Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 028 கூடாஒழுக்கம் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
028 கூடாஒழுக்கம் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
கூடாஒழுக்கம் 
பொருந்தாத தீய நடத்தைகள்.
குறள் திறன்-0271 குறள் திறன்-0272 குறள் திறன்-0273 குறள் திறன்-0274 குறள் திறன்-0275
குறள் திறன்-0276 குறள் திறன்-0277 குறள் திறன்-0278 குறள் திறன்-0279 குறள் திறன்-280

openQuotes.jpgகூடா ஒழுக்கம் என்ற அதிகாரம் கூறுவது 'துறவறத்துக்குப் பொருந்தாத செயல்களைச் செய்யாமல் விடுவதாகும்', திருவள்ளுவர் காலத்தில்கூட மக்களின் அனுபவமற்ற நிலையைப் பயன்படுத்தி அவர்கள் துறவிகளை மதித்ததால், வணிகமயமாக்கியிருக்கிறார்கள்.
- தெ பொ மீனாட்சி சுந்தரம்

 

வஞ்சமனம் கொண்டு உலகத்தாரை ஏமாற்றி வாழ்வு நடத்துவது பொய்ஒழுக்கமாம். இதை வள்ளுவர் கூடா ஒழுக்கம் எனக் குறிக்கிறார்.
மற்றவகைகளில் தான் ஈட்டிய ஒரு உயர்ந்த தோற்றத்தை வைத்து குற்றம் புரிபவன், தான் அஞ்சத்தக்கவன் எனக் காட்டிக்கொள்ள வல்லுருவம் பூண்டு ஊர்மேய்பவன், தவவேடத்தில் மறைந்திருந்து காமவேட்டையாடுபவன், புறத்தே செம்மையுடையராகக் காட்சி தந்து அகத்திலே பெருங்குறையுடையவன், மனத்திலே மாசை வைத்துக்கொண்டு மாட்சிமையுடையாராகக் காட்ட நீராடல் போன்ற சடங்குகளில் ஈடுபடுபவன், தோற்றத்தில் ஒன்று செய்கையில் முற்றிலும் மாறாக இருப்பவன் போன்ற இவர்கள் மற்றவர்களுக்குத் தெரியாவண்ணம் மறைந்திருந்து தீச்செயல்கள் புரிபவர்கள். இவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து மக்களை விழிப்பாக இருக்கச் செய்வதற்காக அமைந்தது கூடாஒழுக்கம் அதிகாரம் ஆகும்.
மறைவாகச் செய்கிறோம் என்று எண்ணுகிறார்கள்; ஆனால் இவர்களது படிற்றொழுக்கத்தை இயற்கை பார்த்துக்கொண்டு பதிவு செய்து கொண்டிருக்கிறதே!; 'என் செய்தோம் என் செய்தோம்!' என தன்னிரக்கமாக இவர்கள் பின்னால் புலம்பப் போகிறார்கள்; வஞ்சித்து வாழ்க்கை நடத்துபவரினும் கொடியவர் இல்லை; உலகம் பழித்தவைகளை விலக்கிவிட்டால் போதும்; வெளிவேடம் எதற்கு? இவை கூடாஒழுக்கம் பற்றிக் குறள் தரும் கருத்துக்கள்.

கூடாஒழுக்கம்

ஒழுக்கமுடைமை என்ற அதிகாரம் வகுத்து மாந்தர் ஒழுகுமுறைகளை முன்பு அறிவுறுத்திய வள்ளுவர் இங்கு கூடாவொழுக்கம் எனத்தனியே பேசுகிறார்.
இவ்வதிகாரப் பாடல்கள் எல்லாம் பொதுவாகப் பிறரை ஏமாற்றி வாழும் அனைவர் பற்றியது எனக் கொள்ளமுடியும் என்றாலும் போலித்துறவியரை மனதில் கொண்டே வரையப்பட்டவை என்பதை எளிதில் உணரமுடிகிறது.
கூடாஒழுக்கம் என்பதற்கு தவத்திற்கு அல்லது துறவறத்திற்குப் பொருந்தாத ஒழுக்கம் என்று பெரும்பான்மையர் விளக்கினர். அதிகாரப்பாடல்களில் தவமறைந்து அல்லவை செய்தல்...(274) என்பதில் தவம், பற்றற்றேம் என்பார்...(275) என்பதில் பற்றற்றேம், நெஞ்சின் துறவார் துறந்தார்போல்................(276) என்பதில் துறவு .....மாண்டார்நீர் ஆடி....(278) என்பதில் நீராடி என்ற குறிப்புகள் வருகின்றன. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் (280) என்பதில் துறவுக்கான புறக்கோலங்கள் பேசப்படுகின்றன. இயல் பகுப்பில் துறவற இயலில் வைக்கப்பட்டதாலும் கூடாவொழுக்கம் அதிகாரம் கள்ளொழுக்கம் மேற்கொள்ளும் துறவியரைப் பற்றியதே என்பதில் ஐயமில்லை.

துறவு போன்று வெளியில் காட்டி, உள் நிலையில் பொருந்தா ஒழுக்கத்துடன் ஒழுகுகின்ற போலிமை நிலைகள் இவ்வதிகாரத்தில் சுட்டிக் காட்டப்படுகின்றன. மக்கள் நல்வாழ்வுக்கு வழிகாட்டுபவர்களாகவும், அறவுணர்வுகளை ஊட்டுபவர்களாகவும், எல்லா உயிர்களிடத்தும் அருள் செய்பவர்களாகவும் விளங்க வேண்டியவர்கள் துறவறம் பூண்டவர்கள். இவற்றிற்கு மாறாக பலர் நெஞ்சத்தால் துறவாமால், பொருள் வருவாய் கருதியோ பிறர் மதிப்பைப் பெற விரும்பியோ சமூகம், அரசியல் செல்வாக்குப் பெறும் நோக்கத்திலோ துறவியர் வேடம் தாங்கித் துறந்தார் போல் நடித்து வாழ்ந்து வருகின்றனர். தவவேடத்தில், செய்யத்தகாத, உலகம் பழிக்கும் இழிவான செயல்களை மறைவாகச் செய்து வாழ்கிறார்கள்.
தவம் செல்வாக்குடையது என்று கருதி அதனை மேற்கொள்வதின் மூலம், தம்முடைய உலகியல் வேட்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதி, சிலர் ஏய்த்துப் பிழைக்க வேண்டும் என்பதற்காகவே தவவேடம் பூணுகின்றனர். மற்றும் சிலர் மனத்தை வழிப்படுத்தும் ஆற்றல் இல்லாமல் தவக்கோலம் கொள்வதால், பிறரை வஞ்சிக்கும் தன்மை மிகுந்து பின்னர் பொய்யொழுக்கத்திற்கு மாறிவிடுகின்றனர். தவக்கோலத்தைக் கண்டு ஒரு தீங்கும் இல்லை என்று நம்பி பெண்களும் மற்றவரும் ஐயமின்றி பின்பற்றத் தொடங்குவார்கள். அந்த வாய்ப்பைத் தம் தீயொழுக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்வர் இவர்கள்.

அகத்தே தவவுணர்வு சிறுதும் இல்லாத ஒருவன் புறத்தே மட்டும் கோலம் காட்டிப் பிறரை ஏமாற்றித் திரிவது வஞ்சக ஒழுக்கமாகும். புறத்தோற்றங்களால் தன்னை ஒருவன் தான் துறவி என்று வெளிப்படுத்திக் காட்டுகிறான். முக்கோல் கொண்டிருத்தலும், கமண்டலம் வைத்திருத்தலும் துறவிக்கு உரியன ஆயின; சடை வளர்த்தலும் மழுக்க வழித்தலும் வழக்கமாயின; குறிப்பீட்ட நிறமுள்ள ஆடை அணிவது போன்றவை நிலைத்துவிட்டன. இனி, மெய்த் தவத்தோர்க்கு இடையே பொய்த்தவத்தோர் பலர் தோன்றிவிட்டபின், மெய்யர் எவர், பொய்யர் எவர் என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாகிவிட்டது. பொய்த்துறவியர் போற்றப் பெற்றதும். மெய்த்துறவியர் பழிப்புக்கு ஆட்பட்டதும் உளதாயிற்று.
உள்ளத்தே தவத்தன்மை கொண்டிருப்பான் ஒருவன், புறத்தேயும் அதனைக்காட்டுமாறு ஏதேனும் கோலம் கொள்வானாயின் குற்றமில்லை என்றுகூட இங்கு சொல்லப்படவில்லை. புறவேடம் துறந்தவர்க்குத் தேவையே இல்லை என்றுதான் கூறப்படுகிறது.
ஒருவரது செயலின் தன்மை கொண்டே அவர் உண்மையானவரா அல்லது போலித் துறவியா என்பதை அறிந்து கொள்க என இவ்வதிகாரப் பாடல் ஒன்று அறிவுறுத்துகிறது.

துறவியர் சேர்ந்தியங்கும் நிறுவனங்களை வள்ளுவர் குறிப்பிடவில்லை. ஆனால் மடம், பள்ளி, கழகம், சங்கம் போன்ற நிறுவன அமைப்பினுள்ளேயோ அல்லது தனியாகவோ போலித்துறவிகள் இயங்கி வருகிறார்கள். நிறுவன அமைப்பு கொண்ட போலித்துறவிகள் அரசியல் சார்புநிலை எடுத்து ஆட்சிபலத்தின் துணையோடும் வணிகர், தொழிலதிபர் ஆகியோரின் அரவணைப்போடும், பன்னாட்டுத் தொடர்போடும், வலுப்பெறுகின்றனர். துறவுவேடம் பூண்டவர்கள் அரசியலில் நேரடியாகத் தலையிடுவதும் அரசியலார் துறவிகளைச் சார்ந்திருப்பதும் வழக்குமுறையாகிவிட்டது. போலித்தவவர்களைப் பின்பற்றுவோர் தாங்கள் நம்பும் துறவோர் தவறே இழைக்க மாட்டார் என்ற கருத்துக் கொண்டவர்களாகி விடுகின்றனர்; தவறு செய்தாலும் அவர் தண்டிக்கப்படக் கூடாது என்றும் எதிர்பார்க்கிறார்கள். கண்மூடித்தனமாக நம்பும் இவர்கள் அவர்க்காக வன்முறையில் ஈடுபடவோ/ தூண்டிவிடவோ தயங்குவதில்லை. கூடாவொழுக்கத்தோடு உலவும் துறவுக்கோலக் குற்றவாளிகள் பலர் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதும் கசப்பான உண்மை.
மக்கள் தொண்டாற்ற வந்ததாகச் சொல்லிக்கொள்ளும் அரசியல் தலைவர்களிலும் படிற்றொழுக்கம் மேற்கொள்வோர் பலர் இருக்கின்றனர். கையூட்டு பெறுதல், முறைகேடுகளில் ஈடுபடுதல், கட்டப்பஞ்சாயத்து செய்தல், நில உடைமைகளைப் பறித்தல், காமம், கொலை போன்ற தீச்செயல்களை மறைவாகச் செய்யும் அரசியலாரது நடவடிக்கைகளும் இவ்வதிகாரத்தில் கூறப்பட்ட அனைத்துக் குறள்களின் கருத்துக்களோடு அங்குமிங்கும் வேண்டு மாறுதல்களுடன் பொருந்தி வருகின்றன என்பது எண்ணத்தக்கது.

துறவறத்திற்கு வெளிக்கோலத்தைவிட மனப்பக்குவம்தான் தேவை என்பதைச் சொல்லவரும் வள்ளுவர் 'வெளுத்ததெல்லாம் பாலல்ல' என்ற கருத்தை நம் மனதில் நன்கு பதியுமாறு இங்கு சொல்லியுள்ளார்.

கூடாஒழுக்கம் அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 271 ஆம்குறள் வஞ்சக மனமுடையானது மறைந்த ஒழுக்கத்தைக் கண்டு, ஐம்பூதங்களும் தம்முள்ளே சிரிக்கும் எனச் சொல்கிறது.
  • 272 ஆம்குறள் தான் குற்றம் என்று அறிந்த ஒன்றை ஒருவன் செய்வானானால் வானம் போல் உயர்ந்த தவக் கோலத்தால் என்ன ஆகும்? எனக் கேட்கிறது.
  • 273 ஆம்குறள் மனத்தை அடக்கும் வலிமை இல்லாத இயல்பினான் கொண்டுள்ள வலிய தோற்றம்தரும் கோலம், பசுமாடு புலித்தோலைப் போர்த்துக் கொண்டு பயிரை மேய்ந்ததை ஒக்கும்என்கிறது.
  • 274 ஆம்குறள் தவ வேடத்தின்கண் மறைந்து கொண்டு நல்லதல்லாதவற்றைச் செய்தல், வேடன் புதரில் மறைந்து நின்று பறவைகளைப் பிடித்தலை ஒக்கும் என்று சொல்கிறது.
  • 275 ஆம்குறள் 'பற்று விட்டொழித்தோம்' என்று கூறுபவர் மறைவாகச் செய்யும் ஒழுக்கம் 'என் செய்தோம்! என் செய்தோம்!' என இரங்கும்படி பல துன்பங்களைத் தரும் என்கிறது.
  • 276 ஆம்குறள் உள்ளத்தால் துறவாது, துறந்தார்போல நடித்து ஏமாற்றி, வாழ்வாரைப்போலக் கொடியவர் இல்லை எனச் சொல்கிறது.
  • 277 ஆம்குறள் குன்றிமணியினைப் போல, புறத்தே தோற்றத்தில் செம்மையுடையராக இருந்தாலும், உள்ளத்தில் அதன் மூக்குப்போல இருண்டவர்கள் உண்டு என்கிறது.
  • 278 ஆம்குறள் மனத்தின் கண்ணே குற்றம் இருக்கவும், மாட்சிமையுடைய துறவிகள் போல் நீர் பல கால் மூழ்கி நடித்து, மறைந்து ஒழுகுகின்ற மக்கள் உலகத்தில் பலராவார் எனக் கூறுகிறது.
  • 279 ஆம்குறள் அம்பு வடிவால் நேரிதாயினும் கொடிது; யாழ் வளைவாயிருந்தாலும் செவ்விது ஆதலால் செயல்வகையால் அறிந்து கொள்க எனக் கூறுகிறது.
  • 280 ஆவதுகுறள் உலகத்தார் குற்றம் என்று சொன்னவற்றை விலக்கிவிட்டால் மொட்டை யடித்தலும் தலைமுடி, தாடி முதலியவற்றை நீண்டு வளர விடுவதும் வேண்டாம் என்கிறது.

 

கூடாஒழுக்கம் அதிகாரச் சிறப்பியல்புகள்

 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் (271) என்ற பாடல் மறைந்தொழுகுபவனைப் பார்த்து ஐந்து பூதங்களும் 'அவன் செய்கின்ற தீயவற்றை யாரும் அறியார் என்று நினைக்கின்றான். பேதை! நாங்கள்தாம் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் எல்லாச் செயல்களையும் கண்டுகொள்வோமே' என உள்ளுக்குள் நகைப்புடன் கூறுகின்றன எனச் சொன்னது உலகச் செயல்கள் அனைத்துக்கும் ஐம்பூதங்களும் சான்று என்பதை நயம்படச் சொல்கிறது.

ஒரு வேடவன் மறைந்திருந்து பறவைகளைப் பிடிக்கிறான். அது போலித்துறவி ஒருவன் மற்றவர்களுக்குத் தெரியாமல் களங்கமற்றோரைத் தன் வலைக்குள் இழுக்க முயற்சிப்பது போல என்பதைத் தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று (274) என்ற குறள் கூறுகிறது. இதில் உள்ள புள்சிமிழ்த்தற்றுஎன்ற தொடர்க்குக் காலிங்கர் கூறும் வாயில் விரல் வைத்து பறவைபோல் ஒலிஎழுப்புவது போன்றது என்ற விளக்கம் சுவைமிக்கதாக உள்ளது.

புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி மூக்கின் கரியார் உடைத்து(277) என்ற குறள் வெளித்தோற்றத்தில் குன்றிமணிபோல செம்மையுடையராய்த் தோன்றுவார்கள்; ஆனால் நெஞ்சமோ குன்றிமணியின் சிறுபகுதில் உள்ள கருநிறம் போல் இருண்டிருக்கும் என்பதைச் சொல்வது. இங்கு சிவப்பு என்பது செம்மை என்ற பொருளில் சொல்லப்பட்டது. இது போலித்துறவியின் உடல் நிறத்தையும் குறிப்பதாகக் கூறப்பட்டது என்பர். வள்ளுவர் இரு பொருள் தருமாறு கூறுவதில் வல்லவரே.

அம்பு நேரான வடிவம் பார்ப்பதற்கு அழகுடையதானாலும் கொடுமை செய்வது; யாழின் கோடு வளைந்த வடிவம் உடையதாய் அழகற்றதாக இருந்தாலும் இனிய பயன் தருவது; ஆகையால் உண்மையானவர்களைக் கண்டறிய வேண்டுமானால், வெறுந் தோற்றத்தைக் கண்டு அறிய முடியாது. அவரவர் செய்யும் செயல்களின் நன்மை தீமையால் கண்டறிய வேண்டும். ஒருவரின் எழில்நலம் கண்டு ஏமாறவேண்டாம் என்பதை இரண்டு பொருள்களை ஒப்பீடு செய்து கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல் (279) என்ற குறள் விளக்குகிறது.

உள்ளத்தே தூய துறவு வேண்டும். தூய துறவு உள்ளத்தே இல்லாமல் புறத்தே சடைவளர்த்தலாலும், தாடி நீட்டலாலும், மழுக்க வழித்தலாலும் பயனில்லை என்பதை மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் (280) என்ற குறள்வழி கூறப்பட்டது. இது உண்மையாகவே அகத்துறவு கொண்டோரையும் சேர்த்தே சொல்கிறது. எதற்காக இருந்தாலும் புறவேடமே தேவையில்லை என்பது இதன் கருத்தாகிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard