Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவருக்கும் திராவிட நாத்திகக் கும்பலுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?


Guru

Status: Offline
Posts: 7474
Date:
திருவள்ளுவருக்கும் திராவிட நாத்திகக் கும்பலுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
Permalink  
 


திருவள்ளுவருக்கும் திராவிட நாத்திகக் கும்பலுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

 ஆறு.தர்மபூபதி   https://adboopathy.wordpress.com/2015/01/13/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-3/

1

தமிழகத்தில் திராவிட கட்சிகளும்  நாத்திக கும்பல்களும் திருவள்ளுவப் பெருந்தகையை தங்களது கொள்கையின் முகமாக (ICON) வைத்துக் கொள்கிறார்கள். இவர்களது சித்தாந்தத்திற்கும் திருவள்ளுவர் சித்தாந்தத்திற்கும் ஏதாவது சம்பந்தமுண்டா? அவருடைய கொள்கைகளை இவர்களில் யாராவது ஒருவராவது பின்பற்றுகின்றார்களா? திருவள்ளுவரைப் பற்றி பேச இவர்களுக்கு ஏதாவது ஒரு தகுதியாவது உண்டா? என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. கொஞ்சம் திருக்குறளை ஆராய்வோம்…..
 
திருக்குறளை எழுதத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை கடவுளை வணங்கி கடவுள் வாழ்த்துடன்  முதல் குறளை  எழுத  ஆரம்பிக்கிறார்.
 
Art by Anikartick,Chennai,India
 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. மு வ உரை
அதாவது உலகத்தை தோற்றுவித்தவர் எல்லாவற்றிற்கும் மேலான ஆதி பகவன் (கடவுள்) என்கிறார் வள்ளுவர். ஆக கடவுள் என்ற எல்லாவற்றிற்கும் மேலான சக்தி இருப்பதை வள்ளுவப் பெருந்தகை ஆணித்தரமாக கூறுகிறார்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
-மு வ உரை.
அதாவது ஹிந்துமதத்தின் அடிப்படை கோட்பாடான ஒருவரது வாழ்க்கையை நிர்ணயிக்கும் தீவினை நல்வினை பற்றி பேசுகிறார் வள்ளுவர். இங்கே சங்க கால கவி பூங்குன்றன் கலியனார் சொன்ன “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற பாடலில் இரு வினைகளை குறிப்பிடுவதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். பிறப்பிற்கு மூல ஆதாரமான அறியாமையால் ஏற்படும் இருவினைகள்  இறைவனை பணிந்தவர்களிடம் சேருவதில்லை. பெரியாரின் அடியார்கள் இந்த இருவினைகளை ஏற்றுக் கொள்வதில்லை. கடவுள் வாழ்த்து பகுதியில், மேலோட்டமாக பார்த்தால் திருவள்ளுவர் கடவுளை அடைவதை (அ) எப்படி அடைவது என்பதை பற்றி தீர்க்கமாக சொல்லாதது போல தோன்றினாலும். எதை பிடிக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். 10

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. -மு வ உரை.
மேலும் கடவுளை பற்றி ஆதி பகவன், இறைவன், தெய்வம் என்ற பொதுவான வார்த்தைகளிலே சொல்லியிருக்கிறார். நாம் கடவுளை அடைய வில்லை எனில் நம்மை பிறவி தொடரும் எனவும் தீர்க்கமாக சொல்கிறார் திருவள்ளுவர்.
இந்த குறளில் வள்ளுவ பெருந்தகை அவர்கள் பிறவி பற்றியும் இறைவன் அடி பற்றியும் மேலும் இந்த இறைவன் அடியை சேராதவர்கள் பிறவி எனும் பெருங்கடலில் அதாவது மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து வாழ்க்கை சூழலில் நீந்தி கொண்டே இருப்பார்கள் என்கிறார்.

கற்றதனால்லாய பயனென் கொல் வாலறிவான்

நற்றாள் தொழார் யெனின் 2

நாம் என்னதான் கற்றாலும் “நற்றாள்” அதாவது இறைவனின் நல்ல திருவடிகளை தொழ வில்லை எனில் என்ன பயன் என்கிறார். கடவுள் வாழ்த்தில் உள்ள பத்து குறள்களில் உள்ள மாணடி, இலானடி, தாள்சேர்ந்தார்க், தாளை போன்ற இந்த வார்த்தைகளை நன்கு கவனித்தால்ஒவ்வொரு குறளிலும் ஒவ்வொரு வார்த்தைகளில் இறைவன் திருவடியை பற்றி எவ்வளவு தீர்க்கமாக வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்
ஏன் வள்ளுவர் இத்தனை முறை திருவடி பற்றி சொல்கிறார் என்று பார்த்தால் இறைவன் திருவடி வாழ்க்கைக்கு  எவ்வளவு முக்கியமானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இந்த இறைவன் திருவடியை பிடித்தால் போதும் பிறவி என்னும் பெருங்கடலை நீந்தி விடலாம் என்கிறார். இவ்வாறு கடவுள் வாழ்த்தில் இறைவன் ஒருவன் உள்ளான் என்பதையும் இரு வினைகள் நம் அறியாமையால் சேர்வதை தடுக்க இறைவன் திருவடியை நாட வேண்டும் என்றும் உறுதியாக திருவள்ளுவர் கூறியுள்ளார். இவ்வாறு கூறியுள்ளதை ஏற்காத இந்த கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் தங்களது சித்தாந்தத்தின் முகமாக திருவள்ளுவரை வைத்து இருப்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஆக வள்ளுவரை தங்களது முகமாக காட்டிக் கொள்ளும் நாத்திக திராவிடக் கும்பலின் மூலக் கொள்கையான கடவுளை கற்பிப்பவன் காட்டுமிராண்டி என்ற கொள்கை இங்கே வேரறுக்கப் படுவது மட்டுமல்ல, இவர்களது கூற்றுப்படி வள்ளுவப் பெருந்தகை காட்டுமிராண்டியும்  ஆவார்.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்: மற்று

நிலையாமை காணப் படும். – 349

பொதுவாக இந்த குறளுக்கு விளக்கம் எந்த பற்றும் இல்லாமல் இருந்தால் இறைவனை காண முடியும் (அ) மீண்டும் பிறக்காமல் இருக்க முடியும் என்று சொல்ல படுகிறது. முன்பு பார்த்த குறளில் பிறவி பெருங்கடலை நீந்த, இறைவன் அடியை சேர வேண்டும் என்று சொன்னவர் இந்த குறளில் பற்றற்று வாழ்ந்தால் பிறப்பற்ற வாழ்வினைப் பெறலாம் என்று கூறுகிறார்.
திருமந்திரத்தில் திருமூலர் பல பாடல்களில் இறைவனது திருவடி பற்றி விளக்கியுள்ளார், அதில்  ஒரு பாடல்,
திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.
இறைவன் திருவடியே நமது கண்கள்!
திருமூலர் நான்கு வரிகளிலும் திருவடி திருவடி என்று திருப்பி திருப்பி சொல்கிறார்
விளக்கம்
திருவடியிலே சிவமாகிய ஒளி உள்ளது. திருவடியே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்க்கு நம்மை அழைத்து செல்லுமாதலால் அதுவே சிவலோகம். திருவடியே நமக்கு கதி மோட்சம் தரும். திருவடியே கதி என்று இருக்க வேண்டும். திருவடியே தஞ்சம் என பரிபூரணமாக சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும்!”
எல்லாவற்றுக்கும் தேவை திருவடி! எல்லாம் பெற தேவை திருவடி! நாம் நாட வேண்டியது திருவடி! இதுதான் மெய்பொருள்!
இன்னொரு பாடல்,
மந்திர மாவதும் மாமருந் ஆவதும்
தந்திர மாவதும் தானங்கள் ஆவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி ஆவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே”
இந்த பாடலில்
திருவடி தான் மருந்து என்று கூட சொல்லவில்லை மாமருந்து என்று சொல்கிறார். இந்த மருந்தே நம்முடைய பிறவி பிணியை தீர்க்கும் மருந்து.
பிறவி இல்லாத நிலை பற்றி மாணிக்கவாசகர் திருவாசகத்தில்,
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள் வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடி வாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பனியான்
இந்த அற்புதமான பாடலில் பிறவிப் பெருங்கடலை கடப்பது பற்றி,
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
எண்ணிலா பிறப்பெடுத்து கர்மவினையால் துன்புறும்  நம்மை மீண்டும் பிறவாமல் தடுத்து காப்பது இறைவன் திருவடி – கழல்களே – கண்களேயாகும்!
இந்துக்களின் வேதங்களும், புராணங்களும் அதையே வலியுறுத்துகின்றன.
இதோகாஞ்சிப் பெரியவர் பேசுகிறார்:
மற்ற மதங்களில் இல்லாத பல அம்சங்கள் நம் மதத்தில் இருக்கின்றன. அதில் கர்மக் கொள்கை (Karmattheory) என்று ஒன்று சொல்கிறார்கள்-நம் மதத்திலிருந்தே வந்த பெளத்தம் போன்ற மதங்கள் இதை ஒப்புக் கொண்டாலும், ஏனைய மதங்களில் இந்தக் கொள்கை இல்லை. 
கர்மா தியரி’ என்றால் என்ன? 
எந்தச் செயலுக்கும் பிரதியாக ஒரு விளைவு உண்டு. Cause and Effect என்பதாகவும், Action and Reaction என்பதாகவும் இவை தவிர்க்க முடியாத விதிகளாக இருக்கின்றன என்றும் `ஃபிஸிக்ஸில்’ சொல்கிறார்கள். பெளதிகத்தில் சொல்வதையே மனுஷ்ய வாழ்க்கைக்கும் பொருத்தி கர்மக் கொள்கையை நம் ஆன்றோர்கள் கூறுகிறார்கள். பிரபஞ்சத்தில் ஜடமான பூதங்கள் போலவே சைதன்யம் என்ற அறிவுள்ள ஜீவர்களும் அடக்கம். இவை ஒன்று சேர்ந்தது தான் லோக வாழ்வு. எனவே ஒன்றுக்கு இருக்கும் நியதி, தர்மம் இன்னொன்றுக்கும் இருக்கத்தான் வேண்டும். மனிதனின் ஒவ்வொரு கர்மாவுக்கும் விளைவாக ஒரு பலன் உருவாக்கித்தான் தீர வேண்டும் என்பதே (Karma theory) பாவ கர்மம் செய்தால் அதற்கான தண்டனையை மனுஷ்யன் அனுபவிக்க வேண்டும். புண்ணிய கர்மம் செய்தால் அதற்கான நற்பலன் அவனை வந்தடையும்’ என்கிறது நம் மதம். 
இம் மாதிரிப் பாவ-புண்ணியக் கர்மங்களை மனிதன் அனுபவிக்க வேண்டும் என்பதாலேயே அவனுக்கும் பல பிறவிகள் உண்டாகின்றன என்கிறது நம் மதம். நல்லது செய்ய வேண்டும். கெட்டது செய்யக் கூடாது என்பதைச் சகல மதங்களும் சொன்னாலும், அவை நம் மதம் மாதிரி இத்தனை அழுத்தம் கொடுத்து, காரணம், விளைவு (Cause and Effect) தொடர்பைச் சொல்லவில்லை. மறு பிறப்புக் கொள்கையை (Reincornation Theory) மற்ற மதங்கள் – பாரத தேசத்தில் தோன்றாத மற்ற மதங்களில் எதுவுமே – சொல்லவில்லை. அது மட்டுமில்லை, இதற்கு மாறாகப் பல தினுசான கருத்துகளைச் சொல்கின்றன. ஆனபடியால், அந்த மதஸ்தர்கள் மனிதனுக்குக் கர்மா தீருகிறவரை பல ஜென்மங்கள் உண்டு என்ற நம் கொள்கையைப் பலமாக ஆட்சேபிப்பார்கள். 
பொதுவாக அந்நிய மதத்தவர் கருத்து என்னவென்றால், `இந்த ஒரே ஜென்மத்தோடு மனுஷ்யனுக்குப் பிறவி தீர்ந்து விடுகிறது. இந்த ஜென்மா முடிந்த பின் அவன் உயிர் என்றைக்கோ ஒரு நாள் ஸ்வாமி கூறுகிற தீர்ப்பைக் கேட்பதற்காக ஓரிடத்தில் போயிருக்கும். 
அந்த நாளில் (Judgement Day) ஸ்வாமி இவன் இந்தப் பிறவியில் செய்த பாவ – புண்ணியங்களைக் கணக்குப் பார்த்து இவனை நித்தய ஸ்வர்க்க வாசகத்துக்கோ அல்லது நிரந்தர நரக வாசகத்திற்கோ (Eternal Damnation) அனுப்பி விடுவார்’ என்பதாகும். 
என்னிடம் வந்த ஒரு வெள்ளைக்காரர் – இப்போதெல்லாம் தான் என்னிடம் நிறைய வெள்ளைக்காரர்கள் வந்தபடி இருக்கிறார்களே, அவர்களில் ஒருத்தர் – இவர் புத்தகம் கித்தகம் எழுதிப் பிரசித்தி பெற்றவர் – வேடிக்கையாகச் சொன்னார், அவருக்குப் பைபிளில் எங்கு பார்த்தாலும் கடவுள் அன்பே உருவானவர் (God is Love) என்று சொல்லிவிட்டு, இப்படிப் பட்டவர் ஒரு தப்புப் பண்ணியவனைத் துளிகூடக் கருணையில்லாமல், மீளவே வழியில்லாமல் நித்திய நரகத்துக்கு அனுப்புகிறார் என்று சொல்வது பொருத்தமில்லாமல் தோன்றியதாம். எனவே ஒரு பாதிரியாரிடம் சமாதானம் கேட்டாராம். அதற்குப் பாதிரியார் `நிரந்தரமாகக் காலியாகவே இருக்கிறது’ என்றாராம். 
ஆனால், யோசித்துப் பார்த்தால் இதை நாம் ஏற்றுக் கொள்வது சிரமமாய் இருக்கும். சுவாமி கருணை காரணமாகப் பாவியைக் கூட நரகத்துக்கு அனுப்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அவர்கள் சித்தாந்தப்படி அவர் பாவியின் உயிரை எங்கே அனுப்ப முடியும்? அவர்கள் கொள்கைப்படி மறு ஜென்மம் இல்லையாதலால் பூலோகத்துக்கு மறுபடி அனுப்ப முடியாது. அதனால் பாவியையும் ஸ்வர்க்கத்துக்குத் தான் அனுப்ப வேண்டியதாகும். அப்படியானால் நாம் லோகத்தில் எந்தப் பாவத்தை வேண்டுமானாலும், எத்தனைப் பாவங்கள் வேண்டுமானாலும் கூசாமல் செய்து கொண்டே போகலாம். முடிவில் எப்படியும் ஸ்வாமி நம்மை ஸ்வர்க்கத்துக்கு அனுப்பி விடுவார் என்று ஆகும். அதற்கப்புறம் லோகத்தில் சகலரும் ஒழுங்கு தப்பித்தான் நடப்பார்கள். 
நம் மதப்படியும் கர்ம பலனைத் தந்து தீர்ப்புத் தருகிற பலதாதாவான ஈஸ்வரன் பரம கருணாமூர்த்தி தான். ஆனால், அதற்காக லோகம் அதர்மத்தில் மனமறிந்து விழட்டும் என்று விடுகிறவன் அல்ல அவன்.
அதனால் என்ன பண்ணுகிறான்? 
நம் பாவ பலனை (புண்ணிய பலனையும் தான்) அனுபவிப்பதற்காக நம்மை, இன்னொரு ஜென்மா கொடுத்து மறுபடி இந்த உலகுக்கே அனுப்பி வைக்கிறான். ஸ்வர்க்க ஆனந்தம், நரகக் கஷ்டம் இரண்டும் இந்த உலகத்திலேயே தான் இருக்கின்றன…….. 
எனக்கென்று முயற்சி என்ன இருக்கிறது; எல்லாம் உன் செயல்’ என்று ஜீவன் சரணாகதி செய்கிற போது ஸ்வாமியே இவனை ஒரே தூக்காகத் தூக்கி விடுகிறார் என்பது வாஸ்தவம்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து.361

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர். மு.வ உரை
எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து – எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து: அவாஅ என்ப – அவா என்று சொல்லுவர் நூலோர். பரிமேலழகர் உரை
பிறவித்துன்பத்திற்கு ஆசையே காரணம் என்பது ஹிந்து மதத்தின் ஆணி வேர் ஆகும். ஹிந்து மதத்தின் மிகப்பெரிய நம்பிக்கை பிறவி எடுக்காமல் இருக்க இறைவனது திருவடியை நாட வேண்டும் என்பதை மாணிக்க வாசகர், திருமூலர் போன்றோருக்கு முன்னரே தெய்வப்புலவர் திருவள்ளுவர் கடவுளைப் பற்றியும் அவருடைய திருவடியை தொழுவது ஒன்றே சால சிறந்தது என்று தீர்க்கமாக கூறியுள்ளதையும் பின்பற்றாதவர்கள் திருவள்ளுவரை எப்படி தங்களது முகமாக வைத்துக் கொள்கிறார்கள்.
பெரியாரின் வழி வந்தவர்கள் பின்பற்றும் கொள்கை திருவள்ளுவருக்கு எதிரானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.


-- Edited by admin on Thursday 6th of February 2020 02:07:26 PM

__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: திருவள்ளுவருக்கும் திராவிட நாத்திகக் கும்பலுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
Permalink  
 


2

 

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு  18

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது;  நாள் வழிபாடும் நடைபெறாது. மு.வ உரை
இங்கு வானோர் என்பது மேலுலகில் வாழும் தேவர்களையும், தெய்வங்களையும் குறிப்பதாகும். இதுவும் ஹிந்துக்களின் வழிபாட்டு முறையை வள்ளுவப் பெருந்தகை பதிவு செய்கிறார்.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு 23

பிறப்பு, வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது. -மு வ உரை.
thiru 1
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது. சாலமன் பாப்பையா உரை:
பிறப்பு என்ற (இவ்வுலக வாழ்க்கையான) இந்தப்பிறவி, மறுபிறவி என்று சொல்லக் கூடிய நாம் செய்த வினைகளுக்கேற்ப கிடைக்கும் வீடு பற்றி ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொள்ள வேண்டும், அதுவே இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது, என்கிறார் வள்ளுவர்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல். 38

ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். -மு வ உரை.
அதாவது வாழ்நாளெல்லாம் அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும். அதாவது ஹிந்து மதத்தில் கூறப்படும் மறுபிறவி இல்லாமல் வீடு பேறு பெறுவதற்க்கான வழியை வள்ளுவர் கூறுகிறார்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி 25

ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான். -மு வ உரை.
ஹிந்துமத புராணங்களில் தேவலோகத் தலைவன் இந்திரன் குறித்து பல இடங்களில் சொல்லப்படுகிறது.அதையே, வானுலகத்தில் தெய்வத்திற்கு  நிகரானவன் தேவ லோகத்தின் தலைவன் இந்திரன். அவன் தனது ஐம்புலன்களை அடக்காமல் சாபம் பெற்றதே சான்று. இதன் மூலம் ஹிந்துக்களின் தேவருலக இந்திரன் என்ற நம்பிக்கையை பதிவு செய்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்

தெய்வத்துள் வைக்கப் படும் 50

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான். -மு வ உரை.
மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான். அதாவது தெய்வத்திற்கு இணையாக  மதிக்கப்படுவான்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை 55

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும் -மு வ உரை.
தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழு தெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.(மணக்குடவர் உரை)

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு 58

கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர். -மு வ உரை.
பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின். 62

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா. -மு வ உரை.
ஹிந்துக்களின் நம்பிக்கையான ஏழு ஜன்மங்கள் குறித்து வள்ளுவர் பதிவு செய்துள்ளது இறை நம்பிக்கை அற்றவர்களுக்கு எதிரானவர் வள்ளுவர் என்பது புரியும்.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு.107

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர் -மு.வ உரை:
தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு – தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை; எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் – எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர்.-பரிமேலழகர் உரை
பகவத்கீதை
மஹாபாரதத்தில் கிருஷ்ணர் கூறுவது) தெளிவாக மறுபிறப்பு உண்மையை விளக்குகிறது.
“அர்ஜுனா!எனக்கு எத்தனையோ ஜென்மங்கள் கழிந்து விட்டன.உனக்கும் அப்படியே!அந்த ஜன்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்”
(பஹீனி மே வ்யதீதாநி ஜன்மானி தவ சார்ஜுனI தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தபII -கீதை அத்4 சுலோகம் 5)
புண்ணியம் செய்தவர்கள் “விசாலமான அந்த ஸ்வர்க்க லோகத்தை அனுபவித்து புண்ணியம் கரைந்து போன பிறகு மனித உலகுக்கே திரும்பி விடுகிறார்கள்.ஆகவே வைதீக தர்மங்களைக் கடைப்பிடித்து , கோரிக்கைகளை வேண்டுபவர்கள் ஜனன மரண சுழலைத் தான் அடைவார்கள்” என்றும் கிருஷ்ணர் கீதையில்(9ம் அத்தியாயம் 21ம் சுலோகம்) உறுதிப் படுத்துகிறார்.
இந்த தத்துவத்தின் அடிப்படையில் மஹாபாரதத்தில் வரும் ஜீவனுள்ள அனைத்து பாத்திரங்களின் பூர்வ ஜென்மங்களைப் பற்றிய சரித்திரங்களைப் படிக்கும் போது வியப்பும் பிரமிப்பும் மேலிடுகிறது.
ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான அனுமன் த்வாபர யுகத்திலும் இருந்து பீமனைச் சந்தித்து ஆசி கூறுகிறான். ராமராக அவதரித்த விஷ்ணு மீண்டும் கிருஷ்ணராக அவதரிக்கிறார்.
மஹாபாரத நிகழ்வு நடக்கப் போகிறது; ஆகவே அனைத்து தேவர்களும் அவரவருக்கு உரிய இடங்களில் பிறந்து விடுங்கள் என்று கட்டளையிடப்படுவதை ஆதிபர்வம் விளக்குகிறது!
நளாயனியே திரௌபதி
நளாயனியே தனது பெண் திரௌபதியாகப் பிறந்திருக்கிறாள் என்பதை வியாஸர் சொல்லக் கேட்டு ஆச்சரியமடைந்த துருபதன் அவளது ஜனனத்திற்கான காரணத்தை வினவ அவளது முன் ஜென்ம வரலாற்றை வியாஸர் விரிவாக விளக்குகிறார்.(ஆதிபர்வம்-213ம் அத்தியாயம்) அருவருப்பான உருவமும் கிழவரும் வியாதியால் பீடிக்கப்பட்டவருமான மௌத்கல்யர் என்ற  மஹாமுனிவருக்கு மனைவியாக வாய்த்த நளாயனி காம போகங்களில் திளைத்து வாழும் போது ஒருநாள் அதில் சலித்துப் போன மௌத்கல்யர் வைராக்கியமடைந்து பிரம்ம தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார்.அப்போது நளாயனியை அவர் விடவே நளாயனி பூமியில் விழுந்தாள்.தான் இது வரை அனுபவித்த போகங்களில் திருப்தியுறாதவளாயிருப்பதை நளாயனி தெரிவிக்கவே மௌத்கல்யர் துருபதனின் புத்திரியாக நீ இருப்பாய். அப்போது ஐந்து கணவர்கள் உனக்கு இருப்பார்கள். அழகான உருவம் உடைய அவர்களுடன் நீ வெகு காலம் இன்பத்தை அடைவாய் என்று கூறுகிறார், பிறகு அவள் சங்கரரை நோக்கித் தவம் புரியவே அவர் நேரில் தோன்றி நீ ஐந்து கணவர்களை அடுத்த ஜென்மத்தில் அடைவாய் என் ஆசீர்வதித்து வரம் கொடுக்கிறார். ஏன் ஐந்து கணவர்கள் என்று திகைப்புடன் நளாயனி வினவ,” நீ ஐந்து முறை ‘பதியைக் கொடும்’ என்று கேட்டாய்!ஆகவே உனக்கு ஐந்து கணவர்கள் அமைவார்கள்” என்று மஹேஸ்வரர் பதில் அருளுகிறார். நளாயனியைப் பற்றி மஹாபாரதம் விவரிக்கையில் நள-தமயந்தியின் புத்திரியே அவள் என்ற ஒரு சுவையான செய்தியையும் அது தருகிறது.http://tamilandvedas.com/tag/புனர்-ஜன்மம்/
இதனை வள்ளுவரும் ” உள்ளத்தால் உள்ளலும் தீதே” என்றும்உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்” என்றும் கூறுகிறார். அது மட்டுமல்ல “ வினைப்பகை வீயாது பின்சென்று அடும்” என்கிறார்.
நாம் எங்கு ஓடிச் சென்றாலும் நாம் செய்த வினையின் பயன் நம்மை நிழல்போல பின் தொடர்ந்து வந்து தாக்கும் ” என்கிறார்.
வள்ளுவர் ஹிந்துமதத்தில் நம்பப்படும் ஏழு பிறவிகள் அல்லது ஏழு ஜன்மங்கள் பற்றி குறிப்பிடுவதை நாம் உணர வேண்டும். பெரியாரின் சீடர்கள் இந்த பிறப்பு இறப்பு மீண்டும் பிறப்பு என்பதை ஏற்றுக் கொள்வார்களா?


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

3

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்  84
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள். மு.வ உரை:
செய்யாள் அகன் அமர்ந்து உறையும் – திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் – முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண் – பரிமேலழகர் உரை:
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள் என்று  செல்வத்தின் லட்சணமாக கருதப்படும் திருமகள் அதாவது லட்சுமி குடியிருப்பாள் என்கிறார் வள்ளுவர்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு 86
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.
வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான். மறுமை என்று குறிப்பிடும் வீடு  பேற்றை வள்ளுவர் குறிப்பிடும் பல இடங்களில் இந்தக் குறளும் ஒன்று.
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்  97 
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை -மு வ உரை.
நயன் ஈன்று நன்றி பயக்கும் – ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும் என்று பரிமேழழகர் பொருள் குறிப்பிடுகிறார்.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.167
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.-மு.வ உரை:
அழுக்காறு உடையானை – பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் – திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை: மூத்தவள்.)-பரிமேலழகர் உரை
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு  179
அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.-மு.வ உரை
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் – இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் – திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும்.-பரிமேலழகர் உரை
ஹிந்துமத தெய்வங்களான திருமகளான லட்சுமி, மூதேவி ஆகியோரைப்பற்றியும் வள்ளுவர் தெளிவாக குறிப்பிடுகிறார்.
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற  213
பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.-மு.வ உரை:
புத்தேள் உலகத்தும் ஈண்டும் – தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும், ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது – ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது.- பரிமேலழகர் உரை
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல் 243
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.-மு.வ உரை
இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் – இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை – அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. (‘இருள் செறிந்த துன்ப உலகம்’ என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், ‘உலகம்’ எனப்பட்டது.)-பரிமேலழகர் உரை
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது  262
தவக் லமும் தவ ஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவ ஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது  வீண் முயற்சியாகும் – மு.வ உரை
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் – பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே, அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் – ஆகலான், அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம். -பரிமேலழகர் உரை
t1416
முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான் என்று முற்பிறவிப் பயனைக் கூறுகிறார்.
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு  351
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.-மு.வ உரை
பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் – மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம், மாணாப் பிறப்பு – இன்பம் இல்லாத பிறப்பு. (அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும் மற்றும் இத்தன்மையவும் சொல்லும் மயக்க நூல் வழக்குகளை மெய்ந்நூல் வழக்கு எனத் துணிதல். குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப் பிறிதொன்றாகத் துணிதலும் அது. ‘மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவிச்சை’ என்பன ஒரு பொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப்பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், ‘மாணாப் பிறப்பு’ என்றார். இதனால் பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.)- பரிமேலழகர் உரை
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. 356
கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர். மு.வ உரை
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு  357
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா. மு.வ
பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்காது என்கிறார் வள்ளுவப் பெருந்தகை
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு 358
பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு. மு.வ உரை
பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல் என்று பிறவாமை குறித்து கூறுகிறார்.
இந்து சமயம் மறுபிறப்பு உண்டு என்ற நம்பிக்கை கொண்டது. ஒரு மனிதனின் பிறப்பானது அவனது முற்பிறவி வினைக்கு ஏற்ப அமைகிறது. அரசனுக்கு மகனாய்ப் பிறப்பது முதல் ஆண்டியாய் இருப்பது வரை அனைத்தும் கருமம், வினையை சார்ந்தே இருக்கிறது.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.362
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும். மு.வ உரை
வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் – பிறப்புத் துன்பம் ஆதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும், அது வேண்டாமை வேண்ட வரும் – அப் பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம். – பரிமேலழகர் உரை
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர். பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு  339
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது- மு.வ உரை
சாக்காடு உறங்குவது போலும் – ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும். (உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து) பரிமேலழகர் உரை
பிறப்பு, இறப்பு,மீண்டும் பிறப்பு ஆகியவற்றை உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு என்கிறார் தெய்வப்புலவர்.
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை  345
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?. மு.வ உரை
பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை – பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவி ஆகிய உடம்பும்மிகை ஆம், மற்றும் தொடர்ப்பாடு எவன் – ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்? பரிமேலழகர் உரை
இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?என்று பிறப்பற்ற தன்மையை அடைய வேண்டும் என்கின்றார் வள்ளுவர்.
யான் எனது என்னும் செருக்கு
அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்  346
உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான். மு.வ உரை
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் – தான் அல்லாத உடம்பை ‘யான்’ என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை ‘எனது’ என்றும் கருதி, அவற்றின்கண் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான், வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும். பரிமேலழகர் உரை
உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து  328
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது. மு.வ உரை
மீண்டும் இந்தக் குறள் மூலம் ஏழு பிறப்புக்களை அதாவது ஏழு ஜனமத்தைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.617
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள். மு.வ உரை
சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்று மீண்டும் ஹிந்து தெய்வ நம்பிக்கையை பதிவு செய்கிறார் பொய்யாமொழிப் புலவர். இங்கு தாமரையினாள் என்று திருமகள் லட்சுமி தேவியை குறிப்பிடுவது வள்ளுவரின் கோட்பாடு எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு  920
இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும். மு.வ உரை
உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலியியல் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.அதாவது இவர்கள் இல்லத்தில் திருமகள் என்று சொல்லக்கூடிய லட்சுமி தேவி தங்கமாட்டாள் என்கிறார் வள்ளுவர்.
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை  765
எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும். மு.வ உரை
கூறுவன் என்று சொல்லக் கூடிய எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்  894
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது. மு.வ உரை
இங்கே ஹிந்துமதத்தில் காலன் என்று சொல்லக் கூடிய எமனைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு. 835
எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான். மு.வ உரை
அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான். இந்தக் குறள் மூலமும் ஏழு ஜனமங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார் வள்ளுவப் பெருமான்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம். 842
அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும். மு.வ உரை
இந்தக் குறள் மூலம் முன் பிறவியில் செய்த வினைப்பயன் காரணத்தைப்பற்றி வள்ளுவர்  குறிப்பிடுகிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்  972
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை. மு.வ உரை
ஆதி சங்கரர் சங்கர திக் விஜயத்தில் தெளிவாக கூறுகிறார்:
Janmanaa Jaayate Shudrah Sanskaraat Dwija Ucchate;
Vedapaathi Bhavet Viprah Brahma jnanaati Brahmanah
(By birth all are Shudras only. By actions men become Dwija (twice-born). By reading the Vedas one becomes Vipra and becomes Brahmin by gaining the knowledge of God.)
அதாவது பிறப்பால் அனைவருமே சூத்திரர்கள் தான். தனது செயல்களாலும்,வேதங்களை படிப்பதால் விப்ரனாகவும் கடவுளின் தத்துவங்களை பின்னர் அறிந்த பிறகே ஒருவன் அந்தணனாக ஆகிறான். பிறப்பால் அல்ல.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 8
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக்கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.(கலைஞர் உரை)
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது. -மு வ உரை.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் 3
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார். (கலைஞர் உரை)
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற் கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர். மு வ உரை.
ஆக அந்தணன் எனப்படுபவன் ஜாதியினால் அல்ல என்பதை வள்ளுவர் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். கலைஞரும் தனது உரை மூலம் இதை ஏற்றுக் கொள்கிறார். இருந்தாலும் நடைமுறையில் பிராமணர்களையும் ஹிந்துமத நூல்களையும் விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.
மஹாபாரதத்தின் வனபர்வத்தில், யாரொருவன் உண்மை பிறரிடம் விட்டுக் கொடுத்துப் போகும் தன்மை,, பெருந்தன்மை ,கொடூரத்தன்மையற்ற குணம், இந்த குணங்களோடு தர்மசிந்தனையுடன் இருப்பவனே பிராமணன். ஒருவன் பிறப்பால் சூத்திரனாக இருந்தாலும் அவன் சூத்திரன் அல்ல, பிறப்பால் பிராமணனாகப் பிறந்தவன் பிராமணனும் அல்ல என்று ஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று மஹாபாரதத்தில் உள்ள சாந்தி பர்வத்தில் ஒரு ஜாதி உயர்ந்தது, இன்னொரு ஜாதி தாழ்ந்தது என்பதை மறுத்தளிக்கிறது.
Na Visheshosti Varnanaam Sarvam Braahmyamidam Jagat
Brahmanaa poorva Sristhim hi Karmabhih Varnataam Gatam
உலகமே தெய்வீக உணர்வுடன் இருந்த காலத்தில், வர்ணங்களில் எந்த பேதமும் இருந்ததில்லை. காரணம் அனைத்து  மனிதர்களுமே பிராமணர்களாக பிராமணத் தன்மையுடன் இருந்தார்கள். அதன் பிறகே மனிதர்களின் செயல்களால் வர்ணங்கள் தோன்றின.
  1. (Thus) a Sudra attains the rank of a Brahmana, and (in a similar manner) a Brahmana sinks to the level of a Sudra; but know that it is the same with the off-spring of a Kshatriya or of a Vaisya.
(https://janamejayan.wordpress.com/2013/01/03/a-hindu-view-of-human-rights-and-dignity-ram-madhav/)
மனுஸ்ம்ரிதியில் (x 65) சூத்திரன் பிராமணன் என்ற நிலைக்கு உயரவும் பிராமணன் சூத்திரனாக தாழ்ந்த நிலைக்கும் அடைய முடியும்.அதேபோன்று இதர வர்ணத்தினரும் வேறு வர்ணத்தை அடையமுடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு உதாரணம் ஜபாலி என்ற சத்ய காமா. தனது பிறப்பு எந்த வர்ணத்தைச் சார்ந்தது என்று தெரியாமலேயே உயர்பிறப்பினன் ஆன சம்பவம்:
“அம்மா” என்று அன்போடு சத்யகாமன் அழைத்த குரல் கேட்டு, அவன் அன்னை திரும்பிப் பார்க்கிறாள்!
“அம்மா, நல்லதொரு வழிநடத்தும் குருவினைத் தேடி அடைய வேண்டிய தருணம் வந்துவிட்டது போல உணர்கிறேன் நான். நமது மூதாதையர் பற்றிச் சொல்லுங்களேன், குருவானவர் கேட்டிடச் சொல்ல வேண்டுமல்லவா…” என வினாவெழுப்பினான், சத்யகாமன்.
“தெரியாது அன்ப” என்பதுடன் அவள் சொல்கிறாள் – “என் இளவயதில் அங்கும் இங்குமாக நான் அலைந்து கொண்டிருந்த போது நீ பிறந்தாய். உன் பெயர் சத்யகாமன். என் பெயர் ஜபலை. நீ ஏன் “சத்யகாமன் ஜபலை” என உன்னை அழைத்துக் கொள்ளக்கூடாது” என்றாளே பார்க்கலாம்!
“அப்படியே ஆகட்டும்” எனச்சொல்லி அன்னையிடம் இருந்து விடைபெற்றுக்கொண்ட அவன் கௌதமரிடன் வந்து “மகரிஷிக்கு வணக்கங்கள். அடியேனைத் தங்கள் சீடனாக ஏற்றருள் புரிய வேண்டும்” என்றான்.
அவரோ, எதிர்பார்த்தபடியே, அவனது குடும்பத்தினைப் பற்றிக் கேட்கலானார். அவனோ, உண்மையை மறைக்காமல், தன் தாய் சொன்னதை அப்படியே சொல்கிறான்.
அதைக்கேட்ட மகரிஷியோ, “உன் பெயரில் இருக்கும் சத்யம் போலவே, நீ உண்மையை உரைப்பதிலேயே உன் உயர் பிறப்பை உணர்கிறேன். உனக்கு உயர் ஞானத்தை அடையும் உபதேசத்தினை தொடங்கி வைக்கிறேன்.” என்று சொல்லி, அவனை தன் சீடர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டார்.
பின்னர், அவர் அவனிடம் நூறு மெலிந்து நலிந்த பசுக்களை ஒப்படைத்து அவற்றை மேய்க்கும் பொறுப்பையும் தந்தார். அவற்றை பெற்றுக்கொண்ட அவன், இந்த நூறு பசுக்களை ஆயிரமாக மாற்றிக் காட்டிய பின்னர், நமது குருவிடம் திருப்பி ஒப்படைக்கலாம்” என மனதில் சொல்லிக் கொண்டான்!
பல வருடங்களுக்கு காடுமேடுகளில் அலைந்து குரு தன்னிடம் ஒப்படைத்த அந்த பொறுப்பை சிரமேற்கொள்கிறான் சத்யகாமன்.
பின்னொருநாள், அவன் மேய்த்த மாடுகளில் ஒன்று அவனருகே வந்து கேட்கிறது, “நாங்கள் இப்போது, ஓராயிரம் மாடுகளாகி விட்டோம். இப்போது உன் எண்ணப்படியே குருவிடம் எங்களை நீ திருப்பி ஒப்படைக்கலாமே?.”. பின்னர், “இத்தனை வருடங்களாக நீ எங்களை கவனித்துக் கொண்டதுக்கு மாற்றாக, நான் உனக்கு பிரம்மத்தின் நான்கு பாதங்களில் ஒன்றினை சொல்லுவேன்” என்றது.
“அப்படியே ஆகட்டும் மாடு ஐயா” என்றான் சத்யகாமன்.
“மொத்தம் நான்கு பகுதிகள். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்பன. இந்த நான்கும் பிரம்மத்தின் ஒரு பாதம் ஆகும். இந்த பாதத்தின் பெயர் “திகழ்ஒளி”. இந்த நான்கின் மீதும் தியானிக்க ஒளியாக வேண்டும். நெருப்பாகிய அக்னி உனக்கு இதைப்பற்றி மேலும் சொல்லும்” என்றது மாடு.
மறுநாள், ஆயிரம் மாடுகளுடன், தனது குருவின் ஆசிரமத்தினை நோக்கி நடக்கலானான் சத்யகாமன். அன்று மாலைப்பொழுதைக் கழிக்க, நெருப்பினை மூட்டி அனல் வளர்க்க, அருகே வந்து அழைத்தது அக்னி, “சத்யகாமா…”.
“நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்” என்றது அக்னி.
“அப்படியே ஆகட்டும் அக்னி ஐயா” என்றான் சத்யகாமன்.
“மொத்தம் நான்கு பகுதிகள். பூமி, ஆகாசம், வானம், கடல் என்பன அந்த இன்னொரு பாதம். இதன் பெயர் “அந்தமில்லா”. இந்த உண்மையினை நீ தியானித்து வந்தால், நீயும் முடிவில்லாதவனாக என்றென்றைக்கும் ஜீவித்திருப்பாய்” என்றது. மேலும் சொல்ல, அன்னப்பறவை ஒன்று வரும் என்றது.
மறுநாள் தொடர்ந்து நடந்த சத்யகாமன், அன்றைய மாலைப்பொழுதினைக் கழிக்கையில், அக்னி சொன்னது போலவே, அன்னமும் அவன் அருகில் வந்தழைத்தது.
“நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்” என்றது அன்னம்.
“அப்படியே ஆகட்டும் அன்னம் ஐயா” என்றான் சத்யகாமன்.
“மொத்தம் நான்கு பகுதிகள். நெருப்பு, சூரியன், சந்திரன், மின்னல் என்பன. இவை நான்கும் பிரம்மத்தின் இன்னொரு பாதம். இதன் பெயர் “முழுஒளி”. ஒளியால் நிறைந்து இந்தப் பாதத்தினை தியானித்தால், இதனை அறியலாம். நாளை, பறவை ஒன்று இதைப்பற்றி மேலும் சொல்லும்” என்றது.
அடுத்த நாள் அதைப்போலவே பறவை ஒன்று வந்து அவனை அன்புடன் அழைத்தது, “சத்யகாமா…”.
“நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்” என்றது பறவை.
“அப்படியே ஆகட்டும் பறவை ஐயா” என்றான் சத்யகாமன்.
“மொத்தம் நான்கு பகுதிகள். மூச்சு, கண், காது, மனம் என்பன. இந்தப் பாதத்தின் பெயர் “நிறுவப்பட்டது”. இதை நன்கு தியானிக்க, இந்த உலகத்தில் இருந்தாவாறே ஆகாசத்தை அறிய வேண்டும்.” என்றது.
இப்படியாக, பிரம்மத்தின் நான்கு பாதங்கள் என்னவென்று சொல்லியதைக் கேட்டவாறு, தனது குருவின் ஆசிரமத்தினை வந்தடைந்தான் சத்யகாமன்.
அவனை அருகில் அழைத்த குரு, “சத்யகாமா, உன் முகம் மிகுந்த தேஜஸுடன் ஒளிருகிறதே – உயர் ஞானத்தை அடைந்தவன் போலே. என்னிடம் சொல், உனக்கு உயர் ஞானத்தை சொல்லித் தந்தவர் யாரோ?” என்றாரே பார்க்கலாம்!
அதற்கு சத்யகாமன், “பெருமதிப்பிற்குரிய ஐயா, எந்த மனிதரும் எனக்கு ஏதும் சொல்லித் தரவில்லை. எனினும், உண்மையான உயர் ஞானத்தினை உங்களிடம் இருந்து பாடம் கேட்கவே நான் காத்திருக்கிறேன். ஏனெனில் ஆசிரியரின் ஞானம் மட்டுமே மாணவனுக்கு பலன் தரும் என்பதனால்.” என்றான்.
பின்னர் அந்த ஆசிரியரும், தன் மாணவனுக்கு அதே ஞானத்தினை சொல்லித் தந்தாராம், எந்தக் குறைவும் இல்லாமல்.
– சந்தோக்ய உபநிடதம்


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 

திருவள்ளுவருக்கும் திராவிட நாத்திகக் கும்பலுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? பகுதி 4

தர்மபூபதி ஆறுமுகம்

4

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. 377
ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக் கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை  நுகர முடியாது. மு.வ உரை
கோடி தொகுத்தார்க்கும் – ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது – தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது. (ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வகுத்தான் என்றார். ‘இசைத்தலும் உரிய வேறிடத்தான’ (தொல்.சொல் 59) என்பதனான் உயர்திணையாயிற்று. படையா தார்க்கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், உம்மை எச்ச உம்மை. வெறும்முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று   பரிமேலழகர் உரை
கோடி கோடியாய் செல்வத்தை சேர்த்துவிட்டவர்களுங்கூட தெய்வமாகிய ஊழ்வினை விதிக்கிற அளவுக்கும் விதத்துக்கும் அதிகமாக அனுபவித்து விட முடியாது.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். 380
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும். மு.வ உரை
ஊழ்வினயினால் ஏற்பட்ட வலிமையுள்ள விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.
images (1)
மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் – தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் , தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள – அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள – அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள? (‘பெருவலி’ ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதி கொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது) பரிமேலழகர் உரை
திருவள்ளுவரும் ”ஊழிற் பெருவலி யாஉள?” என்றே கேட்கிறார். விதியை அடியார்கள் மறுக்கவில்லை. அதை வென்று விடலாம் என்கிறார்கள். விதிப்பயன், வினைப்பயன், ஊழ்வினை என்பார்கள் என்பவர்களுக்கு விமோசனம் உண்டு. எப்படி? இறைவனை உறுதியாகப் பற்றி நிற்பதுதான் அந்த வழி. சான்று சிலவற்றை காணலாம்.
திருஞான சம்பந்தப் பெருமான் முதலாம் திருமுறையில், திருநீலகண்டப் பதிகத்தில் ”இறைவனை நெறியாகத் தொழுபவரை வினைப்பயன் வந்து தீண்டாது” என்று ஆணை இட்டுச் சொல்லியுள்ளார்,
அவ்வினைக்கு இவ்வினை யாம் என்று சொல்லும் அது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உந்துமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்து எம் பிரான் கழல் போற்றும் நாம் அடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்
[ திருமுறை-1]
[முற்பிறவிகளில் செய்யப்பட்ட வினைகளுக்கு ஏற்றபடி இந்தப் பிறவியில் இன்ப துன்பங்கள் வருகின்றன என்பதை மட்டும் அறிந்து கொண்டிருக்கிறீர்கள் ஆனால், அந்த வினையிலிருந்து உய்யும் வழி பற்றி யோசிக்காமல் இருப்பது உங்களுக்குக் குறையல்லவா? அடியார்களாகிய நாம் நம் கைகளைக் கொண்டு செய்யக்கூடிய சிவத்தொண்டுகளைச் செய்து எம்பெருமானின் திருவடிகளை வணங்கினால், முற்பிறவி வினைப்பயன்கள் வந்து தீண்டா, திருநீலகண்டத்தின் மேல் ஆணை]
இந்தப் பதிகத்தில் பத்துப் பாடல்களிலும் ”தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்” என திருஞான சம்பந்தர் அருளியுள்ளதை எண்ணிப் பார்க்கத் தக்கவையாகும்.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.1023
என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும். மு.வ உரை
என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.1040 
எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள். மு.வ உரை
நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள். பூமா தேவி என்று ஹிந்துக்களால் போற்றப்படும் நிலமகளை வள்ளுவர் இங்கு குறிப்பிடுகிறார்.
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.1083
எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது. மு.வ உரை:
எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.110
தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ?. மு.வ உரை:
தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?. சாலமன் பாப்பையா உரை

திருவள்ளுவர்,

கடவுளைப்பற்றி சொல்லியிருக்கிறார்

அவரது திருவடியைப் பற்றி சொல்லியிருக்கிறார்

திருமாலைப் பற்றி சொல்லியிருக்கிறார்

திருமகளான லட்சுமியைப் பற்றி     சொல்லியிருக்கிறார்

லட்சுமியின் அக்கா மூதேவியைப் பற்றி சொல்லியிருக்கிறார்

தேவலோக இந்திரனைப்பற்றி சொல்லியிருக்கிறார்

காலன் என்று சொல்லப்படுகிற எமனைப் பற்றி சொல்லியிருக்கிறார்

முன்வினை என்று சொல்லப்படும் ஊழ்வினையைப் பற்றி சொல்லியிருக்கிறார் 

இருவினைகளான நல்வினை தீவினைப் பற்றி சொல்லியிருக்கிறார்

மறு பிறப்புப் பற்றி சொல்லியிருக்கிறார்

பிறவாமைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் சொல்லியிருக்கிறார்

ஏழு உலகம் ஏழு பிறப்பை பற்றி சொல்லியிருக்கிறார்

மேலுலகம் பற்றி சொல்லியிருக்கிறார்

நிலமென்னும் நல்லாள் பூமா தேவியைப் பற்றி சொல்லியிருக்கிறார்

பிறப்பு இறப்பு ஒரு தொடர் கதை பற்றி சொல்லியிருக்கிறார்

அந்தணன் என்பவன் யார் என்பது பற்றி சொல்லியிருக்கிறார்

ஒருவன் பிறப்பினால் அந்தணன் ஆவதில்லை என்று சொல்லியிருக்கிறார்

இன்னும் சொல்லப் போனால் உயிர்களைக் கொல்லாமல் இருத்தல், புலால் மறுத்தல் பற்றி சொல்லியிருக்கிறார். 

கள்ளுன்னாமை பற்றி ஒரு அதிகாரத்தில் பத்து குறளில் அதன் தீமையை அறிவுறுத்தியுள்ளார்.

இவைகளைப் பற்றி திருவள்ளுவர் நேரிடையாகவே கூறியிருக்கிறார் இந்தக் கொள்கைகளை ஈவேரா அடியார்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? நாத்திக கும்பலுக்கும் திருவள்ளுவருக்கும் ஏதாவது கொஞ்சமாவது சம்பந்தமுண்டா? தமிழ் என்ற பெயரிலும் திருவள்ளுவர் என்ற பெயரிலும் இனி தொடர்ந்து  மக்களை ஏமாற்ற முடியாது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard