Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 126 நிறையழிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
126 நிறையழிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
நிறையழிதல் 
கள்வன் செய்த பன்மாயங்கள் நிறையழிந்ததால் மன்றுபடும்.
குறள் திறன்-1251 குறள் திறன்-1252 குறள் திறன்-1253 குறள் திறன்-1254 குறள் திறன்-1255
குறள் திறன்-1256 குறள் திறன்-1257 குறள் திறன்-1258 குறள் திறன்-1259 குறள் திறன்-1260

openQuotes.jpgமறை(இரகசியம்) பிறர் அறியாது காப்பதும் மனத்தை ஒருவழி நிலைநிறுத்துவதுமே நிறை எனப்படும். தலைவி காம மிகுதியால தன் மனத்தை அடக்க இயலாத நிலையில், வாய்விட்டு வெளிப்படுத்திப் பேசுதல் நிறை அழிதலாகும்.
- தமிழண்ணல்

 

இவ்வதிகாரச் சூழமைவில் நிறை என்பது பெண் மனத்தில் அடக்கி வைத்திருக்க வேண்டியவற்றை, பிறர் அறியாமல் வைத்திருப்பதைக் குறிக்கும். தம் உள்ளூறும் காதல் எண்ணங்களை மகளிர் வெளிப்படச் சொல்லமாட்டார்கள். அது பெண்மையின் இயற்கை. ஆனால் தலைவனைக் காணவேண்டும் அவனுடன் சேர்ந்திருக்கவேண்டும் என்ற வேட்கை மிகுதியால், இங்கு, தன் காதல் விருப்பங்களை அடக்கமுடியாமல் வாய்விட்டுக் கூறத் தொடங்குகிறாள் காதலி. அவ்வாறு நிறைஅழிவதைச் சொல்வது நிறையழிதல் அதிகாரம். தலைமகன் பணி காரணமாகப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைமகள் ஆற்றாளாகி தனது தற்போதைய மனநிலையையும், முன் நடந்தவற்றை நினவுக்குக் கொண்டுவந்தும், தன் உள்ளத்துள் அடக்கி நிறுத்த முடியாமல் சொல்வன இவ்வதிகாரத் தொகுப்புப் பாடல்களில் அடங்கியுள்ளன.

நிறையழிதல்

நிறை என்ற சொல் நிறுத்துதல் என்றும் அழிதல் என்ற சொல் கெடுதல் என்றும் பொருள்படுவன. நிறையழிதல் என்றது தன் உள்ளத்தை அடக்கி நிறுத்தும் தன்மை கெடுவதைக் கூறுவது. நிறை என்ற சொல்லுக்கு நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை என்று கலித்தொகையின் நெய்தற்கலி.16 வரையறை செய்தது. இதன் பொருள் நிறையென்று சொல்லப்படுவது மறைந்ததொரு செயலைப் பிறர் அறியாமல் செய்தல் என்பது.
ஒரு பெண்ணின் மனத்தில் எழும் எண்ணங்களை வெளிப்படுத்தாது நாணம் காக்கும். நாணம் உள்ளவரை மனத்தில் உள்ள எண்ணங்களை வெளிவராமல் அகத்துள் அடக்க முடியும். நாண் ஒரு தாழ்ப்பாள் போல் நிறை என்னும் காவல் கதவுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிப்பது. ஆனால், ஒரு கோடரி தாழ்ப்பாளையும் கதவையும் எளிதாக உடைத்துவிடுவது போல், காமமானது நாணம் என்ற தாழ்ப்பாளை உடைத்து நிறை என்னும் கதவைப் பிளந்துவிடும் என்கிறது இவ்வதிகாரம். காதல் வேட்கை கொண்ட பெண்ணின் மனம், நாணத்திற்கு கட்டுப்படாமல் எண்ணத்தை வெளிவிடும். அது நிறையழிதலாகிறது.
மனத்தில் தோன்றும் எண்ணங்களை அடக்க முடியாது வெளியே வாய்விட்டுக் கூறுதலே நிறையழிதல் என்னும் அதிகாரத் தலைப்புக்குப் பொருள். காதல் வேட்கையால் தலைவி வெளியிட்ட காதல் செய்திகளாவன: 'என் நெஞ்சம் நடுஇரவிலும் தலைவர் மாட்டுப் போகிறது'; 'காமத்தை மறைத்தாலும் அது தும்மல்போல் முன்னறிவிப்பின்றி தோன்றிவிடுகிறது'; 'அது பொதுவெளி வரைக்கும் வந்துவிடுகிறது'; 'நாண்தாழிட்ட அடக்கமென்னும் கதவைக் கோடாரி கொண்டு தகர்த்தெறிகின்றது'; 'அது நம்மை இகழந்தார் பின் செல்லக்கூடாது என்பதை அறியவில்லை'; 'அது இரங்கத்தக்கதாயினும் என் செய்வது?; 'அவரது பணிமொழி கேட்க விழைகிறது'; 'தீயின்கண் இட்ட கொழுப்புபோல் என் நெஞ்சம் உருகிநிற்கிறதே'; 'பிணங்கக் கூட இயலாமல் முந்திக்கொண்டு அவரைத் தழுவ நினைக்கிறது'; 'காதல் நாண் அறியாது காதலர் விரும்புவன செய்யவிடுகிறது'.

நிறையழிதல்- சில புரிதல்கள்:

மேலே கூறியதுபோல நிறையழிதலாவது தலைவி மனத்து அடக்கற்பாலனவற்றை வேட்கை மிகுதியான் தன் நிலையழிந்து வாய்விடுதல் ஆகும். ஆனால் சில உரைகள் அது கற்பழிதல், ஒழுக்கங்கெடுதல், மதம்பிடித்தல் என்ற பொருள்கள் தரும்படி அமைந்துள்ளன. இங்கு சொல்லப்பட்ட நிறை இல்லற இயலில் சொல்லப்பட்ட நிறைக்கு வேறுபாடானது என்பதை மனதில் நிறுத்தி இவ்வதிகாரத்துப் பாடல் கருத்துக்களைப் புரிந்துகொள்ள வேண்டும். ......மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை (வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:57) என்றதில் சொல்லப்பட்ட நிறைக்குக் கற்பு என்னும் மன உறுதி என்று பொருள் கொள்வர்.

தொழில் காரணமாக அயல் சென்றுள்ள தலைவன் இன்னும் திரும்பி வரவில்லை. அதனால் காதலியின் பிரிவுத் துயரும் நீங்கவில்லை. ஆனால் சில உரையாசிரியர்கள் அவன் வந்து விட்டதாகக் கொண்டு பொருள் செய்திருக்கின்றனர். இதற்குக் காரணம் சில குறட்பாக்களின் நடை அவன் வந்துவிட்டது போலவும் தலைவி அவனுடன் ஊட நினைக்கிறாள் என்பது போலவும் தோன்றுவதாயிருக்கலாம். அக்குறள்களில் சொல்லப்படடவை அவன் பிரிந்த் செல்வதற்கு முன் நடந்த நிகழ்வுகள். தலைவி முன் நிகழ்ந்ததை நினைத்து வருத்தம் மிகுதியால் மனத்திலுள்ள காதல் எண்ணங்களை வெளிப்படுத்தி நிறையழிகிறாள் என அக்குறள்களை வாசிக்க வேண்டும்.

இவ்வதிகாரத்துள்ள 1257,1258,1259,1260 என்னும் நான்கு குறட்பாக்களுக்கும் பரிமேலழகர் 'பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது' எனக் காட்சிப் பின்புலம் அமைத்தார். மேலும் நாண் என்பதற்குப் பரத்தையர் தோய்ந்த மார்பினைத் தோய நாணுதல் என்றும் தனது உரையில் காட்டியுள்ளார் அவர். பரத்தையர் தொடர்பின்றி காமத்துப்பால் படைக்கப்பட்டது குறளின் தனிசிறப்பாகும். பரத்தையிற் பிரிவுநேர்ந்த பொழுதுதான் நாணம் உண்டாவதென்பதும் இல்லை. எனவே இந்நான்கு குறள்களுக்கான பரிமேலழகர் அமைத்த சூழல் ஏற்கத்தக்கன அல்ல.

நிறையழிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 1251 ஆம்குறள் நாணம் என்னும் தாழ்ப்பாள் போடப்பட்ட மனஉறுதி என்னும் கதவினைக் காதல்நோய் என்னும் கோடாலி உடைக்கும் என்கிறது.
  • 1252 ஆம்குறள் காதல் என்னும் ஒன்று இரக்கமில்லாமல் என் உள்ளத்தை நள்ளிரவுப் பொழுதிலும் ஆட்டிப்படைக்கின்றது என்று தலைவி கூறுவதைச் சொல்வது.
  • 1253 ஆம்குறள் காதல் வேட்கையை யான் மறைப்பேன். ஆயினும் தும்மல் உண்டாவது போல் நான் நினைக்காத நேரத்தில் அது வெளிப்பட்டு விடும் என்று தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1254 ஆம்குறள் நானோ மனத்திண்மை கொண்டவள் என்றிருந்தேன். ஆனால் என் காதல் வேட்கையோ ஒளிவின்றி ஊருக்குள் பரவி விடும்போல என்று தலைவி வருந்துவதைக் கூறுகிறது.
  • 1255 ஆம்குறள் அன்பற்று நீங்கின காதலரின் பின் செல்லாத பெருங்குணம் காதல்நோய் கொண்டவரிடம் இராது எனத் தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1256 ஆம்குறள் நீங்கிச் சென்றவரின் பின்னே நான் செல்லுதல் வேண்டும் என்று என்னைத் துயருறுத்தும் காதல்நோய் எத்தன்மைத்து? அது நல்லாத்தான் இருக்கு! எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1257 ஆம்குறள் நம்மால் விரும்பப்பட்டவர் நாம் விரும்பியவற்றைச் செய்தால் அக்காதலால் நாணம் என்னும் ஒன்றைப் பற்றி நாம் அறியமாட்டோம் என்று தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1258 ஆம்குறள் பலவேடங்கள் புனையவல்ல உள்ளங்கவர் கள்வரின் இனிய மொழி அல்லவா நம் பெண்மையை உடைக்கின்ற கருவியாயிற்று எனத் தலைவி சொல்வது.
  • 1259 ஆம்குறள் காதலருடன் பிணங்க வேண்டும் என்று சென்றேன். ஆனால் நெஞ்சம் அவரோடு பொருந்துவது கண்டு பிணங்காமல் அவரைத் தழுவினேன் எனத் தலைவி தன் தோல்வியை ஒப்பிச் சொல்வதைக் கூறுவது.
  • 1260 ஆவதுகுறள் காதலரைக் கண்டவுடனேயே கொழுப்பினைத் தீயில் இட்டாற்போல உருகும் நெஞ்சினை உடையவர்க்கு அவரை எதிர்ப்பட்டு பிணங்கி நிற்போம் என்று கூற முடியுமா? எனத் தலைவி வினவுவதைச் சொல்வது.

 

நிறையழிதல் அதிகாரச் சிறப்பியல்புகள்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு என்ற குறளில் உருவக அணி நயம்பட அமைந்துள்ளது. இப்பாடலில் தன் நிறையழிவிற்குத் தலைவி காரணம் கூறுகிறாள். நாணுள்ள வரையும் நிறை அழியாதாகலின் அதைத் தாளாக்கியும், அகத்துள்ளவற்றைப் பிறர் கவராமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும், வலிமையுள்ள இவ்விரு பண்புகளையும் ஒருங்கே நீக்கலின் காமவேட்கையைக் கோடரியாக்கியும் கூறப்பட்ட பாடல் இது.

நாண்என ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின்(1257) என்ற குறளில் 'காமத்தால நாண் மட்டுமல்ல பெண்மைக்கான மற்ற மடமை, அச்சம், பயிர்ப்பு என்ற எல்லாவற்றையும் அறியாமல் போகிறேன் என்று காமத்தால் தான் பெண் தன்மையை இழப்பதை சொல்கிறாள் தலைவி.

சில சமயங்களில் தலைவனுக்கும் காதலிக்கும் பிணக்கம் உண்டாகிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டவர்கள் ஆதலால் காதலனுக்குத் தலைவியின் ஊடலைத் தணிக்கும் மாயங்கள் எளிதாகிறது. பல வேடங்கள் அணிந்து கள்ளத்தனம் செய்து இனிய மொழிபேசி அவளை ஆட்கொண்டுவிடுவான். இவை அனைத்தையும் கண்டு தலைவி தனக்குள்ளாகவே நன்கு சுவைப்பாள். அவனை பன்மாயக் கள்வன் என்று செல்லாமாக அழைக்கிறாள். பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை (1258) என்பது குறள்.

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு (1259) என்ற பாடல் தலைவியின் ஊடல் கொள்ள முடியாத நிலையைக் கூறுகிறது. ஏன் பிணங்க முடியவில்லை? அவள் சொல்லும் காரணம் த்னக்கு முன் தன் நெஞ்சம் அவனுடன் கலந்ததைக் கண்டுவிட்டாளாம். தலைவன் கண்ணில் பட்டதுமே அவனை அணைத்துக் கொள்ளவேண்டும் என்ற காதல் வேட்கையே உண்மையான காரணம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard