Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 49 அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை


Guru

Status: Offline
Posts: 7467
Date:
49 அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை
Permalink  
 


அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:49)

பொழிப்பு (மு வரதராசன்): அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும்; அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

மணக்குடவர் உரை: அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப்படுவதொன்றை யுடைத்தல்லவாயின்.
பழிக்கப்படுவதென்றது இழிகுணத்தாளாகிய மனையாளை. இனி வாழ்க்கைத் துணைநலங் கூறுகின்றாராகலின், இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை - இருவகை அறத்தினும் நூல்களான் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழிக்கப்படுவது இல்லையாயின், அவ்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று.
(ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனால் பிரிக்கப்பட்டது துறவறம் ஆதலின், 'அஃது' என்னும் சுட்டுப்பெயர் அதன் மேல் நின்றது. 'பிறன் பழிப்பது' என்றது கூடாவொழுக்கத்தை. துறவறம் மனத்தையும் பொறிகளையும் ஒறுத்து அடக்கவல்ல அருமையுடைத்தாய வழியே, அவற்றை ஒறுக்க வேண்டாது ஐம்புல இன்பங்கள் ஆரத்துய்க்கும் மென்மையுடைய இல்வாழ்க்கையோடு அறம் என ஒருங்கு எண்ணப்படுவது என்றவாறு ஆயிற்று. இவை நான்கு பாட்டானும் இல்நிலையே பயனுடைத்து என இதன் சிறப்புக் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. அதுவும் பிறரால் பழித்துரைக்கப்படாதவாறு அமைந்தால்தான் நல்லது.

பொருள்கோள் வரிஅமைப்பு:
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.

பதவுரை: அறன்-அறம், அறநெறி; எனப்பட்டதே-என்று சொல்லப்பட்டதே; இல்வாழ்க்கை-இல்லாளோடு கூடிய வாழ்க்கை; அஃதும்-அதுவும்; பிறன்-மற்றவன்; பழிப்பது-தூற்றுவது; இல்லாயின்-இல்லையானால்; நன்று-நல்லது.


அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே;
பரிதி: தருமம் என்பது இல்லறம்;
பரிமேலழகர்: இருவகை அறத்தினும் நூல்களான் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே;

'அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறமென்று உறுதிப்பட்டது குடும்ப வாழ்வே', 'மனிதர்கள் நடத்த வேண்டிய தர்மமே இல்லற வாழ்க்கைதான்', '(இல்லறம் துறவறம் என்னும் இரண்டினும்) அறமெனச் சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே', 'அறநெறிக்கு உரியது என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்லறவாழ்க்கையே' என்றபடி உரை தந்தனர்.

அறம் என்பதே இல்வாழ்க்கை என்பது இப்பகுதியின் பொருள்.

அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப்படுவதொன்றை யுடைத்தல்லவாயின்.
மணக்குடவர் குறிப்புரை: பழிக்கப்படுவதென்றது இழிகுணத்தாளாகிய மனையாளை. இனி வாழ்க்கைத் துணைநலங் கூறுகின்றாராகலின், இது கூறப்பட்டது.
பரிதி: அது லோகம் பழியாமல் நீதியில் நடக்குமாகில் நன்று என்றவாறு.
பரிமேலழகர்: ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழிக்கப்படுவது இல்லையாயின், அவ்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனால் பிரிக்கப்பட்டது துறவறம் ஆதலின், 'அஃது' என்னும் சுட்டுப்பெயர் அதன் மேல் நின்றது. 'பிறன் பழிப்பது' என்றது கூடாவொழுக்கத்தை. துறவறம் மனத்தையும் பொறிகளையும் ஒறுத்து அடக்கவல்ல அருமையுடைத்தாய வழியே, அவற்றை ஒறுக்க வேண்டாது ஐம்புல இன்பங்கள் ஆரத்துய்க்கும் மென்மையுடைய இல்வாழ்க்கையோடு அறம் என ஒருங்கு எண்ணப்படுவது என்றவாறு ஆயிற்று. இவை நான்கு பாட்டானும் இல்நிலையே பயனுடைத்து என இதன் சிறப்புக் கூறப்பட்டது.

அஃதும் என்ற சொல் இல்வாழ்க்கையைச் சுட்டுவதாக மணக்குடவரும் பரிதியும் காண அது துறவறத்தைச் சுட்டுவதாகக் கொள்கிறார் பரிமேலழகர். இவர்கள் பிறனால் பழிக்கப்படாத இல்வாழ்க்கை நன்றாகும் என்று இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துறவும் பழியில்லாவிட்டால் அறமாகும்', 'ஆனாலும் துறவறம் என்பதை அவமதிக்காமல் இருப்பது நல்லது', 'அதுவும் பிறரால் பழிக்கப்படுவது இல்லையாயின் மிகுந்த சிறப்புடையதாகும்.(அஃது என்பது துறவறம் என்பாருமுளர்)', 'ஏனைத் துறவற நெறியும் பிறரால் பழிக்கப்படாத இயல்பினையுடையதாய் இருந்தால் நல்லது' என்றபடி பொருள் உரைத்தனர்.

அதுவும் பிறரால் பழிக்கப்படுவது இல்லையாயின் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறம் என்பதே இல்வாழ்க்கைதான்; அஃதும் பிறரால் பழிக்கப்படுவது இல்லையாயின் நல்லது என்பது பாடலின் பொருள்.
'அஃதும்' என்ற சொல் குறிப்பது என்ன?

அறமென்று உறுதிப்பட்டது இல்வாழ்வே.

அறம் என்று சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அந்த வாழ்வும் பிறர் பழித்துப் பேசுவதில்லையானால் நல்லது.
'அறம் என்பதே இல்வாழ்க்கை' என்று உரக்க அறிவிக்கிறார் வள்ளுவர்.
அறம் என்பதும் குடும்ப வாழ்க்கை என்பதும் ஒன்றேதான். பிற உயிர்களின் நல்வாழ்விற்கும் மேன்மைக்கும் உறுதுணையாய் இருப்பது அறம். குடும்ப வாழ்க்கையில் இந்த அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது மரபாகிவிட்டதால் இல்வாழ்க்கை இல்லறம் ஆனது.
இல்வாழ்வில் ஈடுபடுவதே அறம்தான். இல்வாழ்க்கையில் அறச்செயல்கள் பல ஆற்றப்படுகின்றன. இல்வாழ்க்கையை அறம் என்று ஒட்டுமொத்தமாகக் கூறும் நிலையில் அதன்கண் காணப்படும் ஒவ்வொரு கூறும் அறமாகக் கருதப்படுவதற்குரியதாகிறது. இந்நிலையில் இல்லறவியலின்கண் காணப்படும் மக்கட்பேறு. அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல் போன்றனவற்றிற்கு இல்வாழ்வு நிலைக்களனாக நின்று பெருந்துணை செய்யும். இங்ஙனம் குடும்பம் வாழ்வும் ஆயிற்று, அறமும் ஆயிற்று.
சமுதாய வாழ்க்கைக்கு உரியதொரு நல்லறமாக இல்வாழ்வு அமைகிறது. அதிலும் அவ்வாழ்வு பிறர் தூற்றலுக்கு ஆளாகாமல் நடத்தப்படுமானால், அது மிகவும் நல்லதாம்.

பிறன் என்ற சொல் மற்றவன் என்று பொருள்படும். 'பிறன் பழிப்பதுஇல்லாயின்' என்பது எவர் பழிப்புக்கும் இடந்தரலாகாது என்ற பொருள் தரும். 'பிறன்' என்று ஏன் ஒருமையாற் கூறப்பட்டுள்ளது? இச்சொல் 'ஒருவனாவது' என்னுங் குறிப்பையுணர்த்துகிறது. அதாவது 'எவன் ஒருவனாலும்' பழிக்கப்படாத இல்வாழ்க்கை என்ற பொருள் தரும்வகையில் சொல்லப்பட்டது. பழித்தல் என்பது பழி சொல்லுதல் அல்லது இழிவு பேசுதல் எனப் பொருள்படும். பிறன் இல்லறத்தானைப் பழிப்பது என்று பொருள் கொள்ளல் இயல்பாகும். இல்லற வாழ்வு பிறனால் பழிக்கப்படாமலிருத்தல் வேண்டும்.
இல்வாழ்வில் உண்டாகும் பழிகள் எவை? பிறனில்விழைதல், அழுக்காறு, பேராசை, தற்சார்பான பொருள்வாழ்க்கை, குடும்ப ஒற்றுமை இல்லாமை, நன்மக்கட்பேறு இல்லாமை, பொருள் முயற்சியின்றிச் சோம்பிக்கிடத்தல், நல்வழியில் பொருளீட்டாமையும் செலவழியாமையும், விருந்தோம்ப ஒருப்படாமை, அடங்காமை போன்றன பழிகளாம்.

'அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை' என்ற தொடரை 'அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே' என்று மணக்குடவரும் பரிமேலழகரும் ஏகார இடைச்சொல்லை இடம் மாற்றி பொழிப்புரை தந்தனர். இதனால் பாடலின் கருத்தும் மாறிப் போய்விடுகிறது. மூலத்தில் அறன் என்றதற்கு அழுத்தம் கிடைக்க, கொண்டு கூட்டிய பொழிப்பில் இல்வாழ்க்கை என்றது அழுத்தம் பெறுகிறது.
'எனப்பட்டதே' என்ற சொல்லுக்கு ஏகார அழுத்தம் தந்து, 'அறம் தான் இல்வாழ்க்கை; இல்வாழ்க்கைதான் அறம்' என்பதை முடிவான தீர்ப்பாக்கி, இல்வாழ்விற்கு ஏற்றம் தருகிறார் வள்ளுவர்.
துறவே அறமென்று சமண, புத்த, வைதிக சமயங்கள் கூறிவந்த நிலையில் 'அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை' என்று முடிந்த முடிபாக இல்வாழ்க்கையே அறம்; துறவிலும் இல்லறம் ஏற்றமுடையது என்று சொல்வதற்காக அறம் என்பதே இல்வாழ்க்கை என்றார் வள்ளுவர் எனவும் கூறுவர்.

'அஃதும்' என்ற சொல் குறிப்பது என்ன?

அஃதும் என்றது அதுவும் என்ற பொருள் தந்து நிற்கிறது. இது ஒரு சுட்டுச் சொல். எதைச் சுட்டுகிறது என்பதில் உரையாசிரியர்கள் வேறுபடுகின்றனர். மணக்குடவர் உரையின்படி 'அஃது' இல்லறம் என்பதைக் குறிக்கும். பரிதியின் கருத்தும் அதுவே. ஆனால் பரிமேலழகர் அஃதும் என்பதனைத் துறவைச் சுட்டுவதாகக் கொண்டு பொருள் கூறுவார். 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' எனக் கூறப்பட்டதை அடுத்து 'அது' என்ற சுட்டு வந்ததால் அச்சுட்டு முற்கூறிய இல்வாழ்க்கையைக் குறிக்குமேயன்றி பாடலில் பிறிதுஓரிடத்துங் குறிக்கப் பெறாததுமான துறவைச் சுட்டாது. மேலும் 'பிறன்பழிப்பதில்லாயின் நன்று' என்பதில் அமைந்த 'பிறன்' என்பது துறவியைச் சுட்டும் தொடர்பின்மையானும் இதனை ஏற்கமுடியாது என்பார் இரா சாரங்கபாணி. தேவநேயப் பாவாணரும் 'துறவறமும் நல்லதே யென்று கூறின், அது 'அறனெனப் பட்டது இல்வாழ்க்கையே' என்னும் பிரிநிலைத்தேற்றக் கூற்றின் வலிமையைக் கெடுத்து முன்னுக்குப் பின் முரணாதல் காண்க' என்றார்.

இப்பாடலின் முதற்பகுதியையும் இரண்டாவதையும் இணைத்துப் பார்ப்பதில் இடர்ப்பாடு உண்டாகிறது. பழிக்கப்படாவிட்டால் நல்லது என்றதால் பழிக்கப்பட்டாலும் பழிக்கப்படாவிட்டலும் இல்வாழ்க்கையே அறம் என்பது போன்ற பொருள் கொள்ள வேண்டியதாகிறது. பழியிருந்தால் இல்வாழ்வு எப்படி அறம் ஆகும்? இவ்விடரை நீக்குவதற்குத்தான் பரிமேலழகர் 'ஏனைத் துறவறமோ எனின்' எனச் சொற்களை வருவித்து இக்குறள் துறவுடன் ஒப்பிடப்படுவதாகக் கொண்டார் போலும். மற்றப்படி துறவறத்தை இங்கு கொணர்தற்கு இடம் இருப்பதாகத் தெரியவில்லை.

அஃதும் என்னும் சொல் இல்வாழ்க்கையைச் சுட்டுகிறது.

அறம் என்பதே இல்வாழ்க்கைதான்; அதுவும் பிறரால் பழிக்கப்படுவது இல்லையாயின் நல்லது என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard