Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 23 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
23 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம்
Permalink  
 


இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:23)

பொழிப்பு (மு வரதராசன்): பிறப்பு இறப்பு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

மணக்குடவர் உரை: பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது.
இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.

பரிமேலழகர் உரை: இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது.
(தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: வாழ்வின் இருவேறு நிலைகளை ஆராய்ந்து துறந்தவர் பெருமையே உலகில் விளங்கும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை உலகு பிறங்கிற்று.

பதவுரை: இருமை-இரண்டிரண்டு, இருநிலைகள், இரட்டைத் தன்மைகள்; வகை-கூறுபாடு; தெரிந்து-ஆராய்ந்தறிந்து; ஈண்டு-இங்கு, இப்பிறப்பில்; அறம்-அறச்செயல்கள், நல்வினை; பூண்டார்-மேற்கொண்டவர்; பெருமை-சிறப்பு, உயர்வு; பிறங்கிற்று-விளங்கித் தோன்றுகிறது, உயர்ந்தது; உலகு-உலகம்.


இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை;
பரிதி: புண்ணிய பாவத்தின் வழியறிந்து தன்மத்தின் வழிநின்றார் பெருமையினால்;
காலிங்கர்: கீழ்ச் சொன்ன பரிசே இம்மை மறுமை இரண்டினது குற்றத்தன்மையைத் தெரிந்து மிக்கிருந்துள்ள அறம் பயனாகிய வீட்டின்பத்தை மேவியுள்ளாரது பெருந்தன்மையையே; [பரிசே - தன்மை]
பரிமேலழகர்: பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே;
பரிமேலழகர் குறிப்புரை: தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது.

'பிறப்பு-வீடு என்ற இரண்டினது கூறுபாட்டை ஆராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை' என மணக்குடவரும் பரிமேலழகரும், 'புண்ணியம்-பாவம் வழி அறிந்து தன்மத்தின் நெறி நின்றார் பெருமை' எனப் பரிதியும் இம்மை-மறுமை என்ற இரண்டினது தன்மையைத் தெரிந்து வீட்டின்பப் பெருந்தன்மையை என்று காலிங்கரும் இப்பகுதிக்கு உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நன்மை தீமைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்து இங்குத் துறவு பூண்ட நீத்தாரின் பெருமை', 'பிறப்பதும் இறப்பதும் ஏன் என்பதையும் அதை ஒட்டிய மற்ற விஷயங்களையும் சிந்தித்து ஆராய்ந்து அறிந்து, அந்த அறிவினால் தர்மம் தவறாது வாழ்ந்த நீத்தார்களுடைய சரித்திரப் பெருமையினால்தான்', 'உலகியல், வீட்டுநெறி யென்னும் இரண்டின் கூறுபாட்டையும் அறிந்து இப்பிறப்பிலேயே துறவறத்தை மேற்கொண்டாரது பெருமையானது (துறவறம் நன்றென்று காணல் எளிது மேற்கோள்ளுதல் அரிது.ஆதலின் இவ்வாறு கூறினார்)', 'இன்பம் துன்பம் என்னும் இிரண்டினது தன்மைகளை அறிந்து இவ்வுலகில் துறவற நெறியை மேற்கொண்டார் பெருமை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இருவேறு நிலைகளை ஆராய்ந்து அறத்தைக் கடமையாக ஏற்றுக் கொண்டவர்கள் பெருமை என்பது இப்பகுதியின் பொருள்.

பிறங்கிற்று உலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தில் மிக்கது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.
பரிதி: உலகம் விளங்கும் என்றவாறு.
காலிங்கர்: மிகுத்துக் கூறியது இவ்வுலகம் என்றவாறு.
பரிமேலழகர்: உலகின்கண் உயர்ந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.

பிறங்கிற்று உலகு என்பதற்கு உலகத்தில் மிக்கது என்று மணக்குடவரும் உலகம் விளங்கும் என்று பரிதியும் மிகுத்துக் கூறியது இவ்வுலகம் என்று காலிங்கரும் உலகின்கண் உயர்ந்தது என்று பரிமேலழகரும் உரை கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவ்வுலகில் விளங்கித் தோன்றும்', 'உலகம் பிரகாசிக்கிறது', 'உலகத்திலே எவற்றினும் உயர்ந்து விளங்கும் இயல்பிற்று', 'உலகின்கண் உயர்ந்தது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

உலகில் விளங்கித் தோன்றும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இருவேறு நிலைகளை ஆராய்ந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமையால் உலகம் விளங்கித் தோன்றுகிறது என்பது பாடல் கருத்து.
'ஈண்டு அறம்பூண்டார்' குறிப்பது என்ன?

தன்னலம் நீத்தாரின் நற்செயற்பாடுகளால் இந்த உலகம் ஒளிர்கின்றது.

இருவேறு கூறுபாடுகளை ஆராய்ந்து கூடிவாழும் வாழ்க்கையில் தந்நலம் நீத்து அறச்செயல்களில் ஈடுபட்டவர்களின் பெருமை இவ்வுலகில் விளங்கித் தோன்றும்.
இருமை வகை தெரிந்து என்றதற்கு இரண்டு கூறுபாடுகளை ஆராய்ந்து என்பது பொருள். இரண்டு கூறுபாடுகள் என்பதை இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகள் என்று விளக்குவர். உலக இயற்கையின் இருவேறு எதிரிடைத் தன்மைகளாக உள்ள இரண்டிரண்டானவைகளையே குறள் குறிக்கிறது என்பர் சிலர். பிறப்பு - வீடு, பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்பங்கள் - இன்பங்கள், நன்மை - தீமை, அறிவு - அறியாமை, உயர்வு - தாழ்வு, அறம் - மறம், ஆக்கம் - கேடு, தோற்றம் - அழிவு, உடல் - உயிர், நிலைப்பது -அழிவது, மெய்-பொய், உலகியல்-வீட்டுநெறி, இல்லறம் - துறவறம் என்பனபோல பல இருமைக் கூறுகளை உரையாசிரியர்கள் காட்டுகின்றனர். வ சுப மாணிக்கம் இருமை வகை தெரிந்து என்றதற்கு 'வாழ்வின் இருவேறு நிலைகளை ஆராய்ந்து' எனப் பொருள் கொள்கின்றார்.
பெருமை பிறங்கிற்று உலகு என்பது பெருமையால் உலகம் விளங்கித் தோன்றுகிறது என்ற பொருள் தருவது.

உரையாசிரியர்களில் பலர் பிறப்பு-வீடு அல்லது இம்மை-மறுமை என்பதையே இருமையாக இக்குறள் குறிப்பிடுகிறது என்று கூறினர். வீடு பேறு பெற விழைபவர்களே துறவு நெறி மேற்கொள்வர் என்பர். அப்படியானால் துறவறநெறி நிற்பவர் பற்றிய பாடல் இது என்றாகிறது. வள்ளுவர் துறவு மேற்கொண்டு வீடு பெறுக என்று குறளில் எங்கும் கூறவில்லை. இக்குறள் தனிப்பட்ட உயிரின் ஆன்மீக முன்னேற்றத்தையோ அல்லது தனிப்பட்டோர் அறம் செய்வதனால் அடையும் மறுமைப் பயனையோ குறிப்பதற்காக எழுந்ததல்ல. எனவே இங்கு சொல்லப்பட்ட இருமையில் பிறப்பு-வீடு/இம்மை-மறுமை அடங்காது.
கருத்து முதல் வாதம் - பொருள் முதல் வாதம் என்ற இருகூறுகளும் இருமையாகச் சொல்லப்பட்டன என ஒரு சாரார் கருதுகின்றனர். கருத்து முதல்வாதம் என்பது உலகமும் மற்ற உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது என்பதைச் சொல்வது. பொருள் முதல் வாதமானது இந்த உலகம் இயற்கைப் பொருட்களாலானது; இயற்கைப் பருப் பொருட்களின் இயக்க நிகழ்ச்சிப் போக்கின் விளைவே மனிதனும், மற்ற உயிரினங்களும் தோன்றக் காரணம். எனவே பொருளே அனைத்து மூலத்திற்கும் அடிப்படை என்பது; இது சமயச் சடங்குகள், ஆன்மா, மறுபிறப்பு, துறக்கம் போன்ற எந்த மாயக் கோட்பாடுகளையும், ஐம்புலன்களால் அறியப்படாதது எதையும், ஒத்துக்கொள்வதில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் அறிவியல் வழிப்பட்ட ஆய்வு முடிவுகளை மட்டுமே பொருள் முதல் வாதம் ஏற்கிறது. இவ்விரு வாதங்களையும் கடந்து மூன்றாவதாக 'இருமை' வாதக் கோட்பாடுகளும் உள. கருத்தும், பொருளும் இரண்டும் ஒன்றோடொன்று நெருக்கமாகத் தொடர்புடையது; இரண்டும் முதன்மையானதுதான் என்பது இக்கோட்பாட்டின் அடிப்படையாகும். இப்பாடலில் சொல்லப்பட்ட இருமை இந்த இருமைவாதமா என்பது ஆராய்தற்குரியது.
தந்நலம் கருதுவோர் - பொதுநலத் தொண்டு புரிவோர் என்று இரு நிலைகளில் உள்ள மாந்தரை உலகில் காண்கிறோம். தந்நலம் - பொதுநலம் என்ற இருமை பற்றியே இக்குறள் பேசுகிறது எனக் கொள்ளமுடியும். தந்நலம் நீத்தாரது பொதுநலத் தொண்டு என்ற அறம் என்பதையே வள்ளுவர் இங்கு கூறுகிறார். இதை இக்குறளில் உள்ள 'அறம்பூண்டார்' என்ற தொடர் அரண் செய்யும். அறம்பூண்டார் என்ற தொடர் அறவோர் அல்லது 'அறத்தைக் கடமையாக ஏற்றுக் கொண்டவர்கள்' எனப்பொருள்படும். அதாவது தொண்டு செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் என்பது.

இருமைகள் என்பது இரண்டு கூறுபாடுகளும் கலந்திருக்கும் தன்மையைக் குறிப்பது. எல்லாப் பொருள்களிலும் இரண்டு தன்மைகள் உண்டு. இருமை வகை தெரிதல் என்பது இருமையும் அவற்றின் வகையும் அறிந்திருத்தல் எனப் பொருள்படும். இங்கு தன்னலம், பொதுநலம் என்றிவற்றின் கூறுபாடுகளை அறிவது சொல்லப்படுகிறது. அறம் பூண்டார் பெருமையென்பது அறவோர் பெருமையைச் சுட்டும். ஆகவே, தன்னலம்-பொதுநலம் இவற்றின் கூறுபாடுகளை ஆராய்ந்தபின், இல்லறத்திலிருந்து கொண்டே பொதுநலம் என்ற உயர்ந்த அறப்பணி ஆற்றும் தன்னலம் நீத்தாரின் பெருமையால் இவ்வுலகம் விளங்கித் தோன்றுகிறது என்பது இக்குறளின் பொருளாகிறது.
அதிகாரம் நீத்தார் பெருமை. தந்நலம் துறந்து அறப்பணி மேற்கொள்வோரையே நீத்தார் என்று குறிப்பதாக இவ்வதிகார குறட்பாக்கள் பெரிதும் அமைந்துள்ளன. இங்கும் அதுவே சொல்லப்படுகிறது. தனித்து இயங்காமல் சமுதாயத்துடன் கூடி வாழ்ந்து பொதுத்தொண்டு என்ற உயர்ந்த அறம் மேற்கொண்டோருடைய செயல் உலகத்தை நிலைநிற்கச் செய்து, உயிர்களின் பெருமையை உயர்த்துவதால், உலகம் ஒளிர்கிறது என்ற பொருளில் அமைந்தது இக்குறட்பா.
இருமை வகை தெரிவார் சிலராக, அறியார் பலராக இருப்பினும் அச்சிலரே செயற்கரிய செய்பவர்களாக இருப்பர். அவர்களுடைய செயல் உலகத்திற்குச் சிறப்பு சேர்த்ததலானும், விளங்குதலானும் அவர்களது பெருமையால் உலகம் ஒளிர்கிறது. இத்தகைய நீத்தார் பின்பற்றத்தக்க வழிகாட்டிகளாக இலங்கி, அறமும் நற்பண்புகளும் உலக முழுவதும் பரவச் செய்தனர் என்பது கருத்தாம். மகாத்மா காந்தி போன்றோரை நினைத்துக் கொள்க.

'ஈண்டறம் பூண்டார்' குறிப்பது என்ன?

ஈண்டு என்ற சொல்லுக்கு இங்கு/ இவ்விடம் என இடப்பொருளாகவும் அல்லது இப்பொழுது என்ற காலப் பொருளாகவும் கொள்வர். 'ஈண்டறம் பூண்டார்' என்பதற்கு 'இங்கு அறம் மேற்கொண்டவர்' என்ற பொருள் பொருத்தம். 'இங்கு' என்பதை இவ்வுலகில் என்றும் இப்பிறப்பில் என்றும் விளக்கம் கூறினர். கு ச ஆனந்தன் 'உலக இயற்கையின் இருவேறு எதிரிடைத் தன்மைகளைத் தெரிந்து, தம் எண்ணம், சொல், செயல் அனைத்திலும் பெருகிய அறத்தையே அணியாகவும், வாழ்க்கை நெறியாகவும் மேற்கொண்டு ஒழுகுபவர் 'இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்' என்றார். இவர் உரைப்படி ஈண்டறம் என்பதற்கு பெருகிய அறம் என்பது பொருள். இச்சொல்லுக்கு 'மிகுந்த அறம்' எனவும் பொருள் கூறுவர். நாகை சொ தண்டபாணிப்பிள்ளை 'உயர்ந்த அறம்' எனப் பொருள் உரைத்தார்.
திரு வி க 'ஈண்டறம்' என்பதற்கு 'ஈண்டும் அறம் - கூடிவாழும் அறம்' எனப் பொருள் காண்பார். இதற்குச் சான்றாக கூளியுங் கூட்டமும்....ஈண்டலும்... என்ற பிங்கலப் பகுதியையும், ஈண்டகன் கிடக்கை... என்னும் புறப்பாட்டுப் (19:1) பகுதியையும் மேற்கோள் காட்டுவார். இக்கருத்தை 'அறம் இன்னது என்பதை விளக்கும்போது மனமாசகன்று இயற்கைவழி நின்றொழுகுவோர் என்பதால் மாசகற்றி வாழும் இல்லறத்தானும் நீத்தார் ஆகக்கருதப்படுவர் என்பதை எண்ணச் செய்கிறது' எனப் பொருந்த விளக்குவார் தண்டபாணி தேசிகர். ஈண்டு என்பதற்கு இல்லறவியலில் எனவும் பொருள் கொள்ள இயலும்.
மனமாசகற்றி கூடிவாழும் இல்லறத்தானே அறவோர்- துறவோர் -நீத்தாராவர். எனவே இல்லறத்திலிருந்தே பொதுப்பணி ஆற்றுபவர்களையே அறம்பூண்டார் என்று இக்குறள் கூறுகிறது என்ற திரு வி க வின் கருத்து சிறந்தது. இவ்விதமாக 'ஈண்டறம் பூண்டார்' என்ற தொடர்க்கு 'இல்லறவாழ்வில் இருந்தே தந்நலம் நீத்துப் பொதுப்பணி ஆற்றும் அறவோர்' என்ற பொருள் கிடைக்கிறது.

இருகூறுபாடுகளையும் ஆரய்ந்தறிந்து அறம் மேற்கொண்டோர் என்கிறது பாடல். அறம் செய்வதற்கு எதற்காக கூறுபாடுகளின் ஆராய்ச்சி? இங்கு அறம் செய்பவர் என்பவர் தொண்டு செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவர் ஆவார். பொதுப்பணி ஆற்ற விரும்புபவர் தன்னலம் மட்டுமே கருதிய வாழ்வில் உள்ள இன்பங்கள், பொதுவாழ்வில் உள்ள துன்பங்கள் எல்லாவற்றையும் கலந்தெண்ணி அவ்வெளிக்கு வர வேண்டும். அங்குள்ள கடினங்கள் எவை? அவற்றைத் தன்னால் தாக்குப் பிடிக்க முடியுமா? அங்கு செல்வதால் உண்டாகும் தனிப்பட்ட இழப்புகள் எவை? தன் இயல்புகளுக்கு அறப்பணி பொருந்தி வருமா? அங்கு தன்னால் என்ன பங்களிப்புச் செய்ய முடியும்? என்றிவையெல்லாம் ஆராய்ந்து நேர்மை, கடும் உழைப்பு, தொண்டில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ளுதல் இன்ன பண்புகளுடன் செயல்படுவோர் பொதுநல அறத்தைத் திறம்பட ஆற்றுவர். அதனால் உலகிற்கு பெருமைப்படத்தக்க நன்மைகள் கிடைக்கும். இருமைவகை தெரிந்து அறம் பூண்டவர்களால் செயற்கரிய செய்ய முடியும். அவர்களாலேயே உலகம் ஒளிரும்.

'ஈண்டறம் பூண்டார்' என்றதற்கு இல்லறத்தில் கூடி வாழ்ந்திருந்தே அறத்தை வாழ்க்கைப் பணியாகக் மேற்கொண்டவர்கள் என்பது பொருள்.

இருவேறு நிலைகளை ஆராய்ந்து அறத்தைக் கடமையாக ஏற்றுக் கொண்டவர்கள் பெருமையால் உலகம் விளங்கித் தோன்றுகிறது என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard