Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 018 வெஃகாமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
018 வெஃகாமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
வெஃகாமை 
வெஃகுதல் அழிவு பயக்கும்; வெஃகாமை வெற்றி தரும்
குறள் திறன்-0171 குறள் திறன்-0172 குறள் திறன்-0173 குறள் திறன்-0174 குறள் திறன்-0175
குறள் திறன்-0176 குறள் திறன்-0177 குறள் திறன்-0178 குறள் திறன்-0179 குறள் திறன்-0180

openQuotes.jpgவிருப்பத்தின் பெயராகிய காமம் என்பது தனது பொதுப் பொருளின் நீங்கி மகளிர்பாற் செலுத்தும் ஆசைக்கே சிறப்புப் பெயரானாற் போல, வெஃகாமை பிறன் பொருளைக் கவரச் சொல்லும் விருப்பத்திற்கே பெயராயிற்று.
- நாகை சொ தண்டபாணிப்பிள்ளை

 

வெஃகாமை என்ற சொல் பிறன் பொருளை விரும்பிக் கவரக் கருதாமை என்ற பொருள் தரும். கவரக் கருதுதலை வவ்வுதல், கைப்பற்றுதல், பறித்துக்கொள்ளல் என்றும் குறிப்பர். வெஃகாமை அதிகாரம் ஒருவன் தனக்கு உரியனவல்லாதவற்றை முறையற்றுக் கவர விரும்பாமை தொடர்பான செய்திகளைச் சொல்வது. வெஃகாமையே ஓர் அறம் என்பதை அறியவேண்டும் என்று சொல்கிறது இது.

வெஃகாமை

வெஃகாமை என்ற சொல் 'வெஃகு' என்ற பகுதியில் பிறந்து 'ஆ' என்ற எதிர்மறை குறிப்பு ஏற்று 'மை' என்று விகுதி ஏற்றுக் கொண்ட எதிர்மறைத் தொழிற்பெயர் என்று இலக்கண விளக்கம் அளிப்பர். வெஃகுதல் என்பது பிறர் பொருள் மீது அவா கொள்ளுதல் / கவர நினைத்தல் / இச்சித்தல் எனப்பொருள்படும். அதன் மறுதலையான வெஃகாமை என்பது பிறருக்கு உரிமையான பொருளைக் கவர விரும்பாதிருத்தல் என்ற பொருள் தரும்.
ஒருவனுக்கு ஒன்றைப் பெற வேண்டும் என்று ஆசை ஏற்பட்டு விட்டால் அவன் பின்விளைவுகளை எண்ணாது தான் விரும்பியதை அடைய முயற்சி செய்வான். பிறன் பொருள் கண்டு முதலில் பொறாமை கொள்ளும் மனம் நாம் ஏன் அப்பொருளை அடையலாகாது என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. பின்னர் அப்பொருளைக் கவர்தற்குரிய தீய வழிகளில் மனம் செல்கிறது. ஆசை வந்துவிட்டால் எந்த நிலையில் இருந்தாலும்-கூர்த்த அறிவுடையாரும் அருளாளாரும்கூட-கீழிறங்கி வந்துவிடுகின்றனர். வெஃகுதல் செய்வோர் பிறன் கைப்பொருளைக்கூடக் கவர நினைக்கின்றனர். படுபயன்(பெரும்பயன்), சிற்றின்பம்(சிற்றளவான மகிழ்ச்சி), இலமென்று(வறுமை காட்டி) என்பன ஏன் ஒருவன் பிறன்பொருளைக் கவர நினைக்கின்றான் என்பதற்கான சில காரணங்கள். வெஃகியதால் உண்டான ஆக்கம் துய்க்கப்படும்போது மாட்சிமை தராது. விரும்பாமையை அறிந்தவரைச் சமயம் அறிந்து செல்வம் வந்து சேரும். வெஃகுதல் குடி கெடுத்துக் குற்றமும் தரும், அழிவை உண்டாக்கும்; வேண்டாமை வெற்றியை நல்கும். இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.
பிறன் பொருளைக் கவர விரும்புவதை எழுகின்ற இடத்திலேயே களைவது அதாவது முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற கருத்தைச் சொல்ல வந்தது இந்த அதிகாரம்.

பிறர் பொருளையும் பொதுமக்கள் செல்வத்தையும் சூழ்ச்சியால், ஊழல்வழியால் கவர நினைப்பது வெஃகுதல் ஆகும். நிலம்/வீடு/மற்ற அசையாச் சொத்துக்களைக் கைப்பற்றுதல், வணிக நிறுவனங்களை வளைத்து கொள்வது, வாணிபத்தில் பிறரை ஏமாற்றுதல், தொழிலில் உண்மையின்மை, பணியில் பிறர்க்கு முறையாகக் கிடைக்கவேண்டிய பதவிகளைக் குறுக்குவழியில் கைப்பற்றுவது போன்றவை வெஃகுதலுக்கு எடுத்துக்காட்டுகள். வலிமை காட்டல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், கையூட்டு (இலஞ்சம்) முதலியன வெஃகாமைக்குத் துணை போவன.
பொருள்பற்று என்பது குற்றமாகாது. பிறன் ஒருவன் நல்ல பொருள் ஒன்று வைத்திருக்கிறான். அதுபோலும் ஒரு பொருளை வாங்கவோ, ஆக்கிக்கொள்ளவோ ஆசை தூண்டுமாயின் அதிலும் குற்றம் இல்லை. ஆனால் அப்பொருள்மேல் அழுக்காறு கொண்டு அப்பொருளையே பெறவேண்டும் என்னும் முனைப்புக்கு ஆளாவது குற்றப்படும். தான் பாடுபட்டு உழைப்பினாலும் நல்முயற்சியினாலும் அப்பொருளை பெறுதலே நன்று. தம்முடைய உரிமைகளை ஒப்பப் பிறருடைய உரிமைகளையும் மதித்துக் கருதுதல் நடுவு நிலைமை ஒழுக்கமுமாகும். நல்வழியில் ஒருவர் ஈட்டி வைத்திருக்கும் பொருளை வௌவக்கருதுதல் நடுவு இன்றாகிறது.
வெஃகாமை என்பது மிகுபொருள் விரும்பாமையையும் குறிப்பது என்று சொல்வர். மிகுதியாகப் பொருள் சேர்ப்பவன் பெரும்பாலும் நடுநிலை தவறித்தான் அவற்றை ஈட்ட நேருமாதலால் அதையும் வெஃகுதல் குற்றத்துட்படுத்துவர்.

வெஃகாமை அதிகாரப் பாடல்களின் சாரம்;

 

  • 171 ஆம்குறள் நேர்மை இல்லாமல் பிறருடைய நல்வழிப் பொருளை ஒருவன் கொள்ள விரும்பினால் அது அவன் குடியை அழித்துப் பழியையும் அப்பொழுதே தரும் என்கிறது.
  • 172 ஆம்குறள் நேர்மை தவற வெட்கப்படுபவர் பெரும் பயனை விரும்பிப் பழி வந்தடையும் செயல்களைச் செய்யமாட்டார் எனச் சொல்கிறது.
  • 173 ஆம்குறள் பெருமை தரும் இன்பத்தை விழைபவர் கவரும் பொருளால் உண்டாகும் சிற்றளவான இன்பத்தை விரும்பி அறமல்லாதனவற்றைச் செய்ய மாட்டார் என்கிறது.
  • 174 ஆம்குறள் புலன்களை அடக்கக் கற்றுக்கொண்டவர்கள், தமக்கென எதுவும் இல்லை என்பதற்காக, பிறர்பொருளைக் கவர எண்ணமாட்டார்கள் என்று சொல்கிறது.
  • 175 ஆம்குறள் பொருள் கவர விரும்பி யார் எவர் என்று பாராமல் வெறிச் செயலை ஒருவர் செய்வாராயின், அவர்தம் நுணுகி விரிந்த அறிவால் என்ன ஆகும்? என்கிறது.
  • 176 ஆம்குறள் அருளை விரும்பி நன்னெறியில் நின்றவன், பிறர் பொருளை விரும்பித் தீய வழிகளை எண்ணக் கெட்டுப் போவான் எனச் சொல்கிறது.
  • 177 ஆம்குறள் பிறர் பொருளைக் கவர்வதால் உண்டாகும் நலத்தை விரும்ப வேண்டாம்; அதன் பயன் நன்றாக இல்லாததாய் முடியும் எனக் கூறுகிறது.
  • 178 ஆம்குறள் தன் செல்வம் குறையாமல் இருப்பதற்கு வழி யாது என்றால், பிறனுக்கு அடிப்படைத் தேவையான கைப்பொருளைக் கவர விரும்பாது இருத்தலேயாம் எனச் சொல்கிறது.
  • 179 ஆம்குறள் பிறர் உடைமையைக் கவர விரும்பாமையை அறம் என்று உணர்ந்தவரிடம் அவர் தகுதி அறிந்து செல்வம் தேடிச் சேரும் எனக் கூறுகிறது.
  • 180 ஆவதுகுறள் பின்னர் உண்டாகப்போகும் விளைவுகளை எண்ணாமல் பிறர் பொருளைப் பறிக்க விரும்பினால் அழிவு நேரும்; அப்பொருளை விரும்பாமை என்னும் பெருமிதம் வெற்றியை நல்கும் எனக் கூறுகிறது.

 

வெஃகாமை அதிகாரச் சிறப்பியல்புகள்

இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். (குறள் 174) என்ற பாடல் வறுமையைக் காரணம் காட்டி வெஃகுதல் கூறமாட்டார் ஐம்புலன்களையும் வென்றவர் என்கிறது. வறுமையை வெல்வதற்கு புலன்களின் ஆசைகளைக் கட்டுப்படுத்தி வரவுக்குள் செலவு செய்வதைவிட்டு பிறன்பொருளைக் கவர எண்ணாதே என்னும் நல்லுரை பகரும் குறள் இது.

வெறிச் செயல்களைச் செய்து பிறன் பொருள் கவரக் கருதுபவன் என்ன கற்றிருந்தும் என்ன பயன்? எனக் கேட்கிறது அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின் (குறள் 175) என்ற பாடல். பழிப்புக்குரிய செயல்களுக்காகவா அவர்கள் தமது நுண்ணிய பரந்த அறிவைப் பயன்படுத்த வேண்டும் என வருந்திக் கேட்கிறார் வள்ளுவர்.

வெஃகிச் சேர்த்த செல்வத்தைத் துய்ப்பது நன்றாவதில்லை என்கிறது வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற்கு அரிதாம் பயன் (குறள் 177) என்ற குறள். இன்பம் துய்க்கலாம் என்று பிறர் பொருளைக் கவராதே அது துன்பத்தையும் தரும் என எச்சரிப்பது இது.

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு (குறள் 180) என்னும் குறள் சிந்திக்காது பிறன் பொருளைப் பறித்தால் அழிவு நேரும்; விரும்பாமை என்னும் பெருமிதம் வெற்றியைத் தரும் எனக் கூறுகிறது. பிறன்பொருள் வேண்டாம் என்ற எண்ணமே பெருமைக்குரியது, வெற்றியை நல்கக் கூடியது என்று வெஃகாமையின் நன்மையை அழகுற எடுத்துரைக்கிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard