Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 039 இறைமாட்சி அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
039 இறைமாட்சி அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
இறைமாட்சி 
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை
குறள் திறன்-0381 குறள் திறன்-0382 குறள் திறன்-0383 குறள் திறன்-0384 குறள் திறன்-0385
குறள் திறன்-0386 குறள் திறன்-0387 குறள் திறன்-0388 குறள் திறன்-0389 குறள் திறன்-0390

openQuotes.jpgதலைவன் வரவு பிறப்பால் அமைக; தேர்வால் அமைக; பிற முறையால் அமைக. அவன் வரும்வழி பற்றிக் கவலையில்லை. எவ்வழியானும் அரசேற்கும் தலைவனைப் பற்றியே ஆசான் கவலை கொண்டார். அரசன் வரும்வழி பேசாது, 'இறைமாட்சி' அதிகாரத்து அவனுக்கு அமையவேண்டிய அரசியல்புகளையே பேசினார்.
- வ சுப மாணிக்கம்

 

இறைமாட்சி என்பது அரசின் மாட்சி அதாவது அரசுக்குரிய பெருமைக் குணங்கள் கூறுவது. ஆட்சித் தலைவனுக்கு வேண்டிய நற்பண்புகளையும் செயல் திறன்களையும் கூறி, ஆளுதலின் மாட்சிமை இதில் விளக்கப்படுகிறது. எங்கும் தங்கியிருக்கின்ற இறைவன் போல, தம் ஆட்சியின் எல்லைக்குட்பட்ட எல்லா இடங்களிலும் நிகழ்வன எல்லாம் அறிந்தும் செய்வன செய்தும் முறைப்படுத்தும் ஆற்றல் உடையதான அரசின் பெருந்தகைமைகளைக் கூறுவதால் இறைமாட்சி என்று சொல்லப்பட்டது.

இறைமாட்சி:

தமிழில் 'இறை' என்ற சொல் கடவுளையும் குறிக்கும். அரசாள்பவனையும் குறிக்கும். வள்ளுவரும் குறளில் இவ்விருபொருளையும் இந்த ஒரு சொல்லால் குறித்துள்ளார். இறை என்ற சொல்லுக்குத் தலைமை, தலைவன் எனவும் பொருள் உண்டு. அரசனது தலைமைச் சிறப்பைச் சுட்டிக் காட்ட இச்சொல்லை அவர் இங்கு ஆண்டிருக்கலாம். 'இறுத்தல் - (எங்குந்) தங்குதல். இறுப்பது இறை. இத்தொழிற் பெயர் ஆகுபெயராய்த் தன் நாடுமுழுதும் அதிகாரத்தால் தங்கியிருக்கின்ற அரசனைக் குறிக்கும். எங்கும் நிறைந்திருக்கின்ற கடவுளையுங் குறிக்கும்' என்பார் பாவாணர்.
இறை எனும் சொல் நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவன் என்பதையும் குறிப்பது. இறையாண்மை என்ற சொல்லின் பயன்பாட்டையும் இவ்விடத்து நினைக்கலாம். நாட்டுத்தலைவன் தூங்கும்போதும் ஆட்சி நிலவும். இது அரசு அல்லது சமுதாயத்தின் அறம் என்று அறியப்படும். இதன் கருத்துருவாக இருப்பவன் ஆட்சித்தலைவன்.
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம் (புறநானூறு 186 பொருள்: வேந்தனாகிய உயிரையுடைத்து, பரந்த இடத்தையுடைய உலகம்; அதனால், இவ்வுலகத்தார்க்கு நெல்லும் உயிரன்று; நீரும் உயிரன்று. ) என்று சங்கப்புலவர் மன்னனது உரிமைகளை உயர்ந்தேத்திப் பாடினார்.
மக்களைப் படைத்துக் காப்பவன் இறைவன். மக்களுக்கு முறை செய்து காப்பாற்றும் மன்னனும் ‘இறையாகக் கருதப்படுவான்’ என்று இவ்வதிகாரத்துப் பாடல் ஒன்று கூறுகிறது. இறைவனைப் போல மக்களுக்கு நன்மையே செய்யும் அரசனும் இறைவனோடு ஒப்பிடத்தக்கவன் ஆகிறான். அவன் குணநலன் பற்றிக் கூறும் அதிகாரம் ‘இறை மாட்சி’ என்ற பெயர் பெற்றது.

இறைமாட்சி அதிகாரத்தில் நாடாள்பவனது நற்குணங்களும் ஆளுமைத்திறங்களும் விளக்கப்படுகின்றன.
இறைமாட்சி முதல் இடுக்கண் அழியாமை வரை 25 அதிகாரங்கள் 'அரசியல்' என்ற உட்பிரிவில் அடங்கும். இவற்றிற்குத் தொகையாக அமைவது இறைமாட்சி. 'இறைமாட்சியில், அரசனது இலக்கணமாக அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை, அறனிழுக்காமை, அல்லவை நீக்கல், இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல், காட்சிக்கு எளிமை, கடுஞ்சொல் அன்மை, ஈதல், செங்கோல், குடியோம்பல், முறைசெய்தல் முதலிய குணங்கள் விதக்கப் பெறுகின்றன' என்ற தண்டபாணி தேசிகர் இவை பின்வரும் அதிகாரங்களுக்கு வித்தாக அமைந்தன எனவும் கூறினார். அதாவது இக்குணங்களை:
அஞ்சாமை - இடுக்கண் அழியாமை
ஈகை - சுற்றந்தழால்
அறிவு - காலமறிதல், (இடனறிதல்), வலியறிதல், அறிவுடைமை
ஊக்கம் - ஊக்கம் உடைமை
தூங்காமை - மடியின்மை, ஆள்வினை உடைமை
கல்வி - கல்வி, கல்லாமை, கேள்வி
அறனிழுக்காமை - குற்றங்கடிதல்
அல்லவை நீக்கல் - சிற்றினஞ்சேராமை, பொச்சாவாமை
இயற்றல் - தெரிந்து தெளிதல், தெரிந்து விளையாடல், (தெரிந்து செயல்வகை)
காட்சிக்கு எளிமை, கடுஞ்சொல்லன் அன்மை - கண்ணோட்டம்
செங்கோல் - செங்கோன்மை, கொடுங்கோன்மை
குடியோம்பல் - வெருவந்த செய்யாமை
முறை செய்தல் - பெரியாரைத் துணைக்கோடல், ஒற்றாடல்
என்ற வகையில் முன்னும் பின்னுமாக அதிகாரங்கள் விளக்கும் என்றார்.

இறைமாட்சி அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 381ஆம் குறள் படை, குடி, உணவு, அமைச்சு, நட்பு, பாதுகாப்பு என்னும் ஆறு உறுப்புகளையும் உடையவன் ஆட்சியாளருள் சிறந்த நாட்டுத்தலைவன் ஆவான் என்கிறது.
  • 382ஆம் குறள் நாட்டுத்தலைவனுக்கு நெஞ்சத்திண்மை, இல்லார்க்கு இரங்கும் குணம், அறிவுடைமை, ஊக்கமுடைமை என்னும் இந்நான்கும் குறையாமல் அமைந்திருக்க வேண்டிய இயல்புகள் ஆகும் எனக் கூறுவது.
  • 383ஆம் குறள் விரைந்து செயல்படல், கல்வி, முடிவெடுக்கும் திறன் ஆகிய மூன்று குணங்களும் நாடாள்பவர்க்கு நீங்காமல் இருக்க வேண்டும் என்பதைச் சொல்வது.
  • 384ஆம் குறள் அறத்திலிருந்து வழுவாமல் அறமல்லாதன நிகழவொட்டாமல் காத்து மறன் இழுக்கா மானம் உடையதாக இருப்பது அரசு என்கிறது.
  • 385ஆம் குறள் பொருள் வளங்களை ஆக்குதலும், வருவாய் இலக்குகளை அடைதலும், தொகுத்த பொருளைப் பாதுகாத்தலும், அச்செல்வத்தை வகை செய்து வழங்குவதும் செய்ய வல்லது அரசு எனக் கூறுவது.
  • 386ஆம் குறள் குடிகளால் எளிதாகப் பார்க்கக்கூடியவனாகவும், கடிந்து பேசமாட்டாதவனாகவும் இருந்தால் ஆள்வோனது நாடு அவனை மிக உயரத்திச் சொல்லும் என்கிறது.
  • 387ஆம் குறள் இனிய சொல்லுடன் ஈதலைச் செய்து அளிக்கவல்லவனுக்கு, தன்சொற்படி இவ்வுலகம் அமைந்துள்ளதாகப்படும் எனச் சொல்கிறது.
  • 388ஆம் குறள் முறை தவறாமல் ஆட்சி நடத்தி குடிகளைக் காப்பாற்றும் நாட்டுத் தலைவன் மக்கட்குக் கடவுள் என்று கருதப்படுவான் என்கிறது.
  • 389ஆம் குறள் செவி வெறுக்கும்படியாகத் தன் ஆட்சி பற்றி யார் கசப்பான கொடுஞ்சொற்களை மொழிந்தாலும் அதனைப் பொறுமையாகக் கேட்கும் ஆட்சித்தலைவன் குடை நிழலின் கீழ் வாழ உலகம் விரும்பும் எனக் கூறுகிறது.
  • 390ஆவது குறள் நலிந்தோர்க்குக் கொடை, கருணை, முறைசெய்தல், குடிபேணுதல் என்னும் நான்கு மாட்சிகளையும் கொண்டவன் ஆட்சியாளர்கட்கு ஒளியாவான் என்கிறது.

 

இறைமாட்சி அதிகாரம் பற்றிய தொகுப்புரை:
நாடு, குடிமக்கள் (பகைவர், கள்வர், விலங்குகள், பஞ்சம், வெள்ளம் போன்ற தெய்வச் செயல்கள் முதலியனவற்றால் வருந்துன்பங்களிலிருந்து) பாதுகாப்புக்குத் தலைவன் தேவை. அவன் படை, அரண், அமைச்சன், நட்பு, நாடுகள் ஆகியவற்றைக் கொண்டவன். அரசை நிர்வகிக்கப் பொருள் தேவை. அதனை ஆக்கிக் கொள்ள வழிதேடவும், வருமானம் சேர்க்கவும், அதைக் காக்கவும், பின் அதை வகுத்து உரியர்க்குச் சேர்ப்பிக்கவும் வேண்டும். வீரம், கொடை, அறிவு, ஊக்கம், ஆகியவற்றை அவன் இயல்பாகப் பெற்றிருக்கவேண்டும். இதனுடன் விழிப்பாய் இருத்தல், கல்வி, உடனடி முடிவெடுத்தல் ஆகியவற்றைக் கற்றுத் தேறவேண்டும். அறம்நனி சிறந்து, அல்லவை கெட, வீரத்துக்கு இழுக்கு நேராவண்னம் மானம் காப்பவன் இவன். மக்கள் பார்வையில் இத்தலைவன் எவ்விதத் தோற்றம் கொள்ளவேண்டும்? குடிமக்கள் குறை தீர்ப்பதற்கும் முறை கேட்பதற்கும் காண்பதற்கு எளியவனாக கடுஞ்சொல் இல்லாதவனாக இருக்கவேண்டும். தன்னை அணுகுவோரிடம் இன்சொல்பேசி அவர்கள் தேவை அறிந்து கொடுத்துக் காக்கவேண்டும். செங்கோல் தவறமாட்டாதவன். இத்தகையவன் தலைவனாக உள்ள நாட்டில் மக்கள் விரும்பித் தங்குவர். இவன் ஆளும் நாட்டை உலக நாடுகள் உயர்வாகப் புகழும். இவன் மக்களால் இறைவனாகவே எண்ணப்படுவான். தளர்ச்சி அடைந்த மக்களுக்குக் கொடுத்து, அருள் செய்து, செங்கோல் ஆட்சியால் அவர்களைப் பேணிக் காப்பதில் தேர்ச்சி பெற்ற இவன் மற்ற வேந்தர்கள் இடையில் ஒளிமயமாய்த் திகழ்வான்.
இவை வள்ளுவர் காட்டும் நாட்டுத்தலைவனுக்கான இறைமாட்சிகள்.

இறைமாட்சி அதிகாரச் சிறப்பியல்புகள்:

பெருமைக்குரிய மன்னனாக, மக்கள் நலங்கருதும் தலைவனாக விளங்குவதற்கு அவன் எத்தன்மை கொண்டவனாக இருக்கவேண்டும் என்றும் அவன் செயல்திறங்கள் எவ்விதம் அமையவேண்டும் என்றும் இவ்வதிகாரம் ஆய்கிறது. நாட்டுத்தலைவனுக்கு உரிய மாட்சிகளாக, காட்சிக்கு எளியனாதல், கடுஞ்சொல்லன் அல்லனாதல், இன்சொலால் ஈத்தளிக்க வல்லனாதல், முறைசெய்து காத்தல், சொற்பொறுத்தல் ஆகியன சொல்லப்படுகின்றன.

வள்ளுவர் குடியாட்சியைப் பற்றி நேரடியாகக் கூறாவிட்டாலும் அவரது அடிப்படையான அரசாட்சி அணுகுமுறை, குடியாட்சிக்கும் குடியரசுக்கும் மிகப் பொருந்திப் போகிறது.

பிறமொழி சட்ட, நீதி நூல்களில் கூறப்பட்டுள்ளனபோல, ஆட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வேந்தன் பிறப்பாலோ வழிவழியாகவோ மரபு வழியிலோ அல்லது கடவுள்தன்மை பெற்றோ ஆட்சிக்குவர வேண்டும் என்ற எவ்வகை விதிமுறைகளையும் குறள் கூறவில்லை. அவர் மக்கள் ஆட்சியை மாண்புற நடத்துவதற்கான தகுதிகளையும், பண்புச் சிறப்புகளையும் ஆட்சித்தலைவனுக்குரிய இலக்கணமாக இறைமாட்சியில் கருத்தாடல் செய்கிறார்.
பழங்கால அரசியலில், அரசன் காணும் கடவுளாகக் காட்சியளிக்கின்றான்; நாடாளும் உரிமை பிறப்பால் உண்டாவது; அரசன் சொல்வது அறம்; அவன் சொல்வதே சட்டம்; அவன் கேட்கும் வரியைச் செலுத்தவேண்டும்; அவன் ஆட்சியிற் குறுக்கிட்டால், கொலைத்தண்டனை உண்டு. ஆனால் வள்ளுவர் அரசனைத் தெய்வத்தன்மையுடையவனாகக் கருதினார் அல்லர்; அரசன் தான் விரும்பியபடி ஆளலாம் என அவர் எண்ணவில்லை; அரசன் அறவழி, நீதியின் முறைப்படி ஆள்தற்குரியவன் என்றார். மக்கள் குழுவிலிருந்தே மன்னன் தோன்றினான். பிரம்மதேவன், இந்திரன், வாயு, இயமன், சூரியன், அக்கினி, வருணன், சந்திரன், குபேரன் ஆகிய இவர்களுடைய அழிவில்லாத கூறுகளைக் கொண்டு, அவன் படைக்கப்படவில்லை. முறைசெய்து குடிகளைக் காப்பாற்றுவதனால்தான் அவன் இறையென எண்ணப்படுகிறான் எனவும் வள்ளுவர் சொல்கிறார்.

கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி என்னும் 390ஆம் குறள் தனிச் சிறப்புடையது. இது நலப்பணித் திட்டங்கள் மூலம் நலிந்த குடிகளிடம் அக்கறை காட்டத் தேர்ச்சி பெற்றவனான ஆட்சித்தலைவன் நாட்டுத்தலைவர்களிடையே ஒளி மிகக் காணப்படுவான் எனச் சொல்கிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard