Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 011 செய்ந்நன்றியறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
011 செய்ந்நன்றியறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
செய்ந்நன்றியறிதல் 
தனக்குப் பிறர்செய்த நன்மையை உணர்தல்
குறள் திறன்-0101 குறள் திறன்-0102 குறள் திறன்-0103 குறள் திறன்-0104 குறள் திறன்-0105
குறள் திறன்-0106 குறள் திறன்-0107 குறள் திறன்-0108 குறள் திறன்-0109 குறள் திறன்-0110

openQuotes.jpgஒருவர் செய்த உதவியை, நன்மையை நினைத்துக் கொள்ளுதல். உலகில் பலருக்குத் தாம் பிறருக்குச் செய்த நன்மையே நினைவில் நிற்கும்; பிறர் தமக்குச் செய்த உதவி மறந்துபோகும். கைம்மாறு கருதாது செய்ந்நன்றி; அந் நன்மையைச் செய்து கொண்டவன்தான் நினைந்து போற்ற வேண்டும்.
- தமிழண்ணல்

 

பிறர் செய்த நன்மையை மறவாது உணர்ந்திருப்பது செய்ந்நன்றியறிதல் ஆகும். செய்யாமல் செய்த உதவி, காலத்தினால் செய்த உதவி, பயன் தூக்கார் செய்தார் உதவி என்றிவை நன்றி உணர்தலில் அளவிட்டு அறியமுடியாத மிக உயர்ந்த நிலையில் வைத்துப் பேசப்பட்டுள்ளன. செய்ந்நன்றி கொல்வது அதாவது தனக்குச் செய்யப்பட்ட நன்மைகளை மறத்தல் அல்லது அவற்றை அறிந்துகொள்வதை மறுத்தல் என்பது மன்னிப்பே இல்லாத குற்றமாம் என்று கூறப்படுகிறது.

செய்ந்நன்றியறிதல்

ஒருவர்க்கொருவர் உதவி செய்வதாலேயே உலகம் இயங்குகிறது. பலருதவியும் தன் முயற்சியும் இயைந்த சேர்க்கையே வாழ்க்கையாகிறது. ஒருவரது வாழ்வில் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத வாயில்கள் வழியாக ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன. துன்பங்கள் நேர்கின்றன. அதுபோன்ற வேளைகளில் பிறர் உதவியில்லாமல் அவற்றிலிருந்து மீள்வது கடினம். ஆனாலும் யாராவது எங்கிருந்தாவது உதவுவர். அவ்விதம் எண்ணிப்பாராமல் அதாவது இயல்பாக நமக்குச் செய்யப்பட்ட நன்மைகளை மறவாமல் நினைந்து போற்றவேண்டும். உதவி என்பது பொருளுதவி மட்டுமன்றி எல்லாவகையான உதவிகளையும் குறிக்கும்.

நன்றி என்ற சொல் இன்று ஒருவர் செய்த உதவிக்கு நன்றியுணர்ச்சி காட்டுதல் அல்லது திரும்ப உதவுதல் என்ற பொருள்களில் பயன்பாட்டில் உள்ளது.
ஆனால் இவ்வதிகாரத்தில் நன்றி என்ற சொல் நன்மை அல்லது உதவி என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. செய்யப்பட்ட உதவி நினைக்கப்படவேண்டும் என்றுதான் இங்கு சொல்லப்படுகிறது; நன்றிக்கு நன்றி செய்வது அல்ல. அதாவது செய்யப்பட்ட நன்றியை மறவாது இருப்பது பற்றியதே இவ்வதிகாரம். செய்ந்நன்றியறிதலை உதவியறிதல் எனவும் கொள்ளலாம். செய்த நன்றி அதாவது செய்யப்பட்ட நன்றி என்பது செய்ந்நன்றி எனச் சுருங்கியது.
'ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறவாது நினைவிற்கொள்ளவேண்டும்.என்றால் ஏதோ செய்ததற்குச் செய்வது அல்ல. இன்ன காலத்து இவர் இன்ன செய்தார் எனப் பாராட்டிப் பேசினும் செய்ந்நன்றி தாழும் என்னும் கருத்தை எண்ணி ‘நன்றி கூறல்’ என்னாது ‘நன்றியறிதல்’ என்று கூறப்பட்டது (தண்டபாணி தேசிகர்).
உதவி பற்றியும் உதவி பெற்றோர் பற்றியும் பேசும் அதிகாரம் உதவி செய்தோர் பற்றி ஒன்றும் குறிக்கவில்லை.

நன்மையின் அளவை எண்ணாது செய்யப்பட்ட உதவிக்காகவே அதைப் பெரிதாகப் போற்றுவர் நன்றியுணர்வுள்ளவர்கள்; நன்மை செய்தவர்களை எப்பொழுதும் மறக்காமல் தொடர்பிலேயே வைத்திருக்க வேண்டும்; நன்மையல்லாதவற்றை மறக்கப் பயிற்சி கொள்ளவேண்டும்; சிறு உதவியையும் பெரிதாகப் போற்ற வேண்டும்; ஒருவன் கொல்வது போன்ற துன்பத்தை செய்தாலும் அவன் செய்த ஒரு சிறு நன்மையின் நினைவு அதை மறக்கடிக்கும்; உதவியைப் பெற்ற பிறகு, மனதின் சிறுமையால், செய்யப்பட்ட நன்மையை மறந்துவிடக்கூடாது; செய்ந்நன்றி மறத்தல் கொடிய செயலாகும்; ஒருவன் எந்த நன்மையை மறந்தாலும் மீட்சி பெறலாம், ஆனால் செய்த நன்றியை மறந்தால் அத்தீச் செயலிலிருந்து மீட்சியே இல்லை; இவை இவ்வதிகாரம்..தரும் செய்திகள்.

செய்ந்நன்றியறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 101 ஆம்குறள் நாம் கேட்காமலேயே நம் தேவை அறிந்து செய்த உதவிக்கு இவ்வுலகமும் வானுலகமும் ஈடாகா என்கிறது.
  • 102 ஆம்குறள் நற்சமயத்துச் செய்த உதவி சிறியதாயிருப்பினும் அது செய்ந்நன்றி அறிவார்க்கு உலகத்தைவிட மாட்சிமை பொருந்தியது எனச் சொல்கிறது.
  • 103 ஆம்குறள் பயன் நோக்காது செய்த தன்னலமற்ற உதவித்தன்மையை அளவிட்டு ஆராயமுடியாது .என்பதைச் சொல்கிறது.
  • 104 ஆம்குறள் செய்யப்பட்ட உதவி சிறியதானாலும் நன்றியுணர்வு கொண்டவர்கள் அதைப் பெரிதாகப் போற்றுவர் என்பதைச் சொல்வது.
  • 105 ஆம்குறள் உதவி பெற்றவருடைய நன்றி உணர்வே அவர் கைம்மாறாகச் செய்யும் உதவியின் அளவு ஆகிறது என்கிறது.
  • 106 ஆம்குறள் நல்லோரின் உறவைத் தொடர்க; உதவி செய்தோரிடம் நன்றியோடு பழகுக எனச் சொல்வது.
  • 107 ஆம்குறள் துன்பம் துடைத்தவர் உறவை கழிநெடுங்காலம் நினைத்தல் வேண்டும் என்று சொல்கிறது.
  • 108 ஆம்குறள் செய்யப்பட்ட உதவியை நினைவில் நிறுத்திக் கொள்வதும் நன்மையல்லாதனவற்றை நிகழ்ந்த பொழுதே மறந்துவிடுவதும் நற்செய்கைகள் எனச் சொல்வது.
  • 109 ஆம்குறள் ஒருவர் முன் செய்த நன்றியை நினைவுகூர்வது, அவரால் உறும் இன்னாமையை மறக்க வழிசெய்யும் என்பதைச் சொல்வது.
  • 110 ஆவதுகுறள் நன்றி கெட்டதனம் கழுவாய் காணமுடியாத மிகக் கொடிய தீச்செயல் ஆகும் எனக் கூறுகிறது..

 

செய்ந்நன்றியறிதல் அதிகாரச் சிறப்பியல்புகள்

செய்ந்நன்றியறிதல் வெகு உயர்வாகச் சிறப்பிக்கப்படுகிறது. இவ்வதிகாரத்தில் உதவிக்கு ஒப்பீடு செய்வதற்கு வையகம், வானம், ஞாலம், கடல் போன்ற அளவிட்டு அறியமுடியாத உவமப் பொருட்கள் ஆளப்பட்டன; நன்றி-நன்றிஅறிதல் இவற்றின் வேறுபாடு தெளிவாகப் புலப்படும் வகையில் தினை-பனை என்ற எல்லைகளில் குறிக்கப்பட்டுள்ளது, எழுமைஎழுபிறப்பு என்ற கழிநெடுங் கால அளவிலும் சொல்லப்பட்டுள்ளது.

நன்றிமறவாத் தன்மையை இந்த அளவு பெரிதாகப் பாராட்டும் அதிகாரம், நன்றியை மறந்த செய்கையையும் குற்றங்களின் உச்சநிலையாகக் காட்டுகின்றது. மிகக் கொடுமையான தீச்செயல் புரிந்த ஒருவனைவிட, செய்ந்நன்றி மறந்தவன் கொடிய தீர்ப்புக்கு உள்ளாகின்றான். கழுவாய் தேடி உய்தி பெறும் நிலைமை இவனுக்கு அறவே இல்லை என்கிறது எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள்110). என்ற பாடல்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard