சமீபத்தில் ஒரு கள உறவு ஓர் திரியில் "தாலி கட்டுதல்" தமிழர் முறையா என்று கேட்டிருந்தார். அதன் விளைவாக இந்தச் சிறிய கட்டுரை...
பண்டைத் தமிழர் தன் வாழ்க்கையில்களவு, கற்பு ஆகிய இருவகை ஒழுக்கங்களை கொண்டிருந்தனர்.
தலைவனும் தலைவியும் உள்ளம் ஒன்றுபட்டு பிறர் அறியாதவாறு மறைவிடத்துக் கூடி மகிழ்வது களவு. அதாவது காதல் செய்து திருமணம் செய்வது. இப்படியும் கூறலாம்.. முதலில் பார்வையில் ஆரம்பித்து பின் பழகி அதற்குபின் கலவி கொண்டு இணைந்திருப்பது.
தலைவனுடைய பெற்றோரும் தலைவியின் பெற்றோரும் முறைப்படி பேசி, பெற்றோரும் உற்றோரும் மற்றோரும் கொடுப்பக் கொண்டு இல்லறம் நடத்துதல் கற்பு.
இப்படியொரு கால கட்டத்தில் களவு மனமே நிறைந்திருந்தது. இங்கு ஆண் கலவுப்புனர்ச்சியில் ஈடுபட்டு பின் பிரிவதும் அதற்குப்பிறகு அந்தப் பெண்ணோடு எனக்கு தொடர்பில்லை என மறுப்பதும் அதிகமாகவே சான்றோர்கள் ஒன்று கூடி சடங்குடன் கூடிய ஒரு மணமுறையை அறிமுகப்படுத்தினர். அதைத்தான் தொல்காப்பியர் இப்படி கூறுகிறார்..
"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணமென்ப"
இங்கு ஐயர் என்போர் சான்றோரை(தமிழ்ப் பெரியோர்களைக் குறிக்கும்) ஆற்றியப் பார்ப்பனர் கிடையாது. கரணம் என்பது திருமணத்தை குறிக்கும்.
இந்த சடங்கு மணமுறை முதலில் அரசகுடிகளுக்கும், வணிக குடிகளுக்கும், அறவோர்(அந்தணர்) குடிகளுக்கும் பின்பு படிப்படியாக எல்லாக் குடிகளுக்குள்ளும் நுழைந்தது .
"மேலோர் மூவருக்கும் புணர்த்த கரணங்
கீழோர்க் காகிய காலமும் உண்டே" - தொல்காப்பியம்
கற்பு மணத்தில் இன்று பொருத்தம் பார்ப்பது போல் அன்றும் பத்து பொருத்தங்களை பார்த்துள்ளனர்.
"பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"
பிறப்பு : ஒத்த குடியில் பிறத்தல்.
குடிமை : பிறந்த குடிக்குரிய ஒழுக்கம்
ஆண்மை : ஆண்மை என்பது இங்கு ஆண்தன்மையைக் குறிக்காது. ஆளும் தன்மையைக் குறிக்கும். குடியாண்மை எனப்படும். இது பெண்களுக்கும் உரிய பண்பே.
ஆண்டு : ஆண் பருவமடையும் வயது 16, பெண் பருவமடையும் வயது 12 என இவ்வகையில் ஆணோடு பெண் ஒத்திருப்பது ஆண்டு ஒப்புமையாகும்.
உருவம் : உருவழகு.
நிறுத்த காமவாயில் : இல்லற சுகத்தை நுகர்வதற்குரிய சக்தியும் உணர்வும் இருவரிடமும் சமமாக இருத்தல் வேண்டும்
நிறை: ‘மறைபிறர் அறியாமை’ (மறை : இரகசியம்). மறையைப் பிறர் அறியாமல் காத்துக் கொள்ளும் அடக்கம்.
அருள் : எல்லா உயிர்க்கும் துன்பம் செய்யாத அருள் உடையராய் இருத்தல்
உணர்வு : உணர்வு என்பது அறிவுடைமை. அதாவது, உலக நடவடிக்கைகளில் செய்யத்தக்கவைகளை அறிதல்.
திரு : செல்வத்தன்மை (திருத்தகவு) இருக்கும் மனநிலையைக் குறிக்கும். ‘சிந்தையின் நிறைவே செல்வம்’.
இவ்வளவு பொருத்தம் உள்ள துணைகளை காண முடியுமா? அதனால் தான் களவு மணம் அதிகரித்தோ என்னவோ ??!!
பின்பு இத்திருமணம் மணத்தின் தன்மை, நடைபெறும் இடம் போன்ற பல காரணங்களால் கடிமணம், மன்றல்மணம், வதுவைமணம், வரைவுமணம் என பலவாறு அழைக்கப்பட்டது.
பரிசங் கொடுத்து மணத்தல்
மணமகன் பரிசம் கொடுத்து மணமகளின் பெற்றோர் ஒப்புதலுடன் மணத்தல் பரிசம் கொடுத்தல் எனப்படும். இப்பரிசம் அணிகலன், பணம், நிலம் போன்ற சொத்துக்களாக வழங்கப்பெறும் மணமகளின் பெற்றோர் கேட்கும் பரிசுத் தொகையினைக் கொடுத்து, அவர்கள் ஒப்புதல் பெற்று மணந்தமைக்குச் சான்று உண்டு
நறிய நுதலினையுடைய அரிவையாய இவளது பசிய அணிகட்கு விலையாக செல்லூரின் கீழ்ப்பாலினதாய் புது வருவாயையுடைய நியமம் என்னும் ஊரினைக் கொடுப்பினும் கொள்ளாராதலால் அவர்கள் அன்பிற்கம் உரிமையாகுக என்றாள் எனலுமாம்.
"அருந்திறற் கடவுள் செல்லூர்க் குணா அது
பெருங்கடல் முழக்கிற் றாகி யாணர்
இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கடுங்கண் கோசர் நியமம் ஆயினும்
உறுமெனக் கொள்ளுநர் அல்லர்
நறுநுதல் அரிவை பாசிழை விலையே"
சேவை மணம்
மணமகன் தான் விரும்பிய பெண்ணின் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சேவைகள் செய்தோ, தனது திறமைகளைக் காட்டியோ அப்பெண்ணை மனத்தல் சேவை மணம் எனப்படும். சீவக சிந்தாமணி யில் சீவகன் ஏமமாபுரத்தின் மன்னன் மகள் கனகமாலையை மனந்ததும், பெருங்கதையில் உதயனன் பதுமாவதியை மணந்ததும் இந்த சேவை மணத்தினைச் சார்ந்ததாகும்.
திணைக்கலப்பு மணம்
சங்க கால குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்நில மக்களுக்குள்ளும் கலப்பு மணம் செய்ததை திணைக்கலப்பு மணம் எனப்பட்டது . முருகன் வள்ளி திருமணம் ஒரு எடுத்துக்காட்டு. வள்ளி மருத நிலத்தைச் சார்ந்தவள், முருகன் குறிஞ்சி நிலத்தைச் சார்ந்தவன்
ஏறுதழுவி மணம் முடித்தல்
தங்கள் பெண்களை மணக்கப் போகும் ஆடவரின் திறனை, வீரத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டி மேற்கொண்ட வீர விளையாட்டே ஏறு தழுவுதல் ஆகும். காளையை அடக்கி தழுவி நிற்பவனுக்கே தலைவி உரியவள்.