Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 076 பொருள்செயல்வகை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
076 பொருள்செயல்வகை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
பொருள்செயல்வகை 
செய்க பொருளை.
குறள் திறன்-0751 குறள் திறன்-0752 குறள் திறன்-0753 குறள் திறன்-0754 குறள் திறன்-0755
குறள் திறன்-0756 குறள் திறன்-0757 குறள் திறன்-0758 குறள் திறன்-0759 குறள் திறன்-0760

openQuotes.jpgஅறமும் இன்பமுமாகிய வாழ்க்கைப் பகுதிகளுக்குப் பொருள் கட்டாயம் வேண்டும் என்று தெளிவிக்கின்றார். பொருள் பெற்றவர்களுக்கே அறவாழ்க்கையும் எளிது, காதலாகிய இன்ப வாழ்க்கையும் எளிது என்கின்றார்.
- மு வரதராசன்

 

பொருள் செயல்வகை என்பது செல்வம் சேர்த்தலின் திறம் எனப் பொருள்படும். பொருள் தேடுதலின் வகை, அதன் சிறப்பு அதன் பயன் கொள்ளும் முறை ஆகியன கூறப்படுகின்றன. இத்தொகுதியிலுள்ள பாடற் கருத்துக்கள் தனிமனிதர்க்கும் அரசுக்கும் பொருந்துவனவாக உள்ளன. அறநெறியில் செல்வம் ஈட்டப்பட வேண்டும் என்பது வலியுயுறுத்தப் பெறுகிறது.
இவ்வதிகாரம் 'செய்க பொருளை' எனப் பணிக்கிறது. பொருள் மதிப்பு உண்டாக்குவது; சிறப்புச் செய்ய வைப்பது; பகையை வெல்லச் செய்வது; பகைவரின் செருக்கை அறுக்கவல்லது; அரசு, தன் குடிமக்கள் விரும்பிக் கொடுக்காத செல்வத்தையும் ஏற்காது கழித்து விட வேண்டும், நாட்டில் அருளாட்சி பொருளாலேயே உண்டு- இவை அதிகாரத்துள் காணப்படும் செய்திகள்; பொருள் மிகுதியாகத் தொகுப்பவர்க்கு அறவாழ்க்கையும் இன்பநிறைந்த வாழ்வும் எளிது எனவும் சொல்லப்படுகிறது.

பொருள்செயல்வகை

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண்.... (381) என்ற குறளில் சொல்லப்பட்ட நாட்டின் ஆறு அங்கங்களில் ஒன்றான கூழ் என்பது பொருளையே குறிக்கும். 'பொருள் செயல்வகை அதிகாரம், கூழ் என்பதனையே, அரசியலுக்கு ஏற்ப விளக்குகிறது. 'கூழியல்' என்பது 'பொருள் செயல்வகை' என்ற ஒரு அதிகாரத்தானே அமைந்தது.

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் மனிதன் அடைய வேண்டிய உறுதிப் பொருள்கள். இவற்றுள் பொருட்செல்வம் உடையரானால் மென்மேலும் செல்வராதற்கு அது உதவுவதுடன் ஏனைய அறத்தை அடைதற்கும் இன்பத்தை நுகர்தற்கும் அதுவே துணை செய்யும். அப்பொருளும் தீதின்றி வரவேண்டும். அறம் செய்து இன்ப வாழ்வு எய்தற்குப் பொருள் தேடும் திறனறிந்து தொகுக்கவேண்டும். இவை இங்கு உரைக்கப்படும் கருத்துக்கள்.

பொருள் என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு. இவ்வதிகாரத்தில் அது செல்வம் என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது. ஒரு நாட்டினதும் அதன் மக்களதும் அனைத்து செயல்களும் பொருளின்றி இயங்குவதில்லை. நாட்டின் பாதுகாப்பை ஆக்குவதும் காப்பதும் பொருள் தான். பல வேளைகளில் படைவலியைவிட பொருள்வலி நாட்டிற்கு ஆற்றல் தரும். இன்று ஒரு வல்லரசு எனக் கருதப்படுவதற்கு அதன் பொருளாதார மேன்மையே பெரிதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பாதாள மட்டும் பாயும் என்பது பழமொழி. இது படை வலிமையோடு பொருள் வலிமையை ஒப்பிட்டுப் படை வலிமை கூடப் பொருள் வலிமையிடம் தோற்றுப் போகும் என்று குறிப்பாக உணர்த்துவது. பொருள் மிக்க நாட்டில் வாழவே மக்கள் விரும்புவர் என்று பெரும்பொருளால் பெட்டக்க தாகி.... (நாடு 732) அதாவது 'பெரும்பொருளாலே விரும்பத்தக்கதாகிறது நாடு' என முன் அதிகாரத்தில் கூறப்பட்டது பொருளின் சிறப்பை நன்கு எடுத்துக்காட்டிற்று. அப்படிப்பட்ட நாட்டை உருவாக்கும் பொருள்பற்றி இங்கு பேசப்படுகிறது.

பலநிலைகளில் பொருட்செல்வம் பிற செல்வங்களிலிருந்து கீழ்ப்பட்டது என்பதைப் பலவேறு அதிகாரங்களில் பலவேறு பாடல்களில் ஆங்காங்கே சொல்லிச் சென்றுள்ளவர்தாம் வள்ளுவர். ஆனால் எங்கும் பொருளீட்டம் குற்றம் என்று வள்ளுவர் கூறவில்லை. நிலையாமை செல்வத்தியல்பு என்பது அவர் அறிந்ததுதான். அதற்காக அதனைச் சேர்ப்பதை நிறுத்தச் சொல்லவில்லை. உண்மையில், செல்வத்தைக் 'காழ்ப்ப' அதாவது மிகுதியாக இயற்றவே அறிவுரை பகர்ந்துள்ளார், 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்ற தெளிவு உள்ளவர் அவர் ஆதலால். ஆயினும் பொருள் சேர்க்கவேண்டும் என்பதற்காக அதை எவ்வழியினும் தேடலாம் என்று அவர் கூறவில்லை, நேர்மையான வழியிலும், பிறர்க்குத் தீங்கு விளைவிக்காத வகையிலும் சேர்க்க வேண்டும் என்றே சொல்லியுள்ளார். பிறர்க்குத் தீங்கிழைத்தலாகிய கொலை, திருட்டு, வஞ்சகம், கையூட்டு போன்ற செயல்களில் ஈடுபடாமல் முறையாகச் சேர்க்கப்பட்ட செல்வமே ஒருவற்கு அறத்தையும் அளித்து, இன்பத்தையும் வழங்கும் என்பதே அவரது கூற்று. இழிந்த வழிகளில் சேர்ந்த செல்வமாயிருந்தால் என்ன? அச்செல்வமும் பயன்படத்தான் செய்யும்; அதையும் மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளலாமே என்பது மாந்தரின் இயல்பு. ஆனால் வள்ளுவரோ அறநெறியில் சேர்ந்த செல்வமே பொருட் செல்வம் எனப்படும்; பொருள் ஈட்டவும் வேண்டும்; நெறி நேர்மையும் வேண்டும் என இணைத்துக் கூறுபவர். அருளோடும் அன்போடும் வாராப் பொருளைப் புரளவிடல் அதாவது தள்ளிவிடுக என்று அறிவுறுத்துகிறார்.

பொருள்செயல்வகை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 751ஆம் குறள் ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் மதிப்பு உடையராகச் செய்யவல்ல செல்வத்தைத் தவிர வேறு பொருள் இல்லை என்கிறது.
  • 752ஆம் குறள் செல்வம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர்; செல்வம் உடையவரை எல்லாரும் மதித்து நடப்பர் எனக் கூறுகிறது.
  • 753ஆம் குறள் செல்வம் என்னும் அணையாத விளக்கு நினைத்த தேயத்திற்குச் சென்று பகை என்னும் இருளை ஓட்டும் எனச் சொல்கிறது.
  • 754ஆம் குறள் செய்திறன் அறிந்து, குற்றமின்றி, வந்த பொருளானது அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும் என்கிறது.
  • 755ஆம் குறள் அருளும் அன்பும் இல்லாதவழியில் வந்த பொருட்செல்வத்தை ஏற்காது விலக்கி விடுக எனச் சொல்கிறது.
  • 756ஆம் குறள் வரிப்பொருளும் சுங்கப்பொருளும் பகைவரின் திறைப்பொருளும் அரசுக்கு வருவாய்ப் பொருள் என்கிறது.
  • 757ஆம் குறள் அன்பு பெற்றெடுக்கும் அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் செல்வமாகிய செவிலித் தாயால் வளரும் எனச் சொல்கிறது.
  • 758ஆம் குறள் தன் கையில் பொருள்வைத்து ஒருவன் செய்யும் செயல், குன்றின்மேல் ஏறியிருந்து யானைப்போரைக் கண்டது போலும் என்கிறது.
  • 759ஆம் குறள் பொருளை உண்டாக்குக; பகைவருடைய இறுமாப்பைப் போக்கும் அது போலக் கூர்மையுடைய கருவி வேறொன்றும் இல்லை எனக் கூறுகிறது.
  • 760ஆவது குறள் முறையாகப் பொருளினை முற்ற ஈட்டியவர்க்கு மற்றைய அறம், இன்பம் என்னும் இரண்டும் ஒருங்கே எளிய பொருள்களாம் என்கிறது.

 

பொருள்செயல்வகை அதிகாரச் சிறப்பியல்புகள்

பொருட்செல்வத்தின் இன்றியமையாமையை மறுபடி மறுபடி வலியுறுத்துவது போன்ற மொழிநடையில் அமைந்த பாடலான
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள் (751) என்பது யாருமே பொருட்படுத்தாதவரையும் பொருள் உள்ளவராகச் செய்யும் அவரிடம் பொருள் சேர்ந்துவிட்டால் என்கிறது.

அறனீனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதின்றி வந்த பொருள் (754) என்ற செய்யுள் நேர்மையான உழைப்பின் மூலமும் எந்தவித தீச்செயல் ஆற்றாமலும் கிடைத்த பொருள் மற்றைய இரு உறுதிப் பொருள்களான அறமும் இன்பமும் பயக்கும் என்கிறது.

அருளானது செல்வச் செழிப்பு இருந்தால்தான் சிறப்பாக வளரும் என்ற சிறந்த கருத்தை உணர்த்துவது அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால், உண்டு (757) என்னும் குறட்பா.

பிற அறநூல்கள் எல்லாம் பொருட்செல்வம் தீயது என்று வற்புறுத்த வள்ளுவர் 'பணம் சேர்க்க' என்று உரக்கச் சொல்கிறார். அதை செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும் எஃகுஅதனின் கூரியது இல் (759) என்ற குறள் கூறுகிறது.

செல்வத்தைச் சேர்க்க என்று மட்டும் அல்லாமல் நிறையப் பணம் திரட்டிக் குவித்து அறத்தையும் இன்பத்தையும் எளிதாகப் பெறுங்கள் எனப் புதுமையாக ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு (760) என்ற பாடல்வழி அறிவுரை தருகிறார் வள்ளுவர்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard