Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 60 மங்கலம் என்ப மனைமாட்சி


Guru

Status: Offline
Posts: 7329
Date:
60 மங்கலம் என்ப மனைமாட்சி
Permalink  
 


மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:60)

பொழிப்பு (மு வரதராசன்): மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர்.

மணக்குடவர் உரை: ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.

பரிமேலழகர் உரை: மங்கலம் என்ப மனை மாட்சி - ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு - அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை.
('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: இல்லறத்தின் பெருமையே ஒருவனுக்கு நன்மை தருவது. அவ்வில்லறத்தின் அணிகலன் போன்றது நல்ல மக்களைப் பெறுதல்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு.

பதவுரை: மங்கலம்-பொலிவு, அழகு, நன்மை, நல்வாழ்வு, மங்கல அணி (தாலி); என்ப-என்று சொல்லுவர்; மனை-இல்லறம், மனையாள், இல்லம்; மாட்சி-மாண்பு, பெருமை, சிறப்பு; மற்று-(அசைநிலை); அதன்-அதனுடைய; நன்-நல்ல; கலம்-அணி; நன்-நல்ல; மக்கள்-மக்கள்; பேறு-பெறுதல்.


மங்கலம் என்ப மனைமாட்சி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை;
பரிதி: பதிவிரதைக்கு அழகாவது இல்லறம் நடத்தல்;
காலிங்கர்: வாழ்க்கைத்துணைக்கு நன்மையாவது, கற்பினால் மாட்சிமை பெறுதல்;
பரிமேலழகர்: ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை;
பரிமேலழகர் குறிப்புரை: 'அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. [எஞ்சி நிற்றல்-குறைந்து நிற்றல்]

'மனைவி ஒழுக்கமுடையளாதல் கணவனுக்கு அழகு என்பர்' என்று மணக்குடவரும், 'கற்புடைய மனைவிக்கு அழகாவது இல்லறம் நடத்தல்' என்று பரிதியும், 'கற்பினால் மாட்சிமை பெறுதல் வாழ்க்கைத் துணைக்கு நன்மை' என்று காலிங்கரும் 'மனையாளது நற்குண நற்செய்கை கணவனுக்கு நன்மை என்று சொல்வர்' என்று பரிமேலழகரும் இத்தொடர்க்கு உரை நல்கினர். யாருக்கு மங்கலம் என்பதிலும் மனைமாட்சி என்பதை விளக்குவதிலும் அனைவரும் வேறுபடுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனைவியின் பண்பே குடும்பத்துக்கு மங்கலம்', 'இல்லறப் பண்பினை மங்கல அணி (தாலி) என்பர்', 'மனைவியின் மாண்பே வீட்டிற்கு மங்கலமெனப் படுவது என்றும்', 'குடும்பத்துக்கு எல்லா நன்மைகளையும் உண்டாக்கக்கூடிய மங்கலப் பொருள் மனனயாளின் பெருமைதான்' என்ற பொருளில் உரை தந்தனர்.

இல்லறத்திற்கேற்ற மாண்பு குடும்பத்துக்குப் பொலிவு தருவது என்று சொல்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.
பரிதி: அதுவன்றியே அவளுக்கு ஆபரணம் நல்லபுதல்வரைப் பெறுதல் என்றவாறு.
காலிங்கர்: அவர்க்கு அணிகலமாவது, சான்றோரால் மதிக்கப்பட்ட அறிவினையுடைய புதல்வரைப் பெறுதல் என்றவாறு.
பரிமேலழகர்: அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை.
பரிமேலழகர் குறிப்புரை: 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

'நல்ல மக்களைப் பெறுதல் அதற்கு அணிகலன் ஆகும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குழந்தைப் பேறே குடும்பத்தின் நல்லணி', 'அதற்கு நல்ல அணிகலம் நன்மக்களைப் பெறுதல் என்பர்', 'அதன் சிறந்த அணிகலன் நல்ல மக்களைப் பெறுவதென்றும் அறிஞர் சொல்லுவார்கள்', 'அந்தப் பெருமைக்கு அழகு தரும் ஆபரணம் நல்ல மக்களைப் பெறுவதுதான்' என்றபடி பொருள் உரைத்தனர்.

மேலும் அதற்கு அழகு சேர்ப்பது நல்ல மக்களை உருவாக்குவது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இல்லத்து மாண்பு மங்கலம் என்பர்; மேலும் அப்பெருமைக்கு அழகு சேர்ப்பது நல்ல மக்களை உருவாக்குவது என்பது பாடலின் பொருள்.
'மங்கலம்' என்பது என்ன?

மனைவி, கணவன் இருவரும் ஒருவர்க்கொருவர் வாழ்க்கைத் துணையாய் அமைந்து இல்லத்திற்கு பொலிவூட்டி மக்களைப் பெறுவர்.

இல்லற மாண்பு பொலிவு தருவது; மேலும் அதற்கு அழகூட்டுவது நன்மக்களைப் பெறுதல்.
'மனைமாட்சி' என்ற தொடர்க்கு மனையாள் ஒழுக்கமுடையாளாதல், இல்லறம் நடத்தல், கற்பினால் மாட்சிமை பெறுதல், மனையாளது நற்குண நற்செய்கைகள், நல்ல குணங்களை உடைய பெண்சாதி, நற்குண நற்செய்கை உடைய மனையாள், மனைவியின் நற்பண்பு, இல்லாளுடைய (நற்குண. நற்செய்கைகளாகய) சிறப்பு, மனையறமாட்சி, மனைவியின் பண்பு, இல்லறப் பண்பு, மனையாளின் பெருமை, மனைவியின் மாண்பு, இல்லறத்தின் பெருமை, மனைவியின் மாட்சிமைப் பண்பு, மனைவியின் நல்லொழுக்கம், நல்ல மாண்புகளைக் கொண்ட மனைவி என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
அதிகாரப் பெயர் வாழ்க்கைத்துணை நலம் என்பதாலும் இத்தொகுப்பில் உள்ள மற்ற ஒன்பது குறள்களும் மனையாளைப் பற்றியே பேசுகின்றன என்பதாலும் பெரும்பான்மையான உரையாளர்கள் மனைமாட்சி என்றதற்கு மனையாளின் மாண்பு என்று பொருள் உரைத்தனர்.
நலம், வளம், புகழ், தொடர்ச்சி என்னும் குடிமைச் சிறப்பு எல்லாம் நிகழ்வது மனையில்தான். மனையின் அதாவது இல்லத்தின் மாண்பே மனைமாட்சி. ஒழுக்கமுடைய தலைவனும் தலைவியும் இணைந்து கருத்தொருமித்து இன்புற நடத்தும் வாழ்க்கை இல்லத்திற்குப் பெருமை ஆகும்; இது மங்கலமானது. அவர்கள் அளவில் நின்றுவிடாமல், மக்கட் பேறு பெற்று குடும்பத்துக்கு இன்னும் ஒளி சேர்ப்பர். நன்மக்களே தலைமுறை தொடர்வதற்கான இணைப்பாகி, மனித குலம் தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கவும் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் காரணமாகின்றனர். மனமாட்சி என்ற பொலிவுக்கு அவர்கள் நல்ல அணிகலனாக அமைகின்றனர். 'மனைமாட்சி' என்பது 'மனைத்தக்க மாண்பு' என முந்தைய குறள் ஒன்றில் (51) குறிக்கப்பெற்றது. 'மனைமாட்சி' என்ற சொல்லே இதே அதிகாரத்து 52ஆம் பாடலில் மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் அல்லது வீட்டுப் பண்பு என்ற பொருளில் ஆளப்பட்டது. அதே பொருள் இப்பாடலுக்கும் பொருந்தும். மனை மாட்சி உண்டாதற்குக் காரணமானவர்கள் கணவன் மனைவி இருவருமே ஆகும். அதாவது இல்லத்திற்குப் பெருமைதரும் வகையில் இல்வாழ்வானும், இல்லாளும் இணைந்து இனிதே நடத்தும் வாழ்க்கையே குடும்பத்துக்கு மங்கலம் தருகிறது. எனவே மனைமாட்சி என்றதற்கு மனையாளின் மாண்பு என்பதினும் இல்லத்தின் அல்லது இல்லறத்தின் பெருமை என்ற பொருள் சிறக்கும்.
இல்லத்தின் மாண்பு பேணப்படுவது மங்கலம்; நல்ல மக்களைப்பெறுதல் இல்லறத்திற்கு அணிகலனாக அமையும் என்பது கூறப்பட்டது.

'மங்கலம்' என்பது என்ன?

மங்கலம் என்ற சொல்லுக்கு அழகு, நன்மை, இல்வாழ்க்கைக்கு மங்கலம், மங்கலமான வாழ்வு, மங்கல அணி (தாலி), குடும்பத்துக்கு நல்வாழ்வு, வீட்டிற்கு மங்கலம், பொலிவு, நெடுநன்மை, இல்லற வாழ்வுக்கு நல்ல மங்கலப் பொருள், புனிதம், மங்கல நாண் என்று உரையாளர்கள் பொருள் கூறினர்.

வ உ சிதம்பரம் பிள்ளை இக்குறளுக்கான உரையில் மங்கலம் என்பது மங்கல நாணைக் குறிக்கும் என்று எழுதினார். மங்கலநாண் தாலி என்றும் அறியப்படும்.
தண்டபாணி தேசிகர் 'மங்கலம் என்பது மகளிர் கழுத்தில் அணியும் மங்கல நாணைக் குறிக்கும்' என்று கூறி 'தாலி மங்கலப் பொருளாக மதிக்கப் பெற்று மங்கலம் என்றே வழங்கப்பட்டது; மனையாளது மாட்சி தாலியாய் உருவகிக்கப்பட்டுள்ளது; இளங்கோ அடிகளும் கம்பரும் தாலியை மங்கலம் என்றே உணர்த்திப் பாடினர்; மங்கல நாண் கணவன் உள்ளவரை கழற்றக் கூடாத அணி; என்றும் பிரியாத நலம் பயக்கும் குணங்கட்குத் தாலியை ஒப்பிட்டதிலிருந்து மகளிர்க்கு அணிக்கெல்லாம் அணியாக இருப்பது தாலியே என்பது கருத்தாதல் தெளியலாம்; மங்கலநாண் போன்றவை மனையாளது நற்குண நற்செய்கைகள்; நன்கலம் போன்றவர் நன்மக்கள் என்று உரை கொள்ளலாம்' என்று விளக்கினார்.
இரா சாரங்கபாணியும் இதே கருத்துடையவர்தாம். அவர் 'மங்கலம் என்பதற்கு உண்டான பல பொருள்களினும், மங்கல அணியாகிய தாலி எனும் பொருள் பொருந்துவதாகும் என்று சொல்லி, 'பண்புடைமையை அணியாகக் கூறுதல் வள்ளுவர் நெறி. அவ்வகையில் மனைமாட்சியை மங்கல அணியாகக் கொள்ளுதல் பொருந்துவதே. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி... (இனியவைகூறல் 95) ...நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி (நடுவுநிலைமை 115) எனப் பிற இடங்களிலும் பண்பினை அணிகலன்களாகக் கூறுதல் நோக்குக' என்றும் கூறுகிறார்.

மனையாளது மாட்சி தாலியாய் அதாவது மங்கல நாணாய் உருவகிக்கப்பட்டுள்ளது என்பது இயல்பாகப்படவில்லை. மங்கலம் என்பதற்கு நன்மை எனப் பொருள் கண்டவர்கள் அது கிடைக்கப்பெறுவது கணவனுக்கு என்று ஒரு சாராரும், இல்லாளுக்கு என்று மற்றொரு சாராரும், இல்லத்திற்கு என்று பிறரும் உரைத்தனர்.
மங்கலம் என்ற சொல்லுக்குப் 'பொலிவு' அல்லது 'என்றும் நீங்காத அழகு' என்பது பொருத்தமான பொருளாகப்படுகிறது. 'மங்கலம் என்ப மனைமாட்சி' என்ற தொடர் இல்லறத்து மாண்பு நிலைக்கச் செய்தல் குடும்பத்துக்கு என்றும் நீங்காத பொலிவு என்று சொல்வர் எனப் பொருள்படும்.

மங்கலம் என்பது பொலிவு என்ற பொருளது.

இல்லறத்தின் பெருமையே குடும்பத்துக்குப் பொலிவு தருவது என்று சொல்வர்; மேலும் அப்பெருமைக்கு அழகு சேர்ப்பது நல்ல மக்களை உருவாக்குவது என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard