Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 20 நீர்இன்று அமையாது உலகெனின்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
20 நீர்இன்று அமையாது உலகெனின்
Permalink  
 


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:20)

பொழிப்பு: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

மணக்குடவர் உரை: நீரையின்றி யுலகம் அமையாதாயின் யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது.
ஒழுக்கம்- விரதம். இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றினானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார்.

பரிமேலழகர் உரை: யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் - எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது.
(பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகம் எனின்' என்றார். இதனை, 'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: உலக நடப்புக்கு ஒழுக்கம் வேண்டும்; அவ்வொழுக்கம் மழையில்லாவிட்டால் யாரிடமும் இருக்குமா?

பொருள்கோள் வரிஅமைப்பு:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் ஒழுக்கு வான்இன்று அமையாது.


நீர்இன்று அமையாது உலகெனின்:
பதவுரை: நீர்-நீர்; இன்று-இல்லாமல்; அமையாது-முடியாது; உலகு-உலகம்; எனின்-என்றால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீரையின்றி யுலகம் அமையாதாயின்;
பரிதி: சலமின்றியே உலகியல் நடவாது ஆதலால்;
காலிங்கர்: இவ்வுலகமானது நீரையின்றி அமையாதாயின;
பரிமேலழகர்: நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்;
பரிமேலழகர் விரிவுரை: பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின்,

'நீர் இன்றி இவ்வுலகமானது அமையாது என்றால்' என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரையாக மொழிந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இனிய பண்பின்றி உலகம் இயங்காது எனின்', 'நீரில்லாமல் உலகத்தில் ஒரு காரியமும் நடக்காது', 'எப்படிப்பட்டவர்களுக்கும் நீரில்லாமல் உலக வாழ்க்கை நடவாதென்றால் ', 'நீர் இல்லாமல் உலகம் வாழமுடியாது என்றால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

'நீர் இல்லாமல் உலகம் இயங்காது என்றால்' என்பது இப்பகுதியின் பொருள்.

யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு:
பதவுரை: யார்யார்க்கும்-எவ்வகைப்பட்டவர்க்கும்; வான்-மழை; இன்று-இல்லாமல்; அமையாது-முடியாது; ஒழுக்கு-ஒழுக்கம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது.
மணக்குடவர் கருத்துரை: ஒழுக்கம்- விரதம். இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றினானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார்.
பரிதி: சர்வான்மாக்களுக்கும் மழையின்றி ஒரு காரணமில்லை என்றவாறு.
காலிங்கர்: இங்குள்ள உயர்ந்தோர் யாவர்க்கும் இழிந்தோர் யாவர்க்கும் மழையையின்றி அமையாது அவரவர் ஒழுகும் ஒழுக்கு.
பரிமேலழகர்: எவ்வகை மேம்பாட்டார்க்கும் அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது.
பரிமேலழகர் விரிவுரை: இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகம் எனின்' என்றார். இதனை, 'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.

யார்யார்க்கும் என்ற சொற்றொடர்க்கு 'யாவர்க்கும்' என்று மணக்குடவரும், சர்வான்மாக்களுக்கும் அதாவது 'அனைத்து உயிர்களுக்கும்' என்று பரிதியும் 'உயர்ந்தோர் யாவர்க்கும் இழிந்தோர் யாவர்க்கும்' என்று காலிங்கரும் 'எவ்வகை மேம்பாட்டார்க்கும்' என்று பரிமேலழகரும் பொருள் கொள்வர். வான்இன்று என்பதற்கு அனைவரும் மழையின்றி என்ற பொருளிலேயே கருத்துரைத்தனர். ஒழுக்கு என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்றனர் மணக்குடவரும் காலிங்கரும்; காரணம் என்று கருத்துப் பொருளாக உரைத்தார் பரிதி; நீர்ஒழுக்கு என்று பரிமேலழகர் கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அப்பண்புக்குரிய ஒழுக்கம் எந்நிலையினர்க்கும் மழையின்றி உண்டாகாது', 'அந்த நீரும் (வாய்க்கால்களை வெட்டியும், மலைகளைக் குடைந்தும், அணைகள் போட்டும் இன்னும் பலவழிகளில்) யார்யார் எப்படி முயன்றாலும் மழையில்லாவிட்டால் கிடைக்காது', 'அந்நீரின் ஓட்டமானது மழை வளம் இல்லாது ஏற்படாது. (கிணறு முதலியனவும் அறவே இல்லையாயின் நீர் சுரக்கமாட்டா. மழையில்லாமல் உடம்பு நிலையாதவாறு போல, அஃது இல்லாமல் வாழ்க்கைச் சிறப்புத் தரும் தவவொழுக்கமும் நிரம்பாது என்றும் கூறலாம். உடம்பிற்கு உணவினை நீர் கொடுப்பது போல, உயிர்க்குறுதி பயக்கும் கடவுட்பூசனை நீராடித் தவஞ் செய்தல் முதலியனவும் தருகின்றது. அவை மழையின்றி நன்கு நிகழா).', 'எவ்வகைப்பட்டோர்க்கும் அந்நீர் இடையறாது உண்டாதல் மழையில்லாமல் இல்லை. (உலகம் வாழ நீர் வேண்டும்; நீர் பெருக மழை வேண்டும்.)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

யாராயிருந்தாலும் மழை இன்றேல் ஒழுக்க வாழ்வு கெடும் என்பது இப்பகுதிக்குயின் பொருள்.

நிறையுரை:
உயிர்கள் நிலைபெற்றிருக்க மட்டுமல்ல, அவற்றின் ஒழுக்கத்திற்கும் மழையே காரணம் என்னும் பாடல்.

நீரில்லாமல் உலகியல் நடவாது என்பது உண்மையானால் மழை இல்லாமல் எவருக்குமே ஒழுக்கவாழ்வும் கெடும் என்பது பாடலின் பொருள்.
மழைக்கும் ஒழுக்கத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

நீர்இன்று என்ற தொடர்க்கு நீர் இல்லாமல் என்பது பொருள்.
முதலில் உள்ள அமையாது என்ற சொல் நிலைபெறாது என்றும் அடுத்த அமையாது என்ற சொல் இருக்காது என்றும் பொருள் தரும்.
உலகெனின் என்றது இவ்வுலகம் என்றால் எனப் பொருள்படும்.
யார்யார்க்கும் என்றதற்கு எவருக்குமே என்று பொருள்.
வான் இன்று என்ற தொடர் வானம் இல்லாமல் என்ற பொருளது.

நீர் இல்லாவிட்டால் உலகம் செயல்படாது என்றால் மழை இல்லாமல் ஒழுங்கான வாழ்வுமுறை இருக்காது.

'நீர்இன்று அமையாது உலகெனின்' என்ற பகுதிக்கு நீர் இல்லாமல் உலகம் இயங்காது என்ற பொருளிலே பெரும்பான்மை உரையாசிரியர்கள் உரை கூறினர்.
நீர் என்பதற்கு குணம் என்று பொருள் கண்டு 'உலக அமைதிக்கு நீர்மை அதாவது குணம் வேண்டும்; மாந்தர் ஒழுக்கத்துக்கு ஊற்றாக மழை அமையும்' என இக்குறட்பொருளை விளக்குவார் திரு வி க.. இவ்விளக்கத்தை வழிமொழிவது போல, 'நீர் என்ற சொற்கும் தண்ணீரென உரையாது, நீர்(மை)-பண்பு என உரைத்தலே தகும். நீர்மை-மை விகுதியின்றி நீரென வந்துள்ளது. தமர் நீரும் இன்னாவாம் இன்னா செயின்..... (உட்பகை 881) என்புழிப்போல, பண்புடையார்ப் பட்டுண்டுலகம்............ (பண்புடைமை 996) என்றபடி, ‘ஒழுக்கு’ என்பதற்கு விரதம், அவரவர் ஒழுகும் ஒழுக்கு, தவம், நடுவுநிலைமை எனக் குறிப்பிட்ட ஒன்றைக் கொள்வதினும் குணத்துக்குரிய ஒழுக்கம் எனக் கொண்ட திரு வி க பொருள் ஏற்புடையது' என்றார் இரா சாரங்கபாணி. 'இனிய பண்பின்றி உலகம் இயங்காது எனின், அப்பண்புக்குரிய ஒழுக்கம் எந்நிலையினர்க்கும் மழையின்றி உண்டாகாது' என்பது இக்குறட்கான இவரது உரையாகும்.

யார்யார்க்கும் என்றது அனைத்து உயிர்களுக்கும் என்ற கருத்தில் அமைந்தது. எங்கு வாழ்பவராயினும், எந்நிலையில் உள்ளவரானாலும் எப்படிப்பட்டவராக இருந்தாலும், எத்தொழில் இயற்றுபவர் ஆயினும் - உயர்ந்தோர், தாழ்ந்தோர் கற்றவர், கல்லாதவர், ஏழை, செல்வம் படைத்தவர், அரசாள்பவர், குடிமக்கள் என்ற வேறுபாடு இன்றி என்ற பொருள் தருவது.

வானின்றி அமையாது ஒழுக்கு என்ற பிற்பகுதிக்கு உரை தந்த மணக்குடவர் ஒழுக்கு என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்று பொருள் வழங்கினார். காலிங்கரும் இதே கருத்திலேயே உரை வரைந்தார்.
மணக்குடவர் உரையை மறுக்காதவர் போல பரிமேலழகர் 'இதனை 'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர்' என தனது விரிவுரையில் கூறித் தனது கருத்தாக 'அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது' என்று 'மழையின்றி உலகில் நீர் இல்லை' என்ற கருத்தை மொழிந்தார். இவரது உரை 'நீர் இல்லாமல் உலகியல் இல்லை; அந்நீரோ, வானில்லாமல் இல்லை' என்று அமையும். இவர் உரையை ஒட்டி 'மழையில்லாமல் நீர் கிடைக்காது என்றால், தண்ணீருக்காக ஆற்றில் அணைகட்டி வாய்க்கால் வெட்டினாலும் சரி, மலைகளைக் குடைந்தும், அணைகள் போட்டும், கிணறு வெட்டியும், ஊற்றுநீர் தேடினாலும் சரி, இன்னும் பலவழிகளில், யார்யார் எப்படி முயன்றாலும் மழையில்லாவிட்டால் நீர் கிடைக்காது; நீராதாரங்களில் நீரின் வரத்து மழையில்லாமல் உண்டாகாது' என்பதாக மற்றவர்கள் இப்பாடலுக்குப் பொருள் கூறினர்.
மேலே கண்டபடி இக்குறளிலுள்ள ஒழுக்கு என்ற சொல்லுக்கு பண்புப் பொருளான 'ஒழுக்கம்' என்றும் நீர் ஒழுகுதல் அதாவது நீரோட்டம் என்றும் இருதிறமாக உரைகள் காணப்படுகின்றன. 'மழையின்றி உலகில் நீர் இல்லை' என்ற கருத்து இதற்கு முந்திய பாடல்களில்வழி நன்கு உணர்த்தப்பட்டுவிட்ட்து. அதிகாரத் தொகுப்புக் கருத்துப்போல மழை இன்றேல் உலகத்தார் ஒழுக்கமும் கெட்டுவிடும் என்று இப்பாடல் அமைகிறது. ஒழுக்கு என்ற சொல்லுக்கு 'நீர் ஒழுக்கம்' என்றோ 'ஒழுகிவந்த நீர் என்றோ கொள்வதைவிட 'ஒழுக்கம் என்று பொருள் கொள்வது சிறந்தது.

உலகம் நிலை பெறுவதற்கு மட்டுமல்ல. ஒழுக்கம் நிலைபெறுவதற்கும் மழை மிக இன்றியமையாதது.

மழைக்கும் ஒழுக்கத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இக்குறளில் கூறப்பட்டுள்ள ஒழுக்கு என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்பதே சிறந்த பொருள். அப்படியானால் வானிலிருந்து மழை பொழிதற்கும் உலகத்து ஒழுங்குக்கும் எப்படி இயைபு உண்டாகிறது? புறநானூறு நீரின்றமையா யாக்கைக் கெல்லாம்.. (புறநானூறு, 18) என்றும் நற்றிணை நீரின்றமையா உலகம் போல... என்றும் நான்மணிக் கடிகைமழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை... என்றும் நீரில்லாமல் எது எது எல்லாம் அமையாது எனக் கூறின. ஆனால் குறளோ இதனினும் சிறப்பாக மழையின்மையால் ஒழுக்கமும் உண்டாகா என்று கூறுகிறது.
உலகம் சீராக இயங்க ஒழுக்கம் இன்றியமையாதது.
வானின்று வழங்கி வரும் மழை இல்லையேல் துய்ப்பு இல்லை; மழைநீரின்றி பசும்புல் தலைகாட்டாது; உழவர் ஏர் உழார்; கடல் வளமும் குன்றும். விண் பொய்ப்பின் உலகில் வறுமையும் பசியும் மிகும். வளமான பொருளியல் வாழ்க்கையில்தான் மனிதப்பண்பு மிளிரும் என்பதும் சமூகவொழுக்கம் உயர்வடையும் என்பதும் உலகப் பொதுவான உண்மை. மழையில்லையானால் நிலவளம் மறையும், கடல் வளம் தேயும் என்று ஒவ்வொன்றாகக் கூறி வந்த வள்ளுவர் மழை இல்லாமல் மக்களது பொருளாதாரநிலை கெடுவதால் விழாக்கள் இல்லை, பூசனை இல்லை என்று மாந்தரின் ஆன்மீக உணர்வு குன்றும் எனவும் கூறினார். இவ்வாறு மனவளம் குறைவது மட்டுமல்ல தானம் தவம் என்ற பொது அறங்களும் தங்காமல் விலகிப்போகும் என்று சொல்வதால் மனிதப்பண்புகளும் மறக்கப்படும் என்றார். உயிர்கள் மடியவும் நேரிடும். இவற்றின் மொத்த விளைவாக கட்டுப்பாடு மறைந்து ஒழுக்கச்சீர் கேடு உண்டாகும். எனவேதான் ஒழுங்கமைப்பு கெடும் என்ற பொருளில் வானின்றி அமையாது ஒழுக்கம் எனச் சொல்கிறார்.

 

 

 

உலகம் நீர் இன்றி வாழ இயலாது என்பது உணமை; அதுபோலவே ஒழுக்கவாழ்வும் மழைநீர் இன்றி இல்லை என்பதுவும் உண்மை என்பது இக்குறளின் பொருள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard