Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 025 அருளுடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
025 அருளுடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
அருளுடைமை 
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்.
குறள் திறன்-0241 குறள் திறன்-0242 குறள் திறன்-0243 குறள் திறன்-0244 குறள் திறன்-0245
குறள் திறன்-0246 குறள் திறன்-0247 குறள் திறன்-0248 குறள் திறன்-0249 குறள் திறன்-250

openQuotes.jpgஅருளுடைமை என்பது எல்லா உயிர்களிடத்திலும் கருணையோடு நடந்து கொள்வது. 'அருள்' என்பது 'அன்பு' என்பதன் முதிர்ச்சி. இல்லறத்தான் மனைவி, மக்கள், உற்றார், உறவினர்களிடத்தில் காட்டுகிற பரிவுக்கு அன்பு என்று பெயர். அதே பரிவை எல்லா மனிதர்களுக்கும் மற்றெல்லா உயிருள்ள பிராணிகளுக்கும் காட்டுகின்றபோது அது அருள் எனப்படும். அன்பு விரிந்து அருளாகின்றது.
- நாமக்கல் இராமலிங்கம்

 

அன்பு தொடர்புடையாரிடத்து காட்டப்படும் பற்று; அருள் என்பது தொடர்பில்லாத பிற உயிர்களிடத்தும் பரந்து செல்லும் கருணை அல்லது இரக்கக் குணம் ஆகும். இது பிற உயிர்களின் துயர் போக்குதல், பிற உயிர்களுக்குத் துன்பம் இழையாமை, பிற உயிர்களைக் கொல்லாமை ஆகிய பண்புகளைக் குறித்து நிற்கும். மன்னுயிர் ஓம்பும் மாண்புடைய இப்பண்புடையாரை அருளாளர் என்று மொழிவர். மனிதநேயம் என்பதும் அருளின்பாற்படுவதே. ஆடு, மாடு போன்ற மெல்லிய உயிர்களிடம் இரக்கம் காட்டுவதும் அருட்செயல் ஆகும். அருள் ஆள்பவர் வன்முறையை முற்றிலும் நீக்கியவராவர். நம்மிலும் வலிமையற்ற மனிதர்களிடம் மாறுபாடு கொள்ளும்போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற எளியவழி ஒன்று கற்றுத்தரப்படுகிறது.

அருளுடைமை

அறத்துப்பாலில் வள்ளுவர் மானிட வாழ்க்கையை இல்லறம் துறவறம் என்று இரண்டு அறங்களாகப் பகுத்தறிந்தார் என்றும் துறவறத்திற்குரியனவாகத் குறளிற் சொல்லப்பட்டுள்ள அறங்களில் அருளுடைமை ஒன்று என முன்னர் கூறினர். வள்ளுவர் துறவறம் பற்றித் தனியாகக் கூறவில்லை; இல்லறத்தின் தொடர்ச்சியே துறவறம்; இல்லறத்திலிருந்து கொண்டே தமக்குரியவராய் இன்றிப் பிறர்க்குரியவராகவும் வாழலாம். இது இன்றைய அறிஞர்கள் கருத்து. இவற்றுள் பின்னதே ஏற்கத்தகுந்தது. எனவே 'அருளுடைமை' அதிகாரத்தை துறவறக் கருத்துகளைச் சேர்க்காமலேயே நோக்க வேண்டும்.

அன்பு விரிந்து அருளாக மலரும். அன்பு ஈன்ற குழந்தை அருள் என்பார் வள்ளுவர். ஓருயிர் இடர்ப்படின் அதைத் தனக்கு உற்ற துன்பமாகக் கருதி அவ்வுயிர்பால் கசியும் ஈர உணர்ச்சியே அருளுடைமை எனப்படும். மனிதநேயத்தின் ஆதாரமாக அருளுடைமை விளங்குகிறது. ஒரு மனிதனின் அகத்தேவைகளுக்கு உரியனவாய் விளங்கும் அருள்உடைமை இங்கு பேசப்படுகிறது. அருள் உடையார்க்கு மன்னுயிரையும் தன் உயிர்போல் எண்ணும் மனப்பாங்கு கைவரப்பெறும். ஒருவன் இவ்வுணர்வைப் பெற்று மனிதநேயப் பண்புடன் விளங்கினால் வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, இனியவை கூறல், ஈகை ஆகிய அருளுடைமைக் கூறுகள் கொண்டதாக, உலகம் முழுவதையுமே தன் பற்றின் நிலைக்களம் ஆக்கிக்கொண்டதாக, அவனது வாழ்க்கை அமையும். இத்தகைய அருள் ஒருவனுக்கு அமைவது அருமை.

அருளுடைமை கூறவந்த வள்ளுவர் பொருட்செல்வத்தைக் கொண்டுவந்து இவ்விரண்டையும் ஒப்புமைப்படுத்தி மூன்று பாடல்களில் அருட்செல்வத்தின் பெருமையையும் மேன்மையையும் காட்டுவார். அருட்செல்வம் செல்வத்தில் சிறந்த செல்வமாகும்; பொருட்செல்வம் கயவர்களிடத்திலும் இருப்பதால் அதன் மேன்மை அருட்செல்வத்தை ஒப்புநோக்கும்போது குறைவுதான். பொருள் இல்லாதவர்களுக்குப் புறவுலக வாழ்க்கை இல்லாதது போல், அருள் இல்லாதவர்களுக்கு அவ்வுலக வாழ்க்கை இல்லை. பொருளை இழந்தவர்கள் அதைத் திரும்பப் பெற்றுச் செழிப்பது உண்டு; ஆனால் அருளை இழந்து வன்முறை நெறியில் சென்று அழிந்தவர்கள் அழிந்தவர்களே. இவை பொருட்செல்வத்தை ஒப்பிட்டுக் கூறப்பட்ட கருத்துக்கள். பொருட்செல்வத்தைக் குறிப்பிடாமலேயே வள்ளுவர் இவ்வதிகாரத்தை ஆக்கியிருக்கலாம். ஆனால் உலக நடைமுறை தழுவியே அறம் பேசுபவர் வள்ளுவர் ஆதலால் பொருட்செல்வத்தின் தன்மையை அருட்செல்வத்துடன் ஒப்பிட்டுக் கூறினார், ஆயினும் அருளையும் பொருளையும் எதிர் எதிராக வைக்கவில்லை என்பது நோக்கத்தகும்.

நல்ல நெறி கண்டு அருள் ஆள்க. அது தவிர்த்து. வாழ்க்கைக்கு வேறு துணை இல்லை. எல்லா உயிர்களையும் போற்றி அருள் செலுத்துவோனை தீவினை அணுகாது. அவனது உயிர்க்கு வரும் துன்பம் இல்லை. அவன் வன்முறை உலகில் புகமாட்டான். ஒருமுறை அங்கு சென்றுவிட்டால் அதிலிருந்து மீள்வது எளிதல்ல. வன்குணம் கொண்டவன் அருள் ஆள்வதற்கு ஒரு வழி உள்ளது-அதாவது தான் தன்னைவிட மெலிந்தவரைத் துன்பப்படுத்தச் செல்லும்போது, தன்னைவிட வலியவர் தன்னைத் துன்புறுத்த வரும்போது தான் படும் துயரை நினைத்தால் நெஞ்சில் அருளுணர்வு பிறக்கும். இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.

அருளுடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 241 ஆம்குறள் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த செல்வம் அருளுடைமை; பொருட்செல்வங்கள் கயவரிடத்தும் உள என்கிறது.
  • 242 ஆம்குறள் நல்ல வழியை ஆராய்ந்து அருள் செய்க; எந்தவகையால் ஆராய்ந்து தெளிந்தாலும் அருளே துணையாகும் எனச் சொல்கிறது.
  • 243 ஆம்குறள் அருள் நிறைந்த நெஞ்சினை உடையார்க்கு இருளடைந்த தீயவர் உலகத்தில் சென்றுசேர்தல் இல்லை என்கிறது.
  • 244 ஆம்குறள் உயிர்களையெல்லாம் காத்து அருள் செய்வானுக்குத் தன் உயிர் அஞ்சுதற்குக் காரணமாகிய தீவினைகள் இல்லை என்று சொல்வர் என்று சொல்கிறது.
  • 245 ஆம்குறள் அருள் உடையார்க்குத் துன்பம் இல்லை; காற்று உலாவும் வளமுடைய பெரிய இவ்வுலகமே சான்று என்கிறது.
  • 246 ஆம்குறள் அருளில்லாதவராய்க் கொடுமைகளைச் செய்தொழுகுவார் உறுதிப் பொருள்கள் அற்று வாழ்வு மறந்தவர் என்று சொல்லுவர் எனச் சொல்கிறது.
  • 247 ஆம்குறள் பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்வு இல்லையாயினாற் போல அருளில்லார்க்கு அவ்வுலக வாழ்வு இல்லை என்கிறது.
  • 248 ஆம்குறள் பொருள் இழந்தவர்கள் ஒரு காலத்தில் செல்வத்தால் பொலிவுறுவர்; அருள் குணத்தை இழந்தவர் இழந்தவரே; மறுபடியும் அதை அடைவது எளிதல்ல எனக் கூறுகிறது.
  • 249 ஆம்குறள் அருளில்லாதவன் செய்யும் அறச் செயல்களை ஆராய்ந்து பார்த்தால், அது மனத்தெளிவு இல்லாதவன் மெய்ப்பொருளை அறிந்தாற் போலும் எனக் கூறுகிறது.
  • 250 ஆவதுகுறள் தன்னைவிட வலிமை குறைந்த ஒருவனிடத்து முறைகேடாக நடக்க முயலும்போது, தன்னைக் காட்டிலும் வலுவுமிகுந்தவர் முன்பு தான் நிற்கும்போது உள்ள நிலையை நினைத்துப் பார்க்கவேண்டும் என்கிறது.

 

அருளுடைமை அதிகாரச் சிறப்பியல்புகள்

வடலூர் வள்ளலார், அன்னை தெரசா போன்றோர் முழுக்க முழுக்க அருள் வாழ்வு நடத்திக் காட்டியவர்கள். அவர்களது போன்ற வாழ்வுநெறி மேற்கொள்ளுங்கள் என்று வள்ளுவர் கூறமாட்டார். பொருட்செல்வங்களின் இன்பங்கள் துய்த்து அருள் வாழ்க்கை மேற்கொள்வதற்கான வாழ்வுமுறைக்குத்தான் அருளுடைமை அதிகாரம் வழிகாட்டுகிறது. வள்ளுவர் கூறும் அருள்நெறி அனைவரும் ஏற்றுப் பின்பற்றக் கூடியது.

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு மல்லல்மா ஞாலம் கரி (245) என்ற குறள் அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று என்கிறது. காற்றும் அருளும் உயிர்ச்சூழலுக்குரிய இன்றியமையாத் தேவைகள் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. காற்று இதமாக வீசுகின்றதையும் அருளுடைமை உலகிற்கு இதம் தருவதையும் அழகுற இணைக்கும் பாடலிது.

'அவ்வுலகத்திற்கு அருள் வேண்டும். இவ்வுலகத்திற்குப் பொருள் வேண்டும்' என்று அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (247) என்ற பாடல் சொல்கிறது. அவ்வுலகம் எங்கோ இருப்பதல்ல. சான்றோர் விரும்பும் உலகமே அது. அதில் இங்கேயே வாழத் தலைப்படுகிறவர்கள் அருட்செல்வத்தை நாடுகிறார்கள். பொருளின் மேல் ஆசை வைக்கக்கூடாது என்றோ வீட்டின்பம் அடைவதற்குப் பொருளாசை தடையாக இருக்கும் என்றோ வள்ளுவர் கூறவில்லை. வீட்டுலகை நம்பிய காந்தியடிகள் போன்றவர்கள் மலைக்கு ஓடிப்போய்த் தவம் செய்ய முயலாமல் மக்களிடையே வாழ்ந்து காந்தீயப் பொருளாதாரத்தை நிலைநாட்ட முயல்கின்றார்கள் என தெ பொ மீனாட்சிசுந்தரம் இக்குறட்கருத்தை விளக்குவார். பொருளைப் போற்றி வாழுங்கள். இவ்வுலக இன்பத்தை துய்த்து, அருளை வளர்த்து, அவ்வுலக இன்பத்தையும் பெற வகை செய்து கொள்ளுங்கள் என்பன இக்குறள் தரும் செய்திகள்.

உலகில் வன்முறை நீக்கி அருள் மலர என்ன செய்யலாம்? வள்ளுவர் கூறும் வழி வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து (250) என்பதுவே. எவ்வளவு எளிய வழி!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard