Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 078 படைச்செருக்கு அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7387
Date:
078 படைச்செருக்கு அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
படைச்செருக்கு 
பேராண்மை என்பது வீரம். ஊராண்மை வீரத்தின் சிகரம்.
குறள் திறன்-0771 குறள் திறன்-0772 குறள் திறன்-0773 குறள் திறன்-0774 குறள் திறன்-0775
குறள் திறன்-0776 குறள் திறன்-0777 குறள் திறன்-0778 குறள் திறன்-0779 குறள் திறன்-0780

openQuotes.jpg'செருக்கு' என்பது தன்தன்மையை மிகுத்து எண்ணிக் கொள்வதால் விளையும் தீயகுணம். இதனைப் பெருமை, களிப்பு முதலிய நற்குணம் என்று இலக்கிய உலகு எடுத்தாளுகிறது. செருக்கால் விளையும் பயன் கருதியே அது நன்மையும் தீமையுமாகத் தனிக்கப் பெறுகின்றன. ஈண்டு ஆசிரியர் படைகட்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணம் என்ற பொருளிலேயே ஆளுகின்றார். படைவீரர் செய்ய வேண்டியது செரு. அது செருக்காற்றானே விளையும். ஆதலால் செருவிற்கு இன்றியமையாத செருக்கினைக் கூறுவது செருக்கு என்க.
- ச தண்டபாணி தேசிகர்

 

போர்க்களத்தில் படையின் வீரச் சிறப்பு கூறும் பாடல்களின் தொகுப்பு இது. மறம் மிக்க வீரர்களாலேயே நாட்டின் பகைவர்களை வெல்ல இயலும். வீரர்களின் பெருமிதமான தோற்றங்கள் சில சொல்லோவியங்களாகத் தரப்பட்டுள்ளன. ஊறு அஞ்சாமை, விழுப்புண் ஏற்றல், தன்னுயிர் நீப்பதைப் பொருட்படுத்தாமை, தன்னால் காக்கப்பட்டவர்கள் கண்ணீர் சொரிய எய்தும் சாவு இவற்றை வீரச்சுவை ததும்பும் பாடல்களாகத் தந்துள்ளார் வள்ளுவர்.

படைச்செருக்கு

படைச்செருக்காவது படையினது வன்மை கூறுதல். படை பொரு செருக்கு அதாவது படையானது சண்டையிடுகின்ற பெருமிதத்தைச் சொல்வது. இது படையின் தன்மை, வீரனின் திறம், வீரனின் சிறப்பு என்றாகும். தன் நாட்டையும் அதன் மக்களையும் காப்பது வீரர்களின் கடமை. போர் என்று வரும்போது வாழ்வா சாவா என்ற நிலை, வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்ற தேவை - இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஒரு படைக்கும் அதன் உறுப்பினருக்கும் இருக்க வேண்டிய பண்பு 'செருக்கு'. தம்மைப்பற்றியும், தம் படை / தலைமை இவற்றைப்பற்றியும் செருக்கு இல்லாவிடில் வெற்றி கிட்டுவது கடினம்.

வீரர் அல்லாதாரை வெல்வதைவிட படைத்தலைவன் போன்ற பலம் பொருந்திய வீரனை எதிர்த்து வெல்வதுவே பெருமை என அறிவுறுத்தப்படுகிறது. உண்மையான வீரன் தன் கையிலுள்ள வேலை ஒரு யானையின் மீது எறிந்து இழந்தபின் தன் மீது பாய்ந்த பகைவரின் வேலைப் பறித்து குருதி கொட்டும் நிலையிலும் தனக்கு ஒரு கருவி கிடைத்துவிட்டதே என மகிழ்வான்; தான் விழித்துச் சினத்துடன் நோக்கிய கண்ணை, பாய்ந்து வரும் வேலைப் பார்த்து இமைத்தால், அது புறங்காட்டி ஓடுவதற்குச் சமம் என்பதால் கண்ணைச் சிமிட்டாமல் இருப்பான்; போரில் காயம் படாத நாட்கள் எல்லாம் தன் வாழ்நாட்களில் வீணான நாட்கள் என்று அவன் நினைப்பான்; தன் உயிரைத் துச்சமாக மதிப்பான்.

ஒரு சிறந்த படைக்கு வீரத்துடன் ஈரமும் இருக்கவேண்டும் என்கிறது இவ்வதிகாரப் பாடல் ஒன்று. பகைவரை அஞ்சாமல் தாக்கி அடக்கும் ஆற்றலைப் பேராண்மை என்று சொன்னால், அதே பகைவர்க்கு ஒரு இடர் நேர்ந்தபோது கண்ணோடி, உதவி செய்வதே அந்த ஆண்மைக்குச் சிறப்புச் செய்வதாகும் எனச் சொல்லப்படுகிறது. அந்த உதவும் தன்மையை ஊராண்மை என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் வள்ளுவர். ஊராண்மை என்பது பலம் குறைந்தவர்களுக்கு எதிராக கருவிகள் செல்லாதபடி மறுப்பது அல்லது அவர்களைத் தாக்கி நசுக்காமல் இருப்பது; புண்பட்ட வீரனை நலிதல் பண்பாடன்று என்பதால். பகைவரைக் கொன்று அழிப்பது போரின் நோக்கமன்று; அவர்களுடைய தீமையை அடக்கி ஒழிக்கும் நோக்கம் இருந்தால் போதும். முதல் நாட் போரில் தோற்றுத் தனி நின்ற இராவணனை 'இன்று போய் நாளை வா' என விட்ட இராமனின் பெருந்தகைமையை இதற்கெடுத்துக்காட்டாகக் கூறுவர். ஊராண்மை என்னும் சொல் நாகரிகம் என்பது போலவே கண்ணோடல், ஒப்புரவறிதல் போன்றதோர் சால்பினைச் சுட்டி ஊர்த் தொடர்பால் உளதாம் ஒரு பண்பினையே குறிப்பதென்பது எளிதில் விளங்கும் (சோமசுந்தர பாரதியார்).

நாடுகாக்கும் போரில் இறப்பினை அஞ்சாது எதிரேற்றல்தான் வீரம். போரில் இறத்தல் புகழ் தரும். சூளுரைத்துக் களம் புகும் படைவீரன் தன் நாட்டுக்காக உயிர் விடுவதில் பெருமை கொள்வதிலும் வீரத் தன்மை தெரியும்; தன்னுயிரை ஈந்து தன் சூளை நிறைவேற்றுவான் போர்வீரன். அது அவனால் உயிர் கொடுத்துக் காப்பாற்றப்பட்டவர்களின் கண்களில் நீர் மல்கச் செய்யும். அத்தகைய இறப்பு வேண்டியும் பெறும் தகுதியுடையது எனச் சொல்லப்படுகிறது.

படைச்செருக்கு அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 771ஆம் குறள் என்னுடைய ஐயன் முன்னர் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னை எனின் முன் நின்று போர் செய்து மாய்ந்து நடுகல் ஆயினார் பலர் என்கிறது.
  • 772ஆம் குறள் காட்டில் முயலைக் குறிதவறாமல் எய்தஅம்பைக் காட்டிலும் யானையை எறிந்து தவறிய வேலை ஏந்துதல் பெருமையுடைத்து எனக் கூறுகிறது.
  • 773ஆம் குறள் பகைவர்மேல் கண்ணோடாது போர்புரிதலைப் பெரிய வீரம் என்று சொல்லுவர்; அவர்க்குத் துன்பம்வரின் உதவுதல் அவ்வீரத்தின் கூர்மையான தன்மையாகும் எனச் சொல்கிறது.
  • 774ஆம் குறள் தன் கையிலிருந்த வேலினை தான்பொருதிய யானையின் மேல் எறிந்து மீள்கின்ற வீரன் தன் உடம்பில் தைத்து நின்ற வேலைப் பிடுங்கி அது கிடைத்ததற்காக மகிழ்வான் என்கிறது.
  • 775ஆம் குறள் விரிவாகத் திறந்த கண்ணால் வெகுண்டு நோக்கிய வீரன் பகைவர் வேலைக் கொண்டு வீசுவது கண்டு இமைத்தால் அது வீரனுக்குப் புறங்கொடுத்து ஓடுதலாகுமே எனச் சொல்கிறது.
  • 776ஆம் குறள் தான் வாழ்ந்த நாள்களுள் விழுமிய புண்படாத நாளெல்லாவற்றையும் பயன்படாத நாளுள்ளே எண்ணி வைக்கும் என்கிறது.
  • 777ஆம் குறள் உலகை வலம்வரும் புகழை விரும்பி, உயிரைப் பொருட்டாக எண்ணாத வீரர் கழல் கட்டுதல் பேரழகு செய்யும் தன்மையதாம் எனச் சொல்கிறது.
  • 778ஆம் குறள் காயப்பட்டவிடத்து, தலைவன் போருக்குச் செல்ல வேண்டாமென்று சினந்து கூறினாலும், தம் உயிர்க்கு அஞ்சாத வீரர் தம் மனவூக்கத்தில் குறையார் என்கிறது.
  • 779ஆம் குறள் தாம் கூறிய வஞ்சினம் (சபதம்) தவறாமல் உயிர் துறந்தவரை தவறினார் என்று இகழ்வோர் யார் இருக்கிறார்? எனக் கேட்கிறது.
  • 780ஆவது குறள் காத்தவர் கண்ணீர் பெருக்கும்படி சாகப் பெற்றால் அச் சாவு வேண்டியாயினும் பெறும் சிறப்பினது என்கிறது.

 

படைச்செருக்கு அதிகாரச் சிறப்பியல்புகள்

போர் தொடங்குமுன், ஒரு வீரன், பகைவருடைய படையை நெருங்கித் தன் தலைவனுடைய வீரத்தை உயர்த்திச் சொல்லுவதை என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை முன்நின்று கல்நின் றவர் என்ற பாடல் கூறுகின்றது. நாடக மொழியில் யாக்கப் பெற்ற இது வள்ளுவரின் கலையுள்ளத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது (772) என்ற குறள் பயந்தோடும் முயலைச் சரியாகக் குறிபார்த்து எறிந்து கொல்வதைக்காட்டிலும் பலம் பொருந்திய யானையைக் குறிவைத்த வேல் தப்பிப் போனாலும் அதுவே இனியது என்கிறது. உயர்ந்த குறிக்கோளை முன் வைத்துப் பயில்பவன், தோற்றாலும் பெருமைக்குரியவனே என்கிறது இது.

பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு(773) என்ற பாடல் போரில் வீரம் காட்டுவது பேராண்மை என்றால் ஊராண்மை அதனினும் வலியது என்கிறது. ஊராண்மை என்பது போரில் ஊறுற்ற பகைவரைக் கண்ணோடி உதவுவது. பகைவர்க்கு ஏன் உதவ வேண்டும்? அது சால்பு போன்ற ஒரு சிறந்த பண்பு என்பதால் உதவவேண்டும் என்கிறார் வள்ளுவர்.

தன் கையிலிருந்த வேலொன்றை வீசி களிறு ஒன்றை வீழ்த்திய வெற்றிக் களிப்பில் வீரநடை போடுகிறான் அவ்வீரன். அப்பொழுது இன்னொரு வேழம் அவனுடன் பொருத வருகிறது. வெறுங்கையுடன் எப்படிப் போரிடுவது? அந்த நேரத்தில் பகைவர்புலத்திருந்து ஒரு வேல் தன் மீது பாய்கிறது. தனக்கு ஒரு கருவி கிடைத்துவிட்டது என்ற மகிழ்வுடன் அதைப் பிடுங்கி யானையுடன் போரிட ஆயத்தமாகிறான். குருதி பீறிடப் போர்க்களத்தில் வீரன் நகும் காட்சி நமக்குத் திகைப்பூட்டுகிறது. இதைக் கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் (774) என்ற பாடல் காட்டுகிறது.

போர்க்களத்தில் தீரச்செயல்கள் பலபுரிந்து தன் நாட்டின் வெற்றிக்கு வழி வகுக்கிறான் ஒரு பெருவீரன். அந்தோ! அவன் அக்களத்திலேயே இறக்க நேரிடுகிறது. இதைக் கேள்விப்படும் நாட்டு மக்கள் கண்ணீர் சிந்துகின்றனர். தலைவன் நேரில் வந்து அம்மாவீரனுக்குப் புகழாஞ்சலி செய்து கண்ணீர் மல்குகிறான். இத்தகைய சிறப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட சாவை இரந்தாகிலும் பெறலாம் என்கிறார் வள்ளுவர். அதைச் சொல்வது புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து (780) என்னும் குறட்பா.



-- Edited by admin on Saturday 18th of April 2020 02:23:15 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard