Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின்
Permalink  
 


பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:44)

பொழிப்பு (மு வரதராசன்): பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும்போது பகுத்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

மணக்குடவர் உரை: இல்வாழ்க்கையாகிய நிலை, பழியையுமஞ்சி பகுத்துண்டலையுமுடைத்தாயின், தனதொழுங்கு, இடையறுதல் எக்காலத்தினுமில்லை.
மேல் பகுக்குமாறு கூறினார். பகுக்குங்காற் பழியோடு வாராத பொருளைப் பகுக்க வேண்டுமென்று கூறினார்.

பரிமேலழகர் உரை: பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்தாயின் - பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்பு உடைய மூவர் முதலாயினார்க்கும் தென் புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தாயின்; வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல் - அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றல் அல்லது இறத்தல் இல்லை.
(பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார். வாழ்வானது உடைமை வாழ்க்கை மேல் ஏற்றப்பட்டது.)

குன்றக்குடி அடிகளார் உரை: பழிகளுக்கு அஞ்சுதலும் பகுத்துண்டலும் உடையவனின் வாழ்க்கை எப்பொழுதும் இடையறுதல் பெறாது.
பழியஞ்சுதல்-மற்றவர்களுக்குத் துன்பம் செய்தல் வழியும் ஒழுக்கமும் கெட்டு வாழ்தலாலும் வரும் பழிகளுக்கு அஞ்சி ஒழுகுதல்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல்.

பதவுரை: பழி-தீவினை, குற்றம்; அஞ்சி-நடுங்கி; பாத்து-பிரித்துக் கொடுத்து; ஊண்-உண்ணுதல்; உடைத்தாயின்-உடையதானால்; வாழ்க்கை-வாழ்தல்; வழி-நெறி, ஒழுங்கு, குடிவழியினர்; எஞ்சல்-மிஞ்சுதல், ஒழிதல், இறத்தல், குறைதல்; எஞ்ஞான்றும்-எப்போதும்; இல்-இல்லை.


பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பழியையுமஞ்சி பகுத்துண்டலையுமுடைத்தாயின்;
மணக்குடவர் குறிப்புரை: மேல் பகுக்குமாறு கூறினார். பகுக்குங்காற் பழியோடு வாராத பொருளைப் பகுக்க வேண்டுமென்று கூறினார்.
பரிதி: அபகீர்த்தி வராமல் நடத்தி விருந்தோம்பலும் உண்டாகிய; [அபகீர்த்தி-இகழ்ச்சி].
காலிங்கர்: தென்புலத்தாராதியாகச் சொன்ன ஐவகைவேள்வி செலுத்துங்காலத்து அதற்கு யாதானுமொரு குற்றம் உண்டாயின் பழிவருமென்று அஞ்சிப் பாதுகாத்துப் பகுத்தூண் உடைத்தாயின்;
பரிமேலழகர்: பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்பு உடைய மூவர் முதலாயினார்க்கும் தென் புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை உடைத்தாயின்;

'பழியை அஞ்சிப் பகுத்து உண்டலை உடைத்தாயின்' என்று பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர். காலிங்கர் ஐவகை வேள்வி செலுத்துங் காலத்து பழிவராமல் பாதுகாத்து என்கிறார். இவர் கூறும் ஐவகை வேள்விகளாவன: தேவயாகம், பிரமயாகம், பூதயாகம், மானுடயாகம், பிதிர்யாகம்.

இன்றைய ஆசிரியர்கள் 'பழியஞ்சிப் பகுத்துண்ணும்', 'பழிக்கு அஞ்சிப் பலரோடு பகுத்துண்டலை உடைத்தாயின்', 'கொடுமைக்குப் பயந்து நேர்வழியிற் பொருளீட்டி அப்பொருளை உரியவர்கட்குப் பகுத்துக் கொடுத்துத் தான் உண்ணுமுறையினை உடைத்தாயிருந்தால்', 'நல்லோரால் பழிக்கப்படுவதற்கு அஞ்சி தமக்குரியதைப் பிறர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுதல் உடையதாக' என்றபடி உரை தந்தனர்.

பழிவராமல் காத்தும் பகுத்து உண்டலையும் உடைத்தாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

வாழ்க்கை வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்வாழ்க்கையாகிய நிலை, தனதொழுங்கு, இடையறுதல் எக்காலத்தினுமில்லை.
பரிதி: இல்வாழ்க்கை எக்காலமும் நடக்கும் என்றவாறு..
காலிங்கர்: இவ்இல்லறத்தினது ஒழுகலாறு குறைபட்டு ஒழிதல் எஞ்ஞான்றும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவன் இல்வாழ்க்கை அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றல் அல்லது இறத்தல் இல்லை.
பரிமேலழகர் விரிவுரை: பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார். வாழ்வானது உடைமை வாழ்க்கை மேல் ஏற்றப்பட்டது.

மணக்குடவர் 'தனது ஒழுங்கு இடையறுதல் எக்காலத்திலும் இல்லை' என்றும் பரிதி 'இல்வாழ்க்கை எக்காலமும் நடக்கும்' என்றும் காலிங்கர் 'இல்லற ஒழுகலாறு குறைபட்டு ஒழிதல் எஞ்ஞான்றும் இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'இல்வாழ்க்கை அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றல் அல்லது இறத்தல் இல்லை' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இல்லறத்தானுக்கு வாழ்வு குறையாது. வழியும் நில்லாது', 'ஒருவன் வாழ்க்கை, அவன்வழி (பரம்பரை) எக்காலத்தும் இடையறவுபடாது', 'ஒருவனது இல்வாழ்க்கை அவனது குடிவழி (சந்ததி) உலகத்தில் எப்போதும் அற்றுப் போவதில்லை.(நிலைத்திருக்கும்)', 'இல்லற வாழ்க்கை இருக்குமானால் அவ்வாழ்க்கை உலகில் என்றும் நிலைத்து நிற்கும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

இல்வாழ்க்கை வழி எக்காலத்திலும் குறைபட்டு ஒழிதல் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பழிவராமல் காத்தும் பகுத்து உண்டலையும் உடைத்தாயின், இல்வாழ்க்கை வழிஎஞ்சல் எப்போதும் இல்லை என்பது பாடலின் பொருள்.
வழிஎஞ்சல் என்றால் என்ன?

குற்றம் கடிந்தும், உள்ளதைப் பங்கிட்டும் ஒழுகுபவனது வாழ்க்கை இடரின்றிச் சீராகச் செல்லும்.

தீவினையச்சமும், உள்ளதைப் பகுத்துக் கொடுத்து உண்ணும் இயல்பும் உடையதானால், வாழ்க்கை வழி எப்போதும் தடங்கலின்றிச் செல்லும்.
பழியஞ்சி:
இல்வாழ்வானுக்குப் பழி ஏற்படுமாறு உண்டாகும் சூழல்கள் பலவாகும். பொருள் ஈட்டும்போது மட்டும் அல்ல; எல்லா நேரங்களிலும் குற்றங்களை நீக்கி வாழ வேண்டும். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; குடும்பத்துக்குக் கெட்ட பெயர் வந்துவிடுமோ என அஞ்சி அவன் வாழவேண்டும். பழித்தற்குரிய தீய செயல்களைச் செய்வதாலும் இல்வாழ்க்கை அறங்களைச் செய்யாது விடுவதாலும் குற்றம் உண்டாகும். மற்றவர்களுக்கு இன்னல் உண்டாக்குதல் வழியும் ஒழுக்கக் கேடான வாழ்க்கை முறையாலும் பழி ஏற்படும். சுற்றம், அன்பு, உறவு போன்றவற்றிற்காகச் செய்யப்படும் தீமைகளும் பழிச்செயல்கள்தாம். பழி வரும் செயல்கள் செய்ய நடுக்குறும் இல்லத்தில்தான் அறம் குடியிருக்கும்.
பாத்தூண்:
பாத்தூண் என்பது பாத்து+ஊண் என்று விரியும். முகந்து என்பது எப்படி மோந்து ஆனதோ அப்படியே பகுத்து என்பது பாத்து ஆனது. ஊண் உண்ணுதலைக் குறிக்கும். பாத்தூண் என்னும் இனிய தொடர் பகுத்து உண்ணுல் என்ற பொருள் தரும். இதற்குத் தீதின்றிச் சேர்த்ததைப் பகுத்துக் கொடுத்துப் பின் தான் உண்ணவேண்டும் என்பது பொருள்.
அருள் நெஞ்சம் கொண்டவன் தம் உணவை இல்லாதாரோடு பகிர்ந்து உண்பான்; அவனே பேறு பெறுவான். உண்பித்து உண்டு வாழும் பாத்தூண் என்னும் சீரிய அறம் சிறப்பானதும், மிகவும் போற்றத் தக்கதும் ஆகும்.

இல்வாழ்வானது பொறுப்புகளில் இரண்டு சொல்லப்பட்டன. தன் குடும்பத்தின் நற்பெயருக்கு கேடு வராமல் காத்துக்கொள்ள வேண்டும்; மற்றது தனக்குக் கிடைத்ததைப் பகுந்து துய்க்கவேண்டும் என்பன அவை.
இல்லற வாழ்க்கை மக்களது நாகரிகப் பண்பாட்டின் அடையாளமாகும். அவ்வாழ்க்கை, குற்றம் செய்ய நடுக்குற்றதாகவும், இல்லாதாரோடு பங்கிட்டு உண்ணுதலையும் உடையதாயின், அது இல்லறப்பண்பின் முதிர்ந்த நிலையைக் காட்டும். இத்தகைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் ஒருவனது வாழ்வு இடையறாது அமைந்து நிறைவானதாக இருக்கும்; இடரின்றி மேற்செல்லும்.

வழிஎஞ்சல் என்றால் என்ன?

'வழிஎஞ்சல்' என்ற தொடர்க்குத் தனதொழுங்கு இடையறுதல், ஒழுகலாறு குறைபட்டு ஒழிதல், வழி நிற்றல் அல்லது இறத்தல், குறைவது, குறைப்பட்டு அழிதல், குறைதல் வழிநிற்றல், வழி (பரம்பரை) இடையறவு, குறைதல், குடிவழி (சந்ததி) அற்றுப் போதல், வழிகளில் குறைவுண்டாதல், வாழ்க்கை நெறி வளத்தில் குன்றுதல், மரபுவழி அறுதல், (தனது) நெறியில் குறைபாடுறுதல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

வழி என்ற சொல்லுக்கு இரண்டு வகையான விளக்கங்கள் காணக்கிடக்கின்றன. ஒன்று வம்சாவழி என்றும் சந்ததி என்றும் சொல்லப்படும் பரம்பரை வழி என்பது. இதற்கு இணையான தமிழ்ச் சொற்கள் கால்வழி, மரபுவழி, கொடிவழி, வழிவழி, குலவழி என்பன. வாழையடி வாழையென வருவது என்று இதனைப் பழகுமொழியில் கூறுவர். இது வழிமுறை என்று வேறொரு குறளில் ஆளப்பட்டுள்ளது: தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்.(தெரிந்து தெளிதல் 508 பொருள்: மற்றவனைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அது அவனுக்கு மட்டும் அல்லாமல், அவனுடைய வழிமுறையில் தோன்றியவர்க்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும்). வழிவழி என்று பொருள் கொண்டால் வழிஎஞ்சல் என்பதற்கு குடிவழி உலகில் நிலைபெற்று இருக்கும்; குறைவுபடாது அழியாது இருக்கும் என்றவாறு உரை கிடைக்கும். அதாவது அவன் செய்த அறம் தலைமுறை தலைமுறைக்குக் காவலாக நிற்கும்; அவனது வழிமுறை கெடாது வளரும் என்பது பொருளாகும்.
மற்றது நேர் பொருள்: அவனது இல்லறவாழ்வின் வழி எவ்விதக் குறைவும் இன்றி சீராகத் தங்கு தடையின்றி செல்லும் என்பது. குறைபாடுகளாவன 'பொருளின்மை, மக்களின்மை' என வ உ சி விளக்கம் தருவார். அவன் பகைவராலோ பிற தீங்கினாலோ அழியப்படான். இறைவனருளும் உலகோர் வாழ்த்தும் அவன் வழியில் தடைகளை ஏற்படுத்தா.
இவற்றுள் பின்னதான பொருளே பொருத்தமாகும்.
நற்பெயருக்குத் தீங்கு வராமல் காத்துத் தான் பெற்ற செல்வப் பயனைப் பலர்க்கும் பகிர்ந்து அளித்து வாழ்ந்து வந்தால், அத்தகைய அறச் சிந்தனையுடையோர் எப்போதும் நிறைவாக உணர்வர். அவரது வாழ்வு வழி தங்கு தடையற்ற வழித்தடத்தில் பயணம் செய்வதுபோல் அமையும் என்பது கருத்து.
பழியஞ்சாமல் பாத்துண்ணா வாழ்க்கை இடையீட்டிற்கு உள்ளாகி இடர்ப்படும் என்பதும் பெறப்பட்டது.

பழிவந்துவிடுமோ என்று அஞ்சியும் பகுத்து உண்டலையும் உடைய இல்வாழ்க்கை எக்காலத்திலும் இடரின்றிப் பயணிக்கும் என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard