அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:32)
பொழிப்பு:ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.
மணக்குடவர் உரை: ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை. இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.
பரிமேலழகர் உரை: அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. ('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.)
சி இலக்குவனார் உரை: அறம் செய்வதைவிட மேம்பட்ட ஆக்கமும் இல்லை. அதனை மறப்பதைவிடக் கொடிய கேடும் கிடையாது.
பொருள்கோள் வரிஅமைப்பு: அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை .
ஒருவர்க்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை என்று இப்பகுதிக்கு உரை கூறினர் பழம் ஆசிரியர்கள்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறநெறியைக் கைக் கொள்வதன் மேற்பட்ட ஆக்கமும் இல்லை', 'ஒருவனுக்கு அறம் செய்தலினும் மிக்க நன்மையில்லை', 'அறத்தைப் பார்க்கிலும் மேன்மைப்படுத்துவது யாதுமில்லை', 'தர்மங்களைச் செய்வதுபோல நன்மை தரக்கூடியதும் இல்லை' என்றபடி உரை தருவர்.
அறம் செய்வதைவிட மேன்மையானது இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு: பதவுரை: அதனை-அதை; மறத்தலின்-மறத்தலைவிட; ஊங்கு-மேற்பட்ட; இல்லை-இல்லை; கேடு-அழிவு.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை. மணக்குடவர் கருத்துரை: இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று. பரிதி: தருமத்தை மறப்பதுபோலக் கேடும் இல்லை. காலிங்கர்: மற்றிதனை மறத்தலின் மேலாயிருப்பதொரு கேடுமில்லை. பரிமேலழகர்: அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. பரிமேலழகர் கருத்துரை: 'அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.
அறம் செய்ய மறத்தலைவிட மேற்பட்ட கேடும் இல்லை என்று பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அதை மறந்து கைவிடுதலை விடக் கேடும் இல்லை', 'அதனை மறத்தலினும் மிக்க தீமையுமில்லை', 'தர்மங்களைச் செய்யாமற் மறந்துவிடுவது போலத் தீமை தரக் கூடியதும் இல்லை.', 'அதனை மறந்தொழுகுவதைப் பார்க்கிலும் கெடுதியுமில்லை' என்றபடி உரை தந்தனர்.
அறம் செய்ய மறத்தலைவிட மிக்க கேடும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
நிறையுரை: அறம் செய்யாவிட்டால் கேடு உண்டாகும்.
அறம் செய்வதைவிட உயர்வானது இல்லை; அதைச் செய்ய மறத்தலைவிட மிக்க கேடும் இல்லை என்பது இக்குறட்கருத்து. அறம் செய்ய 'மறத்தல்' என்றால் என்ன? அறம் செய்யாவிட்டால் கேடு வருமா என்ன?
அறத்தின் என்ற சொல்லுக்கு அறத்தில் என்பது பொருள். ஊங்கு என்ற சொல் விஞ்சிய என்ற பொருள் தரும். ஆக்கமும் இல்லை என்ற தொடர்க்கு வளர்ச்சியும் இல்லை என்று பொருள். அதனை என்ற சொல் இங்கு அறத்தைக் குறித்தது. 'கேடு' என்ற சொல் அழிவு அல்லது தீமை என்ற பொருளது.
ஒருவர்க்கு அறம் செய்தலினும் மிக்க நன்மையில்லை. அதனைச் செய்ய மறத்தலினும் மிக்க தீமையுமில்லை.
நல்லன எல்லாம் அறமே. ஒருவரது செயலும் சொல்லும் எண்ணமும் அறத்தின் அடிப்படையாய் அமைய வேண்டும். அறம் செய்யவேண்டியதை வலியுறுத்த வேண்டியே, அதன் ஆக்கத்தை இப்பாடலில் மறுபடியும் சொல்லி அறம் செய்ய மறவாதே என்கிறது இக்குறள். அறம் செய்தலின் சிறந்த பேறில்லை என்றதுடன் நில்லாமல் அறம் செய்யாமையால் கேடுவரும் என்றும் கூறுவது இப்பாடல்.
'அறத்தினூஉங்கு ஆக்கம் இல்லை' என்று முந்தைய பாடலில் சொல்லப்பட்டது மீண்டும் இங்கு கூறப்பட்டது. 'இது கூறியது கூறியது ஆகாது; 'முன் சொன்ன அதனையே பின்னும் சொல்லி ஆண்டு எஞ்சி நின்றன சில கூட்டி உரைத்தல்' என்னும் 'பின்வருநிலை' அலங்காரம் இது; இது 'வலியுறுத்தல்' எனவும் 'வழிமொழிதல்' எனவும் வழங்கப்படும்' என்பர் இலக்கண ஆசிரியர்கள். 'அறத்தினூஉங்கு' என்னும் அளபெடை எழுச்சியையும் உயர்ச்சியையும் உணர்த்தியது என்பார் திரு வி க.
அறம் செய்ய மறத்தல் என்றால் என்ன? அறம் செய்யாவிட்டால் கேடு வருமா?
அறம் செய்யாது விடுதல்தான் அறத்தை மறப்பதாகும். புறக்கணித்தல் என்று சொல்லாமல் 'மறத்தல்' என்கிறது குறள். புறக்கணித்தல் என்பது மனதால் அறிந்தே, செருக்காலோ பிறவற்றாலோ செய்வது. மறந்து விடுவதனாலும் தீமை செய்ய நேரிடுகிறது. அறம் நினைவில் இருந்தால் ஒருவர் அறமல்லாதவற்றைச் செய்யமாட்டார் என்பதும் கருத்து. அறம் செய்வதனால் நன்மைகள் உண்டாகும் என்பது சரி. அதைச் செய்யாவிட்டல் அந்த நன்மைகள் உண்டாகாது, அவ்வளவுதானே. கேடு எப்படி வரும்? அறநெறி போற்றி வாழ்ந்தால் நன்மை விளையும்; அறம் செய்யாவிட்டால் தீமை விளையும் என்றபடி உலக இயற்கை அமைந்திருக்கின்றது அதாவது அறத்தால் விளையும் நன்மையையோ அல்லது அது செய்யாமல் உண்டாகும் தீமையையோ மாற்றிவிட முடியாது என்று குறள் எண்ணுகிறது. அறம் செய்யாமையால் ஒருவனுக்குப் பழி உண்டாகி அவன் அறியாமலே தனக்கு ஊறு விளைத்துக் கொள்கிறான் என்பதும் கருத்து. 'என்வரையில் நான் தீமை செய்யாமல் இருக்கிறேன். அது போதாதா?' என்று வாளா இருக்காது அறமும் செய்யவேண்டும் என்பது வலியுறுத்தப்பெறுகிறது. ஒன்றினால் வரும் சிறப்பைச் சொல்லி, அவ்வாறில்லையென்றால் உண்டாகும் கெடுதியையும் கூறும் போது, செயலின் சிறப்பு நினவில் தங்கும். எனவேதான் மீண்டும் மீண்டும் அறத்தின் ஆக்கத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். அறச் சிந்தனை கொண்டவாழ்வே உயர்ந்தது. அதுவே சிறந்த ஒழுகலாறு.
அறம் செய்வதைவிட மேன்மையானது இல்லை; அதைச் செய்ய மறத்தலைவிட மிக்கக் கேடும் இல்லை என்பது இக்குறட்கருத்து