Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 041 கல்லாமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
041 கல்லாமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
கல்லாமை 
கல்லாதவனிடம் விலங்குத் தன்மை மீந்திருக்கும்.
குறள் திறன்-0401 குறள் திறன்-0402 குறள் திறன்-0403 குறள் திறன்-0404 குறள் திறன்-0405
குறள் திறன்-0406 குறள் திறன்-0407 குறள் திறன்-0408 குறள் திறன்-0409 குறள் திறன்-0410

openQuotes.jpgகல்லாமை என்ற இந்த அதிகாரத்தில் கல்வி கற்காமையால் விளையக்கூடிய தீமை எடுத்துக் கூறப் பெறுகிறது. கல்வி என்ற அதிகாரத்தில் கல்வியின் தேவையை உடன்பாட்டில் எடுத்துக்கூறிய திருவள்ளுவர் இந்த அதிகாரத்தில் கல்வி இன்மையால் வரும் தீமையை எதிர்மறை முகத்தால் கூறுகிறார். கல்வியின் அவசியத்தை இரு வகையாகவும் உணர்த்தியதாயிற்று,
- குன்றக்குடி அடிகளார்

 

கல்லாமை என்பது கல்வி கற்றலைச் செய்யாமையைக் குறித்தது. கல்லாதவன் கூட்டத்தில் பேசத் தகுதியற்றவன்; அவன் மற்றவருடன் உரையாட இயலாதவன்; கல்வியில்லாதவனுடைய வாழ்க்கை தாழ்வுநிலை பெற்றதாகும் எனக் கருத்தாடல் செய்கிறது இவ்வதிகாரம்.

கல்லாமை அதிகாரம் ஏன்?

முந்தைய அதிகாரத்தில் கல்வி என்ற தலைப்பில் கல்வியின் சிறப்பை முற்றும் கூற முடியாமையால் எதிர்மறைமுகத்தால் கல்லாமற்போனால் வரும் தீங்கு கூறிக் கல்வியின் சிறப்பு மேலும் வலியுறுத்தப்படுகிறது.

கல்லாமையின் விளைவுகளான வேலைஇன்மை, சுகாதாரக்கேடு, நோய், தாழ்ந்த வாழ்க்கைத்தரம் எப்படி சமுதாய வீழ்ச்சிக்குக் காரணங்கள் ஆகின்றன என்பது இன்று நமக்கு நன்றாகவே தெரியும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாயிருப்பதில் அந்நாட்டு மக்களின் கல்வியின்மை ஒரு முக்கியமான காரணம் என்பதை சமூக/பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுவர். வளர்ந்த நாடுகளில் கல்லாதார் விழுக்காடு மிகக்குறைவாகவே இருக்கிறது.

கல்லாமை தனிமனிதனை வெகுவாகப் பாதிக்கிறது. எழுதப்படிக்கத் தெரியாததால் சட்டமீறல்கள் நிகழ்கின்றன; குற்றங்கள் மிகுகின்றன; வாழ்க்கைத்தரம் தாழ்கிறது. கல்லாதார் அடிமைகளாகவும், கூலித்தொழில் புரிபவர்களாகவும், இழிவான தொழில் மேற்கொள்பவர்களாகவும் முடிவுறுகின்றனர்; மூடநம்பிக்கைகள் பெருகுகின்றன; அடுத்த தலைமுறையும் பாதிப்புக்குள்ளாகின்றது. இக்கூற்றுக்கள் யாவும் கல்லாமை அதிகார்த்துக் குறட்பாக்களின் கருத்துக்களோடு பொருந்துவனவே. கல்வியின்மை குறைந்தால் மனிதவளம் மேம்படும். தனி மனிதன் இழிவு நீங்கும். சமுதாயம் மகிழ்ச்சியாக இருக்கும். நாடு செழிக்கும்.

கல்லாமையின் தீங்குகளை அன்றே உணர்ந்த குறள் ஆசிரியர் அவற்றைக் களையும் நோக்கிலேயே அதற்கெனத் தனி அதிகாரம் படைத்தார்.

 

 

கல்லாமை அதிகாரம் கூறுவது:

நூலறிவில்லாதவன் கூட்டத்தில் பேசினால் கேட்போர்க்கு ஒன்றும் விளங்காது; அவன் சொல் சுவையற்றது; கற்றோர்முன் வாய்திறவாமல் இருப்பது அவனுக்கு நல்லது; முறைப்படி கல்வியறிவு பெறாதவனுக்கு எப்பொழுதாவது அறிவான சிந்தனை தோன்றினாலும் கற்ற பெரியவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளார்; கற்றவர்களிடம் உரையாடினாலோ கல்லாதவனின் தன்மதிப்பு கீழிறங்கும்; படிக்காதவன் பெயருக்குத்தான் நடமாடுகிறான்; அவன அழகனாக இருந்தாலும் அறிவின்மையால் கண்கவர் மண்பொம்மை போன்றவனே; அவன் பெற்ற செல்வம் பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியது; கல்லாமையால் குடிப்பிறப்புப் பெருமை குன்றுவான்; விலங்குத்தன்மை நீங்கப்பெறாதவன் அவன்.
இவ்வாறாக முறையாகக் கல்லாதவனை இவ்வதிகாரம் இழித்துப் பேசுகிறது.

குறள் வரிசைப்படி:

  • 401 ஆம்குறள் நூலறிவுப் பின்புலம் இல்லாதவன் பேச்சு கட்டமில்லாமல் தாயம் விளையாடுவதைப்போல விளங்காமல் குழப்பமாக ஆகும் என்கிறது.
  • 402 ஆம்குறள் கல்லாதவன் சொல்லைக் கேட்க விரும்புவது முலைகள் இல்லாப் பெண்ணைக் காதலித்தல் போல ஆகும் என்று கூறுகிறது.
  • 403 ஆம்குறள் கற்றவர் முன் எதுவும் பேசாதிருந்தால் கற்காதவர்கள் கூட நல்லவர்களே ஆவர் என்று எள்ளுவது.
  • 404 ஆம்குறள் படிக்காதவனிடம் ஓரோவழி தோன்றும் அறிவைக் கற்றோர் ஏற்பதில்லை எனத் தெரிவிக்கிறது.
  • 405 ஆம்குறள் கற்றவர்களிடம் உரையாடும்பொழுது கல்லாதவன் தன்மதிப்பு மறைந்து போகும் என்று கூறுவது.
  • 406 ஆம்குறள் கல்லாதவர்கள் விளைச்சல் பயன்களைத் தர இயலாத களர் நிலம் போல உயிருடன் நடமாடும் பிணங்களே என்று தூற்றுவது.
  • 407 ஆம்குறள் தெளிந்த அறிவற்றோர் தோற்றப் பொலிவுடையராக இருந்தாலும் வண்ணம் பூசப்பட்ட மண் பொம்மைக்குத்தான சமம் என உரைப்பது.
  • 408 ஆம்குறள் நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட கல்வி பெறாதவனின் செல்வம் கேடு விளைவிக்கும் என அறைகிறது.
  • 409 ஆம்குறள் கற்றலே ஒருவனது மேன்மை-கீழ்மையை தீர்மானம் செய்வது என்று அறிவிப்பது.
  • 410 ஆம்குறள் ஒருவன் அறிவு நூல் எவ்வளவு கற்றானோ அவ்வளவு விலங்குத் தன்மை நீங்கப்பெறுவான் என்று பகர்வது.

 

கல்லார் அத்துணை இழிவிற்குரியவரா?

வள்ளுவர், பொதுவாக, ஒரு செய்தியை எவ்வளவு வற்புறுத்திக் கூறினும், அதை எதிர்கொள்பவர்கள் மனம் புண்படும்படியான சொற்களால் கூற மாட்டார். ஆனால் இவ்வதிகாரத்தில், கல்லாதவர்களை களர் நிலம், வண்ணப் பொம்மை, விலங்கு என்று மிகக் கடுமையாகச் சாடி அவர்களை உலகோர் மதிக்கமாட்டார் என்று கூறக் காரணம் என்ன?
மாந்தர்க்கு கல்வியறிவு மிகத்தேவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். வள்ளுவர் கலவி இல்லாத சமுதாயம் பெருங்கேட்டினை அடையும் என்றும், அது நிலைபேறு இல்லாததாக இருக்கும் என்றும் உணர்ந்ததால் கல்விக்கு அளப்பரிய முக்கியத்துவத்தை அளித்து கல்லாமையை மிகப் பெரிதும் கடிந்துரைத்தார்.
கல்வி மனிதனை நல்வழிப்படுத்தும் உயரிய கருவி. கற்றல் என்பது மனிதனுள் இருக்கும் விலங்கியல் இயல்பூக்கத்தை மாற்றி மனிதனை மனிதனாகச் மாற்றச் செய்வது ஆகும். கல்வியே ஒருவனை மனிதனாக்குகின்றது என்று வள்ளுவர் திடமாக நம்பியதால் அதை விலங்குக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள வேறுபாடாகக் கருதினார்.
இதனாலேயே மக்கள அனைவரும் கல்வி கற்றுத்தான் ஆக வேண்டும் என்று அவர் மன்றாடுகிறார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard