Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 18 சிறப்பொடு பூசனை செல்லாது


Guru

Status: Offline
Posts: 7467
Date:
18 சிறப்பொடு பூசனை செல்லாது
Permalink  
 


சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:18)

பொழிப்பு (மு வரதராசன்): மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

மணக்குடவர் உரை: சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண்.
மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.

பரிமேலழகர் உரை: வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின்.
(நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: வானம் காய்ந்து மழைபெய்யாதாயின், வானவர்களாகிய தேவர்களுக்கும் இவ்வுலகத்தில் திருவிழாவும் நாடோறுஞ் செய்யும் வழிபாடும் நடவா.
(முதலிலே, திருவிழா நின்று, பின்பு வழக்கப் பூசையும் நின்றுபோம் என்றவாறு.)

பொருள்கோள் வரிஅமைப்பு:
வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு சிறப்பொடு பூசனை செல்லாது.

பதவுரை: சிறப்பொடு- சிறப்பான விழாவுடன்; பூசனை-வழிபாடு; செல்லாது-நடவாது, நடைபெறாது; வானம்-முகில்; வறக்குமேல்-வறண்டுபோனால் (பெய்யாதாயின்); வானோர்க்கும்-விண்ணவர்க்கும்; ஈண்டு-இங்கு, இவ்வுலகின் கண்.


சிறப்பொடு பூசனை செல்லாது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது;
பரிப்பெருமாள்: செய்யப்படுகிற விழவும் பூசனையும் நடவாது;
பரிதி: திருநாளும் தினப்பூசையும் உண்டாகா; [தினப்பூசை-நாள்தோறும் நடக்கும் பூசை]
காலிங்கர்: தேவர் மாட்டும் பிதிர்கள் மாட்டும் விசேஷித்துச் செய்யும் கருமங்களும், இங்ஙனம் நிமித்தீகரித்துச் செய்தலின்றி உயர்ந்தோர் நாடோறும் செய்து வருகின்ற நற்கருமங்களும் மற்று இவை இரண்டும் சென்று தலைப்படாது. [விசேஷித்து-சிறந்து; நிமித்தீகரித்து-காரணமாக]
பரிமேலழகர்: இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது;
பரிமேலழகர் குறிப்புரை: நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் 'செல்லாது' என்றார்.. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார். [நைமித்திகம் - ஏதேனும் ஒரு காரணம் பற்றிச் சிறப்பாகச் செய்யும் கருமம்; நித்தியம் - நாள்தோறும் செய்யப்படும் கருமம்]

பழம் ஆசிரியர்களில் மணக்குடவர் சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடக்காது என்று இப்பகுதிக்கு உரை தந்தார். இவர் கூற்று விழாக்கால பூசையை மட்டும் குறிப்பதாக ஒருமையில் அமைகிறது. பரிதி திருநாளும் தினப்பூசையும் உண்டாகா என்றார். காலிங்கர் தெய்வங்களுக்கும் இறந்தோர்க்கும் சிறப்பாகச் செய்யப்படும் கர்மங்களும் என்று 'சிறப்பு'க்கு பொருள் தந்து பூசனை என்பதை 'நாடோறும் செய்யப்படும் நற்கருமங்கள்' என்றுரைத்தார். இவர் உரை சற்று மாறுபட்டதாக உள்ளது. பரிமேலழகர் சிறப்பும் பூசனையும் என்று கொண்டு நைமித்தகமும் நித்தியமும் அதாவது விழாவும் நாட்பூசையும் நடவா என்றார். மணக்குடவர் சிறப்பு என்ற சொல்லை மேன்மை என்ற பொருளிலே ஆண்டுள்ளதாகத் தோன்றுகிறது. பரிதி, பரிமேலழகர் இருவரும் சிறப்பு என்ற சொல்லுக்குத் திருநாள் என்றும் பூசனை என்றதற்கு நாட்பூசை என்றும் கொண்டுள்ளனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'திருவிழாவும் வழிபாடும் உலகில் வானவர்க்கும் நிகழமாட்டா', 'தேவர்க்கு எடுக்கும் விழாவும் நாள்தோறும் செய்யும் பூசையும் நடைபெறா', 'வானவர்கள் என்ற தேவர்களுக்குச் சிறப்பான விழாக்களும் பூஜைகளும் நடத்தமாட்டார்கள்', 'தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழாவும் பூசையும் நடைபெறா' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

திருவிழாக்களும் நாள்வழிபாடுகளும் நடைபெறா என்பது இப்பகுதியின் பொருள்.

வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண்.
மணக்குடவர் குறிப்புரை: மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.
பரிப்பெருமாள்: வானம் புலருமாயின் தேவர்களுக்கு இவ்விடத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: உம்மையால் முனிவர்க்கும் என்பதும் கொள்ளப்படும். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறத்தினும் பூசை கெடுமென்றார்.
பரிதி: பூலோகத்தில் மழை வராவிடில் என்றவாறு.
காலிங்கர்: மழையானது வறந்து போமாயின் தேவர்கட்கும் இவ்விடத்தில் என்றவாறு.
பரிமேலழகர்: மழை பெய்யாதாயின் தேவர்கட்கும் இவ்வுலகில்.
பரிமேலழகர் குறிப்புரை: 'உம்மை' சிறப்பு உம்மை.

மணக்குடவர் குறிப்பிடும் நான்கு அறங்கள் தானம், தவம், நாட்பூசை, விழா என்பன என்பர். மணக்குடவர், காலிங்கர், பரிமேலழகர் மூவரும் வானோர்க்கு என்பதற்கு தேவர்களுக்கு என்று ஒருமித்த கருத்துக் கூறினர். 'மழை பெய்யாவிடில் தேவர்கட்கும் இவ்வுலகத்தில்' என்று அனைவரும் இப்பகுதிக்குப் பொருள் கொண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வானம் வறண்டால்', 'இவ்வுலகில் மழை பெய்யாது வறண்டு விடுமானால்', '(வானத்திலிருந்து மழை பொழிவதால்தான், வானத்தில் தெய்வங்கள் இருப்பதாக மக்கள் வானத்தை வணங்குகிறார்கள் அதனால்) வானம் மழை பெய்யாமல் வறண்டுவிட்டால்', 'மழை பெய்யாது வறட்சி ஏற்படுமேல்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

'மழை பெய்யாதொழியின் விண்ணவர்க்கும் இங்கு' என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இவ்வுலகில் மழை பெய்யாது வறண்டு விடுமானால் தெய்வங்களுக்கு எடுக்கப்படும் விழாவும் நாள்தோறும் செய்யப்படும் பூசையும் நடைபெறா என்பது பாடலின் பொருள்.
மழைக்கும் விழா-பூசைக்கும் என்ன இயைபு?

மழையில்லை என்றால் தெய்வங்களும் நினைக்கப்படுவது இல்லை.

பெய்யவேண்டிய காலங்களில் மழை பெய்யாவிட்டால் தெய்வங்களுக்காக நடத்தப்படும் திருவிழாக்களும், அன்றாடப் பூசைகளும் இங்கே நடைபெறமாட்டா.
சிறப்பு என்பதற்கு மேன்மை என்பது பொதுவான பொருள். இதற்கு விழா என்ற பொருளும் உண்டு. இரட்டைக் காப்பியங்களில் இச்சொல் விழா என்ற பொருளில் பயின்று வந்துள்ளது. கோயில்புக்கு நங்கைக்கு சிறப்பு அயர்ந்த செங்குட்டுவற்கு (சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம்,உரைப்பாட்டு: பொருள்: கோயிலை அடைந்து, பத்தினிக் கடவுட்கு விழாச் செய்த செங்குட்டுவனுக்கு) என்று சிலப்பதிகாரமும் சென்றுகை தொழுது சிறப்புச் செய்தலின் (மணிமேகலை, மந்திரங் கொடுத்த காதை: பொருள்: சென்று கைகூப்பித் தொழுது விழாச் செய்தமையால்) என்று மணிமேகலையும் இச்சொல்லை விழா என்ற பொருளில் ஆண்டுள்ளன. இக்குறளிலும் சிறப்பு என்பது விழா என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது என்று பெரும்பான்மை உரையாளர்கள் கூறினர்.
பூசனை என்பது குறளில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு பிறமொழிச் சொல்; பரவு, வழிபாடு என்ற சொற்கள் சங்க காலத்தில் வழிபாட்டைக் குறித்தன; பூசனையின் வடமொழி வடிவம் பூஜநா என்பது; சுனிதி குமார் சட்டர்ஜி பூசெய் என்ற திராவிட மொழியிலிருந்து வடமொழியில் கடனாளப்பட்டுப் பின்னர் வடமொழியிலிருந்து தமிழ் கடனாண்டிருக்க வேண்டும் என்பார் (செ வை சண்முகம்). பூசனை என்பது அன்றாட வழிபாடு எனப் பொருள்படும்.
திருவிழாக் கொண்டாட்டங்களும் நாள் பூசனையும் வழிபாட்டைச் சொல்வது. வழிபாடு என்பது கடவுளை நினைந்து அவனைப் போற்றுவதற்காகவோ படைத்தவனுக்கு அவன் அருள் பெற்றவன் நன்றி செலுத்துவதற்காகவோ தனிப்பட்ட மாந்தரின் தேவைகளுக்கான வேண்டுதலை முன்னிட்டோ செய்யப்படுவது. பொதுநன்மை கருதி அதாவது மழை வேண்டுதல் போன்றவற்றிற்காகவும் பூசை செய்யப்படுவது உண்டு. கடவுள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாகவும் வழிபாடு கையாளப் பெறுகிறது. காலத்திற்குக் காலம் வழிபாட்டு முறைமைகளாகிய சடங்குகள் மாறினாலும் வழிபாடு மாறவில்லை. தொடக்கக் கால இயற்கை வழிபாட்டில் ஞாயிறு, நிலவு, மழைக்கடவுள், சிங்கம், புலி, மரங்கள் ஆகியன இடம்பெற்றன. இத்தகைய இயற்கை வழிபாட்டிற்குரிய தெய்வங்களை வணங்கும்போது உணவுப் பொருள்களைப் படைத்தல், பலியிடுதல், ஆரவாரம் செய்து கூத்தாடுதல் ஆகியன நடந்தன. காலப்போக்கில் கடவுள் வழிபாட்டில் பிற வழிபாட்டு முறைமைகளும், விழாக்களும், சிறப்புப்பூசனைகளும் சேர்ந்தன. வழிபாட்டில் அன்றாடப் பூசனை என்றும் பெருநாட்களில் விழாக்கால (சிறப்புப்) பூசனை என்றும் வகுத்துச்செய்யப்பட்டன.

'மழை பெய்யாது' என்பதே 'வானம் வறக்குமேல்' என மாறுபட்ட வகையில் மொழிப்படுத்திச் சொல்லப்பட்டது. 'வானம் வறண்டு காணப்படுகிறது' என்பது உலக வழக்கு. வானம் வறல் என்பது வானம் வற்றல், உலர்தல் அல்லது மழை பொய்த்தலைக் குறிக்கும்.
வானத்தில் உலாவும் மேகங்களை மின்னலுடன் சேர்ந்து மழையாகப் பெய்யச் செய்கிறவர்கள் வானுறையும் தெய்வங்கள்தாம் என்பது ஓர் நம்பிக்கை. தொன்மங்களில் காணப்படும் தெய்வங்களை மக்கள் பூசனை செய்து வழிபட்டு விழா எடுத்துக் கொண்டாடவும் செய்கிறார்கள். வானோர் குறிப்பது இவர்களாக இருக்கலாம். வானோர் வழிபாடு என்பது, காலிங்கர் உரையில் கண்டபடி, முன்னோர்களை நினைவுகூறும் வகையிலே ஆண்டுதோறும் வழிபாடுகள் நடத்தி, படையல் செய்யும் வழக்கத்தையும் குறிக்கலாம். வானோர், மேலுலகம் பற்றிய குறிப்பு குறளில் பிற இடங்களிலும் பயின்று வந்துள்ளது.
மழை பொய்த்துவிட்டால் தெய்வங்களுக்கு நடக்கும் விழாக்களுக் பூசனைகளும் நடவா; மண்ணவர் விண்ணவரையும் மறப்பர் என்கிறது இப்பாடல்.

மழைக்கும் விழா-பூசைக்கும் என்ன இயைபு?

வானம் வழங்காவிடில், தெய்வங்களுக்குச் செய்யப்படும் பூசையும் படையலும் தடைபடும் என்று சொல்லப்படுகிறது. மழையின்மையால் முதலிலே திருவிழா நின்று, பின்பு வழக்கப் பூசையும் நின்றுபோகும் என்பார் கா சுப்பிரமணியம் பிள்ளை.
'மழை பொய்த்தால் நாட்டில் விளைவின்மை, குடிநீர்த் தட்டுப்பாடு, வறட்சி, பசிக்கொடுமை போன்றவை தோன்றும். இதன் விளைவாக வறுமையும், தனிமனிதனது வருவாயும் சமுதாயத்தினது பொருள்நிலையும் தாழ்வுறும். பொருள் குறைவுறுவதால் மக்கள் செலவு செய்து விழா எடுக்கமாட்டார்கள்.
வறுமை கவலையையும் பெருக்கும். கவலையுள்ள இடத்தில் பூசை எப்படிச் சிறக்கும்? கவலையுடையவர் மனம் விரைவில் ஒன்றாது. மனம் ஒன்றாது செய்யப்படும் பூசை சிறப்புடையதாகாது. ஊரும் நாடும் மகிழ்ச்சியில் உள்ள நிலையில்தான் வீடெங்கும் பூசையும் வீதியெங்கும் விழவும் பெருகும். செழிப்பு குன்றி மகிழ்ச்சியில்லாத இடத்தில் பூசையும் இருக்காது; விழாக்களும் இல்லை, நாட்டுப்புறங்களில் நடவு இல்லை என்றால் அந்த ஆண்டு அங்கு திருவிழா நடக்காது என்பது நாம் அறிந்ததே.
மழை பெய்யாது உழவர் உழாது இருந்திட்டால், புல் பூண்டுகளை உண்டேனும் வாழலாமே என்றால் விசும்பின் துளி வீழவில்லையாதலால் அவையும் தலை காட்டவில்லை. பசும்புல் இல்லை; காய்ந்த பூண்டில்லை; கடல் மீன் உணவுண்டு வாழலாம் என்றால் மழையின்றி கடல் வளமும் சுருங்கியதால் அவ்வுணவும் இல்லை. இத்துணை வறட்சியில் மக்கள் வழிபாடு செய்வார்கள், விழாக் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
மழை தொடர்ந்து பெய்யாமல் போய்விட்டால் மக்களிடம் ஆன்மீக உணர்வு குன்றும் என்பது கருத்து.

வானத்திலிருந்து மழை பெய்யாது இவ்வுலகம் வறண்டு விடுமானால் தெய்வங்களுக்கு எடுக்கப்படும் விழாவும் நாள்தோறும் செய்யப்படும் பூசையும் நடைபெறா என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard