பொழிப்பு (மு வரதராசன்):வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!
மணக்குடவர் உரை: தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும். எழுதல்-உறங்கி எழுதல்.
பரிமேலழகர் உரை:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது)
நாமக்கல் இராமலிங்கம் உரை:
(கற்புடைய மனைவியின் சிறப்பு என்னவெனில்) கற்புடைய பெண் தெய்வத்தைக் கூட தொழமாட்டாள். அவள் கணவனையே தெய்வமாக வணங்கிச் சிறப்படைவாள். அப்படிப்பட்டவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும்படியான தெய்வபலம் உள்ளவள்.
பொருள்கோள் வரிஅமைப்பு: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என மழை பெய்யும்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள்; மணக்குடவர் குறிப்புரை: எழுதல்-உறங்கி எழுதல். பரிப்பெருமாள்: தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள்; பரிப்பெருமாள் குறிப்புரை: எழுதல்-உறங்கி எழுதல். பரிதி: குலதேவதையைக் கும்பிடாள் தன்பத்தாவைத் தெய்வமென்று தொழுதபடியால்; [குலதேவதை-அந்தந்த குலத்தினரால் தொன்றுதொட்டு மரபுக்கு உரியதாக வைத்து வழிபடு தெய்வம்; பத்தா-கணவன்.] காலிங்கர்: வேறொரு கடவுளையும் வணங்காதவளாய்த் தன் கணவனையே நாடோறும் வணங்கி எழுகின்றாள் யாவள்? பரிமேலழகர்: பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள்; பரிமேலழகர் குறிப்புரை: தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது.
மணக்குடவர் 'எல்லாத் தெய்வமும் தன் கணவன் என்று கருதி அவனை நாள்தோறும் தொழுது எழுபவள்' என்றும் பரிதி 'குலதேவதையைக் கும்பிடாமல் தன்கணவனைத் தெய்வமென்று தொழும்' பெண் என்றும். காலிங்கரும் பரிமேலழகரும் 'வேறொரு கடவுளையும் வணங்காதவளாய்த் தன் கணவனையே நாடோறும் வணங்கி எழுபவள்' என்றும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தெய்வத்தை வணங்காது கணவனை வணங்குபவள்', 'பிறதெய்வம் தொழாமல் தன் கணவனையே கண்கண்ட தெய்வமாய்த் தொழுது எழுபவள் கற்பாற்றலால்', 'தெய்வத்தை தொழாதபோதும் கணவனையே தெய்வமாகத் தொழுது காலையில் எழுகின்றவள்', 'பிற தெய்வங்களை வணங்காமல் கணவனாகிய கடவுளையே தொழுதுகொண்டு உறக்கத்தினின்றும் எழுபவள்' என்ற பொருளில் உரை தந்தனர்.
தெய்வத்தைத் தொழாதவளாய் தன் கணவனை வணங்கி எழுகின்றவள் என்பது இப்பகுதியின் பொருள்.
பெய்யெனப் பெய்யும் மழை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: பெய்யென்று சொல்ல மழை பெய்யும். பரிப்பெருமாள்: பெய்யென்று சொல்ல மழை பெய்யும். பரிப்பெருமாள் குறிப்புரை: எழுதல்-உறங்கி எழுதல். தெய்வமும் ஏவல் செய்யும் என இம்மைப்பயன் கூறிற்று. பரிதி: அவள் சொல்ல மழை பெய்யும் என்றவாறு. காலிங்கர்: மற்றிவள் இவ்வுலகத்து மழை வறங்கூர்ந்த காலத்து வானைக் குறித்து 'வந்து பெய்வாயாக' என்று சொன்ன அளவிலே வந்து பொழியும் மழை. [வறங்கூர்ந்த காலத்து-வறட்சிமிக்க காலத்து] பரிமேலழகர்: 'பெய்' என்று சொல்ல மழை பெய்யும். பரிமேலழகர் குறிப்புரை: தெய்வந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.
''பெய்' என்று சொல்ல மழை பெய்யும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பெய்யென்றால் மழையும் பெய்யுமே', 'பெய் என்று ஆணையிட்டால் மழை பெய்யும்', 'மழையைப் பெய்யென்று சொல்ல அது பெய்யும்', 'பெய் என்று சொன்னால் பெய்யும் மழைக்கு ஒப்பாவாள்' என்றபடி பொருள் உரைத்தனர்.
'பெய்யட்டும்' என்று சொன்னால் மழை பெய்யும் என்பது இப்பகுதியின் பொருள்.
நிறையுரை: தெய்வத்தைத் தொழாதவளாய் கணவனை வணங்கி எழுகின்றவள் 'பெய்யட்டும்' என்று சொன்னவுடன் மழை பொழியும் என்பது பாடலின் பொருள். 'தெய்வம் தொழாப்' பெண் பற்றியா குறள் பேசுகிறது? 'கணவனைத் தொழுதெழும் மங்கை'யா இப்பாடலில் சொல்லப்படுகிறாள்?
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்:
இக்குறளின் முதலடியான 'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்' என்பதில் உள்ள இரண்டு தொடர்களும் ஆராயப்படவேண்டியன. தெய்வம் தொழாத பெண்ணையா வள்ளுவர் போற்றுகிறார்? கணவனைத் தொழுதெழும் மங்கையா இங்கு பேசப்படுகிறாள்?
முதல் தொடரான 'தெய்வம் தொழாஅள்' என்றது 'கடவுளை வணங்காத பெண்' என்ற பொருள் தரும். கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (கடவுள் வாழ்த்து குறள்எண்: 9. பொருள்: கடவுளின் திருவடியை வணங்காத தலைகள், பொறிகள் இருந்தும் புலன்கள் அற்றவை போல, உணர்வில்லாதவை) என்று சொன்ன வள்ளுவர் தெய்வத்தைத் தொழவேண்டா எனக் கூறியிருக்கமாட்டார் என எண்ணினர் சிலர். திருவள்ளுவரடிமை முருகு 'தெய்வம் தொழாஅள்' என்ற தொடர்க்குத் 'தெய்வத்தைத் தொழவேண்டியதில்லை என்று இங்கு சொல்லப்பட்டுள்ளது என்பது தவறான கருத்து; திருவள்ளுவர் இறைவனைத் தொழவேண்டும் என வலியுறுத்துபவர்; (அக்காலத்தில்) பெண்கள் கணவனைத் தொழுததாகத் தெரியவில்லை. தெய்வங்களைத் தொழுது வந்ததாக வரலாறும் இலக்கியங்களும் இயம்புகின்றன; ஆகவே வேறு தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுது எழுவாள் என்பதாகப் பொருள் கொள்வது பொருந்தாது; தெய்வம் தொழாள் என்பதற்கு நாடோறும் வணங்கத்தக்க தெய்வத்தையே ஒருக்கால் தொழாது போனாள் ஆயினும் எனக் கொள்வது பொருத்தமாகப் படுகிறது' என விளக்கம் தந்தார், மற்றும் சிலர், இக்குறளில் பேசப்படும் பெண் 'தெய்வம் தொழுபவளே' என்பதை நிறுவுவதற்காக புது விளக்கங்கள் கண்டனர். அதில் சிலர் இப்பாடலில் சொல்லப்பட்ட தெய்வம் குலதெய்வம், சிறுதெய்வம் அல்லது இல்லுறை தெய்வம் குறித்தது எனச் சொல்லி 'இங்கு கூறப்படுவது தேவர்களை வணங்கமாட்டாத வாழ்க்கைத் துணைவி' எனக் கொள்ளமுடியும் என்றனர். 'முதலில் தெய்வத்தை வணங்காளாய்த் தன் கணவனையே வணங்கிக்கொண்டு எழுபவள்' என்று ஓர் உரை கூறுகிறது.
'கொழுநன் தொழுதெழுவாள்' என்ற தொடர்க்கு '(மனைவி துயில் எழும்பொழுது) கணவனைத் தொழுது எழுபவள்' என்பது நேர் பொருள். குறளில் சொல்லியுள்ளபடி 'தொழுது எழுவது எப்படி?' என்று சிலர் வினா எழுப்பினர். இதற்கு 'எழுந்து தொழுவாள் என முன்பின்னாகப் பிறந்தது' அதாவது 'தொழுது எழவில்லை; எழுந்து தொழுவதே குறிப்பிடப்பட்டுள்ளது' என்பதாகப் பதில் கூறப்பட்டது. தொழுது எழுவதா அல்லது எழுந்து தொழுவதா என்பது அல்ல, 'வேறு எந்தத் தெய்வத்தையும் நினையாமல் தன் கணவனையே தெய்வமாகப் போற்றும் பெண்'தான் சொல்லப்படுகிறதா என்பதுதான் கேள்வி. 'மனையாள் எதற்காக நாளும் தன் கணவனைத் தொழவேண்டும்? ஆணைத் தொழுதெழ வேண்டும் என்று பெண்ணுக்கு கூறப்பட்டிருந்தால் பெண்ணைத் தொழுதெழ வேண்டும் என்று எங்காவது ஆணுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா' என்று பெண்ணியம் பேசுபவர்கள் கேட்பது சரியே. 'காதலால் கட்டுண்ட இல்வாழ்வில், பெண்பாலர் மட்டுமே தாழ்ந்து வணங்கியவர்களாக உள்ளது ஒத்த அன்பைக் காட்டுவதாகாது; இந்தப் பாடலையே குறளிலிருந்து நீக்க வேண்டும்' என்னும் அளவிற்கு மறுப்பாளர்கள் போர்க் குரல் கொடுக்கின்றனர். இதற்குக் குறள் பற்றாளர்கள் அமைதி கூறத் தடுமாறுகின்றனர். 'சிறியவளான மனைவி வயதில் மூத்த கணவனை வணங்குகிறாள்'; 'அன்பு மேலீட்டால்தான் மனைவி தன் விருப்பமாகத் தொழுகிறாள்'; 'துயில் கொள்ளுங்காலும் துயிலுங்காலும் கொழுநனைத் தொழுது கொண்டே துயில்வாள், தெய்வந் தொழுதல் மற்றைய காலத்திலே'; 'கணவன் வணங்கத்தக்கவனாகத் திகழ வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்துவது இது' என்றவாறான, இக்குறளில் சொல்லப்பட்ட கருத்தைத் தாங்கவந்த, உரைகள் ஏற்கும்படி இல்லை. எப்படிப்பட்ட கணவனை இக்குறள் சொல்கிறது என்பதற்கும் எந்தக் குறிப்பும் இல்லை. முந்தைய அதிகாரமான இல்வாழ்க்கையில் இல்வாழ்வானுக்குரிய இலக்கணம் சொல்லப்பட்டாலும் இங்கு கொழுநன் என்ற சொல்லுக்கு முன் அவன் தொழத்தக்கவனாக இருக்கும் பண்பு கொண்ட ஒரு அடைச் சொல் இருந்திருக்கலாம்; அதுவும் காணப்படவில்லை. கடவுளை வழிபடாது கணவனைத் தொழுவது என்றால், தெய்வத்திற்கு இணையாகக் கொழுநன் ஆகிவிடுகிறான். ஆண்களின் ஆதிக்க நிலையையும், பெண்கள் கணவனை வணங்கி, ஏவல் பணி செய்பவர்கள் என்ற உணர்வையும் இது ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.
இச்சொற்றொடர் பற்றிய வா செ குழந்தைசாமியின் கருத்துரை: "சிலர் முடிந்தவரை இன்றைய பின்னணிக்குப் பொருந்தும் கருத்துக்களை வலிந்து மேலேற்றிக் கூறும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். 'கொழுநன் தொழுதெழுவாள்' என்பதை 'கொழுநன் தொழ எழுவாள்' என்று மாற்றி, தமது கொழுநர் தொழும் அளவிற்கு உயர்ந்த நிலைக்கு எழும் பெண்கள் என்று பொருள் கூறுவர். இது முறையன்று. இப்படிப்பட்ட முயற்சிகள் அறிஞருலகம் ஏற்கத் தக்கனவல்ல. பயன் தருவனவுமல்ல, தேவையுமில்லை." வள்ளுவர் உள்ளத்தை நன்குணர்ந்த அறிஞர்களுக்கே குறளின் முதலடியைப் புரிந்துகொள்வதில் இடர்ப்பாடு உண்டாகிறது. திரு வி கலியாணசுந்தரம் (திரு வி க) உளம் திறக்கிறார்: "பன்னெடுநாள் என்னெஞ்சில் குடிகொண்ட பாக்கள் சிலவற்றுள் இதுவும் ஒன்று. பாடபேதமிருக்குமோ என்று ஐயுற்ற நாளும் உண்டு". பாடவேறுபாடாக இருக்கக் கூடாதா என்று ஏக்கமுற்ற அவர் தொடர்ந்து 'பண்டையாசிரியர் சிலர் இக்குறளை உள்ளவாறே ஆண்டுள்ளமையால் ஐயப்பாட்டுக்கு இடமில்லை என்ற தெளிவும் ஏற்படுவதுண்டு' என்று ஏமாற்றம் மேலிடக் கூறுகிறார்.
பெய்யெனப் பெய்யும் மழை:
மனிதரில் மேம்பட்டோர் இயற்கை கடந்த அருநிகழ்வுகள் செய்ய வல்லவர்கள் என்பது காலந்தோறும் நம்பப்படுவது. கற்பென்னும் திண்மை கொண்ட பெண், 'மழையே, பெய்!' என்று சொன்னவுடன் மேகம் அந்த ஆணைவழி நடந்து மழை பொழிய வைக்கும் ஆற்றல் பொருந்தியவள் என்ற பொருள் நல்குவது இப்பகுதி. இல்வாழ்வுக்குத் துணையாக நிற்கும் பெண்ணின் மாண்பைச் சிறப்பிக்க அவள் தவவலிமைவுடையவள் என்றும் பல ஆற்றல்கள் கைவரப் பெற்று நிறை மகளாக இலங்குகிறாள் என்றும் சொல்லுவது ஈற்றடியின் நோக்கம். பாட்டிலே நயங்கருதிப் பெய்யெனப் பெய்யும் மழை என்று புனைந்திருப்பதைக் கூட ஏற்றுக் கொள்ளாது கற்புடைப் பெண்டிர் மழை பெய் என்று சொன்னால் மழை பெய்யுமா? எனச் சிலர் வினவுகின்றனர். கவிதை என்பது நாடக வழக்கு கொண்டது. அதாவது உயர்வாக்கமும் கொண்டது. உண்மையை உள்ளவாறே கூற வேண்டும் என்பது கவிதைக்குக் கிடையாது. கற்புள்ள பெண்கள் இறைத்தன்மை கொண்டவர்கள் என்று சொல்லவந்த வள்ளுவர் மழையை ஏவல் செய்யும் ஆற்றல் கொண்டவள் என்று உயர்வு நவிற்சியாக இங்கு கூறுகிறார். நற்குணம் கொண்ட வாழ்க்கைத்துணையின் சிறப்பை உயர்த்திக் கூறியது இது; அவ்வளவே. கவிதை உணர்வு உள்ளவர்கள் கற்புடையாள் ஏவலைக் கேட்டு மழை பெய்யுமா என்ற கேள்வி எழுப்பமாட்டார்கள். இதற்குப் புது விளக்கமும் தேவையில்லை. பழம் இலக்கியங்களிலும் நன்னெறி தவறாத பெண்டிர்க்காக மழைபெய்யும் என்ற கருத்தில் பாடல்கள் உள்ளன. வறன் ஓடின் வையகத்து வான்தரும் கற்பினாள் (கலித்தொகை 116:20 பொருள்; வானம் பொய்த்து வையகம் வறண்டுவிட்டால் மழையைப் பெய்விக்க வல்லவள் அவள்). மேலும் பின் வருகின்ற செய்யுட் பகுதிகளும் அந்நம்பிக்கைக்குச் சான்று பகரும்: அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே (கலித்தொகை 39:6) மழைவளம் தரூஉம் பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகாஅர் (மணிமேகலை 22; 45, 46) வான்தரு கற்பின் மனையறம் பட்டேன் (மணிமேகலை 22; 53) நல்ல மாந்தருக்காக மழை பெய்யும் என்று ஒளவையாரும் பாடியுள்ளார்: நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை (மூதுரை 10) என்று. மாதரார் கற்பின் நின்றன கால மாரியே என்று கம்பர் பின்னாளில் பாடியிருக்கிறார்.
பழமரபு நம்பிக்கைகளில் உடன்படாத புதுமைச் சிந்தனையாளர்கள் இப்பகுதிக்கு 'ஒருவர் மழை பெய்ய வேண்டும் என்று நினைக்கிற பொழுது பெய்யும் மழையைப் போன்றவள் கற்புடையவள்' என்று வேறு விளக்கம் ஒன்று தந்தனர். இப்புத்துரையின்வழி இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பது அறியக்கூடவில்லை.
முடிப்பு
இக்குறளின் முதலடி பேரிடராகவும் ஈற்றடி பெரு மழையாகவும் அமைந்து மிகையான கடிந்துரைகளை எதிர்கொண்டது. அது வள்ளுவர் வரைந்ததுதானா என்று கேட்கும் அளவு நம்பமுடியாதபடி அமைந்துள்ளது. இரண்டாம் அடி கவிதை இன்பம் ஊட்டுவதாக ஏற்றம் மிகுந்து விளங்குகிறது. ஆனால் இரண்டுமே மறுப்புரைகளுக்கு இலக்காயின. இக்குறள் பற்றிய எதிர்மறைக் கருத்துக்கள் பல. எல்லோரினும் பெண்ணுரிமை பேசுவோர் இப்பாடலைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவர்களது குற்றச்சாட்டுகளில் சில மறுக்க முடியாதனவே. எல்லோரும் ஏற்கும்படியான உரை இக்குறளுக்கு இன்னும் எழவில்லை. 'தெய்வம் தொழாது கணவனை வழிபடு என்றாலே வள்ளுவனின் இல்வாழ்வுக் கோட்பாடுகள் தோற்றுப் போய்விடுகின்றன' என்ற கூற்று நேர்மையானதாகாவே தோன்றுகிறது. ஆனாலும் வள்ளுவர் பெண்ணின் பெருமை பேசியவர் என்பதிலும் அவர் பெண்ணை இழிவுபடுத்துவதற்காக இக்குறளை எழுதவில்லை என்பதிலும் எவர்க்கும் ஐயமில்லை. இக்குறளும் பெண்ணை உயர்வுபடுத்திக் கூறவே எழுந்தது என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும். "பெய்யெனப் பெய்யும் மழை" - எவ்வளவு இனிமையான வரி! பெய் என்று சொன்னவுடன் மழை பொழிந்து மனதுக்கு மகிழ்வளிக்கும் என்ற அழகிய கற்பனையை வள்ளுவரைத் தவிர வேறு எவராலும் இத்துணை ஆற்றல் மிக்க சொற்களால் மொழிய முடியாது. இக்குறளின் ஈற்றடி என்றும் படித்து மகிழத்தக்க உயர் கவிதை வரியாகும். அது சொல்லழகும் நடைநிமிர்வும் கொண்டு சிறந்து விளங்குகிறது.
'கற்பு நெறி' மற்றும் 'பதிவிரதா தர்மம்' குறித்த கருத்துக்களையும் இவ்வேளையில் நோக்குவது பொருந்தும். ராஜ் கௌதமன் "வள்ளுவர் 'வாழ்க்கைத் துணை நலத்'தில், தமிழ் மரபுக்கு ஒத்துப் போகிற விதத்தில் பதிவிரதா தருமத்தை எடுத்துக் கூறியமை புரியும்" என்கிறார். கற்பு என்பது திருமணம் ஆன ஒரு பெண் கணவனுக்கு உண்மையாயிருத்தலும், அவனைத் தவிர வேறு யாருடனும் உள்ள/உடலுறவு கொள்ளாத நிலையைக் குறிக்கும். இது கற்பு நெறியின் அடிப்படை. கற்பு நெறியின் முதல் படிநிலையைத் தாண்டி வெகுதொலைவு இட்டுச் செல்வது பதிவிரதா தர்மம் ஆகும். பதிவிரதா தர்மம் கூறுவன: 'கற்புடைய பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுதல் அவளது கடமைகளில் ஒன்று; பெண்களுக்குப் ஐம்பெரு வேள்வி, நோன்பு இன்னபிற தருமங்களில் தனிஉரிமை இல்லை; கணவனுக்குப் பணிவிடை செய்வதாலேயே அவர்கள் சொர்க்கத்தில் பெருமை அடைகிறார்கள்; பதிவிரதா தர்மத்திற்குப் பதிவிரதையே முதற் பொறுப்பு. அந்த நோன்பை அவள் முழுவதுமாகக் கடைப்பிடிக்கும் வரை தர்மத்திற்குக் கேடு வராது; பதிவிரதா தர்மத்தின் படிநிலையில்- கணவன் என்ற தெய்வத்தை வழிபடுவதால் பதிவிரதைக்கு இயற்கை மீறிய ஆற்றலும் வசப்படுகிறது; பத்தினித் தெய்வம் என்ற நிலைக்கு உயர்கிறாள்.' கணவனைத் தெய்வமாக வழிபடுவதால் மட்டுமே ஒரு மனைவி தன் பாலியல் ஒழுக்கத்தில் மீறல் வராதவாறு கட்டுப்படுத்த முடியும் அதாவது கணவனைத் தெய்வமாக வழிபடுவதால் அவளது கற்பு காப்பாற்றப்படுகிறது என்பது உட்கிடக்கை. பதிவிரதா தர்மத்தின் கோட்பாடுகளில் கணவனைத் தெய்வமாக வழிபடுதல் என்றது இக்குறளில் எதிரொலிப்பதை உணரலாம். கற்பு நெறியின் முதல் படிநிலைதான் பெண்கள் விரும்பி ஏற்றுக் கொள்வது. ஆனால் பதிவிரதா தர்மம் பெண்களின்மேல் கட்டுப்பாடு மிகச் செலுத்திப் பேதைமையைத் தொடும் அளவுக்கான வேறு நிலைக்குப் பெண்ணைக் கொண்டு செல்வது - தொழுநோயாளியான கணவனின் விருப்பத்திற்காக அவனைக் கூடையில் வைத்துப் காமக்கிழத்தியின் இடத்துக்குத் தலையில் சுமந்து செல்லும் - பதிவிரதா தர்மத்துக்குக் காட்டாக அடிக்கடி சொல்லப்படும் - நளாயினி கதையை நோக்குக.
கற்புடைய பெண் பேராற்றல் பெறுகிறாள் என்பது ஒப்பற்குரியது. ஆனால் தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுதெழும் பெண் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதுவே இப்பாடலின் குறைபாட்டுக்குக் காரணமாக அமைந்தது.
'இளங்கோவடிகள் வள்ளுவரின் மொழிநடையால் ஈர்க்கப்பட்டு சிலப்பதிகாரத்தில் இக்குறளின் அடியை அப்படியே எடுத்தாண்டுள்ளார்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாம் மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து (கட்டுரை காதை) என்பது அப்பாடல்.
'மற்றக் கடவுளைத் தொழாதவள்' என்றவுடன் இறை நம்பிக்கை பற்றிய எண்ணங்களும் எழுந்தன. தெய்வ வழிபாடுகளை மறுத்துரைக்கும் புத்தர் கொள்கையினை ஏற்றுள்ளது இக்குறள் எனப் பொருள்படும்படி தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் (மணிமேகலை 22; 65-70) என்ற மணிமேகலையின் வரிகள் அமைக்கப்பட்டன என்றனர் புத்த சமயத்தார். 'திருவள்ளுவர் பொய்யில் புலவர்; அவர் உரை பொருளுரையே; புனைந்துரையன்று' என்று மணிமேகலையாசிரியர் சீத்தலைச் சாத்தனார் இப்பாடலில் தெய்வம் தொழாத நிலையை (புத்த கொள்கைகளில் ஒன்றை) பாராட்டுவது போல் அமைத்தார் என்பர் அவர்கள். ஆனால் வள்ளுவர் கடவுள்உண்மை சொன்னவராதலாலும் கடவுள் மறுப்பாக இவ்வரிகள் பாடப்படவில்லை என்பதாலும், சமயவாதிகளின் கருத்து முற்றிலும் தவறானது.
குறள் எழுதப்பட்ட காலத்தை நிறுவ மேற்சொன்ன இரண்டு பாடல்களும் (சிலப்பதிகாரம், மணிமேகலை) ஒருவகையில் உதவுகின்றன. மணிமேகலையும் சிலப்பதிகாரமும் ஒரே காலத்தவை. இக்காப்பியங்களில் மேலே கண்டவாறு இப்பாடல் வரிகள் மேற்கோள் கூறப்பட்டிருப்பதால் குறள் இவற்றிற்கு முன் தோன்றிய நூல் ஆகும் என்பது அறியப்பட்டது. சிலம்பில் இலங்கை வேந்தன் கயவாகு கண்ணகி கோயில் கட்டிமுடித்த விழாவிற்கு வந்தான் என்ற குறிப்பு ஒன்று உள்ளது; கயவாகு மன்னன் கி. பி. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததவன் என்கிறது இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் என்ற நூல். அந்த முறையில் குறள் கி பி 2-ம் நூற்றாண்டிற்கு முந்தியது என்று அது எழுதப்பட்ட காலத்தைக் கணிக்க இக்குறள் உதவுகிறது.
தெய்வத்தைத் தொழாதவளாய் தன் கணவனையே வணங்கி எழுகின்றவள் 'பொழியட்டும்' என்று சொன்னவுடன் மழை பெய்யும் என்பது இக்குறட்கருத்து.