இரு புழைகளிலும் சம இயக்கம் நிகழின் இதனைச் சூழுமுனை என்றும் அலிநாடி என்றும் அக்கினி நாடி என்றும் சொல்லப்படும். இவை முறையே கதிர், மதி, சுடர் என வழங்கப்படும். இடகலை நாடி வாதமென்றும் பிங்கலை நாடி பித்தமென்றும் சூழுமுனை நாடி ஐயமென்றும் சொல்லப்படும். வாதநாடி பயிற்சிக்கும் வளர்ச்சிக்கும் பித்தநாடி போட்டிக்கும் வெல்வதற்கும் ஐயநாடி உலகியனீங்கிய ஊழ்க மெய்யியலுக்கும் சிறப்பானவை. வாதத்திலும் பித்தத்திலும் சிதறியோடும் மூச்சினை ஐயத்தில் நிற்க வைத்து உடலின் மாசுக்களை நீக்கி ஐயத்தில் நிறுத்தி மெய்யூழ்கம் பெறும் பயிற்சியே ஊழ்கப் பயிற்சியாகும். இந்த மூச்சோட்டத்தினை முறைப்படுத்த ஆசீவகர்களின் கற்படுக்கைகள் பல்வேறு சாய்வுகளில் அமைக்கப்பட்டிருப்பது நல்ல ஏந்தாகும். எந்தப்புறம் உடல் எடையினால் அழுத்தப்படுகிறதோ அதன் எதிர்ப்புறத்திலுள்ள புழையில் மூச்சோட்டம் நிகழும். நாளடைவில் ஐய நாடியில் நின்று ஊழ்கப் பயிற்சி கைவரப் பெற்றவர் பல்வேறு ஆற்றல்கள் கைவரப் பெறுவர். மெய்யியல் படிநிலை வளர்ச்சியும் கூடும். அவ்வாறு ஐயநிலை கைவரப் பெற்றவர்களே ஐயன் என்றும், ஆர் என்னும் சிறப்பு விகுதி சேர்த்து ஐயனார் என்றும் வழங்கப் பெறுவர். இயல்பாகவே மாந்த உடலில் எந்தக் கால் மடக்கப்பட்டு அழுத்தப் பெறுகிறதோ அதற்கு எதிர்ப்புறம் உள்ள புழையில் மூச்சோட்டம் நிகழும். காலுடன் உள்ள தொடர்பாலேயே மூச்சோட்டம் கால் ஓட்டம் என்றும், மூச்சினைக் கால் என்று சிறப்பு இடுகுறியாகவும் வழங்கப்படுகிறது. இதனைக் குறிக்கவே ஐயனார் (ஐயப்பன்) உருவச் சிலைகளில் இருகாலையும் சமப்படுத்தி ஒரு கட்டுப் போடப்பட்டிருக்கும். இது இரு மூச்சும் சமமான ஐய நிலை என்று குறிப்பால் உணர்த்தவே. அன்றி இடக்காலையோ வலக்காலையோ தனியாகக் கட்டுப் போட்டுக் கட்டினால் எதிர்ப்புழையில் மூச்சோட்டம் செல்லும் நிலை என்றறிய வேண்டும். சிலர் ‘என்னைக் காலைக் கட்டும் வரை நான் இதற்கு உடன் படேன் என்று சொல்வர்’. அப்படியாயின் தனது மூச்சு நிற்கும் வரை அல்லது மரணம் நேரும் வரை உடன் படேன் என்பதாகும். மயங்கினாரினின்று இறந்தாரைப் பிரித்தறிய இறந்தாரின் இருகாலையும் சேர்த்துக் கட்டியிருக்கும். இதற்கு நாடிக் கட்டு என ஆசீவகம் குறிக்கும். அவனது நாடி அதாவது மூச்சு நிறுத்திக் கட்டப்பட்டு விட்டது என்பதே அதன் பொருள். அதன் பிறகே இறந்தாருக்கான ஒன்பது கடன்கள் செய்யப்படும். அவ்வாறு உயிர் பிரிந்த உடலுக்கும் ஊழ்கத்திலுள்ள உடலுக்கும் உள்ள வேறுபாடுகள் எளிய மாந்தர்க்குத் தெரியாது. உயிரடக்கம் என்பது வேறு; மரணம் என்பது வேறு. இதனைப் பிரித்தறியச் சில நுட்பமான வழிமுறைகள் உண்டு. ஆனால் இயல் மாந்தர்க்கு இது கடினம். இழவூழ் குறைந்து ஆகூழ் மிஞ்சினால் உயிர்ப்பு அடங்கிய உடலில் மீண்டும் இயக்கம் ஏற்பட வழியுண்டு. ஒருவேளை அவ்வாறு இயக்கம் ஏற்படுமானால் அந்த உடல் சிதையாமல் காப்பாற்றப்பட்டு வந்தால்தான் மீண்டும் உயிருடன் எழ முடியும். மேலும் ஆகூழ் கூடுவதற்காக அந்த உடல் சில வகைகளில் பாதுகாக்கப்படும். (ஆசீவக மரபின் ஆசு மருத்துவத்தில் உயிர் அடக்கமும், உயிர் மரணமும் பற்றிப் பல்வேறு விந்தையான உண்மைகள் கூறப்பட்டுள்ளன.) உடல் அழுகாமல் ஆகூழ் கூடுவதற்காகப் பின்வரும் வகையான கடன்கள் செய்யப் படுகின்றன. இறந்தவரின் உடலின் இரு பாதியும் (வலம், இடம்) ஒன்றை யொத்ததாகவே மறுபாதியும் கிடத்தப்படும். 1. வாயில் பாலூற்றுதல். 2. அழுக்கு நீங்க நீரால் கழுவுதல். 3. உள்ளங்காலுக்கு அருகில் (வெம்மையைக் கூட்ட) தீச்சட்டி வைத்தல் 4. நெய்த்திரிகளை எரியூட்டி சூழ நின்று பிடித்தலால் புறவெப்பத்தினைச் சீர்செய்தல். (கரிவளி உமிழாதிருக்கவே நெய்த்திரி) 5. நல்லெண்ணையினைத் தாழியில் ஊற்றி அதற்குள் உடலை வைத்து வெப்பச் சம நிலையினைப் பாதுகாத்தல் (நல்லெண்ணெயின் தன் வெப்பம் மாந்த உடலுக்கு ஆகூழ் தரும் என்பதாலேயே வாரம் ஒரு முறை நல்லெண்ணெய்க் குளியல் நடைமுறைப் படுத்தப் பட்டது.) 6. தலையில் மருந்து எண்ணெயினைத் தேய்த்தல். இதில் ஒவ்வொரு மரபிலும் அதே மரபைச் சேர்ந்தவர்கள் கமுக்கமான தனித்தனி மருத்துவ முறைகள் வைத்திருந்ததனால் அம் மரபைச் சார்ந்தவர்கள் மட்டுமே இதனைச் செய்ய அனுமதிக்கப் பட்டனர். (இன்றும் கூட உயிர் நீத்தாரின் மகன்கள் மட்டுமே இதனைச் செய்ய உரிமை உள்ளவர்களாகக் கருதப் படுகின்றனர்.) 7. தீச்சட்டியில் பசுவின் வரட்டியினை எரித்து மூச்சுக் காற்றில் நெடி சேர்த்தல். 8. உடல் வீங்கி அழுகாதிருக்க புதுத்துணியினால் சுற்றி வைத்தல். 9. நீர்க்குடத்தினை சிறு துளையிட்டு உடலினைச் சுற்றி நீர்த்துளிகள் சிதறும்படி செய்தல். இன்னவற்றுடன் நுண்ணுயிர்ச் சிதைவினைத் தவிர்க்கும் பொருட்டுத் துளசி முதலிய மூலிகைகளும், கருப்பு வெற்றிலையும் வாயில் வைத்துப் பொதிதல். இவ்வாறு உடலைப் பாதுகாத்தல் பாடம் செய்தல் எனப்படும். ஓலைச்சுவடி போன்றவை சிதைந்து அழியாமல் இருக்கக் கரிசாலை, மஞ்சள் முதலியன கொண்டு பூச்சு செய்வதற்குப் பாடம் செய்தல் அல்லது பாடம் போடுதல் என்று பெயர். ஒரு ஆசீவக ஊழ்கியின் உடலுக்கு அவர் சார்ந்த ஆசீவகப் பள்ளியினரால் மட்டுமே இக்கடமைகள் செய்யப்பட வேண்டும். அப்பள்ளியின் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் பாடம் இடும் நிகழ்ச்சியை ஒரு பாடத்திருவிழாவாகவே கொண்டாடுவர். ஊழ்கம் செய்யும் போது துவக்கத்திலேயே ஐய நாடி கைவரப் பெறாதாகையால் சூரிய, சந்திர நாடிகளை (கதிர், மதி) சமமாக ஓட்ட வேண்டும். ஐந்து நாழிகைக்கு ஒரு முறை கதிரும், மதியும் மாறி நடக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளில் ஆறு முறை பெண் நாடியும், ஆறுமுறை ஆண் நாடியும் ஆகப் பன்னிரு முறை மாறி நிகழும். இதனையே ஒரு நாளில் இலக்கினம் ஆறு ஆண் இராசி மண்டலத்தையும், ஆறு பெண் இராசி மண்டலத்தையும் மாறிக் கடந்து பன்னிரு இராசிகளைக் கடந்து வருவதாக ஆசீவக அறிவியலான கோளியல் கணியம் சுட்டிக் காட்டும். இந்த ஐந்து நாழிகைப் போதில் ஒவ்வொரு இராசியிலும் நிகழும் மூச்சோட்டம், நிலப்பூதியத்தில் 11/2 நீர்ப்பூதியத்தில் 11/4 நெருப்புப்பூதியத்தில் 1 வளி பூதியத்தில் 3/4 வெளிபூதியத்தில் 1/௨ ஆக மொத்தம் 5 நாழிகைப் பொழுது செல்ல வேண்டும். இதனைப் பயிற்சியால் அறியலாம். இந்த ஒழுங்குக்கு உட்பட்டுச் செய்யப்படும் ஊழ்கம் ஆகூழ் எனப்படும். அதாவது உடலியலில் நன்மை தரத்தக்க வளர்ச்சி நிலைகளைக் காட்டும். இன்றேல் ஒழுங்கு தப்பின் அது உடலணுக்களுக்குக் கேடாய் முடிந்து அணுக்களின் அழிவுக்குக் காரணமாகும். இந்தக் கேடு தரும் ஊழ் போகூழ் எனப்படும். இதனை இழவூழ் என்றும் கூறுவர். இழவூழ் தொடர்ந்து நடக்கின் உடலழிந்து மரணம் நேரும். எனவேதான் மரணம் நடந்த இடத்திற்குச் செல்வோர் தாம் இழவூழுக்குப் போவதாகக் கூறுவர். தற்போதைய வழக்கில் இழவுக்குப் போகிறேன் (இழவூழ் > இழவு) என்கின்றனர். ஆகூழும் போகூழும் சமமாயிருக்கும் நிலைக்கு அறிவூழ் என்று பெயர். ஆசீவகக் கணிய அறிவியல், ஆகூழை > அமிழ்த ஊழ்கம் என்றும் (அமிர்தயோகம்) போகூழை > மரண ஊழ்கம் என்றும் (மரணயோகம்) சம ஊழை > அறிவூழ்கம் என்றும் (சித்தயோகம்) கூறுகின்றது. இவை யாவும் ஆசீவக மரபின் ஆசு கணியர்கள் பின்பற்றும் நுட்பமென்றறிக. ஐங்கூறில் கிழமை, உடு, உவா, ஊழ்கம், கருவி செயல் வகை என்ற ஐந்தும் இடம் பெறும். இவ்வாறு ஊழ்க நிலையில் உயர் நிலையினை அதாவது ஆறு வண்ணங்களின் 18 படிநிலைகளையும் கடந்து ஊழ்கத்தினால் அணுக்கள் ஆற்றல் செறிவுற்று ஆகூழ் மிஞ்சி அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இறுகி யிணைந்து உடலழியா நிலையும், ஒளியுடலும் பெறும் நிகழ்வே மிக இறுதி இலக்காகக் கருதப் படுகின்றது. அவ்வாறு இறுதி நிலைப் பேறு பெற்றவர்கள் எண்வகை உறுதிப் பொருள்களைக் கடக்க வேண்டி இருக்கின்றது அவையாவன: 1. கடைமிடறு இறுதி நிலையிலுள்ளவர்கள் நாவரட்சியினை நீக்கும் பொருட்டும் ஊழ்கம் வெற்றி பெறவும் வேண்டி அவருடனிருப்போரால் அளிக்கப் பெறும் இந்த இறுதி நீர்மமே ‘இறுதிப் பானம்’ என்று சொல்லப்படும் இந்தக் கடை மிடறு. இந்த ஆசீவக அறிவு மரபினை உள்வாங்கித் தோன்றிய மாலியத்தில் கூட இறுதி நிலையிலுள்ளவர்களுக்குத் துளசி கலந்த நீர் வாயில் ஊற்றப்படுகிறது. சிவனியர் வில்வ இலையினைத் தண்ணீரில் போட்டு இறுதி நிலையாளரின் வாயில் ஊற்றுவதும் இதன் தழுவலே. ஆசீவகத் துறவியர் தம் குகைகளைச் சுற்றிலும் நத்தைச்சூரி, அருகுபத மூலி ஆகிய செடிகளை வைத்திருப்பதும் இந்தத் தேவை கருதித்தான். 2. இறுதிப் பாடல் இறுதி நிலையாளரைச் சுற்றி யமர்ந்து ஆசீவகர்கள் தம் குரு மரபினை வாழ்த்தியும் ஊழ்கம் நல்லபடியாகப் படி கடக்க வேண்டு மென்றும் வாழ்த்திப் பாடுவது. தற்போது கூட உயிர் துடிப்பவர்கருகிருந்து மாலியர் திவ்வியப் பிரபந்தம் பாடுவதும், சிவனியர் தேவாரம், சிவபுராணம் பாடுவதும் கண்கூடு. இது இறுதி நிலையாளருக்குப் புத்துணர்வும் நம்பிக்கையும் ஊட்டும் என்பது கருத்து. 3. இறுதி ஆடல் கடைப்படி கடக்க வேண்டி ‘நிருத்தம்’ எனக் குறிக்கும் வகையினை ஒத்த ‘சூரிய நாடி’ ஓடச் செய்யும் ஓர் நடனம். இது உடலில் வெம்மையைக் கூட்டி ஊழ்கியின் நாடிச் சவ்வினை இளக்கி அச்சவ்வினைக் கிழித்து உயிர்வளி மேலேறப் பயன்படும். 4. இறுதி வரவேற்பு ஊழ்கியின் உறுதியையும், பயிற்சி வளமையையும் கண்டு, ஊழ்கியால் மதிக்கப் படும் அவரது குரு மரபினர் (ஏற்கெனவே ஒளியுடல் பெற்றவர்கள்) இவ்வூழ்கியை எதிர் கொண்டு வரவேற்பர் என்ற நம்பிக்கை. இன்றைய மெய்யியலார் மலர்ப் பல்லக்கில் தேவர்கள் எதிர் கொண்டு அழைத்துச் செல்வர் என்று கூறுவதும் இந்த நம்பிக்கையின் தழுவலே. 5. காரிருள் இறுதி நிலையினை அடையுமுன் (தமர் திறக்கு முன்) உயிர் வளியின் அழுத்தம் கூடக் கூட ஏற்படும் ஒரு அழுத்த நிலையினால் கடும் காரிருளும் மேகமும் சூழ்ந்தது போல் தோன்றுமாம். அப்போது உறுதியாக ஊழ்கத்தினைத் தொடர வேண்டும். இதுவே மிகவும் கடுமையான நிலை என ஊழ்க மெய்யியல் வரைவு செய்கின்றது. 6. நிறையாவழிகையமிழ்தூற்று உயிர்வளி மேலழுத்தலால் அண்ணம் என்று சொல்லப்படும் உள்நாவிற்குப் பின்புறம் ஒரு சிறு புழை யானையின் தும்பிக்கை போன்ற சிறு சவ்வின் முனையில் தோன்றி ஐய நீரைச் சுரக்கும். இதுவே ஊழ்கிகள் அமிழ்தம் என்று சொல்வதாகும். இந்த அமிழ்தம் இனிப்புச் சுவை உடையதென்றும் இதனை யுண்டால் உடல் எளிதில் அழியாதென்றும் உணவோ, நீரோ அவர்களுக்குத் தேவைப் படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அமிழ்தம் ஊறிக் கொண்டிருக்குமே ஒழிய எதிலும் வழித்து நிரப்ப இயலாது. அவ்வளவு நுண்புழையில் மிகச் சிறிய ஊறலாக அமையும் இந்த நிலையடைந்த பின் கவலைகளும் துன்பங்களும் இல்லை என்பர். 7. தடைக்கல் தகர்ப்பு அல்லது தமர் திறப்பு ஊழ்கம் முற்றுப் பெறும் நிலை இது. மேலெழுப்பப்பட்ட உயிர்வளி அமிழ்த ஊற்றைக் கடந்தபின் ஒரு சிறு தமர் திறக்கும். இது கண்ணின் பின்புறம் உள்ளதாகக் கூறுவர். அந்தத் தமர் உடைந்தபின் உயிர்வளியும் உயிர்ப்பும் தாமரை மலர் போன்ற இதழினையுடைய உயிர்ப்பெரு வெளியில் சென்றடையும் என்றும் இதனால் ஒளியுடல் கிட்டும் என்றும் இதுவே வீடுபேறு எனவும் கூறப்படும். இந்தத் தாமரை மலரில் 1008 இதழ்கள் உள்ளதாக ஊழ்க மெய்யியல் கூறுகிறது. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். 8. ஐயன் நிலை அடைதல் இந்த நல்வெள்ளை நிலையினை அடைந்தவர் ஐயனாராகக் கருதப்படுவார் என்பது ஆசீவக மெய்யியல் கோட்பாடு.
முடிவுரை இவ்வாறு பல்வகைச் சிறப்புக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய ஆதித் தமிழரின் மெய்யியல் பின்னர் வந்த வந்தேறி சமயங்களால் விழுங்கப்பட்டு திரிவாக்கம் பெற்று வெவ்வேறு பெயர்களுடன் உருமாற்றம் பெற்றது. இன்று ஆதித் தமிழரின் மெய்யியல் பதித்துள்ள சுவட்டின் தடங்கள் புழுதி மண்டி மறைந்து கிடக்கின்றன. அவற்றை மீட்டெடுத்து அறிவு நிலையில் மேம்பட்டு உயர வழிகாண வேண்டியது ஆய்வாளர்தம் கடமையும் பொறுப்புமாம்.
ஆதி. சங்கரன்
கோரக்கர் அறிவர் பள்ளி, மூலை ஆற்றங்கரை, வேளிய நல்லூர் சேயாறு வட்டம்.
கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் பூதவாதம் பிராமணர்கள் கற்கத்தகுந்த மதிப்புடைய தத்துவமாக இருந்தது எனவும் அதனைப் படிப்பதற்காக வடஇந்தியத் தத்துவ அறிஞர்கள் தமிழகம் வந்தனர் எனவும் பேராசிரியர் சக்கரவர்த்தி நயினார் அவர்கள் கூறும் செய்தி, புத்தர் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பூதவாதம் என்கிற பொருள்முதல்வாதக் கருத்துகள் மிகவும் புகழ்பெற்ற, மிகவும்செல்வாக்குடைய கருத்துகளாக இருந்து வந்தன என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும் தென்னாட்டில் வழங்கிவந்த தத்துவங்களில் மிகவும் தொன்மையானது உலகாயதம் என்று தென்னாட்டுத் தத்துவங்களை ஆய்வு செய்த தத்துவ அறிஞர் தட்சிண நாராயண சாத்திரி அவர்கள் கூறுகிறார். அதனையே பேராசிரியர் சக்கரவர்த்தி நயினார் அவர்களும் கூறுகிறார். இவர்கள் தமிழ் இலக்கியச் சான்றுகளை ஆய்வு செய்யாமலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இத்தகைய முடிவிற்கு அவர்கள் வருவதற்குச் சமற்கிருத நூற்சான்றுகளே காரணமாக இருந்துள்ளன என நா. வானமாமலை அவர்கள் தனது நூலில் தெரிவித்துள்ளார். (1)
பேரரசுக் கொள்கையின் காரணமாக, உலகாய்தம், பூதவாதம், எண்ணியம், சிறப்பியம், ஆசிவகம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகளின் வலிமையான அடித்தளம் சங்கம் மருவிய காலத்தில் (கி.மு. முதல் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடைக்காலம்வரை கிட்டத்தட்ட 3 நூற்றாண்டுகள்) மிகவும் பலவீனம் அடைந்திருந்தது. அதன் காரணமாக சங்கம் மருவிய காலத்தில் வைதீகச் சிந்தனையின் ஆதிக்கம் ஏற்படத் தொடங்கியது. இருந்த போதிலும், தமிழ்ச் சமூகத்தின் அடித்தளமாக, அறிவியலை அடிப்படையாகக் கொண்ட பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகளே இருந்து வந்தன. ஆனால் அது பலவீனமடைந்திருந்தது. அதன்பின் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் களப்பிரர்களின் ஆட்சியதிகாரத்தின் கீழ் ஆதரவுபெற்ற சமண பௌத்த மதங்களின் மெய்யியல் கருத்துகள் தமிழ்ச் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்ற கருத்துகளாக இருந்து வந்தன. உலகாயதம், பூதவாதம், எண்ணியம், ஆசிவகம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள், ஆரம்பகாலத்தில் வைதீகக் மெய்யியல் கருத்துகளாலும், அதன்பின் களப்பிரர்களின் ஆட்சியதிகாரத்தாலும், சமண, பௌத்த மெய்யியல் கருத்துகளாலும் தாக்குதலுக்கு உள்ளாகி, தமிழ் சமூகத்திலிருந்து அவை சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டு வந்தன.
களப்பிரர்களின் ஆரம்பகால வன்முறையும், அதற்குப் பிந்தைய அதன் ஆட்சியதிகாரமும், களப்பிரர்களின் ஆதரவு பெற்ற சமண பௌத்த கருத்துகளும் முன்பே பலவீனமடைந்திருந்த தமிழ்ச் சமூகத்தின் பொருள்முதல்வாத மெய்யியல் அடித்தளத்தை அடியோடு அழித்தொழித்தன. அவை சம்பந்தமான நூல்கள் அனைத்தும் முழுமையாக இல்லாதொழிந்தன. தமிழகத்தின் சமூக அடித்தளமாக 1000 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த, அறிவியலை அடித்தளமாகக்கொண்ட பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் அதன்பின் தலையெடுக்கவே இல்லை எனலாம். எனினும் பக்தி காலகட்டம் வரை பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் தமிழ் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்ற கருத்துக்களாக இருந்து வந்தன.
தமிழகத்தில் வைதீக மெய்யியல் கருத்துகள் சங்ககாலத்தின் இறுதிக்காலம் முதல் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்றுச் சங்கம் மருவிய காலம் முதல் தமிழகம் முழுவதும் பரவிப் பொது மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு கருத்தியலாக ஆகிக்கொண்டிருந்தது. அச்சமயத்தில் சமண பௌத்த மதங்களின் மெய்யியல் சிந்தனைகளும் மக்களிடத்தில் ஆங்காங்கு பரவத் தொடங்கி இருந்தன. கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் சமண பௌத்த மதங்கள் களப்பிர ஆட்சியின் முழு ஆதரவைப் பெற்று தமிழகத்தில் நன்கு காலூன்றத் தொடங்கின. அதற்கேற்றவாறு பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளை உள்வாங்கிக்கொள்வதும் அதன் சமூகப் பொருளாதார அடித்தளத்தை ஆட்சியதிகாரம் கொண்டு அழித்தொழிப்பதும் நடந்தேறியது. இருந்த போதிலும், தமிழ்ச் சமூகத்தில் பக்தி காலகட்டம்வரை, பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகளைவிட, ஒரு மேலாதிக்கம் பெற்ற மெய்யியல் கருத்தாக அவைகளால் உருவாக இயலவில்லை. பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் தொடர்ந்து தமிழ் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்ற கருத்துகளாக இருந்து வந்தன. ஆனால் அதன் பொருளாதார அடித்தளம் களப்பிரர் காலத்தில் அழிக்கப்பட்டிருந்தது. அதன் தத்துவார்த்த அடித்தளம் சமண பௌத்தக் கருத்துகளால் உள்வாங்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக சமண பௌத்த வீழ்ச்சிக்குப்பின் பக்தி காலகட்டத்தில் வைதீக மெய்யியல் கருத்துகள் தமிழ் சமூகத்தில் மேலாதிக்கம் பெறத் தொடங்கின.
யுவான் சுவாங்க்:
கி.பி. 7ஆம் நூற்றாண்டு வாக்கில் (கி.பி. 640) தமிழகம் வந்திருந்த யுவான் சுவாங்க் அவர்கள் மலைக்கோட்டைப் பாண்டிய அரசில் இருந்த பொது மக்களின் சமயநிலை குறித்து, “சிலர் உறுதியான கோட்பாடுகளை நம்பினார்கள்; சிலர் சமய மறுப்பாளர்களாக இருந்தனர்; அவர்கள் ஆன்மீக விடயங்களைத் தெரிந்து கொள்வதை உயர்வாகக் கருதவில்லை; வணிக நோக்குடனும், இலாபங்களையே குறிக்கோளாகக் கொண்டும் இருந்தனர். பெண்களின் கன்னிகா மடங்கள் பல இங்கு (இடிபாடுகளுடன்) காணப்படுகின்றன. இவற்றின் சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மத நம்பிக்கை உள்ள ஒருசிலர் இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான பிராமணக் கோயில்கள் இருக்கின்றன. அதிக எண்ணிக்கையில் நிகிரத்தப் பிரிவைச் சேர்ந்த சமணத்துறவிகள் உள்ளனர். நகரத்தின் (மதுரையாக இருக்கலாம்) கிழக்குப்பகுதியில் ‘சங்காராமா’ எனப்படும் பௌத்தப்பள்ளி காணப்பட்டது. இதன் தலைவாயிலும் கூடமும் மட்டுமே எஞ்சியுள்ளன. இவற்றிலும் புதர்கள் மண்டி அடித்தளம் மட்டுமே எஞ்சியுள்ளது. இது அசோக மன்னரின் இளைய சகோதரர் மகேந்திரரால் கட்டப்பட்டது. இதன் கிழக்கில் தூபம் ஒன்று காணப்படுகிறது. இதன் பெரிய மதில்கள் மண்ணில் புதைந்துள்ளன. கவிந்த கூரைப்பகுதி மட்டுமே எஞ்சி உள்ளது. இது அசோக மன்னரால் கட்டப்பட்டது” எனக் சொல்வதாக வின்சென்ட் ஆர்தர் சுமித் அவர்கள் கூறுகிறார் 2.
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த நிலைமை இது எனக் கூறுகிறார் யுவான் சுவாங். பக்தி இயக்கம் தீவிரமாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் இது. மக்கள் இன்னும் பொருள் முதல்வாதக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டிருந்தனர் எனத் தெரிகிறது. ‘மத நம்பிக்கை உள்ள ஒருசிலர் இருக்கிறார்கள்’ என்கிறார் யுவான் சுவாங்க். அதாவது பொதுமக்களில் ஒருசிலர் மட்டுமே மத நம்பிக்கையோடு இருக்கின்றனர் என்கிறார் அவர். அதே சமயம் ‘சிலர் சமய மறுப்பாளர்களாக இருந்தனர்’ என்கிறார். இந்தச் சமய மறுப்பாளர்கள், பண்டைய பொருள்முதல்வாத மெய்யியல் கொள்கையை உடைய நாத்திகர்களாக இருக்கலாம். ‘சிலர் உறுதியான கோட்பாடுகளை நம்பினர்’ என்கிறார் அவர். அவர்கள் மத நம்பிக்கை உடையவர்கள் அல்ல. ஆனால் உறுதியான கோட்பாடுகளை நம்பினர் என்கிறார் அவர். உறுதியான கோட்பாடுகள் என்பது உலகாயதம், பூதவாதம், எண்ணியம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் கோட்பாடுகளாக இருக்கலாம்.
பொது மக்களில் பலர் வணிக நோக்கோடும், இலாப நோக்கோடும் இருந்துள்ளனர். நூற்றுக்கணக்கில் பிராமணக் கோயில்கள் இருந்தன என்கிறார் அவர். பக்தி இயக்கத்தின் விளைவாகக் கோயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது எனலாம். சமணத்துறவிகள் அதிகளவில் இருந்தனர் என்கிறார் அவர். பௌத்தம் தமிழகத்தில் அழிந்த பின்னரும் 13ஆம் நூற்றாண்டுவரை சமணம் ஆங்காங்கு தமிழகத்தில் இருந்தது என்கிற செய்தி இதன் மூலம் உறுதிப்படுகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டு வாக்கில் சமணம் ஓரளவு வலுவாக இருந்ததன் காரணமாகவே அதனை அழிப்பதில் பக்தி இயக்கம் தீவிரம் காட்டியது.
பக்தி இயக்கம் தமிழ்ச் சமூகம் முழுவதும் பரவி, அவ்வியக்கம் தமிழகத்தில் வலுவாகக் காலூன்றிய காலமான கி.பி. 8ஆம், 9ஆம் நூற்றாண்டில்தான் இந்நிலை மாறி வைதீகச் சிந்தனையின் ஆதிக்கம் தமிழகம் முழுவதும் பரவி நிலைத்து விடுகிறது. ஆனால் 7ஆம் நூற்றாண்டிலேயே பௌத்த, சமண நிறுவனங்கள் அழிவை நோக்கிச் செல்லத்தொடங்கிவிட்டன என்பதைப் பௌத்தப் பள்ளிகளும் அதன் கன்னிகா மடங்களும் புதர்கள் மண்டி இடிபாடுகளுடன் இருந்தன என்பது அதனைக் காட்டுகிறது. பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் தமிழ்ச் சமூகத்தில் வலிமை பெற்றிருந்தவரை தமிழ்ச் சமூகம் நல்ல வளர்ச்சி நிலையில் இருந்தது. சமண பௌத்த மதக் கருத்துகளின் ஆதிக்கத்திற்கு முன்பே, சங்ககாலத் தமிழ்ச் சமூகம் பரவலான கல்வியறிவை, பரவலான எழுத்தறிவைக் கொண்டிருந்தது. தொழில் நுட்ப வளர்ச்சியிலும், உற்பத்தித் திறனிலும், உலகளாவிய வணிகத்திலும் தொடர்ந்து வளர்ச்சி பெறும் சமூகமாக இருந்து வந்தது.
சங்கம் மருவிய காலத்தில் இவ்வளர்ச்சி மேலும் வளர்ந்து உச்சகட்டத்தைத் தொட்டது. அதே சமயம் சமூக மேல்தளத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்களும், சமூக அடித்தளத்தில் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், உற்பத்தி முரண்பாடுகளும் வளர்ந்து உச்சநிலையை அடைந்தன. மணிமேகலைக் காப்பியம் சமூக மேல்தளத்தில் கடுமையான கருத்து மோதல்கள் நடைபெற்றன என்பதையும், சிலப்பதிகாரக் காப்பியம் சமூக அடித்தளத்தில் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், வணிகர்கள் அரசனுக்கு எதிராக நின்றதையும் தெளிவு படுத்துகின்றது.
பேரரசுக் கொள்கை:
கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் மூவேந்தர்களிடம் இருந்த பேரரசுக் கொள்கையின் தாக்கம் ஆதிக்கக் கண்ணோட்டத்தை வளர்த்து, தமிழகத்தின் வடஎல்லையில் பாதுகாப்பு அரணாகவும், கொங்கு, தொண்டை மண்டலங்களில் சுதந்திரத் தனி அரசுகளாகவும் இருந்து வந்த பல குறுநில மன்னர்களையும் வேளிர்களையும் அழித்து ஒழித்தது. அவர்களின் நகர்மைய அரசுகள் இல்லாது போயின. சுதந்திரத் தனி நகர அரசுகள் அழிக்கப்பட்டதும்; அதன்பின்னர் சங்கம் மருவிய காலத்தில் சமூகத்தளத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்களும்; ஏற்றத்தாழ்வுகளும்; தமிழ்ச்சமூகம் ஒரு தேக்கமடைந்த, புரையோடிய சமூகமாக ஆகிப்போயிருந்ததும், இறுதியாக சர்வதேசக் காரணங்களால் ஏற்பட்ட தமிழக வணிகத்தின் வீழ்ச்சியும்; தமிழகத்தின் வடக்கே இருந்த சாதவ கன்னர்களின் வீழ்ச்சியும்; களப்பிரர் படையெடுப்புக்குக் காரணமாகி, தமிழகத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது எனலாம். இவை அனைத்திற்கும் காரணமான பேரரசுக் கொள்கைக்கு வைதீகச்சிந்தனை பேரளவான ஆதரவை வழங்கியது.
சர்வதேசக் காரணங்களும் தமிழகத்தின் வீழ்ச்சியும்:
தமிழ் அரசுகள் உரோம் பேரரசுடன் மிகப்பெரிய அளவில் வணிகம் செய்து வந்தன. கி.பி. 150 வாக்கில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட முசிரி – அலெக்சாண்ட்ரியா ஒப்பந்தப்படி, ஒரு தமிழ் வணிகன், ஒரு கப்பலில் ஒருதடவை செய்த வணிகத்தின் மதிப்பு இன்றைய அளவில் 100 கோடிக்கும் மேல் வருகிறது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீசருக்குபின் மார்க்கசு அரேலியசின் (காலம் கி.மு. 31 – கி.பி. 180 வரையான) காலகட்டம் உரோம் பேரரசின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இக்கால கட்டத்தில் உரோம் பேரரசு தமிழகத்தோடு மிகப்பெரிய அளவில் வணிகம் செய்து வந்தது. அதன்பின் உரோம் பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது. கி.பி. 235 முதல் கி.பி. 284 வரை உரோம் பேரரசு மிகப்பெரிய அரசியல் வீழ்ச்சிக்கு உள்ளானது. அக்காலகட்டத்தில் உரோமுடனான தமிழக வணிகம் நின்று போனது. பலவிதங்களிலும் முன்பே புரையோடிப் போயிருந்த தமிழகம், கிபி. 235க்குப்பின் உரோம் மூலம் கிடைத்து வந்த வணிக வருவாயை இழந்ததால், மிகப்பெரிய அளவிலான பொருளாதார வீழ்ச்சியை அடைந்தது. இக்காலகட்டத்தில்தான், கி.பி. 250க்குப்பின் களப்பிரர் படையெடுப்பு தமிழகத்தில் நடந்தது. அதன் காரணமாக 1500 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவந்த பழம்பெரும் தமிழக நாகரிகம், மிகப்பெரிய வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் உள்ளானது. அதில் இருந்து தமிழகம் மீளவே இல்லை எனலாம்.
தமிழ்ச்சிந்தனை மரபின் வீழ்ச்சி:
இந்தியத் தத்துவத்தில் பொருள்முதல்வாத மெய்யியல் குறித்துப் பேசும் அனைவரும் இனக்குழு காலத்திய மந்திர தந்திரக் கூறுகள், பூதவாதம் என்கிற உலகாய்தம், கபிலரின் எண்ணியம், கணாதரின் வைசேடிகம், அளவையியல் என்கிற நியாயம், ஆசிவகம், யோகம் ஆகியவைகளைப்பற்றிப் பேசியுள்ளனர். இதில் யோகம் என்பது ஒரு தத்துவம் அல்ல; அது ஒரு பயிற்சி முறைகளின் தொகுப்பு. யோக சூத்திரங்களை எழுதிய பதஞ்சலி ஒரு தொகுப்பாசிரியர்தான். சிந்துவெளி காலத்திலிருந்து இப்பயிற்சிகள் வழக்கிலிருந்தன 3. மந்திர தந்திரக் கூறுகள் என்பது ‘போலச்செய்தல்’ மூலம் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியும், தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்கிற இனக்குழு கால நம்பிக்கையாகும். அவற்றின் தத்துவக்கூறுகள் பூதவாதம் என்கிற உலகாயதத்தில் இணைக்கப்பட்டுவிட்டன. ஆகவே பூதவாதம் என்கிற உலகாயதம், கபிலரின் எண்ணியம், கணாதரின் வைசேடிகம், நியாயம், ஆசிவகம் ஆகியவற்றில் நியாயவியல் தவிர பிற அனைத்துப் பொருள்முதல்வாத மெய்யியல் தத்துவங்களும் மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபில் தோன்றியவையே என்கிறார் க. நெடுஞ்செழியன். நியாயவியலின் அளவையியலும் இன்னபிறவும் உலகாயதம், எண்ணியம், சிறப்பியம் ஆகியவற்றில் அடக்கம். ஆகவே க. நெடுஞ்செழியன் அவர்களின் கருத்துப்படி இந்தியாவின் பொருள்முதல்வாத மெய்யியல் வரலாறு என்பது, தமிழகத்தில் தோன்றி சிறப்புடன் இயங்கி வந்த பூதவாதம் என்கிற உலகாயதம், எண்ணியம், சிறப்பியம், ஆசிவகம் ஆகிய நான்கு பொருள்முதல்வாத மெய்யியல் தத்துவங்களின் வரலாறு தான் எனக் கூறலாம். நமது கருத்துப்படி நியாயவியலின் கோதமனாரும் தமிழரே. ஆகவே க. நெடுஞ்செழியன் அவர்களின் கூற்று மறுக்கப்பட முடியாததாகும்.
கி.மு. 3ஆம் நூற்றாண்டுவரை இந்திய அளவில் புகழ் பெற்றவையாக இருந்த இத்தத்துவங்கள் கிறித்துவ காலத்துக்குப்பின் தமிழக அளவில் மட்டும் ஓரளவு செல்வாக்கு மிக்கவனாக இருந்து வந்தன. கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழகத்திலும் செல்வாக்கு இழந்து, இல்லாது போயின. கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியும், பல்லவர் ஆட்சியும், வடஇந்தியாவில் குப்தர் ஆட்சியும் நடந்தன. இவைகளால் இந்தியா முழுவதும் வைதீகமயமாதலும், சமற்கிருதமயமாதலும் கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டுவரப்பட்டு, கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குள், அறிவியல் அடித்தளத்தைக்கொண்ட பொருள்முதல்வாத மெய்யியல் தத்துவங்கள் இல்லாது போயின. தமிழகத்தில் ஏற்பட்ட களப்பிரர் ஆட்சியின் காரணமாகவும், பொளத்த, சமண, வைதீக மத ஆதிக்கங்களின் காரணமாகவும், சமற்கிருதமயமாக்கலின் காரணமாகவும் மூலச் சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு தனக்கான அடித்தளமாக இருந்த அறிவியல் அடிப்படையைக்கொண்ட பொருள்முதல்வாத மெய்யியலை முழுமையாக இழந்தது எனலாம். கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப்பின் இந்தியாவிலிருந்த அனைத்தும் சமற்கிருத மயமாக்கப்பட்டு, அனைத்துத் தத்துவங்களையும் வைதீக மரபின் கீழ் கொண்டுவரும் பணி வெற்றிகரமாக நிறைவேறியது. தத்துவமே இல்லாத வேதம், தத்துவங்களிலேயே தலைமையானதாகவும் கேள்விக்கு அப்பாற்பட்டதாகவும் ஆக்கப்பட்டது.
சமண, பௌத்த மதக் கருத்துகளின் ஆதிக்கத்திற்குப் பின்னரே தமிழ்ச் சமூகம் பரவலான எழுத்தறிவையும், கல்வியறிவையும் பெற்றிருந்தது எனக் கருதப்படுகிறது. அது உண்மையல்ல. சமண, பௌத்த மதக் கருத்துகள் மிக அதிக ஆதிக்கம் பெற்ற வட இந்தியாவிலும், தமிழகம் தவிர்த்த பிற தென்னிந்தியப் பகுதியிலும் பரவலான கல்வியறிவோ, எழுத்தறிவோ இருக்கவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்வது நல்லது. மேலும், சமண, பௌத்த மதக் கருத்துகள் சங்கம் மருவிய காலத்திற்குப் பின்னர் களப்பிரர்கள் காலத்தில் தான் தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றன. ஆனால் அதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே தமிழகம் பரவலான எழுத்தறிவையும் கல்வியறிவையும் பெற்றிருந்தது.
தமிழ்ச் சமூகத்தில் மிக நீண்டகாலமாக இருந்து வந்த பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகளும், தமிழகத்தின் நகர்மைய அரசுகளில் இருந்த, சுதந்திரமான தனி அரசுகளும் தான் இந்தப் பரவலான கல்வி அறிவுக்கும், எழுத்தறிவுக்கும் காரணமாகும். தமிழகத்தின் தொழிநுட்பம், உற்பத்தித் திறன் வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, உலகளாவிய வணிக வளர்ச்சி போன்றவைக்கும் இவையே காரணம் ஆகும். இதனை பண்டைய கிரேக்க நகர அரசுகளின் வளர்ச்சியோடும், ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலியில் உள்ள வெனிசு, நேபிள்சு போன்ற சுதந்திரத் தனி நகரங்களில் ஏற்பட்ட வளர்ச்சியோடும் ஒப்பிடலாம்.
எனவே சங்க இலக்கியங்களைக் கொண்டு மட்டும் சங்ககால வரலாற்றைக் கண்டறிவது என்பது குருடர்கள் யானையைப் பற்றி அறிந்துகொண்டது போலாகிவிடும். சங்ககாலத்தில் வைதீக மதக் கருத்துகள், சமண பௌத்த மதக்கருத்துகள் போன்ற பல கருத்துமுதல்வாத மெய்யியல்கள் இருந்த போதிலும், தமிழ்ச் சமூகத்தின் அடித்தளமாகப் பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துகளே அன்று இருந்தன. இன்றைய நவீன சமூகத்தில் பல கருத்துமுதல்வாத மெய்யியல் கருத்துகள் இருந்த போதிலும், அதன் அடித்தளமாக இருப்பது பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகளே. அதைப் போன்றுதான் சங்ககாலத்திலும் இருந்தது. அதனைச் சங்க இலக்கியம் கொண்டு மட்டும் கண்டறிவது இயலாது. அக்காலத் தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல், மொழியியல் போன்ற பல்வேறு துறைகளின் ஆய்வுகள் மூலமே அதனைக் கண்டறிய இயலும்.
சங்ககாலக் கல்வெட்டியல் சங்ககாலத்தில் சமண பௌத்த மதக் கருத்துகள் ஆதிக்கம் பெற்றிருந்தன என்ற தோற்றத்தைத் தருகிறது. சங்க இலக்கியங்களோ வைதீக மதக் கருத்துகள் ஆதிக்கம் பெற்றிருந்தன என்ற தோற்றத்தைத் தருகிறது. இவை இரண்டுமே உண்மையல்ல! தமிழகத்தில் சங்ககாலத்தில் அறிவியலை அடித்தளமாகக்கொண்ட பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகளே ஆதிக்கம் பெற்ற கருத்தியலாக இருந்து வந்தது. இவைகளை அகழாய்வுகள் கொண்டு ஓரளவு உறுதிப்படுத்த முடியும். தமிழகத்தில் சங்ககால ஊர்கள் பல தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்றவற்றில் இதுவரை ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான ஆய்வே நடந்துள்ளது; மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் நடந்த ஆய்வு பழந்தமிழகத்தில் நகர நாகரிகம் இருந்தது என்பதையும் மதச்சார்பற்ற சிந்தனைகளே பழந்தமிழகத்தில் இருந்தன என்பதையும் வெளிக்கொண்டு வந்துள்ளன. முழுமையான அதிக அளவிலான அகழாய்வுகள் மூலம் மட்டும்தான் தமிழகத்தின் முழுமையான வரலாற்றை வெளிக்கொண்டு வர இயலும். தமிழகத்தில் கிடைத்த பல ஆயிரம் கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும் இன்னும் படியெடுத்துப் படிக்கப் படவில்லை. ஆகவே அதிக அளவிலான அகழாய்வுகள் செய்யப்படவும் தமிழகக் கல்வெட்டுகளையும், ஓலைச் சுவடிகளையும் படியெடுத்துப் படிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மாநில, மத்திய அரசுகள் எடுக்கவேண்டும். இவற்றைச் செய்வதன் மூலம் மட்டுமே பழந்தமிழக வரலாறு குறித்த புரிதல் முழுமையடைய முடியும்.
மெய்யியலில் தமிழக அறிஞர்கள் – முனைவர் க. நெடுஞ்செழியன்:
தொல்கபிலர், பக்குடுக்கை நன்கணியார், கணாதர், நரிவெரூத்தலையார், பூரணகாயபர் போன்ற இந்திய அளவில் புகழ்பெற்ற மெய்யியல் அறிஞர்கள் தமிழர்கள்தான் என முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள் தக்க சான்றுகளுடன் உறுதிப்படுத்தியுள்ளார் என்பதை முன்பே குறிப்பிட்டோம். இம்மெய்யியல் அறிஞர்கள் குறித்து அவர் தரும் தகவல்களைக் காண்போம்.
தொல்கபிலர்:
“பார்ப்பனர்கள், பார்ப்பனத்தன்மை ஆகியவற்றின் செல்வாக்கும் பாதிப்பும் மிகக் குறைவாக இருந்த இந்தியப் பிரதேசங்களில்தான் முதல்முதலாக நம் வாழ்வு என்பது நமக்குப் புரியாத புதிராய் இருப்பதை பகுத்தறிவு கொண்டு விடை தேடும் முயற்சி செய்யப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டால்தான் எண்ணியத்தின் மூலத்தொடக்கத்தை விளங்கிக்கொள்ள முடியும். எண்ணியம் சாராம்சத்தில் நாத்திகமானது மட்டுமில்லை, வேதத்திற்கும் விரோதமானது. அதன் உள்ளடக்கம் வேதச் சார்புடையதன்று. பார்ப்பனர்களின் சம்பிரதாயத்திற்கும், மரபுக்கும், ஆட்படாமல் இருப்பது” எண்ணியத்தின் தோற்றம் குறித்து கார்பே அவர்கள் கூறும் கருத்தின் சுருக்கம் இதுவாகும். சாங்கியம் எனப்படும் எண்ணியத்தின் தோற்றுநரான தொல்கபிலரின் பாடல் சங்க இலக்கியத்தில் உள்ளது எனவும், அவரைத் தொல்கபிலர் என சங்க இலக்கியம் பாராட்டுகிறது எனவும், எண்ணியக் கோட்பாட்டின் மூலச்சுவடுகள் அனைத்தும் தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது எனவும் இவைகளின் காரணமாக, கார்பே அவர்கள் குறிப்பிடும் அந்த இந்தியப் பிரதேசம் தமிழ்நாடுதான் எனவும் கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன் 4. தொல்கபிலர் பாடியதாக 6 சங்கப் பாடல்கள் உள்ளன. அவை, அ: 282; குறு: 14; நற்: 114, 276, 328, 399 ஆகியன. மேலே தரப்பட்ட சான்றுகளின் மூலம் எண்ணியத்தின் மூலவரான தொல்கபிலர் தமிழர்தான் என்கிறார் பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன்.
பக்குடுக்கை நன்கணியார்:
புறம் 194ஆம் பாடலைப்பாடிய பக்குடுக்கை நன்கணியார், இந்திய அளவில், ‘சாங்கியம்’ என்கிற எண்ணியக் கோட்பாட்டின் தலைவராக கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இருந்தார். இவரது சங்கமே இந்திய அளவில் அன்று ஒரு பெரிய சங்கமாக இருந்தது. இந்த எண்ணியம் என்பதையே, அணுவியக் கோட்பாடாக இவர் வளர்த்தெடுத்தார். பாலி மொழியில் உள்ள பௌத்த இலக்கியமான ‘சாமண்ண பால சூக்தம்’ இவர் வரலாற்றை அறிய உதவுகிறது. பௌத்த மரபில், பக்குடக் கச்சாயனா, பக்குடுக்கக் காச்சாயனா, கணியாரா என்றெல்லாம் இவர் அழைக்கப்படுகிறார். இந்திய மொழிகளில் எண்ணியத்தின் கடவுள் மறுப்பிற்கும், ஆசிவகத்தின் கடவுள் மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவது இவரின் புறம் 194ஆம் பாடலே என்பது வியப்பூட்டும் விடயமாகும். புத்தரின் சமகாலத்தில் வாழ்ந்தவர்களில் புத்தரைப் போலவே மக்களால் அதிகளவு மதிக்கப்பட்ட ஆறு அமணர்களில் இவரும் ஒருவராவார். இவை முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள் தரும் தகவல்களாகும் 5.
கணாதர்:
கணி+ஆதன் = கணியாதன் என்கிற தமிழ்ப் பெயரே கணாதர் என வடமொழி வடிவம் கொண்டதாக ஆகியது. கணி ஆதன் என்கிற இவரால் ‘சிறப்பியம்’ என்கிற வைசேடிய கோட்பாடு ஆரம்பிக்கப்பட்டது 6. இந்த கணாதர், வைசேடிக சூத்திரத்தின் ஆசிரியர். அணுவியலின் தனித்த மெய்யியல் வடிவமே கணாதரின் சிறப்பியம். பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சியைத் தருக்கவியல் அடிப்படையில் நிலைநாட்டுவதுதான் அணுவியலின் தனித்தன்மை. இது குறித்துத் தமிழில் அமைந்த ஒரு அரிய, சிறுநூல்தான் “அகத்தியத் தருக்கச் சூத்திரம்” என்கிற 20 நூற்பாக்களைக் கொண்ட நூல் ஆகும். இதன் காலத்தை அறிய இயவில்லை. 1908இல் கோ. வடிவேலு செட்டியார் அவர்களால் தமிழில் உரை கண்ட தருக்க பரிபாடை என்கிற நூலின் தொடக்கத்தில் இந்த 20 நூற்பாக்களும் இடம் பெற்றுள்ளன. இந்நூல் ஒரு அரிய செல்வம். இந்நூலை அணுவியம் எனக் கருதி இந்நூலுக்கு அறிஞர் குணா அவர்கள் உரைவிளக்கம் தந்துள்ளார். இவை முனைவர் க. நெடுஞ்செழியன் தரும் தகவல்கள் 7.
பூரணகாயபர்:
ஆசிவகத் தோற்றுநர்களில் ஒருவராகிய பூரணகாயபர் ஒரு தமிழர்தான் என பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் கூறுகிறார்.. “ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியல்” எனும் தனது நூலில் 30 பக்கங்களில் தமிழ் இலக்கியங்கள், தமிழ் கல்வெட்டுகள் பிற இந்தியத் தமிழகத் தத்துவநூல்களின் துணைகொண்டு ஆய்வு செய்து பூரணகாயபர் தமிழர்தான் என்பதை அவர் உறுதி செய்துள்ளார். அதற்கான காரணங்களாக பின்வரும் விளக்கங்களை அவர் அதில் கூறியுள்ளார். ஆசிவகத்தில் நிறக்கொள்கையை அறிமுகப்படுத்திய பூரண காயபர் தமிழகக் கல்வெட்டுகளில் காயபன், செங்காயபன், மூத்த அமணன் செங்காயபன், வெண்காயபன் எனச் சுட்டப்பட்டுள்ளார் என்கிறார் அவர். புத்தரின் தலைமாணாக்கர் ஆனந்தர், ஆசிவக நெறியில் கழிவெண்பிறப்பு நிலையை அடைந்த மூவருள் ஒருவர் பூரணகாயபர் என்கிறார். அவரது கூற்றை தமிழ் இலக்கியமான நற்றிணையில் (பாடல் எண்கள்; 250, 369) வரும் மதுரை ஓலைக்கடையத்தனார் நல்வெள்ளையார் எனும் பூரணகாயபரின் பெயர் உறுதிப்படுத்துகிறது. தமிழ் இலக்கியங்களில் வரும் நல்வெள்ளையார் என்பது கழிவெண்பிறப்பு நிலையை அடைந்தவர்களைக் குறிக்கிறது. மதுரை ஓலைக்கடை என்பது ஆசிவகச் சமயத்தின் தலைமை இடமாக இருக்கலாம். மாங்குடி மருதனார் எழுதிய “மதுரைக்காஞ்சி” மதுரையில் ஆசிவகப்பள்ளிகள் இருந்ததை உறுதி செய்கிறது. தமிழ் மரபுக்கு ஏற்ப பூரணரும் தாழியில் தவம் இருந்தநிலையில் உயிர்விட்டுள்ளார். இவை பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் தரும் தகவல்கள். 8
கோதமனார்:
அளவையியல் எனப்படும் நியாயவாதத்தை தோற்றுவித்தவரின் பெயரும், புறம் 366ஆம் பாடலைப் பாடியவரின் பெயரும் கோதமனார் ஆகும். புறம் 366ஆம் பாடல் அறவோனாக இருந்த ஒரு அரசனின் மகனுக்கு அறிவுரை கூறப் பாடியதாகத் தெரிகிறது. அறவோன் மகன் என்பதால் பிற்காலத்தவர் பாடப்பட்டவரைத் தருமபுத்திரன் என எழுதியுள்ளனர். அவருடைய காலத்தை அறிய இயலவில்லை. புறம் 366ஆம் பாடலைப் பாடிய கோதமனார் தான் நியாயவாதத்தை தோற்றுவித்தவர் எனலாம். பாடலின் கருத்தும், பெயரின் பொருத்தமும் இருவரும் ஒருவரே என்பதைக் காட்டுகின்றன. மேலும் இப்பாடல் நிலையாமை குறித்துப் பேசுவதும், இதன் திணை காஞ்சியாகவும், இதன் துறை பெருங்காஞ்சியாகவும் இருப்பதும் இதனைப் பாடியவர் ஒரு தத்துவ அறிஞர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
கோதமனார் எழுதியதுதான் நியாய சூத்திரம். கோதமனாரை கவுதமர் எனவும் சட்டோபாத்தியாயா குறிப்பிடுகிறார். இந்த நியாயவியல், சிறப்பியம் என்கிற வைசேடிகத்தோடு இணைக்கப்பட்டு நியாயவைசேடிகம் என்றே அழைக்கப்பட்டது. நியாயவைசேடிகத்தின் மூலவர்களான கணாதர், கோதமனார் ஆகியவர்களின் வரலாறு தெரியாது எனவும் இவ்விருவருடைய தத்துவங்களின் தனிச்சிறப்பான அம்சங்கள் இந்திய தத்துவ மரபுக்குப் புதியவை எனவும் சட்டோபாத்தியாய கூறுகிறார். 9 இந்தியத் தத்துவ மரபுக்குப் புதியது எனும்பொழுது அது வட இந்திய மரபில் தோன்றவில்லை என்றாகிறது. நியாயவைசேடிகத்தில் உள்ள சிறப்பியம் என்கிற வைசேடிகம் தமிழரான கணாதரின் படைப்பாகும். ஆகவே வட இந்திய மரபுக்குப் புதியது எனவும் கோதமனாரின் வரலாறு தெரியாது எனவும் சட்டோபாத்தியாய அவர்கள் குறிப்பிடுவதால் சிறப்பியம் போன்று நியாயசூத்திரமும் தமிழ் மரபைச் சார்ந்ததுதான் எனக் கருத வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த அடிப்படையிலும் கோதமனார் தமிழர்தான் எனலாம். கௌதமனார் தனது நியாய சூத்திரத்தில் எண்ணியக்கோட்பாட்டிற்கு எடுத்துக்காட்டாகப் பக்குடுக்கை நன்கணியாரின் புறம் 194ஆம் பாடலை மேற்கோள் காட்டுவது இவர் ஒரு தமிழர்தான் என்கிற கருத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. 10
அளவையியலும் தமிழ் மரபும் – க.நெடுஞ்செழியன்:
தொல்காப்பியம், திருக்குறள் இரண்டும் எண்ணிய, யோக, உலகாய்த மெய்யியலையும், அவற்றிற்குரிய அளவை இயலையும் அடியொற்றி அமைந்தவை எனவும் திருக்குறளில் அதன் அளவை இயலே அடிப்படையாய் அமைந்துள்ளது எனவும் க. நெடுஞ்செழியன் கூறுகிறார். மேலும் எண்ணியம், யோகம், உலகாயதம் ஆகிய மெய்யியல்களுக்குரிய அளவை இயலை அடியொற்றி அமைந்த இலக்கியங்கள் இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே அமைந்துள்ளன என்பதும், அவ்விலக்கியங்களும் அகத்திணை இலக்கியங்களே என்பதும் தெளிவு எனவும், தொல்காப்பியர் கூறும் அகத்திணை மரபுகள் அனைத்தும் அம்மெய்யியல்களின் அளவை இயலை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இலக்கியங்கள் என்பது உறுதி எனவும், இதனைத் தமிழர் அளவை இயலும் அகத்திணை மரபுகளும் எனும் தனி ஆய்வாகவே காணலாம் எனவும் கூறுகிறார் க.நெடுஞ்செழியன். 11 இவற்றின் காரணமாகவும் கோதமனாரின் அளவையியல் எனப்படும் நியாயவியல் தமிழ் மரபைச்சேர்ந்ததுதான் எனலாம். தமிழர் அளவையியல் மரபு நன்கு வளர்ச்சியடைந்திருந்ததின் காரணமாகவே இடைக்காலத்தில் தின்னாகர், தருமகீர்த்தி போன்ற இந்திய அளவில் புகழ்பெற்ற அளவையியல் அறிஞர்கள் தமிழகத்தில் தோன்றினர். கோதமனார், கோதமர், கௌதமனார், கவுதமர் ஆகிய பெயர்கள் அனைத்தும் நியாய சூத்திரத்தின் ஆசிரியரையே குறிக்கின்றன.
நரிவெரூஉத் தலையார்:
அசிதம் = நரி, கேசம் = தலைமுடி என மொழிபெயர்த்து நருவெரூஉத் தலையார் என்கிற தமிழ்ப் பெயரை பாலி முதலான வடமொழிகளில் அசித கேச கம்பாளர் என்பர். இவரை மணிமேகலை ‘நரிமகன் அல்லனோ கேச கம்பாளன்’ எனச் சுட்டும். ஆதலால் அசிதகேச கம்பாளர் என்பவர் தான் நரிவெரூஉத் தலையார் ஆவார். அதனை நரிவெரூஉத் தலையார் பாடிய சங்கப்பாடல்களைக் கொண்டும் பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள். உறுதி செய்கிறார். 12 இந்தியாவில் சாங்கியம் என்கிற எண்ணியத்தைத் தோற்றுவித்தவர் தொல்கபிலர்; வைசேடிக சூத்திரம் என்கிற நூலை எழுதி சிறப்பியத்தைத் தோற்றுவித்தவர் கணாதர்; சாங்கியம் என்கிற எண்ணியக் கோட்பாட்டின் தலைவராக இருந்து அணுக்கோட்பாட்டினை வளர்த்தெடுத்தவர் பக்குடுக்கை நன்கணியார்; உத்தேசவாதம் என்கிற சிதைவுக் கோட்பாட்டை உருவாக்கியவர் அசித கேச கம்பாளர் எனப்படும் நரிவெரூத்தலையார்; தற்செயல் கோட்பாட்டை உருவாக்கியவர் பூரண காயபர்; அளவையியல் எனப்படும் நியாயவாதத்தைத் தோற்றுவித்தவர் கோதமனார். இவர்கள் அனைவரும் சங்ககாலத் தமிழகத்து மெய்யியல் அறிஞர்கள் ஆவர்.
இடைக்காலம் – தின்னாகர்:
சங்ககாலத்தில் மட்டுமில்லாது அதன் தொடர்ச்சியாக இடைக்காலத்திலும் தமிழ் அறிஞர்கள் மெய்யியலில் இந்திய அளவில் முன்னோடியாக இருந்தனர் என்பதை நா.வானமாமலை அவர்கள், தனது தமிழர் பண்பாடும் தத்துவமும் என்ற நூலில் தெரிவித்துள்ளார். தமிழரான தின்னாகரே பௌத்த தருக்கவியலின் முதன்மையான ஆசிரியர். இவரைப்பற்றி பாரத்சிங் உபாத்யாயா, “பௌத்த தருக்கவியல் வரலாற்றில் முதன்மையான பெயர் தின்னாகர். இவர்தான் பௌத்த தருக்கவியலின் தந்தை…. இந்திய நாட்டின் தலைசிறந்த அளவைநூற் புலவர் இவர் என்பதில் ஐயமில்லை. இவரது பெயரைக் குறிப்பிடாத அளவை நூல் இவரது காலத்திற்கு பின் இல்லை எனலாம்” என்கிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட தருக்க நூல்களை எழுதியதாக திபெத்தியச் சான்றுகள் கூறுகின்றன. புகழ்பெற்ற சில நூல்கள் இன்றும் உள்ளன. தின்னாகருக்கு முன் அளவை நூல்கள் எதுவும் இல்லை. இவரது காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு. 13
தர்மகீர்த்தி:
தின்னாகரைப் பின்பற்றி அளவை இயலை வளர்த்தவர் தர்மகீர்த்தி. இவரும் தமிழரே. இவர் நாளந்தா சென்று அங்கு பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த தமிழரான தருமபாலரிடம் பௌத்த அறிவியல்வாத நூல்களைக் கற்றார். தின்னாகரின் மாணவரான ஈசுவர சேனரிடம் தருக்கவியலைக் கற்றார். தர்மகீர்த்தி அவர்களை, ‘இந்தியாவின் கான்ட்’ என அழைக்கிறார் செர்பாட்சுகி என்கிற இரசிய அறிஞர். இவர் காலம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு. இந்த இருவர் போக, தருமபாலர் நாளந்தா பல்கலைகழகத்தின் தலைவராக இருந்து பௌத்த மத நூல்களை மாணவர்களுக்கு போதித்து வந்தவர். திக்நாகர், தருமபாலர், போதி தருமர் ஆகியோர் காஞ்சியில் வாழ்ந்து பின் நாளந்தாவில் அறம் போதித்தவர்கள் என்பதைக் குறிப்பிடுகிறார் தெ.பொ.மீ. தின்னாகர், தருமபாலர் போன்றோர் தமிழராக இருந்தும் அனைத்தையும் சமற்கிருதத்தில் தான் எழுதினர். கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சமற்கிருதம் இந்தியாவின் பொதுமொழியாகவும் அறிவியல் மொழியாகவும் ஆகியிருந்தது. சங்ககாலத்தில் மட்டுமில்லாது அதன் தொடர்ச்சியாக இடைக்காலத்திலும் தமிழ் அறிஞர்கள் மெய்யியலில் இந்திய அளவில் முன்னோடியாக இருந்தனர் என்பதை மேற்கண்ட தகவல்கள் உறுதி செய்கின்றன.
சங்ககாலத் தமிழகத்து மெய்யியல் அறிஞர்களில் தொல்கபிலரும், கணாதரும் மிகவும் புகழ்பெற்றவர்கள். தொல்கபிலரின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டாகும். பக்குடுக்கை நன்கணியார், பூரணகாயபர் ஆகியவர்களின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டாகும். அவர்களுக்குப்பின் வந்த கணாதர், கோதமனார் ஆகியவர்களின் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு எனலாம். நரிவெரூஉத் தலையாரின் காலம் கி.மு. 4ஆம் நூற்றாண்டாகும். இடைக்கால மெய்யியல் அறிஞர்களான, தின்னாகர், தருமபாலர், திக்நாகர், தர்மகீர்த்தி, போதி தருமர் ஆகியவர்களின் காலம் கி.பி. 5ஆம், 6ஆம் நூற்றாண்டாகும்.
கல்வியின் வளர்ச்சியும், பொருள்முதல்வாத மெய்யியலின் வளர்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்ததாகும். சங்ககாலக் கவிஞர்கள், அரசன் முதல் ஆண்டி வரை அன்றைய தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தரப்பிலும் இருந்துள்ளனர் என்ற செய்தி அன்றைய தமிழ் சமூகத்தில், பரந்துபட்ட அளவில், அனைத்து தரப்பு மக்களும் கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கிறது. தற்காலத் தொல்லியல் சான்றுகளும் அதை உறுதி செய்கின்றன. இந்து நாளிதழ், 24.6.2010 இல் தொல்லியல் கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், சங்க காலத் தமிழகத்தில், மிகப் பரந்த அளவில், சாதாரண மக்கள் கூட கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கிறார். ஒதுக்குப் புற கிராமப் பகுதியில் வாழும் கள் விற்பவர்கள் கூடத் தனது பானையில் தனது பெயரை எழுதி வைக்கும் அளவு தமிழகம் பரந்த அளவிலான கல்வி அறிவை சங்க காலத்தில் கொண்டிருந்தது என்பதை எடுத்துக் காட்டுகளோடு அவர் விளக்குகிறார்.
தென்னிந்தியத் தொல்பொருள் ஆய்வுக்கழகம், 22.11.2005 இந்து நாளிதழில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது சம்பந்தமாக வெளியிட்ட ஒரு செய்தியில், இந்தியாவில் மொத்தம் சுமார் 1,00,000 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன என்றும், அதில் தமிழகத்தில் மட்டும் 60,000 கல்வெட்டுகள் உள்ளன என்றும், அந்த 60,000ல், 5% மட்டுமே பிறமொழிக் கல்வெட்டுகள் என்றும், மீதி உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் தமிழ் கல்வெட்டுகளே என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையும், இந்தியாவில், ஒப்பீட்டளவில் பண்டையத் தமிழகம் பரந்த அளவில் கல்வி அறிவு பெற்றிருந்தது என்பதை வலியுறுத்துகிறது. எனினும் பண்டையத் தமிழ் சமூகத்தில் கல்வி முறை எப்படி இருந்தது என்பதை அறிய இயலவில்லை.
“தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்துள்ள பானை வரிகளும் பொறிப்புகளும் எழுத்தறிவு மிகப்பழங்காலத்திலேயே தமிழகம் முழுவதும் பரவிவிட்டதைத் தெரிவிக்கின்றன. தொகைநூல் புலவர் பட்டியலில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகப் பிரிவினர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதில் இருந்தும், தமிழ்நாட்டில் பரவியிருந்த எழுத்தறிவினை நன்கு அறியலாம்” என்கிறார் பேராசிரியர் அ.பாண்டுரங்கன். 14
பண்டைய வட இந்தியாவில் அல்லது பிற இந்தியப் பகுதிகளில் கல்வெட்டுகளில் அதுவும் அரசால் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் மட்டுமே எழுத்துப் பொறிப்புகளைக் காண முடிகிறது. ஆனால் தமிழகத்தில் சாதாரண மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில், ஈமச்சின்னங்களில், மதிப்புமிக்க, மதிப்பற்ற தொல்பொருட்களில், நாணயங்களில், மோதிரங்களில் என எண்ணற்ற சாதனங்களில் எழுத்துப் பொறிப்புக்களைக் காண முடிகிறது. அதுபோன்றே பல நிலைகளில் உள்ள குடிமக்கள் சமயத் துறவிகளுக்கு வழங்கிய பாறைகளிலும் எழுத்துப் பொறிப்புகளைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தைத் தவிர பிற இடங்களில் இதுபோன்ற நிலை இல்லை. இத்தரவுகள் மிக மிகச் சாதாரண மனிதர்கள் முதல் உயர்நிலையில் உள்ளவர்கள் வரை எழுதப்படிக்கத் தெரிந்திருந்தனர் என்பதைக் காட்டுகிறது.
அது போன்றே மிகமிகச் சாதாரண மக்களும் சங்க இலக்கியத்தின் படைப்பாளிகளாக இருந்துள்ளார்கள் என்பது சாதாரண மக்கள் எழுதப்படிக்க மட்டுமல்ல சங்க இலக்கியம் போன்ற உயர்நிலை இலக்கியங்களைப் படைக்கும் அளவு கல்வியறிவு கொண்டிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. ஆனால் இதற்கான கல்வி முறை எப்படி இருந்தது, அது எவ்வாறு அனைத்து மக்களுக்கும் கிடைத்தது, அதுவும் உயர்தரமான சங்க இலக்கியங்களைப் படைக்குமளவான கல்வியறிவை, புலமையை அவர்கள் எப்படிப் பெற்றார்கள் என்பது ஒரு பெரும் கேள்வியாக உள்ளது. வட இந்தியாவில் இருந்தது போன்ற குருகுலக் கல்வி சங்ககாலத் தமிழகத்தில் இருக்கவில்லை. ஆனால் அக்கல்விமுறை சிறந்ததாகவும், வேறுபட்டதாகவும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதமாகவும் இருந்துள்ளது.
“அன்றைய கல்வி, கற்பவனைச் சான்றோன் ஆக்கியது; அவனை உலக வாழ்வுக்குத் தகுதிப்படுத்தியது; கற்றோர் அவையிலும், ஊர்ப்பொது மன்றங்களிலும் முந்தியிருக்கச் செய்தது; அது வாழும் உலகை அதன் இன்பங்களை உறுதிப்படுத்துவதாக இருந்தது; மனித ஆற்றலில் விளங்கும் தன்னிறைவைக் கொண்டு வந்தது; அதில் குழந்தைகளின் மீதான அன்பும், இல்லறத்தின் மீதான பற்றும் இருந்தது; காதல் செய்ய, மணம் புரிய, இல் வாழ, பொதுநலம் பேணி பிறர்க்கென வாழ இக்கல்வி கற்போரைத் தகுதிப் படுத்தியது; தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பொதுவாழ்வு அதன் உள்ளார்ந்த மதிப்புக் கருதி பரிந்துரைக்கப்பட்டது” என்கிறார் சேவியர் தனிநாயகம் அடிகளார். 15
கல்வி கற்றத் தமிழ்ப் புலவன் புகழ்பெற்ற அரசனுக்குச் சமம் என ஒரு சோழ வேந்தனிடம் நேருக்கு நேர் கூறுகிறார் கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலத் தமிழ் புலவர் கோவூர்கிழார்,
“வடியா நாவின் வல்லாங்குப் பாடிப் பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி …வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீதறிந் தன்றோ இன்றே: …..ஓங்குபுகழ் மண்ணாள் செல்வம் எய்தியநும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே” – புறம்: 47.
“வழுவான சொற்களைச் சொல்லாத நாவால் வள்ளல்களைப் பாடி, பெற்ற பொருளால் தாமும் மகிழ்ந்து, சுற்றத்தினருக்கும் தந்து மகிழ்வர். தங்களது அறிவுக்கும் திறமைக்கும் உரிய பாராட்டுக்காகவும் பரிசுக்காகவும் ஏங்குவார்களே அன்றி, பிறருக்குத் தீங்குவர கனவிலும் நினைக்காதவர்கள். ஆதலால் புகழை உடைய நிலத்தை ஆளுகின்ற, பெருஞ்செல்வத்தை உடைய வேந்தனைப் போன்றவர்கள் கல்வி கற்ற புலவர்கள்” என்கிறார் கோவூர்கிழார். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்கிற பெரும்புகழ் பெற்ற பாண்டிய மன்னனோ தனது அவைக்களத் தலைமைப் புலவரான மாங்குடி மருதனாரால் தான் பாடப்படுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறான். பெரும்புகழ்க் கபிலர் கல்வி கற்ற புலவனை இகழ்ந்ததால் இருங்கோவேள் என்கிற குறுநில மன்னனின் முன்னோர்கள் இரு பெரும் நகரங்களை இழந்தனர் என்கிறார். சங்ககாலத் தமிழ் சமூகத்தில் கல்வி கற்ற புலவர்கள் பேரளவு மதிக்கப்பட்டனர் என்பதற்கு இதுபோன்ற பல சான்றுகளைக் காணலாம். ஆகவே சங்ககாலச் சமூகத்தில் கல்வியும் கற்றவனும் மதிக்கப்பட்டதால் அனைவரும் கல்வி கற்றவர்களாக இருந்தனர். அன்றைய தமிழ் சமூகத்தில் பேரறிவும், பெரும் புலமையும் உடையவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு தரப்பட்டது.
பாணர்கள், பாடினிகள் போன்றவர்கள் வழிவழியான குடும்ப மரபின் காரணமாக இக்கல்வி அறிவைப் பெற்றனர் எனலாம். ஆனால் மற்ற சாதாரணக் குயவர்கள், தச்சர்கள், கருமான்கள் போன்ற பலதரப்பட்ட தொழில் செய்வோரும், பிற தமிழ் சமூகத்தின் சாதாரண மக்களும், இவர்களின் சாதாரணக் குடும்பப் பெண்களும் இந்த புலமைக் கல்வியை எப்படிப் பெற்றனர் என்பது மேலும் நன்கு ஆய்வு செய்யப்படவேண்டிய விடயமாகும். வெண்ணிக் குயத்தியார் போன்ற சாதாரணக் குயவர்குலப் பெண்கள் இந்தப் புலமைக் கல்வியைப் பெற்றது குறித்து விரிவாக ஆய்ந்தறிந்து கண்டறிவதன் மூலமே நமது பண்டைய தமிழகத்தின் கல்விமுறையை அறிந்துகொள்ள இயலும். அவர் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு. அன்று சமணப் பள்ளிகளோ, புத்தப் பள்ளிகளோ இல்லை. மாதவி போன்று, பரத்தமை நிறுவனத்தில் இருந்த பெண்கள் பல்வேறு கலைகளில் சிறந்திருப்பது என்பதும், உயர்கல்வியைப் பெற்றிருப்பது என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதும், புரிந்துகொள்ளக் கூடியதுமாகும். ஆனால் இது போன்ற பரத்தமை நிறுவனங்கள் தமிழகத்தில் ஓர் உயர் வளர்ச்சியை கி.மு. முதல் நூற்றாண்டுக்குப்பின்தான் வந்தடைந்தன எனலாம். ஆனால் அந்தக் காலத்தில் இருந்து உயர்குடிப் பெண்கள் கல்வியறிவும் கலை அறிவும் பெறுவது குறைந்து போனது. மூவேந்தர்கள் பேரரசுகளாக ஆகியதும், வைதீகச் சிந்தனையின் கருத்துகள் பரவியதும் இதற்கான காரணங்கள் எனலாம். அதனால்தான் மாதவி அளவு கண்ணகி கல்வியறிவும் கலைஅறிவும் பெறவில்லை. ஆனால் கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முன்புவரை உயர் குடிப்பெண்களும், வெண்ணிக்குயத்தியார் போன்ற சாதாரணப் பெண்களும் சங்க இலக்கியத்தைப் படைக்கும் அளவு கல்வி அறிவு கொண்டிருந்தனர்.
கிரேக்கத்தில் ஏதென்சில் உள்ள உயர்குடியைச் சேர்ந்த குடும்பப் பெண்களைவிட பரத்தமை நிறுவனங்களில் இருந்த பெண்கள்தான் கல்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்கினர். கிரேக்க உயர்குடிப்பெண்கள், அதன் பொற்காலத்தில் கல்வியறிவுகூட இல்லாதவர்களாகவும் குடும்ப பணிகளை செய்வதற்கான ஒரு தலைமை வேலைக்காரர்களாகவுமே நடத்தப்பட்டனர். கிரேக்கத்தில் மிகச் சிறந்த பெண் என்பவள் ஒரு பொதுமகளாக இருந்தாக வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் ஸ்பார்ட்டாவில் நிலைமை வேறுபட்டதாக இருந்தது. அங்கு பரத்தமை மதிக்கப்படவில்லை. உயர்குடிப் பெண்கள் நல்ல குணமும் மதிப்பும் உடையவர்களாகக் கருதப்பட்டனர் என்கிறார் ஏங்கெல்சு. 16 ஆதலால் ஏதென்சில் சாதாரணக் குடும்பங்களில் இருந்து வந்த பெண்கள் கல்வியறிவோ, கலையறிவோ பெற்றிருக்கவில்லை. பரத்தமைப்பெண்கள்தான் அங்கு கல்வியறிவும், கலையறிவும் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் தமிழகத்தில் சாதாரணக் குடும்பப் பெண்கள் கூட கல்வியறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர். ஆனால் மூவேந்தர் அரசுகள் பேரரசுகள் ஆன காலமான கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்குப் பின் இந்நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது எனலாம்.
கி.மு. 150க்குப் பின் சமண, பொளத்த மடங்கள் தமிழகத்தில் உருவாகியிருந்த போதிலும் கிறித்துவ சகாப்தத்துக்குப்பின்தான் அவை கல்வி கற்பிக்கும் கூடங்களாக உருவாகின. அவையும் கூட பெருநகரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தன. ஆனால் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தின் சிற்றூர்களில் வாழும் சாதாரண மக்கள் கூட எழுதப் படிக்கக் கற்றிருந்தனர். அதில் சிலர் சங்க இலக்கியம் போன்ற உயர்தரமான இலக்கியத்தைப் படைக்கும் அளவு படைப்பாளிகளாக இருந்தனர். தொகை நூல்களில் இருக்கும் கல்வி, கற்றல், புலமை பற்றிய குறிப்புகளும், கல்வி, கற்றல், புலமை பற்றிய கருத்தாக்கங்களும் சமயம் சார்ந்ததாக இருக்கவில்லை என அறிய முடிகிறது. ஆக மிக நெடுங்காலங்களுக்கு முன்னரே தனக்கான ஒரு கல்விமுறையைத் தமிழகம் கொண்டிருந்தது, அதுவும் பரவலாக அனைத்து மக்களும் அக்கல்வியைப் பெறுமளவு அக்கல்விமுறை இருந்தது என்பது தான் மிகப்பெரிய விடயமாகும். தமிழகத்தின் கல்வி முறைக்கும் அதன் மெய்யியல் சிந்தனையின் வளர்ச்சிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியடைந்த, மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு தனக்கே உரித்தான தனித்துவமான கல்விமுறையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளது எனலாம். மிகப் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் நடைபெறும் விரிவான அகழாய்வுகள் தான் இப்புதிர்களுக்குப் பதில் தர இயலும்.
ஆகவே சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் மிகமிகச் சாதாரண மக்கள் முதல் உயர்குல வேளிர் வரை அனைத்துத் தரப்பினரும், பரந்து பட்ட அளவில் கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதோடு, சங்க இலக்கியம் போன்ற உயர்தரமான இலக்கியங்களைப் படைக்கும் அளவு கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதியாகிறது. அன்றைய தமிழ்ச் சமூகம், பல துறைகளிலும் பரவலான அளவில், உயர் வளர்ச்சியை அடைந்திருந்தது என்பதற்கு, இக்கருத்து ஒரு உறுதியான சான்றாக உள்ளது எனலாம்.
பார்வை:
பேராசிரியர் நா. வானமாமலை, ‘தமிழர் பண்பாடும் தத்துவமும்’ அலைகள் வெளியீட்டகம், ஜூலை-2008, பக்: 136,137.
அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரரசர் – விசென்ட் ஆர்தர் சுமித், தமிழில் சிவ. முருகேசன், பதிப்பு-2009, பக்: 39, 40.
தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயதம், தமிழில் தோதாத்ரி, ழிசிஙிபி, ஜூன் 2010 பக்: 210-216.
முனைவர் க. நெடுஞ்செழியன், தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும், சரக சம்கிதையும். பக்: 20-22.
முனைவர் க. நெடுஞ்செழியன், சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும், 2009, பக்: 21.
முனைவர் க. நெடுஞ்செழியன், சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும், ஆசிரியர் உரை, அக்டோபர்-2009.
முனைவர் க. நெடுஞ்செழியன், தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும், சரக சம்கிதையும், 2009, பக்: 54, 55
முனைவர் க. நெடுஞ்செழியன், ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியல் 2002, பக்: 25-55.
தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, இந்திய நாத்திகம், தமிழில் – சாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2013, பக்: 261
முனைவர் க. நெடுஞ்செழியன், தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும், சரக சம்கிதையும், பாலம், 2009, பக்: 25
தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்:44-52.
முனைவர் க. நெடுஞ்செழியன், பதிப்பாசிரியர் முனைவர் சக்குபாய், ஆசிவகமும் ஐயனார் வரலாறும், பாலம், 2014, பக்: 25-30.
நா.வானமாமலை, தமிழர் பண்பாடும், தத்துவமும், அலைகள் வெளியீட்டகம், 2008, பக்: 96, 126-130
பேராசிரியர் அ.பாண்டுரங்கன், ‘தொகை இயல்’ பக்: 194.
சேவியர் தனிநாயகம் அடிகளார், ‘பண்டையத் தமிழ் சமூகத்தில் கல்வி’ டிசம்பர் – 2009, பக்: 64, 65.
ஏங்கெல்சு, “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” பாரதி புத்தகாலயம், பதிப்பு-2008, பக்: 80, 81.
ஆசீவக ஸ்டிக்கர் இயக்கங்களுக்கு எதிராக பின்வரும் கேள்விகளை நான் இரண்டாண்டுகளுக்கு முன்னரே வைத்திருக்கிறேன்.
குறிஞ்சியின் சேயோன் முதல் மருதத்தின் வேந்தன் முதல் ஆசீவக சித்தர்கள் என ஸ்டிக்கர்கள் சொல்வதை எதிர்த்து நான் வைத்த கேள்வி.
கி.மு. ஆறாம் நூற்றாண்டு உருவான ஆசீவகம் எப்டி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சேயோனுக்கு மூலமாகும்? மற்ற திணைக்கடவுள்களுக்கு கேள்வி பொருந்தும்.
ஊழ் கோட்பாட்டுக்கு அறிவியல் விளக்கம் கொடுக்க முனைந்தவர்களை எதிர்த்து கேட்ட கேள்வி.
ஆசீவக ஆகூழ் சைன நல்வினைக்கும் ஆசீவக போகூழ் சைன தீவினைக்கும் இணையாக உள்ளது. போரில் தோற்று வருபவன் ஒருவனை நீ தோற்றது போகூழால் என்று சொன்னால் அவன் மறுபடியும் போர் செய்ய எண்ணுவானா? இல்லை இது ஊழ் என நினைத்து விட்டுவிடுவானா? இந்த ஊழ்க்கோட்பாட்டுக்கும் சைன இருவினை கொள்கைகளுக்கும் வேறுபாடு என்ன?