Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 24 உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
24 உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும்
Permalink  
 


உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:24)

பொழிப்பு: திண்மை என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்

மணக்குடவர் உரை: அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.
பெருமை சொல்லுவார், முற்பட மக்கள் தன்மையனாய் இவ்வுலகின்கண் வாழ்பவன் அல்லன். தேவருள் ஒருவன் என்று கூறினார்.

பரிமேலழகர் உரை: உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம்.
(இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந்நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளைப் புலன்களில் செல்லாமல் காப்பவன் சிறந்தது என்று சொல்லப்படும் உலகிற்கு விதையாவான்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.


உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்:
பதவுரை: உரன் -திண்மை; என்னும்-என்கின்ற; தோட்டியான்-அங்குசத்தால்; ஓர்-ஒரு; ஐந்தும்-ஐம்பொறிகட்குத் தொகைக்குறிப்பு; காப்பான்-காப்பாற்றுபவன்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன்;
பரிதி: அறிவென்னுந் தோட்டியான் ஐம்புலன் என்னும் யானையைக் காப்பான்;
காலிங்கர்: ஒருவழிப்பட்ட சித்தத்தின் அறிவென்னும் அங்குசத்தினால் தமது நெறிக்கு மிகைபடுபொறிகளிற் பரவாமை, ஐவகைப்பட்ட மெய் வாய் கண் மூக்கு செவி யென்கிற ஐம்புலனையும் பாதுகாத்து அடக்கி ஒழுகுவான் யாவனொருவன்;
பரிமேலழகர்: திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்;
பரிமேலழகர் கருத்துரை: இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று.

பழைய ஆசிரியர்கள் அனைவரும் அறிவு என்னும் தோட்டியால் ஐம்புலன்களையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பவன் என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை கண்டனர். பரிமேலழகர் மட்டும் உரன் என்பதற்குத் திண்மை என்று பொருள் கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவுக்கோலால் ஐம்பொறிகளை அடக்கியவன்', 'வைராக்கியம் என்ற அங்குசத்தால் ஐந்து இந்திரியங்களான மதயானைகளை அடக்கியாண்டு', 'திண்மையென்னும் அங்குசத்தால் (அடக்குதற்கு அருமையில் ஒப்ற்ற) ஐம்பொறிகள் என்னும் யானனகளை அவற்றிற்குரிய புலன்வழிகளிற் செல்லாமல் தடுப்பதில் வல்லவன்', 'அறிவு என்னும் தோட்டியான் ஐம்பொறிகளாகிய யானைகளைத் தம் வழியில் தடுத்துக் காப்பவன் (தோட்டி-யானை ஓட்டும் கருவி)', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மன உறுதி என்னும் அங்குசத்தால் ஐம்புலன்களை அடக்கி ஆள்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து:
பதவுரை: வரன்-மிக்கது; என்னும்-என்கின்ற; வைப்பிற்கு-நிலத்திற்கு; ஓர்-ஒரு; வித்து-விதை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.
மணக்குடவர் விரிவுரை: பெருமை சொல்லுவார், முற்பட மக்கள் தன்மையனாய் இவ்வுலகின்கண் வாழ்பவன் அல்லன். தேவருள் ஒருவன் என்று கூறினார்.
பரிதி: மோட்சம் என்னும் பூமிக்கோர் வித்தாம் என்றவாறு.
காலிங்கர்: அவனே முத்தியென்கின்ற முடிந்த நிலத்திற்கு முதற்காரணமாவான் என்றவாறு.
பரிமேலழகர்: எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம்.
பரிமேலழகர் கருத்துரை: அந்நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.

இப்பகுதிக்கு மணக்குடவர் மேலாகிய இடத்தில் தோன்றுதற்கு இவ்விடத்திலுள்ள வித்து என்றும் பரிதி மோட்சம் என்னும் பூமிக்கோர் வித்து என்றும் காலிங்கர் முத்தியென்ற முடிந்த நிலத்திற்கு முதற்காரணமாவன் என்றும் பரிமேலழகர் எல்லா நிலத்திலும் மிக்கதுமான வீட்டு நிலத்துக்கு ஓர் வித்து என்றும் உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மேலான நிலத்துக்கு ஒரு வித்தாவான்', 'உலகத்துக்கு நன்மை உண்டாக்கக்கூடிய தெய்வீக சக்திக்கு இருப்பிடமாவர் அம்மகான்கள்', 'எல்லாவற்றினும் மேலான இடமெனப்படும் வீட்டினையடைந்து அதன்கண் நிலைத்து வாழ்வதற்குரியனாவன்', 'மேலான நிலையை அடைவான்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மேலான இடத்துக்கு ஒரு விதை போன்றவன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உளஉறுதியுடன் பொறிகளை அடக்கிய நீத்தார் மேலான இடம் செல்வர் என்னும் குறள்.

உள்ளஉறுதி என்னும் தோட்டியால் ஐம்புலன்களை அடக்கி ஆள்பவன் வரன் என்னும் வைப்பிற்கு ஒர் வித்து ஆவான் என்பது இப்பாடலின் பொருள்.
'வரனென்னும் வைப்பிற்கோர் வித்து' என்றால் என்ன?

'உரன் என்னும்' என்ற தொடர்க்கு மனஉறுதி என்பது பொருள்.
தோட்டியான் என்ற சொல் அங்குசத்தால் என்ற பொருள் தரும்.
ஓரைந்தும் என்றதற்கு ஐந்தினையும் என்று பொருள். இங்கு ஐம்பொறிகட்குத் தொகைக்குறிப்பாக வந்தது.
காப்பான் என்ற சொல் கட்டுப்படுத்துபவன் எனப் பொருள்படும்.

மன உறுதி என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளையும் அடக்கியவன் மேலான உலகம் செல்வான்.

மன உறுதியுடன் ஐம்பொறிகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன் சிறந்த நிலை எய்துவான் என்கிறது பாடல்.
இக்குறளில் உள்ள உரன் என்ற சொல்லுக்கு உள உறுதி அல்லது திண்மை (வைராக்கியம்) என்பது சிறந்த பொருள். ஐம்பொறிகளையும் அடக்குதலுக்கு யானையைத் தோட்டியால் வழிநடத்துதல் உவமையாகக் காட்டப்படுகிறது. தோட்டி என்பது யானையை அடக்குவதற்குண்டான வளைவான இரும்பாலான ஒரு கருவியாகும். தோட்டி துறடு, துறட்டி அல்லது தொரட்டி என்றும் அறியப்படும். அங்குசம் என்பதும் வழக்கில் உள்ள சொல்லே. தோட்டி பலம்மிகக் கொண்ட யானை கண்ட இடம் எல்லாம் ஓடவிடாமல் செய்து நிலைநிறுத்துவது. கொடும் யானை அதன் மத்தகத்தில் தோட்டியால் குத்தி அடக்கப்பட்டு வழிப்படுத்தப்படும்.
ஓர்ஐந்தும் என்பது ஒரு மூன்று என்பதுபோல (திரு வி க) ஒரு சொல்லாட்சி. இங்கு ஐந்து என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளைக் குறிக்கிறது. ஓர்+ஐந்து எனப் பிரித்து 'உணர்கின்ற ஐம்பொறிகள்' எனவும் பொருள்கண்டனர்.
மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐந்து பொறிகள் வலிய யானை போன்று கட்டில் அடங்குவதற்கு கடினமானவை ஆகும். தோட்டி என்கிற சிறு கருவியே பெரிய யானையை அடக்கி கட்டிற்குள் வைத்திருக்க வல்லது. அதேபோல் மனத்திண்மையாலேயே ஐம்புலன்களை கட்டிற்குள் வைக்கமுடியும். புலன் வழியே தாம் செல்லாமல் அவற்றைத் தம் கட்டுப்பாட்டில் நிறுத்தும் ஆற்றல் மனத்துக்கண் இயல்பாகவே அமைந்திருக்கிறது. அவ்வாற்றலே உரன் என்பது.
திரு வி க தோட்டி என்பதற்கு கதவு என்று பொருள் கொண்டார். பொறிவழியே புலன்களை வெளியிற் போக முடியாமல் பற்றும் வழியை மன உறுதி என்னும் கதவால் அடைத்துவிடுவோரே துறந்தவர் என்றார்.

ஐந்தடக்கலாற்றினால் இல்லறத்தானே ஆயினும் துறவியாகின்றான். ஐம்புலன்களையும் அடக்கி ஆளத்தெரிந்தவர்கள் நீத்தார் என்ற பெருமை பெறுவர்.
ஒருவழிப்பட்ட உறுதியுடன் ஐம்புலன்களை அடக்குபவன் மேலான உலகமாம் நன்னிலம் சென்றடைய இப்பொழுதே இங்கு விதை போடுகிறான் என்பது இக்குறட்கருத்து. புலனடக்க முடையாரே நீத்தாராக நிலைத்து நிற்க முடியும்; அவர்களாலேயே சீரிய சமுதாயப் பணி ஆற்ற முடியும் என்பது குறிப்புப் பொருள்.

'வரனென்னும் வைப்பிற்கோர் வித்து' என்றால் என்ன?

நீத்தாரை இவ்வுலகில் வாழ்பவன் அல்லன் தேவர்களுள் ஒருவன் என்று கூறி அவர் மேலான இடம் செல்ல இவ்விடத்தே விதையாக விழுகிறார்கள் என்றார் மணக்குடவர். பரிமேலழகர் துறந்தவர்கள் வீட்டு நிலத்தில் விதையாக விழுந்து அங்கேயே தேவர்களாக முளைக்கின்றனர் என்கிறார். வானுலகம்/வீட்டுலகம் செல்வதற்குரிய வித்தாக துறவோர் இருப்பர் என்பது இவர்களது கருத்து.
இத்தொடரை 'வீடுபேறான மேலான செல்வத்துக்கு இவ்வாழ்வில் வித்தாகிறான்' என்று விளக்கினார் திரு வி க. 'வரந்தரக்கூடிய வலிமைக்கு ஒரு இருப்பிடமாவான்' என்றார் நாமக்கல் இராமலிங்கனார். 'முத்தரில் உயர்ந்த நிலையில் உள்ளவன் என்னும் கனிக்கு வித்து' என்று உரை காண்பர் வ உ சி. 'துறவறம் என்னும் சிறந்த நிலத்திற்கு ஒப்பற்ற விதையாவான்' என்பது குழந்தையின் உரை. 'வைப்பு என்பதற்குச் சேர்த்து வைக்கும் இடம் என்று பொருள்கொண்டு, வீட்டுலமாகிய களஞ்சியத்திற் சேர்த்துவைக்கப் பெறும் விளைந்த மணிபோல்வான் என்று உரைக்கினும் பொருந்தும்' என்பது தேவநேயப்பாவாணர் உரை.
வரம் என்பதற்குத் தெய்வம் முதலியவற்றால் பெறும் பேறு என்பது பொதுவான விளக்கம். உரையாசிரியர்களில் பலர் வரன் என்பதற்கு வீடு அல்லது முத்தி என்றே பொருள் கொண்டனர். அதையே துறவிகள் வேண்டுவர் என்பதாக இவர்கள் உரை அமைகிறது. வள்ளுவர் கூறும் நீத்தார் பயன் கருதார்; அறத்தைக் கடமையாகக் கொண்டவர்கள்; அறத்துக்காக அறம் செய்பவர்கள்; எல்லாவற்றையும் நீத்த தன்னலமற்ற துறவு நிலையில் உள்ளவர்கள். அவர்களுக்கு மோட்சம், வீடு என்கிற குறிக்கோள் ஒன்றும் கிடையாது. ஆனால் வரன் என்பதற்கு மேலான இடம், உயர்ந்த இடம் அல்லது சிறந்த உலகம் என்ற பொருளும் உண்டு. வைப்பு என்றதற்கு சேமித்து வைப்பது அல்லது ஒதுக்கிவைப்பது என்பது பொருள். 'வரன் என்னும் வைப்பு' என்பது 'சிறந்தது அல்லது மேன்மையான ஒதுக்கப்பட்ட இடம்' என்ற நேர்பொருள் தரும். இணைத்து நோக்கும்போது இத்தொடர்க்கு நீத்தார்க்கு மேலான இடம் அதுவாகவே சேமிக்கப்படுகிறது/ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்ற பொருள் கிடைக்கிறது.

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து என்பதற்கு மேலான/ உயர்ந்த /சிறந்த இடத்துக்கான விதையாகிறான் என்பது பொருளாகும்.

துறட்டியின் துணையால் யானையை அடக்கி முறைப்படுத்திச் செலுத்துவதைப் போல, உள்ள உறுதியால் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளை வரம்பு மீறிச் செல்லாமல் நெறிப்படுத்தும் நீத்தார் சிறந்த உலகம் என்ற அறுவடைப் பயன் எய்த இங்கு/இப்பொழுது ஒரு வித்து ஆகிறார் என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard