பொழிப்பு (மு வரதராசன்):எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை: எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.)
குன்றக்குடி அடிகளார் உரை: எல்லா உயிர்களிடத்திலும் குளிர்ந்த அருள் தன்மை பூண்டொழுகுபவர் அந்தணர்; அறவோர். அந்தணர் பிறப்பால் அன்று; அந்தணர் என்பது சாதிப் பெயரன்று; எல்லா உயிர்களுக்கும் அருள் நலம் செறிந்த தண்ணளியை வழங்கி ஒழுகி வாழ்பவரே அந்தணர்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர்; மணக்குடவர் குறிப்புரை: மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது. பரிதி: அந்தணர் என்போர் அறவோர்; காலிங்கர்: உலகத்து அந்தணர் என்று சொல்லப்படுவார் யாரெனில் இங்குச் சொன்ன துறவறத்தினையுடையவர்கள்; பரிமேலழகர்: அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர்; பரிமேலழகர் குறிப்புரை: 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.
பழம் ஆசிரியர்கள் 'அந்தணர் என்று சொல்லப்படுவார் துறவறத்தினையுடையவர்கள்' என்று இப்பகுதிக்கு உரை பகன்றனர். பரிதி மட்டும் கிடந்தாங்கே அந்தணர் என்போர் அறவோர் என்று கூறினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அந்தணர் என்பவர் துறவிகளே. ஏன்?', 'அந்தணர் என்று சிறப்பிக்கப்படுவோர் துறவிகளே', 'அந்தணரென்பவர்கள் துறவோரெனப்படுவர்', 'துறவறத்தின்கண் நின்றவர் அந்தணர் என்று அழைக்கப்படுவர். (அந்தணர்-அழகிய அருளினை உடையவர்)', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அந்தணர் என்பவர் அறநெஞ்சம் கொண்டோர் என்பது இப்பகுதியின் பொருள்.
மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே. [செவ்வியதட்பம்- தீமை சிறிதும் பயவாத அருள்] பரிதி: எல்லாவுயிர்க்கும் அன்புடையராதலால் அந்தணர் என்னும் பெயராயிற்று. காலிங்கர்: எவ்வகைப்பட்ட உயிர்க்கும் தண்ணளியை மேவிக் கொண்டொழுகுதலான் என்றவாறு. பரிமேலழகர்: எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான். பரிமேலழகர் குறிப்புரை: பூணுதல்-விரதமாகக் கோடல்.
'எல்லாவுயிர்க்கும் அன்புடையராதலால்' என்ற வகையில் இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை வரைந்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவர் எவ்வுயிர்க்கும் அருள் செய்பவர்', 'எல்லா உயிர்களிடத்தும் அருளோடு நடப்பவர்கள் ஆதலின்', 'எல்லா உயிர்களிடத்துஞ் செவ்விய தண்ணருளை மேற்கொண்டு ஒழுகுவராதலின்', 'எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு நடத்தலின்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
எல்லா உயிர்களிடத்தும் அருள்கொண்டு ஒழுகுவராதலின் என்பது இப்பகுதியின் பொருள்.
நிறையுரை: எல்லா உயிர்களிடத்தும் அருள்கொண்டு ஒழுகுவராதலால் அந்தணர் என்போர் அறவோர் என்பது இப்பாடலின் கருத்து. அந்தணர் என்னும் சொல்லுக்கு இங்கு விளக்கம் தரத் தேவை என்ன?
குணத்தால் ஒருவர் அந்தணர் என அறியப்படுவார்; பிறப்பால் அல்ல.
எல்லாவுயிர்க்கும் செவ்வையான அருளை மேற்கொண்டு நடப்பதனால், அந்தணர் எனப்படுவோர் அறவோர் ஆவர். அந்தணர் என்ற சொல்லுக்கு அழகிய குளிர்ந்த அருளையுடைவர் என்பது நேர்பொருள். அந்தணர் என்பது அம்+தண்மையர் என விரியும். அழகிய குளிர்ச்சி உடையவர்கள் அல்லது நல்லருளுடையார் என்பது பொருள். அந்தணன் - அகத்தே தண்மை கொண்டவன் என்றும் 'அந்தத்தை அணவுவார் (ஆராய்வார்) அந்தணர்' என்றும் 'வேதாந்தத்தையே பொருள் என்று மேற்கொண்டு பார்ப்பார்' என்றும் இச்சொல்லை விளக்குவர். இச்சொல் மூன்று குறட்பாக்களில் ஆளப்பட்டுள்ளது. முதலில், அறஆழி அந்தணன்.. (குறள் 8) என்று அது இறைவனைச் சுட்டுகிறது. இரண்டாவதாக இப்பாடலில் (30) அந்தணர் என்போர் அறவோர்.. எனக் கூறப்பட்டு அந்தணர் என்பது தந்நலம் நீத்த அறவோரைக் குறிப்பதாகச் சொல்விளக்கமும் தரப்படுகிறது. இறைநூல் செய்வோர் என்னும் பொருளில் அந்தணர் நூற்கும் அறத்திற்கும்.. (குறள் 543) என்று கூறுவது மூன்றாவது பாடல். அந்தணர் என்பவர் அறப்பண்புடையராய் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவார் என்று இக்குறள் சொல்கிறது. பாடலின் முதற்பகுதி 'அந்தணர் என்போர் அறவோர்' என இச்சொல் நீத்தாரைக் குறிப்பதாக உள்ளது. பின்பாதியில் 'எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்' என அதற்கான காரணமும் சொல்லப்பட்டது. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு (23) என்ற குறளில் ‘அறம் பூண்டார்’ துறந்தாரைக் குறித்ததுபோலவே இங்குள்ள ‘அறவோர்’ என்பதும் நீத்தாரையே குறிக்கும். அந்தணர் நீத்தாரின் பண்புநலன் கொண்டு தொண்டாற்றுபவர். எல்லா உயிர்களிடத்தும் அருள் செலுத்தி வாழும் குணமுடையவர்கள் இவர்கள். எங்கெங்கு உயிர்கள் துன்பமுறுகின்றனவோ அங்கெல்லாம் சென்று அவற்றின் துயர் நீக்கப்பாடுபடுவர். நீத்தார் பண்புகளில் ஒன்றாக தண்ணளி கொண்டமை குறிக்கப் பெறுகிறது. செந்தண்மை என்ற சொல் செவ்விய குளிர்ச்சி என்ற பொருள் தருவது. இங்கு ௮து அருளைக் குறிக்கிறது. அருள் உள்ளத்தைக் குளிர்விப்பது. சினம் கொள்ளாமல் பழகுவதற்கு இனிமையானவரைத் தண்மையானவன் என்று சொல்லும் வழக்கம் உண்டு. அறவொழுக்கத்தைப் பற்றிப் பிறவொழுக்கத்தைக் துறந்தோராதலின் அந்தணர் அறவோர் எனப்பட்டனர்.
அறவோர் என்ற சொல்லுக்கு அறவழி நின்றவர் அல்லது மனமாசுகளைத் துறந்தவர் என்பது பொருள். அறவோர்கள் கருணையாக எல்லா உயிர்களிடமும் இருக்க வேண்டும் என்ற குறிக்கோள்படி வாழ்பவர்கள். செந்தண்மை என்பது செவ்விய அருள் அல்லது தண்ணளியைக் குறிக்கும். செந்தண்மை ஜீவகாருண்யத்தை அறிவுறுத்தும் ஒரு சிறந்த செந்தமிழ்த் தொடர் என்பார் திரு வி க. உள்ளத்தில் செந்தண்மை பூண்டு செயலிலும் அதைக் கொண்டுவர வேண்டும் என்பதால் 'ஒழுகலான்' என்று சொல்லப்பட்டது. ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள எல்லா உயிர்களிடத்தும் வேறுபாடு காட்டாமல் கருணையுள்ளம் கொண்டு தன்னுயிரே போல் அன்பு செய்யும் குண நலம் கொண்டு, மனமாசற்றவராய் ஒழுகும் நீத்தார் அந்தணர் அதாவது அறவோர் எனப்படுவர். அறவோரே அந்தணர் என்ற பெயருக்குரியவர் எனவும் அவர் செந்தண்மை பூண்டொழுகுபவர் என்பதும் அழுத்தமாகச் சொல்லப்படுகின்றன.
அந்தணர் என்னும் சொல்லுக்கு இங்கு விளக்கம் தரத் தேவை என்ன?
அந்தணர் என்னும் சொல்லுக்கு விளக்கம் தருவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது. அந்தணர் என்ற சொல் உணர்த்தும் பொருள் என்ன என்பதில் பலகாலமாக ஒரு குழப்பம் இருந்து வந்திருக்கிறது எனத்தோன்றுகிறது. அது இச்சொல் குலத்தைக் குறிப்பதா? அல்லது குணத்தைப் பற்றி வருவதா? என்பதாகும். அதற்கு விடைகாணும் முகத்தான் 'அந்தணர் என்று சிறப்பித்துச் சொல்லப் பெறுபவர் அறங்களை வழுவாது பின்பற்றுபவர்; எல்லா உயிர்களிடத்தும் அருள் உள்ளம் கொண்டு ஒழுகுபவர்' என்பதைத் தெளிவாக்க வள்ளுவர் இங்கு அச்சொல்லுக்கு வரையறை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.
பிறப்பால் அல்ல, செய்யும் தொழிலால் மக்கள் வேறுபடுவர் என்பது குறட்கோட்பாடு. தொழிலால் ஏற்பட்ட பாகுபாடுகளில் அரசர், ஆயர், உழவர், பார்ப்பார், அறுதொழிலோர் ஆகிய பெயர்கள் குறளில் காணப்படுகின்றன. பார்ப்பார், அறுதொழிலோர் இவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட குலப் பெயரைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றன. இவ்விரண்டோடு அந்தணர் என்ற சொல்லும் இச்சாதியினரையே குறிக்கும் என்று சிலர் கூறிவருகின்றனர். இது தவறு என்று சொல்வதுபோல இக்குறட்கருத்து அமைகிறது. தண்மையும் அழகும் கொண்ட இயல்பினர் அதாவது கருணை உள்ளம் கொண்டவர்கள் என்ற பொருளுடைய அந்தணர் என்ற சொல் சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது. அந்தணர் என்றது இங்கிருந்த தமிழ் முனிவர்களைக் குறித்தது; அவர்கள் அரசர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் என்றும், அந்தணர் என்ற சொல் ஆரிய பிராமணர்களைக் குறிப்பதல்ல; அந்தணர்கள் என்போர் ஒரு சாதியினர் அல்லர்; சான்றோர் என்ற சொல் போல அந்தணர் என்பவர் பெரியோர், நல்லவர், உயர் ஒழுக்கம் உடையவர், அன்புடையவர் இவர்களையே குறிக்கும் என்றும் 'அந்தணர்' என்ற சொல்லுக்கு விளக்கம் செய்வர். 'பிராமணன் என்ற (அதாவது பிறப்பால் உயர் குலத்தான், தலைமைப் பண்பு கொண்டவன் என்ற பொருளுடைய) சொல்லுக்கு எதை முன்பு ஆரியர்கள் வரையறுத்திருந்திருந்தார்களோ அந்த வடசொல்லுக்கு நேர்பொருளாக அந்தணர் என்பதைப் பொருத்த முயற்சி எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது; ஆரியர் மேற்கொண்ட திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கவேண்டும்; உலக வழக்கில் அந்தணர் எனும்போது அது பிராமண வேதியர்களையே குறிக்கவேண்டுமென்று அவர்கள் விரும்பினர்; இந்தச் சொல்லாடலின் வன்தாக்குதலுக்கு எதிராக வள்ளுவர் எழுப்பிய நாகரிகமான மறுப்புக்குரலே இப்பாடல்; 'அந்தணர் என்போர் அறவோர்' என்ற எதிர்மறை வரைவிலக்கணம் தர முற்படுகின்றார் வள்ளுவர்' என்பது ஆய்வாளர்கள் கருத்து.
'அந்தணர் என்பது ஒரு சாதிப் பெயரன்று. குணப்பெயர் என்பது 'அந்தணர் என்போர் அறவோர்' என்ற குறிப்பு மறுப்பாலும் பெறப்படுகிறது' என்பார் வ சுப மாணிக்கம். 'அந்தணர் என்போர் அறுதொழிலோர் என்றோ, பார்ப்பார் என்றோ, பிறப்பால் உயர் குலத்தார் என்றோ விளக்கம் தராமல், அவற்றை மறுப்பார் போலப் புதுவிளக்கம் தந்து மடைமாற்றுகிறார் வள்ளுவர்' என்பார் தமிழண்ணல். பரிமேலழகரும் இப்பாடலுக்கான உரையில் அந்தணர் என்பது சாதிப் பெயராகாது என்ற வகையில் 'அருளுடையராகலின் காரணப் பெயராயிற்று' என்று பொருள் கூறியுள்ளமை நோக்கத்தக்கது. எனவே அந்தணர் என்னும் சொல் பிறப்புப்பற்றி வந்ததன்று என்பது தெளிவு. அற உணர்வும் அருள் நெஞ்சமும் உடையவர் இந்தநாட்டில் இந்தச்சமயத்தில் இந்தக்குலத்தில் பிறத்தல் வேண்டும் என்பதில்லை. அவர்க்கு நாடு, நிறம், மொழி, சமயம், சாதி போன்ற வேற்றுமைகள் தோன்றுவதில்லை. அறநெஞ்சம் படைத்தவர் யாராயினும் எக்குடிப் பிறந்தவராயினும் எந்நிலையில் இருப்போராயினும் இல்லறத்தாராயினும் துறவறத்தாராயினும் ஆணாயினும் பெண்ணாயினும் அவர் அந்தணர் ஆவர். செந்தண்மை பூண்டொழுகும் ஈரநெஞ்சம் இல்லாதவர் பார்ப்பனக் குலத்திலோ, வேறு எக்குலத்திலோ பிறந்தாலும் அந்தணராகார். இதனால், எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகும் சிறப்பொழுக்கம் இல்லாதவர், அந்தணர் எனப்படமாட்டார் என்பதும், எக்குலத்தில் பிறந்தாலும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் அந்தணர் எனப்படுவாரென்பது இப்பாடல்வழி தெளிவுறுத்தப்பட்டது. அந்த நல்லருள் உடையவர்களே அறவோர்கள். அறவோர்களே அந்தணர்கள். அவர்களாலேயே எவ்வுயிர்க்கும் வேற்றுமை பாராட்டாது அருள் பூண்டொழுக முடியும். அந்தணர் சாதிப்பெயரைக் குறிக்கும் சொல் அல்ல என்பதும் இப்பாடல்வழி உணர்த்தப்பட்டது. பிராமணர்களில் சிலர் அந்தணர்களாகப் போற்றப்பட்டிருக்கலாம்; அதனால் பிராமணர்கள் எல்லோரும் அந்தணர்கள் ஆகிவிடமாட்டார். அருளுடைமையினால்தான் எவரும் அந்தணர் ஆக முடியும். உலகநன்மைக்குப் பாடுபடும் அறக்குணம், எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுதல் என்பவை நீத்தார் பண்புகள் எனச் சொல்ல வரும் வேளையில் அந்தணர் என்ற சொல்லுக்கான விளக்கமும் தருகிறார் வள்ளுவர் இங்கு.
எல்லா உயிர்களிடத்தும் அருள்கொண்டு ஒழுகுவராதலால் அந்தணர் என்போர் அறவோர் என்பது இக்குறட்கருத்து.