Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 092 வரைவில்மகளிர் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7387
Date:
092 வரைவில்மகளிர் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
வரைவில் மகளிர் 
இழிந்தார் அமிழும் சேறு.
குறள் திறன்-0911 குறள் திறன்-0912 குறள் திறன்-0913 குறள் திறன்-0914 குறள் திறன்-0915
குறள் திறன்-0916 குறள் திறன்-0917 குறள் திறன்-0918 குறள் திறன்-0919 குறள் திறன்-0920

openQuotes.jpgவரைவின்‌ மகளிராவது பொதுமகள்‌ இயற்கை கூறுதலாம்‌. இவர்‌ தம்‌ நலத்தை விலைகொடுப்பார்‌ எல்லார்க்கும்‌ விற்பரேயல்லாமல்‌ அதற்கு ஆவார்‌ இவர்‌, ஆகார்‌ இவர்‌ என்று வரையறை கொள்ளாது ஒழுகும்‌ இயல்பினர்‌. இதனால்‌ இவர்‌ 'வரைவின்‌ மகளிர்' என்னும்‌ பெயர்‌ பெறுகின்றனர்‌.
- மு சண்முகம்பிள்ளை

 

இன்று 'பாலியல் தொழிலாளர்' என்று கூறப்படுபவரே குறளில் வரைவின்மகளிர் என வழங்கப்படுகின்றார். இவர் விலைகொடுப்பார்‌ அனைவர்க்கும்‌ தம்‌ நலத்தை விற்பர். மேன்மைக் குணமுடையோர், அறிவுடையவர்கள், தமது நற்பெயர் காக்கக் கருதுவோர் இப்பெண்டிரைத் தீண்ட மாட்டார்கள்;‌ இப்பெண்களைக்‌ கூடுவோர்‌ இழிந்தோர் எனச் சொல்லப்படுகிறது.

வரைவில் மகளிர்

உலகத்தின் மிகப்பழமையான வாழ்க்கைத்தொழில் செய்பவர்கள் என்று சொல்லப்படுகின்ற பொதுமகளிரின் குணங்கள், அவரை விரும்புவாரது அழிவு இவை பற்றிப் பேசுவது இவ்வதிகாரம். விலைமாதரை வள்ளுவர் வரைவில்மகளிர் எனக் குறிக்கின்றார். பழம்இலக்கியங்கள் வரைவில்மகளிரை இற்பரத்தை, காதற்பரத்தை, சேரிப்பரத்தை எனப் பலவகையாக வகைப்படுத்துகின்றன. இவர்கள் கணிகையர், தளிப்பெண்டிர், தேவதாசிகள், வேசிகள், கொண்டிமகளிர் என்ற சொற்களாலும் அழைக்கப்பட்டனர். செல்வம் படைத்தவர்களின் காமக் களியாட்டங்களுக்குக் கருவியாக இம்மகளிர் பயன்படுத்தப்பட்டனர். இவர்களில் சிலர் ஆடல் பாடல் நடிப்பு போன்ற நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தனர். இல்லாள் குறுகிய மனையுறை வாழ்க்கைக்குள் அடைபட்டிருப்பதால், அவளிடம் காணமுடியாத புனைவு, இன்பப் பேச்சு, விளையாட்டு, ஆடல், பாடல், பாலியல்கலை வண்ணங்கள் எல்லாம் எதிர்பார்த்து வரைவில்மகளிரிடம் ஆடவர் செல்கின்றனர். இறைவன் பெயரால், இறைவனுக்குக் காணிக்கையாக, நேர்த்திக் கடனாக, கோயில்களில் 'பொட்டுக் கட்டி' விடப்பெற்ற கொடுமையும் முன்னர் இப்பெண்களுக்கு நேர்ந்தது.
இவ்வதிகாரப் பாடல்கள் தலைவனுக்கே துணையாகி வாழ்ந்த காமக்கிழத்தியர் குறித்ததோ அல்லது குணக்கேடுற்ற குலமகளிரைக் கருதுவதோ அல்ல. தொழில்முறை பொதுமகளிர் பற்றிப் பேசுவதே இந்த அதிகார இயைபாகும்.

வரைவு என்ற சொல்லுக்கு வரம்பு என்பதனோடு திருமணம் என்று ஒரு பொருளும் உண்டு. ஒரு ஆடவனை மணந்து அவனுக்குரிய வாழ்க்கைத் துணையாக வாழும் வாய்ப்பில்லாதவர் என்பதை 'வரைவில் மகளிர்' என்னும் தொடரே விளக்கும். ஒருவருக்கே உரியோர் என வரம்பு-எல்லை வகுத்துக் கொள்வதால் திருமணம் 'வரைவு' எனப்பட்டது. அவ்விதம் எல்லை வகுத்துக்கொள்ளாது, பொருள்கொடுப்பார் யாவருக்கும் தம் ஒழுக்கத்தை விற்கும் பெண்டிர் வரைவில் மகளிர் என அழைக்கப்பட்டனர். ஆணின் பொருளும் பெண்ணின் மெய்யும் பண்டமாற்றுதலைப் பரத்தமை என்று பண்டைய நூல்கள் அழைத்தன. வள்ளுவர் பொதுமகளிரைப் 'பரத்தையர்' என இவ்வதிகாரத்தில் எங்குமே சுட்டவில்லை. 'வரைந்து கொண்டு வாழாத எனச் செயலில் வைத்துக் கூறுகிறார். இன்று 'பாலியல் தொழிலினர்' என்று கூறுதலை ஒப்பு நோக்கினால் வள்ளுவரின் கருத்து வீச்சுப் புலப்படும்' என்பார் தமிழண்ணல். இல்லறம் புகாது, நல்லொழுக்கம் பேணாது, அழகு, புனைவு, நுண்கலைப்பயிற்சி முதலியவற்றால் ஆடவரை மயக்கி, தம் நலத்தைப் பொருட்கு விற்றுப் பலரொடும் வரையாது கூடுவர் இப்பொதுமகளிர்.
அன்பின் விழையார், பண்பு இல் மகளிர், பொருட்பெண்டிர், பொருட்பொருளார், பொதுநலத்தார், புன்னலம் பாரிப்பார், பிறநெஞ்சிற்பேணிப் புணர்பவர், மாய மகளிர், வரைவிலா மாணிழையார், இருமனப் பெண்டிர் என அதிகாரத்து ஒவ்வொரு குறளிலும் கடுமையாகக் குறிக்கப்பட்டவை அவர்கள் இயல்பினை விளக்குவனவாக உள்ளன.

மன உறுதியும் அறிவுத் தெளிவும் இல்லாத ஆண்கள் நாடுகின்ற பொருள்களில் ஒன்று பொதுமகளிர். ஆனால் அருள்வாழ்க்கை நாடுவோர், அறிவுடையவர்கள், ஒழுக்கத்தைப் போற்றுபவர்கள் பொருட்பெண்டிரைத் தேடிச்செல்லமாட்டார்கள் என்று கூறுகிறார் வள்ளுவர். பொருட்பற்று ஒன்றே நோக்கமாகக் கொண்டு வாழும் பொதுமகளிரைச் சேர்வது திருநீக்கப்பட்டார்க்குரிய தொடர்பாம் என இங்கு சொல்லப்படுவதால் அது ஒருவனுடைய செல்வத்துக்கு எவ்வளவு தீங்கு விளைக்கக் கூடும் என்பதை அறியலாம். பொருள் இழப்பதோடு வரைவில்மகளிரிடம் பெறும் இன்பமும் இழிவானது என்பதை உணர்த்த அவரை முயக்குவது முன்னறியாத பிணத்தைத் தழுவுவது போலும் என்றும் அவரது உடல் இழிந்தவர்கள் புரளும் சேறு என்றும் இவ்வதிகாரப் பாடல்கள் கூறுகின்றன. தெய்வப்பெண் போன்று அழகுறத் தோன்றினாலும் அத்தகைய பெண்டிர் வஞ்சனை நிறைந்த மாயமகளிர்தாம் எனவும் சொல்லப்படுகிறது.

இலக்கிய நயம் வேண்டும் என்பதற்காகவும் தலைவியது கற்புடைமையைக் காட்டுதற்காகவும் ஒழுக்கநயம் இல்லாத பரத்தையரை அன்றைய நூல்கள் காட்டின என்பர். தலைவியின் ஊடலுக்குக் காரணம் வேண்டும் என்பதற்காகக்கூட, மிக நெடுங்காலம் நிலவிவந்த அகப்பொருள் இலக்கிய மரபைப் பின்பற்றாது தாமே புதியதொரு முறையைப் படைத்துக்கொண்டவர் அவர். பரத்தையின் இடத்தில் ஒரு கற்பனைப் பெண்னை உருவாக்கி, ஊடலுக்குக் காரணம் பரத்தை என்பதை மறைத்துத் தணிக்கை செய்தார்.
ஆணின் பாலியல் பசிக்கு இரையாகும் பொதுமகளிர், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டே தனது வாழ்க்கையை நடத்துகின்றாள். விளிம்புநிலையில் வாழும் அவர்களைச் சமூகம் மிகவும் இழிவாகவே பார்க்கிறது. வறுமையும் அறியாமையுமே அவர்கள் அத்தொழிலுக்குள் தள்ளப்பட்டிருப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கும். அவர்கள் பெயரில் தலைப்பிட்டு இந்த அதிகாரம் அமைத்த வள்ளுவர் அவர்களின் இரங்கத்தக்க வாழ்வுநிலைக்குப் பரிந்து, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்வகையில் ஓரிரு சொற்கள் கூறியிருக்கலாம்.
தினற்பொருட்டாற் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல் (புலால்மறுத்தல் 256 பொருள்: தின்னுதற்காக உலகத்தார் வாங்காவிட்டால், விலைக்காகப் புலால் கொடுப்பதற்கென்று எவரும் இல்லை) என்ற பாடலில் சொன்னதுபோல பொதுமகளிரை நாடுவோர் இல்லையானால், பொருட்பெண்டிர் இலர் என்றவாறாவது ஓர் குறட்பாவை இயற்றி இணைத்திருக்கலாம்.
பிறனில்விழைதல் போல பரத்தை வேட்டலும் அறக்கேடுதான்; ஒழுக்க இழிவுதான். எனவே இவ்வதிகாரமும் பொருட்பாலில் அல்லாமல் அறத்துப் பாலில் இல்லறவியலிலேயே வைக்கப்பட்டிருக்கலாம்.

வரைவில்மகளிர் அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 911ஆம் குறள் அன்பினால் விரும்பாமல் பொருளுக்காக விரும்பும் நல்லணி பூண்ட மகளிர் இனிய சொற்கள் கேட்டினைத் தரும் என்கிறது.
  • 912ஆம் குறள் தமக்கு உளதாகும் பயனளவு நோக்கி இனிய பண்புடையராகப் பேசும் நற்குணமில்லாத மகளிரது நடக்கையைத் தெரிந்துகொண்டு ஒதுங்கிக் கொள்க எனச் சொல்கிறது.
  • 913ஆம் குறள் பொருள் ஒன்றையே கருதும் பெண்டிரின் பொய்த்தழுவல் இருட்டறையினுள்ளே முன்னறியாத பிணத்தைப் புணர்வது போலும் எனக் கூறுகிறது.
  • 914ஆம் குறள் பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது இழிந்த இன்பத்தை அருளை ஆராயும் அறிவினையுடையவர் துய்க்கமாட்டார் என்கிறது.
  • 915ஆம் குறள் சிந்தனைத் திறனுடன் கூடிய நல்லறிவுடையோர் பொதுமகளிரின் இழிந்தஇன்பத்தைப் பொருந்தார் எனச் சொல்கிறது.
  • 916ஆம் குறள் அழகுநலத்தால் தம்மைப் பெரிதாக மதித்து இழிந்த இன்பத்தைப் பரப்புகின்ற மகளிரின் தோள்களை தனக்குண்டான நல்லதோற்றத்தைக் காத்து ஒழுகுவோர் அணையார் என்கிறது.
  • 917ஆம் குறள் உள்ளத்தினால் பிறவற்றை விரும்பி உடம்பினால் புணர்பவரது தோள்களை நன்னெறியில் மனத்தை நிறுத்தும் திண்மை இல்லாதவர்களே தீண்டுவர் எனச் சொல்கிறது.
  • 918ஆம் குறள் மாயம் செய்வதில்வல்ல மகளிரது சேர்க்கை சிந்தனையற்றவர்க்குக் காமத் தெய்வம் போன்று என்பர் என்கிறது.
  • 919ஆம் குறள் ஒழுக்க வரையறையில்லாத, அழகிய அணிகலன்களை அணிந்துள்ளவர்களின், மென்மையான தோள்கள் அறிவில்லாத இழிந்தவர்கள் அழுந்தி வருந்தும் நரகம் என்கிறது.
  • 920ஆவது இரண்டுமனத்தினை உடைய மகளிரும், கள்ளும், சூதும் செல்வத்தினின்றும் நீக்கப்படப்போவார்க்கு உறவு என்கிறது.

 

வரைவில்மகளிர் அதிகாரச் சிறப்பியல்புகள்

சமுதாய நல்வாழ்விற்குத் தடைகளாக இருந்துவருபவர் பொதுமகளிர் என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்கமுடியாது. பரத்தையரை நாடுதல் அறத்திற்கு மாறானதாகக் கருதப்படாத காலத்தில் வாழ்ந்தவர் வள்ளுவர். அவர்க்கு முன் இருந்த எந்தப் புலவரும் பரத்தமையைக் கடிந்து கூறவில்லை. பரத்தமை என்பது ஒழுக்கக்கேடான அமைப்பு என்பதை முதல்முதலில் உணர்ந்து தெளிந்தவர் வள்ளுவரே. அதனால் வரைவில்மகளிர் என ஒர் அதிகாரம் படைத்து பரத்தமை ஒழுக்கத்தை மிகவும் சாடுகிறார், வரைவில்மகளிரையும் அவரிடம் செல்வோரையும் இழிவு படுத்திக் கூறிய வள்ளுவர் பரத்தமை ஒழுக்கத்தைத் தடுக்க முயன்ற சீர்திருத்தச் செம்மல் எனப் போற்றப்படுகிறார். இவ்வதிகாரம் பரத்தமையை முற்றிலும் ஒதுக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் எழுதப்பட்டது என்பதை உணரலாம். அது வள்ளுவர் நமக்குப் புகட்டிய புதுஅறமாம்.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று (913) என்ற பாடல் பொருட்பெண்டிர் முயக்கம் பிணத்தைத் தழுவுவது போன்றது என்கிறது. பொதுமகளிர் கூட்டத்தினைப் பிணமுயக்கம் என்பதைப் படிக்கும் எவரும் சாகும்வரை அவர்களிடம் செல்ல நினைப்பரோ? என்ன ஓர் அருவருப்பு!

-நடிப்பு ஆடல் பாடல் ஆகியவற்றில் திறமைபெற்று நாடறிந்த ஒரு பெண்ணிடம் காம இன்பம் பெறுவது என்பதைச் சிலர் கிடைத்தற்கரிய பேறு என எண்ணுவர். ஆனால் அறிவாலும் ஒழுக்கத்தாலும் தனக்கென ஓர் புகழ்தேடி வைத்திருப்பவர் அப்பெண்ணின் உடலைத் தீண்ட நினைக்கமாட்டார் என்கிறது ஒரு பாடல். இதை தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் (916) என்னும் குறள் கூறுகிறது.

விலை கொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிரது மெல்லிய தோள்கள் எந்தவிதத்திலும் உயர்வு காணாத கீழ்மக்கள் புக்கு அழுந்தும் சேற்றுக் குழி என்று இடக்கரடக்கலாகச் சொல்வது வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு (919) என்ற பாடல்.

விலைமகளிரை இருமனப்பெண்டிர் என ஒரு பாடல் கூறுகிறது. அதாவது ஒரு நேரத்திலே ஒருவனைப் புணர்தலும் புணராமையும் உடைய இரு மனங்கள் கொண்டவர் பொதுமகளிர் என்கிறது. அத்தகைய பெண்ணைச் சேர்வானுக்கு என்ன இன்பம் கிடைக்கப்போகிறது? அவனது செல்வம்தான் நீங்கும். இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு (920) என்பது அக்குறள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard