தமிழ் வருடபிறப்பிற்கும் சம்ஸ்கிருத பெயர்களுக்கும் என்ன சம்பந்தம்? - ராஜசங்கர் விஸ்வநாதன்
தமிழ் வருடங்களுக்கு சமஸ்கிருத பெயர்கள் இருக்கின்றனவே அப்புறம் எப்படி அது தமிழ் வருடப்பிறப்பு ஆகிறது என்ற கேள்வியை ஒவ்வொரு வருடப்பிறப்பன்றும் கேட்பார்கள்.
இது நாள்காட்டிக்கும் ஜோதிடபஞ்சாங்க கணிப்பிற்கும் இருக்கும் வித்தியாசம் தெரியாததால் எழும் கேள்வி. நாள்காட்டி வருடங்களை எண்கள் மூலம் தான் கணக்கிடுவார்கள். கலியுகம், கொல்லம், சக வருடங்களுக்கு எண்கள் தான் உண்டு. தமிழில் வருவதும் கலியுக கணக்கு தான்.
இந்த ஸார்வரி வருடம் கலி 5121. அதாவது ஆங்கிலத்திலே எப்படி ஆண்டு 2020 என சொல்கிறோமோ அது போல் இது கலி ஆண்டு 5121.
வருடத்தின் பெயர் ஸார்வரி என்பது ஜோதிட கோள் கணக்குப்படி இன்னின்ன நடக்கும் என்பதற்கான கணிப்பின் பெயர்.
வருடங்களை 60 வருட சுழற்சியாக கணித்து அதிலே ஒவ்வொரு வருடமும் இன்னின்ன நடக்கும் என்பதை கவனித்து அதை ஒரு முன்கூட்டிய அறிவிப்பாக செய்துவிட்டு போனார்கள்.
நாளையும் கோளையும் கணித்து கவனித்து எழுதி வைத்து அதிலிருந்து இன்ன வருடம் இன்ன நடக்கும் என அறிந்த நம் முன்னோர் அதை எழுதி வைத்து போனார்கள். எளிதிலே அறிய சொல்ல அதற்கு பெயர்களையும் சூட்டிவிட்டு போனார்கள்.
தமிழிலே இருந்த சித்தர்கள் வடக்கேயும் சித்தர்கள் தான். வடக்கே கோரக்நாத் என்றால் இங்கே கோரக்கநாதர் தான். அவர்கள் செய்த அல்லது அவர்கள் சொன்னதை அல்லது தமிழாக்கம் செய்ததை இங்கே நாம் பயன்படுத்தி வருகிறோம்.
வடக்கே இதற்கு பெயர் சம்வத்ஸரம். இந்து நாள்காட்டி மற்றும் ஜோதிடத்திலே இதெல்லாம் ஒர் அங்கமே.
பரம்பரையான கணக்கை கொண்டிருக்கும் வாக்கிய பஞ்சாங்கமும் இப்போதைய கோள் கணக்கை கொண்டிருக்கும் திருக்கணித பஞ்சாங்கமும் இரண்டுமே இதை அடிப்படையாக கொண்டவை தான்.
விவசாயம் மற்றும் வாழ்வியலுக்கு முக்கிய அங்கமான வானிலை கணிப்பு என்பது இதை கொண்டே நடந்தது. மக்களும் பஞ்சமும் பசியும் இன்றி வாழ்ந்தனர்.
எப்போது மழை பெய்யும், எப்போது பஞ்சம் வரும் என்பதெல்லாம் மிகவும் துல்லியமாக சொல்லும் அளவிலே இந்த கணிப்புகள் இருந்தன.
கோவில்களிலும் சபைகளிலும் வருட பிறப்பன்று பஞ்சாங்கம் படித்துக்காட்டி இந்த வருடம் இன்னின்ன நடக்கும் எனவே இப்படி இப்படி நடங்கள் எனவும் சொல்லி மக்களை துன்பத்திலே இருந்து காப்பாற்றினார்கள்.
பஞ்சாங்கம் எழுதுவது பிராமணர்கள் மட்டுமல்ல. எல்லா சாதியும் கணிப்பார்கள், எழுதிவைப்பார்கள், படித்து சொல்லுவார்கள். ஏனென்றால் அது அடிப்படையிலே கணிதமும் வானவியலும் தான்.
ஆனால் எல்லாவற்றையும் குப்பையிலே தூக்கிபோடு கணக்காகவும், பார்ப்பானை திட்டினால் உடனே சோத்துக்கு கிடைத்துவிடும் என்ற மிகவும் அருமையாக பஹூத் அறிவாலும் இதையெல்லாம் திட்டும் போக்கே மிகவும் அறிவாளித்தனமாக செய்கையாக செய்யப்படுகிறது.
நாள்காட்டியையும் ஜோதிடகணிப்பையும் போட்டு குழப்பி அதிலே தமிழையும் செங்கிருதத்தையும் போட்டு அடித்தால் ஏதும் செய்ய முடியாது.
எந்த கணினி உதவியும் இல்லாமல் இன்று வரைக்கும் எப்படி மிகத்துல்லியமாக கணிக்கிறார்கள் என்ற ஒரு சிறு கேள்வியை கூட கேட்காமல் பார்ப்பான் பஞ்சாங்கம் போடுறானா அப்படீன்னா அது தப்புத்தான் என சொல்லுவார்கள்.
கூடவே அந்தகாலத்திலே என்ன செஞ்சானுக, வெறுமனே மணியாட்டிட்டு தானே இருந்தானுக எனவும் மிகவும் அறிவாளித்தனமாகவும் கேட்பார்கள்.
"தமிழ்ப் புத்தாண்டுன்னு சொல்றீங்க, அதென்ன வருடப் பெயர் எல்லாம் விளம்பி, ஹேவிளம்பி, சார்வரி, துர்முக.. அப்படின்னெல்லாம் இருக்கு. இதெல்லாம் தமிழா?" - என்று ஏதோ யாருக்கும் தெரியாததைக் கண்டுபிடித்து விட்டது போல பறைசாற்றிக் கொண்டு அற்பத்தனமான பதிவுகளும் மீம்களும் உலவிக் கொண்டிருக்கின்றன. சராசரி தமிழர்களின் கலாசார அறிவின்மை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைத் தான் இந்தக் கொசுக்கடிகள் பறைசாற்றுகின்றன.
வருடங்களின் பெயர்கள் மட்டுமல்ல, தமிழின் இரண்டாயிரம் ஆண்டுக் கால பண்பாட்டில், அதன் இலக்கியம், இலக்கணம், சமயம், தத்துவம், கலை, மருத்துவம் கணிதம் உள்ளிட்ட அறிவுத் துறைகள் இவை எல்லாவற்றிலும் சம்ஸ்கிருதம் பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்திருக்கிறது. அந்த உண்மை கூட இந்த மீம்களை உருவாக்கும், அதை மந்தைத்தனமாகப் பரப்பிக் கெக்கலிக்கும் குருவி மண்டைகளுக்குத் தெரியவில்லை.
"ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் சரவணபவ, ஓம் சக்தி - இதெல்லாம் தமிழா? இவற்றை ஓதுவதை ஒழிப்போம்" என்று நமது புனித மகாமந்திரங்களைக் குறித்தும் இதே வாதத்தை வைத்து நாளை இந்த வெறிநாய்கள் பரப்புரை செய்யலாம். அதற்கான காலத்தை எண்ணிக் காத்திருக்கிறார்கள். அவ்வளவே. இவர்களது மையமான நோக்கம் தமிழ்ப் பண்பாட்டு ஒழிப்பு மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
வடசொல் குறித்த நன்னூல் சூத்திரத்திற்கு (274, பெயரியல்) உரை எழுதும் மயிலை நாதர் கூறுகிறார் -
"இஃது, ஒரு நிலத்திற்கே உரியதன்றிப் பதினெண் பூமிக்கும் விண்ணிற்கும் புவனாதிகட்கும் பொதுவாய் வருதலின், திசைச்சொல்லின் அடக்காது வேறோதினாரென்க. அஃதென்னை? வடக்கண் மொழியென்றாராலோவெனின், ஆண்டு வழக்குப் பயிற்சியை நோக்கி அவ்வாறு கூறினாரென்க".
அதாவது வடசொல் என்பது மற்ற திசைச் சொற்களைப் போன்று அல்ல. அது புவனம் முழுவதற்கும் உரிய 'சப்தம்' என்பதன் வடிவம். வடசொல் என்பது வழக்குப் பற்றியதே அன்றி திசை பற்றியதல்ல, எனவே அது தமிழுக்கு வேறானது என்று கருதுவதே தகாது என்று விளக்குகிறார் உரையாசியர்.
விபவ முதலான அறுபது ஆண்டுகளின் பெயர்களைப் பல நூற்றாண்டுகளாக தமிழ் மன்னர்களும் தமிழ்ச் சான்றோர்களும் அறிஞர்களும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அது தமிழ்ப் பண்பாடு சார்ந்தது என்பதற்கு அந்த சான்றே போதுமானது.
உலகெங்கும் மேற்கத்திய காலனிய தாக்கத்தாலும், இஸ்லாம் கிறிஸ்தவம் மார்க்சியம் ஆகிய ஆபிரகாமிய மதங்களின் ஆக்கிரமிப்புகளாலும், பற்பல தொல்கலாசாரங்களும் மரபுகளும் அழிந்து விட்டன. ஆனால் பாரத தேசமும் இந்து தர்மமும் அதையெல்லாம் மீறி வாழ்ந்து கொண்டிருக்கிறது. உண்மையில் தமிழ்ப் புத்தாண்டை இவ்வளவு மகிழ்ச்சியுடனும் பாரம்பரியத்துடனும் உலகெங்குமுள்ள தமிழ் இந்துக்கள் கொண்டாடி வருவது மிகவும் பெருமைக்குரிய விஷயம். இது பொறுக்காமல், இந்தப் பண்பாட்டுக் கொண்டாட்டத்தை உடைக்க வேண்டும், குலைக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படும் விஷ பிரசாரங்களை முறியடிப்போம்.