Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 089 உட்பகை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
089 உட்பகை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


 

அதிகார விளக்கம் 
உட்பகை 
பாழ்செய்யும் உட்பகை
குறள் திறன்-0881 குறள் திறன்-0882 குறள் திறன்-0883 குறள் திறன்-0884 குறள் திறன்-0885
குறள் திறன்-0886 குறள் திறன்-0887 குறள் திறன்-0888 குறள் திறன்-0889 குறள் திறன்-0890

openQuotes.jpgஉட்பகை என்பது நட்பினர்போன்று உடன்கூடி வாழும்‌ பகைவர்‌. அஃதாவது இவர்‌ வெளித்தோற்றத்தில்‌ நட்பினர்‌போன்றும்‌ சுற்றத்தாராயும்‌ நெருங்கிப்‌ பழகிக்கொண்டே உள்ளத்தில்‌ பகைமை எண்ணிக்கொண்டிருப்பார்‌ என்பதாம்‌.
- மு சண்முகம்பிள்ளை

 

உள்ளத்தில் பகைகொண்டு புறத்தே உறவுகொள்வது உட்பகை எனப்படும். இது நம்பத்தக்கதாக இருந்துகொண்டு, பொருந்தியது போல் தோற்றம் தந்து, வெளிப்பட ஏதும் காட்டிக்கொள்ளாமல் காலம் வாய்த்தபோது அழிக்கும் கொடுமைக்குணம் கொண்டது. நட்பினருள்‌ 'கூடாநட்பு' போன்றதே பகைவருள்‌ இந்த உட்பகை. உட்பகையுடையான், நமக்கு என்றும் ஒத்திருந்து, முடிவில் நம்மையும் மேற்கொண்ட செயல்களையும் அழித்தொழிப்பான். அவ்விதம் பகைத்திருப்பார் செய்யும் திறம் கூறும் அதிகாரம் இது.

உட்பகை

முந்தைய அதிகாரத்தில்‌ வெளியாய்‌ நிற்கும்‌ பகைவரைத்‌ தெரியும்‌ வகை சொல்லப்பட்டது. இதில்‌ உடன்‌ வாழும்‌ உட்பகையின்‌ திறம்‌ கூறப்படுகிறது‌. புறத்தே தெரியும்‌ பகையைவிட உள்ளத்தே பகைகொண்டுள்ளவரின்‌ தொடர்பு பொல்லாததும் பெருங்கேடு விளைவிப்பதும் ஆகும் என்பது விளக்கப்படுகிறது. மனத்திலே பகையை வைத்துக்கொண்டு தாங்கள் நினைத்த செயலில் வெற்றி கிட்டுமளவும் உறவுபோலேயிருந்து அதன் பின்னர் பகைவராகி விடுவர் இவர்கள். இவ்வஞ்சகப் பகைவர்கள் நண்பர்களைப் போன்று நடித்து வாய்ப்பு வரும்போது தாக்கி அழிப்பர். நீறு பூத்த நெருப்பாக இருக்கும் இவர்களின் வெளிப்பேச்சை நம்பி, உடன்வைத்துக் கொள்வோம்; தற்காப்புச் செய்து கொள்ளத் தவறிவிடுவோம். நம்முடைய உண்மை நிலையை - வலிமை, குறைபாடுகளை - மிக நன்றாக அறிந்தவர்கள் ஆதலால், பகைவரை விடவும் மிகுந்த விரைவுடன் தாக்கும் நிலையில் இருப்பார்கள். நாம் சோர்ந்திருக்கும் சமயத்தில் சாய்த்துவிடுவர்.

நம்மவர் என்று கருதத்தக்கவர், தாயாதிகள், உறவுமுறையார், உற்றார், குடும்பத்திலுள்ளோர் என்றிவர்களை ஒவ்வொன்றாகக் குறித்து அவர்கள் உட்பகை ஆகாமல் காத்துக்கொள்ள வேண்டும் எனச்சொல்லிக் கொண்டே வந்து, இல்வாழ்க்கையில் கணவன் - மனைவி என்ற இருவர் கொள்ளும் உறவிலும் உள்ளத்தால் அவர்கள் ஒன்றுபடாவிட்டால் அதை உட்பகை என்றே கருதலாம் எனக் குறிப்பாகச் சொல்லி முடிகிறது இவ்வதிகாரம்.

உவமைகள் பல நிறைந்ததாக உள்ளது இவ்வதிகாரம். நிழல்‌, நீர்‌, வாள், கேள்‌, மட்பகை, செப்பு, அரம்‌, பொன்‌, எள்‌, பாம்பு முதலியனவைகளைக்‌ காட்டி உட்பகையின்‌ கொடும்‌ தீமை‌ கூறப்படுகிறது‌. நிழல்நீர் தீமை தருவதாயின் தீயதுதான்; அதுபோல் நம்மவர் எனத்தக்கவர் தீமை செய்தால் விலக்கத்தவர்களே; வாள்போல் வெளிப்படையான பகைவர் பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை. நட்பினர்போல் உள்ள உடபகையினர் பற்றித்தான் கவலை கொள்ளவேண்டும்; மண்ணுக்குப் பகையான நீர்வெள்ளம் அதை அடித்துப்போவது போல உட்பகை தப்பாமல் அழிக்கும்; அரத்தினால் ராவப்பட்ட இரும்பு போல உட்பகை உண்டாகிய குடி தேய்ந்து வலியழியும்; செப்பு போல ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பர் உட்பகையினர்; எள்ளின் பிளவுபோல மிகச் சிறிதாக இருந்தாலும் உட்பகை தன்னுள் அழிவினை உடையதாம்; மனஒற்றுமையில்லாதவர்கள் கூடிவாழ்தல் ஒரு வீட்டிலே பாம்போடு குடியிருந்தார் போலும் ஆகிய உவமைகள் மூலம் உட்பகையின் கொடிய தன்மையும் அளவில் சிறிதேயாயினும்‌ உட்பகை அஞ்சப்பட வேண்டியதே என்பதும்‌ உணர்த்தப்‌பட்டன.

 

உட்பகை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 881ஆம் குறள் நிழலகத்து நீரும் தீமை தருமாயின் தீயதாம்; சுற்றத்தார் இயல்புகளும் தீங்குகள் செய்வதாயின் தீயனவேயாம் என்கிறது.
  • 882ஆம் குறள் வாள்போல் வெளிப்படையான பகைக்கு அஞ்சவேண்டியதில்லை; உறவுபோல் நடிக்கும் உட்பகையின் தொடர்பை அஞ்சுக எனச் சொல்கிறது.
  • 883ஆம் குறள் உட்பகைக்கு கவலைகொண்டு தன்னைக் காத்துக்கொண்டு நடக்க; தனக்கு ஒரு தளர்ச்சி வந்தபொழுது மண்ணை அதன்பகையான நீர்வெள்ளம் அடித்துப்போவது போல உட்பகை தப்பாமல் அழிக்கும் எனக் கூறுகிறது.
  • 884ஆம் குறள் மனம் நன்றாகாத உட்பகை ஒருவர்க்குத் தோன்றுமாயின் அது தம்சுற்றம் தமக்கு நல்லாராக இல்லாதவாறு செய்யும் குற்றம் பலவற்றையும் தரும் என்கிறது.
  • 885ஆம் குறள் உறவினனது உட்பகை உண்டாகிவிட்டால் அது சாகும்படியான முறையில் துன்பங்கள் பலவற்றையும் கொடுக்கும் எனச் சொல்கிறது.
  • 886ஆம் குறள் ஒருவரது உற்றாரிடத்தில் உட்பகை ஏற்படுமாயின் ஒருபொழுதும் அழிவிலிருந்து தப்ப முடியாது என்கிறது.
  • 887ஆம் குறள் செப்பினது புணர்ச்சி போலச் சேர்ந்திருந்தாலும் உட்பகை உண்டான குடி மனத்தால் பொருந்த மாட்டாது எனச் சொல்கிறது.
  • 888ஆம் குறள் உட்பகை உண்டாகிய குடி அரத்தினால் ராவப்பட்ட இரும்பு போலக் குறைந்து வலியழியும் என்கிறது.
  • 889ஆம் குறள் எள்ளின் பிளவுபோல மிகச் சிறிதாக இருந்தாலும் உட்பகை தன்னுள் அழிவினை உடையதாம் என்கிறது.
  • 890ஆவது உள்ளத்திலே ஒன்றுபடாத ஒருவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையுள்ளே பாம்போடு உடன் வாழ்ந்தாற் போன்றது என்கிறது.

 

உட்பகை அதிகாரச் சிறப்பியல்புகள்

சில இடங்களில் உள்ள இனிய நிழல்நீர் கூட நோய் தருவனவாக இருக்கலாம். அத்தகைய நீரை விலக்கியே நாம் நீர் அருந்துவோம். அதுபோல நம்மவர் என்ற வகையினர் இயல்பும் உட்பகையாயிருந்து துன்பஞ்செய்யுமாயின் கூடாவாம் என்கிறது நிழனீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின் (881) என்ற பாடல். தமரும் உட்பகையாதற்குரிய வாய்ப்புண்டு என்பதை ஒருவர் உணர்ந்திருக்க வேண்டும் எனச் சொல்கிறது இக்குறள்.

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும் (883) என்ற குறள் உட்பகை பற்றிக் கவலை கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறது. இதைக் கூறுவதற்கு மண்ணிற்குப் பகை நீர் என்னும் கருத்து பயன்படுத்தப்பட்டது. நீரானது மண்ணுடன் கலந்திருந்தே அதை நெகிழச்செய்து கொண்டிருக்கும். தம்மினமாகிய நீர்ப்பெருக்கு திரண்டு வெள்ளமாக வரும்போது, அதனுடன் சேர்ந்து மண்ணை ஒன்றுமில்லாமல் செய்துவிடும். அதுபோல் உட்பகை பெருங்கேட்டை உண்டாக்கும் என விளக்கப்பட்டது.

மரத்தாலான செப்பு என்கின்ற பொருள்‌ மூடியுடன்‌ பொருந்தி வேற்றுமை தெரியாமல் காணப்படும். அதுபோலவே உட்பகையும் இருக்கும் என்று செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி (887) என்ற குறட்பா கூறுகிறது. உட்பகையிலுள்ளவர்கள் பிளவு பட்டவர்களாகவே தளர்ச்சி நிலையில் நின்று எளிதில் தாக்கப்படத்தக்கவர்களாக இருப்பர் என்கிறது இது.

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று (890) என்ற குறட்பா உட்பகையின்‌ கொடிய தன்மையை குடிலும்‌ பாம்பும்‌ உடனுறையும் உவமை மூலம் விளக்குகிறது. மனஒற்றுமையில்லாதவர்கள் கூடிவாழ்தல் ஒரு வீட்டிலே பாம்போடு குடியிருந்தார்போலும் என்கிறது இப்பாடல். இப்பாடல் மணவினை மேற்கொண்ட ஆண் பெண் இருவரையும் குறிப்பதாகவும் கொள்வர். உள்ளப்பொருத்தம் இல்லாவிடில் விலகிச்செல்வதே நல்லது என்ற பொருளில் அமைந்தது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard