Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 031 வெகுளாமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
031 வெகுளாமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
வெகுளாமை 
நகையும் உவகையும் கொல்லும் சினம்.
குறள் திறன்-0301 குறள் திறன்-0302 குறள் திறன்-0303 குறள் திறன்-0304 குறள் திறன்-0305
குறள் திறன்-0306 குறள் திறன்-0307 குறள் திறன்-0308 குறள் திறன்-0309 குறள் திறன்-310

openQuotes.jpgகடுஞ்சினம் கொள்ளாதிருத்தல். பொருளற்றதும் எல்லை மீறியதும் வெகுளுதலாகும். கோபம் கொள்ளுதற்கு ஒரு காரணமுள்ள இடத்திலும்கூட, சீற்றம் கொள்ளாதிருக்கவேண்டும்.
- தமிழண்ணல்

 

சினம், சீற்றம், கோபம், வெகுளல், கனலுதல், கடுகடுத்தல் என்பன சினத்தில் பல நிலைகள்; கடுஞ்சினம் கொள்ளாமையே 'வெகுளாமை' என்பர். மணக்குடவர் 'வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது' என்றார். எளியார் மீது வலியார் வெகுண்டெழக்கூடாது என்பது பொருள். வெகுளாமை அதிகாரம் இல்லறத்தார் துறவறத்தார் இருவர்க்குமே பொருந்துவதாகும்.

வெகுளாமை

சினம் என்பது மனித உறவுகளுக்கும் வாழ்வின் மகிழ்ச்சிக்கும் எதிரானது; அது இவற்றை அழிக்கவல்லது, வலியவனுக்கு எதிரான சினம் வெகுண்டவனுக்குத் தீங்கு பயக்கும். பலமில்லாதவனுக்கு எதிரான சினமும் தீமை பயப்பதுவே. சினம் கொண்டவனையே தீபோல சுடும் என்று சொல்லி சினம் காக்க என வள்ளுவர் இவ்வதிகாரத்தில் எச்சரிக்கிறார். சினம் காப்பதற்கு ஒரு வழியாக அதை மறந்துவிடுக என்கிறார். மனத்தில் சினம் என்ற எண்ணம் மனத்தில் தோன்றவிடக்கூடாது என்றும் சொல்கிறார். சினத்தால் விளையும் தீமைகள் பேசப்படுகின்றன; சினம் என்பது முகமலர்ச்சியையும் உள்ளமகிழ்ச்சியையும் கொல்வது மட்டுமல்லாமல் வெகுள்வானின் உயிர்க்கே கேடாக அமைவதுவதுமாகும்; சூழ்ந்துள்ளவரையும் சுடவல்ல நெருப்பு அது. சினத்தை ஓர் ஆற்றல் என நினைக்க வேண்டாம் எனவும் பொறுமை காக்க எனவும் அறிவுரை சொல்லப்படுகிறது. சினத்தை விட்ட அளவு ஒருவர் உயர்ந்தவர் ஆகிறார். இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.

சினமூட்டுமாறு ஒருவன் தொடர்ந்து துன்புறுத்தினால் என் செய்வது? பல கொழுந்துகளாகச் சுடர் விட்டெரியும் பெருநெருப்பு தீண்டினாற் போன்று துன்பங்கள் விளைவிக்கப்பட்டாலும் 'இயலுமாயின்' வெகுளாமை நன்று என்று இத்தொகுதிப் பாடல் ஒன்று கூறுகிறது. இதில் உள்ள 'இயலுமாயின்' என்ற குறிப்பு எல்லாக் காலங்களிலும் வெகுளாமையைக் கடைப்பிடிக்க முடியாது என்பதை உணர்த்துவதாக உள்ளது. அதாவது சினம் கொள்வதைத் தவிர்க்க முடியாத சூழல்களும் உண்டு என்பதைத் தெரிவிப்பதாக இருக்கிறது. எனவேதான் சினம் கொள்ளாமை நன்று என்று மட்டும் கூறி இக்குறள் முடிகிறது. எக்காரணம் கொண்டும் சினமே கூடாது என்றோ எஞ்ஞான்றும் வெகுளவேண்டாம் என்றோ சொல்லப்படவில்லை. மக்களின் வாழ்க்கையில், தேவைப்படும் இடங்களில், ஏற்கத்தக்க காரணங்களுக்காக சினம் கொள்ளலாம் என்பது வள்ளுவரின் கருத்தாகலாம்.

வெகுளாமை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 301 ஆம்குறள் சினம் செல்லக்கூடிய இடத்தில் செலுத்திவிடாமல் அடக்குகிறவன்தான் வெகுளாதவனாவான்; அது செல்லாத விடத்து அதனை அடக்கினாலென்ன அடக்காவிட்டால்தான் என்ன எனக் கேட்கிறது.
  • 302 ஆம்குறள் சினம் காட்ட முடியாதவர் மேல் எழுமாயின் தனக்குத் தீங்காகும்; செல்லும் இடத்தில் சினம் எழுமாயினும் அதைவிடத் தீமை வேறு இல்லை என்கிறது.
  • 303 ஆம்குறள் யாரிடத்தில் சினம் கொண்டாலும் மறந்துவிடுக; ஒருவர்க்குச் சினத்தால் தீமையெல்லாம் தோன்றும் என்கிறது.
  • 304 ஆம்குறள் முகமலர்ச்சியையும் மனமகிழ்ச்சியையும் அழிக்கும் சினத்தைவிட வேறு பகைகளும் உளவோ? எனக் கேட்கிறது.
  • 305 ஆம்குறள் தீமை வந்து எய்தாமல் தன்னைக் காக்க வேண்டின் சினம் வாராமல் தடுக்க; தடுக்காவிட்டால், அச்சினம் பல துன்பங்கள் தந்து தன்னையே கெடுக்கும் என்கிறது.
  • 306 ஆம்குறள் அடைந்தாரைக் கொல்லும் சினமென்னும் நெருப்பு, காப்புத் தெப்பமாக இருக்கும் இனமாகிய துணையையும் அவரிடமிருந்து விலக்கிவிடும் எனச் சொல்கிறது.
  • 307 ஆம்குறள் நிலத்தை அறைந்தவனுடைய கை துன்புறுதல் எப்படித் தப்பாதோ அவ்விதம் சினத்தை ஒரு பொருளாக கருதுபவன் துன்புறுதல் என்கிறது.
  • 308 ஆம்குறள் கொத்தாக நெருப்பு வந்து வருத்தினாலொத்த தீமைகளை ஒருவன் செய்தாலும் சினவாமல் இருத்தல் கூடுமாயின் நல்லது எனக் கூறுகிறது.
  • 309 ஆம்குறள் உள்ளத்தால் வெகுளியை நினையாமல் இருப்பானானால் நினைத்த எல்லாம் உடனே அடைவான் எனக் கூறுகிறது.
  • 310 ஆவதுகுறள் சினத்தில் மிக்கவர் இறந்தவர்க்கு ஒப்பாவர்; சினத்தை ஒழித்தவர் துறவியர் அளவினர் என்கிறது.

 

வெகுளாமை அதிகாரச் சிறப்பியல்புகள்

'தொல்தமிழ்ச் சமுதாயத்தில் சினம் சிறந்த பண்பாகப் போற்றப்பட்டது' எனச் சொல்லி புலவர் மரபு சினத்தைச் சிறந்த வீரப்பண்பாக ஓதியது; மறம், சினம், சீற்றம் ஆகிய சொற்கள் புலவர் மரபில் மிகுதியாக இடம் பிடித்தன; சினம், சீற்றம், வீரம், பகை, வெறுப்பு, வலிமை, ஆற்றல், கொலை, போர் வெற்றி முதலான பொருள்களில் 'மறம்' என்ற சொல்லைப் புலவர் மரபு கையாண்டது என்றும் கூறுவார் ராஜ் கௌதமன். இவை யாவும் சமுதாய நலனுக்காக எழும் சினம்.
வெகுளாமை அதிகாரம் சொல்வது தனிமனிதனுக்கான அறமாகும். மாந்தர்க்குச் சினம் கூடாது; இன்னா செய்தார்க்கும் இனிய செய்ய வேண்டும் என்ற வள்ளுவரின் புதிய அறக்கருத்துக்களின் அடிப்படையில் கூறப்படுவது.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற (304) என்ற பாடல் சினத்தால் உண்டாகும் மிகப்பெரிய கேட்டைச் சொல்கிறது. அது நகையினையும், உவகையினையும் கொல்லும் தன்மை வெகுளிக்கு உண்டு என்கிறது. நகையினைக் கொல்வதைப் புறத்தே தோன்றும் முகமலர்ச்சியை மறையச் செய்வது என்றும் உவகையினைக் கொல்வதை உள்ள மகிழ்ச்சியினை அழிக்கச் செய்வது என்றும் கொள்ளுதல் வேண்டும். இவ்விரண்டையும் ஒன்றாக நின்று கெடுப்பதுதான் சினம் என்பது மனதில் பதியும்படி சொல்லப்படுகிறது.

வெகுளியைக் கட்டுப்படுத்தாவிடில் வெகுள்வானின் உயிருக்கே தீங்கு விளையும், வலியவரிடம் சினம் கொண்டால் அவர் எல்லாவகையான ஊறுகளையும் விளைக்கத் தயங்கமாட்டார். மெலியாரும் சினத்தைப் பொறுத்துக்கொண்டு வஞ்சம் தீர்க்கக் காத்திருப்பார். இவ்வாறு சினம் செலுத்தப்பட்ட இடங்களிலிருந்து துன்பங்கள் உண்டாகும். மேலும் சினம் கொண்டவனது உடல் நலமும் மனநலமும் கெட வாய்ப்புள்ளது. சினம் கொண்டவன் இதயநோய் போன்றவற்றைப் பெறுவான். மருத்துவர்களும் இதை உறுதி செய்வர். இதணை தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் (305) என்ற பாடல் விழித்துக் காத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறது.

மனித உறவைச் சிதைக்கவல்லது சினம். இக்குணம் கணவன்-மனைவி உறவைக்கூட பாதித்து விடும்; மக்கள் மீது பெற்றோர் கொண்ட அன்பான உறவையும் சீர்குலைத்துவிடும்; நண்பர்களைப் பிரித்து விடும். சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும் (306) என்ற குறள் சினமானது தன்னை அழிப்பதோடு சுற்றத்தாரையும் சுட்டு விடும் என்பதை ஓர் நல்ல உவமை வாயிலாக உணர்த்துகிறது.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை (310) - சினத்தை எந்த அளவு ஒருவர் துறக்கிறாரோ அந்த அளவு உயர்ச்சி பெறுவார் என்ற சிறந்த கருத்தை நல்ல ஒலியமைப்புடன் கூடிய பாடல்வழி எடுத்துரைக்கிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard