Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 084 பேதைமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
084 பேதைமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
பேதைமை 
தாம் எண்ணியதையே மெய்யாகக் கொண்டு மயங்கல்.
குறள் திறன்-0831 குறள் திறன்-0832 குறள் திறன்-0833 குறள் திறன்-0834 குறள் திறன்-0835
குறள் திறன்-0836 குறள் திறன்-0837 குறள் திறன்-0838 குறள் திறன்-0839 குறள் திறன்-0840

openQuotes.jpgஇலக்கிய உலகில் பேதைமை என்ற சொல் 'அறியாமை', 'மயக்கம்', 'வருத்தம்' முதலான பல பொருள்களில் வருமாயினும் இந்த அதிகாரத்துப் பொருள் நோக்கம் வேறாயிருத்தலைக் காணலாம். 'பேதைமை' என்பது மாதர்க்கணிகலம்' எனின் அறியாமையாகி வேண்டாக்குணமாகாது. 'அணிகலம்' என்ற ஔவையார் கூற்றுப்படி வேண்டிய காலத்துக் கொண்டும் வேண்டாக்காலத்து நீக்கியும் ஆளவேண்டிய குணமாகிறது. வள்ளுவரும் 'கையறியாமையே பேதைமை' என்பர். 'பேதைப்படுக்கும் இழவூழ்' என்பர். இவற்றால் அறிவிருந்தும் பயன்படாத தன்மையையே காட்டுவதாகும்.
- ச தண்டபாணி தேசிகர்

 

இவ்வதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள பேதைமைக்கு ஒன்றுமறியாத முட்டாள்தனம் எனப் பொருள் கொள்ளமுடியாது. செய்வன தவிர்வனவற்றுள் ஒன்றும் அறியாமை பேதைமை. என்ன கற்றிருந்தாலும் இதைச் செய்தால் இது நடக்கும் என்பதை அறியாதவன் அல்லது அதை ஒத்துக்கொள்ளாதவன் பேதையாவான். அவன் செய்வனவெல்லாம் குற்றமாகிறது. பேதை பொதுவிலிருந்து விலகிய நடத்தையுடையவன், தனிப்போக்குக் கொண்டவன்.

பேதைமை

பேதைமை என்ற சொல் பல பொருளில் இலக்கியங்களில் பயிலப்பட்டுள்ளது. குழந்தையின் பேதைமை வேறு; அது களங்கம் அற்றது. ஆடிப் பாடி மகிழும் பெண்களின் மிக இளமைப்பருவம் பேதைப்பருவம் எனப்படும். பெண்களைப் பொதுவாகப் பேதையர் என்று கூறுவதும் நாம் அறிந்த வழக்குத்தான். பேதையர் என்றதால் பெண்கள் அறிவற்றவர்களா? பெண்கள் இளகிய மனமுடையவர்கள். உணர்ச்சியிற் சிறந்தவர். இந்த மனநிலையைத்தான் பேதைமை என்றழைத்தனர் என்பார் தெ பொ மீனாட்சிசுந்தரம். மேலும் அவர் 'பேதமையானது பெருமை தருவதென்பதும் உண்மையே ஆம். இல்லாவிட்டால் அதனைப் புகழ்ந்து, 'பேதமை என்பது மாதர்க் கணிகலம்' என நமது அவ்வை கூறுவாளோ?' எனவும் கூறினார்.

பேதையின் தன்மை பேதைமை. அறிவுடைமைக்கு எதிர்ச்சொல்லாகப் பேதைமை என்ற சொல் இவ்வதிகாரத்தில் ஆளப்படவில்லை. அது இங்கு முற்றும் அறியாமையைக் குறிப்பதாகாது. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் (834) என்ற பாடலில் ஓதி உணர்ந்தவர்களிலும் பிறர்க்கு எடுத்துக் கூறுமளவு அறிவு பெற்றவர்களிலும் பேதையார் உண்டு என உணர்த்தப்படுவதால் எந்த விதமான அறிவும் இல்லாத ஒரு மூடனைத் திருவள்ளுவர் பேதை என்ற சொல்லால் சுட்டினார் என்று கருத இயலவில்லை. வள்ளுவர் முழு மூடத்தனத்தைப் பேதைமை எனச் சொல்லவில்லையென்றால் அச்சொல்லால் அவர் பேதைமை என்ற சொல்லால் எதைக் குறிக்கிறார்?
பேதைமை என்பதற்கு இளம்பூரணர் என்ற தொல்காப்பிய உரையாசிரியர் கேட்டதனை உய்த்துணராது 'மெய்யாகக்கோடல்‘ என விளக்கம் தருவார்.
இவ்வதிகாரத்தில் சொல்லப்பட்ட பேதைமை என்பது 'நல்லது-கெட்டது ஊதியம் பயப்பது என்பவற்றை உய்த்துணரமாட்டாத மயக்க உணர்வேயாகும்' என்பார் தண்டபாணி தேசிகர். மேலும் 'அறியாமை' என்பதே ஆசிரியர் கருத்தாயின் அதிகார அடைவு செய்தே கல்வி, கல்லாமைகளைப் போல 'அறிவுடைமை'யை யடுத்தே அறியாமையையும் அமைத்திருப்பர். இதுவே அறியாமை வேறு பேதைமை வேறு என்பதை உணர்த்தும்' எனவும் கருத்து உரைப்பார்.
பொற்கோ 'இன்னதைச் செய்தால் இன்னது விளையும் என்றும் இன்னதைச் செய்ததால் இன்னது விளைந்தது என்றும் அறிந்து கொள்ளும் அறிவு காரண காரிய அறிவு. இவ்வறிவு இல்லாத ஒருவனிடம் அன்புணர்வோ அருளுணர்வோ தொலைநோக்கோ இருக்குமென்று எதிர்பார்க்க முடியாது. அவனிடம் விடாமுயற்சியும் வினைத்திறனும் அமைவதில்லை; அவனோடு கூடிவாழ்வதோ கூட்டுப்பணியில் ஈடுபடுவதோ நட்பு பாராட்டுவதோ இயலாத காரியம். காரணகாரிய அறிவு இல்லாத மனிதனைத்தான் வள்ளுவப் பெருந்தகை பேதை என்று கூறுகிறார். விரிந்த மனமும் காரணகாரிய அறிவும் இல்லாத ஒருவன் பெருமைக்குரியவனாக வாழ இயலாது; அவன் ஏனைய அறிவெல்லாம் பெற்றிருந்தாலும் பேதையே. அவன் நட்புக்கும் சமுதாய வாழ்வுக்கும் பொருத்தமில்லாதவன்' என்று பேதைமையை விளக்குவார்.
பேதையானவன் தன் கேட்டிற்குக் காரணம் யாதெனத் தானே அறியமாட்டாதவன். அறிவுறுத்தினாலும் உணரமாட்டான். பேதைக்குரைத்தாலும் தோன்றாது உணர்வு என்பது பழமொழி.

தனக்கும் தன் பொருளுக்கும் கேடுவரும் நெறியில் செல்தல் பேதைமை. அதாவது நன்மை தருவது எது? தீமை தருவது எது? என்று அறியாமல் தனக்குத் நன்மையை விட்டுவிட்டுத் தீயதைத் தெரிந்துகொள்வான். பேதைமை தனக்கு இயலாமையை விரும்பும். நாணாமை தெரிந்துணராமை, அன்பின்மை, யாதொரு பொருளையும் போற்றாமை -இவை பேதை மனிதர்களின் அடையாளங்கள். பேதை பெரியவனாக ஆகலாம்; ஆனால், அவனால் தன்னை அடக்கி ஆள இயலாது. அவனுக்கு ஒரு செயலையும் துன்பம் இன்றிச் செய்யத் தெரியாது; தனக்குத்தானே விலங்குகளைப் பூட்டிச் சிறைப்படுத்திக் கொள்வான். தனக்குக் 'கிடைத்த' செல்வத்தை, உடனிருப்போர் பசியோடு இருக்கும்போதும், பெருவிருந்து வைத்துக் கொண்டாட்டங்களில் செலவழிப்பான்; ஒரு பொருள் கிடைத்தால் போதும், பேயாட்டம் போடுவான். ஆகையினாலே பேதையின் தொடர்பு முடிவுக்கு வந்தால் மகிழ்ச்சி கொள்ளலாம். பெரியோர் கூடிய இடத்தில் புகுந்தால் பேதை தாங்கமுடியாத இழிவை உண்டுபண்ணிவிடுவான்.
இவை இவ்வதிகாரப் பாடல்கள் கூறும் செய்திகள்.

பிறரோடு பழகுவதிலுள்ள குற்றங் குறைகளுக்குப் பெரிதும் இப்பேதைமையே காரணமாகிறது. பேதை மனிதர்களுடனான நட்பைத் தொடரவிட வேண்டாம். அவர்களது தொடர்பை விட்டுவிடுவதுதான் ஒருவனுக்கு நன்மையைத் தரும். அவ்வாறு அவர்களது நட்பைக் கைவிடுவதால் எந்தவிதமான துன்பமும் ஒருவருக்கு நேராது; மாறாக, அது இன்பமே தரும்.

பேதைமை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 831ஆம் குறள் பேதைமை என்று சொல்லப்படுவது ஒன்று உண்டு; அஃது யாதெனின் கேடு தருவனவற்றைக் கொண்டு ஊதியமானவற்றை விடுதல் என்கிறது.
  • 832ஆம் குறள் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமை தனக்குக் கைவராத பொருளின்கண் விருப்பங் கொள்ளல் எனச் சொல்கிறது.
  • 833ஆம் குறள் நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், அன்பின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையது தொழில் எனக் கூறுகிறது.
  • 834ஆம் குறள் கற்றும் அறிந்தும் பிறர்க்கு எடுத்துக்கூறியும் தான் அவற்றிற்கேற்ப ஒழுகாராய் இருக்கும் பேதை போலப் பேதையார் இல்லை என்கிறது.
  • 835ஆம் குறள் பேதை எழுபிறவியிலுந் தான் சென்று வருந்தக்கூடிய நரகத்துன்பத்தை இப்பிறப்பொன்றிலே ஆற்றுகின்ற செயல்களாலே தனக்கு விளைத்துக் கொள்ளுவான் எனச் சொல்கிறது.
  • 836ஆம் குறள் செய்யும்முறை அறியாப் பேதையானவன் செயல் மேற்கொள்வானாயின் பொய்யாய் விடுவது மட்டுமன்றி சிறைப்பட்டும் போவான் என்கிறது.
  • 837ஆம் குறள் பேதை பெருஞ்செல்வம் பெற்றபொழுது அயலவர் நன்கு உண்ண உறவினர் வாடுவர் எனச் சொல்கிறது.
  • 838ஆம் குறள் பேதையானவன் தன் கையில் பொருள் ஒன்று பெற்றால் பித்து ஏறினான் ஒருவன் கள் உண்டு களித்தாற் போல்வது என்கிறது.
  • 839ஆம் குறள் பேதையின் உறவு மிகவும் இனியது; பிரியும்போது துன்பம் தருவது என்று ஒன்று இல்லை என்கிறது.
  • 840ஆவது குறள் பெரியோர் கூடியுள்ள அவையுள் பேதையாயினான் புகுதல் கழுவாத காலுடன் வழிபடு தளத்துள் நுழைவதுபோல் என்கிறது.

 

பேதைமை அதிகாரச் சிறப்பியல்புகள்

பேதைமை என்பதுஒன்று யாதுஎனின் ஏதம்கொண்டு ஊதியம் போக விடல் (831) என்ற குறள் பேதைமை என்றதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறது. கேடு பயப்பனவற்றைக் கொண்டு நன்மை தருவனவற்றைக் கைவிடுதல் பேதைமை என்கிறது இது.

பேதை என்றால் கல்வி அறிவு பெறாதவனைக் குறிக்கும் என்பதல்ல; கற்றும் பொருளுணர்ந்தும் அதைப் பிறக்கு எடுத்துரைக்கும் அளவு அறிவுள்ளவனும் தன்னை அடக்கியாளத் தெரியாத பேதையாயிருக்கிறான் என்கிறது ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் (834) என்னும் பாடல்.

வஞ்சப்புகழ்ச்சியாய் பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன்று இல் (839) என அமைந்த குறள் பேதையாருடனான நட்பு மிகவும் இனிதுதான் என்கிறது. ஏனென்றால் பிரிவில் நமக்கு எவ்விதத் துன்பமும் இருக்காது அல்லவா? என்ற நகைக்குறிப்போடு பாடல் உள்ளது.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் என்ற குறள் பேதை பெருமைக்குரியவர்களை இழிவுபடுத்தத் தயங்கமாட்டான் என்ற பொருளில் அமைந்தது. அதை விளக்க இடக்கரடக்காலான சொற்கள் கொண்டு ஓர் உவமை சொல்லப்பட்டது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard