Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வான் சிறப்பு அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
வான் சிறப்பு அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
வான் சிறப்பு 
நீரின்றி அமையாது உலகு
குறள் திறன்-0011 குறள் திறன்-0012 குறள் திறன்-0013 குறள் திறன்-0014 குறள் திறன்-0015
குறள் திறன்-0016 குறள் திறன்-0017 குறள் திறன்-0018 குறள் திறன்-0019 குறள் திறன்-0020

openQuotes.jpgஇயற்கைச் சக்திகளில் முக்கியமான ஞாயிற்றின் சிறப்பைக் குறிப்பிடாமல் மழையின் வான் சிறப்பைக் கூறியதும் வள்ளுவர் நடைமுறை வாழ்க்கைக்குக் (Practical Life) கொடுத்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இயற்கை சக்திகளில் (சூரியன்) ஞாயிறே முக்கியமானது; சக்தி நிறைந்தது. மழைக்கும் ஒரு காரணமானது. மேலும், சூரியன் திட்டமிட்டு-மாறாமல் செயல்படுவது. ஞாயிறு பொய்த்து யாரும் இதுவரை துன்பப்படவில்லை. ஆனால் மழை எப்போது பெய்யும்; எவ்வளவு பெய்யும் என்று முன்னரே நிர்ணயிக்கமுடியாது. மேலும், மழை பெய்தும் (வெள்ளம் ஏற்பட்டும்)- பெய்யாமலும் கெடுக்கும் தன்மை உடையது. அதனால்தான் இயற்கைச் சக்திகளில் மழையைத் தேர்ந்தெடுத்து இரண்டாவது அதிகாரத்தில் அதன் சிறப்பைப் பாராட்டுகிறார்.
- செ வை சண்முகம்

 

வான் சிறப்பு அதிகாரம் மழையின் பெருமை கூறுவது. மழையின் இன்றியமையாமை பற்றியும், மழை இன்மையால் நேரும் இன்னல்கள் பற்றியும் விளக்குவது. நிலவளமும் கடல் வளமும் மாந்தரின் மனவளமும் உலக ஒழுங்கமைவுமே மழைநீரால்தான் அமையும் எனச் சொல்லும் அதிகாரம். காணமுடியாத கடவுளின் ஆற்றல் அவனது தண்ணருளின் செயலாகிய மழையால் உணரப்படுகிறது என்பதால் கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக வான் சிறப்பை அமைத்தார் வள்ளுவர்.

வான் சிறப்பு அதிகாரம் தேவையா?

மழை கடவுள் ஆணையால் வருவது. மழை பெய்யாதொழிந்தால் அதனைப் பெய்விப்பார் வேறு யாருமில்லை; மிகப் பெய்தால் அதனைத் தடுத்து நிறுத்துவாரும் வேறு பாருமில்லை. எனவே வான்சிறப்பைக் கூறுதலால் பயன் என்ன? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
வான் சிறப்பு பாடப்பட்டது மழையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அல்ல; ஒரு நாடு வேளாண்மை சார்ந்த சமூகமானாலும் சரி, வறண்ட பாலை நிலச் சமூகமானாலும் அதன் உயிர்களின் ஆதாரம் மழையே. மேலும் வாழ்க்கையின் சிறப்புக்கும் அமைதிக்கும் வலுவான பொருளியல் அடித்தளம் அமைதல் வேண்டும். மழை இன்றேல் பொருளியல் வாழ்வே பொன்றிவிடும். பசிக்கொடுமை மக்களை வாட்டும்போது, மக்கள் வாழ்க்கை சிறக்காது. அமைதியுறாது. வாழ்க்கையில் அமைதியும் சிறப்பும் நிலவும்போதுதான் இறையுணர்வும் எழும். வளமான பொருளியல் வாழ்க்கையில்தான் மனிதப்பண்பு மிளிரும். சமூகவொழுக்கம் உயர்வடையும். மழை வளத்தை நாம் திறம்படப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது அறியப்பட வேண்டும். எனவேதான் வானைச் சிறப்பித்து வள்ளுவர் விரிவுபட விளக்கினார்.

வான் சிறப்பு:

வான் விண்ணைக் குறிக்கும்; விண்ணில் நிலவும் மேகத்தைக் குறித்து மேகத்தின் வழி பெய்யும் மழையின் பெருமையை வான் சிறப்பு பேசுகிறது. இவ்வதிகாரத்து முதல் இரண்டு பாடல்களும் உணவும் நீரும் வழங்கும் மழையின் வள்ளன்மை கூறும்; மற்ற பாடல்கள் அனைத்தும் மழை இன்மையால் உண்டாகும் துன்பங்கள் சொல்லப்பட்டன. முன்றாம் பாட்டில் பசிக் கொடுமையும், நான்காம் ஆறாம் பாட்டில் விளைச்சல் பாதிப்பும், ஐந்தாம் பாட்டில் மழையின் பேராற்றலும், ஏழில் கடலாக்கம் குன்றுவதும், எட்டு ஒன்பதில் ஆன்மீக உணர்வு குறைவதும் மனிதப் பண்புகள் மறைவதும், பத்தில் ஒழுக்கம் அமையாமையும் சொல்லப்பட்டுள்ளன.

வான் சிறப்பு அதிகாரம் தவிர்த்து வேறு பல இடங்களிலும் மழையை முன்நிறுத்திப் பாடப்பட்ட குறட்பாக்கள் உள்ளன. மழை வள்ளுவரின் உள்ளத்தை மிகவும் கவர்ந்திருக்கின்றது என்பார் மு வ. 'வள்ளுவர் பலமுறை உவமையாக எடுத்தாண்டிருப்பது மழையே ஆகும். ஒப்புரவாளரின் கைம்மாறு வேண்டாத கடப்பாட்டை எண்ணும்போது 'மழைக்கு உலகம் என்ன கைம்மாறு செய்யமுடியும்?'(ஒப்புரவறிதல், குறள்211) என்று நினைந்து வியக்கின்றார். அறநெறி தவறாமல் ஆளும் தலைவனுடைய செங்கோலை நோக்கிக் குடிமக்கள் வாழ்வார்கள் என்று செங்கோன்மை கூறும்போது உலகமெல்லாம் மழையை நோக்கி வாழும் சிறப்பை (செங்கோன்மை குறள்542) உவமையாகக் கூறுகின்றார். ஆட்சித் தலைவன் அருள் அற்றவனாக உள்ள காரணத்தால் குடிமக்கள் துன்புறுவதை எடுத்துரைக்கும்போதும், மழைத்துளி காணாமல் உலகம் வருந்தும் நிலையைக் கூறி (கொடுங்கோன்மை குறள்557) விளக்குகின்றார். பிறர்க்கு உதவியாக வாழும் நல்ல செல்வருக்கு நேரும் வறுமை மழையின் வறட்சி போன்றது (நன்றியில் செல்வம் குறள்1010) என்று கூறுகின்றார். காதல் கொண்ட மகளிர்க்குப் பிரிந்து மீண்டும் வந்த காதலர் செய்யும் தலையளியைக் காதலி நினைக்கும்போது, உயிர் வாழும் மக்களுக்கு மழை பயன் பெருகப் பொழிதலை நினைந்து உருகச் செய்கின்றார் (தனிப்படர்மிகுதி குறள்1192) நாட்டில் நல்ல ஆட்சி உள்ளபோது மழை பொழிந்து உதவும் (செங்கோன்மை குறள்545)என்றும் ஆட்சி முறை தவறினால் மழை உதவாது (கொடுங்கோன்மை குறள்559) என்றும் நம்பும் நம்பிக்கையும் திருவள்ளுவர்க்கு உண்டு' என்று மழை ஆளப்பட்ட இடங்களை மு வ எடுத்துரைப்பார்.

வான் சிறப்பு அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 11 ஆம்குறள் உலகத் தொடர்ச்சியை நிலைநிறுத்துவதால் வான்மழை அமிழ்தம் எனப்படுகிறது என்கிறது.
  • 12 ஆம்குறள் உணவுப்பொருளை விளைவிப்பதொடு தானும் நீராக உண்ணப்படுவது என்று மழையின் பயன் கூறுகிறது.
  • 13 ஆம்குறள் வானம் மழை பொழியாவிட்டால் பசி நீக்க உணவு கிடைக்காது என்கிறது.
  • 14 ஆம்குறள் மழைப் பொழிவு குறைந்தால் வேளாண்தொழில் நடைபெறாது என்பதைச் சொல்வது.
  • 15 ஆம்குறள் உலகத்தை இயங்க வைக்கின்ற மழை சில சமயங்களில் இடர் உண்டாவதற்கும் காரணமாக உள்ளது என்கிறது.
  • 16 ஆம்குறள் மழை பெய்யாது இருந்திட்டால், புல்லும் தலை காட்டாது. புல்லே முளைக்காது என்றால் பிற உயிரினங்களைக் காணமுடியுமா? எனக் கேட்பதுபோல் அமைகிறது.
  • 17 ஆம்குறள் மழை பெய்யாவிடில் கடலும் தன் தன்மையில் மாறுபடும் என்று சொல்கிறது.
  • 18 ஆம்குறள் மழையில்லை என்றால் தெய்வங்களும் நினைக்கப்படுவது இல்லை என்பதைச் சொல்வது.
  • 19 ஆம்குறள் அறங்கள் தழைக்கவும் மண்ணுலகில் மழைபெய்தல் இன்றியமையாதது எனக் கூறுகிறது.
  • 20 ஆவதுகுறள் உயிர்கள் நிலைபெற்றிருக்க மட்டுமல்ல, அவற்றின் ஒழுக்கத்திற்கும் மழையே காரணம் என்கிறது.

 

வான் சிறப்பு அதிகாரச் சிறப்பியல்புகள்

கடலிலிருக்கும் நீர், நிலத்தினடியில் இருக்கும் குகைவழிகள் மூலமாக நிலத்திலிருந்து மலைப்பகுதிகளை அடைந்து அங்கு மலைகளின் அழுத்தம் காரணமாக ஊற்றாக வெளிவருகின்றது என்று வெகுகாலமாக மக்கள் நம்பினர். கி பி 17-ஆம் நூற்றாண்டில்தான் சோதனைகள் மூலம், மழைநீரே ஊற்றுநீருக்கும் ஆற்றுநீருக்கும் ஆதாரம் எனப் பிரான்ஸ் நாட்டினர் கண்டு நிரூபித்தனர். "அப்பொழுதுதான் நீரின்றி அமையாது உலகு எனின், அந்த நீரும் மழையின்றி அமையாது என்பது உறுதியாக்கப்பட்டது. இதே கருத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு தெளிவாக வள்ளுவர் (குறள் 20-இல்) கூறியிருப்பது அந்தக் காலத் தமிழ் மக்களுடைய அறிவு நிலையைக் காட்டுகிறது என்பதோடு வள்ளுவர் அன்றைய சூழ்நிலையில் வளர்ந்திருந்த கலைகள் அனைத்தையும் ஈடுபாட்டுடனும் தெளிவுடனும் அறிந்திருந்தார் என்பதையும் காட்டுகிறது" என்று வா செ குழந்தைசாமி தனது நூலில் குறிப்பிடுகிறார்.

'இயற்கையே இறைவன்' என்பதை வள்ளுவர் நம்புவதாகத் தெரிகிறது. மழை இயற்கையின் குறியீடாக அமைந்து இறையின் பருப் பொருளாகத் தோற்றம் அளிக்கிறது. இயற்கையில் அமைந்துள்ள பலவற்றிலும் சிறந்த மழையைப் போற்றுவது வான் சிறப்பு.

உலகின் பிற பகுதிகளில் பல உயிர் ஊற்றுகளும் வற்றாத உயிர் நதிகளும் ஓடுகின்றன. இவற்றில் ஆண்டு முழுவதும் நீருக்குப் பஞ்சமில்லை. தமிழகத்தில் நாளும் நீர் நிரம்பி ஓடும் உயிர் ஆறு என்று ஒன்றைக்கூட சொல்லவியலாது. இங்குள்ள ஆறுகள் பெரும்பாலும் பருவ மழையை நம்பி ஒடிக்கொண்டிருப்பவை ஆகும். இதனாலேயெ நாம் வான் நோக்கி வாழும் குடியாக உள்ளோம். நீர் வற்றிய ஆறுகளையும், ஆற்று மணல் மேடுகளையும், மழையின்றி உயிரினங்களும், செடி, கொடிகளும் வாடி, வதங்கிய காட்சிகளைப் பண்டைத் தமிழ்ச் செய்யுட்களும் காட்டுகின்றன.
மழை சார்ந்த சமுதாயத்தில் பொருள் வாழ்க்கை ஒரு சூதாட்டம் ஆகிவிடுகிறது - மழை பெய்தால் வளம்; மழை பொய்த்தால் வறட்சி, வறுமை, துன்பக்காட்சிகள். இவை தமிழகத்தில் தொடர்ந்து வந்துகொண்டு இருப்பதை வரலாறு சொல்லும். மழையின் பெருமையை நாம் நன்கு உணர்ந்தவர்களே. மழையைத் தெய்வமாக, மாரியம்மன் எனப் பெயரிட்டு (மாரி என்பதற்கு மழை என்பது பொருள்), ஊர்தோறும் கோயில்வைத்து வழிபடுகிறோம்.
எனவேதான் மழையின் தேவையையும் அதைவிட மழை இன்மை பற்றியும் வான் சிறப்பு அதிகாரம் வழி விரிவாக ஆய்கிறது.
வான் சிறப்பு அதிகாரம் எல்லா நாடுகளுக்கும் பொருந்துவது என்றாலும், இது குறிப்பாகத் தமிழகத்தை மனதில் கொண்டே இயற்றப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. வடக்கே வேங்கடத்துக்கும் தெற்கே குமரிக்கும் இடைப்பட்ட தமிழ்நாடு வெப்ப மண்டலப் பகுதியில் அமைந்துள்ளது. மழை மறைவுப் பகுதியாய்த் திகழ்கின்ற தமிழகம் நீர்த்தேவையால் அவதியுறும் மண்ணாகும். மழைநீரை நல்ல முறையில் சேமித்துப் பயன்பெறவேண்டும் என்ற செய்தியும் இவ்வதிகாரத்தின்கண் உள்ளது என்பது அறியப்படவேண்டும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard