அஃதாவது, பிரிவாற்றாமையால் தலைமகளின் மேனியிற் பசலை யென்னும் நிறவேறுபாடு தோன்றற் கேதுவாகிய வருத்தம். இது தலைமகனை நீண்ட நாளாகக் காணப்பெறாவிடத்து நிகழ்வதாகலின், கண்விதுப்பழி தலின் பின் வைக்கப்பட்டது. பசப்பு அல்லது பசலை யென்பது பைம்பொன்னொத்த பசுமஞ்சள் நிறம் கொண்டது. அது சுணங்கு, தேமல் என்றும் பெயர் பெறும். மேனியழகினாலும் தேமல் படர்வதுண்டு. அது அழகு தேமல் எனப்படும். - தேவநேயப் பாவாணர்:
பசலை என்பது பெண்களுக்கு மட்டுமே வரும் காதல் நோய் என்று சொல்லப்படுகிறது. காதலர் பிரிவால் உணவு,உறக்கம் செல்லாது அவரையே சிந்தித்துக் கொண்டிருக்கும் தலைவிக்கு ஏற்படுவது பசலை நோய் பசப்பு என்றும் அறியப்படும். பிரிவுத் துன்பத்தைத் தாங்கமுடியாமல் உடல் மெலிந்து அழுது அழுது, கண் சோர்ந்து போயுள்ள தலைவியினது. தோலின் இயற்கையான நிறம் மாற்றம் அடைந்ததைக் குறிப்பது பசலையாகும்; நிறவேறுபாட்டாலும் தன் மேனியழகு குறைந்தது கண்டு மேலும் வருத்தம் அடைகிறாள் தலைவி. இதுபற்றி[ பேசும் அதிகாரம் பசப்புறு பருவரல். பருவரல் என்ற சொல்லுக்கு வருத்தம் என்று பொருள். .
பசப்புறுபருவரல்
பசப்பு என்ற சொல் சங்கப்பாடல்களில் பரவலாகப் பயின்று வந்துள்ளது. அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, முல்லைப்பாட்டு ஆகியவற்றில் இச்சொல் பெரிதும் காணப்படுகிறது. மேலும் சங்கம் மருவிய காலத்து இலக்கியங்களில் திருக்குறள் மட்டுமல்லாமல் திணைமாலை ஐம்பது,திணைமாலை நூற்றைம்பது, கார் நாற்பது, கைந்நிலை, நாலடியார், ஐந்திணை எழுபது, ஆகியவற்றிலும் பசப்பு நிரம்பப் பேசப்படுகிறது. பசலை குளத்திற் படர்ந்து கிடக்கும் பாசி போன்றது என்று ஒரு குறுந்தொகைப் பாடல் சொல்கிறது: ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க பாசி அற்றே பசலை-காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே. (குறுந்தொகை 399) (பொருள்:ஊரால் உண்ணப்படும் நீரையுடைய கேணியின் பாசி மக்கள் நீர் கொள்ளுங்கால் விலகியும்பின் கூடியும் நிற்றல் போலப் பசலை தலைவன் முயங்குங்கால் நீங்கியும் பிரியுங்கால் பரந்தும் நின்றதென்றாள்.) இதே கருத்துடைய கலித்தொகைப் பாடல் கூறுவது: விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே (கலித்தொகை 130) (பொருள்:படை விடவிடப் பகைவர் நீங்கினாற்போலப் பிரிந்தவர் வந்து தீண்டத்தீண்டப் பசப்பு நீங்கிற்று )
இன்றைய ஆய்வாளர்கள் பசப்பு என்ற சொல்லுக்குப் புதுப்பொருள் காண விழைகின்றனர். அவர்கள் 'காதலனின் பிரிவினால் காதலியின் மேனியில் நிறம் மாறியது என்பது நாம் எங்குமே காணாதது ஆகும்; அது உலக இயல்புக்கு ஒவ்வாதது' என்று கூறி பசலை என்பது அழுது நீர் சொரிவதை அல்லது கண் கலங்கி நிற்பதைக் குறிக்கும் என்று நிறுவ முயல்கின்றனர்.
இவ்வதிகாரத்தில் 'பசலை அவர் தந்தார் என்ற உரிமையுடன் என் உடலெங்கும் பரவுகிறது' என்றும் 'சாயலும் நாணமும் அவர் தன்னுடன் எடுத்துக் கொண்டு அதற்கு எதிர் ஈடாக நோயையும் பசலையும் தந்துவிட்டுச் சென்றுள்ளார்' எனத் தலைவி ஆற்றாமல் கூறுகிறாள். நான் அவர்க்கு ஒரு தீங்கும் நினைக்கவில்லையே- எப்பொழுதும் அவரைப் பற்றி நல்லதனமாகத்தானே பேசுகிறேன் - பின் ஏன் பசலை வருத்துகிறது? அது கள்ளத்தனமாகத் தான் வந்திருக்கவேண்டும் எனப் புலம்புகிறாள் அவள். பசலை படரத் தொடங்குவதை அவர அங்கே வரைதான் போயுள்ளார்! இங்கே பார் என் உடலில் பசலை!' என்று பிரிந்து செல்லும் காதலரைச் சுட்டிக்காட்டித் தலைவி துடிப்புடன் சொல்கிறாள் மேலும் 'ஒளியின் வேகத்துக்கு பசலை எனக்குத் தோன்றுகிறது; அவரைத் தழுவி நின்றபோது புடைப்பெயர்ச்சியின் இடைவேளையின் போது கூட் பசப்பு புகுந்து கொள்கிறது எனவும் சொல்கிறாள். .இறுதி இரண்டு குறள்களும் தலைவியின் உயர்ந்த உளநிலையை இனிமைபயக்கக் கூறுகின்றன.
பசப்புறுபருவரல் அதிகாரப் பாடல்களின் சாரம்
1181 ஆம்குறள் நானே பிரிதலுக்கு ஒத்துக்கொண்டேன். இப்போது அவர் போனபின் பசலை படர்ந்துள்ளதே. இதை யாரிடம் போய்ச் சொல்வது? எனத் தலைவி கேட்பதைச் சொல்கிறது.
1182 ஆம்குறள் என் தலைவர் தந்தார் என்னும் உரிமைப் பெருமிதத்தால் இப்பசலை நோய் என் உடம்பின் ஏறி ஊர்கிறது எனத் தலைவி சொல்வதைக் கூறுவது. .
1183 ஆம்குறள் துன்பத்தையும் பசலையையும் கொடுத்து என் அழகையும் நாணையும் உடன் எடுத்துக் சென்று விட்டாரே அவர் என்று தலைவி கூறுவதைச் சொல்கிறது.
1184 ஆம்குறள் என் நினைவு பேச்சு எல்லாம் அவரது திறம் குறித்தேயாதலால் அவர என்னைவிட்டுப் பிரியவில்லைதானே; பசலை வந்தது கள்ளமாகத்தான் இருக்க வேண்டும் எனத் தலைவி கூறுவதைச் சொல்வது.
1185 ஆம்குறள் இப்பொழுதுதான் பிரிந்து போனார் என் காதலர். அதற்குள் பாராய் என் உடம்பில் பசலை தோன்றுகிறது எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.
1186 ஆம்குறள் கணவர் என்னை நீங்கியவுடன் ஒளியின் வேகத்தில் பசலை என்னைத் தழுவுகிறது என்று தலைவி கூறுவதைச் சொல்கிறது.. .
1187 ஆம்குறள் காதலருடன் தழுவியிருந்த நேரத்தில் புரண்டு படுத்ததன் இடைவெளியிலே பசலை வாரிக்கொள்ளும் அளவில் என் உடலில் நிறைந்து படர்ந்தது. எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.
1188 ஆம்குறள் நான் பசலையுற்றதற்கு என்னை மட்டும்தான் குறைகூறுகிறார்கள்; ஏன் காதலரை ஒருவரும் ஒன்றும் சொல்வதில்லை எனத் தலைவி பொருமுவதைச் சொல்கிறது
1189 ஆம்குறள் பிரிவு அவர்க்கு நன்மை செய்யும் என்றால் என் மீது பசலை படர்ந்தாலும் எனக்கு வருத்தமில்லை எனத் தலைவி சொல்வதைக் கூறுவது.
1190 ஆவதுகுறள் காதலர் பிரிவால் வாடும் தலைவி தனக்கு பசப்பானவள் என்று பெயர் வந்தாலும் அவர் தூற்றப்படாமல் இருந்தால் போதும் எனச் சொல்வதைக் கூறுலிறது.
பசப்புறுபருவரல் அதிகாரச் சிறப்பியல்புகள்
விளக்கினது முடிவினைப் பார்க்கும் இருளேபோல் காதலர் தழுவலை நீங்கும் சமயம் நோக்கியிருக்கும் பசலை என்னும் புதியதோர் உவமையைக் குறள் 1186-ல் காண முடிகிறது.
தலைவர் விடைபெற்றுக் கிளம்புகிறார். அவளிடம் பசலை படரத் தொடங்குகிறது. அதை அங்கே பார் அவர் தெரிகிறார்! இங்கே பார் என் உடலில் பசலை!' என்று பிரிந்து செல்லும் காதலரைச் சுட்டிக்காட்டித் தலைவி பரபரப்புடன் சொல்வது படிப்போர்க்கு சுவை கூட்டுவதாக உள்ளது
நான் பசலையுற்றதற்கு என்னை மட்டும்தான் குறைகூறுகிறார்கள்; ஏன் காதலரை ஒருவரும் ஒன்றும் சொல்வதில்லை என உள்ளக் குமுறலை பசந்தாள் இவளென்பது அல்லால் இவளைத் துறந்தார் அவரென்பார் இல் (குறள் 1188) என வெளிப்படுத்துகிறாள் தலைவி அடுத்துவரும் இரு பாடல்களில் அவர் நல்ல நிலைபெற்றுத் திரும்பட்டும் என விரும்பம் தெரிவித்து பசக்கமன் பட்டாங்குஎன் மேனி நயப்பித்தார் நல்நிலையர் ஆவர் எனின் (குறள் 1189) என்றூம், தனக்கு பசப்பானவள் என்ற இகழ்வான பெயர் வந்தாலுக் கவலையில்லை தலைவரை ஊரார் தூற்றாமலிருந்தால் போதும் பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் (குறள் 1190) எனவும் கூறுகிறாள் தலைவி. காதலர் நல்ல நிலையில் திரும்பவேஎண்டும், அவருக்காக என் அழகை இழந்து இழிவையும் தாங்கிக் கொள்வேன் என்னும் அவள். உயர்குடிப் பண்பு கொண்ட பெண்ணாகத் தோற்றமளிக்கிறாள்.