Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 28 நிறைமொழி மாந்தர் பெருமை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
28 நிறைமொழி மாந்தர் பெருமை
Permalink  
 


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:28)

பொழிப்பு: பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

மணக்குடவர் உரை: நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும்.
இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். ('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல்- பயனான் உணர்த்துதல்.)

வ சுப மாணிக்கம் உரை: நிறைமொழி மாந்தரின் பெருமையை உலகுக்கு அவர் கூறிய உண்மைகளால் அறியலாம்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.


நிறைமொழி மாந்தர் பெருமை :
பதவுரை: நிறை-நிரம்பிய; மொழி-சொல்; மாந்தர்-மக்கள்; பெருமை-உயர்வு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை;
பரிதி: ஐம்புலன் வழியே மனசை விடாமற் காக்கும் உபதேசத்தார் பெருமையை;
காலிங்கர்: ஐம்புலன்களையும் அடக்கி, இனியொரு கல்வி கேள்வியும் விரும்புதலின்றி, முத்தியின்பத்தை முழுதுணர்ந்து அமைந்த நீத்தோரது பெருமையை;
பரிமேலழகர்: நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை;
பரிமேலழகர் பதவுரை: 'நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி.

நிறைமொழி மாந்தர் என்றதற்குப் பழைய ஆசிரியர்களில் மணக்குடவர் 'நிரம்பிய கல்வியுடைய மாந்தர்' என்றும் பரிதி 'ஐம்புலன் வழியே மனசை விடாமற் காக்கும் உபதேசத்தார் [அறிவுறுத்தத் தக்கவர்கள்]' என்றும், காலிங்கர் 'ஐம்புலன்களையும் அடக்கி, இனியொரு கல்வி கேள்வியும் விரும்புதலின்றி, முத்தியின்பத்தை முழுதுணர்ந்து அமைந்த நீத்தோர்' என்றும் பரிமேலழகர்: 'நிறைந்த மொழியினை உடைய துறந்தார்' என்றும் பொருள் கூறுவர். பரிமேலழகர் தனது விரிவுரையில் நிறைமொழி என்பதற்கு 'அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி' என்று சொன்னார்.

இன்றைய ஆசிரியர்கள் 'சொன்னது பலிக்கும் மொழிகளை உடைய துறவிகளின் பெருமையை', 'அந்த மகான்கள் சொன்னது பலிக்கும் தவவலிமையுள்ளவர்கள். அவர்கள் பெருமையை', 'தவறாது பலிக்குஞ் சொற்களைச் சொல்ல வல்ல பெருமக்களது உயர்வை', 'சொன்னால் பயனைத்தரும் மொழியினையுடைய தந்நலம் துறந்தவருடைய பெருமையை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பயன் நிறைந்த சொற்களைக் கூறும் நீத்தாரது பெருமையை என்பது இப்பகுதியின் பொருள்.

நிலத்து மறைமொழி காட்டி விடும்:
பதவுரை: நிலத்து-பூமியின் கண்; மறை-மறை; மொழி-சொல்; காட்டிவிடும்-கண்கூடாகக் காண்பிக்கும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும்.
மணக்குடவர் கருத்துரை: இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.
பரிதி: வேத ஒழுக்கம் சொல்லும் என்றவாறு.
காலிங்கர்: இவ்வுலகத்து வேதங்களும் மற்றுள்ள நூல்களுமாகிய இவை எல்லாம் எடுத்துக் காட்டிய மொழிகளே கூறும் என்றவாறு.
பரிமேலழகர்: நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும்.
பரிமேலழகர் பதவுரை: காட்டுதல்- பயனான் உணர்த்துதல்.

இத்தொடர்க்கு மணக்குடவர் அவரது மந்திரங்களே காட்டும் என்று சொல்லி இஃது அவராணை நடக்குமென்று கூறியது என்றும் பகன்றார். பரிதியும் காலிங்கரும் வேத நூல்களே சொல்லும் என்றனர். பரிமேலழகர் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே பயனால் உணர்த்தும் என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவர்கள் உலகுக்கு உரைத்த ஆணையாகிய மந்திரமொழிகள் உணர்த்தி விடும்', 'வேதங்கள் காட்டுகின்றன', 'நிலவுலகத்தின்கண் வழங்கிப் பயன்றரும் அவர்களுடைய மந்திர மொழிகளே (தெளிவாகக்) காட்டும்', 'நிலவுலகில் அவர் கட்டளை மொழியாக வழங்கும் பொன்மொழிகள் விளக்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

நிலத்தில் அவர்கள் அருளிய மறைமொழிகளே நேரில் காட்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நீத்தார் பெருமை அவர் அருளிச்சென்ற மொழியால் விளங்கும் என்னும் குறட்பா.

பயன் நிறைந்த சொற்களைக் கூறும் நீத்தாரது பெருமையை நிலத்தில் அவர்கள் அருளிய மறைமொழிகளே நேரில் காட்டும் என்பது பாடலின் கருத்து.
'மறைமொழி' குறித்தது என்ன?

நிறைமொழி மாந்தர் என்ற தொடர்க்கு (பயன்) நிறைந்த சொற்களைக் கூறியவர்கள் என்பது பொருள்.
பெருமை என்ற சொல் சிறப்பு என்ற பொருள் தரும்.
நிலத்து என்ற சொல்லுக்கு இப்பூமியின் கண் என்று பொருள்.
காட்டிவிடும் என்றது காண்பிக்கும் என்ற பொருளது.

நிறைமொழி மாந்தர் என்று இங்கு சொல்லப்பட்டவர் நீத்தார் ஆவர். அவர்கள் தூய சிந்தனையுடன் நன்னெறிநின்று உலகோர் நலம் கருதி ஓதிய சொற்கள் மந்திர ஆற்றல் வாய்ந்தவை.

நிறைமொழி மாந்தர் என்பதற்குப் பல வேறுபட்ட பொருள்களில் உரைகள் உள்ளன. இவற்றை இரண்டு பெரும்பிரிவில் அடக்கலாம். ஒன்று தவறாது பலிக்குஞ் சொற்களைச் சொல்ல வல்ல பெரியவர்கள் என்பது. 'சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டும் குறைவின்றிப் பயக்கச் சொல்லுமாற்றலுடையார்' என்றார் தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர். அதைத் தழுவி பரிமேலழகர் 'அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழியுடையோர்' என்று கூறினார். பின்வந்தவர்களும் வரமும் சாபமும் கொடுக்க வல்லவர்கள் நிறைமொழி மாந்தர் என்று பொருள் கூறத் தொடங்கினர். இது முனிவர்களின் தனிப்பெருமையாய் அமைவதாகவும் கொள்ளப்பட்டது.
மற்றது மெய்யறிவு/உண்மை நிறைந்த மொழி பேசும் அல்லது பயன் நிறைந்த சொற்களைக் கூறும் துறந்தார் என்பது. நீத்தாரில் உயர்நிலை பெற்ற விருப்பு, வெறுப்பற்ற மெய்யுணர்வுடையவர்கள் இவர்கள். இந்நிலை எய்திய துறந்தோர் மனநிறைவு உள்ளவராக மனம் அழுக்கற்றுத் தூய்மையாக இருப்பர். அவர்களின் அறிவுரைகள் அழிவில்லாதன; மக்களின் விதியினை மாற்றும் ஆற்றலுடையன; அரிய வினைகளை ஆக்கிக் காட்டுவன
திரு வி க நிறை என்பது மன நிறையை உணர்த்துவது என்றும் ஒருமையில் நின்று அடங்கிய மனத்தினின்றும் வாய் வழியாக வருவது நிறை மொழி என்றும் கூறினார். 'மெய்ம்மை நிறை செம்மொழி மூலமாக உலகை ஈர்த்து வழிப்படுத்துவோர்களே நிறைமொழி மாந்தர்' என்பது கு ச ஆனந்தன் கூற்று. 'என்றென்றும் தோற்காத பொருள் கொண்ட சொல்லைப் பேசுபவர்கள்' என்று நிறைமொழி மாந்தர்க்குப் பொருள் கூறுவர் தெ பொ மீ.
இக்குறள் கூறும் நிறைமொழி மாந்தர் சாபம் கொடுப்பவரோ அல்லது வரம் தருவரோ அல்லர்; அவர்கள் என்றென்றும் தோற்காத பொருள் கொண்ட சொல்லைப் பேசுபவர்கள் ஆவர். நீத்தாரே நிறைமொழிமாந்தர் என்று இங்கு குறிக்கப்பெறுகிறார்கள்.

நிலத்து மறைமொழி என்றது சிறப்புக் குறிப்பு. இந்த நிலத்தில் வாழ்ந்து புகழ் எய்திய சான்றோர் முதுமொழி என்பது பொருள். சான்றாண்மை எய்திய நிறைமொழி மாந்தர் இந்த நிலத்தில் வழங்கிய மறைமொழிகளே அவர்கள் பெருமை கூறுவன. குறளும் நிறைமொழி மாந்தர் (வள்ளுவர்) ஆணையிற்கிளந்த மந்திரம் தான்.

நிறைவான மொழியினை உடையவர், தமது ஆணையால் சொல்லப்பட்ட மறைமொழிதான் மந்திரம் எனப்படும் என்பது தொல்காப்பியர் கருத்து. தொல்காப்பியர் மந்திரம் என்றதை வள்ளுவர் மறைமொழி என்கிறார்.
பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் ஆகியன யாப்பின் வகை என்பது தொல்காப்பியம். இவற்றுள் வாய்மொழி என்பதனை உரையாசிரியர்கள் அனைவரும் மந்திரம் என்றே குறிப்பிடுகின்றனர். மனம், மொழி, மெய் என்பனவற்றால் தூய்மையானவராக இருப்பின், அவர் வாய்ச்சொல் மந்திரம் ஆகும். மெய்மை உடையவர்களின் சொற்கள் மந்திரங்களே. இவர்களின் சொற்கள் ஆற்றல் உடையவை. இவர்கள் சொன்னவாறு செயல்கள் நிறைவேறும். இவர்களே நிறைமொழி மாந்தர்கள். இதனாலேயே உரையாசிரியர் பேராசிரியர் ‘நிறைமொழி மாந்தர்’ என்பது சொல்லிய சொல்லின் பொருண்மை அதாவது மந்திரத்தின் பொருண்மை யாண்டும் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையார் என்று விரித்துரைத்தார்; இளம்பூரணர், ‘வாய்மொழி எனினும் மந்திரம் எனினும் ஒக்கும்’ என்றார். அதாவது சான்றோர் அருளிக் கூறிய வாய்மொழி அனைத்தும் மந்திரமே.
இக்குறள், அறிவார்ந்த பயனுள்ள உயர்ந்தகருத்துக்களை எப்போதும் பேசுகிறவர்களுடைய பெருமையை, அவர்கள் வாய்மொழியே மறைப்பொருளாய் நின்று உணர்த்திவிடும் என்கிறது. அவர்கள் வாய்மொழிகளே அருளுறையும் மறைமொழிகளாகிவிடுகிண்றன.
நிறைமொழி மாந்தர்தம் பெருமையை அவர்தம் வாய்மொழியே காட்டும் என்று ஒருசாராரும் வேதம் முதலியன காட்டும் என்று மற்றவர்களும் உரை செய்தனர். நிறைமொழி மாந்தர்தம் பெருமையை வேதம் முதலியன கூறுவது கொண்டு அறிவதைவிட அவர்தம் வாய்மொழியே காட்டும் என்னும் உரை சிறக்கும்.

நிறைமொழி மாந்தர் நீத்தார் என்பதும் அவர்கள் உலகமக்கள் நலம் கருதி ஓதிய சொற்கள் மறைமொழி என்பதும் இக்குறள் கூறும் செய்திகள்.

'மறைமொழி' குறித்தது என்ன?

மறைமொழி என்பதற்கு பல வேறுவகையான விளக்கங்கள் உள. இச்சொல்லுக்கு மந்திரம் என்றும், வேதம் என்றும், இரகசியமொழி என்றும், அறநூல்கள்/நல்ல நூல்கள் என்றும் பொருள் உரைத்தனர்.

வாய்மொழி, மறைமொழி, மந்திரம் என்பன ஒருபொருள் குறித்த சொற்கள் என்பர்.
நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரமென்ப (பொருளதிகாரம்: செய்யுளியல்: 480: பொருள் (இளம்பூரணர் உரை): நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைந்தசொல் மந்திரமாவ தென்றவாறு.) என்பது தொல்காப்பிய இலக்கணத்தின் நூற்பா. இப்பாடலை அடியொற்றியே வள்ளுவர் இக்குறளைச் சொல்லும் பொருளும் சோர்வுபடாமல் படைத்தார் என்பதில் யாரும் மாறுபடவில்லை.

மந்திரம் என்பது அறிவியல் தோன்றுவதற்கு முந்திய கலை; தொன்மை மக்கள், அவர்களையும் அவர்களைச் சுற்றியுள்ள இயற்கையையும் மீறிய ஆற்றல் இருக்கிறது என நம்பி அவ்வாற்றலைச் சில சூத்திரங்கள் அல்லது வாய்பாடுகளைச் சுருக்கி உச்சரிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாமென எண்ணினர்; இவ்வாய்பாடுகளே மந்திரம் என்பதாகும் என்பது சிலர் கருத்து. உலக மக்களில் பழங்காலத்தில் மந்திர ஆற்றல் பெற்றிருந்தவராக நம்பப்படுபவர் தம் தம் தாய்மொழியிலேயே மந்திரங்களைக் கூறினர் என்பர் ஆய்வாளர்கள். மந்திரம் வழிபாட்டிற்கு மிகவும் இன்றியமையாததாக கருதப்பெறும். சடங்கு வழியான வழிபாட்டிலும், உபயவழிபாட்டிலும் மந்திரங்கள் பயன்படுத்தப்படும். சிறப்பும் சக்தியும் வாய்ந்த ஒரு குறிப்பிட்ட ஒலியோ அல்லது அந்த மாதிரியான ஒலிகளின் கூட்டமைப்போ ‘மந்திரம்’ எனப்பட்டது. மந்திரங்கள் முனிவர்களால் வெளியிடப்பட்டன. பல மந்திரங்கள் சொல் வடிவில், பெயர் வடிவில், வாக்கியங்களாக அல்லது பாடல்களாகக் கூட விளங்கும். சில மந்திரங்கள் எந்த அர்த்தத்தையும் கொடுக்காமல் ஏதோ ஒரு வகையான ஓசையாக அது இருக்கும். மந்திரங்கள் அனைத்திற்குமே மறைபொருள்கள் உண்டு என்பர்.
கடுமையான தவம் மேற்கொண்டவர்கள் சொன்னது சொன்னபடி நடந்துவிடும் என்பது பரிமேலழகர் போன்றோரது நம்பிக்கை. துறவிகளின் ஒவ்வொரு வார்த்தையும் மந்திரம் போன்றதாகும்; இம்மந்திரத்திற்கு ஒரு சக்தி உண்டு. அந்தச்சக்தி, மந்திரம் சொல்பவர் சொன்னால் மட்டுமல்ல நினைத்தாலும் கூட அதன் விளைவை ஏற்படுத்தும். மந்திரத்தில் ஆணை இடுபவருக்கு, மந்திரசக்தி கட்டுப்பட்டு நடக்கும். இவர்கள் அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும். இவர்கள் "மழை பெய்க” எனக் கட்டளையிட்டால் மழை பெய்யும்; அதனை நிறுத்த “மழை மேகம் மேலே செல்க” என்று சொன்னால் மழை நிற்கும். சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் வம்பர்களை நரியாக சபித்தது, கொங்கணவ முனிவரின் கண் பார்வை பட்ட கணமே பறவை சாம்பலாகியது இன்னபிற இவர்கள் சொன்னபடி நடந்தன என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறுவர்.

மந்திரம் என்பது வேதத்தைக் குறிக்கும் சொல்; அது வேதங்களை உச்சரிக்கும் ஆரியச் சடங்குகளுக்குப் பயன்படுவது என்பது சிலரது கருத்து. ஆனால் அதை சிலர் மறுப்பர். இவர்கள் தமிழ்ச் சொல்லான மந்திரம் குறிப்பது வேறு; ‘மந்த்ரம்’ என்ற வடசொல் குறிப்பது வேறு என்பர். இவர்கள் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு உரை வரைந்த பேராசிரியர் 'தமிழ் மந்திரம்' என்று சுட்டுவதை எடுத்துக்காட்டுவர். மேலும் இவர்கள் தொல்காப்பியர் குறிப்பிடும் மறைமொழிக்கும் வேதங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை; ‘மந்த்ரம்’ என்ற வடமொழிச் சொல்லிற்கு நினைப்பவரைக் காப்பாற்றுவது என்பது பொருள்; அதாவது வடமொழி மந்த்ரம் ஆளுமை கொண்டது; சொல்லுபவன் அதன் அடிமை; ஆனால், தமிழில் நிறைமொழி மாந்தர் சொல்லே மந்திரம்; அவர் சொல்லே ஆணை. அச்சொற்கள் சொன்னவற்றைப் பயந்துவிடும் என்று வேறுபடுத்துவர்.

மந்திரம் என்பது பெரியோர்கள் எழுதிய அறநூல்களையே குறிக்கும் என்பர் ஏனையோர். உலகில் பல நன்நெறிகளை நிறுவிய பெரியாரெல்லாரும் தாம் மெய்யாகக் கண்ட உண்மைகளை உலகமெல்லாம் உணர்ந்து உய்தற்பொருட்டு உலக மக்களுக்கு மொழிகளின் வாயிலாக அருளிச் செய்வர். இம்மொழிகளடங்கிய நூல்களே மறையென்று உலகில் வழங்கும். வழிவழியாகச் சான்றோர்களால் கூறப்பட்ட அறநூற்கருத்துக்கள் இவற்றுள் அடங்கும். சமுதாயத்திற்குப் பயன்படக் கூடிய ,அப்பழுக்கற்ற, ஐயம் சிறிதுமற்ற உறுதிக் கருத்துகளே ‘நிறைமொழி’ அந்தச் சிறந்த மொழி அவர்களுக்கு முன்பே கூறப்பட்டுக் காலத்தால் செம்மைப்படுத்தப்பட்டுத் தேறி வந்தவை. அதனால்தான் ‘மந்திரம்’ சிறப்புக்கு உரியதாகப் போற்றப்பட்டது.

தமிழண்ணல் மேலுலக கடவுள்கள் அருளியவை மந்திரங்கள் என்பதை மறுப்பதற்காக 'நிலத்து மறைமொழி' என்ற அடைமொழி வள்ளுவரால் தரப்பட்டது எனச் சொல்வார்.
இக்குறளில் கூறப்பட்ட மறைமொழி என்பது பரிமேலழகர் குறிப்பிடும் வரம்தரும்/சாபமிடும் முனிவர்கள் கூற்றல்ல; வழிபாட்டில் கூறப்படுபவையல்ல. வேதச் சடங்குகளில் உச்சரிக்கப்படுவன அல்ல.
குறள் நெறியில் மறைமொழி என்றது நிறைமொழி மாந்தர் அருளிச் செய்த நன்மொழிகளாம்.

தோற்காத மொழி பேசும் நீத்தார் பெருமையை அவர்கள் வாய்மொழியே காட்டும் என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard