Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 11 வானின்று உலகம் வழங்கி


Guru

Status: Offline
Posts: 7467
Date:
11 வானின்று உலகம் வழங்கி
Permalink  
 


வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:11)

பொழிப்பு (மு வரதராசன்): மழை பெய்வதால் உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.

மணக்குடவர் உரை: மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம்மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது.
இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும். இம்மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று.

பரிமேலழகர் உரை: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து.
('நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்.)

குன்றக்குடி அடிகளார் உரை: உயிரினத்தின் தொடர்ச்சியான வாழ்க்கை வான் மழையால் நிகழ்வதால் வான்மழை அமிழ்தம் என்று உணர்க. உலகில் உயிரினங்களின் வாழ்க்கை இடையறவுபடாமல் தொடர்ந்து நிகழ்வதற்குக் காரணமாக உள்ள மழை சாவாமல் தடுக்கும் அமிழ்தம் போன்றது. அமிழ்தம்-சாவா மருந்து.

பொருள்கோள் வரிஅமைப்பு:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால், தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று.

பதவுரை: வான்- விண்ணுலகம், மழை; நின்று-(இடையறாது)நிற்ப, இருந்து; உலகம்-நிலவுலகம்; வழங்கி -நிலைபெற்று, இயங்கி, நடைபெற்று; வருதலால்-தொடர்வதால்; தான்-தான் (அதாவது- மழை); அமிழ்தம்-சாவாமருந்து; என்று- என்பதாக; உணரல் பாற்று-அறியத் தக்கது, தெரிதல் தன்மையுடையது.


வானின்று உலகம் வழங்கி வருதலால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான்;
பரிதி: மழையினாலே உலகந் தழைத்து வருகையான்;
காலிங்கர்: மழையாவது வந்து நிலைபெற்று, மற்றதனால் இவ்வுலகத்து உயிர்களானவை நடைபெற்றுச் சேறலான்;
பரிமேலழகர்: மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்;
பரிமேலழகர் குறிப்புரை: 'நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல்;

பழம் ஆசிரியர்கள் 'மழைவளம் நிலைநின்று உலகம் நிலைபெற்று வருதலான்' என்று இப்பகுதிக்குப் பொருள் கொண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மழையால் உலகம் நிலைபெற்று வருவதால்', 'மழையினால் உலகம் நிலைபெற்று வருவதால்', 'அமிர்தம் என்பது அதை உண்டவர்களை அழியாதிருக்கச் செய்வதுபோல உயிர்கள் இருந்துகொண்டே யிருக்கும்படி உலகத்தை அழிவின்றி வாழவைப்பது மழை', 'மழை உண்மையால் உலகத்தில் உயிர்கள் வாழ்க்கை நடத்திவருவதால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

வான்மழை நிலை நிற்க உலக வாழ்க்கை தொடர்ந்து வருவதால் என்பது இப்பகுதியின் பொருள்.

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அம்மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும். இம்மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று.
பரிதி: மழையும் அமிர்தமும் நிலையாம் என்றவாறு.
காலிங்கர்: மற்று இம்மழையானதுதான் இவ்வுலகத்துக்கு ஓரமுதம் என்று உணரும் பகுதியுடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்.

'மழை அமிர்தம் என்று உணரும் பகுதியது என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மழையே அமிழ்தம் என்று உணரவேண்டும்', 'அம்மழை உலகிற்கு அமிழ்தம் என்று உணரப் பெறும்', 'அதனால் மழை அமிர்தத்துக்கு ஒப்பானது', 'உயிரினை உடம்பிலே நிலைபெறச் செய்யும் மழையே சாவாமருந்து என்று கருதத்தக்கது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அது அமிழ்தம் என்று உணரப் பெறும் தன்மையது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வான்மழை நிலை நிற்க உலக வாழ்க்கை தொடர்ந்து வருவதால், அது அமிழ்தம் என்று உணரப் பெறும் தன்மையது என்பது பாடலின் பொருள்.
'அமிழ்தம்' என்பது என்ன?

உலக இயக்கத்தை நிலைநிறுத்துவதால் வான்மழை அமிழ்தமாம்.

நிலவுலக உயிர்கள் யாவும் வானிலிருந்து வரும் மழை நீரால் வாழ்ந்து வருகின்றனவாதலால், மழை உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தகும்.
வானம் பொழியாவிட்டால் பூவுலகம் அழிந்துபடும். ஊற்று நீர், ஆற்றுநீர் போன்ற எந்த ஒரு நீர் ஆதாரத்திற்கும் மழை பெய்யவேண்டும். அந்த நீரே குடிப்பதற்கும் உணவுக்கும் பயன்படுகிறது. மழை கொண்டு உலகம் நின்று நிலையாக வழங்கி வருதலால், அதுவே அமிழ்தம் என்று உணரப் பட வேண்டியது.

வான் நின்று என்ற தொடரை வான் நிற்ப என்பதன் திரிபாகக் கொண்டு 'வானம் நிலையாக, இடையறாது, அதாவது தொடர்ச்சியாக/வேண்டிய காலத்து/ வேண்டிய அளவு மழை கொடுத்துக் கொண்டிருப்ப' என விளக்குவர். சிலர் வானினால் உலகம் நின்று வழங்கி வருதலால் எனப் பொருள்கூறி உரை காண்பர். இன்னும் சிலர் வான் நின்று என்பதற்கு வானத்திலிருந்து எனப் பொருள் கூறுவர். இதற்கு 'மழை' என்ற சொல்லை வருவித்துரைக்க வேண்டும்.
'உலகம் வழங்கி வருதல்' என்பது உலகம் நீடித்து வருதல்/தொடர்ந்து வருதல் எனப் பொருள் தந்து உலகின் கண்ணே வழிவழியாகத் தோன்றி இயங்கிவரும் உயிர்களின் இடையறாத பேரியக்கம் என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. வாழ்வின் நிலைக்களன் உலகம். அதை வாழவைப்பது மழை. வழங்கி வருதல் என்பது அளித்துக் கொடுத்து வருதல் எனப்பொருள்படும்.
அமிழ்தம் என்ற சொல்லுக்கு உணவு என்றும் வானுலகிலுள்ளோர் அருந்தும் சாவா மருந்து என்றும் பொருள் உண்டு. மழை உலகிற்கு உணவு அளித்துக் காத்து நலம் செய்கிறது. மழையினாலேயே உயிர்களும் பயிர்களும் வாழ்கின்றன. உயிர்களின் தொடர்ச்சியை நிலைநிறுத்துவதற்கு மழை தரும் நீரே காரணம். அமிழ்தம் வானோர் அருந்தும் உணவு. இது வானுலகத்தில் கிடைப்பதாகச் சொல்லப்படுவதால் வானின்று வந்தது எனக் கூறுவர். வானத்திலிருந்து வழங்கப்படுதலாலும் உயிர்களின் நிலைபேற்றிற்கு உதவுவதாலும் மழை அமிழ்தம் என்று உணரத்தக்கது என்கிறது இக்குறள்.
கோடிக்கணக்கான ஆண்டுகள் வழிவழியாகத் தோன்றி இயங்கிவரும் உயிர் இயக்கம் நிலைத்தும் நீடித்தும் இருக்க வழி செய்வது மழை; நினைத்தாலே இனிக்கும் தன்மை வாய்ந்தது கண்கண்ட அமிழ்தமாம் மழை.

'அமிழ்தம்' என்பது என்ன?

உணவு, சாவா மருந்து என்ற இரு பொருளும் அமிழ்தம் என்ற சொல்லுக்குப் பொருந்த இக்குறள் யாக்கப்பட்டுள்ளது. அமிழ்தம் என்பது அமிர்தம், அமுதம் என்றும் அறியப்படும்.
மழை அழியா வாழ்வைத் தரும் அமிழ்தம் என்று உணர்ந்து கொள்ளப்படவேண்டும் என்கிறது பாடல். அமிழ்தம் எங்குள்ளது? வானுலகில் வாழும் தேவர்கள் அமிழ்தத்தை உண்டு சாவாது வாழ்வு பெறுகின்றனர் என்பது தொன்மங்களில் கூறப்படும்ம் கற்பனை. உலகத்திற்கு உணவு முதலியவற்றைத் தந்து இந்த உலகம் அழியாது தொடர்ந்து வாழ வழி செய்வதனால் மழையை 'அமிழ்தம்' என்று சிறப்பிக்கிறார் வள்ளுவர். மழை பெய்வதால் உயிர்கள் உளவாம்; மழை தொடர்ந்து பெய்யாவிட்டால் உயிர்கள் இறந்துபடும். ஆதலால் மழை அமிழ்தத்திற்கு இணையாக எண்ணப்படவேண்டும். அமிழ்தம் என்பது சாவாமருந்து என்று அதன் இயல்பை மற்றொரு இடத்திலும் குறள் காட்டும் - '..சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று' (விருந்தோம்பல், 82).

சுவை மிகுதியான எதனையும் அமிழ்தம் என்பது உலகவழக்கு.
சொ. தண்டபாணிப் பிள்ளை அமிழ்து என்ற சொல் தமிழ்ச்சொல்லே, ஆரியச் சிதைவு அன்று, என்பார்.

அமிழ்தம் என்ற சொல் உணவு, சாவா மருந்து ஆகிய பொருள்கள் தருமாறு ஆளப்பட்டது.

வான்மழை நிலை நிற்க உலக வாழ்க்கை தொடர்ந்து வருவதால், அது அமிழ்தம் என்று உணரப் பெறும் தன்மையது என்பது குறட்கருத்து.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

அறிவுலகு ஓர் உண்மையை நிரூபிக்க மூன்று நெறிகளைக் கையாண்டது.
இவ்வழிகளை வடநூலார் பிரமாணங்கள் என்றுரைப்பர்.
ஓர் உண்மையைப் புலன்களால் கண்டறிவது அவற்றுள் ஒன்று.
இதனைக்காட்சிப் பிரமாணம் என்பர்.
ஓர் உண்மையை ஊகித்தறிவது மற்றொன்று.
இதனை அனுமானப்பிரமாணம் என்பர்.
புகை உண்டெனில் அவ்விடத்தில் நெருப்புண்டு என்று,
ஊகித்தறிவது அதற்காம் உதாரணம்.
இவை தவிர உயர்ந்தோர் சொல்ல ஒப்புவது என்பது,
ஓர் உண்மையை அறிவதற்காம் மூன்றாவது வழி.
இதனை ஆகமப் பிரமாணம் என்பர்.
உனக்கு வந்திருப்பது இன்ன நோய் என,
வைத்தியர் சொல்ல ஏற்றுக் கொள்வது இதற்காம் சுலப உதாரணம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard