கடந்த 13-ம் தேதியோடு கீழடியில் அகழப்பட்ட ஐந்தாம் கட்டத்துக்கான ஆய்வுகள் நிறைவடைந்தன. ஐந்து ஆய்வுகளில் சுமார் 250 குழிகள் தோண்டப்பட்டிருப்பதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அவை குழிகள் அல்ல... தமிழரின் தொன்மையை வெளிக்காட்டும் வழிகள்!
கீழடி
அதிகாலையிலேயே பரபரப்பாக இருந்தது கீழடி. அதிகாலை 4 மணி தொடங்கி பயணிகள் வரத்தொடங்கிவிடுகிறார்கள். வரலாற்றுக் குழுவினர், தொல்லியல் ஆர்வலர்கள் தொடங்கி தனித்தனியாக வந்தவர்கள் என அந்த இடம் மக்களால் நிரம்பி வழிந்தது.
கீழடி
9 மணிக்கு மேல் ஆண்களும் பெண்களும் (மூன்று மாதக் குழந்தைகளுடன் வந்தவர்களும்) என வந்துசேரும் ஒவ்வொருவரும் தமிழ்மீது காட்டிய ஆர்வம் வியக்க வைக்கிறது.
உள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்!
``என்னென்ன கிடைத்தது, நம் தமிழர்கள் இங்கே என்ன செய்துகொண்டிருந்தனர், இது தொழிற்கூடமா - வீடா'' என விசாரித்துக்கொண்டிருந்தனர். தொல்லியல் துறையினர் பொறுமையாக விளக்கிக்கொண்டிருந்தனர்.
கீழடி
சிலர் ஆர்வ மிகுதியில், ``நம் தமிழர்கள் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வசித்திருப்பார்கள். ஏன் ஆண்டுகளைக் குறைத்துச் சொல்கிறீர்கள்?'' எனக் கோபமாக விசாரித்தனர். ``அறிவியல்பூர்வமாக அதை உலகுக்குச் சொல்ல வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆர்வமும்!'' எனப் பொறுமையாகப் பதில் சொன்ன தொல்லியல் ஆய்வாளர் ஆச்சர்யப்படுத்தினார்.
கீழடி
வைகை ஆற்றிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன. மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பாக, அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் இரண்டு ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில், அவரை வடகிழக்கு மாநிலத்துக்கு மாற்றல் செய்தது மத்திய அரசு. அதன்பிறகு, ஶ்ரீராமன் என்பவர் ஆய்வுசெய்தார். குறிப்பிடும்படியாக எதுவும் கிடைக்கவில்லை என ஆய்வையே முடிவுக்குக் கொண்டுசெல்ல நினைத்தபோது தமிழகமே கொந்தளித்தது. அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத் தொல்லியல் துறை ஆய்வைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.
இந்த நிலையில்தான் அங்குள்ள தமிழி எழுத்துகள் 2,600 ஆண்டுக்கு முற்பட்டவை என ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தொல்லியல் துறையின் பீட்டா பகுப்பாய்வு மையம் உறுதிசெய்தது. இதுநாள் வரை இந்தியாவில் அசோகர் காலத்து எழுத்துகளே இந்தியாவில் முதலில் எழுதப்பட்ட எழுத்து வடிவம் எனப்பட்டது. `அசோகர் பிராமி' என்று அழைக்கப்பட்ட அந்த எழுத்துகளுக்குச் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் எழுதிவந்தனர் என்பது, இந்திய வரலாற்றையே புரட்டிப் போட்ட சம்பவமாக, பெருமையாகப் பேசப்பட்டது.
இந்த ஐந்தாம் கட்ட ஆய்வை நடத்தியவர் கண்காணிப்பாளர் சிவானந்தம். அவரிடம் பேசினோம்.
கீழடி
``இந்த ஐந்தாம் கட்ட ஆய்வு, முதல் இரண்டு கட்ட ஆய்வுகளின் தொடர்ச்சி. இங்கு கிடைத்த முக்கியமான தடயம், ஆண் மற்றும் பெண் உருவச் சுடுமண் பொம்மைகள். அளவில் சிறியவை. குழந்தைகள் வைத்து விளையாடக்கூடிய அளவிலானவை. இவை, சிந்துவெளியில் கிடைத்த பொம்மைகளோடு ஒப்பிடக்கூடியவை. சிந்துவெளியில் கிடைத்தது போன்ற பகடைகளும் இங்கே கிடைத்தன. இவை ஆச்சர்யமான ஒற்றுமைகள். சிந்துவெளியையும் கீழடியையும் ஒப்பிட்டுப் பார்க்க உகந்தவை. இன்னொரு முக்கியமான அகழ்வுச் சான்று, நீர் செல்வதற்கான குழாய்கள். திறந்தவெளி நீர்ப்பாதைகளும் கிடைத்தன.
ஒன்றின்மேல் ஒன்றாக 10 ஜாடிகள் வரை அடுக்கி வைக்கப்பட்ட ஓர் அமைப்பை ஆங்காங்கே காணமுடிகிறது. சாயத்தொழிற்சாலையோ, வேறு தொழிற்சாலையோ இருந்ததற்கான அடையாளமாகவோ இது இருக்கலாம். அங்கிருக்கும் மண் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பிய பிறகே, அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை உறுதிசெய்ய முடியும். பவளங்களாலான சிறிய மணிகள் கண்டெடுத்தோம். அந்த மணிகளில் அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் கலைத்திறன் வாய்ந்தவர்களாக இருந்ததற்கான சான்று இது. விரைவில் ஆறாம் கட்ட ஆய்வைத் தொடங்கவிருக்கிறோம். அது, மழைக்காலம் முடிந்து, பிப்ரவரி மாதமாக இருக்கலாம்'' என்றார்.
கீழடி
எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், பகடைக்காய்கள், தந்தங்களால் செய்யப்பட்ட அணிகலன்கள், நீர் செல்வதற்கான குழாய்கள், முழுமையான பானைகள், நீர்ப்பிடிப்பு குதிர்கள், நீண்ட சுவர்கள் போன்றவை இந்த ஐந்தாம் கட்ட ஆய்வில் கிடைத்துள்ளன.
22X36, 24X36, 24X38 என்ற செ.மீ அளவுகளில் செங்கற்கள் இங்கே கிடைத்துள்ளன. சில கட்டு சுவர்களுக்கானவை, சில தளம் அமைக்கப் பயன்பட்டவை. இந்தக் கற்களும் சிந்து நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட செங்கற்களை நினைவுபடுத்துகின்றன. கடந்த ஐந்து ஆய்வுகளில் சுமார் 250 குழிகள் தோண்டப்பட்டிருப்பதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அவை குழிகள் அல்ல... தமிழரின் தொன்மையை வெளிக்காட்டும் வழிகள்.
அடுத்தகட்ட ஆய்வுகள் நம் சங்க இலக்கிய நகரங்களைக் கீழடியின் கீழே உயிர்ப்புடன் காட்சிப்படுத்தும். காத்திருப்போம்