மணக்குடவர் உரை: அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம். இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.
பரிமேலழகர் உரை: அறத்தான் வருவதே இன்பம் - இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த - அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல - அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல. ('ஆன' உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, 'தூங்கு கையான் ஓங்கு நடைய' (புறநா.22) என்புழிப்போல. இன்பம் - காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின் 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: நன்னெறியால் வரும் இன்பமே இன்பம். பிற வழியால் வரும் இன்பங்கள், துன்பத்தோடு பொருந்தியனவே; மேலும் அவை புகழையுந் தரமாட்டா.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; பரிதி: தன்மத்தினாலே வந்த இன்பமே இன்பம்; காலிங்கர்: இம்மைக்காயினும் மறுமைக்காயினும் இல்லறத்தினால் விளைவதே சிறந்த இன்பமாவது; பரிமேலழகர்: இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; பரிமேலழகர் விரிவுரை: 'ஆன்' உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, 'தூங்கு கையான் ஓங்கு நடைய' (புறநா.22) என்புழிப்போல. இன்பம் - காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும்.
இத்தொடர்க்கு மணக்குடவரும் பரிதியும் 'அறத்தால் வருவதே இன்பம்' என்று உரை பகன்றனர். காலிங்கரும் பரிமேலழகரும் 'இல்லறத்தினால் விளைவதே இன்பம்' என்றனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறவழியில் வருவதே இன்பம்', 'அறநெறியால் வருவதே இன்பம்', 'அறங்களைச் செய்து அதனால் அடைகின்ற மகிழ்ச்சிதான் நல்ல இன்பம்; அது புகழும் தரும்', 'அறநெறியில் பொருந்தி அடைவதே இன்பம்' என்றபடி உரை நல்கினர்.
அறவழியில் பொருந்தி வருவதே இன்பம் என்பது இத்தொடரின் பொருள்.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம். மணக்குடவர் கருத்துரை: இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது. பரிதி: அஃது அன்றியிலே தன்னிடத்திலுண்டான பொறையுங் கீர்த்தியும் இல்லை என்றவாறு. காலிங்கர்: ஒழிந்தன எல்லாம் அவ்வின்பத்தின் புறத்தன; புகழும் இல்லாதன என்றவாறு. பரிமேலழகர்: அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல. பரிமேலழகர் விரிவுரை: இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின் 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.
இத்தொடர்க்குப் பழம் ஆசிரியர்கள் 'அறவழியின்றி வருவன எல்லாம் துன்பம் தருவன; புகழும் இல்லாதன' என்று பொருள் உரைத்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மற்றவையெல்லாம் புறம்பானவை; புகழுக்குரியனவும் இல்லை', 'பிறவழியால் வருவன துன்பம்; பழி', 'மற்ற இன்பங்களெல்லாம் அப்படிப்பட்ட நல்லவையல்ல. அவற்றால் புகழும் கிடைக்காது', 'அறமல்லாப் பிறவழியில் அடைவது துன்பம்; புகழும் உண்டாகாது' என்றவாறு உரை தந்தனர்.
பிறவழியால் வருவன இன்பத்துக்கு வேறாயுள்ளவை; புகழுக்குரியனவும் இல்லை என்பது இத்தொடரின் பொருள்.
நிறையுரை: நல்லொழுக்கத்தாலும் நற்செயல்களாலும் கிடைப்பது மட்டுமே இன்பம்; மற்றவை வேறானவை, புகழும் தரா என்று முடிவாகக் கூறும் குறள்.
அறவழியில் பொருந்தி வருவதே இன்பம்; மற்றவை எல்லாம் வேறானவை; புகழுக்குரியனவும் இல்லை என்பது பாடலின் பொருள். அறமல்லாத வழியில் வந்தனவற்றாலும் இன்பம் பெறுகிறார்களே, அது எவ்விதம்?
அறத்தான் என்பதற்கு அறத்தால், அற வழியால் அல்லது அறவழி வாழ்வினால் என்று பொருள். வருவதே இன்பம் என்ற தொடர்க்கு வருவதே மகிழ்ச்சி என்பது பொருள். மற்றெல்லாம் என்பது பிற எல்லாம் - அறமல்லாத வழியில் வரும் பிற எல்லாம் என்று பொருள்படும். புறத்த என்ற சொல்லுக்குப் புறத்தன; புறம்பாவன; அறத்துக்குப் புறம்பாவன; நீக்கத்தக்கன; இன்பத்துக்குப் புறத்த-துன்பத்தின் எனப் பலவாறு பொருள் கொள்வர். இச்சொல் இன்பத்துக்கு வேறானவை என்ற பொருள் தரும். புகழுமில என்றது புகழும் இல்லை என்ற பொருள் தருவது.
நன்னெறியால் வரும் இன்பமே உண்மையான மகிழ்ச்சி தரக்கூடியது. பிற வழிகளால் வருவன இன்பங்கள் அல்ல; புகழும் தருவதில்லை.
இன்பம் எய்துவதற்கு உலகில் பல வழிகள் உண்டு. சிலர் அறிவால் இன்பம் பெறுகின்றனர்; இன்னும் சிலர் செல்வத்தால், செல்வாக்கால் இன்பம் காண்கின்றனர்; மற்றும் சிலர்க்கு காமநுகர்ச்சியால், கள்ளால், சூதால் இன்பம் கிடைக்கிறது. ஒறுத்தார்க்கும் இன்பம் உண்டு. வள்ளுவர் அறத்தான் வருவதை மட்டுமே இன்பமெனக் கருதவேண்டும் என்கிறார். ஆகையால் எந்த இன்பத்தைத் தேடினாலும் அதை அறவழியிலேயே அடைய முயல வேண்டும் என்கிறார். அறவழி என்பது நல்லொழுக்கத்தையும் நற்செயல்களையும் குறிக்கும். இன்பம் தரக் கருவிப் பொருளாக உதவும் செல்வத்தையும் அறநெறியில் பெறவேண்டும் என்பது சொல்லாமலே பெறப்படும். இங்கு இன்பம் என்பது பொதுப்படக் கூறப்பட்டுள்ளது. இல்லறம், துறவறம் - சிற்றின்பம், பேரின்பம் இவற்றில் எது சொல்லப்பட்டது என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. பல உரையாசிரியர்கள் இப்பாடலில் இன்பம் என்று கூறப்பட்டது காம இன்பத்தையே என்று கொண்டனர். ஆனால் இங்கே இன்பம் என்று சொல்லப்பட்டது காம இன்பத்தை மட்டும் அல்ல. காம இன்பம் வெறும் உடல் பற்றியது. உடலைத் தவிர்த்து வாய், கண், மூக்கு, செவி என்ற மற்ற நான்கு பொறிகளும் தனித்தனியே அனுபவிக்கிற இன்பங்களும் உள்ளன. இன்பங்கள் யாவும் அறத்தால் பெறப்பட்டனவாக இருக்கவேண்டும் என்பதே வள்ளுவர் விரும்புவது. அதுவே மனச்சான்றுக்கு எதிரானதாக இல்லாமல், நிறைவாக அனுபவிக்கிற தூய இன்பம் ஆகும்.
காமநூல் எழுதிய மற்றவர்கள் எல்லாம், பிறர்மனை நயத்தல், பொருட்பெண்டிர் சேர்க்கை போன்ற அறம் அல்லாதவற்றையும் இன்பம் தரக்கூடியதாகக் கூறுகின்றார்கள். வள்ளுவருக்கு அது முற்றிலும் ஒவ்வாத கருத்தாகும். அதைப் போலி இன்பம் என்று அவர் அழைப்பார். அறநெறியில் அடையும் நிலைத்த நிறைவான இன்பமே புகழுக்குரியது. பிறயாவும் இன்பத்திற்குப் புறம்பானவை; போலி இன்பங்கள்; ஒரு குறுகிய காலத்தில் மகிழ்வினைத் தந்தாலும், நிலையானதாகவோ, மன நிறைவாகவோ இருப்பதுமில்லை. அறத்தைப் புறக்கணித்து அடையும் மகிழ்ச்சி துன்பமாக முடியும். புகழையும் தரா; விரைவில் இழிவையும் துன்பத்தையும் தரும். அறத்தின் புறத்து வரும் துய்ப்பெல்லாம் உளநோயும் உடல்நோயும் விளப்பன. அறத்தான் வருவதே இன்பம் என்ற இந்தஒரு வரையறைக்கு உட்பட்டு ஒழுகினால் இவ்வுலக வாழ்க்கை இனிதாகும்.
அறமல்லாத வழியில் வந்தனவற்றாலும் இன்பம் பெறுகிறார்களே, அது எவ்விதம்?
அறமற்ற நெறியில் செல்வம் சேர்த்து இன்பம் துய்ப்போரையும், தியொழுக்கம் மேற்கொண்டு மகிழ்ச்சி பெறுவோரையும் நாம் நாளும் காண்கிறோம். அறமற்ற வழிகளிலும் இன்பம் பெறமுடிகின்றதென்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவை இகழ்ச்சி பெருக்கும் இன்பங்களாம் என்கிறார். பொய் வஞ்ச வழிகளில் பொருள் தேடுவோர், கட்டப் பஞ்சாயத்து செய்து பணம் சேர்ப்போர், அடுத்துக் கெடுப்போர், அடுத்தவன் பொருளுக்கு ஆசை கொள்வோர், பிறன்மனை நயப்போர், அயலாரைத் தூற்றுவோர் ஆகியோரை அறமல்லாத வழிகளில் இன்பம் காண்போர்க்குக் காட்டாகக் கூறலாம். இவர்கள் தங்கள் நடத்தையால் செயல்களால் மகிழ்ச்சி அடைந்து விட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள். அதுபோலவே கள்ளுண்போர், போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர், சிற்றினம் சேர்ந்தோர், இவர்களும் தாம் இன்பம் அனுபவிப்பதாக எண்ணுகின்றனர். ஆனால் அறமில்லா வழியில் இவர்கள் பெறுவன யாவும் பொய் இன்பங்கள்; போலி இன்பங்கள்; அவற்றை மெய்யின்பமாகக் கருதிக்கொள்வர் அவர்கள். ஒருவர் மனநிலை, பழக்க நிலை, அறிவுநிலை சார்ந்து அமைவதாலேயே அது இன்பம் ஆகிவிடாது. எனவேதான் வள்ளுவர் அறத்தான் வருவதே இன்பம் என்று இன்பத்துக்கு ஒரு எளிய வரையறையாக இக்குறளை உரைக்கிறார். அறத்தின் வழியில் வராதனவும் இன்பம்போல் தோன்றும். ஆனால் அது தற்காலிக இன்பமே. அதனைப் புறத்தே ஒதுக்கித் தள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் ஒருவன் தொடர்ந்து தீயொழுக்கத்திலும் தீயசெயல்களிலும் ஈடுபட்டு இன்பம் துய்க்க எண்ணுவானானால் அவை அவனது மன அமைதியைக் கெடுத்து முடிவில் துன்பத்திற்கே வழி கோலும். அவை அவனுக்குத் தீராப் பழியையும் தரும். எவ்வழியிலும் இன்பம் துய்க்கலாம் என்று காட்டாமல் இவ்வழியில்தான் இன்பம் துய்க்க வேண்டும் என்று காட்டுவது குறள் நெறி.
அறவழியில் பொருந்தி வருவதே இன்பம்; பிறவழியால் வருவன வேறாயுள்ளவை; புகழுக்குரியனவும் இல்லை என்பது இக்குறட்கருத்து.