Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்
Permalink  
 


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:12)

பொழிப்பு (மு வரதராசன்): உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

மணக்குடவர் உரை: பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கித் தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே.
இது பசியைக் கெடுக்கு மென்றது.

பரிமேலழகர் உரை: துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை - அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை. (தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின் அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.)

குன்றக்குடி அடிகளார் உரை: துய்த்து வாழ்பவர்க்குத் துய்ப்புக்குரிய பொருள்களைப் படைத்தும் தானே துய்ப்புக்குரியதாகவும் அமைந்து விளங்குவது மழை. உணவுப் பொருள்கள் விளைய மழை உதவி செய்கிறது; பருகவும் பயன்படுகிறது.

பொருள்கோள் வரிஅமைப்பு:
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கித் துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை.

பதவுரை:
துப்பார்க்கு-உண்பவர்க்கு; துப்பு-வலிமை (சத்து); ஆய-ஆகிய; துப்பு-உணவு; ஆக்கி-ஆகும்படி செய்து; துப்பார்க்கு-உண்பவர்க்கு (இங்கு 'குடிப்பவர்க்கு'); துப்பு-உணவு (இங்கு 'நீர்'); ஆயதூஉம்-ஆவதும் (தூவும் அதாவது பெய்யும் என்றும் ஓர் உரை உள்ளது); மழை-மழை.


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கி;
பரிப்பெருமாள்: பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கி;
பரிப்பெருமாள் குறிப்புரை: உணவாக்கி என்னாது உணவாய உணவாக்கி என்றது உயிர்ப்பன்மையை நோக்கி, அவரவர் உண்ணத்தகுவன என்றவாறு.
பரிதியார்: உண்பார்க்கு வேண்டின உணவை உண்டாக்குவதும்;
காலிங்கர்: உண்பவர் யாவர்க்கும் உணவுப் பொருளாய் இன்னும் அவற்றை உளவாக உறுதிபண்ணிக் கொடுப்பதூஉஞ் செய்து;
பரிமேலழகர்: உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி;
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும்.

பழைய ஆசிரியர்கள் அனைவரும் 'உண்பவர் யாவர்க்கும் உணவை உண்டாக்குவதும்' என்று இப்பகுதிக்குப் பொருள் கொண்டனர். காலிங்கரின் 'உண்பவர் யாவர்க்கும் உணவுப் பொருளாய் இன்னும் அவற்றை உளவாக உறுதிபண்ணிக் கொடுப்பதூஉஞ் செய்து' என்ற உரை துப்பாக்கி என்பதிலுள்ள துப்பு என்ற சொல்லுக்கு உறுதி என்ற பொருள் கொண்டமையால் அமைந்தது. பரிதி துப்பு என்பதற்கு வலிமை என்று பொருள் கொண்டு 'வலியார்க்கு வலியுண்டாக்குவதும்' என உரை கண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி', 'உண்பார்க்கு நல்ல உணவுகளை விளைவித்துக் கொடுத்து', 'உண்பார்க்கு உடற்குறுதி தரும் உணவுப் பொருள்களை விளைவித்து', 'உண்பவர்க்குத் தூய்மையான உணவுகளை உண்டாக்கி', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உண்ணும் உயிர்களுக்குச் சத்தான உணவுகளை ஆக்கி என்பது இப்பகுதியின் பொருள்.

துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே.
மணக்குடவர் குறிப்புரை: இது பசியைக் கெடுக்கு மென்றது.
பரிப்பெருமாள்: தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே.
பரிதியார்: வலியார்க்கு வலியுண்டாக்குவதும் மழை என்றவாறு.
காலிங்கர்: உண்பவர் யாவர்க்குந் தானே உணவுமாய் நிற்பதூஉம் மழை என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை.
பரிமேலழகர் குறிப்புரை: தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின், அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.

இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் 'உண்பவர் யாவர்க்கும் தானே உணவாய் நிற்பதும் மழை ஆகும்' என்று உரை பகர்ந்தனர். பரிதியின் 'வலியார்க்கு வலியுண்டாக்குவதும் மழை' என்பது புதுமையாய் உள்ளது. 'தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல்' என்று பரிமேலழகர் விளக்குவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தானும் குடிநீராய்ப் பயன்படுவது மழை', 'அவற்றை உண்பார்க்குத் தானும் உணவாய் நிற்பதும் மழை', 'அவர்கட்குத் தானும் ஓர் உணவுப் பொருளாக இருப்பது மழைநீராகும். மழை, பசியையும் நீர் வேட்கையையும் நீக்குவது', 'தானும் உணவாய் இருப்பது மழை' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

உண்பவர் யாவர்க்கும் தானே உணவாய் அமைவதும் மழையே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உண்ணும் உயிர்களுக்குச் சத்தான உணவுகளை ஆக்கி, உண்பவர் யாவர்க்கும் தானே உணவாய் அமைவதும் மழை என்பது பாடலின் பொருள்.
இப்பாடலிலுள்ள ஐந்து துப்புக்கள் குறிப்பன எவை?

 

'து(ய்)ப்பு' என்னும் சொல் கொண்டு கவிச்சுவை ததும்ப, இனிய ஓசைநயத்துடன் படைக்கப்பட்ட பாடல் இது.
உயிர்களுக்குத் தூய்மையானதும் சத்தானதுமான உணவுப் பொருள்களை உணவாய உணவாக்க உதவுவதோடு, தானும் ஓர் உணவுப் பொருளாக-நீராக பருகப்படுவது மழை.

பாடலின் பொருள் எளிதில் விளங்க 'துய்ப்பார்க்கு துப்பு ஆய துய்ப்பு ஆக்கி, துய்ப்பார்க்கு துய்ப்பு ஆயதும் மழை' என்று வாசிக்கலாம்.
பாடலின் முதல் பகுதியான 'துய்ப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி' என்பது 'உலகத்து உயிர்களெல்லாம் வாழ்வதற்கு சத்தான (வலிமையான) உணவுப்பொருளை உண்டாக்கி எனப் பொருள்படும். பிற்பகுதி அவ்யிர்களுக்கெல்லாம் நீரை வழங்குவதும் மழையே என்கிறது.
வானம் நமக்கு மழைநீரைத் தருகிறது. நாம் உண்ணும் உணவுப்பொருள்கள் எல்லாவற்றுக்குமே நீர் தேவையானது. உண்ணப்படும் காய்கனி, கூலம், சமையல் பொருள் போன்ற இவை அனைத்தும் நீரால் விளைவிக்கப்படுவனவே. குடிக்கப்பயன்படும் தண்ணீராயும் இருப்பது மழை பெய்வதாலான நீரே ஆகும். உயிர்களுடைய பசி போக்கவும் தாகம் தீர்க்கவும் மழை பெய்கிறது என்பது கருத்து.
தண்ணீர் அருந்தப்படுவது ஆனாலும் அது உணவாகவே கருதப்படும். 'உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே' (புறநானூறு 18) என்ற பாடல் உண்ணும் உணவு நிலமும் நீரும் இணைந்த கூட்டுப்பொருள் எனச் சொல்கிரது. 'நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே' (புறநானூறு 186) என்ற பாடல் நெல்லும் நீரும் உயிர்தரும் உணவு என்ற பொருளை(எதிர்மறையாக)த் தரும். இப்பாடல்கள் வழி நீரும் உணவாகவே கொள்ளப்படும் என்பது தெரிய வருகிறது.

'துய்ப்பார்க்கு' என்று உயர்திணைப் பலர் பாலால் கூறப்பட்டாலும், ஏனைய விலங்கு, பறவை முதலிய அஃறிணைப்பாலுக்கும் இச்சொல் பொருந்தும் என்பர் உரையாளர்கள். உயர்திணை சிறப்புடையது என்பதால் துப்பார்க்கு எனப்பட்டது (பரிமேலழகர்).

இப்பாடலிலுள்ள ஐந்து துப்புக்கள் குறிப்பன எவை?

துப்பு என்ற சொல் வலிமை, துணை, நுகர்ச்சி, நுகர்பொருள், உணவு, தூய்மை, ஆராய்ச்சி, உளவு, உமிழ்தல், உமிழ்நீர் இவை தவிர்த்து இன்னும் வேறு சில பொருளும் உள்ளடக்கியது. இங்கே அச்சொல் நுகர்ச்சி, உணவு என்னும் பொருளிலும் தூய, வலி என்னும் பொருளிலும் வந்துள்ளது.
முதலிலுள்ள துப்பார்க்கு என்ற சொல் துய்ப்பார்க்கு அதாவது நுகர்வோர்க்கு என்ற பொருளது. இத்துப்பு அதாவது துய்ப்பு உண்பதைக் குறிக்கும். இதை அடுத்துவரும் 'துப்பாய' என்பதிலுள்ள துப்பு என்ற சொல்லுக்கு நல்ல, தூய, வலிய, உறுதியான அல்லது சத்தான என்று பொருள் கொள்வர். அதை அடுத்த 'துப்பு(+ஆக்கி)' என்பதிலுள்ள துப்பு என்பது உணவு (துய்ப்பு) என்ற பொருள் தரும். எனவே 'துப்பாய துப்பாக்கி' என்பது 'சத்தான (நல்ல) உணவுப்பொருளை உண்டாக்கி' என்று பொருள்படும். இரண்டாவதாக வரும் துப்பார்க்கு என்பதிலுள்ள துய்ப்பு என்பதற்குப் பருகுதல் எனப் பொருள் கொண்டு 'பருகுவோர்க்கு' எனப் பொருளுரைப்பர். ஈற்றடியிலுள்ள 'துப்பு ஆயதூஉம்' என்பதற்கு '(நுகரப்படுவதாகவும்) நீராக அருந்தப்படுவதாக ஆவதும்' என்பது பொருள்.

(துய்ப்பு) துப்பு என்ற சொல்லுக்கு இன்று உண்ணல், நுகர்தல், அனுபவித்தல், ஆராய்தல், உமிழ்தல் என நடைமுறை வழக்கில் பொருள் கொள்ளப்படுகிறது. 'துப்புக் கெட்டவன்' என்று ஒருவரைத் திட்டும் பொழுது, அது ஒருவேளை உணவுக்குக் கூட வழியற்று இருப்பவனைக் குறிக்கும். 'துப்புத் துலக்குதல்' என்பது, ஒருவனுடைய சூழலை, வலிமையை ஆராய்தல் பற்றியது, துப்பு என்ற சொல்லை உமிழ்தல் என்ற பொருளிலும் நாம் நாளும் பயன்படுத்துகிறோம்.

உண்ணும் உயிர்கள் அனைத்துக்கும் சத்தான உணவுகளை ஆக்கச் செய்வதும் உண்பவர் யாவர்க்கும் தானே உணவாய் அமைவதும் மழை என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard