Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 38 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
38 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்
Permalink  
 


வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:38)

பொழிப்பு : ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

மணக்குடவர் உரை: ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம்.
இது வீடு தருமென்றது.

பரிமேலழகர் உரை: வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம்.
(ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.

குன்றக்குடி அடிகளார் உரை: வாழ்நாள் வீழும் தன்மையது. இடையீடு உடையது. வாழ்நாள் கழிந்துகொண்டே போகின்றது. ஆதலால், நாள்கள் வீணாகப் போகாமல் நன்றாற்றின் அந்த நன்மை ஒருவனது வாழ்நாள்கள் வீழ்நாள்களாக அழிந்துவிடாமல் வழியடைத்து வளர்ப்பது ஆகும். பிறப்பைத் தடை செய்யும் என்பது கருத்து. வாழ்ந்த நாள்கள் பயனுடையவாய் அமைந்துவிடின், வீழ்நாள்களாகக் கருதப் பெறா என்றும் கொள்ளலாம்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.


வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்:
பதவுரை: வீழ்நாள்-வீணாகின்ற நாள்; படாஅமை-உண்டாகாமல்; நன்று-அறம்; ஆற்றின்-செய்தால்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின்;
பரிதி: அவமே நாட்போகாமல் தன்மமே செய்க.
காலிங்கர்: ஒருவன் நாள் இடைப்படாமே நல்வினையாகிய அறத்தினைச் செய்யின்'
பரிமேலழகர்: செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்;

'ஒருநாள் கூட வீணாகாமல் ஒருவன் அறவினை செய்தால்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்லது செய்யாது விடின் அது வீழ்நாளாகிப் போகும்; வீழ்நாளாகி விடாதவாறு மிகக் கருத்தோடு நல்லவற்றைச் செய்து வருவானாயின்', 'நாள் தவறாமல் அறஞ்செய்க', 'அறம் செய்யாத நாள் ஏற்படாமல் ஒருவன் அறத்தைத் தொடர்ந்து செய்வானாயின்', 'வீணாக்கும் நாளின்றி நன்மைகளைச் செய்தால்' என்றவாறு உரை பகன்றனர்.

அறஞ்செய்யாது வீணே கழியுநாள் ஏற்படாமல் என்பது இத்தொடரின் பொருள்

அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்:
பதவுரை: அஃது-அது; ஒருவன்-ஒருவன்; வாழ்நாள்-(பயனின்றி) உயிரோடிருக்கின்ற நாள்; வழி-பாதை; அடைக்கும்-மூடுகின்ற; கல்-கல்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம்.
மணக்குடவர் கருத்துரை: இது வீடு தருமென்றது.
பரிதி: அது இனிமேற் செனனம் இல்லாமல் செனனவழியை அடைக்குங்கல் என்றவாறு.
காலிங்கர்: பிறகு அங்ஙனம் செய்கின்ற வினையீர்ந்த பெரியோனுடைய வாழ்நாளது வழியினை அடைக்குங்கல் என்றவாறு.
காலிங்கர் கருத்துரை: அதன் கருத்து: என்றும் தான் செய்துவருகின்ற இல்லறமானது ஒரு நாளாயினும் விழுநாள் படாமே செய்து வருமாயின் அம்மிகுதியான் பெரியோனுடைய வாழ்நாளினது போவது வருவதாகிய வழியினையடைக்குங் கல்லாம் என்றவாறு.
பரிமேலழகர்: அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம்.
பரிமேலழகர் விரிவுரை: ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.

பழைய ஆசிரியர்கள் 'அவ்வறச்செயல் மீண்டும் பிறப்பதைத் தடுக்கும் கல்லாகும்' என்ற பொருள் உரை தருவர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அஃது ஒருவனது வாழ்நாள் எனப்படும் வழியில் வீழ்நாளாகிய இடைவெளிகள் ஏற்பட்டு அடைக்கும் கல்லாகும்; அது வாழ்நாள்களின் தொடர்ச்சியைக் காக்கும் என்பதாம்', 'அது ஒருவன் பிறப்பு வழியை அடைக்கும் கல்லாகும்', 'அஃது அவனுக்கு வரும் பிறப்பினைத் தடுக்கும் கல்லாகும்', 'பிறந்ததன் பயனை அடைந்தவன் ஆவான்' என்றபடி உரை நல்கினர்.

அது பயனின்றி கழியும் ஒருவனது வாழ்நாளில் உள்ள இடைவெளிகளை அடைக்கும் கல்லாகும் என்பது பொருள்.

நிறையுரை:
இடையீடு இல்லாமல் அறம் செய்தால் இன்னல்-இடைவெளி இல்லாது வாழ்வு அமையும்; வாழ்நாள் முழுதும் அறம் செய்க என அறிவுறுத்தும் செய்யுள்.

வீணே கழியுநாள் ஏற்படாமல் அறஞ்செய்தால், அது ஒருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் என்பது பாடலின் பொருள்.
வாழ்நாள் வழியடைக்கும் கல் என்றால் என்ன?

வீழ்நாள் என்பதற்கு வீண் + நாள் என்று கொண்டு வீணாக கழியும் நாள் என்றும் படாமை என்பதற்கு உளவாகாமல் எனவும் கொண்டு வீழ்நாள் படாமை என்பதற்கு 'வீணே கழியும் நாள் ஏற்படாமல்' என்று பொருள் கூறுவர்.
நன்றாற்றின் என்றது அறங்களைச் செய்தால் எனப்பொருள்படும்.
அஃதொருவன் என்ற தொடர் அது ஒருவன் என்ற பொருள் தரும்.

வீணாகக் கழியும் நாள் ஆகாமல் ஒருவன் நல்ல அறச் செயல்களைச் செய்தால் அது அவன் வாழும் நாளுக்கு வழியமைக்கும் கல் அதாவது அது வாழ்நாள்களின் தொடர்ச்சியைக் காக்கும் வழியாகும்.

இதற்கு முந்தைய பாடல் ஒன்றில் (குறள் 36) இன்றே அல்லது உடனே அறம் செய்க என்று சொல்லப்பட்டது. இங்கு என்றும் அறம் செய்க என்று வலியுறுத்தப்படுகிறது. இழந்த காலத்தைத் திரும்பப் பெறுதல் இயலாது ஆதலால் ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு வகையில் நல்லது செய்க எனச் சொல்கிறது இப்பாடல். அறம் செய்யாத நாள் என்று ஒன்று இருக்க வேண்டாம். அப்படி நாள் சென்றால் அது வீணாய்ப்போன நாள் ஆகும். பயனின்றிக் கழியும் நாளை வீணாள் என்று பேச்சு வழக்கு உள்ளது. அதுவே வீழ்நாள் என இங்கு வந்தது.
வீழ்நாள் என்பதற்கு 'விரும்புநாள்' எனக் கொண்டு, வீழ்நாள் படாமை என்றதற்கு 'நல்லநாளை எதிர்பார்த்துக் காலங்கழிக்காமல்' என்றும் உரை உள்ளது.
இக்குறளுக்கு புலவர்குழந்தை 'ஒருவன் எப்போதும் நன்மையே செய்யின், அது அவன் வாழ்நாளில் தீமைவரும் வழியை அடைக்கும் கல்லாகும்' என பொழிப்புரை தந்து 'நல்லதையே செய்து பழகினால் அப்பழக்கம் தீமை செய்ய இடங்கொடாதென்பதாம். நற்பழக்கமே தீப்பழக்கத்திற்குத் தடைக்கல்' என்ற விளக்கமும் செய்வார்.

 

வாழ்நாள் வழியடைக்கும் கல் என்றால் என்ன?

வழியடைக்கும் கல் என்பதற்கு வழியை அடைத்து வைக்கப்படும் கல் என்று நேர் பொருள் காணலாம். வாழ்நாள் வழியடைக்கும் கல் என்பதற்குப் பழம் ஆசிரியர்கள் 'பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழி', 'வாழ்நாளது வழியினை அடைக்குங்கல்' என்று பொருள் கூறினர். இன்றைய உரையாளர்களில் பெரும்பான்மையினரும் அவ்விதமே கொள்கின்றனர். இது பிறப்பு வரும் வழியை யடைக்குங்கல் என்ற சமயக் கருத்தைத் தருவது; பல்பிறப்பு, மறுபிறப்பு, வினைப்பயன் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டது; மீண்டும் மீண்டும் பிறவி எடுத்தல் என்ற பிறவிச்சுழற்சிக் கோட்பாட்டைத் தழுவியது. காடுகளில் வாழ்வார் முள்ளை வெட்டிப்போட்டு வழியை அடைப்பதுபோல, ஊரில் வாழ்வார் வழியை வெட்டிப்போட்டு அடைப்பதுபோல, மலைநாட்டு வாழ்வார் கல்லை ஒருசேர நட்டு வேலி அமைத்து வழியடைப்பது வழக்கம். அதனைக் கண்டு கூறப்பட்டது வழியடைக்கும் கல் என்பது என்பர்.
இப்பொருளை ஒப்புக்கொள்ளதவர்கள் 'வாழ்நாள் வழியடைக்கும் கல்' என்பதற்கு 'வாழ்நாளாகிய இடைவழியை அடைத்து நிரப்பும் பாலக்கல்', 'வாழ்நாளின் வழிக்கு அமைக்கப்படும் கல்', 'வாழ்நாளில் தீமைவரும் வழியை அடைக்கும் கல்', 'வாழும் நாளின் துன்பம் வரும் வழியை அடைக்குங்கல்', 'அவன் வாழ்நாளில் தீமைவரும் வழியை அடைக்கும் கல்' 'வழியைச் செம்மையாக அமைக்கும் கல்', 'சாவுக்குப்பின்வரும் துயர வாழ்க்கைக்குச் செல்லும் வழியைத் தடுக்கும் கல்', 'வாழும் நாளின் வழியைக் காட்டும் அடையாளக் கல்' என்று பலவிதமாக விளக்கம் தந்தனர்.
'வழியடைக்குங்கல்' என்பதற்கு 'வழியில் பரப்பப்படும் கல்' என்று திரு வி க., பொருள் கூறினார்.

இவ்வாறாக இத்தொடர்க்குக் கருத்து உரைப்பவர்கள் இருபெரும் பிரிவாக-மறுபிறவியைத் தடுக்கும் கல் என்று கூறுவோராக ஒரு சாராரும், வாழ்நாளின் வழிக்கு அமைக்கப்படும் கல் என்றும் தீமை வரும் வழியை அடைக்குங்கல் என்றும் சொல்லும் மற்றொரு சாராராகவும் உள்ளனர்.
வாழ்நாள் வழி அடைக்கும் கல் என்றால் வாழும் நாட்களைக் குறைக்கும் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். ஆனால் தொல்லாசிரியர்களும் மற்றவர்களும் வாழ்நாள் என்பதற்கு 'பிறந்திறக்கும் துன்பமான வாழ்வு என்று பொருள் கொண்டு, பிறவியைத் தடுக்கும் கல், வீடுபேறு என்ற வண்ணம் உரை கூறினர். வள்ளுவர் மறுபிறவி, பல்பிறவி பற்றிக் குறளில் பேசியிருக்கிறார் என்பது உண்மைதான். அதே சமயம் அவர் இவ்வுலக வாழ்க்கையை மேன்மையாகவே கருதுகிறவர். மாந்தர் நிலமிசை நீடு வாழவேண்டும் என்று விரும்புகிறவர். அவர் பிறவியைத் தடுக்கும் வழி சொல்வாரா? பிறப்பிறப்பு வரும் வழியை அடைக்க அறம் செய் எனக் கூறுவாரா? மாட்டார்.
வழியடைக்கும் என்பதற்கு வழியமைக்கும் என்றும் பாடம் உண்டு என்பார் கு ச ஆனந்தன். வாழ்நாள் வழியடைக்கும் கல் என்பதற்கு வாழ்நாளின் வழியைச் செம்மையாக்கப் பரப்பும் கல் எனப் பொருள் கொள்ளமுடியும். அது நீண்ட வாழ்நாளைத் தரும் எனப் பொருள் தரும்.
இக்குறளுக்கான தமிழண்ணலின் உரை "நல்லது செய்வதற்கு நாள் நட்சத்திரம் பார்க்கவேண்டியதில்லை. நல்லதைச் செய்யும் நாளெல்லாம் வாழும் நாளாகும்; செய்யாதுவிடின் அது வீழ்நாளாகிப் போகும். வீழ்நாளாகி விடாதவாறு மிகக் கருத்தோடு நல்லவற்றைச் செய்து வருவானாயின், அஃது ஒருவனது வாழ்நாள் எனப்படும் வழியில் வீழ்நாளாகிய இடைவெளிகள் ஏற்படாது அடைக்கும் கல்லாகும். அது வாழ்நாள்களின் தொடர்ச்சியைக் காக்கும் என்பதாம். வாழ்நாள் வழியடைத்தல்-வாழும் நாளுக்கு வழியமைக்கும் கல் என்பார் திரு வி க. வீழ்நாள் படாது காத்தால் எல்லா நாளும் வாழ்நாளாகும்" என்கிறது. இது இப்பாடலுக்கான நல்ல விளக்கமாக அமைகிறது.

வாழ்நாளை வீழ்நாள் ஆக்காமல் நாளும் நல்லவற்றைச் செய்துவந்தால், அது ஒருவன் வாழ்நாளில் வீணாகும் நாள் ஏற்படாமல் தடுக்கும் கல்லாகும் என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard