Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 110 குறிப்பறிதல்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
110 குறிப்பறிதல்
Permalink  
 


அதிகார விளக்கம் 
குறிப்பறிதல் 
கண்ணொடு கண்இணை நோக்கின
குறள் திறன்-1091 குறள் திறன்-1092 குறள் திறன்-1093 குறள் திறன்-1094 குறள் திறன்-1095
குறள் திறன்-1096 குறள் திறன்-1097 குறள் திறன்-1098 குறள் திறன்-1099 குறள் திறன்-1100

openQuotes.jpgகுறிப்பறிதல்-தலைவியைக் கண்டு அவள் அழகால் கவரப்பட்டு அவளை வியந்து நின்ற தலைமகன் அவளுடன் நெருங்கி உரையாட, உறவாட, அவள் குறிப்பினை அறிய முற்படுகின்றான். குறிப்பறிதலாவது அவள் உள்ளக் கருத்தினை அறிதலாகும்.
- சி இலக்குவனார்

 

அவனுக்கும் அவளுக்கும் உண்டான காதல் வளர்ந்த கதை கூறுவது. அவளது காதல் குறிப்பை அவன் அறிந்து கொள்ளுதலை விளக்குவது. தலைமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து, உள்ளம் கலந்து, உறவு மலர்வதைச் சொல்வது. அவர்களின் காதலுணர்ச்சி, பண்பியல் முதலியவற்றைப் புலப்படுத்துகின்றது. இருஉள்ளமும் ஒன்றுபடுதல் வற்புறுத்தப்படுகிறது.

குறிப்பறிதல் ஏன்?

பரிமேலழகர் பாடத்தில் இரண்டு “குறிப்பறிதல்” உள்ளது. ஒன்று அதிகாரம் 71 (பொருட்பால்). மற்றொன்று இந்த அதிகாரம் 110 (காமத்துப்பால்) அவருக்கு முறபட்ட காலிங்கர் பாடத்தில் காமத்துப்பாலில் உள்ள குறிப்பறிதல் “குறிப்புணர்தல்” என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பறிதல் என்ற அதிகாரப் பெயருக்கு தொல்காப்பிய களவியல் நூற்பா காரணமாயிருக்க்லாம் என்பர் இரா சாரங்கபாணி. அப்பாடல்:
நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும். 
(தொல்காப்பியம், களவியல்: 5)
(பொருள்: தலைமக்கள் இருவரின் நோக்கங்களும் (கண்களும்) அவர் தம் கருத்துக்களை ஒன்றுபடுத்தற்கு உணர்வினைக் கூட்டியுரைக்கும் குறிப்புரைகளாகும்.)

குறளில் கூறப்படும் களவியலில் ஒருதலைக் காமத்திற்கோ பொருந்தாக் காமத்திற்கோ இடமில்லை. களவுக் காதல் முன்பின் அறியாத ஆண், பெண் இருவரிடை பிறர் அறியாதவாறு நிகழும். மறைவாக நிகழ்ந்தாலும் ஒத்த அன்பினரா என்று தெரிந்துகொள்ள ஒருவர் உள்ளக் குறிப்பை மற்றவர் அறிவது மிகத் தேவை. பொதுவாகத் தலைவனே தலைவியின் உள்ளக் குறிப்பினை அறிவதற்குப் பெரிதும் முனைவான்.
முதன்முதலில் அவன் அவளைப் பார்த்ததும் 'அணங்கோ! மயிலோ! மங்கையோ!' என்று அவள் எழில்நலத்தில் மயங்கினாலும பின்னர் அவளது உள்ளக் குறிப்பை அறிய விரும்புகிறான் காதலன். தலைவியின் மெய்ப்பாடுகள் வழி குறிப்பு அறியப்படுகிறது. இது தலைவன் கூற்று அல்லது கண்டோர்/ஆசிரியர் கூற்றாகப் புலப்படுத்தப்படுகிறது. மெய்ப்பாட்டில் அவளது மருந்துப்பார்வை, களவுச்சிறுநோக்கு, சிறக்கணித்தல், புன்முறுவல், முகமலர்ச்சி, பொதுநோக்கு, இறைஞ்சுதல், விழிப்பேச்சு ஆகியவற்றின் வழி அவன் குறிப்பு அறிகிறான். இவ்விதம் தலைவியின் உடல்மொழிகள் வாயிலாக அவளும் தன்னை விரும்புகின்றாள் என்று அறிகிறான்; உள்ளக் கவர்ச்சியும் பெறுகிறான். தலைமக்கள் ஒருவரையொருவர் விரும்புகின்றனர் என்னும் ஒத்த அன்பை உணர்த்துவதே காமத்துப்பாலில் அமைந்த குறிப்பறிதல் என்னும் பகுதியாகும்.

குறிப்பறிதல் பத்துப்பாட்டில் ஒன்பது பாடல் நோக்குப் பற்றியவை. ஒன்று சொல் பற்றியது.

குறிப்பறிதல் அதிகாரம்:

இவ்வதிகாரம் பற்றிய உரையாசிரியரான நாமக்கல் இராமலிங்கம் கூற்று:
"அவனுக்கு காம ஆசை உண்டாகிவிட்டாலும் அவள் தன்னை விரும்புகிறாளோ என்று அவளுடைய குறிப்புக்களைக் கவனிக்கிறான். அவளும் ஒரு புதுமனிதன் தன்னைக் கூர்ந்து பார்க்கிறானே என்று கூச்சப்படாமல் இவனைப் பார்க்கிறாள். இப்படி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் கடைக்கன்ணால் இவனைப் பார்த்துவிட்டுச் சிரிக்கிறாள். அதைக் கண்டு துணிவுகொண்ட இவன் அவளைப் புணர்ச்சிக்கு அழைக்கிறான். அதற்கு அவள் தனக்கு ஆசையில்லாததுபோல் பேசுகின்றாள். ஆனாலும் இவன் கலவிக்கு அழைத்ததற்காக அவள் கோபித்துக்கொள்ளவில்லை. மறுப்பவள் போல் பார்த்தாலும் கோபித்துக்கொள்ளாமல் அவள் பேசியதால் அவளுக்கும் ஆசைதான் என்று குறிப்பிடுகின்றான். அந்தச் சமயத்தில் அவள் சம்மதம் சொல்லுவது போல் இவளைப் பார்த்து மெதுவாகச் சிரிக்கிறாள். பிறகு இருவரும் ஒருவரையொருவர் கூசாமல் பார்த்துக் கண்ணும் கண்ணும் பேசிக்கொள்ள, வாய்ப்பேச்சுக்கு அவசியமில்லாமல் புணர்ந்து மகிழ்கின்றார்கள்."
இதைப் போன்றே பலரும் புணர்ச்சியை மையப்படுத்தியே இந்த அதிகாரத்துப் பாடல்களுக்கு உரை தந்துள்ளனர். அதிகாரத்து அனைத்துக் குறட்பாக்களும் காதலர் இருவரது நோக்கமும் மெய்யுறுபுணர்ச்சியே என்று கூறுகின்றன என்பது போல் இவர்களுரை அமைகிறது. மேலும் இவ்வுரையைப் படிக்கும்போது இது ஒரே நாளில் முன்பின்தெரியாத இருவரது முதல் சந்திப்பிலேயே எல்லா நிகழ்ச்சிகளும் நடப்பது போலவும் அவன் விரைவுபடுத்தி புணர்ச்சிக்கு அவளை அழைப்பது போலவும் அவளும் தன்னை உடனடியாகக் கொடுத்துவிடுகிறாள் போலவும் உள்ளது. அதிகாரப் பாடல்களின் நடையை நோக்கும்போது இந்த உரையைப் பொருத்திக் கொள்ள முடியும்தான். ஆனால் இது சரியா?

இங்கு காட்டப்படும் காட்சிகளை வெவ்வேறு சமயங்களில் நடைபெறுவதாகக் கொண்டு வாசிப்பதே சரியாகும். காதல் பிறந்ததிலிருந்து அது முழுமை பெறுவது வரையிலான படிநிலை வளர்ச்சியைக் காட்டும் குறிப்பறிதல் அதிகாரக் காட்சிகளாவன:

  • எங்கோ ஓர் பொது இடத்தில் அவனும் அவளும் சந்திக்க நேரிடுகிறது. அவள் அவனைப் பார்க்கிறாள். அப்பார்வையில் இரண்டு நோக்கு உள்ளன. முதல் நோக்கு அவனுடைய உள்ளத்தே கிளர்ச்சியை உண்டாக்கிக் காதல்நோயைத் தருகின்றது; இரண்டாவதான இதமான பார்வை காதல்நோயைத் தணிக்கும் மருந்தாக அமைந்து ஒர் குறிப்பும் கொடுக்கிறது. அன்புடன் அவள் நோக்கியதால் காதலைத் தோற்றுவித்த அவள், அவனைச் சந்திக்க விருப்பமாக இருக்கிறாள் என்பதே அக்குறிப்பு.
  • அவளது குறிப்பறிந்த நிலையில் மறுபடியும் அவர்கள் சந்திக்க நேருகிறது. அவன் அவளைப் பார்க்கிறான். நாணம் மேலோங்கி நின்றதால் அவள் அவனை நேர்கொண்டு பார்க்கவில்லை' ஆனாலும் பார்க்கவேண்டும் என்று ஆசையால் களவுப் பார்வையால் அதாவது அவனுக்குத் தெரியாமல் சிறுது கணம் பார்க்கிறாள். இந்நிகழ்வு இருவருக்கும் இன்பத்தைக் கொடுத்தது. அவளது களவுப்பார்வை அவன்மீது அவளுக்குள்ள காதலை வெளிப்படையாகக் காட்டிவிட்டது. இப்பொழுது அவனுக்கு அவளது உள்ளத்தை வென்றுவிட்டோம் என்ற களிப்பு உண்டாகிறது; தான் காதலின் செம்மையான பகுதியைக் கடந்து விட்டதாக உணர்கின்றான்.
  • அடுத்த சந்திப்பில் அவன் இன்னும் நெருக்கமான இடைவெளியில் அவளைக் காண்கிறான். அன்று களவுப்பார்வை பார்த்தவள் இப்பொழுது நேராகவே பார்க்கிறாள். அவன் அவளை எதிர்நோக்கு கொள்கிறான். உடனே அவள் ஏதோ கருத்தை உட்கொண்டு நாணித் தலைகவிழ்ந்து கொள்கிறாள். அவ்வாறு அவள் செய்தது அவர்களது காதல் பயிருக்கு அவள் நீர்பாய்ச்சியது போல் இருந்தது என்கிறான் அவன். அவர்களது புதிய உறவு தொடர்வது உறுதிப்பட்டுவிட்டதற்கான குறிப்பு கிடைத்தது.
  • காதல் மலர்ந்துவிட்டது. இருவரிடையேயும் வாய்ப்பேச்சு தொடங்காத இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் பெண்ணியல்பான நாண் தடுக்கின்றது. அவன் பார்த்தாலும் பார்க்கட்டும், ஆனாலும் நாம் பார்க்கக்கூடாது என்று அவள் நினைக்கிறாள். ஒரு பார்வை விளையாட்டு தொடங்குகிறது. அவன் அவளைப் பார்க்கும்பொழுது தலைகவிழ்ந்து நிலத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறாள். அவன் அவளைப் பார்க்காது கண்ணை வாங்கிக்கொண்டவுடன் அவள் அவனைப் பார்த்து மெதுவாகச் சிரிக்கிறாள்.
  • இடைவெளி முற்றிலும் குறைந்து உள்ளங்கள் ஒன்றுபடும் நிலை இக்காட்சியில் காட்டப்படுகிறது. இப்பொழுது நேருக்கு நேர் அவனை முழுமையாகப் பார்க்காமல், அவன்மீது கடைக்கண் வீசி, வேறு எங்கோ பார்ப்பது போல் முகம் காட்டிக்கொண்டு அவனை நோக்கித் தனக்குள்ளே சிரித்து மகிழ்கிறாள். காதல் கலந்த ஓரக்கண் பார்வை அவளது எண்ணத்தில் அவனே நிறைந்திருக்கிறான் என்பதைக் குறிப்பாகக் காட்டியது. தன் காதலை அவள் முழுமையாகத் தெரிவிக்கிறாள் என அவன் உணர்கிறான். உளப் பொருத்தம் வளர்ந்து இருவரிடையேயான காதல் கனிந்த நிலை இது.
  • காதல் பற்றிக்கொண்ட பிறகு உறவு பலப்படத் தொடங்கும் நேரம்; ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள முயல்கின்றனர். பழகத் தொடங்கிய அவர்கள் அடிக்கடி சந்தித்து உரையாடுகின்றனர். பேச்சினிடையே உரசல்கள் ஏற்படுவது இயல்பு. ஒருவர் கருத்தை ஒருவர் ஒத்துக்கொள்ளாதவர்போலப் பேசிக் கொள்வர். அந்தச் சமயத்தில் அறிமுகமாகாதவர் போல், மனதுள் வெறுப்பில்லாமல், சினம்கொண்டு சில சுடுசொற்களைச் சொல்லிச் சென்றுவிடுவர். அப்பொழுது ஒருகணம் மனம் கலக்கம் உறும். ஆனால் எண்ணிப்பார்த்தால் உரையில் வன்மையுள்ளது போல் தோன்றினாலும் உள்ளத்துள் அன்புகொண்டவர் ஆவர் எனத் தெரியும். அக்கடுஞ் சொற்குள்ளும் காதற் கலப்பு உண்டெனவும் அறிந்து கொள்வர்.
  • இக்காட்சியில் அவர்கள் ஒருவரையொருவர் அறியாதவர்போல நடந்துகொள்கிறார்கள்; சுடுஞ்சொல் பரிமாற்றம் நடைபெறுகிறது. பகை உணர்வு இல்லையானாலும் பகைவனைப் பார்ப்பது போல பார்த்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் ஒருவருக்கொருவர் அன்பு கொண்ட காதலர்கள் அடையாளம் காட்டும் குறிப்புகளாகும். இந்தப் பொய் நாடகம் ஆடுவதில் அவர்கள் ஒருவித மகிழ்ச்சியும் அடைவர்; அவர்களது உறவு இன்னும் நெருக்கமாக அமைவதை உணர்வர்.
  • காதல் கொண்ட இருவரும் அவ்வப்பெழுது சந்திக்கின்றனர். அவன் மேல் அன்பு கொண்டவளாதலால் அவனைப் பார்க்கும் போதெல்லாம் மெல்லச் சிரிக்கிறாள். அந்த நேரங்களில் மயில் சாயல் கொண்டவள் அவனை நெகிழ்ச்சியுடன் பார்க்கிறாள்; புன்னகை பூக்கிறாள். அவ்வேளைகளில் அவள் ஒரு புதுப் பொலிவுடன் தோன்றுகிறாள். அவன் விரும்பியவாறு அவனுக்குப் பொருத்தமான பெண்மைக் குணம் கொண்ட காதலி கிடைத்திருக்கிறாள் என்று அவன் உள்ளுக்குள் பெருமிதம் கொள்கிறான்.
  • காதலில் வீழ்ந்த இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துகொண்டனர். அவனுக்கு அவளைப் பிடித்துவிட்டது. அவளும் தனக்கு அவனைப் பிடிக்கிறது என்பதைக் குறிப்புணர்த்திவிட்டாள். வெறுப்பில்லா ஏச்சுப் பேச்சுக்களாலும் பொய்ச் சினம் காட்டியும் தங்கள் காதல் உறவை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். களவுக் காதலாதலால் இன்னும் வெளிஉலகுக்கு அவர்கள் காதலர்கள் என்பதைக் தெரிவித்துக் கொள்ளவில்லை. எனவே பொது இடங்களிலே ஒருவரையொருவர் காணநேரும்போது முன்பின் அறிமுகமற்ற அயலாரைப் பார்ப்பதுபோல் நடந்துகொள்கின்றனர். அப்படிச் செய்வதில் புளகாங்கிதமும் அடைவர்.
  • அவனும் அவளும் காதலின் உச்சத்தை அடைகின்றனர். அவர்கள் கண்கள் சந்திக்கும்போது கருத்து ஒற்றுமை தெரிகிறது.. இருவர் கண்களும் ஒன்றுபட்டு ஒரே நோக்காகிவிடுகிறது. ஒத்த தன்மையான அந்தப் பார்வையிலே அவர்களுக்குள் ஒரு நிறைவு ஏற்படுகிறது. அவ்வளவுதான்; வாய்விட்டுத் தம் காதலைப் புலப்படுத்தச் சொற்கள் தேவையே இல்லை. ஒருவர் உள்ளத்தில் மற்றொருவர் முழுமையாகக் குடி புகுந்துவிட்டனர்.
இவ்வாறாக குறிப்பறிதல் அதிகாரம் முழுவதும் தலைவன் தலைவியரிடை காதல் வளர்ந்த கதை அழகுற விளக்கப்படுகிறது. தலைவன், தலைவியர் காதலுணர்வுகளை, பண்பியல்களை கற்பனை நயம்பட சுவையாக இவ்வதிகாரம் எடுத்தியம்புகிறது.

 

குறள் வரிசைப்படி குறிப்பறிதல் கூறுவதைச் சுருங்கச் சொன்னால்:
1091 ஆம்குறள் அவள் பார்வை தந்த நோயை அவளது மற்றொரு பார்வையே தணித்தது என்கிறது.
1092 ஆம்குறள் அவளது கண்களால் அவனைக் களவாகப் பார்த்தது அவளை நெருங்கிவிட்டதாக எண்ணி அவன் களிப்புற்றுக் கூறுவதைச் சொல்வது.
1093 ஆம்குறள் அவனது எதிர்பார்வைக்கு அவள் நாணித் தலைகவிழ்ந்தது உறவு தொடர்வதற்கான குறிப்பானது என்கிறது.
1094 ஆம்குறள் அவளது புன்முறுவல் பேசாமற் பேசி காதல் இசைவுக் குறிப்பைக் காட்டுவதாக அமைந்தது என்கிறது.
1095 ஆம்குறள் கடைக்கண் பார்வை வீசி அவளது காதலை உறுதி செய்தாள் என்கிறது.
1096 ஆம்குறள் பழகத் தொடங்கிய காதலரிடை ஒருவர் பேச்சை ஒருவர் புரிந்துகொள்ளுதல் பற்றியது.
1097 ஆம்குறள் காதலர்கள் அரங்கேற்றும் பொய்மை நாடகம் அவர்கள் உற்றார் ஆயினர் என்ற குறிப்பு தருவது.
1098 ஆம்குறள் மயில்சாயல் கொண்ட காதலியின் முறுவலில் அவள் பெண்மைக் குணம் கொண்டவள் என்ற குறிப்புப் பெற்றான் என்பது.
1099 ஆம்குறள் தெரியாதவர் போல் பாசாங்கு செய்து காதலர்கள் உள்ளுக்குள் குறுகுறுப்பு உணர்ச்சி கொள்வர் என்பது.
1100 ஆம்குறள் கண் ஒத்தது; கருத்தும் ஒத்தது; பேச ஒன்றுமில்லை என்பதைச் சொல்வது.

குறிப்பறிதல் - தவறான புரிதல்கள்

பரிமேலழகர் அகப்பொருள் இலக்கணநெறி முழுமையாக அமையவேண்டும் என்னும் விருப்பால் இலக்கணக் கூறுகளாகிய இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், தோழியிற்கூட்டம் ஆகியவற்றை இவ்வதிகரத்துக் குறள்கட்கும் பொருத்துவர். குறிப்பறிதல் அதிகாரத்துப் பாடல்களுக்குத் தோழியை இயைபுபடுத்தாமல் தலைவியின் குறிப்பைத் தலைவன் அறிதல் எனக் கொள்ளுதலே பொருந்தும்.

அடுத்த அதிகாரம் புணர்ச்சி மகிழ்தல் என்பதால், தலைவன் தலைவி இருவரும் ஒருவர் மற்றவரது மெய்யுறுபுணர்ச்சிக் குறிப்பை அறிவதாகவே குறிப்பறிதல் அதிகாரத்துப் பாடல்கள் அனைத்தும் அமைந்துள்ளன என்ற வகையில் பலரும் உரை தருகின்றனர். காமம் என்ற சொல்லுக்குக் காதல் என்றோ அல்லது அன்பு என்றோ பொருள் கொண்டால் குழப்பம் தெளியும். ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கான காதல் குறிப்பையே தலைமக்கள் இங்கு அறிய விரும்புகின்றனர். இந்த அணுகுமுறையே அதிகாரப் பொருண்மையை அறிந்து கொள்ள உதவும். அதுவே வள்ளுவர் கருத்தாகவும் அமையும்.

குறிப்பறிதல் அதிகாரத்தின் சிறப்பு

பிறர் கருதியதனை அவர் கூறாமல் அறிதல் குறிப்பு அறிதல் எனப்படும். குறிப்பு என்னும் சொல்லிற்குக் 'கருத்து' என்பது பொருளாகும் தெளிவுற்ற அவன் அவளது குறிப்பினை-உள்ளக் கிடக்கையை- அவளும் இவனைக் காதலிக்கிறாளா என்பதை அறிய முயலுகின்றான். இதை மிக மென்மையான முறையில் கலைநயம் தோன்ற இவ்வதிகாரம் சொல்கிறது.

'புகுமுகம் புரிதல்' என்ற அழகிய தொடர் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்/ பார்க்கும்போது நேருக்கு நேர் காதல் உணர்ச்சி ததும்ப காணுவது தனது மனக்குறிப்பை முகத்தில் வெளிப்படுத்துவது ஆகியவற்றைக் குறிக்கும். இம்மெய்ப்பாட்டுக்கு நல்ல காட்டாக இந்த அதிகாரம் அமைகிறது. தலைவியிடம் தோன்றிய புகுமுகம் புரிதல் மெய்ப்பாட்டால் அவள் தன்னை உளமாற விரும்புகின்றாள் என்பதனை அறிந்து கொண்டான் என்ற பார்வையினூடே காதல் படர விடப்படுகிறது இவ்வதிகாரம்.

தலைமக்களிடை காதல் உருப்பெறுவதை கற்பனை நயம்படக் குறள் சித்தரிக்கிறது.
தலைவியின் மெய்ப்பாடுகளையும் அவை கண்ட தலைவனது கூற்றுக்களையும் கொண்டு குறிப்பறிதல் அதிகாரம் பின்னப்பட்டுள்ளது.
உளநூலாராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள எவரும் வியக்கும் வண்ணம் களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவன் தலைவியர் உளநிலை உணர்ச்சிகள் திறம்படப் படம்பிடித்துக் காட்டப்படுகிறது.
வள்ளுவர் தான் கண்ட காட்சியை அல்லது உணர்ந்த உண்மையை முழுநிறைவுடைய அழகுப் பொருளாகப் படைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
களவுச் சிறுநோக்கம், இறைஞ்சிய நோக்கு, அவன் பார்க்கும்போது அவள் எதிர் நோக்காது நிலத்தைப் பார்ப்பது, ஒரு கண் சிறக்கணித்தாள் போல அவள் நகுதல், பைய நகுதல், கண்டும் காணாதது போல நடந்துகொள்தல், விழிகளால் பேசுதல் இவை போன்ற காட்சிகளால் இலக்கிய அமுது படைத்து நம்மைப் பரவசப்படுத்துகிறது குறிப்பறிதல் பாடல்கள்.

ஜெர்மன் நாட்டு அறிஞர் கால் கிரால் என்பவர்
இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து

எனும் குறிப்பறிதல் அதிகாரத்துக் குறளைப் (எண்: 1091)படித்து அதன் பொருள் ஆழத்திலும் கலையழகிலும் தம் உள்ளத்தைப் பறிகொடுத்துவிட்டார். பிறகு, தொடர்ந்து இவர் குறளைப் படித்தார். கி பி 1854 இல் ஜெர்மன் மொழியிலும் கி பி 1856 இல் இலத்தீன் மொழியிலும் கிரால் திருக்குறளை மொழிபெயர்த்து மேல்நாட்டினரிடையே அதை அறிமுகப்படுத்தவும் செய்தார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard